- கௌதம சித்தார்த்தன்
எனக்கு சின்ன வயதிலிருந்தே புல்லாங்குழல் மிகவும் பிடிக்கும். எனது மாமனும் பால்யபருவத்து தோழனுமான முத்தண்ணன்தான் புல்லாங்குழல் வாசிக்க எனக்குக் கற்றுக் கொடுத்த குரு. மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகள் பக்கத்திலிருக்கும் வெள்ளாமை நிலத்தை நோக்கி நகரும்பொழுது, குழல் வாசித்தே அவைகளை மேய்ச்சல்நிலத்தை நோக்கி திசைதிருப்பி விடும் மகத்தான இசைஞன்! இந்த அற்புதத்தில் லயித்துப் போய் புல்லாங்குழல் மீதான பிரியம் என் பிஞ்சுப்பிரபஞ்சம் முழுக்க ஆக்கிரமித்திருந்தது. அவனோடு சேர்ந்து மேய்ச்சல் நிலங்களில் காடுகரைகளில் குழலோடு அலைந்திருக்கிறேன். ஆனால் இசை பற்றி எதுவும் தெரியாது. குழலின் துளைகளின் வழி பரவும் காற்று, என் உடலைத் துளைக்கும் ஆனந்த நிலையே என் இசைரசனை. நானும், என் புல்லாங்குழலும், மேய்ச்சல் நிலங்களுமாக இருந்த என்னை இசையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியவர் இலக்கிய ஆர்வலரான கோபிசெட்டிபாளையம் ஸ்ரீராம். என் இசை ஆர்வத்தை உணர்ந்து, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒரு இசை கேசட் ஐ தந்தார். கேசட்கள் புழக்கத்தில் இருந்த காலம் அது. அந்தக்கால கட்டத்தில், ‘இந்தியா டுடே’ இதழ் இசைத்தொகுப்புகளில் கவனம் செலுத்தி பல இசை கேசட்களை வெளியிட்டு வந்தது. அதில் ஒன்றுதான் அவர் தந்த ‘ஹரிபிரசாத் சௌராஸ்யாவின் புல்லாங்குழல்’ இசை ஆல்பம்.
அதைக் கேட்டு பித்துப் பிடித்தவன் போலானேன். ஒரு குழலிசை இப்படியெல்லாமா நம் உயிரை வருடிவிடும்.. மீண்டும் ஓடினேன் அவர் வீட்டிற்கு. மேலும் சில கேசட்டுகள் தந்தார். முழுமையாகப் பைத்தியம் ஆனேன்.
இந்தியா டுடே The Elements என்ற தலைப்பில் வெளியிட்ட தொடர் இசைத் தொகுப்புகளில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் நிலை கொண்ட 5 இசைத் தொகுப்புகளையும் வாங்கினேன். அடுத்து Sound Scapes என்ற தலைப்பில் வெளியிட்ட தொடர் இசைத் தொகுப்புகளில் கடல், மலை, ஆறு, பாலை, பள்ளத்தாக்கு என்ற இயற்கை நிலை கொண்ட 5 தொகுப்புகள்.. என தேடித்தேடி வாங்கினேன்.
அதில் முன் தலைப்பில் “ஆகாயம்” என்ற ஜாகீர் உசேனின் இசை ஆல்பம் என் உயிரின் ஒவ்வொரு அணுவிலும் எல்லையற்ற ஆனந்தத்தில், திளைக்க வைத்தது. அதிலும் The Zen Of Space என்ற இசைத்துண்டு.. என்னை மாய்த்துத் தள்ளியது. ஒரு தபேலா இப்படியெல்லாம் கூட உயிர்க்கால்களை வருடியெடுக்குமா? ஹோவ்..
அடுத்த தலைப்பில் வரும் “மலைகள்” தொகுப்பில் ஒலிக்கும் ஷிவ் குமார் சர்மாவின் ‘சந்தூர்’ என்னை எல்லையற்ற வசீகரத்துடன், தன் கொடுமுடியில் ஏற்றிக் கொண்டேயிருந்தது.
இந்தக் கட்டத்தில் என் இசை பற்றிய ஆர்வத்தை மேலும் மேலும் நகர்த்தியத்தில் பெரும் பங்கு வகித்தவர்கள் அருள் சின்னப்பனும், ஆறுமுகமும்.
மார்கழி மாத இசைப்பருவத்தில் ஈரோடு பள்ளிபாளையம் ஆண்டாள் திருப்பாவை குழுவினரால் நடத்தப்படும் இசைவிழாவிற்கு அழைத்துப் போவார் அருள். அங்கு திறந்த கர்னாடக இசைவெளி, என் அக்குளில் சிறகு பொருத்தியது.
அருள், இசை பற்றி நான் வைத்திருக்கும் பார்வையை எதிர்மறையாகப் பேசி விவாதித்துக் கொண்டேயிருப்பார்: “அவர்கள் எல்லாமே நுழைவு வாயில்கள்தான். நீ முழுமையடைய வேண்டுமெனில் இன்னும் சில படிகள் தாண்ட வேண்டும்”. ஒரே சீராக ஒவ்வொரு கொட்டாகத் தாவி மூன்றாங்கொட்டில் ஒலித்துக் கொண்டிருக்கும் பறையிசை, சட்டென சிணுக்குத் தாளம் கொட்டி, “அஞ்சாங்கொட்டுக்குத்’ தாவும் கொண்டாட்டத்தை “செம்பையாவின் கொட்டு” என்று சொல்வார்கள் எங்களூரில். அப்படியான ஒரு தாவலை நான் நிகழ்த்தியாகவேண்டும் என்பதை உணர்ந்தேன்.
அருளின் பேச்சே ஒரு ஜென் கவிதை போலிருக்கும். மாலி, ரமணி, எல்.சுப்ரமணியம், ரவிசங்கர், பீம்சென் ஜோஷி, பிஸ்மில்லா கான், உஸ்தாத் அம்ஜத் அலிகான், மகாராஜபுரம் சந்தானம், கங்குபாய் ஹங்கள்.. என்று ஒவ்வொரு முறையும் அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டேயிருப்பார் ஆறுமுகம். எனக்கு வாய்ப்பாட்டை விடவும் இசையே பிடித்தமானது.
அந்த இசைவாசிப்பின் அலாதியான தருணங்களை ஷேக் சின்னமௌலானாவின் தனியான நாதஸ்வரமும், ஜெய்சங்கரின் நாதஸ்வரத்தோடு இழையும் வளையப்பட்டியின் தவுலும் தீர்மானிக்கும்.
மதுரை சேதுராமன் – பொன்னுச்சாமி சகோதரர்களின் நாதஸ்வரத்தில், ஹரித்வாரமங்களம் பழனிவேலும், திருவாழப்புத்தூர் கலியமூர்த்தியும் தவுல்களில் இழையும்போது ஏற்படுகின்ற அலாதியான தருணங்களை என்னால் விளக்கமுடியாது. அது அப்படித்தான். எங்களூர் கோவிந்தன் விருத்தம் எடுத்துப் பாடும்பொழுது, செம்பையாவின் பறைக் கொட்டு ஒன்னாந்தாளம் ரண்டாந்தாளம் என்று துள்ளித்துள்ளி அடித்துக் கொண்டிருக்கும். விருத்தம் முடிந்து கிலுலுலூ.. என்று குலவையடிக்கும்போது, சரேலென இணையும் ரங்கசாமியின் ‘டட்டஹு.. டட்டட்டஹு..’ என்னும் உறுமி வரிச்சலை, அழகாகத் தனது பறைக் கொட்டில் பற்றி, அந்தத் தனி ஆவர்த்தனத்தை இணைக்கும் அபாரமான இசைவெளியை உருவாக்கும் செம்பையாவின் கலைலாவகத்தை எப்படி விவரிக்கமுடியாதோ, அப்படித்தான்!
எங்கள் ராஜ்கண்ணக்கா உரல் இடிக்கும் வேலையே ஒரு அற்புதமான இசையாக மலரும். கம்புப் பணியாரம் செய்வதற்காக கம்பு மாவு இடிக்கும்பொழுது ஒரே சீரான லயத்தில் உலக்கை உரலில் இறங்கும். தனி ஆவர்த்தனமும் செய்வார். கூடவே இன்னொருவரை இணைத்துக் கொள்ளவும் செய்வார். இந்த இணையரை ‘எசக்கை’ என்று சொல்வார்கள். இவருக்கு ‘எசக்கை’யாக நல்லம்மக்கா சேர்ந்து கொண்டால், சங்கீத விழாதான். உரலில் இருவரும் மாற்றி மாற்றி உலக்கையைப் போடும் அழகில் கீழ் ஸ்தாயியில் ஆரம்பித்து உச்சஸ்தாயிக்கு நகரும்போது கம்பு மாவு பிரிபிரியாக பிரிந்திருக்கும். கம்பு மாவுக்குத் தனிஆவர்த்தனம், எள்ளு மாவுக்குத் தனிஆவர்த்தனம் என்று ஒவ்வொரு தானியங்களுக்கும் தாளகதியை நிர்ணயித்து வைத்திருப்பார் ராஜ்கண்ணக்கா.
இந்த மாவு உருண்டைகளை விண்டு சாப்பிடும்பொழுதே இது இன்னார் இடித்த மாவு என்பதைக் கண்டு பிடித்துவிடுவார் தேவராட்டக்காரரான என் அப்பா. மேலும், அந்த இடிப்பில் குறைந்துள்ள அல்லது அதிகமாகியுள்ள தாளக்கட்டைகளை விண்டு காட்டும்பொழுது, இதிலும் தாளக்கட்டையுண்டு என்பதை அவர்களது லாவகமான கைவிசையில் எழும் தாளகதி அக்கணத்தில் எனக்குள் உலக்கையின் லயத்தில் இறங்கும்.
கன்யாகுமரியின் வயலினில் இழுபடும் வில்லின் சீரான அசைவு ஒரு சிறு மாத்திரை அளவு பிசகி சட்டென மீண்டும் சீராகும் தன்மையை ஒத்த இசைச்சுருதி அத்தருணத்தில் எனக்குள் கூடும்.
செம்பையாவின் பறை ஜதியும், பிஸ்மில்லா கானின் ஷெனாயும், ரங்கசாமியின் உறுமி வரிச்சலும், ஜாகிர் உசேனின் தபேலாவும், ராஜ்கண்ணக்காவின் உரல் இடிப்பும் என் உடலெங்கும் கலந்து குருதி ஓட்டத்தில் இணையும்போது பைத்தியம் பிடிக்காமல் நான் தப்பித்துக் கொள்ளவோ, அல்லது அதன் உணர்வோட்டங்கள் என்னைக் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாகவோ புத்தகங்களை நோக்கி ஓட ஆரம்பிப்பேன். ஆனால், அங்கும் காத்திருக்கிறது ஒரு இசைத் துணுக்கு. ‘ஆயிரத்தொரு அரேபிய இரவுகளை’ வாசித்துக் கொண்டிருந்தபோது 786ஆம் பக்கத்தில் ஒலித்த ஒரு இசைத் துணுக்கைத் தேடி எங்கெங்கோ அலைந்து திரிந்தவனைத் தூக்கிக் கொண்டுபோய் ஈரோட்டில் உள்ள கனிராவுத்தன் குளத்தில் போட்டது ஒரு அண்டரண்டப் பட்சி!
அங்குதான் எனக்கு கவ்வாலி போன்ற சூஃபி இசையை அறிமுகப்படுத்தினார் பெரியவர் பஷீர் பாய். அதன் தொடர்ச்சியில் கவிஞர் பிரமிள் சூஃபி இசையில் நெகிழும் கவித்துவத்தை ஆழப்படுத்தினார்.
சாப்பிடும் நேரம் தவிர ஓயாது இசை சஞ்சாரம்தான். எங்கள் தோட்டத்தில் அந்த வருடம் எள்ளு விதைத்திருந்தோம். நீர் பாய்ச்சுவதற்காக காலையில் தோட்டத்திற்கு வந்து கிணற்று பம்புசெட் மோட்டாரை ஸ்டார்ட் செய்து மடையை மாறி விட்டு விட்டு, மா மரத்து நிழலில் படுத்துவிடுவேன். ஈரம்பாவிய புற்கள் சில்லென்று உடலெங்கும் உறைய என் டேப் பிளேயரில் இசை சுழன்று கொண்டேயிருக்கும். மெல்ல மெல்ல என் பிரக்ஞை மாலியின் குழலில் தோய்ந்து, மாமரத்தில் அலகுகளைத் தேய்க்கும் கிளிகளின் கண்களை சொருக வைக்கும். கிணற்று நீர் பொங்கிப் பிரவாஹமெடுத்து எள்ளுக்காட்டையே ஒரு பெரும் நதியாகச் சுழட்டியிருக்கும்.
சாப்பாடு கொண்டு வந்திருந்த அம்மா கூப்பாடு போடும்பொழுது ஆலா பறவைகளின் படபடவென்ற றெக்கையடிப்புகள் உடலெங்கும் நீரைத் தூவி எழுப்பின. அம்மா கோபத்துடன் கத்தினாள். “வெள்ளாமையவே கெடுத்திட்டயேடா..”.
எள்ளு சாகுபடியைப் பொறுத்தவரை பயிர்களுக்கு நிறைய நீர் பாய்ச்சக் கூடாது. அந்தப் பயிர்களுக்கான பதனத்துடன் சரியான விகிதத்தில்தான் நீர் பாய்ச்ச வேண்டும். நீர் அதிகமாக விட்டால், பயிர்களுக்குக் கொழுப்பு கட்டிக் கொள்ளும். அதாவது எள்ளுப் பயிர் அளவுக்கு மீறிய செழுமையுடன் வளர்ச்சிதான் அடையுமே தவிற, நிறைய காய் வைக்காது. நல்ல மகசூல் தராது. எள்ளுக் காட்டிற்கு பதனம் பார்த்து நீர் பாய்ச்சுவது என்பது ஒரு ஜென் கவிதை எழுதுவது போன்றது.
அந்த வருடம் எள்ளுக்காடு வழக்கத்தை விடவும் அதிகமாகப் பூத்திருந்தது. ஆலா பறவைகள் பூக்களின் மேலே ஆலவட்டம் போட்டன.
சாகுபடி முடிந்து எங்களூரில் சாமிப் பூச்சாட்டலின்போது, அம்மா எள்ளுப்பயிரை பூ கம்பத்தின் முன் வைத்துக் கும்பிட்டாள். அதுவரை, மூன்றாங்கொட்டில் ஒலித்துக் கொண்டிருந்த பறை இசைக்கலைஞர் செம்பையாவின் சிணுக்குத் தாளம், சட்டென ஏறியடித்து “அஞ்சாங்கொட்டு’ கொண்டாட்டமாக வெடித்தது எனக்குள். “போனவருடத்தை விடவும் இந்த வருடம் வெள்ளாமை பரவாயில்லை’ என்று சாமியிடம் மகிழ்ச்சியுடன் வேண்டிக்கொண்டிருந்தாள் அம்மா.
***
(15. 12. 2024 ஜாகீர் உசேன் மறைவையொட்டி மீள்பிரசுரம்)

அற்புதம். கட்டுரையின் நடையே இசைத் தன்மையோடு உள்ளது. இதில் வரும் இசைக் கலைஞர்களின் இசையைக் கேட்கத் தூண்டும் கட்டுரை.