- மியேகோ கவாகமி
- ஆங்கிலத்தில்: லூயிஸ் ஹீல் கவாய்
- தமிழில்: க. ரகுநாதன்
இங்கிலாந்தில் உள்ள எனது சொந்த ஊரான மான்செஸ்டர் நகருக்கும் ஜப்பானில் உள்ள மியகோ கவாகமியின் சொந்த ஊரான ஒஸாகா நகருக்கும் உள்ள ஏராளமான ஒற்றுமைகள் பற்றி நான் நன்கறிவேன். அந்தந்த நாடுகளின் மூன்றாவது பெரிய நகரங்களான அவை, தொழில்புரட்சியின் மையமாக இருந்தன என்பது மட்டுமின்றி இன்றும் கூட அவை பெரும் தொழில் மையங்களாகத் திகழ்கின்றன. இங்கிலாந்தின் வடக்குப் பகுதிக்கு மான்செஸ்டர் எப்படி லண்டன் போன்ற நகரோ அது போல ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ என்றாலும் கூட ஜப்பானின் மேற்குப் பகுதியை ஆளுமை செய்வது ஒஸாகா நகரம் தான். இந்த இரு நகரங்களிலும் வாழும் மனிதர்கள் Breasts and Egss நாவலில் வரும் கதை மாந்தர்களைப் போல எளிமையானவர்களாகவும், வெள்ளந்தியாகப் பேசும், நட்புணர்வு மிக்கவர்கள் ஆவர். ஜப்பானின் மேற்குப் பகுதி மற்றும் ஒஸாகாவின் வட்டார வழக்கு மொழியானது டோக்கியோ மற்றும் கிழக்குப் பகுதியிலிருந்து குறிப்பிடத்தக்க வேறுபாடு கொண்டது. கரடு முரடாகவோ நாகரிகமற்றதாகவோ ஒலிக்கும் அந்தப் பேச்சுகள் அடிக்கடி முகம் சுழிக்க வைத்தாலும் மான்குனியன் (மான்செஸ்டர் நகரத்தாருக்கான அடைமொழி) போன்றே என் செவிக்கு ஒஸாகா வட்டார வழக்கு மொழி மிகக் கச்சிதமாகக் கேட்கிறது.
ஜப்பானின் சென்டோ**-வில் (சமுதாயக் குளியலகம்) இரு சகோதரிகளுக்கு இடையே நிகழும் உரையாடலை வாசித்தபோது, எனது பால்யக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில் குழந்தைகளுக்கான நீச்சல் குளத்தின் ஓரமாக அமர்ந்தபடி மிகச் சத்தமிட்டு மான்குனியன் தாய்மார்கள் கிசுகிசு பேசுவது சட்டென நினைவு வந்தது. அந்த கணத்தில் இருந்து இந்தப் பாத்திரங்கள் பேசுவது வேறு எதுவாகவும் எனக்கு கேட்கவில்லை. ஒரு பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளரான என்னிடம் அமெரிக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தருமாறு பதிப்பாளர்கள் வேண்டியபோது அந்தப் பாத்திரங்களை என் தலைக்குள் கேட்கும் பாத்திரங்களைப் போன்றே சித்திரிக்கும் அரிய மகிழ்வை அடைந்தேன்.
-லூயிஸ் ஹீல் கவாய்.
***
மிடோரிகோ, மகிகோ மற்றும் நான்
மகிகோ எனது அக்கா. அதனால் அவளது குழந்தை மிடோரிகோ எனது மருமகள் ஆகிறாள். நான் அவளது மணமாகாத அத்தை. மிடோரிகோவின் தந்தையுடன் மகிகோவிற்கு மணமுறிவு ஏற்பட்டதில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக அவளது தந்தையுடன் வாழ்ந்ததாக மிடோரிகோவிற்கு நினைவில்லை. அவளது தாய் அவர்கள் சந்திப்பதற்கு எதுவும் செய்ததாக நான் கேள்விப்பட்டதில்லை என்பதால் அவளுக்கு அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது. எனவே அவர்கள் இருவரும் கோடை விடுமுறையில் மூன்று நாட்கள் என்னுடன் தங்குவதற்காக ஒஸாகாவில் இருந்து டோக்கியோ வந்து கொண்டிருக்கின்றனர்.
மகிகோ வருவதாக தொலைபேசியில் கூறி ஒரு மாதம் இருக்கும்.
“நட்சுகோ, எனது மார்பகங்களை அறுவைச்சிகிச்சை செய்யலாம் என நினைக்கிறேன்.”
அவள் இரவுப் பணியாற்றும் மதுச்சாலையில் வேலை முடிந்த நள்ளிரவில் எனக்கு அழைத்தாள். அவள் எப்போதும் தொடக்கம் முதல் இறுதி வரை வளவளவெனப் பேசி முடிக்கும் வரை நிறுத்தமாட்டாள் என்பதால் அவள் என் பேச்சுக்கு செவி சாய்க்க விரும்புவாள் என்று கூட நான் நினைக்கவில்லை. ஒரு விநாடி “நான் அதைச் செய்யப் போகிறேன்” என்பாள், அடுத்த நொடியே “எனக்குத் தைரியம் இல்லை” என்பாள். இந்த விஷயம், நீச்சல் குளத்தின் உயரமான உந்து பலகையின் நுனியில் நின்று கொண்டு குதிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க நீங்கள் தவிப்பதைப் போன்ற உணர்வையே அவளுக்கு அளித்தது. எனக்கோ அவளது தொலைபேசிக்கும் எனது தொலைபேசிக்கும் இடையே தொடர்புறு சிக்கல் ஏற்பட்டது போன்று தோன்றியது.
மார்பக அறுவைச்சிகிச்சை
மகிகோ தனது பையிலிருந்து வெளியே எடுத்த அழகியல் அறுவைச்சிகிச்சை தொடர்பான துண்டறிக்கை குவியலில் பெரும்பாலானவை எழுத்துரு மற்றும் வண்ணங்களைத் தவிர ஒரே மாதிரியாக இருந்தன. அவற்றில் விலைக் குறிப்புகள், விவரங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், ஏறத்தாழ இருபது இருக்கும், அவளிடம் ஒரு கணினி கூட இல்லாதபோது கை நிறைய வைத்துள்ள இவற்றை எப்படிப் பெற்றாள் என்று என்னால் வியந்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.
அந்தக் குவியலில் மேலாக இருந்த ஒரு துண்டறிக்கையைக் கையில் எடுத்து உட்கார்ந்து கொண்டு படிப்பது போல பாவனை செய்தபோது, மகிகோ எனது தோளைச் சுற்றிக் கொண்டிருக்க, அவளது கண்கள் அந்த அறிக்கையில் மூழ்கி இருந்தன. அவளது முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்தது.
“இல்லை, அன்பே, நான் அதைச் செய்யப் போவது இல்லை” என்று ரகசியமாகக் கிசுகிசுத்த அவள், “நான் ஏற்கெனவே இடத்தை முடிவு செய்துவிட்டேன் தெரியுமா?. இதை அறுவைச்சிகிச்சை செய்ய நினைத்ததில் இருந்தே நான் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டேன். விதவிதமான துண்டறிக்கைகளைப் படித்தேன். வெவ்வேறு வகையான நபர்களிடம் உரையாடினேன். உண்மையில் இது ஒரு பெரிய விஷயமாகத் தான் இருக்கிறது. அவர்கள் உன்னை அறுப்பார்கள், துண்டமிட்டுத் திறப்பார்கள் தெரியுமா. அதிலிருந்து தப்பிக்க வழியில்லை என்றாலும் என் மனம் தயாராகிவிட்டது. நான் அதைச் செய்யப் போகிறேன்”. அவள் மூச்சு விடுவதற்காக நிறுத்தினாள். “நாளை நான் மருத்துவ ஆலோசனை பெறச் செல்கிறேன். இந்தக் கோடையில் எனக்கு மிகப் பெரிய விஷயமே இது தான் என நீ சொல்வாய். இந்தத் துண்டறிக்கைகளை நீ பார்க்க வேண்டும் என்பதற்காக கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். நல்லது, இங்கே இருக்கு பார்- என் வீட்டில் குவியல் குவியலாக இந்த மாதிரியான துண்டறிக்கைகள் வைத்திருக்கிறேன். ஆனால் நீ இதைப் பார்க்க விரும்புவாய் என நினைத்தேன். பார், அவற்றுள் அழகானதை உனக்குக் கொண்டு வந்திருக்கிறேன்.”
அழகானதா, அவள் என்ன சொல்கிறாள்? அவள் எதைப் பற்றிப் பேசுகிறாள் என்று எனக்கு சிறிதும் புரியவில்லை.
“இது தான் என் மனதுக்குப் பிடித்த ஒன்று” என அவள் ரயிலில் என்னிடம் காட்ட முயன்ற கருப்பு நிற வழவழப்பான துண்டறிக்கையைத் தட்டியபடி கூறினாள். அது நல்ல தரமானதாகவும் மற்ற இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறத் துண்டறிக்கை பாணி போல் அல்லாமல் இருந்தது. இது கொஞ்சம் தீவிரமான விஷயம் கொண்டதாகவும் ஒரு கணத்தில் அது மற்றவற்றில் இருந்து மாறுபட்டது என்பதை அறிந்து கொள்ளவும் முடியும்.
“நீ என்ன சொன்னாலும் அது அப்படி ஒன்றும் ஒப்பனை மிக்கதாக இல்லையே” என்று நான் குறிப்பிட்டாலும், மகிகோ அதைக் கவனிக்கவில்லை. மாறாக விதவிதமான மார்பக அறுவைச்சிகிச்சைகளைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தாள்.
என் எதிரே அமர்ந்து மகிகோ பேசிக் கொண்டிருந்தாலும் மீண்டும் அந்த அருவருப்பான உணர்வை நான் அடைந்தேன். ஆனால் அவள் பேசுவது என்னிடம் இல்லை. நான் இங்கிருப்பதைப் பற்றி அவள் ஏன் கவலைப்படுகிறாள் என்பது எனக்குத் தெரியாது. அந்த நிமிடத்தில் இருந்து எங்களுக்கு இடையேயான இடைவெளி பெரிதாகிக் கொண்ட சென்றது.
மிடோரிகோவின் டைரிக் குறிப்புகள்
நானும் என் அம்மாவும் அதிகம் பேச மாட்டோம். அவளிடம் பேசுவதைக் கூட நிறுத்திவிட்டேன். நாள்தோறும் மார்பக அறுவைச்சிகிச்சைக் குப்பைகளைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறாள். நான் பார்க்கவில்லை என்று பாசாங்கு செய்தாலும், போலியான பொருளை உங்கள் நெஞ்சில் வைத்து மார்பகத்தைப் பெரிதாக்குவதா? என்னால் இதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை, இதெல்லாம் எதற்காக? அவளது வேலைக்காகவா? எனக்குப் புரியவில்லை. உவ்வே உவ்வே உவ்வே உவ்வே உவ்வேய்! தொலைக்காட்சியிலும், புகைப்படங்களில் கூட நான் அதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் உங்களை அறுவை செய்து திறப்பார்கள். பிறகு இந்தப் பொருளை உள்ளே செருகுவார்கள். அது மரண வலியாக இருக்கும். அம்மாவுக்கு எதுவும் புரியாது. ஒரு மாடலாகப் போவதுப் பற்றி என் அம்மா சொன்னதாக நான் கேட்டேன். அதற்கு என்ன அர்த்தம் என்றால் நீங்கள் உங்களது முகத்தை ஏதாவது பத்திரிகையிலோ வேறு ஒன்றிலோ வர வைத்தால் அவர்கள் உங்களுக்கு இலவசமாக அறுவைச் சிகிச்சை செய்வார்களாம். அது மிகப் பெரிய பைத்தியகாரத்தனம் தான்.
நிர்வாணம்
இந்தக் குளியலகம் ஓராண்டிற்கு முன்பு தான் தொடங்கப்பட்டது என்பதால் புதிய விஷயம் போல் எப்போதும் தூய்மையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். அவர்கள் ஏதாவது மாய மந்திரம் செய்தார்களா என எனக்குத் தெரியாது ஆனால் இந்த நீரூற்று சிறப்பான சக்தி வாய்ந்ததாக இப்போது உள்ளது. அது அனைத்து நோய்களையும் வலிகளையும் போக்குவதாகவும் நீங்கள் அதைக் குடித்தால் அதிசயங்கள் நிகழ்வதாகவும் அவர்கள் கூறுவதால் இந்தக் குளியலகம் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டது. நான் சில முறை வந்தபோதெல்லாம் கூட்டமாகவே இருந்தது. கோடை விடுமுறைகளில் உங்களால் எதுவும் உறுதியாக கூற முடியாது என்றாலும் இரவு உணவுக்கு முன்பு கொஞ்சம் அமைதியாகவே இருக்கும் என்பதால் நாங்கள் இங்கு வந்தோம். கூட்டம் வழிகிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் வழக்கத்திற்கு மாறாக ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்திருக்க, உடைமாற்றும் அறையில் உள்ள சிறப்பான படுக்கைகளில் கைக் குழந்தைகள் அழுது கொண்டிருக்க, வெறி பிடித்ததைப் போல சிறுமிகள் கத்தியபடி ஓடிக் கொண்டிருக்க தொலைக்காட்சி வெடித்து சிதறுவது போல் ஒலித்துக் கொண்டிருந்தது. நாங்கள் பணத்தைச் செலுத்தியபின் இரு பாதுகாப்புப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டு உடைகளைக் களைந்தோம்.
நான் இப்போது மகிகோவின் நிர்வாண உடலின் மீது எந்த ஆர்வமும் கொண்டிருக்கவில்லை என்றாலும் அவள் மார்பக அறுவைச்சிகிச்சை செய்வது பற்றி புலம்புவதையும் அப்படி என்னதான் அவளது மார்பகம் சிறுத்துப் போய் இருக்கிறது என்று கவலையுற்றுப் பார்த்தேன். அய்யய்யோ…எனக்கும் அந்தப் பைத்தியம் பிடித்துவிட்டது போல…நானும் மகிகோவும் எப்போது ஒரு சமுதாயக் குளியலகத்தில் நிர்வாணமாக இருந்தோம் என்று நினைத்துப் பார்க்கிறேன். மகிகோவிற்கு மணமுறிவு ஏற்பட்டவுடன் மிடோரிகோ, நான் மற்றும் மகிகோ மூவரும் ஆறு ஆண்டு காலம் ஒன்றாக வசித்தோம். அப்போது நிறைய முறை நாங்கள் ஒருவரையொருவர் நிர்வாணமாகப் பார்த்திருப்போம் என்று நினைக்கிறேன். ஆனால் நீங்கள் நினைப்பது போல தினமும் குளியலகத்தில் பார்ப்பது போல் அல்ல. அப்போது கூட அவளது வாழ்வும் எனது வாழ்வும் வெவ்வேறு பாதையிலேயே சென்று கொண்டிருந்தது. அதனால் அவள் நிர்வாணமாக எப்படிக் காட்சி தருவாள் என்ற மங்கலான ஞாபகம் கூட எனக்கு இல்லை.
எனது உடைகளை பாதுகாப்புப் பெட்டியில் வைத்துவிட்டு மகிகோவின் பின்புறத்தை ரகசியமாக எட்டிப் பார்த்தேன். அவள் உடை இல்லாமல் இரண்டு மடங்கு ஒல்லியாகத் தெரிவதைப் பார்த்து கடுப்படைந்தேன். உங்கள் தொடைகள் உடலின் மேற்பகுதியில் சந்திக்குமே அந்த இடம் அவளுக்கு இரு தீக்குச்சிகள் வைத்தது போல இருந்தது. அவள் கீழே குனியும் போது முதுகெலும்பு மேலே துருத்திக் கொண்டிருப்பதைக் உங்களால் காண முடியும். மகிகோ இப்போது தான் நாற்பது வயதைக் கடக்கிறாள் என்றாலும் இந்தக் கோணத்தில் பார்க்கும் போது ஐம்பதைத் தாண்டியவள் போலத் தோற்றமளிக்கிறாள். எல்லாவற்றுக்கும் மேலாக அவளது கழுத்து ஒல்லியாகவும் தலை பருத்தும் இருந்தது.
“உள்ளே போலாமா”, என்றபடி மகிகோ தனது துண்டால் மறைத்துக் கொண்டு குளியலகத்தினுள் செல்ல கதவைத் திறந்தபோது வெண்மேகம் போன்ற நீராவி தவழ்ந்து வந்தது. எனது உடல் திணறுவதை உணரத் தொடங்கியது. குளிக்கும் இடத்தில் கூட்டம் செறிந்திருந்தது. டோக்கியோவில் இலவச நீராவிக் குளியல் தொட்டி தருவதும் பால் குளியல் தருவதும் வழக்கத்திற்கு மாறானது. ஆனால் சிறுநகரத்தைப் போல இங்கே அதோடு மட்டுமின்றி வண்ணங்கள் மாறும் நீர்சுழற்சி மற்றும் கொழுப்பைக் குறைக்கும் சக்திவாய்ந்த மசாஜ் குளியலும் கொடுக்கிறார்கள். அப்புறம் மற்றொன்று, நீங்கள் குப்புறப் படுத்துக்கொள்ள உங்கள் மீது ஒரு குளிர்ந்த குழாய் நீரூற்றி பின்னந்தலையை குளுமைப்படுத்துவதும் நடக்கிறது.
வெந்நீராவி சுழன்று எழுந்து மறைய, திடீரென மேலே உச்சியில் மணி ஒலிக்க, அனைவரும் தளர்வான நிலையில் ஜொலிக்கும் முகத்துடன் நீரில் நனைந்தனர்.
“ஆடம்பரமாக இருக்கு, இல்லையா?” என்றாள் மகிகோ. “ஆமா, ரொம்ப ஆடம்பரம்” என்று கூறியபடி வரிசையாக கண்ணாடி இருந்த இடத்தில் சிறு முக்காலியையும் கழுவுக் கிண்ணத்தையும் எடுத்துக் கொண்டு அமர்ந்தோம். மகிகோ மீண்டும் குளியல் தொட்டியில் நனையத் தொடங்கியதால், என் கூந்தலை முடிந்து கொண்டு, என் மீது ஒரு கிண்ணம் நீரை ஊற்றிக் கொண்டேன். 42 டிகிரி எனக் காட்டிய மிகப் பெரிய குளியல் குளத்தில் நாங்கள் இறங்கினோம். உங்களது கைத் துண்டை தூய்மையான குளியல் தொட்டியில் நனைப்பது நாகரிகம் கிடையாது என்றாலும் (அவ்வாறு செய்யக் கூடாது என எச்சரிக்கை வாசகம் வேறு சுவற்றில் இருந்தது) அதைப் பற்றி எல்லாம் என் அக்கா கிஞ்சித்தும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தனக்குள் கைத்துண்டை மறைத்தபடி வைத்திருந்தாள்.
“ஏய், இது சூடாகவே இல்லை. இதைத்தான் டோக்கியோவில் வெந்நீர் குளியல் என்று அழைக்கிறார்களா?” என்று சிணுங்கினாள்.
“குளியலகம் என்று வந்துவிட்டால் டோக்கியாவுக்கும் ஒஸாகாவுக்கும் மற்ற ஊர்களுக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை” என்றேன்.
“ஆனா, இது கதகதப்பாகத் தான் இருக்கிறது. அங்கே பார்த்தாயா? அவளுக்கு வியர்வை வழிகிறது என்பதை நம்பவே முடியவில்லை.”
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கும் அது சூடாக இல்லை. எனக்கும் போதுமான வெம்மை கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை என்பதால் பால் குளியலுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தோம். அந்தக் குளத்தின் மேல் நின்றபடி ஒரு பாதத்தை மட்டும் விட்டுப் பார்த்தோம். அதுவும் கதகதப்பான நீராகவே இருந்தது.
“உறைய வைக்குது” என்றபடி நீர்ச்சுழல் அடியில் தனது தலையை நுழைத்தாள் மகிகோ. அவளுக்கு அது பிடித்திருந்ததால், நாங்கள் அங்கேயே குளித்தோம்.
குளியல் தொட்டியில் இருந்த நேரம் முழுவதும் மகிகோ மற்ற பெண்களை ஒசிந்து நோக்கியபடி இருந்தாள். Little Red Riding Hood கார்டூனில் வரும் ஓநாய்க்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பது போல அல்லது வேறு எதுவோ போல எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதால் “அன்பே மகி, நீ முறைக்கிறாய்” என்ற என் கிசுகிசுப்பான குரலுக்கு, “ஓ..அப்படியா” என்றவாறே அவளது கண்கள் குளத்தில் நனையும் உடல்கள், நீருக்குள் இருந்து வெளியேறும் உடல்கள், குமிழிகளுக்குள் மூழ்கும் உடல்கள் என்று உடல்களை வேட்டையாடிக் கொண்டிருந்தன. அவளுக்குச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் கூட மடத்தனமாக எல்லோரையும் நோக்கினாள். அவள் சும்மா படுத்தபடி பெண்கள் வருவதையும் போவதையும் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு நானே பேசியபடி இருந்து கொண்டு பார்ப்பவர்களுக்கு முட்டாளாகத் தெரிவதைத் தவிர்ப்பதற்காக மகிகோவின் அருகே படுத்தபடி பெண்களின் உடல்களை ஒசிந்து பார்க்கத் தொடங்கினேன்.
“அன்பே மகி, குறிப்பாக எதை நீ அப்படிப் பார்க்கிறாய்?”
“மார்பகங்கள்.”
மிடோரிகோவின் டைரிக் குறிப்புகள்
இன்றைக்கு நான் மார்பகங்களைப் பற்றி எழுதப் போகிறேன். ஏன் நாம் அவை இல்லாமல் பிறக்கிறோம், பிறகு அவை வீங்கிப் பெரிதாகின்றன? அவற்றை நான் விரும்பாவிட்டாலும் ஏன் அந்த இரண்டும் எனக்கு இருக்கின்றன? அவை ஏன் வளர்கின்றன? அவை எங்கிருந்து வருகின்றன? ஏன் நான் நானாக இருக்க முடியவில்லை? சில இளம் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களால் தங்களுடையவை எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று காட்டாமல் இருக்க முடிவதில்லை. பையன்களுடன் சல்லாபிக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் தான் அவை இருக்கின்றன எனும் போது ஏன் இந்தப் பெண்கள் அதைப் பற்றி இவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள்? நான் விநோதமானவளோ? எனது மார்பகங்கள் வீங்கிப் பெரிதாவதை நான் விரும்பவில்லை. மொந்தமாக இருக்கும் அவற்றைத் தூர தூக்கி எறிய வேண்டும் போல் உள்ளது. என் அம்மா தனது மார்பகங்களைப் பெரிதாக்க விரும்பி, அந்த அறுவைச்சிகிச்சை செய்ய மருத்துவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதை எல்லாம் கேட்க நான் விரும்பியதால் அவளைக் கவனிக்கத் தொடங்கினேன். அது ஏனென்றால் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து அதற்கு பாலூட்டியதால் தானாம். ஒவ்வொரு நாளும் அவள் தொலைபேசியில் பேசுகிறாள். எனக்குப் பாலூட்டியதால் அந்த மார்பு சிறுத்துவிட்டதாகவும் அதை அறுத்து அதன் உள்ளே எதையாவது வைத்து நான் பிறப்பதற்கு முன்பு அது எப்படி இருந்ததோ அதைப் போலப் பெரிதாக்க வேண்டும் என விரும்பினாள். நான் பிறக்காமலே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் பிறக்காமல் இருந்திருந்தால் அம்மாவின் வாழ்க்கை இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கும். ஒருவேளை யாருமே பிறக்காமல் இருந்திருந்தால் இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் இருந்திருக்காது- இன்பம், துன்பம் எதுவுமே இருந்திராது. கருமுட்டையும் விந்துவும் கொண்டிருப்பது மனிதர்களின் பிழையல்லவே. அந்த முட்டையையும் விந்துவையும் ஒன்று சேர்க்கக் கூடாது என்றே நான் விரும்புகிறேன்.
கூம்பும் அப்பமும்
நாங்கள் இந்த முறை பால் குளியல் எடுத்து தேய்த்துக் கொண்டிருந்தபோது, உடைமாற்றும் அறைக்குள் வயதான பெண்மணி மெதுவாகத் தள்ளாடியபடி வந்தார். ஒரு வித்தியாசமான புவியீர்ப்பு விதி அந்த பெண்மணியின் உடலைக் கட்டுப்படுத்தியது போலிருந்தது.
“அந்த கவர்ச்சியான இளஞ்சிவப்பு காம்புகளைப் பார்” என்று மூச்சுவிட்டபடி கூறினாள் மகிகோ. “அவை மிக இளஞ்சிவப்பாக இருப்பதாக நீ நினைக்கவில்லையா? அதை அவர்கள் எப்படி அடைகிறார்கள் என்று நீ சிந்தித்தது உண்டா?
“எனக்குத் தெரியாது. வயதாகும் போது நிறம் மாறலாமோ? அவள் அந்த நிறத்தில் பிறந்திருக்கலாமோ?
“அதைச் சுற்றி ஏதாவது போட்டிருக்கிறார்களா என்று கூட உன்னால் பார்க்க முடியாது. தெளிவான கோடு எதுவும் இல்லை.”
“சரி தான்”
“சில சமயங்களில் இளம் பெண்கள் கூட இயற்கைக்கு மாறாக நிறம் இழப்பது தெரிந்தால் அவர்கள் ஹைட்ரோ பயன்படுத்துவார்கள்.”
“ஹைட்ரோவா, அப்படின்னா என்ன?”
“ஹைட்ரோகுயினன், அது ஒரு வகையான ப்ளீச். அல்லது ட்ரெட் ஆக இருக்கும்.”
“ட்ரெட்?”
“ட்ரெட்டினாய்ன். உனது தோல் ஒரு சுவரொட்டி போல உரிந்துவிடும். அந்த இரண்டும் தான் சக்தி வாய்ந்தவை. ஆனால் கை, கால் கூடப் போய்விடலாம். ஜாக்கிரதை.”
சிறிது நேரம் கழித்து, அவள் வேறொரு பெண்ணைச் சுட்டினாள். அவள் இளமையாக இருந்தாள். இருபது வயதிருக்கும்.
“அந்தப் பெண் இன்னும் இளமையாக இருக்கிறாள். ஆனால் அவள் கச்சிதமான காலுறை கொண்டிருக்கிறாள்.”
“என்ன சொன்னே?”
மகிகோ கீழே நழுவியதால் நீர் மேலெழும்பி அவளது தாடை வரை வந்து அவளது குரலை அமுங்கச் செய்தது. “பெரிய மார்பகங்கள் இருப்பது நல்லதுதான் என்றாலும் அது பார்ப்பதற்கு கொழுத்துத் தான் தெரியும். அது எப்படி வேண்டுமானாலும் ஆக முடியும் எனினும் மார்பகங்கள் தண்ணீர் பலூன் போன்றவை தான் தெரியுமா? அவை நிரம்பி உள்ள போது அருமையாக இருக்கும். ஆனால் ஆளைப் பொருத்து அவை காலுறை போல மாற முடியும். அவளைப் பார், அவளுடையது ஆண்களின் பாதமில்லாக் காலுறை போலத் தொங்கிக் கொண்டிருக்கிறது.”
இப்போது அவள் குறிப்பிடும் பெண், குனியும் போது அவளது மார்பகங்கள் தட்டையாகவும் முன்புறம் ஆடியபடி இருந்தாலும் அவை அழகாகவும் நீளமாகவும் தெரிந்தாலும் கூட பருமன் என்பது சிறிதளவும் இல்லை என்பதால் அவை மிகச் சரியாக ஆண்களின் காலுறையைப் போலவே காட்சி தருகின்றன. எப்படி ஆலோசித்துப் பார்த்தாலும் காலுறை என்பதைத் தவிர வேறு எவ்விதமாகவும் என்னால் அவற்றைப் பார்க்க முடியவில்லை என்றாள் மகிகோ. உண்மையில் இது எனது வேலையல்ல தான். ஆனால் நான் அவள் அருகே படுத்துக் கொண்டு அவள் கீழே குனிந்தால் அவளுடையது எப்படித் தோற்றமளிக்கும் என்று வியந்து கொண்டிருந்தேன். அல்லது யார் அந்த மார்பகங்களை தேய்க்கப் போகிறார்கள் என்று சிந்திப்பதும் என் வேலையல்ல. அநேகமாக அது கைகளில் பிடித்திருப்பது போல மட்டுமாகத்தான் இருக்கும்…அல்லது அது போன்று ஏதோ…இப்போது நான் தான் மடத்தனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
குளியலகத்திற்கு உள்ளே வரும் ஒவ்வொரு ஜோடி மார்பகங்களையும் சுட்டிக் காட்டி, “கூம்பு வடிவம்” அல்லது “அப்ப வடிவம்” என்று முணுமுணுத்தாள். கடைசியாக மிக அழகான ஒரு ஜோடி மார்பகம் வந்து பெருமையுடன் பால் நீரில் மோதிய புகை எழுந்தபோது, பெரிய மார்பகங்கள் பற்றி சொற்பொழிவாற்றத் தொடங்கி அவை பற்றி சிறிது நேரம் நையாண்டி செய்யாமல் இருக்கமாட்டாள். ஆனால் அவ்வாறு செய்து முடித்ததும், அமைதியாக பால்வெளி நீரில் குனிந்து உற்று நோக்குவாள். வெளியேறும் நேரம் வந்துவிட்டது என்பதை நான் நினைப்பதை உணர்ந்த அவள், திடீரென தனது துண்டை திறந்து அவளது மார்பகங்களை எனக்குக் காட்டினாள்.
“எப்படி?” என் கண்களை நேராகப் பார்த்து வினவினாள்.
“இப்போ அதுக்கு என்ன?”
“நிறம், அளவு பற்றி? உனக்குத் தெரியுமே?”
இறுக்கம்? பழுப்பு, பெரியது? எல்லா விதமான சொற்களும் என் தலைக்குள் ஓடின. ஆனால் அதை அப்படியே ஓடவிட்டு வாயை மூடிக் கொண்டேன்.
“சரி, அவை சிறிதாக உள்ளன என்ற வார்த்தையைக் கேட்க நான் விரும்பவில்லை. நிறம் மட்டும். அவை உனக்கு அடர் பழுப்பாகத் தெரிகின்றனவா? நேர்மையாகச் சொல்” அலங்காரம் இல்லாத முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு கெஞ்சிக் கேட்டாள் மிகிகோ.
“இல்லை, அடர் பழுப்பு இல்லை.” என சட்டென்று கூறினேன்.
“ஆனால் அவை இயல்பாக இருக்கின்றனவா?”
“நல்லது, நீ இயல்பு என்று எதைச் சொல்கிறாய் என எனக்குத் தெரியவில்லை…”
“இப்போதைக்கு நீ இயல்பு என்று எதைச் சொன்னாலும் எனக்குப் போதும்” – சற்று கோபமாகக் கூறினாள்.
“சரி, அதை விடு” என்று மெதுவாகக் கூறினாள்.
“எப்படியோ, அவை இளஞ்சிவப்பாக இல்லை என்பது உறுதியாகத் தெரியுமா”
“தெளிவாச் சொல்றேன்…அவை இளஞ்சிவப்பு இல்லை!”
“ஓ…சரி.”
“சரி”- அதற்குப் பின் நாங்கள் அதைப் பற்றிப் பேசவில்லை.
**சென்டோ (Sento)- ஜப்பானில் உள்ள சமுதாயக் குளியலகங்கள். இதற்கு ஆயிரம் ஆண்டு கலாசார வரலாறு உண்டு. தொடக்க காலத்தில் பெளத்த மடாலயங்களில் இருந்த இக்குளியல் குளங்கள் காலப் போக்கில் வணிக நோக்கில் உருவாகின. ஒரு வகையான ஷின்டோ கலாசார புனிதப்படுத்தும் நீராடல் சடங்கு. கி.பி. 1266ம் ஆண்டில் முதன்முதலில் வணிக நோக்கிலான வெந்நீராவிக் குளங்கள் தொடங்கப்பட்டன. இதில் ஆண்கள், பெண்களுக்கு எனத் தனித்தனியாக பிரிவுகள், கைக் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திட படுக்கைகள் உண்டு. உடைகள் எல்லாம் களைந்துவிட்டு அனைவருமே குளத்தில் குளிப்பர். இதில் வெந்நீராவிக் குளியல், பால் கலந்த வெந்நீர் குளியல், இயற்கை வெந்நீரூற்றுக் குளங்கள் என பல வகைகள் உண்டு. நமது ஊரில் உள்ள குளங்களில் நாம் குளிப்பதைப் போல என்று அதை அவ்வளவு எளிமைப்படுத்த முடியாது என்றாலும் கட்டணம் செலுத்தி ரசித்து ஆழ்ந்த அமைதியுடன் குளிக்கும் இடம் எனலாம்.
மியேகோ கவாகமி: 1976ல் ஜப்பானின் ஒஸாகாவில் பிறந்தவர். இசைக் கலைஞராக பயணத்தை துவங்கிய அவர் மூன்று இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். Breast and Ovum என்ற நாவலுக்காக அகுதகவா பரிசைப் பெற்றவர். 2013ம் ஆண்டில் Water Jar என்ற கவிதைத் தொகுப்பிற்காக டகாமி யுன் பரிசும், Ai no yume toka என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக Tanizaki Jun’ichiro பரிசும் பெற்றார்.
இக்கதை Words without borders இணைய இதழில் வெளியான Breasts and Eggs என்ற அவரது நாவலின் ஒரு பகுதியின் தமிழாக்கம்.
