நேற்றிலிருந்து தமிழ்நாடு முழுக்க ஒரு ஆன்மிகச் சொற்பொழிவு விவகாரம் தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.
பொதுவாகவே, மதம் சார்ந்த விஷயங்களை அணுகும்போது மிக மிக எச்சரிக்கையுடன் கையாளவேண்டும். ரொம்ப சென்சிட்டிவ் ஆனது மதம். அதுவும், மீடியா வளர்ச்சி பெருமளவில் வளர்ந்திருக்கிற தற்காலச் சூழலில்.
***
இந்த சாபங்கள், முற்பிறவி, பிற்பிறவி பற்றிய கருத்தாக்கங்கள், அனைத்து மதங்களிலும் உள்ளன. இந்து, இஸ்லாம், கிறித்துவம் என நம் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள எல்லா மதங்களிலும் மிகவும் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருக்கின்றன. (வேறு வேறு கருத்தாக்கங்களில், வேறு வேறு உருவாக்கங்களில்…) ஏன் மிகவும் சுதந்திரமான முற்போக்கான மதம் என்று கொண்டாடப்படும் பௌத்த மதத்திலும் இவை உள்ளன.
(விரிவாகச் சொல்வதற்கு நேரமும் இடமும் இல்லாததால், சுருக்கமாக: பௌத்தமதம், Reincarnation (மறுபிறவி) Rebirth (மறுபிறப்பு) என்ற தத்துவக் கோட்பாடுகளை முன்வைத்து, அடுத்தடுத்த பிறவிகளைப் பற்றி பூடகமாகவும், அறிவார்ந்த சிந்தனையாகவும் முன்வைத்துப் பேசுகிறது.) (மிக மலினமான தமிழ் வெகுஜனத் திரைப்படமான “ஏழாம் அறிவு” திரைப்படத்தையும் இங்கு நினைவு கூறலாம்.)
இஸ்லாம் மார்க்கத்தில், “இம்மை” “மறுமை” என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கிறது. இம்மையில் (இந்த நிகழ்கால வாழ்வில்) நீங்கள் நல்லது செய்தால், மறுமையில், (மரணத்திற்குப்பின்) சொர்க்கத்துக்குப் போவீர்கள். தீயது செய்தால், நரகத்துக்குப் போவீர்கள். இங்கு பிறவிகள் பற்றிய கருத்தாக்கம் இல்லாவிட்டாலும், பாவ புண்ணியம் என்கிற கருத்தாக்கம் வேரோடியிருக்கிறது.
கிறித்துவ மதத்தில், இதே கருத்துப்படிவம், கொஞ்சம் மாறி வரும். நல்ல செயல்கள் செய்து இறந்து போனவர்களின் ஆன்மா ஆண்டவரிடம் போகும். தீய செயல்கள் செய்தவர்களின் ஆன்மா, “உத்தரிக்கும் ஸ்தலம்” என்னும் பாவப் பரிகாரம் செய்கின்ற இடத்துக்குப் போகும். அங்கு தங்களது பாவங்களை போக்கிய பிறகே ஆண்டவரிடம் போகும்.
இந்து மதத்தில் உள்ள கருத்துப் படிவம் ரொம்ப ஜாலியானது. ஒவ்வொரு மனிதனுக்கும் 7 பிறவிகள் உள்ளன. இதில் அந்த உயிர் 7 பிறவிகளையும் வாழ்ந்து கடந்து விட்டால் பரம்பொருளிடம் போகலாம். பாவ புண்ணியக் கருத்துக்கள் தேவதைக் கதைகளில் வருவதுபோல, ஒவ்வொரு பாவத்துக்கு ஒரு கொடூரமான தண்டனையை அனுபவிக்க வேண்டும். (என் சிறுவயதில், கோயில் திருவிழாவுக்கு என்னை அழைத்துப்போன என் அப்பா, எனக்கு ஒரு படம் வாங்கித் தந்தார். அந்தப் படத்தில், தீய செயல்கள் செய்யும் ஒவ்வொருவரையும் எண்ணெய் கொப்பரையில் வைத்து வேகவைப்பது, தலைகீழாக நிற்க வைத்து இரண்டு கால்களையும் பிளப்பது, இப்படி விதவிதமான தண்டனைகள் கொண்ட படம். என் அறையில் மாட்டி வைத்திருந்த அந்தப் படக் காட்சிகள் இன்றளவிலும், என் மனதில் அழிபடாமல் பதிந்துள்ளன.) என் பதின் பருவத்தில், நரகம் பற்றிய கருத்துக்களில் உழன்று கிடந்தவனை, ழீன் பால் சார்த்தரின் “மீளமுடியுமா?” (No Exit) என்ற நூல் வேறுவிதமான சிந்தனையை ஏற்படுத்தியது. அது படைப்புச் சிந்தனை) மூலநூலின் தலைப்பான “வெளியேறும் வழியே இல்லை” (No Exit) என்ற பதத்தை “மீள முடியுமா?” என்று மொழியாக்கம் செய்திருப்பது மிகவும் தவறான பார்வை.
அதே போல, உலகப்புகழ்பெற்ற தத்துவவாதி பிரடெரிக் நீட்ஷே வின், “நல்லதற்கும் தீயதற்கும் அப்பால்..” (Beyond Good And Evil) என்ற நூலின், தத்துவ விசாரத்தில் அவர் சொல்கிறார். “நல்லதற்கும் தீயதற்கும் அப்பால் இருப்பது என்ன? என்ற தேடலே தார்மிகத்தின் அறம்!”
இந்த உலகில் நீதி அழிந்து, அநீதி தோன்றும் போதெல்லாம், பரம்பொருளானவர், ஒவ்வொரு அவதாரம் எடுத்து இந்த பிரபஞ்சத்தைக் காப்பார் என்றும், இதுவரை 9 அவதாரங்களை எடுத்து முடித்தாயிற்று, இனி அடுத்து 10 வது அவதாரமான “கல்கி” அவதாரம் எடுக்கும்போது இந்த கலி யுகம் முடிந்து வேறு யுகம் ஆரம்பிக்கும் என்றும் சொல்லப்படுவது இந்து மதத்தின் கருத்து.
இவைகளைப் பற்றியெல்லாம் இன்னும் பல பக்கங்கள் விரிவாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இன்னும் நாட்டுப்புறக் கலாச்சாரம் பற்றியெல்லாம் சொன்னால் முகநூல் தாங்காது. ஒரு குடும்பத்தில், ஒரு மரணம் நேர்ந்து விட்டால், சில பல சடங்குகள் செய்து, அந்த உடலை அடக்கம் செய்வார்கள். அடுத்த நாள், நீத்தார் நாள் சடங்கில், நெற்தானியங்களை நெல்லிலிட்டு குத்தி, அந்த பச்சரிசியில் சோறு சமைத்து, முறத்தில் படையலாக காக்கைகளுக்கு வைப்பார்கள். ஒரு காக்கையும் வராது போனால், குடும்பத்தார், தான் அவருக்குச் செய்த பாவங்களையெல்லாம் வாய்விட்டுச் சொல்லி மன்னிப்புக் கேட்ட பிறகு காக்கை வரும். அந்தக் காக்கை படையலைக் கொத்தித் தின்னும். அந்தக் காக்கைதான் நேற்று இறந்து போனவர் என்பது ஐதீகம். இந்தச் சடங்கு இன்று வரை கிராமங்களில் நடந்து வருகிறது. (“சாமி” என்ற படத்தில் பிராமணக் குடும்பங்களில் நடக்கும் இந்தச் சடங்கை விவேக் கிண்டலடிக்கும் காட்சி ஞாபகம் வரும்)
(பேராசிரியர் ஏ டி கோவூர் (1898 – 1978) கேரளாவைச் சேர்ந்த பகுத்தறிவாளர் ஆவார், ஆன்மீக மோசடிகள் மற்றும் மதங்களின் மூட நம்பிக்கைகள் பற்றிய அவரது கடுமையான விமர்சனம் பார்வையாளர்களால் உற்சாகமாகப் கொண்டாடப்பட்டது, இலங்கை மற்றும் இந்தியாவில் ஒரு புதிய பகுத்தறிவு இயக்கத்தை ஆரம்பித்த இவரது கதையில் உருவான தமிழ்ப் படம் “மறுபிறவி”. இதில் மனோதத்துவ டாக்டராக வரும் இவருடன், முத்துராமன், மஞ்சுளா ஆகியோர் நடித்த இந்தப் படத்தை, அந்தக் கால கட்டத்து இளைஞர்கள் அதில் வரும் ஆபாசக் காட்சிகளுக்காகத்தான் பார்த்தனர் என்பது ஒரு நகை முரண்)
***
கடந்த காலங்களில், ஆன்மிகம் பெரீய்ய்ய வளர்ச்சியெல்லாம் அடைந்ததில்லை.
புத்தர், கபீர், ரமணர், வள்ளுவர், திருமூலர், ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாதேவி, ஆதி சங்கரர், அரவிந்தர், அன்னை, நாராயண குரு, சீரடி சாயிபாபா, விவேகானந்தர், பக்திக் காலகட்டத்தில் தோன்றிய சித்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சூஃபிகள்.. என்று எண்ணற்ற நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்துத் தத்துவவியலில், ஆன்மிகம் என்பது வாழ்வியலை நெறிப்படுத்தும் தத்துவார்த்த சிந்தனைகளாகக் கட்டமைந்தது. உலகநாடுகளில் இருந்தெல்லாம் இந்த சிந்தனைகளின் பால் ஈர்க்கப்பட்டு சீடர்களாக மாறிய அற்புதங்கள் நடந்தேறின. இந்த சிந்தனைக் கருத்துக்களை தங்களது நாடுகளில் அந்தந்த நாட்டினரே பரப்பினார். விவேகானந்தரின் உலகநாடுகளின் பயணச் சொற்பொழிவு, “இந்தியா என்பது மனித வாழ்வியலை நெறிப்படுத்தும் தத்துவச் சிந்தனைகள் கொண்டது..” என்ற பிம்பத்தை மேலை நாடுகளில் உருவாக்கியது. இதன் தாக்கத்தில், ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளும், அவரது உருவ அமைப்பின் ஆகிருதியும் நோபல் பரிசு வரை தள்ளின. ஐரிஷ் கவிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான டபிள்யூ. பி. யீட்ஸ்க்கு தாகூரின் கவிதைகளில் இருந்த ஆன்மிக தரிசனங்கள் வெகுவாகக் கவர்ந்தன. அவர், தன் இளமையிலிருந்தே, புராணக்கதைகள், வாழ்க்கையின் சுழற்சிக் கோட்பாடுகள், தத்துவத் தேட்டங்கள் போன்ற கலைக் கூறுகளில் ஆர்வம் காட்டி வந்தவராதலால், தாகூரின் கவிதைகளை நோபல் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்தார்.
இத்தனை விஷயங்கள் இருக்கிறது தலைவா! சும்மா எடுத்தோம், கவிழ்த்தோம் என்பதெல்லாம் இனி வேலைக்காகாது. பின் நவீனத்துவக் கோட்பாட்டாளர்களான டெல்யூஸ் – கத்தாரி யின் உலகப்புகழ் பெற்ற கோட்பாடான Rhizome (வேர்த் தண்டு) ல் சொல்வது போல, ஒன்றைத் தொட்டால் அதன் வேர்கள் எங்கெங்கோ கற்பனைக்கெட்டாத வடிவத்தில் பின்னிப் பிணைந்திருக்கும்.
இந்த இடத்திலிருந்து ஒரே தாவாகத் தாவி, இந்திய தத்துவவியலின் மறுமலர்ச்சியாளர் ஜே கிருஷ்ணமூர்த்தியிடம் வந்து விடுவோம்: அவர் ஒரு மிகப்பெரிய தத்துவ ஞானி என்பதை உணர்ந்தவர் அன்னிபெசன்ட் அம்மையார்.
நம் நாடு சுதந்திரம் அடைவதற்குமுன்பே, இங்கிருந்த பிரிட்டிஷ் ஆட்சியில், 1895 லேயே அடையார் தியாசபிகல் சொஸைட்டி தொடங்கப்பட்டது. பிளாவட்ஸ்கி அம்மையாரால் துவக்கப்பட்ட அந்த சொசைட்டியை அன்னிபெசன்ட் அம்மையார் கவனித்து வந்தார். அப்பொழுது அடிக்கடி அவரது கண்களில் பட்டுக் கொண்டிருந்தனர் இரு சிறுவர்கள். அன்னி பெசன்டுக்கு அவர்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் ஏதோ ஒரு இனம் காணாத ஈர்ப்பு ஏற்பட்டது. அந்தச் சிறுவர்களின் பெற்றோரிடம் அனுமதி கேட்டு அவர்களை அன்னிபெசன்ட் தத்தெடுத்து வளர்த்தார். மூத்தவனை விடவும் இளைய ஜே கிருஷ்ணமூர்த்தியின் துறுதுறுப்பு அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
அவருக்கு சிறுவயதிலிருந்தே தத்துவக் கல்வி கற்பிக்கப்பட்டது. அதை மிகவும் லாவகமாக உள்வாங்கி, ஒரு தேர்ந்த தத்துவவாதியின் பார்வையுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தார் ஜே கே.
இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்: 1980 களில் நம் தமிழ்ச் சூழலில் முற்போக்குகள் அல்லது கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் கேள்வி: கலைஞன் பிறக்கிறானா, உருவாக்கப்படுகிறானா? என்பதுதான். இந்தக் கேள்வியை முன்வைத்த வாதப்பிரதிவாதங்கள் மண்டை பிளக்கும் விவாதங்களாக நடந்து கொண்டிருந்தன. சீரிய இலக்கியவாதிகள், “கலைஞன் பிறக்கிறான்” என்று வாதிட்டார்கள். கம்யூனிஸ்ட்டு இலக்கியவாதிகள், “கலைஞன் உருவாக்கப்படுகிறான்” என்று கூச்சலிட்டார்கள். நான் இரண்டையும் மறுத்தேன். அப்பொழுது ரஷ்ய இலக்கியம், தமிழ்ச் சூழலில் ஒரு அலையைப்போல சுழன்று கொண்டிருந்த காலம்.
நான் சொன்னேன்: “கலைஞன் பிறப்பதுமில்லை, உருவாக்கப் படுவதும் இல்லை.. அதாவது வெறுமனே கலைஞனாக பிறந்து விட்டால் மட்டுமே அவன் கலைஞனாகி விட முடியாது, அதேபோல, வெறுமனே எந்தவிதமான கலைச் சிந்தனையுமில்லாத ஒருவனால், உலகின் மிகச் சிறந்த கலை இலக்கியங்களை போதித்து விட்டால் மட்டுமே அவன் கலைஞனாகி விட முடியாது. மாறாக, கலைஞனின் ஆற்றலும், சிந்தனையும் பிறப்பிலேயே கொண்ட ஒருவரை, கலை சார்ந்த அனைத்து விஷயங்களையம் முழுமையாகக் கற்பிக்கும்போது, அவன் பூரணத்துவம் கொண்ட கலைஞனாக பரிணமிக்கிறான்..” என்றேன். இந்த இரண்டு வரிகளை பல்வேறு உதாரணங்கள் மூலமும், நான் படித்த நூல்களின் சாராம்சம் மூலமும் நாள் முழுக்க விவாதித்தேன்.
(இறுதியில் அவர்கள் நான் சொன்னதை ஏற்கவில்லை என்பது கிளைமாக்ஸ் காட்சி)
சரி, நம் விஷயத்திற்கு வருவோம். இந்தியத் தத்துவ இயலில் காலூன்றி, உலகின் அனைத்து தத்துவங்களும் ஜே கே வுக்கு போதிக்கப்பட்டது. அந்தச் சிறு வயதிலேயே ஒரு மாபெரும் தத்துவ ஞானிக்கேயுரிய அவதானிப்போடு எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டார் ஜே கே. தான் உள்வாங்கிய தத்துவத்தேட்டங்களை பகுப்பாய்வு செய்து, இந்தியத் தத்துவயியலின் அற்புதத்தோடு அதை வெளிப்படுத்தினார். உலகம் முழுக்க தன் தத்துவ சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அறிந்ததினின்றும் விடுதலை என்ற கண்ணோட்டத்தில், “நீங்கள் அறிந்த எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு பச் என்று துடைக்கப் பட்ட சிலேட்டுப் பலகையோடு வாருங்கள். நாம் அதில் புதியதொரு சொல்லை எழுதுவோம்” என்று சொன்னார். அவருக்கான சீடர்கள் உலகம் முழுக்கத் தோன்றினார்கள்.
இங்கு ஒரு சுவாரஷ்யமான விஷயத்தை சொல்லியாக வேண்டும்:
1990 என்று நினைக்கிறேன்: அடையார் ஜேகே பவுண்டேஷனில் நடந்த அவரது சொற்பொழிவுக்காக நானும் கவிஞர் பிரமிளும் போயிருந்தோம்.
ஜே.கிருஷ்ணமூர்த்தி பேசிக் கொண்டிருக்கிறார். கூட்டத்தினர் அவரைச் சுற்றிலும் கூடி, ஒளிரும் பேச்சை தங்கள் மேல் ததும்ப விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஜே.கே பேசுவதை நிறுத்திவிட்டு தனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் என்னை நோக்கி, “தன்னை ஏன் அவ்வாறு உறுத்து நோக்குகிறீர்கள்..?” எனக் கேட்கிறார். எனக்கு பெரும் திகைப்பாக இருந்தது. என்னசொல்வதென்று புரியாமல், “நான் அப்படி ஒன்றும் பார்க்கவில்லை சாதாரணமாக எப்போதும் போலத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..” என்று சொன்னேன். ஜே.கே மறுபடியும் சொற்பொழிவைத் தொடங்குகிறார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்த ஜேகே, சட்டென்று நிறுத்திவிட்டு, “இல்லை உங்கள் பார்வை டிஸ்டர்ப் செய்கிறது.. உங்கள் கண்கள் அசாதாரணமாக இருக்கின்றன..” என்கிறார். இப்பொழுது கூட்டத்தினர் அனைவரும் என்னை உறுத்துப் பார்க்கின்றனர். எனக்கு மிகுந்த சங்கடமாய் போய்விட்டது. பதிலொன்றும் பேசத் தோன்றாமல் கலவரமாய்ப் பார்த்தேன். “ஒன்று செய்யுங்கள் நீங்கள் எழுந்து என் இடது பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்..” என்று சொல்கிறார் ஜே.கே. நான் உடனே வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து, இடது பக்கம் போய் உட்கார்ந்து கொண்டேன்.
சொற்பொழிவு முடிந்ததும், தேநீர்ப் பகுதிக்குப் போய் நானும் பிரமிளும் தேநீர் அருந்தினோம். அங்கு நின்றிருந்த ஒரிருவர், என்னை பார்த்துப் புன்முறுவல் செய்தார்கள். பிரமிள் சொன்னார்: “அவர் ஏன் உங்களை இடது பக்கம் வந்து உட்காரச் சொன்னார் தெரியுமா? இடது என்பது ஆன்மிகத்திற்கான ஹ்ருதயக் கமலம்..” என்றார். நான் பிரமித்துப் போய்விட்டேன்.
இடது கைப் பாதை (LHP) மற்றும் வலது கைப் பாதை (RHP)என்ற சொற்களின் மேற்கத்தியப் பயன்பாடு, மேடம் பிளாவட்ஸ்கியால் உருவானது என்பதைப் பின்னாளில் படித்துத் தெரிந்து கொண்டேன்.
ஜே கே. அதுவரை பூடகமாக இருந்த இந்திய வாழ்வின் தத்துவவியலை, ஒருகவிதையாக, வாழ்வுக்கலையாக, மறுமலர்ச்சியுறச் செய்தார். மேலை நாட்டினர் அலையலையாக வந்தனர். ஜே கே வுக்கு பல்வேறு நாடுகளில் ஆசிரமங்கள் அமைந்தன. இந்த நிகழ்வுகளை மிக உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தவர், ஓஷோ என்கிற ரஜனீஷ்!
***
ரஜனீஷைப் பொறுத்தவரை பெரிய தத்துவத் தேட்டங்களையெல்லாம் முன்வைப்பதோ, பேசுவதோ கிடையாது. ஏற்கனவே, இருந்த அவரது முன்னோடிகளின் தத்துவங்களை எடுத்து வெகுஜன மக்களின் பாஷையில், ஒரு தேர்ந்த கவித்துவமான உரைநடையில் சொற்பொழிவுகளை வழங்கத் தொடங்கினார். அநேகமாக அந்தச் சொற்பொழிவுகள், அநேகமாக அதில் கலந்து கொண்ட மக்களின் கேள்விகளாகவும், அவர்களுக்குப் பதில் சொல்வதாகவும் அமைந்திருக்கும். மக்களுக்கு இந்தக் கேள்வி – பதில் பாணி மிக மிகப் பிடித்துப் போனது. தாங்களே இதில் பங்கு பெறுவது போல அனைவரும் வாய்பிளந்து குதூகலித்துக் கொண்டாடினார்கள்.
அதுமட்டுமல்லாது, அதுவரை இருந்த ஞானிகள் அனைவரும், பணம், பொருள் சேமிப்பது மிகவும் பாவகரமானது என்றும், வாழ்வில் நிம்மதியைத் தேடுதலே உச்சபட்ச ஞானம் என்றும் பேசியிருந்தபோது, ஓஷோவின் கேள்வி பதிலைக் கவனியுங்கள்:
கேள்வி : பகவான், நான் ஏன் எப்போதும் பணம் பணம் என்று செல்வத்தையே தேடிக்கொண்டிருக்கிறேன். இதிலிருந்து நான் எப்படி விடுபடுவது?
பதில் : நரேந்திரா.. பணம் தேடுவது தவறு என்று யார் சொன்னது? பணம் மட்டும்தான் யதார்த்தமானது. உன்னிடம் பணமிருந்தால், ஒரு நல்ல வீட்டைக் கட்டமுடியும். நல்ல அழகான, பெண்ணை மணம் செய்து கொள்ள முடியும்.. இருப்பதிலேயே சிறந்த மாடல் Ferrari காரை வாங்க முடியும், உலகின் சிறந்த ஆடைகள், கைக்கடிகாரங்கள், காலணிகள்… உன் வாழ்வை உனக்குப் பிடித்த மாதிரி வாழமுடியும், வடிவமைக்க முடியும். எனவே பணம் தேடுதல் என்பது சிறந்த காரியம்.
யு எஸ், யு கே, கனடா, நார்வே, ஜப்பான், ஆஸ்திரேலியா.. என பிரபஞ்சத்திலிருந்த அனைத்து நாட்டு மக்களும் வாயைப் பிளந்து விட்டார்கள், இந்தப் பதிலைக் கேட்டு. இதற்கு முன்புவரை இருந்த ஞானிகள், ஞான மார்க்கத்தை அடைவதற்கு, பொன்னையும் பொருளையும், செல்வத்தையும் தூக்கியெறிந்துவிட்டு, ஒரு பிச்சைக் காரனைப் போல இருக்கவேண்டும் என்று சொல்லிச் சொல்லி,ஹை கிளாஸ், மிடில் கிளாஸ் மக்களை குற்ற உணர்ச்சி ஏற்படுத்தி வைத்திருந்த போது, வாராது வந்த மாமணியாய் தோன்றிய ஓஷோ உலக மக்களுக்கு மகத்தான ஞானியாகக் காட்சியளித்தார்.
அதுமட்டுமல்லாது, பெரும் பாவமாகக் கட்டமைக்கப்பட்டிருந்த பாலியல் உறவுகளை அற்புதமான ஞான மார்க்கம் என்று விதந்தோதி, கட்டற்ற பாலியல் கருத்துக்கள், “தந்த்ரா” என்கிற பெயரில் ஒரு ஞானக் கோட்பாடாக வடிவமைத்து, தன் சீடர்களிடம் ஒப்படைத்தார். பிரபஞ்சமே ஒருகணம் விக்கித்துப் போய் விட்டது. உலகநாடுகளிலிருந்தெல்லாம் இவரது ஆசிரமத்திற்கு ஓடிவந்தார்கள் கன தனவான்கள். பாலிவுட் திரைத்துறையில் உச்ச பட்ச சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கிய வினோத் கன்னா, ஓஷோவின் ஆசிரமத்தில் சமையல்காரர் ஆனார். இந்தியாவே அதிர்ந்துவிட்டது.
அவர் எழுதிய நூல்களின் தலைப்பை கவனியுங்கள்: “காமத்திலிருந்து கடவுளுக்கு”, “தந்த்ரா முழுமையான ஞானம்”, “ஓம் சாந்தி சாந்தி சாந்தி”… இவ்வாறாக 1000 க்கும் மேற்பட்ட நூல்கள் ஓஷோவின் பெயரில் வெளிவந்து, கடலை பொரி போல விற்றன, லத்தீன் அமெரிக்கப் பழங்குடி மக்களின் மொழி உட்பட, உலகின் அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. (ஞானத்தேடலைத் தேடுபவர்கள், சுவாரஷ்யத்திற்காக வாசிப்பவர்கள், கையில் வைத்துக் கொண்டு பந்தா காட்டுபவர்கள், சக நண்பிக்கு நூல் விடுபவர்கள்.. எனப் பல்வேறு வகைப்பட்ட ஆட்கள் புத்தகங்களை வாங்கி குவித்தார்கள்.)
உலகநாடுகள், சிறு நாடுகள், பெரும் வல்லரசு நாடுகள், உலக வரை படங்களில் இடம்பெறாத தீவு நாடுகள், கம்யூனிச நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள்.. என்று பிரபஞ்சம் முழுக்க அவருக்கு சீடர்கள் உருவானார்கள், ஆசிரமங்கள் அமைத்தார்கள், நன்கொடைகள் அள்ளித் தந்தார்கள்.. (20 வருடங்களுக்கு முன்பு, எங்களூர் வரப்பட்டிக்காட்டிலிருந்து, ஒரு நண்பர் ஓஷோ ஆசிரமத்தில் சேர, பூனே ஆஸ்ரமத்திற்கே போய் அங்கு சேர்வதற்குத் தேர்வாகாமல் திரும்பி வந்துவிட்டார் என்பது எங்களூர் வரலாற்றுச் செய்தி.)
உலகம் முழுக்க ஆயிரம் ஆசிரமங்கள், பல்லாயிரம் கோடி மதிப்பில் சொத்துக்கள், 14 விமானங்கள், 36 விலைமதிப்பு மிக்க கார்கள்.. என்று சொல்லிக்கொண்டே போகலாம்! அந்தக்கால இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி இவருக்கு ஒரு எதிர்ப்பு – சிறப்பிதழே வெளியிட்டது.
ஆக, ஓஷோதான் உலகளவில், ஆன்மிகத்தை கார்ப்பரேட் ஆக்கியவர். என் பார்வையில், அவர் ஆன்மிக ஞானியெல்லாம் இல்லை, அபாரமான பேச்சுத் திறமை மிகுந்த விரிவுரையாளர். தன் முன்னோடி ஞானிகள் அத்தனை பேரின் கருத்துக்களையும் படித்து, அந்த சாராம்சங்களை, மக்களுக்கு எந்த விதத்தில் கொடுக்க்ஸ் முடியுமோ, அந்த விதத்தில் கொடுத்த வெற்றிகரமான சொற்பொழிவாளர். அசாத்தியமான ஞாபக சக்தி கொண்டவர். 50 க்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுத் தேர்ந்தவர். ஆற்றொழுக்கு கொண்ட ஆங்கிலக் கவிதை நடையில், மிகப் பெரிய வசீகர ஆற்றல் கொண்ட வெகுஜனப் பேச்சாளர். அவ்வளவு சுவாரஷ்யமாகவும், கொஞ்சம் கூட போரடிக்காமல், படு ஜாலியாகவும், பேச்சின் நடுவே, பல்வேறு ஞானக்கதைகளை, குட்டிக் கதைகளை எடுத்துச் சொல்லி தன் சீடர்களை எளிதில் ஈர்த்துவிடும் (அடிமையாக்கும்) வல்லமை கொண்டவர்.
அந்த ஞானக்கதைகளிலும், குட்டிக் கதைகளிலும் கிளுகிளுப்பூட்டும் பாலியலை தூவிக் கிளறிவிட்டு அருமையான பதார்த்தங்களை சமைப்பதில் கை தேர்ந்தவர்.
உதாரணத்திற்கு ஒரு கதை: 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த இந்தியாவின் உஜ்ஜைனி நாட்டு மன்னரான பர்த்ரு ஹரி, இந்திய முனிவர்களின் வழியைப் பின்பற்ற முடிவு செய்தார், ஞானவாழ்வின் உயர்ந்த அர்த்தத்தைக் கண்டறிய சிற்றின்ப வாழ்க்கையைத் துறந்து, துறவு வாழ்க்கையில் தன்னை ஒப்புவித்துக்கொண்ட மஹா ஞானி என்று கருதப்படுபவர். சீனப் பயணி யி ஜிங் (635-713 CE), தனது பயணக் குறிப்புகளில் பர்த்ருஹரியை ஒரு பௌத்தர் என்றும், ஞான மார்க்கத்தில் பலநூல்களை எழுதியவர் என்றும், பதஞ்சலியின் மஹாபாஷ்யத்திற்கு விளக்கவுரை எழுதியதாகவும் குறிப்பிடுகிறார்.
இப்பொழுது, நாம் ஓஷோ Version க்கு வருவோம்:
உஜ்ஜைனி நாட்டு மன்னரான பர்த்ரு ஹரி வெளியே நகர்வலம் போய்விட்டு அரண்மனை திரும்பும்போது, அவரது ராணி, தனது குதிரை லாயத்தைப் பராமரிப்பவரோடு படுக்கையில் இருப்பதைப் பார்க்கிறார். அக்கணமே, ஹரிக்கு வாழ்வு வெறுமையாகி விடுகிறது. உடனே, தன் உடைகளைக் களைந்து, காவி கட்டிக் கொண்டு சந்யாசியாக மாறி அரண்மனையிலிருந்து வெளியேறுகிறார். அப்பொழுது, ராணி சொல்கிறார்: “எனக்குப் பெருமைதான்.. ஒரு மிகப்பெரிய ஞானியை உருவாக்கியிருக்கிறேன்.. என்பதில்..” என்கிறார்.
உடனே ஹரி சொல்கிறார்: “அப்படியா? சரி, அந்தக் குதிரைக்காரனை எப்பொழுது ஞானியாக்கப் போகிறாய்?”
இப்படியான ஞானபூர்வமான கிளுகிளுப்புக் கதைகளை, தன் சொற்பொழிவுகளில், நூல்களில், இன்றைக்கு பாட்காஸ்ட் என்று அவதாரம் எடுத்திருக்கும் ஆடியோக்களில் அள்ளிவிட்டுக் கொண்டே இருப்பார்.
“ஒரு நாட்டின் ராணி, தன் பதியிடம் இறுதியாகப் பேசும் பேச்சில் அவ்வாறெல்லாம் பேசியிருக்க மாட்டார் என்றோ, மாபெரும் ஞானியான பர்த்ரு ஹரி, அப்படியான மட்ட ரகமான சிந்தனையை கைக்கொண்டு அவ்வாறெல்லாம் கேட்டிருக்க மாட்டார்..” என்றெல்லாம் எந்தச் சீடரும் யோசிக்க மாட்டார்கள்.
இந்த ஓஷோ Version – ல் வெளிப்படுவது, ஓஷோவின் sexual perversion!
புரட்சிகரமான சிந்தனைகளில் இருப்போருக்கும் கதைகள் உண்டு:
ஜவஹர்லால் நேரு பிரதமரானவுடன், டெல்லியின் விளிம்புப் பகுதிக்குச் செல்கிறார். பிரதமர் வருகையை ஒட்டி, அவரது கார் வரும் இரு புறங்களிலும் பாதையோர வாசிகள், விளிம்புநிலை மக்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இரு புறங்களையும் அலங்காரத் துணிகள் கொண்டு முழுமையாக மூடிக் கட்டி விடுகிறார்கள் காங்கிரஸ் அரசியல்வாதிகள். இருபுறமும் மக்கள் குழுமியிருக்கின்றனர். அந்தக் கூட்டத்தினூடே இளம் ஓஷோவும் நின்றிருக்கிறார். நேருவின் கார் வருகிறது. அவர் அருகில் வந்த உடனே, சட்டென கூட்டத்திலிருந்து பாதையில் குதித்து நேருவின் காரை வழிமறிக்கிறார் ஓஷோ. பாதுகாவலர்கள் பாய்ந்து வந்து ஓஷோவைச் சூழ, நேரு காரிலிருந்து இறங்குகிறார். “மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்..” என்று கத்தியபடி, பாதுகாப்பை மீறி நேருவிடம் செல்கிறார் ஓஷோ. “நீங்கள் பார்ப்பது இந்தியாவின் முகம் அல்ல. இது ஒப்பனை முகம். இருபக்கமும் பார்க்கும் இந்த அலங்காரத் துணிகளை விலக்கிப் பாருங்கள்.. நிஜமான இந்தியாவின் முகம் தெரியும்..” என்கிறார். நேரு அந்தத் துணிகளை விலக்கச் சொல்கிறார். பாதையோர வாசிகளும், விளிம்பு நிலை மக்களும் ஒட்டிய வயிறும் குழிந்த கண்களுமாக வறுமையில் வதங்கிப் போய்க்கிடக்கும் காட்சி அவரது கண்களில் படுகிறது.
கோபமடைந்த நேரு, தனது காரியதரிசிகளுக்கு ஆணையிடுகிறார். பிறகு ஓஷோவுக்கு நன்றி சொல்ல தேடுகிறார். ஓஷோ அங்கு இல்லை. அவரது பணி முடிந்தது. ஒரு ஞானத் தேடல் கொண்ட மனிதனுக்கு, தன் அன்றாடப்பணி முடிந்தபின், அங்கு என்ன வேலை?
இவரது கடைசி காலங்களில் இவரைக் கண்டு பயந்து உலக நாடுகள் அனைத்தும் தன் நாட்டிற்குள் வராமல் தடை விதித்தன. அந்தத் தடை விதித்ததைக்கூட சுவாரஷ்யமாக, ஒரு ஹாலிவுட் படத்தின் கதையோட்டம்போலச் சொல்லியிருப்பார் ஓஷோ. அதாவது, அவர் தனது கடைசி காலத்தைக் கழிக்க, தனது ஒரு வெளிநாட்டு ஆஸ்ரமத்திற்குப் போக, தனது தனி விமானத்தில் புறப்படுகிறார். ஆனால், அந்த நாடு, விமானம் இறங்குவதற்கு அனுமதியளிக்கவில்லை. அங்கிருந்து வேறு ஒரு நாட்டுக்குப் போகிறார். அங்கும் அதே கதை தான். இப்படியாக 36 நாடுகள் அனுமதிக்கவில்லை. விமானத்தின் எரிபொருள் குறைந்து கொண்டே இருக்கிறது. மூன்று நாட்களாக அன்ன ஆகாரம் இல்லை. விமானிகளுக்கு ஓய்வு இல்லை. இறுதியாக ஒரு சிறு நாடு அனுமதித்தது. விமானத்திற்குப் பெட்ரோல் போட்டுக் கொள்ளலாம், ஓஷோவும் விமானிகளும் விமான நிலைய அறை ஒன்றில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி, வெளியே எங்கும் போகக்கூடாது. 24 மணிநேரம் முடிந்ததும் கிளம்பி விடவேண்டும்.. என்ற கட்டுப்பாடுகளுடன்.
நான் இதை என் பால்ய பருவத்தில் படித்தபோது எனக்குள் உண்டான பேருணர்வுகளை சொல்லில் அடக்கமுடியாது.
“தனது ஞானப் புரட்சியால், தங்களது ஆட்சியே பறிபோய்விடும் என்று அஞ்சுகின்றன” என்ற ஓஷோ, தான் அவதரித்த பூமியிலேயே முக்தி மோட்சம் அடைந்தார்.
***
இவரது வளர்ச்சியைக் கண்ணுற்ற பிறகுதான் இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் ஏராளமான கார்ப்பரேட் ஞானிகள் உருவானார்கள்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ், மகரிஷி மகேஷ் யோகி, அமிர்தானந்தா மயி, பிரேமானந்தா, நித்யானந்தா, யோகிராம்சுரத் குமார்..
இந்த வரிசையில் மிகப்பெரியளவில் ஜெயித்தவர் (நான் இங்கு வெற்றி என்று குறிப்பிடுவது லௌகீக வெற்றியை) நித்யானந்தா! அவர் தனக்கென “கைலாஸா” என்ற ஒரு நாட்டையே உருவாக்கி, சீடர்களோடும், சீடிகளோடும் ஞான பரிபாலனம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை ஒரு தமிழனாக பெருமை கொள்ளலாம்.. என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள். நான் மறுத்துப் பேசினால், “நான் தமிழன் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்” என்ற கோட்பாட்டில், நானும் தலையை ஆட்டிக்கொண்டேன்.
***
இப்பொழுது நம் மஹாவிஷ்ணு விவகாரத்திற்கு வருவோம்:
நான் இவரது காணொளிகள் எல்லாவற்றையும் கண்ணுற்றேன். இவருக்கு சில பல உலக நாடுகளில், அவரது உருவாக்கமான பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகங்கள் இருக்கின்றன. தனியாக விமானம் இருக்கிறதா என்று தெரியவில்லை. மிக மிக மேலோட்டமான ஆதி அரிச்சுவடி பாடத்தைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார். இவர் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது ஒரு கடலளவு இருக்கிறது. ஆனால், அதற்குள், இவர் பேசுவது, இவரது உடல்மொழி யின் வெளிப்பாடு மிகவும் அலட்சியமாக இருக்கிறது. சங்கர் என்கிற இது சம்பந்தப்பட்ட ஆசிரியருடனான உரையாடலில் ஒரு ஞான மார்க்கத்துக்கேயுரிய அமைதியோ, பணிவோ வெளிப்படவே இல்லை. இவரது பெயருக்கேயுரிய பதத்தில் செயல்படும் இந்த ஞானத் தம்பி, சற்று ஆசுவாசப்படவேண்டும்.
அதுமட்டுமல்லாது, அவரைப் பற்றி சமூக ஊடகங்களில் வெளி வரும் சிறு சிறு துண்டுக் காணொளிகள், மிக மோசமாக அல்லது தவறான பாதையாக இருக்கின்றன. சாட்டை என்னும் யூ டியூப் தளத்தில், “காமமே கடவுளை அடையும் சிறந்த வழி” என்ற தலைப்பில் அவரது நேர்காணல் இருக்கிறது (https://www.youtube.com/watch?v=7zZVb4vkkZw)
நான் இதை முழுமையாகப் பார்த்தேன். ஓஷோ, தந்த்ரா என்ற கோட்பாட்டை முன்வைத்து மிகவும் அழகியலாகச் சொன்ன விஷயத்தை, மலினமாக இரண்டாந்தர மூன்றாந்தர சொற்களில் சொல்கிறார். இதற்கு இவர் திருமூலரிடமிருந்து, “பரியாங்க யோகம்” என்கிற கருத்தியலை முன்வைக்கிறார். அது மட்டுமல்லாது, SEX என்ற பதத்திற்கு அவர் சொந்தமாக ஒரு கருத்துக் கோவையை உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்! “(S) Satisfying (E) Enlightning (X) Xtreme” இது மிகவும் ஆரம்பப்பள்ளி மாணவனின் பெருமையடிப்பாக இருக்கிறது.
சமூகத்தின் வெகுஜன மனநிலை சார்ந்த மனித மனங்களில், தீராத ஏக்கம் கொண்டு பெரும் துயரமாகச் சுருண்டிருக்கும் விஷயம், பாலியலின்போது வெகுநேரம் தாக்குப் பிடிப்பது. இந்த கான்செப்டை வைத்து பல்வேறு வேடங்கள் தரித்துக்கொண்டு, உலகம் முழுக்க பணம் கொழிக்கிறார்கள் லேகிய வியாபாரிகள்.
பலவருடங்களுக்கு முன்பு படித்த சுஜாதாவின் கதை ஒன்று ஞாபகம் வருகிறது. கதைக்கும் இதற்கும் சம்பந்தப்படாத ஒரு காட்சியை, கதையை நடத்தும் வர்ணனையாக, சென்னை நகரத்தின் நெரிசல் மிகுந்த காட்சியின் உள்ளடக்கமாக நான்கைந்து வரிகளில் எழுதியிருப்பார்: அதாவது, நாயகன் வெளியூர் பயணத்தின் பொருட்டு, ரயில் நிலையத்திற்குப் போகும்போது, வெளியே ஒரு மக்கள் திரள் குழுமியிருக்கும். எட்டிப் பார்த்தால், “தாக்குப் பிடிக்கும் லேகியம்” விற்கும் ஒரு விற்பனையாளர், பெருங்குரலில் பேசிக் கொண்டிருப்பார் : எதிரில் இருக்கும் மின்சாரக் கம்பத்தைக் காட்டி, “இவ்வளவு விறைப்பாக இருக்கும்” என்று பேசுவார்.மக்கள் அந்தக் கம்பத்தை மனக்கிலேசத்துடன் பார்ப்பார்கள்.
சரி. இதெல்லாம் இப்பொழுது பிரச்சினை இல்லை. ஒரு மாற்றுத் திறனாளியின் மீதான அவரது தத்துவக் கருத்துதான் இப்பொழுது வழக்காகியிருக்கிறது.
அவர் மீதான வழக்கு விசாரணையில் இருப்பதால், அவர் குறித்து எதுவும் சொல்வதற்கில்லை.
அவர், வழக்கிலிருந்து விரைந்து மீள்வாரா என்பதை, நம் வெகுஜன அரசியல் சார்ந்த தமிழ்ச் சூழலில், மூடநம்பிக்கைகளுக்கெதிரான கோட்பாடுகளுடன் இயங்கும் அரசும், நீதிமன்றமும்தான் தீர்மானிக்கும்.
***
குறிப்புகள்:
இந்தக் கட்டுரையின் தலைப்பு, திருமூலருடைய திருமந்திரத்தில் வரும் 131 வது பகுதி.
ஆணிப்பொன் மன்றத்தில் நடக்கும் நடனத்தில், உடுக்கை பொருந்திய வலக்கையை (RHP) நளினமாக நெளித்து, அக்னி ஏந்திய இடக்கையை (LHP) உயர்த்திச் சுழற்றி ஆணிப்பொன் மன்றத்தை அண்ட சராசரமாகச் சுழற்றியாடும் நடராஜர், ஆணவத்தின் வடிவமான முயலகனை மிதித்த திருவடியில் பிரபஞ்சத்தையே பேரானந்தத்தின் திருக்கூத்தாக மாற்றுகிறார்.. என்பது இதன் தெளிவுரை.

அபாரமான செறிவான கட்டுரை.