-
விஜயா ராமசாமி
-
தமிழில்: மதுமிதா
பெண்கள் குறித்த ஆய்வுப் பாடங்களும் நாடோடிப்பாடல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பினைக் கொண்டுள்ளது. இந்த வாக்குவாதங்களுக்குப் பின்புலமான முக்கிய அம்சம் ஆண்கள் இதை எழுதுபவர்களாக, படைப்பவர்களாக இருக்கிறார்கள். இலக்கிய கலாச்சாரத்தில் பெண்களை முக்கியமாக ‘காட்சிக்குரிய உருவங்களாகவும்’ பெண்கள் இயங்கு பொருள்களாகவும், வாய்மொழியில் பரப்பப்படும் கலாச்சாரக் கலைகளின் வட்டத்துக்குள் இயங்குகிறார்கள். ஆகையால் நாடோடிப்பாடல்களின் மைய ஓட்டம் பெண்களின் குரல்களையும் பெண்களின் வரலாறையும் மீட்டெடுக்கும் விதமாக அமைகிறது.
1970 களில் கலாச்சாரப்பகுதிகளில் பெண்கள் இயக்கங்களும் பெண்கல்வியும் எழுகையில் பெண்களும் பெண்களுக்கான வாய்மொழி வரலாறைத் தர ஆரம்பித்தனர். ‘சிமொன் தெ பூவா’ – வின் கருத்தின்படி நாடோடிப்பாடலிலுள்ள பெண்களைப் பற்றிய பெண்களால் செய்யப்பட்ட ஆய்வில் பெண்களை உண்மையான சப்ஜெக்ட்டாக எடுத்துக்கொண்டனர். ஆப்ஜக்ட்களாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்த இயக்கத்தின் வழியில் சென்றவர்கள் அறிவுசார்ந்த (காட்சிப்பொருளோ, கதைப்பொருளோ என்னும்) ரெண்டுங்கெட்டான் நிலையில் மாட்டிக்கொண்டனர்.
பெண்ணிய கருப்பொருள்
பெண்ணிய அறிஞர்களுக்கு, இம்மாதிரியான ஆய்வு ஆண்மரபுவழி சமுதாயத்தைத் தொடர்ந்து சண்டைக்கும் சவாலுக்கும் இழுக்கும் பெண்ணைச் சித்தரித்து கிராமியத்தன்மையில் சேர்ப்பதற்கு, இம்மாதிரி தங்களைத் தக்கவைத்துக்கொள்ளத் தூண்டுகிறது. இங்கே மறுபடியும் ஒரு இயல்பான நடைக்கும் பட்சபாதமற்ற அறிவுசார்புக்கும் இடையே சமநிலைப்படுத்தும் கல்விசார்ந்த ரெண்டுங்கெட்டான் நிலைமை இருக்கிறது.
செர்னா பெர்கர் க்ளூக் கின் மேற்கோளின்படி அவர்களுடைய அன்றாடத் தடைகளையுடைய செயல்களுக்கும், அவர்களுடைய வெற்றிகளைப் பற்றிச் சொல்வதைக் கேட்பதனால் ஏற்படும் மன எழுச்சியையும் சார்ந்ததுதான் பெண்களின் வரலாறைக் குறிப்பது. ஆனால் பெண்கள் அடக்கி வைப்பதற்கும், அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதையும் நாம் ஒரே சமயத்தில் புரிந்துகொண்டும், நான் முதலில் பெண்களின் வரலாறைக் கற்பிப்பதற்கு வரும்பொழுது நான் மிகவும் சிரமப்பட்டேன். எவ்விதம் பதிவுசெய்யப்போகிறோம் என்ற அந்த சமநிலையை அடைவதற்கு கஷ்டப்பட்டேன். க்ளூக்கின் விமர்சனத்தில் இது தெளிவாகத் தெரிகிறது. நாட்டுப்புறப் பாடல்கள் மூலமாக பெண்களின் விடுதலைக்கான வழிமுறைகளைத் தைரியமாகச் சொல்லும் பெண்ணியவாதிகளை ஆர்வமிக்கவர்களாக ஆக்குகிறது. அந்த சுவாரஸ்யமான உதாரணம், ரோஷன் ர.ஜோர்டான், சூசன் ஜெ. கால்சிக் தொகுத்த நூல். இந்நூல் பெண்களின் நாடோடிக் கதைகள், பெண்களின் கலாசாரம் குறித்தது. பெண்ணிய விமர்சகர்கள் இந்த நூல் குறித்து கூறியது, ” நூலின் அட்டை சாம்பல்நிறமாக இருந்தாலும், புத்தகங்களின் பக்கங்கள் கருநீல வர்ணத்தில் பூசப்பட்டுள்ளன” என தெளிவாக சூசகமாகச் சொல்லப்பட்டது. 1982 ல் ஆலிஸ் வாக்கர் புத்தகம் ‘கருநீல வண்ணம்’ வெளிவந்தது. மக்கள் பெண்களைப் பற்றி பொதுவாக நினைத்துக் கொண்டிருப்பதை புரட்சிகரமாக மாற்றியது, குறிப்பாக வெண்ணிற கருநிற பெண்களைக் குறித்து.
தமிழ் கிராமிய பாடல்களில் பெண்களின் பங்குபற்றிய இந்த ஆய்வில் முன்கூறிய சிந்தனைகள் எதிரொலிக்கின்றன. இந்த ஆய்வில் பெண்ணிய சிந்தனைகளின் நீரோட்டம் வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது. கற்றுணர்ந்த மேற்கத்திய அறிஞர்களுக்கிடையே நடக்கும் நாடக வாக்குவாதங்களுடன் இந்த ஆய்வு எழுத்து வடிவில் இருப்பதற்கும் வாய்ச்சொல் வழக்குக்கும் இடையே உள்ள குழப்பத்தையும் கணக்கிலெடுத்துக்கொள்கிறது. சரித்திர கால ஓட்டத்தில் பெண்ணை மையமாகக்கொண்ட வாய்மொழி வழக்கிலுள்ள கதைப்போக்கில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவதையும் கையாள்பவர்களும் மாறுதல்களையடைந்து வருவதையும் பார்க்க முடிகிறது.
இந்த ஆய்வு எழுத்துக்கும், பேச்சுவழக்குக்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கும் பரம்பரை பேச்சு வழக்கிலுள்ள இளக்கமான தன்மை ஒவ்வொருதடவையும் கிராமிய நாடகங்களிலும் சொற்பொழிவுகளிலும் நகர்ந்துகொண்டே செல்வதையும் கணக்கிலெடுத்துக் கொள்கிறது. பிளாக்பர்னும் ராமானுஜனும் தங்களுடைய புதுநோக்கு நூல்களில் சுட்டிக்காட்டுவது போல, பாரம்பரியத்தைக்கொண்டது என்றாலும், மாறுபடும் தன்மைகளுடனும் வாழும் இரட்டை இயல்புடன் இருக்கிறது. அதன் மாறாது நிற்கும் தன்மை பிரபலமாக இருப்பதற்கும் ஆதாரபூர்வமாகவும் இருக்க உதவுகிறது. அதன் மாறுபடும் தன்மை உள்ளடக்கத்தின் மாறுதல்களுக்கு இடம் கொடுக்கிறது.7
இக்கட்டுரை பெண்களை மையமாகக்கொண்ட தமிழ்கற்பனைக் கதைகளையும் பழங்கால கட்டுக்கதைகளையும் சில பரந்த உதாரணங்களுடன் நோக்குகிறது. எதிரெதிரான உருவகங்களை முன்வைக்கும்பொழுது அருகிலேயே புராதன உன்னத கலாச்சார நூல்கள் பெண்களை தெய்வ விக்ரகங்களாகக் காணும். நடுவே மூலப்பொருளுக்கும் சந்தர்ப்பத்துக்கும் தகுந்தபடி கிராமிய கட்டுக்கதைகளின் மாறுபடும் தன்மைகளை குறிப்பாக மையப்படுத்துகின்றன. இந்த கற்பனைகள் மாறுபாடடைந்து செல்லும்போது நேர்கோட்டில் நெடுகச்செல்லாமல் வளைந்து நெளிந்து பல்வேறு பிரதிநிலைகளை எடுக்கிறது.
பெண்களை மையப்படுத்தும் இதைப்போன்ற பல நாடோடிக்கலைகள் எல்லாம் கதைப்பாடலின் அல்லது வில்லுப்பாட்டின் ஒரு பகுதியாகவும் அல்லது பாரம்பரிய சமய சடங்குகளில் பிரபலமான சிறுநூல்கள். ஒருவர் அல்லி அல்லது ஆரவல்லி சூரவல்லி கதைகளில் ஒப்பாரி அல்லது தாலாட்டு போன்ற கிராமிய பெண்ணைக் குறிப்பாக அடையாளப்படுத்தும் காவியத் தன்மையைக் காணமுடியவில்லை என்பது சுவாரஸ்யமானது. கண்ணகி அல்லது நல்லதங்காளைப் போன்ற துயரத்தின் கதாபாத்திரமாகவும் இல்லை. அதற்கு தகுந்த காரணம் இந்தப் பாடல்கள் அல்லது கதைகள் துயர பாத்திரத்திலிருந்து விடுபடுகின்றன. பிரபல இலக்கியத்தின் முக்கிய பகுதிகள் குஜிலி புத்தகங்கள் என்கிறார் ஏ. ஆர். வெங்கடாசலபதி (1994). இக்கால ஆய்வின் முக்கிய பகுதியான பெரிய எழுத்து பதிப்பகம் இந்த குஜிலி சந்தையின் ஒரு பகுதியாகும். இது புது இலக்கிய வாசகர்களைக் குறிவைக்கிறது. கொலை செய்யும் கதைகளை ஒதுக்கி அனைத்து விதமான புராணங்களையும் மந்திரங்களையும் விட்டுவிலகிச் செல்கிறது. இந்த ஆய்வுக் கட்டுரையில் வெங்கடாசலபதி கீழ்வரும் பகுதியை மேற்கோள் காட்டுகிறார்.
‘ஏதேனும் ஒரு இரயில் வண்டி ஏதோ ஒரு இடத்தில் விபத்துக்குள்ளாகலாம்; அல்லது யாரேனும் ஒரு கொலை புரியலாம்; அல்லது ஏதேனும் ஒரு பெண் ஒரு குரங்கினைப் பிரசவிக்கலாம்; அல்லது ஏதேனும் ஒரு இடம் நெருப்பு பற்றி எரியலாம். உடனடியாக இந்தக் கவிஞர்கள் ஒரு பாடலைப் புனைவர். பாடல்களில் அதன் வார்த்தைப் பிரயோகம் சாதாரண மக்களை மகிழ்விக்கலாம். மேலும், அந்தக் கவிஞன் தானே இந்தப் பாடல்களைத் தெரு சந்திப்பில் கூவி விற்கப் பாடலாம். எந்த சாதாரண மனிதன் வாங்காமல் இருப்பான்?’
இங்கே முக்கியமாக நான் சொல்லவேண்டிய விஷயம் என்னவென்றால் இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டவை அனைத்தும் எனது சொந்தக் கருத்துகள். இவை பெண் அறிஞர்களுக்கு தங்கள் இரட்டைப் பார்வை சிந்தனையை விமர்சனப் பார்வையாக தமிழில் பெண்கள் சித்தரிக்கப்பட்ட இந்த வகையில் பார்க்கச் செய்யவே இது உதவியது. இரண்டாவது, இந்தப் பிரிவுகளுக்கிடையே செயற்கையான எந்தத் தொடர்பையும் வலியுறுத்தும் நோக்கமில்லாமல் திரைப்படத்தின் வெட்டுகள் போன்று என்னுடைய பாத்திரப்படைப்பினை நான் மாற்றி மாற்றி வைத்திருக்கிறேன்.
பாடுபொருள் அமைப்பு: படைப்பு பிரிவு
இப்படைப்பின் முதல்பகுதி இரு துயரம் பொருந்திய விதவைகள் – கண்ணகியும், நல்லதங்காளும் என்பதையும், இரண்டாம் பகுதி எதிர்மறை நாயகிகள் குறித்தும் ‘கபடம் மிகுந்த மனைவிகள், தந்திரக்கார அரசிகள்’ என்னும் தலைப்பிடப்பட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் கவனிக்கத்தகுந்தது என்னவென்றால், தமிழ்நாடோடிக்கதைகள் குறித்த ஆரம்பகால அறிஞர்கள் நா.வானமாமலை, எஸ்.டி.லூர்து, எம். அருணாசலம் ஆகியோரே. தமிழ்நாடோடிக்கதைகள் குறித்த அவர்களுடைய சிந்தனையில் உதித்தவற்றை இங்கே கொடுத்துள்ளேன். இந்த நாடோடிப்பாடல்கள் கற்பனைக் கதைகள் வாய்மொழிப்பாடல்கள் வில்லிப்பாட்டு தெருக்கூத்து பின்பு திரைப்படங்களிலும் வந்தன. இந்த நாடகங்கள் 16 ஆம் நூற்றாண்டில் வில்லுப்பாட்டு முதலில் பிரபலமான கலையாக நடிக்கப்பட்டது. இந்தப்பெரும் வில்லுப்பாடல்கள் பாடப்பட்டன. வில்லுப்பாட்டு சிறிது சிறிதாக நாடகங்களிலும் பரவி சினிமாவுக்கும் சென்று சேர்ந்தது. ஸ்டூவர்ட் பிளாக்பர்ன்’ – ன் நாடோடிப்பாடல்களின் ஆராய்ச்சியாளர்கள் நாஞ்சில்நாட்டில் பண்பாட்டினை வில்லுப்பாட்டில் இசைத்தனர். இப்போதைய தமிழ் கல்வியில் சமூக பிரச்சினைகள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் கையாளப்படுகிறது. தெருக்கூத்து என்பது தெருவில் நடத்தப்படுவது. தெருநாடகங்களின் ஆரம்பகால கூறுகளுக்கு ஆதாரமாக இருக்கின்றன. பாரிஸ் கார்னரில் பழைய புத்தககக்டைகளில் அந்த பழையகதை பலவடிவங்களில் அச்சாகி ஒன்றுக்கொன்று வேறுபட்ட நடைகளில் இன்றும் காணப்படுகின்றன. புத்தகங்களில் உள்ளவற்றுக்கும் அதைக் கூத்து வடிவில் ஆடுவதற்கும் இந்த நாடோடிப் பாடல்களுக்கு ஆதாரமாக இருந்தாலும் பின்னால் கூறப்பட்ட கூத்து வடிவத்திற்கு சினிமா வடிவத்தைவிட்டால் வேறு ஆதாரம் குறைவாகவே இருக்கிறது.
துயரப்பட்ட விதவைகள்: கண்ணகியும் நல்ல தங்காளும்
கற்புடைய மனைவி என்ற கருத்தை தமிழருக்கான பேச்சு மொழி கலாசாரத்தில் உருவகப்படுத்தி முன்னிறுத்துவது முக்கியமாகப்படுகிறது. ஜார்ஜ் ஹார்ட் ஒரு முக்கியமான படைப்பில் இந்தக் கருத்தைக் குறிப்பிடுகிறார், பிராமணிய தந்தை வழி சமுதாயத்தில் கருதப்படும் திராவிட கருத்தை17. தொல்காப்பியத்தில் ஒழுக்கத்திற்கு இலக்கணம் என்னும் பொருளில் ஒரு தனிப்பகுதி ‘கற்பியல்’ என்னும் தலைப்பில் தரப்பட்டுள்ளது.
‘கற்பு’க்கு ஆங்கிலத்தில் சரியான பொருளைத்தரும் இன்னொரு சொல்லைத் தேடினால் ‘ஒழுக்கம்’ அல்லது ‘சீலம்’ என மொழிபெயர்க்கலாம். இது உண்மையிலேயே இன்னும் விஸ்தீரணமான ஒன்று. ஒழுக்கம் என்பதைக் கடந்தும் அனைத்து குணமும் கொண்ட நல்ல பெண்மணி என்பவள் தன் கணவனுக்கு சேவை செய்பவள், உண்மையின் சொரூபம், தன்னை அர்ப்பணிப்பவள், பொறுமையின் சிகரம், நம்பிக்கைக்குப் பாத்திரமானவள், ஆணையிடும் சீரிய பண்பான சீலம் போன்றவற்றைக் கொள்ளலாம்.
ஹார்ட் சுவாரஸ்யமான கவனிப்பைத் தருகிறார். மனைவியின் கற்பு என்பது ஒருவகையான அனைத்து ஒழுக்கமற்ற உணர்வுகளையும் துறக்கும் துறவுநிலை. பெண்ணுக்கு கவர்ச்சி அளிக்கும் சக்தி அப்பெண்ணின் கற்பு என்னும் பேறு எனத் தெளிவாகத் தெரிகிறது. பெண்கள் குறித்து ஒரேவிதமாக கருத்துக்கொண்டிருக்கும் தமிழ்சமுதாயம் பெரும்பாலும் இந்த கற்பு என்னும் கருத்தைச் சுற்றியே வருகிறது. பெண்ணின் புனித சக்தி அவளுடைய கற்பின் வழியே கிடைக்கிறது, அவள் மணமானவளாக இருந்தாலும் மணம் செய்யவில்லை என்றாலும். கற்பின் வலிமை பயம் தருவதாக, மரியாதைக்குரியதாக என இரண்டாகவும் உள்ளது. ஏனெனில் இது வரம் அருளுவதாகவும் அதே சமயம் அச்சமூட்டும்போது அழிவைத் தருவதாகவும் உள்ளது. புறநானூறில் கற்பென்பது கடவுள்தன்மையுடன் இணைத்துப் பார்க்க்கப்படுகிறது. கடவிற் சான்ற கற்பு, இலக்கியரீதியில் ‘ஒழுக்கம் போன்று புனிதமானது’. அகநானூறுப்பாடல் ஒன்றில் கற்பு என்பது ஒரே பொருளில் புனிதத்துடன் பொருந்தி வருகிறது – கடவுற் கற்பு. இந்த கற்பெனும் செல்வம் பொருந்திய மனைவி ஆழ்ந்த ஆன்மீக சக்தி பொருந்தியவள், தன்னை மாற்றிக்கொள்கிறாள் பத்தினி தெய்வமாக. இலக்கியத்தில் பொருள் சொன்னால் பெண்தெய்வம் ‘ தெய்வீக மனைவி’. இதே கற்பெனும் கருத்து காணக்கிடைக்கிறது, கடைச் சங்க காலத்துக்குட்பட்ட, ஜைன தத்துவ நூலான திருக்குறளில். பத்தினி தெய்வத்தை வணங்குவதற்குப் பின் நின்று இயங்கும் சக்தி அவளின் கற்பெனும் சக்தியின் மீதான பயமே என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒழுக்கம் சக்தியாக, சங்ககால இலக்கியங்களில் மட்டுமல்ல, இடைக்கால பக்தி இலக்கியங்களிலும் இதே கருவே திரும்ப வருகிறது.
பயமுறுத்தும் தன்மையான கற்பு தமிழ் இலக்கியத்தில் ‘அணங்கு’ என்னும் இன்னொரு பெயருடன் இணைக்கிறது. அகநானூறில் ஒரு பாடலில் ‘அணங்கு உறு கற்பு’ என்னும் சுவாரஸ்யமிக்க ஒரு பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது. இந்த அணங்கு என்ற தொடரை இணைப்பது ஒழுக்கம் அல்லது கற்பு இணைந்து ஒழுக்கம் என்பதன் புரிதலை பெண்ணின் இயல்புடன் கவர்ச்சியுடன் சம்பந்தம் செய்து சொல்கிறது. திராவிட கலாசாரத்தில் பெண்ணின் ஆன்மிக சக்தி மாதவிலக்கினால் மாசு படும் என்னும் பயத்துடனும், பெண்ணின் கவர்ச்சியின்பாலுள்ள ஆணின் பயத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. பழந்தமிழர்கள் பெண்ணின் கவர்ச்சி இயல்பை, பயப்படவும், அச்சத்துடன் ஆராதிக்கவும் செய்யவேண்டிய சக்தியை அணங்கு என்றனர். அணங்கு என்பது கற்புடை மனைவியோடு மங்கலகரமானவள் எனப் பொருள்கொண்டால் சுமங்கலித்தன்மையோடு புனிதமானவள் என இலக்கியத்தில் பொருள் கொடுக்கிறது. ஆனால், திருமணத்தைக் கடந்து கன்னியாகவோ, விதவையாகவோ அணங்கு என்பவள் பயங்கரமான அழிக்கும் சக்தியாகக் கருதப்படுகிறாள். பெண்ணின் கவர்ச்சியுடன் அணங்கு என்பதன் பெண்ணின் பாலியல் சார்ந்த முழுமையான அடையாளமாகக் கொள்வது வாதத்துக்குரிய ஒன்றாக உள்ளது. இன்றைய கருத்துப்படி, ஹார்ட்டின் கருத்து உண்மையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஏனெனில், சிலப்பதிகாரம் அணங்கினை அணங்குடன் பெண்சக்தி என ஏழு கன்னிகைகளின் இளைய சகோதரி ‘சிவனை ஆடச் செய்தவள்’ என்பதன் இரட்டைக் கருத்து முழுமையான விவாதம். ஏனெனில் இரு கருத்துகளும் சிலப்பதிகார கதாநாயகி கண்ணகியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கண்ணகி கற்புக்கரசி எனப் போற்றப்படுகிறாள். ‘ஒழுக்கத்தின் அரசி’ தமிழ் காப்பிய கலாச்சாரத்தில் முக்கியமான உதாரணம். ஒழுக்கத்தின் சக்தியாகவும், பெண் ஆன்மிகவாதியாகவும். கண்ணகி மதுரை பாண்டிய மன்னனின் அரசவைக்குள் நுழைகையில், இளங்கோவடிகளின் கருத்துப்படி பார்த்தால் ‘ஹெரால்’டில் கண்ணகியின் வர்ணனை நாடகத்தன்மையுடனும் கண்ணகி பக்தியுடன்கூடிய பயத்துடனும் வர்ணிக்கப்படுகிறாள்.
‘யாரோ கதவருகில் காத்திருக்கிறாள். எருமையின் பிடரியில் நின்று அதனுடைய ரணத்திலிருந்து வழியும் ரத்தத்துடனும் சதையுடனும் கையில் வெற்றியின் கோலை ஏந்திய
அவள் வெற்றியின் பெண் தெய்வமான கொற்றவை அல்ல. அவள் அணங்கும் அல்ல. சிவனை ஆடச்செய்த ஏழு கன்னிகைகளின் கடைசிச் சகோதரியும் அல்ல. பேய்கள் உலவும் காட்டின் காளியும் அல்ல. தேவதையும் அல்ல. (தாருகா அசுரனின் வலிமையான மார்பினைப் பிளந்த) பெண்தெய்வமும் அல்ல. அவள் பெருங்கோபத்தில் கொதித்துக்கொண்டிருக்கிறாள். கணவனை இழந்தவள். கையில் பொற்சதங்கையை வைத்துக்கொண்டு வாசலில் காத்திருக்கிறாள்.
கடைச் சங்க காப்பியமான சிலப்பதிகாரத்தில் கண்ணகி இவ்வாறு பதிவுசெய்யப்பட்டிருக்கிறாள். (சங்ககாலம் என்பது கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலம்) இளங்கோவடிகள் எழுதிய காப்பியம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. முக்கியமான கதாபாத்திரங்கள் மாசாத்துவனின் (பெரிய தொடர்வண்டிகள் உடைய வியாபாரி) மகன் கோவலன், மாநாய்கனின் (கடல் வியாபாரி) மகள் கண்ணகி, நாட்டியக்காரி மாதவி முக்கோணக் காதலின் மூன்று முனைகளில் உள்ளனர். கண்ணகியின் காற்சதங்கையினை விற்க கோவலன் மதுரை சந்தைக்கு வருகையில் மன்னரின் பொற்கொல்லனைச் சந்திப்பதில் காப்பியத்தின் கரு மையம் கொண்டிருக்கிறது. பொற்கொல்லன் அரசியின் சிலம்பினைத் திருடிவிட்டு கோவலனைத் திருடன் எனச் சொல்லியதால் உடனே கோவலன் கொல்லப்படுகிறான். உண்மையை அரசனிடம் வெளிப்படுத்தும்போது கண்ணகியின் கற்பு கொழுந்துவிட்டு எரிந்து மதுரை நகரைச் சுட்டெரிக்கிறது.மலைநாட்டில், கொடுங்கல்லூர், கிராங்கானுர், முருகவேல் கோட்டத்தில் தங்கினாள். பின்னர் சொர்க்கத்துக்கு தன்னுடலுடனேயே சென்றாள்.
கடலைக் கடந்து இலங்கை செல்லும்போது கண்ணகி காவியம் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் எடுக்கிறது. மாதெய்வம் அல்லது பத்தினி தெய்வமாக மாறிய பிறகு, கஜபாஹு தன்னுடன் கண்ணகியின் பவித்திரமான உருவை எடுத்து வருகிறான். கண்ணகி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தபோது அவளுடைய புனிதசக்தி அச்சப்படுத்தும் அளவில் காணப்பட்டது. அந்த பயம் அவளை ஐந்துதலை நாகமாக வழிபடுவதாக யாழ்ப்பாணத்தில் பிரதிபலிக்கிறது. இந்த நாட்டுப்புறக்கதையில், கண்ணகி தன்னுடைய புனித கற்பெனும் சக்தியால் கோவலனை மறுபடியும் உயிர்ப்பிக்கிறாள். அவன் மீண்டும் தன் உணர்வுக்கு வந்ததும் ‘மாதவி’ என நாட்டியக்காரியின் பெயரை உச்சரிக்கிறான். பெருங்கோபத்துடனும், ஏமாற்றத்துடனும் கண்ணகி ஐந்துதலைநாகமாக மாறுகிறாள், இந்தக் கொடூர உருவில்தான் அவளை ஸ்ரீலங்காவில் பரவியுள்ள தமிழர்கள் வழிபடுகின்றனர். தமிழ் சமுதாயத்திலும் பெண்தெய்வமாகக் கருதப்படும் கண்ணகிக்கு இலங்கையில் பல கோயில்கள் உள்ளன. நாகபூஷணி அல்லது பாம்புக் கோயில்கள் இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் அதைச் சுற்றி ஆலவெட்டி, சுருவில், சீரணி யிலும் கண்ணகிக்கென அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் உள்ளன.
தமிழகத்தில் ஸ்ரீலங்காவிலும் இடையில் உள்ள மன்னார் வளைகுடாவில் காணப்படும் கண்ணகி மனைவி என்பதிலிருந்து பெருங்கோபத்துடன் வஞ்சம் மிக்க மனைவியாக நாகமாக மாறுவது கூறப்பட்டுள்ளது. கண்ணகியும் எரியும் மதுரை நகரமும் நாடக திரைப்படங்களில் பலமுறை நடிக்கப்பட்டுள்ளன. முக்கியமான ஒன்று ஆர். எஸ். மணியின் கண்ணகி. 1942 ல் கண்ணாம்பாவை பிரதான பாத்திரத்தில் நாயகியாக நடிக்கவைத்துத் தயாரிக்கப்பட்டது. முக்கியமான பிரபலகாட்சி கண்ணகி தனது மார்பகத்தைத் திருகி மதுரை வீதியில் எரிந்து அதனால் மதுரை நகரம் முழுக்க பற்றி எரிவது.
நான்கு கோபுரங்கள் கொண்ட மதுரை நகரத்து
ஆண்களே பெண்களே
வானத்து கடவுள்களே
உயர்ந்த மனிதர்களே
நான் சொல்வதைக் கேளுங்கள்
இந்த நகரத்து அரசன் தவறான தீர்ப்பினை வழங்கினான்
எனது கணவனுக்கு நான் தவறே செய்யாதவள்
அவன் மேல் அன்பு செய்பவள்
தனது கரங்களால் இடது மார்பகத்தைத் திருகி
மதுரையை மும்முறை சுற்றி
சாபத்தை உச்சரித்தாள்
மின்னும் தனது அணிகலன்களுடன்
தனது அழகிய மார்பகத்தைத் திருகி
மலர்கள் விரிக்கப்பட்ட வீதியில் எரிந்தாள்.
இதில் இன்னுமொரு கோணம் பண்முகப்பட்ட விதமாக கண்ணகி – அவளுடைய வரலாற்றினைப் பதிவாக்கியவர்கள், கண்ணகி வரலாற்று காவிய வழக்கில் எல்லைக்கோடாக இருக்கிறாள். முக்கியமாக சேரன் செங்குட்டுவன் அவளுக்கு நினைவுக்கல் எழுப்பியதாக, சங்ககாலக் கவிஞரான பரணர், கண்ணகியைக் குறிப்பிடுகிறார். நற்றினை என்னும் சங்க இலக்கியத்தில் திருமாமணியை தனது மார்பகங்களை எடுத்த கண்ணகியுடன் இணைத்துச் சொல்கிறார். புறநானூறும் சாட்சியம் கூறுகிறது. கங்கைநீரில் புனிதப்படுத்தப்பட்ட அந்தக் கல் சேரநாட்டில் வைப்பதற்கு முன்பு பத்தினிக்கோட்டம் என்னும் இந்தக்கோயிலின் இடம் கொடுங்காளூர் (பிரிட்டிஷ் கிராங்கனூர் மதுரையிலிருந்து130 கி.மீ உள்ளது) புத்தர்களின் மஹாவம்சாவில் ஒரு மார்புகொண்ட பத்தினிதெய்வம், ஸ்ரீலங்கா அரசன் கஜபாபு என்பவரால் கவனிக்கப்பட்டாள். வி. ஆர். ராமச்சந்திர தீக்ஷிதர் ஏறத்தாழ 172 – 173 CE என காலத்தைக் குறிப்பிடுகிறார். கண்ணகியின் கற்பு கொண்டாட்டம் இப்போதும் பங்குனி மாதத்தில் மார்ச் 15 – ஏப்ரல் 15க்கு இடைப்பட்ட காலத்தில் கண்ணகிக்கு மரியாதை செய்யும் விதமாக, பத்தினி கோட்டத்தில் பெரும் விழாவாக நடனம், நாடகநிகழ்ச்சி எனக் கொண்டாடப்படுகிறது.
நல்ல தங்காள் – நல்ல தங்கை
நல்ல தங்காள் கதை தமிழர்களின் துன்பியல் கற்பனை. வெள்ளித்திரைக்கு எப்போதைக்குமான விருப்ப நாடகம். நல்லதங்காள் ஒரு விதவை. பல குழந்தைகளுடன் கணவனால் தனியே விடப்பட்டவள். புகுந்த வீட்டில் தவிக்கவிடப்பட்டவள். சகோதரன் வீட்டில் இல்லாதபோது சகோதரனின் மனைவியாலும் அவமானப்படுத்தப்பட்டாள். நல்ல தங்காள் தனது குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தாள். குழந்தைகளைக் கிணற்றில் போட்டுவிட்டு தானும் கிணற்றில் குதித்தாள். இன்னொரு படைப்பில் நல்ல தங்காளின் கணவன் செல்வம் சேர்க்க தூர தேசத்திற்குச் சென்றான். அதனால், அவனுடைய மனைவி குரூரமான மாமனார், மாமியாரின் இரக்கமின்மையால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டாள். சமுதாயத்தில் சொல்லப்படும் பல்வேறு கதைகளில் அவள் கைவிடப்பட்ட மனைவி அல்லது விதவை என எப்படி சொல்லப்பட்டாலும் அவளுடையது ஒரே சோகமான முடிவே.
பின்பு வந்த பதிப்புகளில் நல்ல தங்காளும் அவளின் இறந்த குழந்தைகளும், அவளுடைய சகோதரனால் காப்பாற்றப்பட்டனர். சோகநினைவினால் தற்கொலை செய்துகொண்டு இரக்கமுள்ள பேயாக மாறினாள். சிலபிரபல பதிப்புகளில் நல்ல தங்காள் கதை மத்திய வர்க்கத்தினரைக் கவர சுப முடிவாக்கப்பட்டது.
பெரிய எழுத்து பதிப்பில் புகழேந்திப் புலவரின் நல்ல தங்காள் பாடலில் அவளுடைய தந்தையார் மதுரையின் குறுநில மன்னரான ராமலிங்க மஹாராஜா. பெற்றோர் மகளை சகோதரன் நல்லதம்பியிடம் விட்டு இறந்துவிட்டனர். அவனின் மனைவி துர்குணமுடைய மூளி அலங்காரி. நல்ல தங்காள் காசி இளவரசனை மணந்து கொள்கிறாள். இந்தக் காசி மதுரைக்கு அருகிலுள்ள குறுநில நாடான காசியாக இருக்கவேண்டும். ஏனெனில் வடக்கே வாரணாசி என்று சொல்லப்படும் காசி, நல்லதங்காளின் பிறப்பிடத்திலிருந்து வெகு தூரத்தில் இருப்பது. நல்ல தங்காளுக்கு ஏழு குழந்தைகள் பிறக்கின்றன. இப்போது நாட்டை நாசம் செய்யக்கூடிய அளவில் ஏற்பட்ட பஞ்சத்தை விவரித்துக்கொண்டு பாடலில் நாடகத் திருப்பம் நிகழ்கிறது. தொடர்ந்த பட்டினியால் நல்லதம்பியிடம் புகலிடம் கோர நல்லதங்காள் முடிவெடுக்கிறாள். இந்த முடிவு நல்லதங்காள் குழந்தைகளுடன் சகோதரன் மனைவியால் அவமானப்படுத்தப்படும் சோகக்காட்சிக்கு இட்டுச்செல்கிறது. உதவியற்ற அந்தப்பெண் தனது குழந்தைகளுடன் கிணற்றில் விழுகிறாள். அவளுடைய கணவனும், சகோதரனும் அவளைத்தேடி குற்றவுணர்வில் இருவரும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்தப் பகுதி, மனித உயிர்களுடன் பிணைந்து புனித ஜோடியான சிவனும் பார்வதியும் தலையிட்டு அவர்களுக்குத் திரும்ப உயிர் கொடுக்கும் நிகழ்வுடன் அற்புதமாக முடியும். நல்ல தங்காள் மீண்டும் உயிருடன் திரும்பி வந்தது நாடோடிப் பாடலில் அவ்வளவு சிறப்பாகக் கண்டுகொள்ளப்படவில்லை. தமிழ் நாட்டுப்புறப் பாடலில் அவளின் தோற்றம் பரிதாபமான விதவை. அன்றிருந்த குரூரமான சமூகப் பழக்கவழக்கத்தால் தன்னுடைய அறியாக் குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலைக்குள்ளாக்கப்பட்டாள் என்ற தோற்றத்தைக் கொடுக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் நல்ல தங்காள் அவளுடைய இறந்த தினத்தில் சகோதரர்களால் சகோதரிகளுக்கு பச்சை சேலை எடுத்துக் கொடுத்து தமிழினத்தால் நினைவு கூறப்படுகிறாள். இந்த சேலைகள் பச்சை நிறமாக இருக்கக் காரணம் வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்வதற்கு உதாரணமாக பசுமையைச் சுட்டிக்காட்ட. நல்ல தங்காள் கதை மேடையிலும், திரைப்படங்களிலும் நாடகங்களிலும் பலமுறை நடிக்கப்பட்டு பிரபலமாகியது. 1950 களில் வெளியான நல்ல தங்காள் திரைப்படத்தில் கதாநாயகி பாத்திரத்தில் ஊர்வசி விருதினைப் பெற்ற நடிகை சாரதா நடித்தார். ஆணாதிக்க சமூகத்தின் உட்பிரிவில் வரும் நல்லதங்காள் கதையில் அவள் துயரம் பொருந்திய விதவையாக அடையாளம் காட்டப்படுகிறாள், சில பெண்களின் நாடோடிக் கதைகளிலோ வேறு சிக்கல் குழப்பத்துக்குள் எடுத்துச் செல்லும் சக்திகளுடன் பிணைக்கப்படாது, அவை பெண்களின் செயல்படும் அதிகாரத்துக்குள் விழுவதில்லை. இன்னும் சரியாகச் சொன்னால், ஆண்கள், பெண்களின் துக்கத்தை (இதில் விதவையின் துக்கம்) தமதாக்கிக்கொண்டு கலையுணர்வுடன் சொல்வதை சுட்டிக்காட்டுகிறது. இன்னொரு கோணத்தில் இவ்விதம் விவாதம் செய்ய இயலும். நல்லதங்காள் ஆணாதிக்க சமுதாயத்தில் இயங்கினாலும் அதே சமயம் விவரிக்க முடியாத அளவில் குற்றம்சாட்டப்படுகிறது. நல்லதங்காள் கதை தற்கால தமிழர்களின் வாழ்வுடன் பின்னப்படுகிறது, பழங்கதை பழம் சமுதாய இயலை ஆய்வு செய்யும் மார்க்ரெட் ட்ராவிக் 1990 – ல் களப்பணி செய்து 1996 ல் வெளியிட்ட தன்னுடைய ‘லவ் இன் எ டமில் பேமிலி’ நூலின் குறிப்புகளில் காட்டுகிறார். அதன் ‘டிசையர் இன் கின்ஷிப்’ என்னும் தலைப்பிட்ட பகுதியில் தமிழ் சமுதாயத்தில் உறவினர்களின் இடையே உள்ள மன இறுக்கங்களை முக்கியமாக மனைவிக்கும் நாத்தனாருக்கும் இடையே ஆழப்பதிந்த விரோதம் அல்லது மனைவி மாமியார் இடையே விரோதம் மற்றும் அண்ணன், தங்கை பாசம் மனைவியை ஓரங்கட்டியதை எடுத்துக்காட்டுகிறது.
கபடம் நிரம்பிய மனைவிகளும் மந்திர அரசிகளும்
இப்பகுதி இரு நாட்டுப்புறப் பாடல்களின் இரு எதிர்மறை கதாநாயகிகளான பழையனூர் நீலியும், கொலைகார ராணிகள் ஆரவல்லியும் சூரவல்லியும் குறித்தது. எதிர்மறை பிரதிநிதிகளான கடைசி இருவருடன் நேர்கோட்டில் இணைத்துப் பார்க்க முடியுமென்றாலும் இரு துருவங்களுக்கிடையே கோணிக்கொண்டு செல்லும் நீலி காவியம் இரண்டுக்கும் இடையே சற்று மாறுபட்டது. சில நேரங்களில் பயங்கர நீலிப்பேயாகவும், சில நேரங்களில் பயமளிக்கும் வணங்கப்படும் இசக்கி அம்மன் தெய்வமாகவும் மீண்டும் சைவத் திருமுறை நூலான பெரிய புராணத்தில் வரும் காரைக்கால் பேயராகவும் குறிப்பிடப்படுகிறாள். ஒழுக்கம் கெட்டவள் என்ற தோற்றத்திலிருந்து ஜைன சந்யாசினியாகவும் என்பதை சைவ நாயனார் பேயர் துறவியாகவும் உயர்ந்தாள் என காட்டப்படுகிறாள்.
அரக்கியா தேவதையா?
நீலியின் கதை இலக்கியத்தின் பாடல், கதை, நாடகப்பாடல், வில்லுப்பாட்டு, நாட்டுப்புற நாடகம் எனும் அத்தனை பிரிவுகளிலும் முக்கியமாக கர்நாடகத்தில் யக்ஷகானத்திலும் இடம்பெறுகிறது. இந்தக் கதை அல்லது கற்பனைக்கதை வரலாற்று காலவெளிகளில் தமிழிலிருந்து கர்நாடகத்துக்குச் செல்லும்போது அதன்தன்மை விரிவாக மாறுதலடைகிறது.
‘நீலகேசி’ யின் கருவே பழையனூர் நீலியின் நாட்டுப்புறக்கதை. இந்தக்காலம் வரை பிரபலமாக இருக்கும் நீலகேசி சேக்கிழார் தனது புகழ் பெற்ற திருமறையான பெரிய புராணத்தில் உயிரோடு வாழ்ந்த முனியான நீலி நாடோடிக்கதை அல்லது நாடோடிப்பாடலில் சிலசமயங்களில் பழையனூர் நீலி கிராமங்களில் பயத்துடனும் பக்தியுடனும் வணங்கப்படும் இசக்கி அம்மனாக வர்ணிக்கப்படுகிறாள்.
சேக்கிழாரின் பெரியபுராணத்தில் வேறொருவிதமான கதை வருகிறது. பெரியபுராணம் 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதில் உள்ளபடி, நீலி பழையனூரில் (இன்றைய திருவாலங்காடு) வாழ்ந்த ஒரு பிராமணனின் சீலம் மிக்க மனைவி. அந்த அந்தணன் ஒரு வேசியின் வலையில் சிக்கி கர்ப்பமாகயிருந்த தனது மனைவியைக் கொன்றுவிட்டு அவளுடைய நகைகளையெல்லாம் கொள்ளையடித்துச் சென்றுவிட்டான். அந்த பிராமணன் அடுத்த பிறவியில் ஒரு வணிகம் செய்யும் செட்டியாராகப் பிறந்தான். எங்கெங்கெல்லாமோ பொருள்களை விற்று வரும்போது கடைசியில் பழையனூருக்கே வந்து சேர்ந்தான். நீலி இப்பொழுது பழிவாங்கும் பேயாக மாறி இருந்தாள். கையில் குழந்தையுடன் பழிவாங்கும் நோக்கத்துடன் அவனைப் பின்தொடர்ந்து வந்தாள். தான் அந்த செட்டியின் மனைவி என்றுசொல்லி, அவனுடன் சேர்த்துவைக்கும்படி, அந்த ஊர் வெள்ளாளர்களிடம் (வெள்ளாளர்கள் ஊரில் நிலபுலன்களை உடமையாகக் கொண்டு விவசாயம் செய்துவரும் ஊர்ப் பெரியவர்களாக இருந்தார்கள்) முறையிட்டாள். இப்படிக் கேட்கும்போது அந்த ஊர்ப்பெருமக்களை ஏமாற்ற நீலி ஏராளமான போலிக்கண்ணீர் சிந்தி அழுது நாடகமாடினாள்.
அந்த பிராமணன் அவளைத்தனக்கு யாரெனத் தெரியாது என்று எதிர்த்து எவ்வளவு மறுத்தாலும் அந்த ஊர்ப் பெரியவர்கள் அவனைக் கட்டாயப்படுத்தி அவளோடு சேர்த்து வைத்தனர். அன்று இரவு நீலி அவன் தன்னை முற்பிறவியில் கொன்றதற்கு பழிவாங்கும்விதமாக மிகக் கொடூரமாகக் கொலைசெய்து பழிதீர்த்துக்கொண்டாள். இதை அறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த 70 வெள்ளாளர்கள் தாங்கள் தவறான தீர்ப்பை வழங்கியதற்குப் பிராயச்சித்தமாக கூட்டுத்தற்கொலை செய்துகொண்டார்கள். அவர்கள் உயிர்நீத்ததற்கு ஒரு நினைவுக்கல் திருவாலங்காடில் அந்த இடத்தில் இருப்பது சான்றாக இருக்கிறது. அரக்கோணம் சந்திப்பில் இறங்கி 8 கிலோமீட்டர் நடந்தால் பழையனூருக்கும் திருவாலங்காட்டுக்கும் இடையே ‘தீ பெய்த குண்டம்’ என்ற இடத்தில் இடிபாடுகள் உள்ள இடத்தில் தம்மை மாய்த்துக்கொண்ட எழுபது வெள்ளாளர்களின் சிலைகள் உள்ளன. அதே இடத்தில் நீலிக்கான நினைவுக்கல்லும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
பழையனூரில் தனது கணவனைக் கொலை செய்த பின் நீலி திருவாலங்காடில் வாழ்ந்துவந்தள். ‘திருவாலங்காடு ஸ்தல மகாத்மியம்’ இந்த இடத்தில் ஒரு பழைய கற்பனைக்கதையுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
நீலி திருவாலங்காடில் ஒரு பயங்கரமான மாகாளியாகிவிட்டாள். திருவலங்காடுக்கும் பழையனூருக்கும் இடையில் உள்ள அந்த இடத்தில் ஒரு எல்லை தேவதையாக இருந்து கொண்டாள் (கிராமத்தின் ஓரத்தில் உள்ள இந்தக் கோயில்களை எல்லையம்மன் கோயில் என்பார்கள்) ஸ்தல மகாத்மியம் எழுதிய பெயர் தெரியாத ஒருவர் அந்த நீலிதான் இந்த காளி என்று எழுதியிருக்கிறார். எல்லை தேவதையான அவள் தமது அச்சமூட்டும் படைகளுடன் அந்த இடத்தைச் சுற்றி பெரிய அழிவுகளுக்கு காரணமாக இருக்கிறாள்.
அவளுடைய அழிவு வேலைகளை தேவர்களாலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தேவர்கள் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவிடம் சென்று உதவி செய்ய வேண்டினாள். அதற்கு விஷ்ணு அந்த காளிக்கு சிவனின் நாயகி பார்வதியின் துணையிருப்பதால் அவர்களை சிவனிடம் சென்று முறையிடும்படி சொல்லி அனுப்பினார். சிவன், அழிவு செய்யும் காளியுடன் நேரடியாக சண்டை செய்வதற்கு பதிலாகத் தன்னுடன் நாட்டியப்போட்டிக்கு வரும்படி அழைத்தார். (இந்தக்கதை சிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த நடனப் போட்டி பிரபலமான புராணக்கதைகளைப் பின்பற்றியுள்ளது) காளியும் சிவனின் காலடி ஒவ்வொன்றையும் பின்பற்றி ஆடிக்கொண்டே வந்தாள். சண்ட தாண்டவம் என்று சொல்லப்படும் கால்பாதங்களை உயரே தூக்கி ஆடும் நாட்டிய முத்திரையில் சிவன் நடனமடும்வரை போட்டி இருந்தது. பெண்ணான காளியால் வெட்கத்தைவிட்டு சிவனைப்போல் கால்களை மேலே தூக்கமுடியாது போனதால் போட்டியில் தோற்றுவிட்டாள். இப்படியாக திருவாலங்காடில் நடனமிடும் சிவனின் கோயில் பிரதானமாக இருக்கிறது. காளிகோயில் கிராமத்தின் எல்லையில் அடங்கிய எல்லை தேவதையாக இருக்கிறாள்.
வேறொரு பரிமாணத்தில் திருவாலங்காடில் 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற பெண்துறவியான காரைக்கால் பேயர் கதையும் நீலி காவியத்தில் கலந்துள்ளது. சேக்கிழார் புனிதவதி என்னும் அழகிய பெண்மணி தனது கணவனால் கைவிடப்பட்டாள், அதனால் அவள் உலகத்துடனான தொடர்புகளைத் துறந்து பேயாக மாறினாள்…
திருவாலங்காடில் சிவனின் நடனத்துக்கு சாட்சியாய் காரைக்கால் அம்மையாரால் எழுதப்பட்ட ஆரம்பப்பத்தி ‘திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்’ பழையனூர் / திருவாலங்காடு நீலிப்பேயின் சமபந்தத்தை வெளிப்படுத்துகிறது.
நான் எடுத்துக்கூறுகிறேன்:
அவள் உலர்ந்த சுருக்கங்கள் நிறைந்த மார்பகங்களையும்
புடைத்த நரம்புகளையும் கொண்டவள்
வெண்பற்கள் இருந்த இடத்தில்
இடைவெளி விழுந்த காலி குழிகளாக
செம்பட்டை முடி, ஒட்டிய வயிறு
ஒருஜோடி கோரைப்பற்கள், வீங்கிய நீண்ட முழங்கால்கள்
பேய்ப் பெண் ஓலமிடுகிறாள்
தீக்கொழுந்துகளுக்கிடையில் நடனமாடும்
நமது இறைவன் சிவன் வாழும்
ஒதுங்கிய இடமான சுடுகாட்டில்
அவனது வீடு ஆலங்காடு
சிவனின் இருப்பிடமான திருவாலங்காடு பழையனூருக்கு அருகில் உள்ளது. நீலி கற்புடை மனைவியாக இருந்ததிலிருந்து மாறுபட்டு ஒரு நிலையில் கொடுமை நிறைந்த தந்திரங்களாலும் கண்ணீரினாலும் மக்களை முட்டாளாக்கிக்கொண்டிருந்த நீலி கொலைகார நீலியாக மாறி கடவுள் பார்வதியின் உருவத்தில் மாறுகிறாள். திருவேலங்காடு ஆலயத்திலுள்ள சிவனின் துணைவி வண்டையார்குழலி என்ற பெயரில் இருக்கிறாள். இந்தப் பதம் சமஸ்கிருத பெயரான நீலகேசிக்கு நேர் தமிழாக்கம் போல் தெரிகிறது. ஒருவேளை திருவேலங்காடு மக்களைத் துன்புறுத்தி வந்த நீலி பின்னர் சிவனால் அடக்கப்பட்டு சிவனின் அருகில் பாகமாக வண்டார்குழலியாக இடம் பெற்றிருக்கலாம். பழங்கதைகளிலும், நாடோடி பாரம்பரிய கதைகளிலும் கொடூர அரக்கியாகவும், புனித சிவனின் துணைவியாகவும் குறுக்கும் நெடுக்குமாக வருகிறது. ராமானுஜனும், பிளாக்பர்னும் சுட்டிக்காட்டிய நாடோடிக்கதைகளிலும், இலக்கியங்களிலும், வாய்மொழியாகவும், நூல்களிலும் தொடர்ந்து வருவது நேராக வரவில்லையென்றாலும் வளைந்து நெளிந்து செல்கிறது.
ஆரம்பகால ஜைன நூலான கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜைன ரத்னாகாராந்தக ஸ்ரவகாசாரா ஜைன ஆசார்யர் சமந்தபத்ரா காஞ்சியிலும் அந்தக் காலத்தில் பரவி இருந்தது. கி.பி இரண்டாம் நூற்றாண்டில் ‘ஜெயின் கிருஹஸ்த தர்ம’ அல்லது ‘வீட்டினரின் கடமை’ இந்த நூல் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டாரகா ப்ரபசந்தராச்சார்யா அந்த நூலுக்கு விரிவாக உரை எழுதியிருக்கிறார், அதிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்டது. அவர் ஜைனகாஞ்சியின் வழிநடத்தும் விளக்காக கொள்ளப்பட்டார். இந்தப் படைப்புக்கு மிக நீண்ட விமர்சனம் தேவை.
ஜைனநூலான நீலகேசியில் நீலியின்கதை வேறொரு உருவில் வருகிறது. நீலகேசியின் நூலாசிரியர் யாரெனத்தெரியவில்லை. ஆய்வாளர்கள் ஆறாம் நூற்றாண்டில் உருவானதாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். அந்த சமகாலத்து பௌத்த நூல்களில் ஒன்றான குண்டலகேசியிலும் இதன் தாக்கம் தெரிகிறது. நீலகேசியின் நூலாசிரியர் யாரெனத் தெரியவில்லை. அந்த முழுக்கதையும் தனது கனவில் முன்வந்து விரிந்ததாகக் கூறுகிறார். நீலி பெண்பேயாக மாறி பின்னர் ஜைன சமய மார்க்கத்தில் சேர்ந்து விடுகிறாள். இங்கே ஒரு குழப்பம். இங்கே ஒரு பெண் பேயின் ஆவி மனித உருவம் எடுக்கிறதா, அல்லது அந்தப் பெண் ஆவி உலகில் வாழ்கிறாளா அல்லது நிஜ உலகில் வாழ்கிறாளா என்ற குழப்பம் ஏற்படுகிறது.
சமண நூல்களில் இந்தக்கதை இப்படி வருகிறது. ‘நீலி’ ஒரு சமண சமயத்தைச் சார்ந்த வணிகனின் மகள். அவளை ஒரு பௌத்த சமயத்தவனான சாகரதத்தா என்ற வணிகன் ஏமாற்றி மணந்துகொள்கிறான். அவன் சில பௌத்த விருந்தினர்களுக்கு புலால் உணவு தயாரிக்கச் சொல்கிறான்.(பௌத்தர்களில் புலால் உண்பவர்கள் இருக்கிறார்கள். ஜைனத்தில் அறவே இல்லை) நீலி செருப்புத்தோலை எடுத்து சமைத்து உணவு தயாரிக்கிறாள். இது ஒரு பெரிய ஆபத்தான நடத்தை. பதிலுக்கு நீலியின் கனவனும் அவனது வீட்டினரும் நீலி நடத்தை கெட்டவள் என்று பழி சுமத்துகிறார்கள். ஆனால், தேவர்களே நேரில் வந்து நீலி தூய்மையானவள் நற்குணம் பொருந்தியவள் என்று கூறுகிறார்கள்.
ஒரு தேவதை அரசனின் கனவில் தோன்றி நகரத்தின் கதவுகளைத்தனது மந்திர சக்தியால் மூடும்படிச் செய்கிறாள். நகரத்தின் ஒரு ஒழுக்கமுள்ள பெண் வந்து கதவைத்திறந்தால்தான் கதவு திறக்கும் என்கிறாள். மறுநாள் காலை மன்னன் நகரத்துப் பெண்கள் அனைவரையும் கதவைத்திறக்கும் முயற்சியில் ஈடுபட கதவருகில் கூடச்செய்கிறான். அனைத்துப் பெண்களும் கதவைத்திறப்பதில் தோல்வியுற்றனர். நீலியின் உறவினர்கள் அவள் நடத்தை கெட்டவள் என ஏற்கனவே சொல்லிவிட்டதால் அவள் முதலில் அழைக்கப்படவில்லை. கடைசியில் நீலியும் அழைக்கப்பட்டாள். அவளின் தொடுகையில் கதவு திறந்தது. நீலி நன்னடத்தைமிக்க புனிதமானவள் என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டாள்.
இடைக்காலத்தில் 14 ஆம் நூற்றாண்டில் திவாகர வாமன முனிவர் படைத்த நீலகேசியில் நீலி ‘மா தெய்வம்’ (பெரும் தெய்வம்) என பக்தியுடன் அழைக்கப்பட்டாள் என்பது
குறிப்பிடத்தக்கது. இங்கே நீலி பௌத்தர்களுடனான ஆன்மீகப்போரில் வென்றாள் (குறிப்பாக கம்பிலியில் நடைபெற்ற விவாதங்களில்) என்று சொல்லப்படுகிறாள். கற்புடை மனைவியாக பிராமண குடும்ப அமைப்பில் சொல்லப்படும் சுவாரஸ்யமான விஷயம் இந்தப் பகுதியும் தெளிவாகக் காட்டுகிறது. சிலப்பதிகாரக் காலத்தைப் போலல்லாமல் எதிர்மறைக் கொள்கைகளுடன் ஒன்றை ஒன்று தாக்கிக்கொண்டு ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் புத்தமதமும் ஜைனமதமும் தங்களை ஆதரிக்கும் களங்களை அழித்துக் கொண்டனர். நீலகேசி கதை 14 ஆம் நூற்றாண்டில் ஆண்ட பட்டாராச பிரமாசந்திர ஆசார்யா திவாகர வாமன முனிவர்களால் மீண்டும் விரிவாக்கத்தில் சொல்லும்போது வேறொரு சிக்கலான பிரச்சினையை எழுப்புகின்றனர்.
சில பிரச்சினைகள் மன அழுத்தங்கள் ஒருபக்கம் பிராமணீயம் இன்னொரு பக்கம், ஜைன மதம், பௌத்த மதம், கடைச் சங்க காலத்தில் பல்லவர் ஆட்சிக்காலத்தில் ஏழாம் நூற்றாண்டில் பலவிதங்களால் எழுந்தன. பல்லவ வம்சத்தில் வந்த மன்னன் மகேந்திரவர்மனின் சமஸ்கிருத நாடகம் ‘மத்த விலாசப் பிரஹஸனம்’ இந்த மன அழுத்தங்கள் சமந்தபத்ராவை பிரதிபலிக்கின்றன. பிற்காலத்தில் சொல்லப்பட்ட இந்தக்கதையின் குறிப்புகள் வெள்ளாள இனத்தின் பதவியும் கௌரவமும், வெள்ளாள இனத்துக்கு இடைக்காலத்தில் அளிக்கப்பட்ட முக்கியத்துவமும் இதை ஊர்ஜிதம் செய்கிறது.
இந்தக் கற்பனைக்கதையின் பிரபலமான பதிப்பு நீலியை இசக்கி அம்மனாக திருநெல்வேலி மாவட்டங்களிலும், பாளையங்கோட்டையிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் காளியம்மன் எனவும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் முக்கியமாக திருவாலங்காடிலும் சொல்லப்படுகிறாள்.
ஆரவல்லி சூரவல்லி
ஆரவல்லி சூரவல்லி பாடல் கதையானது நெல்லூரு பட்டணத்தை அரசாண்ட எதிர்ப்பு ஏதுமில்லாத ஆட்சியாளர்கள் பற்றியது. இந்தப் பாடல் ஏழு சகோதரிகள் குறித்தது. ஆனால், மந்திர தந்திரம் நிறைந்தவர்களாக அறியப்பட்ட இரு பெண்களின் கைகளில் அதிகாரம் இருந்தது. அல்லியின் நாடோடிப்பாடல் போல இந்தப் பாடலும் மகாபாரத இதிகாசத்திற்குப் பின்னோக்கிச் செல்கிறது. இதில் முக்கிய பாத்திரம் அர்ஜுனன் அல்ல. பீமன். பாண்டவர்கள் இந்திரபிரஸ்தத்தை அரசாண்டபோது போர்க்குணமுடைய இந்த இரு பெண்களும் தங்களை எதிர்த்த பகைவர்களை, தங்களது கபடத்தாலும் மந்திரத்தாலும் இரக்கமின்றி ஒடுக்கினார்கள். இதைக் கேள்விப்பட்டு ஆவேசமடைந்த பீமன் அவர்களை வென்றான். இதன் முதல் பாகத்தில் பீமனை வெட்ககரமாகத் தோற்கடித்து, ஏளனம் செய்து அவனுடைய சகோதரர்களிடம் திரும்பிப் போகச் செய்தனர் இந்தப்பெண்கள்.
இக்கதையின் முக்கிய கரு, பாண்டவர்கள் சகாதேவனின் ஜோதிட சக்தியை சூத்திரமாக உபயோகித்து இந்த இரு பெண்களை எதிர்க்கப் பெரும் திட்டம் தீட்டியதை விளக்குகிறது. இந்தத் திட்டத்திற்கு தங்களது மருமான் (சகோதரி சங்கவதியின் மகன்) அல்லி ராஜனை (அல்லிமுத்து எனவும் அழைக்கப்படுவார்) அவ்விருவரின் சவாலை எதிர்கொள்ள தேர்ந்தெடுத்தனர். சங்கவதியோ அல்லது அல்லிமுத்துவோ மகாபாரதக்கதைகளில் குறிப்பிடப்படவில்லை. தமிழ்ப் பாடல்களில் மட்டுமே காணப்படுகின்றனர். இதை ஒருவர் நாடோடிக்கதைகளைத் தாண்டி பிளாக்பர்னின் விவாதத்திற்கு எடுத்துச் செல்லலாம். அச்சில் வந்த ஆரவல்லி சூரவல்லி நாடோடிக்கதைகள் முக்கிய இதிகாசத்தில் இல்லை. வாய்மொழி இலக்கியத்தில் வெளிப்படையாக முழுமையான எதிர் எதிர் நிலையில் சொல்லப்பட்டிருக்கிறது. பாடலின் மூன்றாம் பகுதியில், பாண்டவரின் வாரிசான அல்லிராஜா நெல்லூரு பட்டிணம் போகிறான். தன்னுடைய வழியில் கிராமத்தைக் காவல் காக்கும் தேவதையான எல்லைக் காளியை தோற்கடிக்கிறான். காளி அல்லிராஜாவின் சிறப்பான காரியத்துக்காகவும் நேர்மைக்கும் மகிழ்ந்து அவனுக்கு சக்திவாய்ந்த நறுமணமேற்றப்பட்ட புனித நீரையும், ஒரு மந்திரக் குதிரை போன்றவற்றையும் அளிக்கிறாள்.
இக்காப்பியத்தின் முக்கியப் பகுதி ஆரவல்லி சூரவல்லி எனும் இரு மந்திரப்பெண்களின் தோல்வியுடன் முடிகிறது. இங்கே கோழிச்சண்டை சமூகத்தில் உயர்நிலையை நிர்ணயம் செய்யக்கூடியதில் முக்கியமானது. கோழிச்சண்டைகள் பதவிப்போராட்டத்தில் பிரதேசங்களை இழப்பதற்கும் அரசியல் வீழ்ச்சியிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. ‘Deep Play: Notes on the Balinese Cockfight’ என்னும் தலைப்பில் தன்னுடைய ‘The Interpretation of Cultures’ என்னும் நூலில் கிளிப்பர்ட் கீர்ட்ஸ் எழுதியதை இங்கே கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். பாலி பாரம்பர்யத்திலிருந்து விலகி அரசிகளும் அவருடைய பெண்களும் ரத்தக் களறியான கோழிச்சண்டைகளில் ஈடுபட்டது சொல்லப்பட்டுள்ளது, பாலிஅமைப்பில் பெண்களைக் குறித்தே சொல்லப்படாதபோது. நெல்லூரு பட்டிணத்தின் தந்திரராணிகள் எதிரிகளின் சேவல்களுக்கு விஷமிட்டு மற்றும் குழப்பம் செய்து அவர்களைத் தோல்வியுறச் செய்கின்றனர். அல்லிராஜாவின் வெற்றி கோழிச்சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தங்கள் பணிவுக்கு அடையாளமாக தங்கள் மகள் பல்வரிசையை (தத்து புத்திரி) வெற்றிபெற்ற அல்லிராஜனுக்கு மணம் செய்வித்தனர்.
இந்தக் கதையின் கடைசிப் பகுதி ஷேக்ஸ்பியரின் நாடகத்தின் ஐந்தாம் அங்கம் போல் உள்ளது. காட்சிகள் நாடக நிகழ்ச்சிகளுடன் கட்டப்பட்டு வலுவாக இழுத்துச் செல்கிறது. ஆரம்பத்தில் அல்லிராஜா மகள் தனது தாய்களிடமிருந்து மாந்திரீகம் கற்றிருப்பாளோவென்று ஐயம் கொள்கிறான். ஆனால் அவளுடைய களங்கமின்மை, நல்லகுணம் அறிந்து திருப்தியடைகிறான். புதிதாய் மணமான ஜோடிகள் காட்டிற்குச் செல்லும்போது மணமகள் தன்னுடைய அறியாமையால் தாயார்களின் கட்டளைக்கிணங்க நஞ்சூட்டப்பட்ட எலுமிச்சை சாற்றினை, முதலில் நஞ்சூட்டப்பட்ட பூங்கொத்தின் நறுமணத்தால் மயங்கிய கணவனுக்கு மறுபடியும் கொடுக்கிறாள்.
ஆரவல்லியும் சூரவல்லியும் வெற்றியுடன் திரும்பிய மகளை வரவேற்கின்றனர். அவளுடைய மறுமணத்திற்கு உறுதியளித்து ஆறுதல்படுத்துகின்றனர். அதிகமான ஆணாதிக்கப் பாடல்களில் விதவைத் திருமணம் குறித்த குறிப்பு காணப்படுவது வழக்கத்தில் இல்லாதது. இரு தந்திரக்கார அரசிகளின் விலகிய பாதையை மேலும் இப்பகுதி குறிப்பிட்டுச் செல்கிறது. பல்வரிசை தனது தாயார்களின் துரோகத்தை அறிகிறாள். தன்னுடைய குரூர மணம்கொண்ட தாயை சபிக்கிறாள். சாபத்தால் தான் பிறந்த இடத்தையும் நெல்லூரு பட்டிணத்தையும் நெருப்பால் அழி
தெய்வங்களும் மனிதர்களும் கிரேக்க நாடகத்தில் பங்கேற்று இருப்பது போன்றே சிக்கலுடன் முடிவை நோக்கிச் செல்கின்றனர். மீண்டும் உயிர் பெறும் அல்லிராஜாவுடனும், பற்றி எரியும் நெல்லூரு பட்டிணத்துடனும் நாடகம் முடிகி
ஆரவல்லி சூரவல்லியின் தோல்வி பழக்கப்படுத்தப்பட்ட ஆணாதிக்கத்துக்கு எடுத்துச் செல்கிறது, தோற்கடிக்கப்பட்ட ராணிகளை மட்டுமல்ல, உயர்ந்த பிறவியினால் பெற்ற அசைக்க முடியாத சக்திகளைக் காட்டுவதோடு கதையிலேயே ஆணாதிக்க தமிழ் சமுதாயத்தில் வலுவாக வேரூன்றி இருப்பதாகத் தெரிகிறது. ஆணாதிக்கத்தின் உயர்வு என்று கடவுள் கிருஷ்ணனின் ஆலோசனையால் கவரப்பட்டு பல்வரிசை அல்லிராஜனின் மனைவியாகிறாள், இப்போது சமஸ்க்ருத பெயரான பாலாம்பாள் என்னும் பெயரைப் பெறும்போது தன்னுடைய ஆரம்ப அடையாளத்தை (தமிழ் திராவிட அடையாளத்தை?) விலக்கிக்கொள்கிறாள்.
வசனநாடகமான ஆரவல்லி சூரவல்லி மேலும் திரைப்பட சாயலுடன் பின்தொடர்கிறது, கட்டுப்படுத்த முடியாத பெண்சக்தி அடக்கப்படுகிறது ஆணாதிக்கத்தால். இந்தப்பகுதி அதிகமான ஆணாதிக்கமில்லாத கூறுகளால் சிறுபகுதிகளாகப் பிரிக்கப்பட்டும் சிக்கலாக்கப்பட்டிருக்கிறது. ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாமென்றால், தலமையேற்கும் முன் பெண் ஆணாதிக்கத்தால் அடக்கப்படுவது. ஒரு சகோதரி கேரளாவுக்குத் தப்பிச் சென்று உக்ர பகவதியாக (பயமுறுத்தும் துர்கா அல்லது காளியாக) பய உணர்வுடன் வணங்கப்பட ஈர்க்கிறாள்.
தொடர்ந்த மனஇறுக்கம் பல பகுதிகளிலும், பாடலின் நடிக்கப்படும் வசனங்களிலும் ஏழு சகோதரிகளுக்கும் பெண்முக்கியத்துவத்துக்கும் இடையே இந்தப் பாடலில் பலவிதமாக எழுதப்பட்டுள்ளது. ஆரவல்லி சூரவல்லி மேலும் அவர்களுடைய சகோதரிகள் தந்திரமிக்க அரசிகளாகவும், மந்திரசக்தி உள்ளவர்களாகவும் யாருடைய கண்களுக்குத் தென்படுகின்றனர். ஆண் எழுத்தாளர்களால் எடுத்துக்கொள்ளப்பட்ட இந்தக் கதாபாத்திரங்கள் மேலும் அவர்களுடைய எதிர்மறை பாத்திரப்படைப்பு பெண்களை அடிப்படையாகக்கொண்ட கதைகளில் பலவிதமான பிரச்சினைகளை உண்டுபண்ணுகின்றன. திட்டமிட்ட ஆணாதிக்கத்தை மாற்றியமைக்கும் இந்தக் கற்பனைப் பாடல்களை சொல்லியவர்கள் அனைவரும் ஆண்களே. பெண்கள் சாதனை மிக்க பாத்திரங்களாக திரைப்படத்தில் வரும்வரைக்கும்கூட மேடை நாடகங்களில் நடித்தவர்கள் வில்லிகளாக பெண்வேடமிட்டவர்கள் ஆண்களே. ஆரவல்லி சூரவல்லி கதைகளை பாகுபடுத்திப் பார்க்கும்போது தந்திர சூனியக்காரிகள் என்று இல்லாத தோற்றத்தைக் கொடுக்கிறது. அரசியல் சாதுர்யமிக்க பெண்ஆட்சியாளர்கள் எந்த வகையிலும் அடக்கப்படுவதற்கு உள்ளாகாதவர்களாகவும் அடங்க மறுக்கும் ஆளுநர்களாகவும் காட்டப்படுகின்றனர்.
முடிவுரை:
ஆணாதிக்க சமுதாயத்தில் தமிழ் கிராமியப்பாடல்களைப் பயன்படுத்தி எவ்விதம் பெண்னைப் பற்றி பெண்ணோ அல்லது ஆண் அமைப்புகளோ உருவகப்படுத்தும் வரலாற்று வழியினை சாதனமாகக் கொண்டு கிராமிய சிந்தனைகளை வெளிக்கொணர இந்தக் கட்டுரை முயற்சிக்கிறது. இந்த ஆழ்ந்த சிந்தனை வரலாற்று நிகழ்விலும், கற்பனைக் கதைகளிலும் தமிழ்ப் பெண்களை மையப்படுத்தும் செயல்பாட்டை முன்னிறுத்துகிறது. ஒரு பாகத்தில் நீலி ஆரவல்லி சூரவல்லி கிராமிய பாடல்கள் சமுதாய நல்லொழுக்க நடத்தைகளை ஏற்றுக்கொண்டு பிரதிநிதிப்படுத்துகிறது. இன்னொரு பாகத்தில் தமிழர்களின் கற்பனை அளிக்கும் உற்சாகம், பொது அரங்குகளிலும், திரை அரங்குகளிலும் இந்தக் கருவிற்கு கிடைத்த பிரபலத்தினை நிரூபிக்கிறது.
பெண்களை மையமாகக் கொண்ட கிராமியப் பாடல்கள் உண்மையில் பெண்ணியப்பார்வையிலேயே பார்க்கப்படுக்கும் அளவுக்குச் செல்கிறதா? என்ற கேள்வி திரும்பத் திரும்ப எழுகிறது.
***
நன்றி : Economic and Political Weekly
