• பாவ்லோ கொய்லோ
  • தமிழில்: மஹாரதி

 

 

1986-ல் நான் சாலை மார்க்கமாக சாண்டியாகோவிற்குப் போய்க் கொண்டிருந்தேன், என் வழிகாட்டி பெட்ரஸுடன். லோக்ரோனோ மாநகரத்தின் ஊடாகக் கடந்தபோது ஒரு திருமண வைபவம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இரண்டு தம்ளர் ஒயினைக் கேட்டு வாங்கினோம்; கொறிப்பதற்கு ஏதோவொன்றை நான் தயார் செய்து வைத்திருந்தேன். நாங்கள் மற்ற விருந்தாளிகளோடு உட்கார்ந்து கொள்ள பெட்ரஸ் ஒரு மேசை நாற்காலியைக் கண்டுபிடித்தான்.

புதுமணத் தம்பதிகள் ஒரு பெரிய கேக்கை வெட்டினார்கள்.

“அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும்,” என்று நான் உரக்கச் சிந்தித்தேன்.

“வாஸ்தவம்தான்; அவர்கள் காதலிக்கிறார்கள்,” என்றான், கறுப்பு சூட் அணிந்து எங்கள் மேஜையில் இருந்த ஒருவன். “வேறு காரணத்திற்காக மணம் புரிபவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?”

ஆனால் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் பெட்ரஸ் விடவில்லை. “என்ன மாதிரியான காதலை நீங்கள் சொல்கிறீர்கள்? ஏரோஸ், ஃபிலோஸ் அல்லது அகாப்பே?”*

அந்த மனிதன் ஒரு வார்த்தைகூடப் புரியாமல் அவனை ஏறிட்டுப் பார்த்தான்.

“காதலைக் குறிக்கும் மூன்று கிரேக்க வார்த்தைகள் இவை,” என்றான் பெட்ரஸ். “இப்போது நீங்கள் அந்த ‘ஏரோஸ்’ வடிவத்தை, இரண்டு பேருக்கும் நடுவிலான அந்த உணர்வைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.”

மணமக்கள் கேமராவிற்காகப் புன்னகைத்தவாறு விருந்தாளிகளின் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

“இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பது போலத் தெரிகிறது. குறுகிய காலத்தில் அவர்கள் தங்கள் வாழ்க்கைக்காகத் தனியே போராடிக் கொண்டிருப்பார்கள். ஒரு வீட்டில் தங்களை ஸ்தாபித்துக் கொண்டு, ஒரே வீரதீரச் செயலில் பங்கெடுத்துக் கொண்டிருப்பார்கள்: அதுதான் காதலை அற்புதமாகவும், கெளரவமாகவும் மாற்றுகிறது. அவன் தனது பணியில் ஈடுபட்டிருப்பான். அவளுக்கு ஒருவேளை சமைக்கத் தெரிந்திருக்கும்; ஒரு பிரமாதமான இல்லத்தரசியாய் அவள் மாறலாம்; ஏனென்றால் சிறுமியாக இருந்த காலத்திலிருந்து அவள் அதைச் செய்வதற்காகத்தான் வளர்க்கப்பட்டிருந்தாள். அவள் அவன் கூடவே  இருப்பாள்; அவர்கள் குழந்தைகள் பெறுவார்கள்; ஏதோவொன்றை ஒன்றாகக் கட்டமைப்பார்கள்; எப்போதும் சந்தோசமாக இருப்பார்கள்.”

“எனினும், திடீரென்று இந்தக் கதை வேறுமாதிரியாகக் கூட நிகழலாம். மற்ற பெண்களிடம் அவனுக்கு இருக்கும் எல்லாவிதமான ‘ஏரோஸ்’ (பாலுணர்வுக் காதல்) உணர்வையும் அவளிடம் காட்டுமளவுக்குத் தான் சுதந்திரமானவன் அல்ல என்று அவன் உணரலாம். அவனோடு இருப்பதற்காக தனக்குரிய உத்தியோக வாய்ப்புகளையும், பிரகாசமான வாழ்க்கையையும் தான் தியாகம் செய்துவிட்டதாக அவள் உணர ஆரம்பிக்கலாம். அதனால், ஒன்று சேர்ந்து ஒன்றைப் படைப்பதற்குப் பதில், தாங்கள் காதலித்த வழியினால் தங்களிடமிருந்து ஏதோவொன்று களவாடப்பட்டதாக இருவரும் உணரலாம். அவர்களை இணைத்த ‘ஏரோஸ்’ என்ற உணர்வு வேகம் அவனின் மோசமாக பக்கத்தைக் காட்ட ஆரம்பிக்கலாம். மனிதனின் மேலான உணர்வாகக் கடவுள் படைத்த உணர்வு, வெறுப்பின், அழிவின் மூலமாக மாற ஆரம்பிக்கலாம்.”

நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். ‘ஏரோஸ்’ பல தம்பதிகளிடம் இருக்கிறது. ஆனால் நல்ல ஏரோஸையும், தீமையான ஏரோஸையும், பெட்ரஸ் விவரித்த மாதிரி, என்னால் உணர முடிந்தது.

“எவ்வளவு வினோதம் என்று பாருங்கள்,” என்று தொடர்ந்தான் என் வழிகாட்டி. ”நல்லதாக அல்லது தீயதாக இருந்தாலும், ‘ஏரோஸின்’ முகம் எல்லா மனிதர்களிடமும் எப்போதும் ஒன்றுபோல் இருப்பதில்லை.”

இசைக்குழு நடன இசையை ஆரம்பித்தது. இசைக்குழுவுக்கு முன்னால் ஒதுக்கப்பட்ட பகுதிக்கு நடனமாட மக்கள் சென்றார்கள். மது தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. எல்லோரும் குதூகலமாகி வேர்வையில் நனைந்தார்கள். நீலவண்ணத்தில் உடையணிந்திருந்த ஓர் இளம்பெண்ணை நான் அவதானித்தேன். நடனமாடும் இந்தக் கணத்திற்காகவே அவள் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள காத்திருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவள் வயதுக்கு வந்த நாளிலிருந்து தான் யாரைக் கட்டித் தழுவக் கனவு கண்டு கொண்டிருந்தாளோ அவனோடு நடனமாட அவள் விரும்பினாள். வெளிர்நிறத்தில் ‘சூட்’ அணிந்து நண்பர்களோடு உட்கார்ந்து கொண்டிருந்த ஓர் இளைஞனின் அசைவுகளை அவள் கண்கள் பின் தொடர்ந்தன. அவர்கள் சந்தோசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்; இசை நடனம் ஆரம்பித்ததையும் கவனிக்கவில்லை; சில அடிகள் தாண்டி நீல உடையிலிருந்த ஓர் இளம்பெண் தங்களில் ஒருவனைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் அவர்கள் கவனிக்கவில்லை.

குழந்தைப் பருவத்தில் யாரைக் கனவு கண்டு கொண்டிருந்தாளோ தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் பையனோடு பெண்ணின் திருமணங்கள் நிகழும் சின்ன நகரங்களைப் பற்றி நான் யோசித்தேன்.

நீலநிற உடைப்பெண் நான் கவனிப்பதைப் பார்த்து விட்டு அப்பால் நகர்ந்தாள். முழுநாடகமும் ஒத்திகை செய்யப்பட்டிருந்தது போல, இப்போது கண்களால் அந்தப் பெண்ணைத் தேடுவது அந்தப் பையனின் முறை. அவள் மற்ற பெண்களோடு இருப்பதைப் பார்த்துவிட்டு, அவன் தன் தோழர்களோடு மீண்டும் ஓர் உற்சாகமான உரையாடலுக்குத் திரும்பினான்.

அந்த இருவரின் மீது பெட்ரஸின் கவனத்தை நான் திருப்பினேன். அவர்கள் இருவரும் பார்வைகளைப் பரிமாறிக் கொள்வதைக் கொஞ்சநேரம் அவதானித்து விட்டு மீண்டும் அவன் தன் ஒயின் தம்ளர்க்குத் திரும்பினான்.

“அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதை வெளிக்காட்டுவது ஏதோவொரு வெட்ககரமான விஷயம் என்பது போல செயல்படுகிறார்கள்,” என்று மட்டுமே அவன் சொன்னான்.

இன்னொரு பெண் எங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்; அவளுக்கு எங்கள் வயதில் பாதியிருக்கலாம். பெட்ரஸ் தன் தம்ளரை உயரே தூக்கிக் கொண்டு மது அருந்தும் விழாவின் கெளரவச் சடங்கைச் செய்தான். அந்தப்பெண் சங்கடத்தில் நெளிந்து சிரித்தாள். தான் இன்னும் நெருக்கமாக உட்கார்ந்திருக்கவில்லை என்பதற்காக கிட்டத்தட்ட மன்னிப்புக் கேட்பது போல தன் பெற்றோர்களை நோக்கி அவள் ஒரு சைகை செய்தாள்.

“அதுதான் காதலின் அழகான பக்கம்,” என்றான் அவன். “சவால் தரும் காதல். தொலைதூரத்திலிருந்து வந்த இரண்டு வயதான அந்நியர்களின் காதல். அவர்கள் நாளை பிரிந்திருக்கக் கூடிய  சாலையில் அவளும் பயணிக்க விரும்புவாள். வீரதீரச் செயலைத் தேர்ந்தெடுக்கும் காதல்.”

ஒரு வயதான தம்பதியைச் சுட்டிக் காட்டி அவன் சொன்னான்:

“அந்த இருவரையும் பார். மற்றவர்களைப் போல, கள்ளங்கபடத்தால் பாதிக்கப்படுவதற்கு அவர்கள் தங்களை அனுமதிப்பதில்லை. பண்ணைத் தொழிலாளர் தம்பதி போல அவர்கள் தெரிகிறார்கள். பட்டினியும், தேவையும் அவர்களை ஒன்றாக இருந்து பல சோதனைகளைக் கடந்து வரச் செய்திருக்கின்றன. அவர்கள் வேலையின் வாயிலாக காதலைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அங்கேதான் ‘ஏரோஸ்’ தன் அழகான முகத்தைக் காட்டுகிறான். அவனுக்கு ‘ஃபிலோஸ்’ என்ற பெயரும் உண்டு.

“ஃபிலோஸ் என்றால் என்ன?”

“ஃபிலோஸ் என்றால் நட்பு வடிவத்தில் இருக்கும் காதல். இது நான் உன் மீதும், மற்றவர்கள் மீதும் வைத்திருக்கும் காதல். ‘ஏரோஸ்’ என்னும் தீப்பிழம்பு மேலும் ஒளிராமல் இருக்கும்போது, ‘ஃபிலோஸ்’தான்  தம்பதிகளை ஒன்றாக இணைத்து வைக்கிறது.”

“அப்புறம் அகாப்பே?”

“அகாப்பே முழுக்காதல். அதை அனுபவிப்பவர்களை விழுங்கிவிடும் காதல். அகாப்பேயை அறிந்தவர்களுக்கு, அனுபவிப்பவர்களுக்கு இந்த உலகத்தில் காதலிப்பது மட்டுமே முக்கியமானது; வேறு எதுவும் இல்லை. இது ஜீசஸ்  மனித குலத்தின் மீது  கொண்ட காதல். அது நட்சத்திரங்களை அசைக்கும் அளவுக்கு, மனிதனின் வரலாற்றுப் போக்கை மாற்றும் அளவுக்கு ஆகப்பெரியது.”

“நாகரிக வரலாற்றின் ஆயிரமாயிரம் ஆண்டுகளில் நிறையப் பேர் விழுங்கி விடும் இந்தக் காதலால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். கொடுப்பதற்கு அவர்களிடம் நிறைய இருக்கிறது. உலகம் ஒன்றும் கேட்பதில்லை. அதனால் அவர்கள் பாலைவனங்களை, தனிமை இடங்களைத் தேடிப் போகிறார்கள். காதல் ஆகப்பெரியது. அது அவர்களுக்குள் உருமாற்றம் நிகழ்த்துகிறது. நாம் இன்று  அறிந்து கொள்ளும் புனித முனிபுங்கவர்களாக அவர்கள மாறினார்கள்.”

“அகாப்பேயின் இன்னொரு வடிவத்தை அனுபவித்த உனக்கும் எனக்கும் இந்த வாழ்க்கை கடினமாகவும், பயங்கரமாகவும் தோன்றலாம். ஆனால் விழுங்கிவிடும் காதல் ஒவ்வொன்றையும் அதன் முக்கியத்துவத்தை இழக்கச் செய்கிறது. இந்த மனிதர்கள் தங்கள் காதல், தங்களைத் தின்று தீர்க்கவே வாழ்கிறார்கள்.”

அவன் இடைவெளி விட்டான். 

“அகாப்பே என்பது விழுங்கி விடும் காதல்,” என்று அவன் மீண்டுமொரு முறை சொன்னான், அந்த வினோதமான காதலை வரையறுக்கும் சொற்றொடர் இதுதான் என்பது போல. “லூதர் கிங் ஒரு தடவை சொன்னார்: எதிரிகளை நேசிக்குமாறு கிறிஸ்து சொன்னபோது, அவர் ‘அகாப்பே’யைப் பற்றித்தான் குறிப்பிட்டார் என்று. ஏனென்றால் அவரைப் பொறுத்தவரையில், நமக்கு தீமை செய்யும், நமது அன்றாடக் கஷ்டத்தை இன்னும் மோசமாக்கும் நம் எதிரிகளை விரும்புவது அசாத்தியமானது.”

“ஆனால் ‘அகாப்பே’ விரும்புதலை விட மிகமிக அதிகமான ஒன்று. அது  ஒவ்வொன்றின் மீதும் படையெடுக்கும் உணர்வு;  எல்லாக் கீறல்களையும் நிரப்பி சரி செய்கிறது; கொடுமை முயற்சியை தூசாக்குகிறது.”

“அகாப்பே இரண்டு வடிவங்களில் இருக்கிறது. ஒன்று  தனிமை; தியானத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை. மற்றொன்று நேரெதிர். மனித ஜீவன்களோடு கொள்ளும் தொடர்பு; பேரார்வம்; வேலை பற்றிய புனித உணர்வு. பேரார்வம் என்பது தியானநிலை, பேரானந்தம்; கடவுளோடு தொடர்பில் இருத்தல். பேரார்வம் என்பது ஏதோவொரு கருத்தை, ஏதோ ஒன்றை நோக்கியிருக்கும் ‘அகாப்பே’.”

“நாம் ஒன்றை ஆத்மார்த்தமாக நம்பும்போது, காதலிக்கும்போது, நாம் இந்த உலகத்தைவிட பலமானவர்களாக உணர்கிறோம். எதுவும் நமது நம்பிக்கையை வெற்றிகொள்ள முடியாது என்ற நிச்சயத்திலிருந்து வருகின்ற ஒரு சாந்த உணர்வு நமக்குள் நிரம்பி வழிகிறது. இந்த வினோதமான சக்தி  நம்மை எப்போதும் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வைக்கிறது. நாம் நம் நோக்கத்தைப் பூர்த்தி செய்த பின்பு, நம் சொந்தத் திறமையின் மீது நமக்கே ஆச்சரியம் வருகிறது.

“பேரார்வம் வழக்கமாக நம் வாழ்க்கையின் ஆரம்ப வருடங்களில் முழுஆற்றலோடு வெளிப்படுகிறது. தெய்வீகத்தோடு நமக்கு இன்னும் ஒரு பலமான பந்தம் இருக்கிறது. நம் பொம்மைகளிடம் நம்மை நாமே ஆர்வத்துடன் ஒப்படைக்கிறோம். அதன் விளைவாக பொம்மைகளுக்கென்று ஓர் உயிர் உருவாகிறது. பொம்மை வீரர்கள் நடைபோடுகிறார்கள். சொர்க்க சாம்ராஜ்ஜியம் குழந்தைகளுக்குச் சொந்தமானது என்று ஜீசஸ் சொன்னபோது, அவர் பேரார்வத்தின் வடிவத்தில் இருக்கும் ‘அகாப்பே’யைத்தான் குறிப்பிட்டார். அவரின் அற்புதங்களைப் பற்றி, அவரின் ஞானத்தைப் பற்றி, மரபுவாதிகளைப் பற்றி, சீடர்களைப் பற்றி கவனம் செலுத்தாமல், குழந்தைகள் அவரை வந்தடைந்தார்கள். ஒரு பேரார்வத்தால் தூண்டப்பட்டு அவர்கள் சந்தோசமாகவே வந்தார்கள்.”

“உன் வாழ்க்கையின் மிச்சப்பகுதியில் எந்த நேரத்திலும்  நீ உன் பேரார்வத்தை இழந்துவிடாதே. அது இறுதி வெற்றியை நோக்கியிருக்கும் உனது ஆகப்பெரிய பலம். காலம் செல்லச் செல்ல சின்ன சின்ன அவசியமான தோல்விகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதற்காக, நீ அதை உன் விரல்களின் இடுக்குகள் வழியாக நழுவவிடாதே.”

***

*பொதுவாக காதலைக் குறிக்கும் மூன்று கிரேக்க வார்த்தைகளை பாவ்லோ கொய்லோ இங்கே பயன்படுத்துகிறார்: eros, philos and agape. Eros – பாலுணர்வு கலந்த காதல்; philos – சினேகபாவம் மிக்க காதல்; agape – தெய்வீக அல்லது புனிதக் காதல்.

*பாலுணர்வுக் காதல் என்று பொருள்படும் ‘ஏரோஸ்’ என்ற வார்த்தையின் ஆதிமூலம் காதல் கடவுளின் மகன் பெயர்: கிரேக்க புராணத்தில் ‘அப்ரோடைட்’ (Aprodite)என்னும் காதல் கடவுளின் மகன் (Eros). ரோமானிய புராணத்தில் அவனுக்கு ‘கியூபிட்’(Cupid) என்று பெயர். இந்து புராணத்தில் அவன்தான் மன்மதன்.

***

நாம் வாழும் காலத்தில் அதிக தாக்கம் ஏற்படுத்திய எழுத்தாளர்களில் ஒருவரான பாவ்லோ கொய்லோ (Paulo Coelho),  உலகம் முழுக்க அதிகளவில் வாசிக்கப்படுபவர். அவரது நூல்கள் 170 தேசங்களில் வெளியாகியிருக்கின்றன; 81 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. உலகம் முழுவதும் 21 கோடிப் பிரதிகள் விற்பனையாகி இருக்கின்றன. போர்த்துக்கீசியரான இவர் 1947-ல் ரியோ டி ஜெனிரோவில் பிறந்தவர். தனக்குள்ளிருந்த படைப்பாற்றலை விரைவாகவே கண்டடைந்தார். இயக்குநராக, நாடக நடிகராக, இசை அமைப்பாளராக, பத்திரிகையாளராக அவர் பணி புரிந்தார். பிரேசில் நாட்டு  இசைஅமைப்பாளரும் பாடகருமான Raul Seixas  உடன் சேர்ந்து  அவர் செய்த கூட்டு முயற்சியில், பிரேசிலில் ஆகப்பெரிய செவ்வியல் ‘ராக்’ சங்கீதப் பாடல்கள் சில உருவாயின. உலகப் பொருளாதார அமைப்பின் கிரிஸ்டல் விருது உட்பட பல சிறப்பான உலக விருதுகளை அவர் பெற்றிருக்கிறார். 2002-லிருந்து பிரேசில் கல்வி அகாடெமியின் அங்கத்தினராக இருக்கிறார். ஐக்கிய நாட்டுச் சபை அவரை ‘சமாதானத் தூதுவன்’ என்று அறிவித்து கெளரவித்தது.

***