இன்றுவரை தொடரும் ஆர்மேனிய இனப்படுகொலைகள் – ஒரு அறிமுகமும், கண்டனமும்.
– கௌதம சித்தார்த்தன்

 

வரலாற்றுப் புகழ்பெற்ற ஆர்மேனிய நாட்டுப்புற பாடல் என் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.

கடந்த ஒரு நூற்றாண்டாக ஆர்மேனியா மீது நிகழ்த்தப்பட்டு வரும் பேரினவாதத் தாக்குதல்களில் நேர்ந்த இனப்படுகொலைகளின் மூலமாக, வரலாற்றுப் பதிவாக இந்த நாட்டுப்புறப்பாடலின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

என் பதின் பருவத்தில், வல்லிக்கண்ணனின் மொழியாக்கத்தில் வெளிவந்த “ஆர்மேனியச் சிறுகதைகள் ” நூலை படித்துவிட்டு நான் அடைந்த பூரிப்பும் புளகாங்கிதமும் இன்றும் அப்படியே இருக்கிறது.

” அலெஹ்.. நீயும் நானும் நமது இரண்டு தலைகளையும் ஒரே தலையணையில் வைத்துப் படுப்பதிற்கில்லையென்றால் பின் அந்தப் பிரகாசமான காலை நேரம் உலகத்துக்கு என் வந்தது?” என்று அரற்றும் ஸோரோவின் வரிகள், இன்னும் என் மனதில் உடையாத குமிழிகளாக மிதந்து கொண்டிருக்கின்றன. மூஷேக் கால்ஷோயன் எழுதிய “அழைப்பு” என்னும் அக்கதை என்றைக்கும் அழியாது என்பதற்கு இதன் உள்ளடக்கத்தை பல்லாயிரம் வடிவங்களாக மாற்றி மாற்றி, கதைகளாக, கவிதைகளாக, காவியங்களாக, திரைப்படங்களாக, இசை ஆல்பங்களாக, பல்வேறு வடிவங்களில், பல்வேறு மொழிகளில் கலைஇலக்கியங்களாக இன்றைக்கும் வந்து கொண்டிருக்கின்ற சூழல் உணர்த்துகிறது.

அந்த நூல், ஆர்மேனிய மக்கள் மீதும் கலாச்சாரம் மீதும், அவர்களது வாழ்வியல் மீதும், அரசியல் மீதும் அபரிமிதமான ஆர்வத்தை உண்டாக்கிய நூல். மற்றும் இன்றளவிலும் நடந்து கொண்டிருக்கும் இனவாத தாக்குதல்கள் குறித்தும் ஒரு பார்வையை உளள்ளடக்கிய முழுமையான ஆர்மேனிய வாழ்வியல் களஞ்சியம்.

ஒரு நீண்ட தொன்மையான பாரம்பரியம் கொண்ட ஆர்மேனிய வாழ்வியலை இந்த நாட்டுப்புறப் பாடல் அற்புதமாய் ஒலிக்கிறது. ஆரம்பத்தில் பெரிதும் கவனம் பெறாத இந்தப்பாடலை 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த (1869 – 1935) ஆர்மேனிய பாதிரியாரும் இசைக்கலைஞருமான கோமிட்டாஸ் (Komitas) இதற்கு இசைவடிவம் தந்து பிரபலப்படுத்தினார். மேற்கத்திய இசைப்பயிற்சி கொண்ட அவர், தனது இசை ஞானத்தை ஒரு தேசிய பாரம்பரியத்தை உருவாக்கப் பயன்படுத்தினார். ஆர்மேனிய நாட்டுப்புறப்பாடல்களை தேடி எடுத்து, ஆர்மேனிய நாட்டுப்புற இசையை பரந்த பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த செயல்பாடுகளால், “ஆர்மேனிய இசையின் மீட்பர்” என்று அழைக்கப்பட்டார்.

ஆர்மேனிய இனப்படுகொலையின் போது, நூற்றுக்கணக்கான பிற ஆர்மேனியச் சிந்தனையாளர்கள், கலைஞர்களுடன் கோமிட்டாஸ், ஒட்டோமான் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சிறை முகாமுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு பெரும் மனச் சிதைவு நோய்க்கு ஆளாகி, இறந்தார். கோமிட்டாஸ் இனப்படுகொலையின் தியாகியாக பெரிதும் போற்றப்படுகிறார், மேலும் கலையில் ஆர்மேனிய இனப்படுகொலையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகச் சித்தரிக்கப்படுகிறார்.

Սարերի Հովին Մեռնեմ (Sareri Hovin Mernem) “மலைகளின் காற்றுக்காக நான் இறப்பேன்” என்னும் இந்தப்பாடல், உலகின் 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கமாகி வந்துள்ளது. ரஷ்யன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், அரபிக்… போன்ற பிரதான மொழிகளில் மட்டுமல்லாது, ஆர்மேனியாவைச் சுற்றியுள்ள பகுதிகளான அசர்பைஜானி, செர்பியன், குர்திஷ், பெர்சியன், போஸ்னியன், துர்கிஷ், அல்பேனியன், ஜார்ஜியன், உஸ்பெக், கிர்கிஷ்..போன்ற மொழிகளில் பிரதானமாக வெளியாகியுள்ளது.

இந்த மொழியாக்கங்களுடன் எம் தாய்மொழியின் மொழியாக்கமும் இணைந்து, எம் தாய்க்கு மகுடமாய் மிளிர்கிறது.

ஆர்மேனிய பாரம்பரியம் கொண்ட இந்தப்பாடல் தீவிரமான கலாபூர்வமான கலைஞர்கள் மற்றும் பாப்புலர் கலைஞர்கள் எனஅனைத்து இசைக்கலைஞர்களாலும் ஒரு தேசிய கீதம் போல போற்றப்பட்டு பாடப்பட்டு வருகிறது.

தொன்மை நிறைந்த வரலாற்றின் துயர் மிகு அழகியல் கொண்ட இப்பாடலை, உலகின் புகழ்பெற்ற கலைஞர்கள் இசை ஆல்பமாக வெளியிட்டுள்ளார்கள். காணொளியில் பார்க்கும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் பொங்கிப் பிரவகிக்கும்.

கடந்த 20 – 30 வருடங்களாக ஆர்மேனியா மீது நிகழ்த்தப்பட்டு வரும் பேரினவாதத் தாக்குதல்களில் நேர்ந்த இனப்படுகொலைகளின் மூலமாக, வரலாற்றுப் பதிவாக இந்த நாட்டுப்புறப்பாடலின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

1988 ஆம் ஆண்டில் தொடங்கி, கடந்த 30,000 பேரைக் கொன்றது மற்றும் கிட்டத்தட்ட 1 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்த அதன் உரிமையின் மீதான போர், சோவியத்துக்கு பிந்தைய பல பிராந்திய மோதல்களைப் போலவே, வேரூன்றியுள்ளது.

முப்பத்திரண்டு ஆண்டுகால யுத்தத்தில் நாகோர்னோ – கராபாக் மலைகளின் காற்றுக்காக 30,000 பேர் இறந்துள்ளனர். 600,000 அஜெரிஸ் மற்றும் 360,000 ஆர்மேனியர்கள் அகதிகள். செப்டம்பர் 27 அன்று தொடங்கிய சமீபத்திய சண்டையில் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், என்று The International Committee of the Red Cross (ICRC) அமைப்பு கூறுகிறது.

நாகோர்னோ-கராபக் (Nagorno-Karabakh ) என்பது சர்ச்சைக்குரிய பிரதேசமாகும், இது அஜர்பைஜானின் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் பெரும்பாலும் ஆர்ட்சாக் குடியரசால் நிர்வகிக்கப்படுகிறது (முன்னர் நாகோர்னோ-கராபக் குடியரசு [NKR] என்று பெயரிடப்பட்டது).

சோவியத் சோசலிச குடியரசின் நாகோர்னோ-கராபக் தன்னாட்சி ஒழிப்பின் மூலம், ஆர்மேனிய இன பெரும்பான்மையைக் கொண்ட ஒரு சுதந்திர மாநிலமாக அஜர்பைஜான் மாறியது. ஆனால்,1988 இல் கராபக் இயக்கம் வந்ததிலிருந்து அஜர்பைஜான் இப்பகுதியில் அரசியல் அதிகாரம் செலுத்தவில்லை. பிராந்தியத்தின் சர்ச்சைக்குரிய நிலை ஆரம்பித்தது. 1994 ல் நாகோர்னோ-கராபக் போர் முடிவடைந்ததிலிருந்து, ஆர்மேனியா மற்றும் அஜர்பைஜான் அரசாங்கங்களின் பிரதிநிதிகள் OSCE மின்ஸ்க் குழுமத்தின் மத்தியஸ்த அமைதி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.

செப்டம்பர் 27, 2020 அன்று, தீர்க்கப்படாத நாகோர்னோ-கராபக் மோதல்கள் மீண்டும் தொடங்கின. அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் ஆயுதப்படைகள் இரண்டும் சேர்ந்து பொதுமக்களைக் கொன்று குவித்தன.

அக்டோபர் 4, புதிய கராபாக் மோதலில் ஒரு பயங்கரமான நாளின் முடிவு. அஜர்பைஜானின் இரண்டாவது நகரமான கஞ்சே மீது ஆர்மேனிய தரப்பு ஒரு பொறுப்பற்ற ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது, சாதாரண நகர வீதிகள் தாக்கப்பட்டு, பெருமளவு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. ஸ்டீபனகெர்ட்டில் ஆர்மேனிய குடிமக்கள் மீது கண்மூடித்தனமாக ஷெல் ஆயுதம் வீசப்பட்ட பல நாட்களுக்குப் பிறகு, அங்கு அதிக சேதம் மற்றும் உயிர் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

இரு தரப்பினரும் அழிவுகரமான தொலை தூர நவீன ஆயுதங்களால் தாக்குகின்றனர். இதில் பெருமளவு அழிவை எதிர்கொள்பவர்கள் பொதுமக்கள்.

இது மூர்க்கத்தனமான, இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று இந்தக் கணத்தில் கண்டனம் தெரிக்கிறது தமிழி.

***

மலைகளின் காற்றுக்காக நான் இறப்பேன்.

மலைகளின் காற்றுக்காக நான் இறப்பேன்,
நான் காற்றுக்காக இறப்பேன், காற்றில் இறப்பேன்,
நான் நேசிக்கும் மலை முகடுகளுக்காக இறப்பேன்,
நான் முகடுகளில் இறந்துவிடுவேன், முகடுகளில் இறப்பேன்.

நான் நின்று விட்டேன், என்னால் மேற்கொண்டு வர முடியாது
என்னால் வர முடியாது, என்னால் வர முடியாது
நான் கண்ணீரால் நிரம்பியிருக்கிறேன், என்னால் உடைந்து அழ முடியாது
என்னால் அழ முடியாது, என்னால் அழ முடியாது .

இந்த ஒரு வருடத்தில் நான் அவளைப் பார்த்ததில்லை,
என் நேசமானவளைப் பார்க்கும்போது, அவளது கண்களில் இறந்துவிடுவேன்
ஆறுகள் தண்ணீரைக் கொண்டு வருவதில்லை
அவை எந்த செய்தியையும் கொண்டு வருவதுமில்லை.

உறைந்திருக்கிறது, உங்கள் இதயம்
நான் வீணாக காத்திருக்கிறேன், அது எதையும் கொண்டு வரவில்லை
நான் நின்று விட்டேன், என்னால் மேற்கொண்டு வர முடியாது
என்னால் வர முடியாது, என்னால் வர முடியாது

நான் கண்ணீர் நிறைந்தவன், என்னால் தேம்பி அழ முடியாது
என்னால் அழ முடியாது, அழ முடியாது
நான் அவளை இந்த ஒரு வருடத்தில் பார்த்ததில்லை
அவளைப் பார்க்கும்போது, அவளது கண்களில் இறந்துவிடுவேன்.

***