-
மிகயீல் பக்தீன்
-
தமிழாக்கம் : அழகரசன்
முழுமை என்பது அதன் உள்ளார்ந்த பகுதிகள் கால மற்றும் இடஅளவில் மேலோட்டமாக மட்டும் இணைக்கப்பட்டு, அதன் உள்ளார்ந்த அர்த்தத்தோடு கலந்துறவாடாமல் இருக்கும்போது, ‘யந்திரமயமாகத்தான்’ கருதப்படும். அந்தமாதிரியான முழுமையின் பகுதிகள் அடுத்தடுத்த மாதிரி, ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டிருக்கும். ஆனால், அவையாவும் ஒன்றுக்கொன்று அந்நியப்பட்டுத்தான் இருக்கும்.
மனிதப்பண்பாட்டின் மூன்று அங்கங்களான விஞ்ஞானம், கலை, வாழ்க்கை – யாவும் அவற்றை ஒன்றாக இணைக்கும் ஒரு தனிமனிமனிடம்தான்* முழுமையடைகின்றன. இத்தகைய உறவு யந்திர மயமானதாக, வெளியிலிருந்து திணிக்கப்படுகிற ஒன்றாக ஆகிவிடலாம். துரதிர்ஷ்டவசமாக, இதுதான் பெரும்பாலான சமயங்களில் நடக்கிறது. கலைஞனும் மனிதனும் கபடமற்ற நிலையில், பெரும்பாலும் யந்திர மயமாகத்தான் ஒருதனி நபரிடம் வந்து இணைகின்றன. மனிதன் ‘சோர்வடையச் செய்யும் அன்றாட வாழ்வின் துயர்களை’ விட்டு விலகி, படைப்புத்திறனை வேறு உலகமாக, ‘தூண்டுதலை அளிக்கிற, இனிமையான சத்தங்களைக் கொடுக்கிற, வேண்டுதல்கள் நிறைந்த’ ஓர் உலகமாகப் பாவித்து ஒரு கண நேரம் அதனுள் புகுகிறான். இதன் விளைவென்ன? மிகுந்த தன்னம்பிக்கையுள்ள, முரட்டுத்தனமான நம்பிக்கை கொண்ட, விண்ணில் பறக்கும் ஒரு செயலாகக் கலை ஆகிவிடுகிறது. ஏனென்றால், வாழ்க்கைக்குப் பதிலளிக்கவேண்டிய வேவையில்லை என்றாகி விடுகிறது.
இந்த மாதிரியான கலையை தன்னகப்படுத்திக்கொள்ள திராணி அல்லாத நிலையில் வாழ்க்கை இருக்கிறது. ‘இது எங்களுக்கு மிகப்பெரிய விஷயம்’ என்கிறது வாழ்க்கை. ‘அது வெறும் கலைதான். நமக்குக் கிடைத்திருப்பதெல்லாம் உரைநடை போன்ற எளிமையான வாழ்க்கை’ ** என்கிறது.
ஒருவர் கலைக்குள் இருக்கும்போது, அவர் வாழ்க்கையில் இருப்பதில்லை. அதேபோல, வாழ்க்கையினுள் இருக்கும் ஒருவர் கலைக்கு வெளியில்தான் இருக்கிறார். இவர்களுக்கிடையே எந்தப் பிணைப்பும் இல்லை. ஒரு தனி மனிதனுக்குள் இவை உட்புகுவதில்லை. ஒரு மனிதனின் உள்ளார்ந்த பகுதிகளுக்கிடையேயான தொடர்புக்கு எது உத்திரவாதமாக இருக்கிறது? இந்த ஒட்டுமொத்தப் பொறுப்புணர்வுதான். கலையில் நான் எதை அனுபவித்தேனோ, புரிந்து கொண்டிருக்கிறேனோ அதற்கு என் வாழ்க்கை மூலமாகத்தான் நான் பதிலளிக்கவேண்டும். இதனால் நான் அனுபவித்துத் தெரிந்து கொண்டதெல்லாம், எனது வாழ்க்கைக்குப் பயனளிக்காத ஒன்றாக ஆகிவிடாது. ஆனால் பொறுப்புணர்வு என்பது குற்ற உணர்வை ஏற்படுத்துவதிலோ, அல்லது குற்றம் சாட்டுவதிலோதான் போய்முடியும். கலையும், வாழ்வும் ஒன்றுக்கொன்று பதிலளிக்கும் விதமாய் இருக்க வேண்டும் என்பதோடு, ஒன்றையொன்று பழிக்கும் விதமாகவும் இருக்கவேண்டும்.
கொச்சையான உரைநடை போன்றிருக்கும் வாழ்வைப் பற்றிய குற்ற உணர்வைத் தமது கவிதை தாங்கிக் கொண்டிருக்கிறது என்பதைக் கவிஞன் நினைவில் கொள்ள வேண்டும். அதுபோலவே, வாழ்க்கையில் உள்ள அம்சங்களுக்குச் சீரிய கவனம் செலுத்தாமல், கவலையற்றுத் திரிய நாம் துணிவதாலும்தான் கலை என்பது பயனில்லாத ஒன்றாக ஆகிவிடுகிறது என்பதை அன்றாட வாழ்வில் மூழ்கிக் கிடக்கும் மனிதன் தெரிந்து கொள்ளவேண்டும். தனிமனிதனே முழுக்க முழுக்கப் பொறுப்பாளியாக வேண்டும். அவனை உருவாக்கிய தருணங்கள் அவனது வாழ்வின் கால அளவில் அடுத்தடுத்த கட்டங்களாக ஒட்டிக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்தமான குற்ற உணர்வோடும், பொறுப்புணர்வோடும் ஊடுருவி இருக்கவேண்டும்.
இந்தக் குற்ற உணர்வே பொறுப்புணர்வு இழந்திருப்பதை நியாயப்படுத்துவதாக இருந்து விடக்கூடாது. வாழ்வைப் புறக்கணித்த, மற்றும் வாழ்வால் புறக்கணிக்கப்பட்ட தூண்டுதல் என்பது உண்மையான தூண்டுதலாக இருக்காது. அது வெறுமனே ஒரு சொத்து போலத்தான் இருக்கும். கலை மற்றும் வாழ்வுக்கிடையேயான உறவு, கலையின் உன்னதம், மற்றும் இன்னபிற – அதாவது இந்தமாதிரியான எல்லா வாதங்களுக்குப் பின்னாலும் இருக்கிற உண்மையான ஏக்கம் – பழைய வாதங்களின், நாமாக நினைத்துக் கொள்ளும் பொருள் அல்ல, அவற்றின் உண்மையான பொருள், கலைமற்றும் வாழ்க்கை சார்ந்த பணிகளை எளிதாக்கிக் கொள்ள அவர்கள் பட்டபாடாகவும், தமது பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்ளும் முயற்சி என்பதாகவும்தான் இருக்கிறது. ஏனென்றால், வாழ்க்கைக்குப் பதிலளிக்காமல் படைப்பதென்பது கண்டிப்பாக சாத்தியமாகக் கூடிய விஷயமே. மேலும் கலையைக் கண்டுகொள்ளாமல் வாழ்வதும் எளிதான காரியமே.
கலையும் வாழ்வும் ஒன்றல்ல. ஆனால், அவை என்னுள், என் ஒட்டு மொத்தப் பொறுப்புணர்வோடு இணைந்திருக்க வேண்டும்.
***
*‘தனிமனிதனிடம் முழுமை அடைகிறது’ என்று இங்கு பக்தீன் கூறுவது இம்மானுவல் காண்ட் எழுதிய The Metaphysics of Morals கட்டுரையில் கூறப்படும் கருத்தின் நீட்சியாக இருக்கிறது (மொ-பெ)
**இந்த மேற்கோள்கள் A.S.Pushkin எழுதிய The Poet and the Crowd என்ற கவிதையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. (மொ-பெ)

கலைக்குள் வாழ்க்கை இல்லை.
வாழ்க்கைக்குள் கலை புகுந்துவிட முடியாத சூழலில்தான், அன்றாடங்களின் வாழ்க்கை நகர்கின்றன.
விஞ்ஞானம், வாழ்க்கையோடு கைக்கோர்த்துக்கொண்டு கையங்கர்யம்
செய்கின்றது.
அதனால் தான் கலைஞன்,
அநாதையாக திரிகின்றான்.
ஜெயானந்தன்