• பார்ட்
  • தமிழில் : ராஜசேகர் சுப்பிரமணியம்

 

 

பிக்பிரதர் முதல் தொடரின் வெற்றியாளர் பார்ட் (Bart Spring in’t Veld), இந்த நிகழ்ச்சி தன்னுடைய வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டதாகச் சொல்கிறார்.

பள்ளிப் படிப்பை முடித்ததும், நான்கு ஆண்டுகள்   நெதர்லாந்து நாட்டு இராணுவத்தில் பணிபுரிந்து விட்டு (போஸ்னியா நாட்டில் பணிப்புரிந்த அனுபவம் உட்பட) 1999 ம் ஆண்டு மே மாதம் ராணுவ வேலையை விட்டார். அப்போது அவர் கண்ணில் பட்ட விளம்பரம்: “ஒரு புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் பங்கேற்பாளர்கள் /போட்டியாளர்கள்   தேவை, வெல்பவர்களுக்கு பரிசுத்தொகை 80,000 பவுண்டுகள்  ”

வெளியுலகத் தொடர்பே இல்லாமல், நிகழ்ச்சிக்கென்றே வடிவமைக்கப்பட்ட ஒரு தனி வீட்டில், நூறு நாட்கள்   வெற்றிகரமாகக் கழிக்கவேண்டும்… என்ற பல சுவாரஸ்ய விதிகளோடு வெளிவந்திருந்த அந்த நிகழ்ச்சிக்கு பார்ட் விண்ணப்பித்தார்.

நல்ல உடற்கட்டும், அழகான முடியமைப்பும் அவருக்கு சாதகமாக இருந்தன. மேலும், அவருக்கு பணத் தேவையும் இருந்தது. உளவியல் மற்றும் சில தேர்வுகளுக்குப் பிறகு, மற்ற போட்டியாளர்களுடன் அவர் பிக்பிரதர் வீட்டினுள்  நுழைந்தார்.

83 கேமராக்கள்  கண்காணித்துக் கொண்டிருக்க, முதல் இரண்டு வாரங்கள், நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை. கடும் எதிர்ப்பு விமர்சனங்கள்  கிளம்பின. ரேட்டிங் வீழ்ந்தது. விளம்பரதாரர்கள்   விலகிக்கொள்ள ஆரம்பித்தனர். திக்கற்ற திசையில் நிகழ்ச்சி போவதாக பலரும் நினைத்தனர். Endemol நிறுவனம், நிகழ்ச்சித் தயாரிப்புக்கென பணம் வாங்கி இருந்த வங்கிகளிடம், எப்படியேனும் நிகழ்ச்சி பெரும் வெற்றி பெறும் என்று மீண்டும் மீண்டும் உறுதி கூறியது.

அப்போது, நிகழ்ச்சியில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. பார்ட்டும், மற்றொரு போட்டியாளரும் ஸாபின் என்ற பெண் போட்டியாளரைத் தம் வலையில் வீழ்த்த முனைந்தனர். ஒரு கட்டத்தில், பார்ட், ஸாபினுடன் நெருங்கி, காதலில் ஐக்கியமாகி விட்டார். அவர்களின் உறவு நேரடியாக நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிவிட, நிகழ்ச்சியின் பரபரப்பும், ரேட்டிங்கும் எகிறி விட்டது.

அந்த முதல் பிக்பிரதர் நிகழ்ச்சியின் வெற்றியாளராக பார்ட் பரிசு பெற்றார். அவருடைய புகழ் விண்ணைத் தொட்டது. போகும் இடமெல்லாம் மக்களின் வரவேற்பும், பெண்களின் காதல் தொடுப்புகளும் அவரைப் பின் தொடர்ந்தன. பெரும் பணம் அவரைத் தேடி வந்தது. ஆனால், அனைத்தையும் அவர் சில வருடங்களில் இழந்து விட்டார்.

புகழ்பெற்ற The Times பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், பிக்பிரதர் நிகழ்ச்சி தன்னுடைய வாழ்வையே களவாடிவிட்டதாகவும், தான் மூன்று முறைகளுக்கு மேல் உளவியல் ரீதியாக தீவிரமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அனைத்து வெற்றிகளையும் அடைந்து அனுபவித்த பிறகு, இப்போது மீண்டும் நான் என்னுடைய பழைய நிலைக்கே திரும்பி விட்டேன். பெரும் அனுபவங்களை நான் அடைந்ததுதான் பலன். இப்போது என் சுயத்தை அடையாளம் கண்டு கொள்வோர் யாருமே இல்லை. அந்த நிகழ்ச்சியினால் என்னுடைய வாழ்வையே நான் தொலைத்து விட்டேன்.”

பிக் பிரதர் பாணியிலான ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகள்   இன்னும் பிரபலமடைந்தவாறே இருக்கும் யதார்த்தத்தில், சுயம் தொலைந்து போகும் வாழ்வின் சோகம் மிகப் பெரியது.

***

இந்தக் கட்டுரையின் இன்னொரு பார்வை “வரலாற்றில் முதல் ‘பிக் பிரதர்’ வென்றவர்” படியுங்கள்