- வசீகரன்
சூத்திர சீர்திருத்த சபை.
உன்னதம் இதழில் தொடர்ச்சியாக சில அபூர்வ ஆவணங்களை வெளியிட்டேன். 1887 -ல் சூத்திர சீர்திருத்த சபை வெளியிட்டிருந்த இந்த ஆவணம் மிக முக்கியமானது.
16 பக்கங்கள் கொண்ட இக்குறுநூல் தோழர் வசீகரன் நடத்தும் சென்னையிலுள்ள “லிபி” விளிம்புநிலை ஆய்வாதார மையத்தில் உள்ளது. (இவரது தற்போதைய முகவரியும் தொடர்பு எண்ணும் தெரியவில்லை.)
வசீகரன் எழுதிய இந்த அறிமுகக் கட்டுரையும் நூலும் உன்னதம் பிப்ரவரி 2009 இதழில் வெளியாகியுள்ளது.
– (தமிழி ஆசிரியர்)
***
சூத்திர சீர்திருத்த சபை
– வசீகரன்
திராவிட இயக்கங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய “சூத்திர சீர்திருத்த சபை” என்னும் ஒரு நிகழ்வு வரலாற்றில் ஏனோ இடம் பெறாமல் போய்விட்டது. பிராமணர்களின் உயரிய அந்தஸ்தும் கல்வி பொருள் வளங்களும் அவர்களின் நாகரீகத்தால் வந்தது என்று பிராமணர் அல்லாத சூத்திரர்கள் நினைத்தனர். எனவே சூத்திரர்களை குறிப்பாக பெண்களை நாகரீகப்படுத்த இச்சபை 1887-ல் கபிஸ்தலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஊரில் ஆசிரியராக பணியாற்றிய வி. தியாகராஜ பிள்ளை இதன் செயலாளர். இந்தச் சபை பற்றி அறிவதற்குள்ள ஒரே ஆதாரம் “சூத்திர சீர்திருத்தம்” என்னும் குறுநூல் ஒன்றுதான். 1887-ல் சென்னை மெமொரியல் அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்ட இந்நூலை வெளியிட்டவர்கள் சூத்திர சீர்திருத்த சபையினர். இந்தச் சபைக்கு ஒவ்வொரு ஊரிலும் கிளைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு கிளை உறுப்பினர்களுக்கும் ஒவ்வோர் ஆண்டும் எத்தனை சூத்திர மக்களை நாகரீகப்படுத்தினார்கள் என்பது பற்றி எழுதி அனுப்ப வேண்டும் என்று வேண்டப்பட்டிருக்கிறது. இந்த நூலை எழுதியவர் சபையின் செயலாளராகிய வி. தியாகராஜ பிள்ளை. சூத்திரர்களுடைய ஆடை ஆபரணம் ஆசாரம் என்னும் இவைகளை சாஸ்திரப்படி நிறுத்தி நாகரீகம் செய்ய வேண்டியதற்காக சூத்திர சீர்திருத்த சபை ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
“காது வளர்த்திருப்பது” என்பது இன்று தமிழ்தொல் கலாச்சாரமாக கருதப்படுகிறது. இனால் 120 வருடங்களுக்கு முன்பு காதுவளர்த்தல் நாகரீகமற்றது என்று அதைத்தடுக்க தமிழ்நாட்டில் ஒரு இயக்கமே நடந்திருக்கிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். காது வளர்த்திருப்பது என்பதை தொள்ளைக்காது என்று குறிப்பிடுவார்கள். “தொள்” என்றால், “துளை” என்று பொருள். தொள்ளை என்றாலும் துளைதான். இந்தத் தொள்ளை என்னும் சொல்தான் பின்னாளில் துளை என்றாயிற்று. துளையிடப்பட்ட காது என்பதுதான் தொள்ளைக்காது. துளையிடப்பட்ட காது என்றவுடன் பாட்டிமார்கள் நினைவுக்கு வருவார்கள். பருத்திக்காட்டில் பாட்டி பருத்தி எடுக்கும்போது கள்ளப்பயல் பாட்டியின் காதை அறுத்துப் பாம்படத்தைப் பறித்துச் சென்ற கதைகள் கிராமங்களில் கூறப்படுவதுண்டு. கையகல பாம்படத்தைப் பாட்டிகள் இரண்டு தொள்ளைக் காதுகளிலும் போட்டுக் கொண்டு தலையை ஆட்டி ஆட்டிப் பேசும் அழகே தனி. ஆனால், இப்போது முழுமையாக தொள்ளைக்காது வழக்கம் தமிழ்நாட்டிலிருந்து அருகிக் கொண்டிருக்கிறது.
“காது வளர்க்க” சிறுவயதில் காதுமடலைக் கத்தியால் கீறி சிறு தக்கையொன்றை நுழைத்து விடுவார்கள். சில வருடங்களுக்குப் பிறகு அத்தக்கையை எடுத்துவிட்டு அதைவிட சற்றுப் பெரிய தக்கையை நுழைப்பார்கள். நாளாக நாளாக துளை பெரியதாகி விடும் அது முதற்கட்டம். பின்னர் துளையில் சின்ன இரும்பு வளையங்களை மாட்டி விடுவர். வளையங்களின் கனத்தைத் தாங்கமுடியாமல் காதுகள் கீழ்நோக்கி இறங்கும். இப்படியாக தொள்ளைக்காது ஏற்பட்டுவிடும்.
காதில் துளைபோடும் இந்த வழக்கம் பாரம்பரியமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றும் சில மலைசாதியினர் தொடர்ந்து இந்த வழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆப்பிரிக்க பழங்குடி மக்களில் சில பிரிவினர் பிரமாண்டமான வளையங்களை போட்டுக் கொண்டு திரிவதையும் பார்க்கலாம்.
தொன்மையான பண்பாட்டுக் கூறாக இருந்த தொள்ளைக்காது வழக்கம் இன்று காது குத்தும் சமயச் சடங்காக மாறிவிட்டது என்பதையும் உணரலாம்.
இந்த தொள்ளைக்காது வழக்கத்தில் பால்வேறுபாடு கிடையாது. பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் உரியதாக இருந்தது. ஆண்கள் அக்காலத்தில் பாட்டிகளைப் போல காது வளர்த்திருந்தனர் என்பதை நம் தொல்காலச் சிற்பங்களிலும் புத்தரின் சிற்பம் போன்றவற்றிலும் கண்ணுறலாம். மகரநெடுங்குழைக்காதர் என்றுகூட இறைவன் அழைக்கப்பட்டிருக்கிறான். தஞ்சை கோயிலில் உள்ள சோழர்கால ஓவியங்களில் இராசராசனும் கருவூர்த் தேவரும் காணப்படுகின்றனர். அதில் இருவரும் தொள்ளைக் காதுகளை உடையவர்களாக உள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பம் வரை ஆண்கள் நீண்ட காது வளர்க்கும் வழக்கதைக் கொண்டிருந்தனர் என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. 19ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் வின்சுலோ தயாரித்த அகராதியில் தமிழ்நாட்டில் எந்தெந்தச் சாதி ஆண்கள் காது வளர்க்கும் வழக்கம் உடையவர் என்பதைப் பட்டியல் இடுகிறார். சென்னையில் குறிப்பிட்ட வகுப்பினர் தொள்ளைக் காதர் என்று அழைக்கப்பட்டனர். ஆண்களில் குடியிருப்புகூட தொள்ளைக்காதர் வீடுகள் என்றே அழைக்கப்பட்டனர். மானிடவியல் அறிஞர் எட்கர் தர்ஸ்டன் “Castes and Tribes of Southern India” எனும் நூலில் குறிப்பிடுகிறார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஊர்ஊராகச் சென்று பாத்திரங்கள் விற்கும் ஒரு சமூகத்தினர் தொள்ளைக்காதர்கள் என்றே அழைக்கப்பட்டு வந்தனர்.
தமிழ் மக்கள் அணிந்த காதணிகள்: தோடு, ஒட்டு, ஓலை, சின்னப்பூ, கன்னப்பூ, குலை, கம்பி, வள்ளிகை, குணுக்கு, தருப்பு, கடுக்கன், மகரி, வீரசன்னம், திரிசரி, பஞ்சசரி, நவசரி, நவகண்டி, அட்டிகை, கடிப்பிணை, தண்டட்டி, குண்டலம், கொப்பு, புகடி, முருகு, செவிப்பூ, மடல், சன்னா வதஞ்சம், பாம்பணி, நாகபடம், பாம்படம், குதம்பை, நீளக்குதம்பை, சந்திரபாணி, குரடு, செவியீடு…
தொள்ளைக்காது ஒழிப்பு இயக்கம் பற்றிய ஒரே ஆவணம் இது ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
***

மிக அருமை. நமக்குத் தெரிந்த பாம்படம் எனும் அணிகலனில் இத்தனை வகைகளா என்பதுடன் சூத்திர சீர்திருத்தச் சபை என்ற ஒரு இயக்கம் நாகரீகப்படுத்தவே ஏற்படுத்தப்பட்டது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த இயக்கமும் நம் மனதில் நவீன சிந்தனைகளை உருவாக்கி உள்ளது என்பது கண்கூடு.சிறப்பான கட்டுரை.
சூத்திர சீர்திருத்த சபை
தொள்ளைக்காது பற்றிய பதிவு
மூதாதையர்களை நினைவில் ஆழ்த்தும் சித்திரங்கள்
சூத்திர சீர்திருத்த சபை
தொள்ளைக்காது பற்றிய பதிவு
மூதாதையர்களை நினைவில் ஆழ்த்தும் சித்திரங்கள்