- கௌதம சித்தார்த்தன்
இந்த முகநூல் பதிவுக்கு, வழக்கமாக எல்லோரும் தலைப்புகள் வைக்கும் விதமாக “நாவல் கலை” என்றுதான் வைக்க வேண்டும். ஆனால், எனக்கு அந்தத் தலைப்பு அயர்ச்சியை ஊட்டியது.
கடந்த ஒரு நூறு வருடமாக, இந்தத் தலைப்பை உருட்டி உருட்டி சிதைத்து சின்னா பின்னமாக்கி விட்டார்கள்.
ஆகவேதான் இந்தத் தலைப்பு.
முதலில், நாவலை எழுத ஆரம்பித்ததிலிருந்தே சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். பாதியிலிருந்து சொன்னால் புரியாது.
கடந்த ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து எழுதத் துவங்கினேன். நாவலின் கதைக்கரு, ஒரு 20 ஆண்டுகளுக்கு மேலாக என்னுள் சலசலத்துக்கொண்டே இருக்கிறது.
இன்னும் சரியாகச் சொன்னால் கடந்த 24 ஆம் வருட டிசம்பரிலேயே துவங்கி விட்டேன். மாத இறுதிக்குள் முடித்து சென்னை புத்தக சந்தையில் வெளியிட்டுவிடலாமென்ற பதற்றம் என் நாடிநரம்புகளில் துடித்தது.
சரியென்று குறிப்புகளையெல்லாம் எடுத்து வைத்து ஒரு வாசிப்பில் இறங்கினேன், அந்த வாசிப்பினூடே எழும் காட்சிகளின் பரவசம் எனக்குள் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவை மேலோட்டமான வெறும் குறிப்புகள்தான்.
என் பக்கத்தில் அசட்டையாக இருக்கையில் சாய்ந்திருந்தவன் குபீரென்று சிரித்தான். கேலியும் கிண்டலும் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. “நான்தான் ஏற்கனவே சொன்னேனே. உன் ஓட்டத்தின் துரிதம் போதாது என்று,,” என்றான் சிரிப்பினூடே.
நான் அவனை வெறுப்புடன் பார்த்தேன்.
உண்மையில் கௌதம சித்தார்த்தன் என்பவன் ஒருவன் அல்ல. இரண்டு பேர்!
போர்த்துகீசியக் கவிஞன் ஃபெர்னாண்டோ பெஸோவா போல 3 பேர் அல்ல. அவரையும் அவரது படைப்புகளையும் ஆய்வு செய்த ரிச்சர்ட் ஜெனித் என்னும் போர்த்துகீசிய ஆய்வாளர் சொல்வது போல, 72 பேரும் அல்ல.
நாங்கள் இருவர். ஒருவன் எழுத்தாளன், மற்றவன் விமர்சகக் கடவுள்!
அந்த நாவல் குறிப்புகள் ஒரு skeleton போல ஒரு பத்துப் பன்னிரெண்டு வரிகள்தான் இருந்தன. முக்கியமாக 2 வது பகுதி இல்லை. அதாவது துவக்கத்தின் முதல் பகுதியும் இறுதியான 3 ஆம் பகுதியும்தான் இருந்தது.
“ஏன் சிரிக்கிறே? எழுத எழுத 2 ஆம் பகுதி தன்னால் வரும் பார்..” என்று அவனைக் கடிந்து கொண்டே, கணினியைத் திறந்து, key in செய்தேன்.
அவன் மேலும் இருக்கையில் நீட்டிச் சாய்ந்தவனாக கண்களை மூடிக் கொண்டான்.
அந்தப் பெரிய கணினித்திரையில், ஓரிரு வரிகள் ஒரு சிறு தூசு போல ஒடுங்கி இருந்தன.
ஒரு நாளைக்கு 1000 வார்த்தைகள் என்று தீர்மானித்து எழுத ஆரம்பித்தேன். முடியவில்லை. 400, 430 என்ற விகிதாச்சாரத்தில் மெதுவாக ஊர்ந்தன வார்த்தைகள்.
ஒரே அயர்ச்சியாக இருந்தது.
“அது starting trouble. அப்படித்தான் இருக்கும். போகப்போக விசை கூடும்.. ” என்று என்னை உசுப்பேற்றினான்.
ஒரு கட்டத்தில் இருக்கையிலிருந்து துள்ளிக் குதித்தேன். அவன் வியப்புடன் என்னை ஏறிட்டான். “2 வது பகுதி கிடைத்து விட்டதடா ..” கொண்டாட்டத்துடன் பேசினேன். “மற்ற 2 பகுதிகளையும் விட இந்த 2 வது பகுதி கற்பனைக்கும் எட்டாத அற்புதமாக வந்திருக்கிறது”
அதன் பிறகு என் விசைப்பலகை விசை கூடியது. ஒரு கட்டத்தில் விசைப்பலகையின் பொத்தான்களை நான் தட்டுகிறேனா அல்லது விசைப்பலகையின் பொத்தான்களை தன்னைத்தானே தட்டிக்கொள்கிறதா என்னும் சூட்சுமம் புரியாமல் எனக்கும் விசைப்பலகைக்கும் ஒரு Transformation நடக்கும் பாருங்கள். அதுதான் Amazing!
என்ன சொல்லி, என்ன செய்ய..? கண் முன்னால் சென்னை புத்தகச் சந்தை போய்க் கொண்டே இருந்தது.
சரி எப்படியும் புது வருடத்தின் வருகையைக் கொண்டாடும் பொருட்டு தினமும் 1000 வார்த்தைகள் என்ற “உறுதிமொழி ” யுடன் களத்தில் இறங்கினேன்.
அவன் மேலிருந்த கோபத்தில் ஒரேமூச்சில் ஒரு நீண்ட பத்தியை (paragraph) எழுதி, அவன் பக்கம் திரும்பி ஏளனப் புன்னகையை வீசினேன்.
ஓரிரு நொடிகளில் எங்கள் இருவரது மனதில் ஓடும் எண்ண அலைகளை அளப்பது, ஒரு இயற்பியல் அளவு கொண்டால், ஒரு அலையின் நீளத்தில் எத்தனை சுழற்சிகளின் எண்ணிக்கை இருக்கிறது என்பதற்குள் நுழைந்து, ஒரு வினாடிக்கு ஒரு புள்ளியைக் கடந்து செல்லும் அலை சுழற்சிகளின் அதிர்வெண் மூலம், இரண்டு தொடர்ச்சியான அலை முகடுகள் அல்லது அதே தொடர்ச்சியான புள்ளிகளுக்கு இடையேயான தூரத்தை அளவிட்டேன். 18 ஆம் நூற்றாண்டின் உலகப்புகழ் பெற்ற ஜப்பானிய ஓவியர் ஹொகுசாய் வரைந்த “The Great Wave off Kanagawa” போல எனக்குள் எழுந்தன அலையடிப்புகள்!
அப்பொழுது மொழிபெயர்ப்பாளர் நன்மாறனிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. ‘புதுவருட வாழ்த்துக்கள்’ சொல்லப்போகிறார். “வணக்கம் தம்பி.. ‘புதுவருட வாழ்த்துக்கள்’ என்றேன்.
அவரும் ‘புதுவருட வாழ்த்துக்கள்’ சொல்லிவிட்டு, “சார் நான் மொழிபெயர்த்த ஜப்பானியச் சிறுகதை “சயாகா முராட்டா வின் தூயமனம்” கதையை, நண்பர் காப்பிரைட் வாங்கியுள்ளாராம். ஆகவே, அதை நம் தமிழி இணைய இதழிலிருந்து நீக்கிவிடச் சொல்கிறார்..” என்றார்.
ஏராளமான கற்பனைகளுடன் எதிர்கொண்ட புதுவருடத்தின் முதல்நாளில் இப்படியொரு செய்தியா..? எனக்குள் என் நாவல் பற்றி யோசித்து வைத்திருந்த படிமங்களும் காட்சி அமைப்புகளும் பளீரெனக் காணாமல் போயின. இருவரும் ஓரிரு நிமிடங்கள் பேசவில்லை.
“உங்களது அலைபேசி எண் கேட்டிருந்தார்.. நான் கொடுக்கலாமா சார்?” என்றார்.
“சரி கொடுத்துவிடுங்கள்.. அதில் என்ன இருக்கிறது..” என்று சொல்லிவிட்டேன்.
அந்த நாள் முழுக்க எதுவும் எழுதவில்லை. எங்கள் தோட்டத்திற்கு சென்று அடர்த்தியான நிழல் பரப்பியிருந்த மாமர நிழலில் சாய்ந்தேன்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி கலவையாக ஞாபகம் வந்தது. செர்பிய எழுத்தாளர் மிலோராட் பாவிக் – குக்கு உன்னதம் மூலம் ஒரு சிறப்பிதழ் வெளியிடலாமென தீர்மானித்து கதைகள், கட்டுரைகள் நேர்காணல்கள் என முக்கியமான படைப்புகளை தேர்வு செய்து மொழிபெயர்ப்பாளர்களிடம் தந்து, வாங்கி, அவைகளை செப்பனிட்டு உன்னதம் சிறப்பிதழ் வெளியிட்டேன். 300 பிரதிகள் அல்லது 500 போதும் என்று வடிவமைப்பாளர் ஜீவா விடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர், “வடிவமைப்பும் உள்ளடக்கமும் பிரமாதமாக வந்திருக்கிறது 1000 போட்டுக் கொள்ளலாம்.. சென்னை புத்தக சந்தை வரப்போகிறது.பெரியளவில் கவனம் பெறும் ” என்று உற்சாகப்படுத்தினார். சரியென்று அச்சகத்திற்குப் போய் 1000 பிரதிகளுக்கு ஆர்டர் கொடுத்தோம். அவர் ஒரு கணக்குப் போட்டு ஒரு தொகை சொன்னார்.நான் சரியென்று சம்மதித்து முன்தொகை எவ்வளவு வேண்டும் ..” என்றேன்
அச்சகத்தின் உரிமையாளர் சொன்னார். “சார் நாங்கள் முழுத்தொகையும் பெற்றுத்தான் இதுபோன்ற சிறு பத்திரிகைகள் அச்சிடுவது வழக்கம்” என்றவர். சிறு பத்திரிகை நடத்துபவர்களின் பொருளாதாரத் தன்மை குறித்து கிண்டல் என்று சொல்லமுடியாத நகைச்சுவையுடன் பேசினார்.
“சரி சார் அது ஒரு விஷயமில்லை..” என்று முழுத் தொகையைத் தந்தேன்.
அதன்பிறகு 2 நாட்கள் கழித்து புத்தகச் சந்தை ஆரம்பமானது. நானும் ஜீவாவும் அச்சகத்திற்குப் போனோம். வேலை முடிந்து பண்டல்களாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. :சார், இன்னும் ஓரிரு நாட்களில் வந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறோம். இப்போதைக்கு ஒரு 200 பிரதிகள் மட்டும் எடுத்துக் கொள்கிறோம்..” என்றார்.
சார், இங்கு இடமே இல்லை.. 2 நாளில் வந்து எடுத்துக் கொள்ளுங்கள்.. அதுமட்டுமல்லாது நாங்க இன்னும் பத்துப் பதினைந்து நாட்களில் வேறு இடம் மாறுகிறோம்.. அதற்குள் எடுத்துக் கொள்ளுங்கள்.. இல்லையெனில் பெரிய பிரச்சினை ஆகிவிடும்.. சுத்தம் செய்யும்போது பழைய காகிதங்களை போடும் அறையில் பசங்க போட்டு விடுவார்கள்.. அது நேரடியாக சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடும்..” என்றார்.
எனக்கு பகீர் என்றது.. “சார் ரொம்ப பயமுறுத்தாதீங்க.. 2 நாள்லே எடுத்துக் கொள்வோம்..” என்று நட்புச் சிரிப்பை சிரித்தேன். “இல்லே சார்.. பயமுறுத்தலே.. அதுதான் இங்கு நடைமுறை..” என்றார் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல்.
ஒருவழியாக 200 இதழ்களை வாங்கிக் கொண்டு நான் சென்னையில் குடியிருந்த வீட்டிற்கு வந்து 100 காப்பிகளை தனியாக எடுத்துக் கொண்டு புத்தகச் சந்தைக்குப் போய் இலக்கிய நண்பர்கள் நடத்தும் ஸ்டால்களில் பத்துப்பத்து இதழ்களைக் கொடுத்தோம். எதிரில் தென்பட்ட இலக்கிய எழுத்தாளர்களுக்கு complimentary பிரதிகள் தந்தோம்.
அடுத்த நாள், “குதிரைவால்” திரைப்படத்தின் கதை வசனகர்த்தா ராஜேஷ் வீட்டுக்கு வந்திருந்தார். நாகார்ஜுனன் சென்னைக்கு வந்திருப்பதாகவும் அவரைப் பார்க்கப் போவதாகவும் என்னை அழைத்தார். எனக்கும் அவரைச் சந்திப்பதில் பெரிய ஆர்வம். ஏனெனில், மிலோராட் பாவிக் பற்றி நவீனத் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்தியவர். அதுமட்டுமல்லாது, அவரது கஸார்களின் அகராதி நாவலை தமிழில் மொழியாக்கம் செய்ய ஆர்வமாயிருப்பவர். ஆகவே, அவரைச் சந்தித்து இந்தச் சிறப்பிதழைத் தர வேண்டும் என்று இருவரும் போனோம்.
ஒரு 20 வருடங்களுக்கு முன்பு சந்தித்து அளவளாவிய ஞாபகங்களை பகிர்ந்து கொண்டோம். சிறப்பிதழை உற்சாகத்துடன் வாங்கிக் கொண்டார். பேச்சுக்கிடையில், “கஸார்களின் அகராதி நாவலை மொழியாக்கம் செய்வதாக சொல்லியிருந்தீர்கள். அந்தப் பணி எப்படிப் போகிறது?” என்றேன். “இல்லையே..அது வேறு ஏதோ ஒரு பதிப்பகம் காப்பிரைட் வாங்கியிருக்கிறது.. வேறு ஒருவர் மொழி பெயர்க்கிறார் என்று செய்தியை கேள்விப்பட்டேன்”. என்றார்.
எனக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.
ஓரிரு நிமிட மௌனம்.
பிறகு வேறு சில இலக்கிய விஷயங்கள் கதைத்தோம். உன்னதத்தில் உங்கள் எழுத்துப் பங்களிப்பு வேண்டும். நீங்கள் எழுத வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தேன்.அவரும் மிக உற்சாகமாக என் கைகளைப் பிடித்துக்கொண்டார். ராஜேஷ், தற்போது உலகப் புகழ்பெற்ற கவிஞரான ஃபெர்னாண்டோ பெஸோவா பற்றியும் அவரது கவிதைகள் பற்றியும் பேசினார்.
நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. எனக்கு ஒரு நல்ல கவிஞரை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி என்று உணர்ச்சிப் பெருக்குடன் ராஜேஷின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
இறுதியாக அவர் தயாரித்த தேநீரைப் பருகிக் கொண்டு விடைபெற்றோம்.
அடுத்த நாள் நாகார்ஜுனனைச் சந்தித்ததையும் அவருக்கு பாவிக்கின் சிறப்பிதழ் கொடுத்ததையும் போட்டோக்களுடன் முகநூலில் வெளியிட்டேன். நண்பர்கள், வாசகர்கள், இளம் எழுத்தாளர்கள் எனப் பலரும் அதைக் கொண்டாடினார்கள்.
அடுத்த நாள் மாலை, நானும் ராஜேஷும் புத்தகச் சந்தையில் இருந்தபோது, நாகார்ஜூனனிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினேன். ‘பாவிக்கின் மனைவி தனக்கு ஒரு மெயில் அனுப்பியுள்ளார். பாவிக்கின் சிறப்பிதழை வெளியிட நீங்கள் அவரிடம் காப்பிரைட் பெற்றிருக்க வேண்டுமென்றும், அப்படி எதுவும் பெறாத காரணத்தினால், இதழை வெளியிட வேண்டாமென்றும் உங்கள் மீது புகார் தெரிவித்திருப்பதாகவும்’ சொன்னார். (பாவிக், நாகார்ஜூனனின் நண்பர். ஆனால், இப்போது பாவிக் உயிருடன் இல்லை.)
நாங்கள் இருவரும் புத்தகச் சந்தையை விட்டு வெளியே வந்து ஒரு மர நிழலில் அமர்ந்தோம். ராஜேஷ், “அதை விடுங்க கெளதம்.. வாங்க ஒரு தேநீர் சாப்பிட்டுட்டு நாம் புத்தக விழாவுக்குப் போவோம்..” என்றார்.எனக்கு மீண்டும் அந்தப் புத்தக விழாவுக்குப் போவதற்கு மனசில்லை. நான் தலையை ஆட்டினேன். ராஜேஷ் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். நான் மறுத்து விட்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டேன்.
அதன் பிறகு, பெரும் மன உளைச்சலில் சுற்றிக் கொண்டிருந்தேன். புத்தகச் சந்தைக்குப் போகவேயில்லை. விற்பனைக்குத் தந்த இதழ்கள், விற்பனைப் பணம் எதிலும் நாட்டமில்லாமல் சென்னையின் தெருக்களில் அலைந்து திரிந்தேன். அலைபேசியில் மின்னேற்றம் செய்யாமல் அணைந்து கிடந்தது.
ஒரு சிலநாட்கள் கழிந்து ஜீவா வீட்டிற்கு வந்திருந்தார். “உங்கள் மொபைல் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது.. நானும் நான்கைந்து நாட்களாக உங்களை அழைத்துக் கொண்டு இருக்கிறேன்.. என்னாச்சி?” என்றார். நான் எதுவும் பேசவில்லை.
சிலநிமிட மௌனங்களைக் களைத்து, “சார் அச்சகத்தில் இருக்கும் மீதி இதழ்களை எடுத்து வந்து விட்டீர்களா?..” என்றார். “அச்சக ஓனர், ‘உடனே எடுத்திட்டுப் போங்க..’ என்று அப்பொழுதே அவசரப்படுத்தினார்..” என்று என்னை ஞாபகப்படுத்தினார். அப்பொழுதுதான் யதார்த்தம் உரைத்தது.
ஓ ..ஆமாம் இன்னைக்குப் போய் எடுத்து வந்து விடலாம்..” என்றேன். மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு, “எனக்கு அலுவலகத்திற்கு நேரமாகி விட்டது..ஆகவே, நீங்கள் போய் எடுத்து வந்து விடுங்கள்.. மாலையில் சந்திப்போம்..” என்று கூறி விட்டுப் புறப்பட்டார்.
நான், உடனே அச்சகம் போவதற்கான புறப்பாட்டில் எழுந்து அலைபேசிக்கு மின்னேற்றினேன்.
ஒருவழியாக அச்சகத்திற்குப் போனால், அச்சகம் அங்கிருந்து காலி செய்யப்பட்டு வேறு ஒரு இடத்திற்குப் புலம் பெயர்ந்திருந்தது. பக்கத்தில் இருந்தவர்களை விசாரித்தால் சரியான பதில் இல்லை.
நல்லவேளையாக அலைபேசியில் ஓனர் எண் இருந்தது. அவரைத் தொடர்பு கொண்டு, அச்சகத்தின் புதிய இடத்தை விசாரித்து, அங்கு புறப்பட்டேன்.
அச்சகத்திற்கு இன்னும் ஓனர் இன்னும் வந்து சேரவில்லை. அங்கிருந்த பணியாளரிடம் விசாரித்தேன். அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று தலையசைத்தார்.
கொஞ்ச நேரம் காத்திருந்தேன். அச்சக ஓனர் வந்து சேர்ந்தார். அவரிடம் ஓரிரு நிமிடங்கள் பொதுவாகப் பேசி விட்டு, “சார்.. என்னுடைய இதழ்களை இன்று எடுத்துக் கொள்கிறேன்..” என்றேன். அவர் கலவரத்துடன் என்னை நோக்கினார். “சார் இன்னும் நீங்கள் எடுத்துப் போகலியா? என்ன சார் இது..மாசக்கணக்கா ஆயிடுச்சே.. அது எங்கே இருக்குன்னு தெரியாதே..” என்றார்.
உள்ளே வேலை செய்து கொண்டிருந்த பணியாளரை அழைத்து விசாரித்தார். அவர் தலையாட்டி விட்டு திரும்பி உள்ளே சென்றார்.. இப்படி ஒவ்வொருவராக விசாரித்தார். ஒருவரை உள்ளே சென்று தேடச் சொன்னார். இப்படியே சில பல மணி நேரங்கள் கடிந்தன.
முதன்மை மேனேஜரை அழைத்துப் பேசினார். ” உன்னதம்னு ஒரு பத்திரிக்கை அடிச்சமில்லே.. தெரியுமா?..” என்றார். அவர் சற்று முழித்தார். நான் என் பையிலிருந்து ஒரு பிரதியை எடுத்துத் தந்தேன். அதை வாங்கிப் பார்த்த மேனேஜர் ஒரு உத்தேசமாகத் தலையை ஆட்டினார். “இது அடிச்சி பல மாசம் ஆயிடுச்சே..” என்று என்னைப் பார்த்தார். தலையைக் குனிந்து கொண்டேன். “இது எவ்வளவு காப்பி சார்?” என்று ஓனரைக் கேட்டார். ” தெரியலே.. எரநூறோ முந்நூறோ இருக்கும்..” என்றார் ஓனர். “இல்லே சார்.. மொத்தம் 1000. நான் 200 மட்டும் எடுத்திட்டேன்.. மீதி 800 இருக்கும்..” என்றேன். “அய்யய்யோ அவ்வளவு பெரிய பண்டல்களையெல்லாம் வெக்கிறது இடமில்லே சார்..” என்று வெறுப்புடன் பேசினார் மேனேஜர். “இது இங்கேயெல்லாம் கொண்டு வரல்லே சார்..” என்றார்.“நான் அதுக்குத்தான் சார் அப்பவே சொன்னேன்.. எல்லாத்தையும் எடுத்துக்குங்க ன்னு..” என்று பிரலாபித்தார் ஓனர். மேனேஜரிடம் திரும்பி, “ஒருவேளை பழைய குடோனிலே இருக்குமோ.. ” என்றார். “சார், நாமதான் அதை அப்பவே காலி செய்து விட்டோமே சார் ..” என்றார் மேனேஜர். ஓனர் என்னை வெறுப்புடன் நோக்கினார். “சார், நான் அப்பவே சொன்னேன்.. எல்லாத்தையும் எடுத்திட்டுப் போய்டுங்க.. இங்கேயெல்லாம் இருந்தா காணாம போய்டும் என்று.. நீங்க ரண்டு மாசம் கழிச்சி வரீங்க.. பெரிய உபத்திரவம் சார்..” என்று என்னை நோக்கிப் பேசினார். கூனிக் குறுகிப்போய் அமர்ந்திருந்தேன்.
“யோவ்.. நீ எதுக்கும் பழைய குடோனிலே போய்ப் பாத்துட்டு.. அதுக்கப்புறம் புதுக் குடோன் வந்து தரவா செக் பண்ணிப்பாரு..என்று சாவிக்கொத்தை எடுத்து மேனேஜரிடம் தந்தார்.
“சார்.. பழைய குடோனுக்கெல்லாம் வேற ஆளுக வந்துட்டாங்க..” என்றார் மேனேஜர்.“வந்தா என்னையா.. அவுங்க கிட்டே கேட்டுப்பாரு.. ஏதாச்சும் எங்க பொருளுக.. புக் பண்டல்க.. இருந்திச்சான்னு ..” சரியென்று தலையை ஆட்டிவிட்டு சென்ற மேனேஜரிடம், ” இதா இந்தப் பத்திரிகையையும் எடுத்துனு போ.. மொதல்லே பழைய குடோன் போயிரு..அங்கெ கெடைக்கலைனா.. புதுகுடோன்லே தரவா செக் பண்ணு.. கிடைக்கும் ..” என்று சொல்லியனுப்பினார். “அதா அந்தப் பையனையும் சேத்துக் கூட்டினி போ..”
அவர்கள் போன பிறகு, அந்த இடம் வெறுமையான அமைதியைப் பிரதிபலித்தது.
நான் தலை குனிந்து அமர்ந்திருந்தேன்.
“நான் அப்பவே சொன்னேனில்லே சார்.. அந்த ரெண்டு இடத்திலும் கெடைச்சா கெடைச்சதுதான்.. அங்கே கெடைக்கலைனா .. அவ்வளவுதான் சிவகாசி போயிருக்கும் பட்டாசுக்கு..” என்று சொன்னவர் எழுந்து உள்ளே சென்றார். எனக்கு அவர் மேல் எந்த வெறுப்பும் இல்லை. மாறாக, ஒரு நல்ல அச்சகத்துக்காரரை ரொம்ப நோகடித்துவிட்டோமே என்ற எண்ணங்கள்தான் எழுந்தன.
மேலும் எனக்குள் எழுந்த எண்ணங்கள் பற்றி எழுத எந்தமொழியிலும் சொற்கள் இல்லை. கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். பிறகு மெதுவாக எழுந்து வெளியே வந்தேன்.
தலைமேல் அடித்த வெயில் நேரடியாக என் நடு மண்டையில் பாய்ந்தது. வண்டியை ஸ்டார்ட் செய்து வீட்டுக்கு வந்தடைந்தேன்.
மெல்ல மெல்ல அந்த ஞாபகங்களை மறக்க முயற்சி செய்து அமரந்தாவிடம் விளையாடிக் கொண்டிருந்தேன்.
பிறகு, ஒருநாள் என் மகன் தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அமராந்தாவுக்கு கம்பி மத்தாப்பு, கல்வெடி, துப்பாக்கி, கொள்ளுப் பாட்டாஸ்.. எனக்கு யானை வெடி!
மிலோராட் பாவிக்கை நேர்காணல் எடுக்க அவரது வீட்டிற்குப் போயிருந்த பேட்டியாளர் தனாசிஸ் லல்லாஸ், “அவர் வீட்டின் உள்ளறையிலிருந்து தன்னை வரவேற்க வெளியில் வந்தபோது, அவரது கால்கள் வலிமையுடன் யானையின் கால்களைப் போல கம்பீரமாய் நடைபோட்டன.. யானைகளின் கடந்த கால அனுபவங்களை நினைவு கூறும் வலிமையான நினைவாற்றலும் திறனும் கொண்டவையாக அவை இருந்தன..” என்று கூறிய சொற்கள் எனக்குள் அலையடித்து எழுந்தன.
நான் எனக்கு பட்டாசுகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். “ஏம்பா நீ விரும்பி வெடிப்பியே.. பெரிய பெரிய யானை வெடிகள்தான் வாங்கிட்டு வந்திருக்கேன்..” என்றார்.
தீபாவளியின் மாலை நேரத்தில், பெரிய யானை சரவெடியைக் கொளுத்தினார் என் மகன். ஓரிரு நிமிடங்கள் பட்டாசுகள் வெடித்தன. செர்பிய இலக்கியத்தின் தந்தை மட்டுமல்லாது, உலகின் பின்நவீனத்துவப் பிதாமகன் மிலோராட் பாவிக் தூள்தூளாகச் சிதறினார்.
ஐயய்யோ என்று கூக்குரலிட்டபடி கண்களையும் காதுகளையும் பொத்தியபடி வீட்டிற்குள் நுழைந்து என் அறைக் கதவைச் சாத்திக் கொண்டேன். பாவிக் தூள்தூளாக வெடித்துச் சிதறுவதை என்னால் பார்க்க முடியாது. நான் அந்த வருடம் தீபாவளி கொண்டாடவில்லை. மட்டுமல்லாது, அதன் பிறகு தீபாவளியையே நான் கொண்டாடுவதில்லை. தீபாவளியன்று தீபம் ஏற்றுவேன். மிலோராட் பாவிக் கின் நினைவு அஞ்சலியாக.மீண்டும் இப்போது ஜப்பானியச் சிறுகதை “சயாகா முராட்டா வின் தூயமனம்” கதைக்குத் திரும்புவோம்:
அடுத்த சில நாளில், அந்தச் சிறுகதைக்கு காப்பிரைட் வாங்கியிருந்த தம்பி அலைபேசியில் பேசினார். அந்தக் கதைக்கு, தான் காப்பிரைட் வாங்கியிருப்பதாகவும், தயவு செய்து உங்களது தமிழி இணைய இதழில் வெளியிட்டிருக்கும் கதையை நீக்கிவிடுங்கள் என்றும் ஒரு சினேக பாவத்துடன் பேசினார். “ஓ, முன்பெல்லாம் நவீன தமிழ்ச் சூழலில் எதற்கும் காப்பிரைட் வாங்க மாட்டார்கள். பிறகு மெல்லமெல்ல நாவலுக்குத்தான் காப்பிரைட் வாங்குவார்கள். இப்பொழுது சிறுகதைக்கே வாங்க வேண்டிய சூழல் வந்துவிட்டதோ.. நல்ல வளர்ச்சி..” என்று எண்ணமிட்டவாறே அந்தக் கதையை இணைய இதழிலிருந்து நீக்கிவிட்டேன்.
அப்பொழுதுதான் எனக்குள்ளிருந்த மற்றவன், ஒரு நாவல் எழுது என்று ஒரு உத்வேகம் ஏற்படுத்தினான்.
மற்றபடி, இந்த உரையாடல் போரடிக்கிறது, இந்த உரையாடலின் தொடர்ச்சியை மற்றவன் சொல்லட்டும்.
***
ஏதேதோ வேண்டாத வேலைகளில் நேரத்தைத் தொலைத்துக்கொண்டிருந்தவனிடம் நேரத்தின் அருமை தெரியாத மடையனிடம் சாத்விகமாகப் பேசினேன். ஒரு நாவல் ஒன்று எழுது என்றேன் நைச்சியமாக.
சரி நாவலை எழுதி என்ன செய்வது? என்றான்.
“அட மடையனே, உனக்குள் ஒரு நூறு ஆண்டுகளாக உழன்று கிடக்கும் சொற்களை வெளிப்படுத்து.. இந்த வருட சென்னை புத்தகச் சந்தை முழுக்க நீ தான் பேசப்படுவாய்..” என்றேன்.
வேண்டுகோள் தன்மை கொண்ட என் பேச்சு அவனை உசுப்பியிருக்க வேண்டும். அவன் மெல்ல அதற்குரிய முஸ்தீபுகளில் இறங்கினான்.
சீரிய இலக்கிய நண்பர்களே.. இந்த எழுத்தாளன் கௌதம சித்தார்த்தன் இருக்கிறானே.. பெரும் உணர்ச்சி வசப்படுபவன். அவனை எழுத வைப்பதென்பது, அவனுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டால் போதும். பதட்டமாகி விடுவான். கைகள் எழுதுவதற்கு பரபரக்கும். அநேகமாக அந்த எண்ண அலைகள் அவனை தனக்குள் இழுத்துக் கொண்டன என்பதை கணினியின் விசைப்பலகைத் தட்டல்கள் தெரியப்படுத்தின.
நாட்கள் கடந்து கொண்டே இருந்தன. எங்கள் கண் முன்னாலேயே சென்னை புத்தகச் சந்தை துவங்கி நடந்து முடிந்து கொண்டிருந்தது. அவன் மீண்டும் விரக்தியில் வீழ்ந்தான்.
எனக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. பெங்களூரில் பிப்ரவரி 13 -15 நடக்கும் Alliance Literary Festival க்கு எங்களுக்குத் தெரிந்த சர்வதேச எழுத்தாளர்கள் சிலர் வருகிறார்கள். அவர்களை சந்தித்து இந்த நாவலைக் கொடுக்கலாம்..” என்று ஆசையை மூட்டினேன்.
“அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.. நீ எழுதுவதை மட்டும் செய்..” என்று குரலை உயர்த்தினேன்.அவன் முழு மூச்சுடன் விசைப்பலகையைத் தட்ட ஆரம்பித்தான்.
அடுத்த நாள், அவனது செல்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அவன் பாத்ரூம் போயிருந்தான்.
உடனே நான் எடுத்துப் பேசினேன்.
மறுமுனையில் பேசியவர், ‘எங்களது செல்பேசி எண்ணை நண்பர் கார்த்திக் ராம் கொடுத்ததாகவும், மேலும் எங்களைப் பற்றி மிகவும் அற்புதமான இலக்கிய எழுத்தாளர் என்றும் அறிமுகப்படுத்தினார்..’ என்று சொன்னார். “தான் ஒரு புதிய இளம் திரைப்பட இயக்குனர் என்றும், தான் கதை ஒன்று வைத்திருப்பதாகவும், அதை படமாக எடுப்பதாகவும், தான் எடுக்கப் போகும் படத்திற்கு திரைக்கதை வசனம் நீங்கள் தான் எழுதவேண்டும் ..’ என்று வேண்டினார்.
கடவுளே, மீண்டும் ஒரு கண்ணிவெடியா?
அவன் பாத்ரூமிலிருந்து வருவதற்குள் பேசியாக வேண்டும் என்ற பதற்றம் என்னைப் பற்றிக் கொண்டது. நான் உடனே “ஓகே சார்.. நான் திரைப்படத்தில் பணி புரிய 5 லட்சம் ரூபாய் சம்பளம். முதலில் ஒரு லட்சம் ரூபாயை என் வங்கி எண்ணில் போட்டுவிட வேண்டும். அதன் பிறகு நான் சென்னைக்கு வந்து உங்களை சந்தித்து கதை சம்பந்தமாக ஒரு சில விஷயங்கள் கலந்து பேசிவிட்டு, கதையை வாங்கிக் கொண்டு வந்து விடுவேன். அதன் பிறகு 15 நாட்களில் வேலை முழுவதும் (திரைக்கதை வசனம்) முடித்து சென்னை வந்து உங்களை நேரில் சந்தித்து Bounded Script ஐ ஒப்படைக்கும்போது 2 லட்சங்கள் கொடுத்து விட வேண்டும். அதன் பிறகு நீங்கள் அதைப் படித்து மாற்றங்கள் ஏதும் தேவைப்படுமெனில் அந்த இடங்களை நீங்கள் குறிப்பிட்டு அனுப்பினால், அவைகளையெல்லாம் மாற்றம் செய்து அனுப்பி விடுவேன். அதன் பிறகு, சூட்டிங் போகும்போது எப்படியும் நான் தேவைப்படுவேன். அங்கு ஸ்பாட்டில் சிற்சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். அதனால், நான் அங்கு புறப்பட்டு வந்து, சரி செய்து கொடுப்பேன். அதன்பிறகு உங்கள் வேலையெல்லாம் முடிந்து, படத்தை வெளியிடவேண்டிய காலத்தில் மீதி 2 லட்சங்கள் எனக்குக் கொடுத்து நம் பணியை நிறைவு செய்து கொள்ளலாம்.. இதுதான் என் பணியின் விதிமுறைகள்..” என்றேன்.
மறுமுனையாளர் ஓரிரு நிமிடங்கள் யோசித்தவர், “சரி நான் உங்களை ஓரிரு நாளில் தொடர்பு கொள்கிறேன்..” என்றார்.
(நான் ஏதோ சும்மா அடித்து விடுகிறேன் என்று நினைக்காதீர்கள். சாட்சியம்: கார்த்திக் ராம்)
அதற்குள் பாத்ரூம் போனவன் முடித்து விட்டு வந்து விட்டான்.
ஃபோன்லே யாரு..?” என்றான்.
“அது சும்மா.. ராங் நெம்பர்..” என்றேன்.
அவன் இருக்கையில் அமர்ந்து விசைப்பலகையின் பொத்தான்களை துரிதப்படுத்தினான்.
காலப்பிரக்ஞை தவறிய அவனது விசைப்பலகையின் விசை அறை முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.
ஆயிற்று, பிப்ரவரி முடிந்து மார்ச்!
ஒருநாள் கேட்டான்: என்னாச்சு Alliance Literary Festival?
ஐயையோ, இப்பொழுது இதிலிருந்து எப்படித் தப்புவது? அந்த விசைப்பலகையின் விசையைக் குறைக்காமல் விசையை மேலும் கூட்ட என்ன செய்வது?
ஆஹா வென்றே எழுந்தது பார் யுகப் புரட்சி!
அட அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.. இந்த வருட சர்வதேச புக்கர் பரிசே நமக்குத்தான்..” என்றேன். விசைப்பலகையின் தட்டலை நிறுத்தி விட்டு என்னை உறுத்துப் பார்த்தான்.
“ஏய் அப்படிப் பார்க்காதே.. சத்தியமாகச் சொல்கிறேன்.. இந்த வருட சர்வதேச புக்கர் நமக்குத்தான்… கன்ஃபார்ம்”
மேலும் சொன்னேன். “உன் narrative ஐ ஒவ்வொரு சொற்களாக கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். குறைந்த பட்சம் Short list லாவது பேர் வரும்..” என்றேன்.
அவன் முகம் சர்வதேச நியான் விளக்காய் ஒளிர்ந்தது. விசைப்பலகை வேகம் கூடியது.
அடுத்த நாள் அவன் வெறுமையுடன் கணினிக்கு முன் சோகமாய் அமர்ந்திருந்தான். இணையத்தின் பல்வேறு பக்கங்களைத் திறந்திருந்தான். நான் என்ன ஏதுவென விசாரித்தேன்.
“{இந்த வருடத்தின் (2025) சர்வதேச புக்கர் விருதின் Short list வெளியாயிருக்கிறது..” என்று முணுமுணுத்தான்.
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. “இந்த வருடத்தின் (2025) சர்வதேச புக்கர் விருது என்றால் நவம்பர் டிசம்பரில்தானே வெளியாக வேண்டும். அதெப்படி மார்ச்சிலேயே..”
நான் மவ்ஸை வாங்கி ஸ்குரோல் செய்தேன்.
இது நான் சற்றும் எதிர்பார்க்காத அடி!
இப்படியெல்லாம் நடக்குமென நான் யூகிக்கவே இல்லை.. “சரி விடு இது கூட ஒருவகையில் நல்லது தான். உன் நாவலை நிறுத்தி நிதானமாக எழுதுவதற்கும் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரைத் தேடிக் கண்டடைந்து, அவர் சிறப்பாக மொழிபெயர்ப்பதற்கும் நமக்கு நாட்கள் தேவை.. எல்லாமே திட்டமிட்டபடி மிகச்சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன.”
அவன் மெதுவாக விசைப் பலகையைத் தட்ட ஆரம்பித்தேன்.
ஆனால், இப்பொழுது எனக்குள் வேறொரு பிரச்சினை பெரும் மலைப்பாம்பாக எழுந்து என் உடலைச் சுற்றிக் கொண்டு இறுக்கியது.
இப்பொழுது புக்கர் விருது, சர்வதேச புக்கர் விருது குறித்து கொஞ்சம் பார்த்து விடலாம்.புக்கர் விருது, நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுபவருக்குக் கொடுப்பது, சர்வதேச புக்கர் விருது, சர்வதேச நாடுகளின் பல்வேறு மொழிகளில் எழுதும் எழுத்தார்களின் நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்ட வகைக்கு கொடுப்பது. 1997 ல் இந்தியாவின் அருந்ததிராய்க்கு கிடைத்தது புக்கர் விருது, அதேபோல 2006 ல் கிரன் தேசாய்க்கும் 2008 ல் அரவிந்த் அடிகாவுக்கும் கிடைத்தது புக்கர் விருது.
சர்வதேச புக்கர் விருது, 2022 ல் இந்தியாவின் கீதாஞ்சலி ஸ்ரீக்கு கிடைத்தது.
சர்வதேச புக்கர் விருதின் Short list ல் இடம் பிடித்த 6 பேரில் ஒருவர் இந்திய நாட்டவர். அதாவது, கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட எழுத்தாளர். இந்த வருடம் இவருக்கு விருது கிடைத்து விட்டால், அதாவது இந்தியாவுக்கு விருது கிடைத்து விட்டால், அடுத்த வருடம் நிச்சயமாக வேறொரு நாட்டிற்குத்தான் இந்த விருது கிடைக்கும். மேலும் சில பல வருடங்கள் கழித்துதான் இந்தியாவை கவனிப்பார்கள்.
ஆகவே, கடவுளே.. இந்த வருடம், சர்வதேச புக்கர் விருது இந்தியாவுக்குக் கிடைக்கக்கூடாது என்று கடவுளை மனதார வேண்டிக் கொண்டிருந்தேன்.
அதன் பிறகு விசைப்பலகை மெதுவாக இயங்க ஆரம்பித்தது.
யூ ட்யூப் பக்கம் அடிக்கடி போக ஆரம்பித்தான். தற்கால தமிழக அரசியலை முன்வைத்து, யூ ட்யூப்பில் கொட்டப்படும் கருத்துக் குவியல்களில் மூழ்கி நீச்சல் அடித்தான். மார்ச் 29 ஆம் தேதியில் ஏழரை சனி ஆரம்பிக்கிறது, அப்படித்தானிருக்கும் என்று முணு முணுத்தான். தனது தலை முழுக்க கூடியிருந்த நாவல் காட்சிகள் அழிந்து போய் யூ ட்யூப் குவியல்கள் ஏறின. நான் அவனைக் கண்டித்து நாவல் எழுதுவதற்கு அழைத்து வருவேன். வீட்டில் எழும் லௌகீக பிரச்னைகள், பழைய பொருளாகி விட்ட கணினி மக்கர் செய்தது. நீங்கள் பயன்படுத்தும் OS, windows 7 பழையது. இப்பொழுது புது அம்சங்களுடன் windows 11 வந்திருக்கிறது. எனவே, அதற்கு மாறி புதிய அனுபவங்களைப் பெறுங்கள்.. என்று மைக்ரோசாப்ட்காரன், அடோப்காரன், வேர்ட், K 7 என்கிற ஆன்டி வைரஸ்.. இப்படி மாறி மாறி ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் செய்தி அனுப்பிக்கொண்டே இருக்கிறான்கள். அப்புறம் அவனது உடல்நலப் பிரச்னைகள்.. இறுதியாக, எங்கள் ஊரில் ஒருநாளைக்கு ஏலெட்டுமுறை ஏற்படும் மின்தடைகள்.. ups பழுதாகிவிட்டதால், நேரடியாக கணினியில் மின்சாரம் பாயும் சூழ்நிலையில் இப்படி ஏலெட்டு முறை மின்சாரம் தடையானால், கணினியின் மென்பொருட்கள் பழுதாகி விடுமே என்ற நிலை… இப்படியாக முன்பிருந்த வேகம் மட்டுப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.
***
என்ன, இதுவரை அவன் என்னைப்பற்றி ஏதேதோ சொல்லியிருப்பான். அதை எல்லாம் மறந்து விடுங்கள்.
நாவல் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. எப்பாடு பட்டேனும் இந்த வருட டிசம்பருக்குள் முடித்து விடுவேன். மற்றபடி, அதில் ஏற்பட்ட ஒரு சுவாரஷ்யமான ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்களுக்கெல்லாம் writer’s block பற்றித் தெரியும் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஏற்படும் எழுதுவது சம்பந்தமான மனத்தடை.
ஒரு படைப்பாளி, சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு, மீண்டும் தனது புதிய படைப்புகளை உருவாக்க முயல்கையில் ஏற்படும் மனத்தடை. எழுத்தாளர் கருத்துக்களை உருவாக்குவதிலிருந்தோ அல்லது அந்தக் கருத்தை அழகியல் கூடிய எழுத்தாக மாற்றி எழுத்துடன் முன்னேறுவதிலிருந்தோ இயலாமையை ஏற்படுத்தும் இந்த மனத் தடை, பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு நேரும். ஆனால், அந்த எழுத்தாளன் பெரு முயற்சி எடுத்து தன் கதைக்கருவை, உருவாக்கத்தில் கொண்டு வரப் போராடுவது முதல், நீண்ட காலத்திற்கு எழுத முடியாமல் போனது வரை நிகழும் இந்த block ஐ உடைத்து எழுதுபவனே மகத்தான படைப்பாளியாக வரலாற்றில் இடம் பெறுகிறான்.
இது ஓகே. ஆனால் எனக்கு நேர்ந்தது இதுவல்ல. கூர்ந்து அவதானியுங்கள். இதுவரை உலகம் முழுக்க எந்தப் படைப்பாளிக்கும் நேராத அல்லது அவர்களால் இந்தக் கருத்துருவத்தை புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயம்.
நான் பாட்டுக்கு விசைப்பலகையின் பொத்தான்களை தட்டிக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு எழுத்தும் ஒன்று சேர்ந்து ஒரு வார்த்தை மற்றும் ஒரு வாக்கியமாகிறது. அந்த வாக்கியங்களுடன் சொற்கள் இணைந்து வாக்கிய அமைப்பை உருவாக்குகிறது (அந்த வாக்கியத்தில் எந்த சொற்களைப் போடுவது, எதைப் போடக்கூடாது என்பதை எனக்குள் அலையடித்தெழும்பும் கதைக்கருவின் சிந்தனையோட்டம் தீர்மானிக்கும்). அப்படியான வாக்கிய அமைப்புகள் நீண்டு நீண்டு என் சிந்தனைக்குள் கட்டமைந்திருக்கும் காட்சிகளை வரிசைப்படுத்தி, ஒருபத்தியாக (paragraph) மாற்றுகிறது. இப்படி நீளும் பத்திகளினூடே, நானும் என் Innovative ஆன சிந்தனைச் சொற்களும் சுழன்று சுழன்று ஓடும்போது எதிரில் திறக்கிறது ஒரு பாதை. அது புதிர்வழிச் சுழல்வு (Labyrinth) கொண்ட பாதை. அதில் இறங்கி மிக நுட்பமாக, மிக நிதானமாக, மிக அழகியலாக மற்றும் உருவகங்களாக, மீள் புராணிகங்களாக, அரசியலாக நகாசு வேலைகள் செய்துகொண்டே அந்தப் புதிர்வழிக்குள் நடை பயில வேண்டும். ஒரு கணம் ஏமாந்தாலும், அந்தப் புதிர்வழி ஒற்றைப்பாதையாக உருமாறி விடும். நீங்கள் நினைக்கலாம்: பல்வேறு மர்மங்கள் கொண்ட புதிர்வழி ஒற்றைப் பாதையாக மாறுவது நல்லதுதானே.. அதில் எளிதில் ஜாலியாக நடை போடலாமே.. என்று. அது அப்படியல்ல. அது பெரும் ஆபத்தானது.
நான் இதற்கு writer’s dead end என்று பெயர் வைத்திருக்கிறேன்.வாருங்கள் பார்க்கலாம்:
நான் எப்பொழுதும் விழிப்பாகவே இருப்பவன், கடந்த சில பல நாட்களில் எனக்கு நேர்ந்த துன்பங்களிலும், துயரங்களிலும் மனசைச் செலுத்திக் கொண்டு, அவை குறித்த காட்சிகளில் உழன்றபடி என் நடைப் பயணத்திலிருந்து திசை மாறி விட்டேன் போலிருக்கிறது. சட்டென்று எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு விட்டு எதிரில் பார்த்தால், என் கண் முன்னே நீண்டு கிடக்கிறது ஒற்றைப் பாதை. எனக்குள் திடீரென்று பறையோசை ஒலித்தது. காது ஜவ்வுகள் கிழிபட ஆரம்பித்தன. நான் பயந்துபோய், எதிரே நீண்டிருந்த அந்தப் பாதையில் ஓட ஆரம்பித்தேன். சிலபல காலெட்டுகளுக்குள் அந்தப் பாதை முடிந்து போய் முட்டுச் சந்து போல, பாதை அடைந்து கிடந்தது. ஐயகோ என்று கதறியடித்தபடி அப்படியே திரும்பி வந்த வழியிலேயே ஓட்டம் பிடித்தேன், கடவுளே இதென்ன கொடுமை! நான் ஏற்கனவே நடந்து வந்த வழியும் ஏலெட்டுக் காலடிக்குள் அடைந்து போய்விட்டதே. சுற்றிலும் வெறுமை வெறுமை.. ஒவ்வொரு காலெட்டிலும், பயம், கருவேல முட்கள்போல கால்பாதங்களைப் பிளக்கின்றனவே.. கடவுளே இனி எப்படி அதிலிருந்து மீள்வது? அந்த இரு புறங்களிலும் நடந்து நடந்து முட்டுச் சந்தில் மோதி என் மண்டை உடைகிறதே. இனி எப்படி அதிலிருந்து மீள்வது? கடவுளே என்னைக் கை விட்டுவிடாதே..
அப்படியே சம்மணம் போட்டு உட்கார்ந்தேன். என் மேல் கவிழும் வெறுமை வெண்ணிறப் பனியாய் மாறி என் உடலை உறைய வைத்துக் கொண்டிருக்கிறதே. இப்படியே உறைந்து ஒரு பெரும் பனிக் கட்டியாக நான் மாறி விடுவேனோ..
***
இந்த பத்து இருபது நாட்களாகவே கௌதம சித்தார்த்தன் எதுவும் எழுதவில்லை. எதையோ தொலைத்து விட்டவன் போல வெறுமையாய் இருக்கிறான். கணினியைத் திறந்தால் யூ ட்யூப் க்குள் போய் உட்கார்ந்து கொள்கிறான். முதல்வர் தளபதியார், துணை முதல்வர் சின்னவர், எடப்பாடியார், மருத்துவர் அய்யா, மருத்துவர் சின்னய்யா, அண்ணாமலை, எழுச்சித்தமிழர் திருமா வளவன், செந்தமிழன் சீமான், இளைய தளபதி விஜய், பிரேமலதா விஜயகாந்த், மூத்த பத்திரிக்கையாளர் மணி, தமிழா தமிழா பாண்டியன், மாரிதாஸ், சவுக்கு சங்கர், சாட்டை துரை முருகன், டாக்டர் காந்தராஜ், நக்கீரன் பிரகாஷ், நீயா நானா கோபிநாத், ஆதவ் அர்ஜுனா, வேலூர் இப்ராஹீம், உலகநாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… என்று சுற்றிச் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கிறான்.
எனக்கென்னவோ இது நல்லதாகத்தெரியவில்லை. என்னிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டேனென்கிறான்.ஆனால்,ஒன்று மட்டும் நிஜம்: ஏதோ ஒரு பொறியில் மாட்டிக்கொண்ட எலி போல மாறியிருக்கிறது அவன் முகம்!
***
நான் இந்த ஒருமாதமாகவே தற்கால தமிழ் அரசியலின் போக்கை ரசித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிக ஜாலியாகப் போகிறது பொழுது. ஆனால், கௌதம சித்தார்த்தா உனக்கு வயது ஏறிக்கொண்டிருக்கிறது.. காலம் போய்க்கொண்டிருக்கிறது.. நீ பொதுப்புத்தியின் நீரோட்டத்தில் மாட்டிக்கொண்ட தமிழ்க் குடிமகன் போல, யூ ட்யூப்பைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறாய். நீ எழுத வேண்டியவன். உன் நாவலை ” ஆட்டத்தை மாற்றுபவன்” என்று பீலா விட்டுவிட்டு, யூ ட்யூப்பில் திளைத்துக் கொண்டிருக்கிறாய். இது நல்லதல்ல.. நீ பட்டுப்புழு போல மல்பெரி இலைகளில் புகுந்து உன்னைச் சுற்றிலும் கூடு கட்டிக் கொண்டிருக்கிறாய்..
***
அட மடையனே
பட்டுப்புழு எதற்காக மல்பெரி இலைகளில் கூடுகட்டுகிறது என்பது கூட உணராதவனா நீ? தன்னைச் சுற்றி கட்டப்படும் கூடுகளில் பட்டு நூல்களை உருவாக்குகின்றன. கால வரைமுறைப்படி அந்தப் பட்டுக் கூடுகளை சூடான நீரில் வைப்பதன் மூலம் பட்டு இழைகளை விடுவித்து அவற்றை சுழற்றுவதற்குத் தயாராக்குகிறது புழு. வெப்பத்தில் உருகும் அந்தக் கூட்டின் ஒற்றை இழைகள், ஒன்றிணைந்து பட்டு நூலை உருவாக்குகின்றன. அதுபோல writer’s dead end ல் மாட்டிக்கொண்ட நான், எனக்குள் கூடு கட்டிக் கொள்கிறேன். என் கூட்டில் உருவாகுவது ஒருவகை நூலேணி.. வழிகள் அடைக்கப்பட்ட பாதையின் வெறுமையைக் குலைத்து ஆகாயத்தை நோக்கி பயணம் செய்யும் நூலேணி. அதன் வழியாகவே நான் மீள முடியும் என்று என் எண்ணங்கள் படபடக்கின்றன. இதையெல்லாம் உன்னிடம் எப்படிச் சொல்வது என்று விளங்கவில்லை என்று எண்ணமிட்டவனாய் தூக்கத்தைத் தழுவினேன்.
பெரும் மன உளைச்சல்களால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அன்றைய இரவில், திடீரென்று என்னை யாரோ அழைப்பது போலிருந்தது. விழித்துப் பார்த்தால் நான் அந்தப் பாதைகள் அடைந்த பாதையில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தேன். திடீரெனப் பறை ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தால், ஒரு ஆஜானுபாகுவான மனிதர் மற்றும் சற்றுக் குள்ளமான மனிதர் என இருவரும் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அருகில் வந்து, “என்னைத் தெரிகிறதா..?” என்றார் அந்த ஆஜானுபாகு.
“தெரியவில்லை” என்று தலையாட்டினேன்.ஆனால், அவரது முகத்தை நான் எங்கோ பார்த்திருக்கிறேன்.
அப்பொழுது அந்தக் குள்ளமான மனிதர், தன் தோளில் மாட்டியிருந்த பறையை எடுத்து தாளகதியில் அடிக்க ஆரம்பிக்கிறார்.
ஆஹா.. என் சிறுவயதில் பைத்தியம் போல என்னை உலுக்கி எடுத்த பறை இசை. கடவுளே.. அது மம்பட்டியான் கொலைச் சிந்து!
குதிரைச்சந்தைக்குப் பேர் போன அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழாவுக்கு என்னை அழைத்துக் கொண்டு போன என் மாமா, வழி ஓரத்தில் அமர்ந்து பறையிசையுடன் பாடிய மம்பட்டியான் கொலைச் சிந்து என்னும் நாட்டுப்புறக் கதையைப் பாடிய தெருவோரக் கலைஞனின் பாட்டு என் செவிகளில் ரீங்காரமிட்டது. வகைவகையான குதிரைகளைப் பார்ப்பதற்காகவே கூடும் அந்தக் கோயில் விழாவில், நான் மட்டும் என் மாமனைக் கெஞ்சி அந்த கொலைச் சிந்து பாடுபவரிடம் போகலாம் என்று நச்சரித்து, அவரிடம் வந்து அந்த ரிதமான இசையையும் அதற்கேற்ப பாட்டின் தாள லயத்தையும் இருட்டு கட்டும்வரை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்த நினைவுகள் பறையிசையாய் என் உடலெங்கும் துள்ளின.
அப்படியே மம்பட்டியானின் கைகளைப் பிடித்துக் கொண்டேன்.பறைக்கலைஞன் பறையை இசைத்தபடி பாடத் துவங்கினான்.
தகப்பன் உயிர் போன பின்னே
தங்கமாடா நம் உயிரு
பகையாளி வர்க்கங்களைப்
பழிக்குப் பழி வாங்க வேணும்
என்று மனம் கொண்டு
எழுந்து நின்றார் அன்று
பாரஸ்டு காடு மலை
பதுங்க இடம் தேர்ந்தெடுத்து
நேரங்காலம் பாத்திருந்தார்
கொலைகொலையா செய்றதுக்கு…
மம்பட்டியார் கையில வச்சிருக்கிற கத்தி மட்டும் ரெண்டரை அடிக் கத்தி. அந்தக் கத்தியைக் கொண்டு போய், 1959 விகாரி வருஷம் ஆடி மாசம் ஒண்ணாம் தேதி, மேச்சேரி பத்தரகாளி கோயில்லே வெச்சி ராத்திரியானாப் பூசை போடறது, பகலானா கத்தி தீட்டறது, மேச்சேரி பத்தரகாளி கோயில்லே வெச்சி, கத்திக்கு ஆடி பதினேழு நாள் பூசை போட்டு, ஆடிப் பதினெட்டுலே எப்படி வெட்டப் போறாரு.. ஒண்ணா ரெண்டா .. ஒம்போது பேரை பகை முடிக்கணும்.
மம்பட்டியார் என்னுடன் பேசத் துவங்கினார். “உன்னை இந்த அடைபட்ட இடத்திலிருந்து வெளியே கொண்டு வந்து விட்டு விடுகிறேன். அதற்குக் கைமாறாக எனக்கு என்ன செய்வாய்?”
“ஆஹா, என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்.”
“என் பெயரை – என் வாழ்வை நீ இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் உன் நாவலில் எழுதுவாயா?”
நான் உற்சாகத்தில் கிறங்கிப் போனேன்.
அப்படியே அவரைக் கட்டிக் கொண்டேன்.
அவர் தன்னிடமிருந்த நூலேணியை ஆகாசத்தை நோக்கி வீசினார். “ம் ஏறு ” என்றார்.
பாய்ந்து ஏறினேன். ஆகாசம் இப்பொழுது குருநாதசாமி கோவில் திருவிழாவாக மாறுகிறது. குதிரைகளின் கணைப்பு ஒலிக்கிறது. பறையிசைக் கலைஞன் தாள லயத்துடன் பறையை அடித்துக் கொட்டுகிறான்.
நான் திடுக்கிட்டு தூக்கம் கலைந்து எழுகிறேன்: எனக்கு முன்னால் இருந்த கணினியின் விசைப்பலகையில் பொத்தான்கள் தாங்களே அடித்துக் கொள்கின்றன.
******
