காட்சி 1
இடம் : குறிஞ்சித்திணை
நேரம்: நண்பகல்
கதா பாத்திரங்கள் : உமணச் சாத்தர்கள், தலைவி, தோழி, நான்கு காவல் வீரர்கள், இரண்டு பெண்கள்.
ஓயே.. ஓயே ஓயே… ஓயே ஓயே.. என்று ஒரு நீண்ட ராகம் ஒலிக்கிறது.
தூரத்தில் தெரியும் மலைச்சரிவான மண்பாதையில் கானல் மினுக்கலுடன் ஒரு சிறு உருவமாய்த் தோன்றுகிறது. கேமரா அருகில் செல்லச் செல்ல அந்த மலைச்சரிவுப்பாதையில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு கழுதைகள் கூட்டம் வரிசையாக வருகின்றன. கழுதைக் கூட்டத்திற்குப் பின்னால் இரண்டு மாட்டு வண்டிகள் சீரான ஓசையுடன் வருகின்றன. மாட்டு வண்டிகள் மிகவும் தொன்மையானவையாக இருக்கின்றன. இருபுறமும் நான்கு காவலர்கள் வேல்களை ஏந்தியபடி நடந்து வந்து கொண்டிருக்கின்றனர்.
ஒரு வண்டியுனுள்ளே இரண்டு பெண்களும் ஒரு கைக்குழந்தையும் இருப்பது வண்டியில் கட்டப்பட்டிருக்கும் திரைச்சீலை அசைவில் தெரிகிறது. இன்னொரு வண்டியினுள் பெரிய தலைப்பாகை அணிந்த இருவர் அமர்ந்திருக்கின்றனர். மேல் உடுப்பு இல்லாமல் சாய்ந்திருக்கும் வயதானவரின் தொந்தி புடைத்துக் கொண்டு நிற்கிறது. அவரது காதில் பெரிய கடுக்கன் அசைகிறது. கை விரல்களில் பவள மோதிரங்கள் மின்னுகின்றன. அருகில் இருப்பவர் சற்றே இளையவராக இருக்கிறார்.
கழுதைகளின் முதுகில் பொதிமூட்டைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. கழுதைகள் வரிசையாக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. அப்போது ஒரு கழுதையின் பொதிமூட்டையின் துணி கிழிந்து ஓட்டை விழுந்து அதிலுள்ள உப்பு கீழே கொட்டிக்கொண்டே வருகிறது. அதைக் கவனித்த காவலன் சட்டென வண்டியை நிறுத்தச் சொல்லிச் சைகை செய்கிறான். வண்டியின் கீழ்ப்பகுதியில் கட்டியுள்ள வலையில் இருந்த கொஞ்சம் வைக்கோலை எடுத்து வந்து குமியாகச் சுருட்டி பொதிமூட்டையின் கிழிசலில் திணிக்கிறான். மீண்டும் பயணம் தொடர்கிறது.
ஓயே.. ஓயே ஓயே… ஓயே ஓயே..
அருகாமையிலிருந்த ஒரு பகுதியின் குடிசைகள் நிறைந்த தோற்றம். அதன் பின்புலத்திலிருந்து தலைவி போன்ற தோற்றத்துடனிருந்த ஒரு பெண், கண்களுக்கு மேல் கைகளை மறைத்து தூரத்தில் வந்து கொண்டிருக்கும் அவர்களைப் பார்க்கிறாள். அவளருகில் அவளது தோழி நிற்கிறாள். ராகத்தின் தொனி மெல்ல மெல்ல அருகில் வருகிறது.
தோழி: அவர்கள் உமணச் சாத்தர்கள் அம்மா..
தலைவி வெறுமையுடன் துரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
***
காட்சி : 2
இடம் : குறிஞ்சித்திணை மைதானம்
நேரம்: நண்பகல்
கதா பாத்திரங்கள் : உமணச் சாத்தர்கள், தலைவி, தோழி, நான்கு காவல் வீரர்கள், மற்றும் பலர்.
ஊரில் நடுநாயகமாக இருக்கும் பொது இடத்தில் உமணச் சாத்தர்கள் கடை விரித்திருக்கிறார்கள். உப்பு அம்பாரமாய்க் கொட்டப்பட்டிருக்கிறது அதற்கு எதிரில் உமணர் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு அடுத்த பக்கத்தில் நான்கைந்து துணி விரிப்புகள் விரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ராகி, கம்பு, திணை, வரகு, சாமை, குதிரைவாலி.. என்று தானியங்கள் கொட்டப்பட்டிருக்கின்றன. ஊர்ப் பெண்டிர் தங்களது வீட்டிலிருந்து தங்களது தானியங்களை முறத்தில் அள்ளிக் கொண்டு வந்து உமணரிடம் கொடுக்கிறார்கள். அவர் பக்கத்திலிருக்கும் காவலர் அவைகளை வாங்கி வகை பிரித்து அந்தந்தத் தானிய அம்பாரங்களில் கொட்டுகிறார். பிறகு அவர்களது முறத்தில் தங்களது உப்பை கைநிறைய அள்ளிப் போட்டுத் தருகிறார். வியாபாரமும் இரைச்சலும் கலகலவென்று நடக்கிறது.
கேமரா அந்தக் காட்சிகளைக் காட்சிப்படுத்தியவாறு நகர்ந்து குடிசைகளைத்தாண்டி தலைவியின் வீட்டைநோக்கி நகர்கிறது.
தலைவியும் தோழியும் ஒரு குடிசை வீட்டில் இருக்கின்றனர். தலைவி முகவாட்டத்துடன் பசலை நோய் கண்டது போல படுத்திருக்கிறாள். அருகில் தோழி அமர்ந்திருக்கிறாள்.
தலைவி : எப்பொழுதடி வருவார் எம் தலைவன்? படை பல தகர்த்து களிற்றுப்படைகளை அழித்து யானையின் மத்தகத்தை தனது மார்பினில் பிளந்து தடைகளை நொறுக்கி என் முலைகளை ஞெமுக்க எப்போதடி வருவார் எம் தலைவன்? தீராத காதலின் பசலை நோய் என் உடலெங்கும் பீடித்துக் கிடக்கிறதே..
தோழி : வந்துவிடுவாரம்மா.. கவலை வேண்டாம்.. பிறை வளர்ந்து முழுமையடையும் பௌர்ணமியில் உங்கள் உடல் எல்லையற்ற இன்பத்தைத் துய்க்கும். அந்த நிலவு நாள் வெகு தொலைவில் இல்லையம்மா..
தலைவி : அடி தோழீ.. என்னால் தாங்கமுடியவில்லையடி… அவர் வந்து சேரும் காலம் கார் காலமா? கூதிர்காலமா? குறிப்பறிந்து சொல்வாய் என் தோழியே..
தோழி: அம்மா பாணச் சேரியில் உள்ள ஒரு குறமகளை அழைத்து வந்து குறி கேட்கலாம்.. நல்ல குறி சொல்லுவாள்.. நாவினிக்கப் பாடுவாள்.. அவளது சொல்லும் பாடலும் உங்களை மகிழ்வுறச் செய்யும். தங்கள் மீது படர்ந்துள்ள பசலை நோயைப் போக்கும்.. மனதில் உற்சாகமான காட்சிகளையும் கலகலப்புகளையும் உருவாக்கிவிடுவதில் கைதேர்ந்தவர்கள் அல்லவா பாடினிகள்..
கேமரா மெதுவாக தலைவியின் முகத்தை நோக்கி ஜும் ஆகிறது. அவள் முகம் பிரகாசமடைகிறது.
