- தமிழாக்கம் : நன்மாறன் திருநாவுக்கரசு
அமெரிக்க எழுத்தாளரான கிஜ் ஜான்சன் (Kij Johnson : 1960 – ) விஞ்ஞானப் புனைகதை உலகில் பெரும் புகழ் பெற்றவர். வி பு உலகின் தலைசிறந்த ஹ்யூகோ, நெபுலா உட்பட பல விருதுகளை வென்றவர். அவரது படைப்புகள், நாவல்களாகவும், சிறுகதைத் தொகுப்புகளாகவும், கட்டுரைகளாகவும் 20 க்கும் மேற்பட்ட நூல்களாக வெளிவந்துள்ளன. தற்போது கன்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் படைப்பெழுத்துக்கான (Creative Writing) பேராசிரியராக உள்ளார். நாம் அவரது குறுநாவலான The Dream-Quest of Vellitt Boe குறித்து அவருடன் உரையாடினோம். அவரது இந்த நாவல் புகழ் பெற்ற விஞ்ஞானப் புனைகதை ஆளுமையான ஹெச்.பி.லவ்கிராஃப்டின் The Dream-Quest of Unknown Kadath என்னும் நாவல் மீதான ஒரு பெண்ணிய அணுகுமுறையை முன்வைத்து எழுதப்பட்ட நூல்.
விஞ்ஞான புனைவு பத்திரிகையான லைட் ஸ்பீட் பத்திரிகையின் ஆசிரியர் குழுவினரால் எடுக்கப்பட்ட இந்த நேர்காணல் ஜனவரி 2017 ல் அந்த இதழில் வெளிவந்தது.
***
உங்களுடைய புதிய நூல் The Dream-Quest of Vellitt Boe எதைப்பற்றியது?
அதை விளக்குவது அவ்வளவு சுலபம் கிடையாது. இதற்கு மெடா ஃபிக்சனில் பதில் சொல்ல வேண்டும் என்றால், இப்புத்தகம் ஹெச்.பி.லவ்கிராஃப்டின் சிறந்த படைப்புகளில் ஒன்றான The Dream-Quest of Unknown Kadath நூலின் மீதான விமர்சனம், பதிலுரை என்று சொல்லலாம். மற்றொரு பதில், குறிப்பிட்ட வயதுடைய பெண்ணின் தேடல் குறித்த கதை. விநோதமான, மிக விசித்திரமான உலகின் மத்தியில் நடைபெறும் அத்தேடல் பயணம் அவளை அசாதாரண காதாபாத்திரமாக்குகிறது.
லவ்கிராஃப்ட் – ன் கனவுச் சுழற்சிக் கதைகள் (The Dream Cycle) குறித்து அறிமுகம் இல்லாதவர்களுக்கு அதன் பின்னணி குறித்து சிறிது சொல்கிறீர்களா?
நிச்சயமாக. ஹெச்.பி.லவ்கிராஃப்ட் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார். எனக்குச் சரியான தேதி ஞாபகம் இல்லை. அவர் ‘The Dream Lands’ எனும் தொடர் கதைகளையும் எழுதியுள்ளார். அவை கனவுகள் வழியாக மட்டுமே நுழையக்கூடிய ஒரு பரந்த மாற்று பரிமாணமாகும் .அதன் சாரம் என்னவென்றால், ஒரு கனவு உலகம் இருக்கும். அந்த உலகத்திற்குள் சில நிபுணத்துவம் பெற்ற கனவாளர்களால் மட்டுமே நுழைய முடியும். அதுவும் ஆண்கள் மட்டும். அந்த உலகத்தை விசித்திரமான, அண்டவியல் பயங்கரங்கள் நிரம்பிய, அபரிமிதமான, அதிசக்தி வாய்ந்த கடவுள்கள் ஆட்சி செய்வர்.
The Dream land கதைகள், அழுத்தமான மற்றும் உயிரோட்டமுள்ள மனக்காட்சியை உண்டாக்குகிற (Vivid) கற்பனையைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சில குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் வருகின்றன. அதுபோன்ற அவரது அடிப்படை கதாபாத்திரங்களில் ஒன்றுதான் ரேண்டோல்ஃப் கார்ட்டர். அந்தக் கதாபாத்திரத்தைச் சுற்றித்தான் முழு கனவு-தேடல் சுழற்சியையுமே (Dream Quest cycle) அவர் வடிவமைத்துள்ளார். ரேண்டோல்ஃப் கார்ட்டரின் முதன்மை கதைதான் The Dream-Quest of Unknown Kadath. அதில் அவர் கனவு காணும்போது மாய நகர் ஒன்றைக் காண்கிறார். அவர் பாஸ்டனில் வாழ்பவர். மாய நகரத்திற்குச் செல்ல விரும்புகிறார். ஆனால் அவர் கனவு உலகத்திற்குள் நுழைந்து, நிபுணத்துவம் பெறும் போது, கடவுள்கள் அந்த நகரத்தைப் பார்க்க, அவரை அனுமதிக்க மறுக்கின்றனர். அதனால் அவர் கனவுலகம் முழுவதும் பயணித்து, தான் பார்த்த அந்த மாயநகரத்திற்குள் செல்ல அனுமதிக்கும் வேறு ஒருவரைத் தேடுகிறார்.
ரேண்டோல்ஃப் கார்ட்டர் எனும் கதாபாத்திரம், ஒருவகையில் லவ்கிராஃப்டின் சுய உருவாக்கம் என்பது எனது புரிதல். லவ்கிராஃப்டும் உயிர்ப்புள்ள துர்கனவுகளால் வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார் இல்லையா?
அதுதான் என்னுடைய புரிதலும். ரேண்டோல்ஃப் கார்ட்டர் பலமுறை வருகிறார். கனவுலக கதைகள் இல்லாத கதைகளிலும் அவர் இடம் பெறுகிறார். ஒரு கதை – அதில்தான் அவரை நாம் முதன் முதலில் சந்தித்தோம் என நினைக்கிறேன் – அதில் அவர், நடந்து முடிந்த ஒரு பயங்கர நிகழ்வு குறித்து காவலர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பார். ஆம், அவர் லவ்கிராஃப்டின் மையக் கதாபாத்திரம் போன்றுதான் தெரிகிறார்.
கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட கனவுச் சுழற்சி கதைகள் இருக்கின்றன. அதில் எத்தனை கதைகளை உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள் அல்லது பயன்படுத்தியுள்ளீர்கள்..
நான் எல்லா கதைகளையுமே பலமுறை வாசித்திருக்கிறேன். அதில் முதலாவதாக நான் சிறுமியாக இருந்தபோது வாசித்தது The Dream Quest of Unknown Kadath. ஏனென்றால் லவ்கிராஃப்ட் கதைகளில் அது ஒன்று மட்டும்தான் என்னை பயமுறுத்தவில்லை. அதனால் நான் மீண்டும் மீண்டும் வாசித்தேன். அது எப்போதுமே என்னைக் கொஞ்சம் தொந்தரவு செய்தது. நெருடியது. ஆனால் ஏன் என்று அப்போது என்னால் இனங்காண முடியவில்லை.
இப்போது பின் நோக்கிப் பார்த்தால் நாம் பிடித்தவை எல்லாவற்றிலும் செய்ததுபோல குழந்தைப் பருவத்தின் மிகை ஆர்வத்துடன் மற்ற கனவுச் சுழற்சி கதைகளையும் வாசித்திருக்கிறேன். நான் எழுதத் தொடங்கியபோது அந்தக் கனவுக் கதைகளை எல்லாம் மீண்டும் மீண்டும் மறுவாசிப்பு செய்தேன். ஒரு கவிதையை மட்டும் என்னால் கண்டறிய முடியவில்லை. அதனால் அந்த ஒன்றை மட்டும் என்னால் வாசிக்க முடியவில்லை.
இந்தக் கனவுக் கதைகளில் உள்ள எது உங்களைக் கவர்ந்ததாக நீங்கள் கருதுகிறீர்கள்?
கதையுலகின் மாறுதலடையும் தன்மை. விஷயங்கள் மாறும் விதம். அவை முழுவதும் அதிசயங்கள் நிரம்பியதாய் இருந்தன.
நான் சிறுமியாக இருந்தபோது அயோவாவில் வளர்ந்தேன். அங்கு எங்களை ஆச்சரியப்படுத்தும் விஷயங்கள் கிடையாது. நிறைய பன்றிகளும், சோயாபீன் செடிகளும் ஏராளமாக இருந்தன, அவை சிறந்தவைதான், ஆனால் அவை அதிசயங்கள் அல்ல. அவர் சென்ற மாய உலகத்தைப் பற்றிய ஏதோ ஒன்று, சிறுமியாய் இருந்த என்னைச் சூழும் வண்ணம் இருந்தது. நாம் லவ்கிராஃப்டைப் புரிந்துகொள்ள அறிவாற்றல் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நம்மிடம் நல்ல சொல்வளம் இருந்தால் போதும். அந்தக் கட்டத்தில் ஜே ஆர் ஆர் டோல்க்கினின் The Lord of the Rings போன்ற புத்தகங்களை வாசித்து உள்வாங்கியது போலவே லவ்ஃகிராப்ட் புத்தகங்களை என்னால் படித்து உள்வாங்க முடிந்தது. என்னால் எப்போதும் பெரும் உணர்ச்சிப்பூர்வ தருணங்களைப் பின் தொடர முடியாது, அதேசமயம் பொதுவாக லவ்ஃகிராப்டில் மிகப்பெரிய உணர்வுப்பூர்வ கணங்கள் கிடையாது.
இந்தப் புத்தகத்தின் நன்றியுரையில் நீங்கள் The Dream-Quest of Unknown Kadath-ஐ பத்து வயதில் படித்தாக சொல்லியுள்ளீர்கள். மேலும், “இனவெறியால் திகிலாகவும்அச்சுறுத்தலாகவும் அசெளகரியகாகவும் உணர்ந்தேன். ஆனால் பெண்களின் இல்லாமையை பிரச்சனைக்குரிய ஒன்றாக நான் அறியவில்லை” என்று சொல்லியிருக்கிறீர்கள்.
இது நான் கவனிக்காத ஒன்று. அந்த வயதில் பெரும்பாலானவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். நான் சிறுவயதில் படித்த எல்லா கதைகளிலும் பெண்கள் இடைநுழையும் புள்ளி மிகக் குறைவே. Little Women-இல் நான்கு பெண்களில் யாராவது ஒருவரைத் தேர்வு செய்யும் வகையில் நாம் சிக்கியிருப்போம். அல்லது இயோவின், கேலட்ரியல், ஆர்வென் (மூவரும் The Lord of the Rings-இல் இடம்பெறும் பெண் கதாபாத்திரங்கள்) இம்மூவரில் யாரையாவது தேர்வு செய்ய வேண்டும், ஒருவேளை நீங்கள் அயோவாவில் வளர்ந்திருந்தால் அது சாத்தியமற்றது.
உண்மையில் எனக்கு அத்தனை தேர்வுகள் கிடையாது. நான் சிறுமியாக அறிவியல் புனைவுகளும் மாயாஜாலக் கதைகளும் வாசிக்கும்போதும்கூட எதுவும் கிடையாது. நான் அவை அனைத்தையும் வாசித்து விடுவேன். ஆண்ட்ரே நார்டன் (அமெரிக்கப் பெண் எழுத்தாளர்) போன்றவர்களின் கதைகளையும்கூட படிப்பேன். அங்கேயும் எப்போதும் ஆண்கள், ஆண்கள், ஆண்கள்தான். நான் என்னால் முடிந்தவரை ஆணியல் பெண்ணாக (Tomboyish) இருந்தேன். ஏனென்றால் இந்த உலகின் ஒருபகுதியாக இருப்பதற்கு அதுமட்டுமே ஒரே வழியாக இருந்தது.
கனவு – தேடலில் ஒரே ஒரு மனிதப் பெண் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறாள் என்பதை நான் வளர்ந்து மறுமுறை வாசிக்கும் வரை கவனிக்கவே இல்லை. அந்த ஒரு பெண்ணும் ஒரு விவசாயியின் மனைவி. அதை மட்டுமே அவர்கள் சொல்லியிருந்தார்கள். ‘விவசாயியின் மனைவி பயந்திருந்தாள்’. முடிந்தது. நான் கவனித்த வரையில் ஒரே முறை மட்டுமே லவர்கிஃராப்ட் பெண்ணை கதையில் பயன்படுத்தியிருக்கிறார். அதுவும்கூட எதிர்மறையான, வகைமாதிரித் தன்மையை (Stereotypical) கொண்டிருந்தது. அவர்கள் கெடு புத்தியுள்ள கிழவிகள் அல்லது பயந்து நடுங்கும் விவசாயியின் மனைவிகளாக இருந்தனர். அவர்களும்கூட சொற்பமே. இது, பெண்களே இல்லாத உலகில் அவர் இருப்பதுபோல இருக்கிறது. அந்த ஒரு விஷயத்தைத்தான் Vellit Boe -ல் நான் செய்தேன். ஏனென்றால் இந்தக் கனவுலகம் கிட்டத்தட்ட பெண்களற்றே இருந்தது. அவர்கள் மிகக் குறைவாகவே இருந்தனர், அதனால் பெண்கள் ஒன்றாக இணைந்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் ஆதரவு அளிக்கும்படி இருந்தனர். ஆனால் அவர்கள் அத்தனை எண்ணிக்கையில் இல்லை.
இதை எழுதுவதற்கான தூண்டுகோல் என்ன? நீங்கள் திரும்பச் சென்று எல்லாக் கனவு சுழற்சி கதைகளையும் படித்து உங்களுக்கு இந்த எண்ணம் உதித்ததா? அல்லது உங்களுக்கு இந்த எண்ணம் தோன்றி அதன் பின் நீங்கள் சென்று அந்தக் கதைகளைப் படித்தீர்களா? எது உந்தியது?
உண்மையான காரணம், ஜொனாதன் ஸ்ட்ரஹான் நான் ஏதாவது எழுத விரும்புகிறேனா என எண்ணிடம் கேட்டார். லவ்கிராஃப்ட் இல்லாத ஒன்றை அதற்கு முன்னரே நான் அசை போட்டுக்கொண்டிருந்தேன். ஜான் மையர்ஸ் மையர்ஸ் எழுதிய Silverlock என்கிற புத்தகம் இருக்கிறது. அப்புத்தகம் 40களில் எழுதப்பட்டது. அதில் வரும் Common wealth of Letters என்பது நிஜமான தேசத்தின் உருவகம். அதில் செவ்வியல் இலக்கியங்களில் உள்ள கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒன்றாக வாழும். ஒருவருக்கு ஒருவர் ஊடாடும். அது ஒருவகையில் பிரமாண்ட, உற்சாகமூட்டும் ஒரு வாலிபனைப் பற்றிய சாகச நாவல். அந்த வாலிபன் பிரையன் போருவுடன் (அயர்லாந்தின் அரசர்) சண்டையிட நேரிடும், பியோவுல்ஃபை (ஜெர்மானிய வீர புராண பாரம்பரியத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கவிதையில் வரும் நாயகன்) சந்திக்க நேரிடும். மேலும், மனோன் லெஸ்காட்டையும் (பிரெஞ்ச் நாவல் ஒன்றில் தோன்றும் கதாபாத்திரம்) அவரைப் போன்றவர்களையும் கூடசந்திக்கும். ஆனால் அதைப் படிக்கும்போது அதில் இருந்த பெண்கள் ஒன்று ஒழுக்கம் கெட்டவர்களாக இருந்தார்கள், இல்லை நல்லது-கெட்டவைகளால் பாதிக்கப்படும் அப்பாவிப் பெண்களாக இருந்தார்கள். அந்தக் கதையில் வேறு வகை பெண்கள் யாரும் இல்லை. நிச்சயமாக. அது ஏனென்றால் இலக்கியத்திலேயே உண்மையில் பல வகை பெண்கள் கிடையாது.
அதனால், என்னுடைய காமன்வெல்த் தேசத்தில் என்ன இருக்கும் என்பதை Vellit Boeக்கு முன்பே நான் சிந்திக்கத் தொடங்கி விட்டேன். இலக்கியம் நிறைந்த நிலத்தில் நான் சாகசம் செய்கிறேன் என்றால், என் சாகசங்கள் என்னவாக இருக்கும்? ஒரு பெண்ணாக நீ உன்னை எங்கே இணைத்துக் கொள்வாய் என நான் யோசித்தேன். குறிப்பாக நான் இப்போது வயதடைந்த பெண்ணாக இருக்கும் போது, இருபது வயதுடையவளின் விஷயங்களில் ஆர்வம் காட்டாத பெண்ணான என்னை எங்கே நுழைப்பது? இலக்கியத்தில் நான் விரும்பும் அளவு மக்கள் உண்மையில் இல்லை என்பதைக் கண்டேன். பெரும்பான்மை பெண்கள் சலிப்படையும் வகையில் இருந்தனர் அல்லது அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை. அவர்கள் பெரிய விஷயங்களை ஆசைப்படவில்லை. எனக்கு விருப்பமில்லாத விஷயங்களில் மட்டுமே அவர்களுடைய உண்மையான அக்கறை இருந்தது: அது, குடும்பமும் வீடும். வெளியே சென்று காரியங்களைச் செய்யும் அளவுக்குப் போதுமான பெண்கள் இல்லை.
“ஏன் செவ்வியல் படைப்புகளில் இத்தகைய நிலை ஆதிக்கம் செலுத்துகிறது?” என நான் சிந்திக்கத் தொடங்கினேன். இதற்கு வரலாறோ, அந்தக் காலத்திய வழக்கமோ, ஆசிரியர்களோ காரணமல்ல, ஆனால் நீங்கள் ஓர் மனமுதிர்ச்சியடைந்த பெண்ணை அறிவியல் புனைவிலேயோ, கற்பனை உலகிலோ கொண்டு வந்து செருகினால் என்ன நடக்கும்? அங்கு உங்களுக்கு என்ன கிடைக்கும்?
நான் கென்னத் கிரஹாமின் The Wind in the Willows நூலில் இந்த ஆய்வை மேற்கொண்டேன். அதன் தொடர்ச்சியை நான் எழுதினேன். அது, அடுத்த ஆண்டு ஸ்மால் பீர் பதிப்பகம் மூலம் வெளிவருகிறது. “நாம் பெண்களை விட்டால் உலகில் என்ன நடக்கும்?” அது அந்த உலகை உடைத்துவிடுமா? ஆண் கதாபாத்திரங்களின் உறவுகளை உடைத்துவிடுமா? எந்த வகையில் அது உலகைப் பாதிக்கும்? இதை சொல்வதற்கு இரண்டு பெண் விலங்குகளை உள் நுழைத்தேன். அதன்பின் ஜோனதன் ஸ்ட்ராஹன் என்னிடம் ஏதாவது எழுத விரும்புகிறாயா எனக் கேட்டார். நான் லவ்கிராஃப்டில் என்ன தவறாக இருக்கிறது என மனதிற்குள் அசை போட்டுக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அடுத்து என்ன எழுத வேண்டும் என நான் முடிவு செய்தேன். அது எந்த அளவு உள்ளிழுக்கக் கூடியதாக மாறும், எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையெல்லாம் நான் உணரவில்லை. ஏனென்றால் நான் கடுமையான ஆராய்ச்சி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். முக்கோண பாய்மரக் படகுகள் மற்றும் அதைப்போன்ற முழுவதும் சம்பந்தம் இல்லாத தலைப்புகளில் ஏகப்பட்ட ஆய்வுகள் செய்யும் நிலைக்குச் சென்றேன்.
உங்கள் கதைகளுக்காக நீங்கள் நிறைய ஆய்வுகள் செய்திருப்பது தெரிகிறது. எனக்கு ஆர்வம் என்னவென்றால் நீங்கள் லவ்கிராஃப்ட் கதைகளைப் பலமுறை படித்துள்ளதாகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் பெயர்களுக்காக ஏதாவது ஒருவகை தொகுப்போ, குறிப்பேடோ தயாரித்தீர்களா? எந்தவகையான பின்னணியில் புனைவுலகக் கட்டமைப்பு விஷயங்களை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள்?
வெறும் நினைவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு எனது ஞாபக சக்தி வலுவானது கிடையாது. ஆனால் நான் குழந்தையாக அதைப் படித்திருப்பதால் அது பெருமளவு எனக்கு உதவியது, மேலும் இந்தமுறை நான் விவரச்சுவடி (Gazatteer) வைத்திருந்தேன். என்னிடம் கதாபாத்திரங்களின் பட்டியலும் இருந்தது, பெரும்பாலும் அதனை நான் அதிகம் படித்துவிட்டு சொல்வதெலாம், ‘ஓ,ஒ.. நில்லுங்கள். பிக்கரிங், பிக்கரிங் எங்கே இருப்பான்? அவன் ஒரு பிசாசு இல்லையா? அவன் புத்தகத்தில் மூன்றாவது பகுதியில் அல்லவா வருவான்? அவனைக் கண்டுபிடிப்பேன். பிறகு அந்தப் பகுதியை மறுமுறை வாசிப்பேன். அதைப் பயன்படுத்துவேன். சொல்லப்போனால், லவ்கிராஃப்ட் மொழியில் நேரடி ஓசை கேட்கும் இடங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. நான் அதனை பாவிக்க முயற்சிக்காவிட்டாலும், அவர் செய்த சில விஷயங்களை மட்டும் நேரடியாகக் குறிப்பிடுகிறேன்.
நீங்கள் அந்தக் கதைகளைத் திரும்பி வாசித்தபோது சினமூட்டும் அளவு தெளிவற்றதாக இருந்தார் என்றும், நீங்களே சுயமாக உருவாக்க வேண்டியது இருந்தாகவும் ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தீர்கள்.
முற்றிலும் சரி. அவர் சிறுநகரங்களை விவரிக்கிறார். அவற்றை விவரிக்க ஒரேவிதமான மொழியைப் பயன்படுத்துகிறார். அதனால் எல்லா சிறுநகரங்களும் பழையபாணி இங்கிலாந்து முகடுகளும், சில விநோதமான கற்களும் கலந்து உருவாக்கப்பட்ட இடைக்கால கோபுரங்கள் போன்ற உணர்வைத் தருகின்றன. அவரது எல்லா விவரணைகளும் அப்படித்தான். அவர் அதிகமாக லத்தீனிய, பல வடிவிலான உரிச்சொற்களைப் பயன்படுத்துவார். அவை உணர்ச்சிகளால் கட்டப்பட்டிருக்கும், ஆனால் விரிவாக இருக்காது. அவர் சீல் பற்றி பேசுவார். பிசுபிசுப்பான பொருள் அல்லவா அது? ஆனால் சீல் பார்க்க எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல மாட்டார் அல்லது எப்படி வாடை அடிக்கும் என்பதையோ, விரல்களில் ஒட்டிக்கொள்ளுமா அல்லது விரல்களில் வழுக்குமா என்பதையும் சொல்ல மாட்டார். அது ஒரு சிறிய விளக்கம்.
அதேபோல அவர் புவிப்பரப்பை பற்றிப் பேசும்போது, மனிதர்கள் மேய்ச்சல் நிலங்களைக் கடந்து செல்வார்கள் என்பார். உலகில் ஏராளமான மேய்ச்சல் நிலங்கள் இருக்கின்றன, அவை அனைத்திலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. அந்த வேறுபாட்டை அவர் மொழியில் நம்மால் காண முடியாது.
அவர் தன்னுடைய புவிப்பரப்பில் கட்டுண்டுள்ளார். அவருடைய மேய்ச்சல் நிலங்கள் மட்டுமே அங்கு தெரிகின்றன. ஆனால் நான் வேறு மேய்ச்சல் நிலங்களைப் பார்க்கலாம் என முடிவு செய்தேன். அவர் சொன்ன எல்லாவற்றிலும் நான் நிறைய மாற்றங்களைச் செய்தேன். அவர் எதையாவது விவரிக்க தவறும்போது அதனை நான் நிரப்பினேன். அவர் இரவு வானத்தில் விண்மீன்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுவார், ஆனால் எத்தனை என்று குறிப்பிட மாட்டார். அவரது இரவு வானத்தில்கூட வித்தியாசங்கள் தெரியாது. அதனால் நான் வானில் மாற்றங்களை மேற்கொண்டேன். அவரது வானத்தை விடவும் வித்தியாசங்களைச் சேர்த்தேன்.
உங்களுடைய நூலில் இடம் பெறும் வானில் சரியாக தொன்னூற்று ஏழு விண்மீன்கள் இருக்கின்றன. அந்த எண்ணிக்கைக்கு ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா? அந்த எண்ணம் எங்கிருந்து வந்தது?
ஆம் என்று சொல்வது கொஞ்சம் நகைப்புக்குரியதாகத்தான் இருக்கும், ஏனென்றால் நான் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவேளை மக்கள் அது என்ன என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். ஒருவேளை அவளிடம் லவ்கிராஃப்டின் தொன்னூற்று ஏழு புத்தகங்கள் இருந்தனவோ என்னவோ? என்று அவர்கள் பேசிக்கொள்ளலாம். ஆனால் இல்லை, உண்மையைச் சொன்னால், நான் அந்த எண்ணிக்கையைத் தேர்ந்தடுத்ததற்குக் காரணம் அவை நூற்றுக்கும் குறைவாக இருக்க வேண்டும் என எண்ணியதால்தான். அவர் உண்மையில் கோள்கள் உட்பட சுமார் இருபது விண்வெளிப் பொருட்களை மேற்கொள் காட்டுகிறார். அதனால் மக்கள் செவ்வாயையும் வெள்ளியையும் கூட விண்மீன்களாக நினைக்கிறார்கள் என என் மனதில் தோன்றுகிறது. ஒருவேளை சனியையும் அவ்வாறே நினைக்கலாம். அவர்களால் அல்கோலுக்கும் (ALGOL) வீனஸுக்கும் வேறுபடுத்தி பார்க்க இயலவில்லை. ஆனால் நான் ஒரு சில விண்மீன்கள் மட்டும் போதுமானதாக இருக்கும் என விரும்புகிறேன். அதனால் வான் மிக இருளடைந்ததாக இருக்கும். நம் நிஜ வானுடன் வேறுபடுத்திக் காட்ட முடியும்.
Tor.com-ல் கனவு உலகத்தின் வரைபடத்தை பதிவிட்டிருந்ததைப் பார்த்தேன். நீங்கள்தான் அந்த வரைபடத்தை வரைந்து, அவர்கள் அதை மேம்படுத்தினார்களா அல்லது உங்களுடன் வேறு யாராது பணியாற்றினார்களா?
வரைபடத்தை நான்தான் வரைந்தேன். என் சகோதரர் ஒரு வரைபடவியலாளர். அதனால் நான் வளரும்போதே வரைபடங்களை வரைந்திருக்கிறேன். ஒருநல்ல கற்பனையாளர் போல ஃபேன்டஸியை எழுதுவதில் உள்ள ஆகப்பெரிய சந்தோஷம் உங்கள் வரைபடங்களை நீங்களே உருவாக்கிக்கொள்வதுதான். அதனால் நான் வரைபடங்களை ஒருங்கிணைப்பதில் மகிழ்கிறேன். ஒரு செவ்வியல் தன்மை வாய்ந்த வரைபடம் இணையத்தில் காணக் கிடைக்கிறது. அதை ஓர் தொடக்கப் புள்ளியாக வைத்துக் கொண்டேன். எனது வரைபடம் செங்குத்து அமைப்பில் பொருந்த வேண்டும் என விரும்பினேன். மேலும், பெரும்பாலான வரைபடங்கள் பொதுவாக நிலப்பரப்பு சார்ந்தவை. நான் புத்தகத்தின் ஒரு பக்கத்தில் படிக்கக் கூடியதாக அது இருக்க வேண்டும் என விரும்பினேன்.
நீங்கள் இதில் மொழி பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்.. நீங்கள் உண்மையில் லவ்கிராஃப்டின் தொனியை பின்பற்ற முயற்சி செய்யவில்லை என்பதைக் கண்டேன். உங்களுடைய தொனி நம்பமுடியாத அளவிற்கு கவர்ச்சித் தன்மை கொண்டுள்ளது.
நன்றி.
இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்ட தொனியை வடிவமைக்க நீங்கள் என்ன அணுகுமுறையை எடுத்தீர்கள் என்பதைப் பற்றி பேச முடியுமா?
நான் முதலில் தொடங்கும்போது லவ்கிராஃப்டின் குரலைத்தான் முயற்சி செய்ய இருந்தேன். ஆனால் அதை எந்தளவுக்கு வாசித்தேனோ, அந்தளவுக்கு பிடிக்காமல் போனது. எனது குரல் வளமையானதாகவும் துல்லியமானதாகவும் இருக்க வேண்டும் என விரும்பினேன். அதற்குத்தான் இலக்கிட்டேன். நான் வழக்கமாக எழுதும்போது தொனியைப் பயிற்சி செய்து பார்ப்பேன். முதலில் பகடில்லாத, எளிமையான மொழியை முயற்சி செய்தேன், ஆனால் அதில் என்னுடைய குரல் வெளிப்பட வேண்டும் என்று விரும்பினேன். அது மாறுதலடையாத எனது குரலுக்கு மிக அருகில் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய ‘The Man who Bridged the Mist’-இல் மட்டும் அவ்வாறு இருக்காது. எந்த விஷயங்களையும் பரிட்சிக்காதபோது அதுவே என் இயல்பான குரல் என்று நினைக்கிறேன்.
எனக்குப் புரியாத பல சொற்கள் இதில் இருக்கின்றன. அவை உங்களுக்குத் தெரிந்த சொற்களா? நீங்கள் வேண்டுமென்றே லவ்கிராஃப்டின் அந்த அம்சத்தை பிரதிபலிக்க முயற்சிக்கிறீர்கள் என நினைத்தேன். அறிமுகமில்லாத வார்த்தைகாக இருந்தன.
நான் தேவையில்லாமல் அவை அனைத்தையும் சேர்க்கவில்லை. எனக்கு அந்த சொற்களின் அர்த்தம் தெரியும். நான் பிஞ்சிலேயே முதிர்ந்த குழந்தையாக இருந்தேன். சிறுநகரில் நான் வளர்ந்த இடம் சோர்வூட்டுவதாக இருந்தது. அதனால் நான் அகராதிகளைப் படித்தேன். கலைக்களஞ்சியங்களை வாசித்தேன். ஆனால் அந்தச் சொற்தொகுதிகளை எல்லாம் எனது எழுத்தில் நான் பயன்படுத்தவில்லை. ஒரு சாகச நாவல் 1930களில் நடக்கிறது என வைத்துக்கொள்வோம். அதுகுறித்த சில சொற்தொகுதிகளை பயன்படுத்துவது எனக்கு மகிழ்வளிக்கும். ஆனாலும் பயன்படுத்த மாட்டேன்.
நான் ஒரு சிறுமியாக அண்ணார்ந்து பார்த்த விஷயம், அவர் எந்த அகராதியிலும் காணக் கிடைக்காத சொற்களைப் பயன்படுத்தியிருந்தார் என்பதை. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி எனும் பிரமாண்ட நூலில் கூட அவை இருக்காது. அந்த விஷயம் எனக்கு ஆச்சரியமளித்தது. சொல்லப் போனால் நானே உருவாக்கிய இரண்டு சொற்கள் அதில் இருக்கின்றன. அவர் தனது சொற்களை தன் போக்குக்கு உருவாக்கவில்லை என நான் 100 சதவிகிதம் உறுதியாக நம்பவில்லை என்பதற்கான அடையாளங்கள் அவை.
‘இல்லை, இது சரிவராது. நான் முழுதாக அதை மாற்றியாக வேண்டும்’ என லவ்கிராஃப்டுடன் முழுதாக முரண்படும் ஏதாவது விஷயம் இதில் இருக்கிறதா?
இது உண்மையில் நல்ல கேள்வி.அந்த வகையில் நான் சிந்திக்கவே இல்லை. பெரிய விஷயம் என்னவென்றால் The Dream-Quest of Unknown Kadath-ல் நான் புவியியல் பரப்பை கொஞ்சம் மாற்றியிருக்கிறேன். ரேண்டோல்ஃப் கார்ட்டர் அவருடைய நண்பர் குரனேஸைக் காணச் செல்வதற்கு மூன்று நாட்கள் பயணிப்பார். நான் அதை மூன்று நாள் பயணமாக விரும்பவில்லை. ஆழமான நீலக்கடல் பயணமாக்க விரும்பினேன். நான் புவியியலை மாற்ற விரும்பவில்லை, ஆனால் மாறக்கூடிய புவியியலை உருவாக்கினேன். ஒரே இடத்திற்குச் செல்ல சிலநேரங்களில் மூன்று நாட்கள் ஆகும், சில நேரங்களில் மூன்று வாரங்களாகும். நீங்கள் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. சுயநலமிக்க, சலனப் புத்தியுள்ள கடவுள்களால் தொடர்ந்து மாற்றத்திற்குள்ளாகும், இயக்கப்படும் உலகிற்கு அது பொருத்தமாக இருக்கும் என நான் கருதினேன்.
அது சுவாரஸ்யமாக இருக்கிறது. அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது. காரணம், அது ஒரு கனவுலகம். இது இரட்டை முனைகள் கொண்ட வாள் என்று நான் நினைக்கிறேன். கனவுகள் பற்றிய கதைகளில் நிறைய நேரங்களில் இந்த உணர்வு அதிகம் இருப்பதால், விதிகள் எதுவும் இல்லாததால் வாசகராக நீங்கள் ஆர்வத்தை இழக்க நேரிடும். அது தான்தோன்றித்தனமாகத் தோன்றும். இந்த மாதிரியான கனவு உலகத்தைப் பற்றி எழுதும்போது அது உங்கள் அக்கறையாக இருந்ததா?
நிச்சயமாக, எனக்கு பிடித்தமான புத்தகங்களில் ஒன்று Alice in Wonderland. வயது வந்தவுடன் அதை வாசிப்பது எப்படி வேடிக்கையாக இருக்கும் என்று நான் சில நேரங்களில் நினைப்பேன். கனவுகளைப் பற்றிய விஷயம் என்னவென்றால், குறைந்தது எனது கனவுகளுக்கு எந்த அர்த்தமும் கிடையாது. எனக்கு கனவில் விழிப்பு நிலையில் இயங்குபவர்களை (Lucid Dreamers) தெரியும். நாடகத்தன்மை வாய்ந்த நீண்ட கனவு காண்பவர்களையும் அறிந்திருக்கிறேன். ஆனால் என் கனவுகள் துண்டுகளாக ஒரு நூலில் இருந்து மற்றொன்றுக்கு பிணைக்கப்பட்டிருக்கும். சில சமயம் அவற்றை எந்த நூல்களும் இணைத்திருக்காது.
கனவை அடிப்படையாகக் கொண்ட புனைவுகள் சில சமயம் செயற்கையாய் தோன்றும். காரணம், அந்தக் கனவுகள் அதிக கதையாடல் தன்மையைக் கொண்டிருக்கும். அதேபோல கதையாடல் இல்லாததாலும், அது கதைக்குத் தேவைப்படாததாலும் சில கனவுகள் தொடர்பற்றதாகத் தோன்றும். நான் அதை நன்கு அறிந்திருந்தேன். அதனால்தான் நமது கோளில் ஒரு கதை நிகழும் காலத்தைவிட கனவில் எத்தனை நாட்களில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதை அடையாளப்படுத்த நிறைய முயற்சித்திருக்கிறேன்.. ‘அங்கு செல்வதற்கு 5 நாட்கள் ஆவதுபோல தோன்றும், ஆனால் அது ஒன்பது நாட்களும் ஆகலாம், மூன்று நாட்களிலும் முடியலாம்’. ஆனால் இதனை நான் சொல்லியிருக்கவும் மாட்டேன். காரணம், நான் வாசகரிடம் தொடர்ந்து இதுதான் உண்மை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என்பதை நிலைநிறுத்த முயல்கிறேன்.
நீங்கள் அடிக்கடி கனவு காண மாட்டீர்கள் என ஒரு நேர்காணலில் சொல்லிக் கேள்விப்பட்டேன்.
ஆம். பல ஆண்டுகளாக நான் மாத்திரை மருந்துகள் உட்கொண்டு வந்தேன். அவை எனக்கு கனவு வருவதை தடுத்து வந்தன. நான் மருந்துகளை நிறுத்தும் வரை எனக்கே அது தெரியாது. பிறகு ஒருநாள் திடீரென்று மீண்டும் கனவுகள் வந்துவிட்டன. அவை சிறப்பானதாக இருந்தன. இரவில் விஷயங்களை காண்பதே சிறப்பாக இருந்தது. நான் சிறுமியாக இருந்தபோது எனக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று தூங்குவது, காரணம் கனவுகள் சுவாரஸ்யமானவையாக இருக்கும். அதையே நான் பல நாட்கள் மறந்திருந்தேன்.
நான் ஜான் கிளிஸை நேர்காணல் செய்தேன். அவர் ஒரு கதை சொன்னார். தாமஸ் எடிஷன் தனது சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான கருத்துக்களை எல்லாம் தூக்கத்தில் அலைபாயும்போதுதான் கண்டடைந்தாராம். அதனால் அவர் நாற்காலியில் இரும்புக் கோளப் பந்தைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாராம். அவர் தூங்கிவிட்டால் அது கையில் இருந்து நழுவி கீழே விழும். அந்த சத்தத்தில் அவர் எழுந்து விடுவார். இப்படியாக அவர் தொடர்ந்து தூங்குவதையும் விழிப்பதையும் மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருந்தார்.
ஏ.இ வான்வோக்ட் இரவு முழுவதும் அலார ஒலியைக் கடிகாரத்தில் வைத்துக் கொள்வார். ஜிம்கன் இந்தக் கதையை எனக்குச் சொன்னார். ஒவ்வொரு மணி நேரத்திற்கா, ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்காக, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கா என்று எனக்கு நினைவில் இல்லை. வோக்ட் இரவு முழுவதும் விழிப்பு ஒலியை வைத்துக் கொள்வார். இடையிடையில் எழுந்து அவருக்கு என்ன தோன்றியதோ அதை எழுதி வைத்துக் கொள்வார். பின் மீண்டும் தூக்கத்திற்குச் செல்வார். வான் வோக்ட் எழுதுவதை வைத்து அவர் செய்வதன் அர்த்தம் எனக்குப் புரிகிறது. காரணம், ஒவ்வொரு 700 வார்த்தைக்கும் அவர் என்ன புத்தகம் எழுதுகிறார் என்பதை மறந்து மற்றொன்றை எழுதத் தொடங்கிவிடுவதைப்போன்றுதான் அவர் படைப்பு இருக்கும்.
ஒவ்வொரு எழுநூறு வார்த்தைக்கும் அவர் முற்றிலும் தொடர்பில்லாத ஒரு கருத்தாக்கத்தை கொண்டு வருவது என்கிற விதியை அவருக்கு அவரே விதித்துக் கொண்டார் என நினைக்கிறேன்.
சரிதான். வான் வோக்டின் ஒவ்வொரு காட்சியிலும் நீங்கள் புதிதான ஒன்றைக் காணலாம். இறுதியில் அவர் எல்லாவற்றையும் ஒன்றிணைக்க செய்யும் முயற்சியையும் நீங்கள் பார்க்கலாம். சில நேரங்களில் அவர் தைரியமாக அதை செய்யாமலும் விடுவார். வான் வோக்டின் நாவலின் இறுதி அத்தியாயத்தைப் படிப்பது எப்போதும் சுவாரயஸ்மானதாக இருக்கும்.
இந்தப் புத்தகத்தில் உள்ள ஏதாவது ஒன்று உங்கள் கனவுகளில் இருந்து வெளிவந்ததாக இருக்கிறதா? அல்லது இதை எழுதுவதில் உங்கள் கனவுக்கு பங்கிருக்கிறதா?
அப்படித்தான் நினைக்கிறேன். கடைசி பகுதியில்அவள் விமானத்தில் நமது உலத்தில் இருக்கும்போது, நிறைய நிலப்பரப்புகள் கனவில் வந்தவை. அவை உண்மையான நிலபரப்பாக இருந்தாலும் இரவில் அவை கனவில் நினைவுக்கு வந்தவை. ஒரு மஞ்சள் நிற சோளக்கொல்லையில் நான் நடந்து கொண்டிருந்தது என் நினைவில் இருக்கிறது. என் தலைக்கு மேல் வானம் கருநிறத்தில் இருக்கிறது. நான் எழுதும்போது அதை நன்கு அறிந்திருந்தேன். அதேபோல வேறு விஷயங்களும் என் கனவில் வந்தன. ஆழ்கடல் எத்தகைய உணர்வை அளிக்கும் என்பதை நான் கனவின் மூலமே அறிந்தேன். ஆனால் எந்த நிலையிலும், ‘நான் பதினாறு வயது இருக்கும்போது இந்தக் கனவு கண்டேன். அது என்னை முழுமையாக மாற்றியது’ என்று சொல்ல மாட்டேன். இருப்பினும் நீங்கள் இப்போது குறிப்பிட்டதால் ராட்சச சிலந்தி பூச்சிகள் என் தோள்பட்டையைக் கடித்ததை நினைவூர்கிறேன். அதை லவ்கிராஃப்ட் கதையில் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. அதை நான் வைத்திருக்க வேண்டும்.
வெல்லித் (Vellit – நாவலில் வரும் கதாபாத்திரம்) ஆழ்கடலைப் பார்க்கும்போது உள்ளே ஒளி தோன்றும் பகுதி. இந்தக் கதையில் மிக அட்டகாசமான பகுதி என நினைக்கிறேன்.
நன்றி. நானும் அப்பகுதியில் அடித்துச் செல்லப்பட்டேன். கனமான உணர்வு தோன்றியது. விமானம், கடல் போன்ற இடங்களில் அளவிட முயற்சிப்பது கடினம். நான் என் தாயுடன் பலமுறை கப்பலில் பயணித்து இருக்கிறேன். ஒருவிஷயம் சிறிதாக இருக்கிறதா அல்லது தூரத்தில் இருக்கிறதா என்று சொல்வது கடினம். நீங்கள் ஒரு படகை பார்ப்பீர்கள். அது அருகில் இருக்கும் ஒருசிறிய மீன்பிடி படகா அல்லது தூரத்தில் இருக்கும் ஒரு பெரிய சரக்குக் கப்பலா என்று சரியாக சொல்ல முடியாது.நாம் அலஸ்காவுக்குச் சென்றால் பனிப்பாறைகளின் அருகில் செல்வோம். அந்த பனிப்பாறைகள் நாற்பத்தி எட்டு அடி உயரத்திற்குஇருக்கிறனவா அல்லது ஒன்றரை மைல் உயரத்திற்கு இருக்கின்றனவா என்பதைஅதற்கு முன்பாக ஒரு சிறிய படகு வரும்வரை உங்களால் அளவிட முடியாது. படகு வந்தாலும் உங்களால் சொல்ல முடியாது என்பது வேறு விஷயம்.காரணம், அந்தப் படகு எவ்வளவு பெரிது என்பதையே உங்களால் யூகிக்க முடியாது.நான் அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பேன். நம் அனுபவத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களில் அளவின் புரிந்துகொள்ள முடியாத தன்மையை.
நாம் உங்கள் கதாநாயகி வெல்லித் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். அவளைப் பற்றி மேலும் எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
தொலைக்காட்சியில், திரைப்படங்களில் வரும் வயதான கதாபாத்திரங்கள் பற்றிய ஒரு விஷயம் என்னை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். வெல்லித்துக்கு ஐம்பத்தி ஐந்து வயது. ஆனால் அவளை வயதானவள் என்று சொல்ல மாட்டேன். காரணம் எனக்கு வயது ஐம்பத்தி ஆறு. அதனால் அவர் புரிந்து கொள்ளக்கூடிய வயதுடையவள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், எப்போதும் எரிச்சலூட்டும் ஒரு விஷயம் என்னவென்றால், குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் உங்களால் சில விஷயங்களை மட்டுமே செய்ய முடியும், சில விஷயங்களாக மட்டுமே இருக்க முடியும் என்று பலரும் அனுமானம் கொள்வது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான் பாறை ஏறுபவளாக இருந்தேன். நான் V4, V5 ஆகிய உயரம் கொண்ட பாறைகளில் ஏறும் தேர்ச்சி பெற்றிருந்தேன். அது மிகவும் உயரிய அளவு கொண்ட பாறைகள். குக்கி பிஸ்கட்டுகளை சமைக்கும் பாட்டிகள் பற்றி எழுதும் யாவரும், பாட்டியின் வயதில் உள்ள ஒருவர் அவ்வாறு பாறைகள் ஏறுவார் என நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். எல்லா பாட்டிகளாலும் அவ்வாறு செய்ய முடியும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவ்வாறு செய்யும் ஆற்றல் கொண்ட பாட்டிகளும் இருக்கிறார்கள். அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது நன்றாக இருக்கும்.
சிக்கலான, அதேசமயம் செழிப்பான கடந்த காலத்தைக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி நான் எழுத விரும்புகிறேன். மேலும் அறிவுஜீவியல்லாத அறிவாளியைப் பற்றியும் எழுத விரும்பிகிறேன். காரணம், நான் ஒரு கல்லூரி பேராசிரியராக இருப்பதால், கல்லூரி பேராசிரியர்களாகவும் கல்லூரி மாணவர்களாகவும் இருப்பதைத் தவிர வேறு எதையும் செய்திராதவர்களைக் காண்கிறேன். அவர்களுக்கு எதிராக நிறைய அழுத்தம் தருகிறேன். அவர்கள் செய்திருக்கக்கூடிய பல விஷயங்கள் இருந்தும் அவர்கள் செய்யாமல் இருக்கிறார்கள். அதைத்தான் நான் பேச விரும்புகிறேன்.ஒரு பெண்ணாக சுவாரஸ்யமான விஷயங்கள் எல்லாவற்றையும் செய்து, சில சரியான, நியாயமான விஷயங்களை செய்வதற்கான முடிவுகளை எடுத்து, அதில் சில திறன்களை இன்னமும் தக்கவைத்து, கடந்த காலம் பற்றிய ஏக்கத்தையும் வைத்திருக்கும் பெண்ணைப் பற்றி எழுத விரும்புகிறேன். நான் பாறைகள் ஏறுவதை நிறுத்த வேண்டியிருந்தபோது அது என் இதயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நொறுக்கியது. நான் மீண்டும் பாறைகளில் ஏறப்போவதில்லை எனும் கவலை என்னை ஆட்கொண்டது. வெல்லித் அப்படித்தான் இருக்க வேண்டும் என விரும்பினேன். நான் அவளை சுயசரிதைத் தன்மை வாய்ந்தவளாக எழுதவில்லை. ஆனால் எனது மற்ற கதாபாத்திரங்களை விடவும் அவளே எனது சுயசரிதத்தைத் தாங்கி நிற்கிறாள்.
உங்களைப் போலவே, அவளும் ஒரு கல்லூரி பேராசிரியை. இது கதைக் களத்தைத் தொடங்கி வைக்கிறது. கதையின் தொடக்க நிலை குறித்து கொஞ்சம் சொல்கிறீர்களா?
உல்தார் பெண்கள் கல்லூரியில், கணிதப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாள் வெல்லித். உல்தார் என்பது லவ்கிராஃப்ட் கனவுலகில் வரும் ஒரு சிறுநகரம். அங்குதான் ரேண்டோல்ஃப் கார்ட்டர் பல மனிதர்களையும், பல பூனைகளையும் பார்ப்பார். ஏற்கெனவே ‘The Cats of Ulthar’ எனும் சிறுகதையும் அந்த நகரத்தைப் பற்றி இருக்கிறது என்பதும் உண்மை. உல்தார் என்பது பழக்கப்படாத பூனைகளும் செல்லபிராணிகளாய் இருக்கும் பூனைகளும் நிரம்பியிருக்கும் இடம்.
அதைப்பற்றி அவர் சொல்லியிருப்பது மிகக் குறைவு. மலையின் மத்தியில் ஒரு கோபுரம் அமைந்துள்ள சிறுநகரம் அது. அங்கு ஒரு பூசாரி வாழ்ந்து வருகிறான். அவர் பூசாரிக்கு மதுவைக் கலந்து கொடுத்து சில தகவல்களை அவனிடம் இருந்து பெறுகிறார். ஆனால் நான் அந்த இடத்தில் பள்ளிக்கூடம் இருக்க வேண்டும் எனக் கருதினேன். அதனால் உல்தாரில் ஆக்ஸ்போர்ட் பாணியிலான பல்கலைக்கழகத்தை அமைத்தேன். அது 30களில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் போன்றது. லவ்கிராஃப்ட் புத்தகங்கள் எழுதிய தசாப்தத்தைச் சார்ந்தது. அங்கு பெண்கள் கல்லூரியும் இருக்கிறது. ஆனால் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறது. அவர்கள் மெலிந்த பனித்தரையில் நடந்து செல்கிறார்கள். பெண்களால் கல்வி கற்க முடியும், சிலர் கல்வி கற்க வேண்டும், ஆனால் அப்பெண்கள் வேறு அளவுகோளில் வைக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் புரிதல்.
வெல்லித் உல்தாரில் உள்ள ஒரே மகளிர் கல்லூரியில் பெண்களுக்கு கணிதம் சொல்லித் தருகிறாள். அதற்கு அவள் பெண்களின் நெறியைக் காப்பவள் என்பதும் அர்த்தம். வெல்லித் தனது இருபது வருட அனுபவத்தில் கண்ட சிறந்த மாணவி ஒருத்தி, தான் ஸ்டீபனுடன் செல்வதாக கடிதம் எழுது வைத்துவிட்டு சென்றுவிடுகிறாள். ஸ்டீபன் அழகானவன். உடனே வெல்லித் அவளை மீண்டும் அழைத்து வர வேண்டும் என முடிவு செய்கிறாள். பிரச்சனை என்னவென்றால் கிளாரி ஜூரட் எனும் அந்த மாணவியோடு ஓடிப்போன இளைஞன் அவளது தேசத்தைச் சேர்ந்தவன் இல்லை. அவன் விழித்திருக்கும் உலகத்தைச் சேர்ந்தவன். அதனால் அவன் கிளேரை விழிப்பு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறான். அந்த உலகத்திற்கு கனவுலகத்தில் இருந்து இதற்கு முன் யாரும் சென்றதில்லை. இன்னும் சொல்லப்போனால் அங்கு போக முடியுமா என்பதுகூட யாருக்கும் உறுதியாகத் தெரியாது. ஆனால் வெல்லித், அவளது கடந்த காலத்தில் இளம்பெண்ணாக இருந்தபோது பயணங்களில் ஈடுபாடுடையவள். அதனால் தாமாகவே முன் வந்து அவள் செல்ல முடிவெடுக்கிறாள். அங்கிருந்து தேடல் தொடங்குகிறது.
இதுகுறித்து நான் படித்த விமர்சனங்களில் ஒன்று இதனைச் சாலை அனுபவக் (Road Trip) கதை என்கிறது. அப்படி எடுத்துக் கொள்ளலாமா?
வெளியில் நகரும் எந்த ஒரு கதையும் சாலை அனுபவக் கதைதான். எல்லா சாலை அனுபவக் கதைகளிலும் துணிகரக் கூறுகள் இருக்கும். ஏனென்றால் புவியியல் சார்ந்த இயல்கள் அதில் இடம்பெறும். அல்லது ஆசிரியரின் சலனத்தின் அடிப்படையில் அது அமைந்திருக்கும். நான் சாலை அனுபவக் கதைகள் குறித்து விரும்பும் ஒரு விஷயம் அது. அதேபோல வேறு ஒரு பார்வையில் இதனைத் தோழமை திரைப்படம் (Buddy Movie) என்றும் அழைக்கலாம். காரணம் அவளுடன் ஒரு பூனை வருகிறது. அந்த பூனைக்கு முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், அது சாதாரணப் பூனையாக இருந்தாலும்கூட. அந்தப் பூனை பேசாது. நகைச்சுவையான விஷயங்களைச் சொல்லாது. பூனைகளுக்கே உரிய விஷயங்களைக் கூட அது செய்யாது. ஆனால் அவள் தனியாகப் பயணிக்கவில்லை. அவள் ஒரு காரணத்திற்காக தன்னுடன் இருக்கும் பூனையுடன் பயணிக்கிறாள். அது ஏன் என்பது ஒரு குழப்பம்தான். எனக்கும் கூட குழப்பம்தான். மேலும் அது ஒரு தேடல். தேடல் புவியியலுக்கு இடையில் நடைபெற வேண்டும். இதை எதைப் படிக்கும்போது வேண்டுமானாலும் நீங்கள் காணலாம். ஆனால் நீங்கள் Lord of the Rings வாசித்தால், ஒழுங்கற்ற இடைவெளியில் தோன்றும் நிகழ்வுகள் (Episodic) கொண்ட சில விஷயங்கள் நடப்பதைக் காண்பீர்கள்.
நீங்கள் செய்த சுவாரஸ்யமான விஷயம் வெல்லித் பேசுவதற்கு ஒரு துணையை இந்தக் கதையில் ஏற்படுத்தித் தராதது. பெரும்பாலான கதைகளில் அவர்கள் செய்யும் முதல் விஷயம் வெல்லித் பேசுவதற்கு ஒரு துணையை அறிமுகம் செய்வதாக இருக்கும். அதனால் இந்தக் கதை அவளது மனதில் என்ன நடக்கிறது, அவள் பார்க்கும், உணர்வும் விஷயங்கள் பற்றியதாக இருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம். இந்த முடிவுக்குப் பின் இருந்த உங்களுடைய சிந்தனைப் போக்கு என்ன?
நான் தனித்துவிடப்பட்ட கதாபாத்திரங்கள் குறித்துப் பல கதைகளை எழுதியுள்ளேன். அவை வெளிகளுக்குள் பயணித்து பலரைச் சந்திக்கும், பிறகு பிரிந்து செல்லும். நான் எழுதுவது குறித்து பாடம் நடத்தும்போது நகைச்சுவையாக எல்லோரிடம் சொல்வது ஒரு நாயை உங்கள் கதையில் வையுங்கள் என்பதைத்தான். காரணம், நாய் அந்த நிகழ்வை, திட்டமிட்டு உருவாக்குதலல்லாத, (Random) தற்போக்காக்கிவிடும். நீங்கள் ஒரு எழுத்தாளர் என்றால் உங்கள் கதாபாத்திரத்தை கதைக் களத்தின் வாயிலாக நகர்த்திச் செல்வீர்கள், அவர்கள் ஏற்கெனவே கதைக் களத்திற்குள் நகர்ந்து சென்று விட்டார்கள் என்று உங்களுக்குத் தோன்றிவிடும். இந்தப் புள்ளி, அங்குதான் செல்ல வேண்டும் என்கிற போக்கு உருவாக்கிவிடும். ஆனால் நீங்கள் தற்போக்கை உருவாக்கும் விஷயங்களைக் கூட்டினால், நடைப் பயிற்சி அழைத்துச் செல்லக்கூடிய நாயாக இருக்கலாம், பராமரிக்க வேண்டிய குழந்தையாக இருக்கலாம் அல்லது அதுபோல ஏதாவது ஒரு விஷயத்தைச் சேர்க்கும்போது நீங்கள் நிகழ்வை கொஞ்சம் சுழற்றிப் போடுகிறீர்கள். இப்போது எதிர்பாராத வேறு ஏதாவது ஒன்று நிச்சயம் நடக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால் பூனைகள் அப்படிக் கிடையாது. குறிப்பாக வெல்லித்துடன் செல்லும் இந்தப் பூனை, மற்ற பூனைகள் செய்யாத எதையும் புதிதாகச் செய்யாது. ஆனால் சில சமயங்களில் அவள் அதனுடன் பேசுவாள். ஆனால் பூனையை அங்கு வைப்பது அவள் நட்சத்திரத்தை மட்டும் பார்ப்பதை விட வேறு ஒரு விஷயத்தைக் கூட்டுகிறது. அந்தப் பூனை அவள் பக்கத்தில் சுருண்டு வந்து வெதுவெதுப்பான, ஆறுதல் தரும் ஏதோ ஒன்றைச் செய்கிறது. இது கதையின் இயல்பான நகர்த்தலாக அமைகிறது.
லவ்கிராஃப்ட் கதைகளில் எல்லாக் கனவாளர்களும் ஆண்கள் என்று முன்னரே சொல்லியிருந்தீர்கள். அதனை நீங்கள் இதிலும் கொண்டு வந்ததாகச் சொல்கிறீர்கள். இதுபோல எல்லா இடங்களிலும் பாலின பாகுபாடு இருக்கிறது. இது பற்றி எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
எல்லாக் கனவாளர்களும் ஆண்கள். எல்லாக் கடவுள்களும் ஆண்கள். குறிப்பிடப்பட்ட எல்லா கதாபாத்திரங்களும் ஆண்கள். கனவுலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் கனவாளர்களின் மூளையில் இருந்து வந்தவர்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அதனால் என்னுடைய யூகம் என்னவென்றால் நடப்பதை வைத்து அவர்களுக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் கனவாளர் இல்லாமலேயே உல்தார் இயங்கும். உல்தார் இன்னமும் அதன் இயல்பில் சிறிதாக மாறி வருகிறது. நமது உலகின் வளைவுக்குப் பின்னால் அது இருக்கிறது. அது எப்போதும் நமக்குப் பின்னால்தான் இருக்கிறது. ஏனென்றால் நாம் கனவில் பழைய நினைவுகளின் ஏக்கங்களுடன்தான் இருக்கிறோம். நாம் கனவுகளில் பெரும்பாலும் பின்னோக்கித்தான் பார்க்கிறோம். எதிர்காலத்தைப் பார்ப்பதில்லை.
நான் அதைப்பற்றி நிஜமாகச் சிந்திக்க விரும்பினேன். எல்லோருமே ஆண்களாக இருக்கும் உலகம் என்றால் அதன் அர்த்தம் என்ன? எல்லாவற்றையும் மாற்றும் சலனப் புத்தியுள்ள இந்தக் கடவுள்கள் கிட்டத்தட்ட 30களில் இருந்த மகளிரின் வாழ்க்கையுடன் பொருந்திப் போகிறார்கள் என்பதை நான் எழுதும் வரை உணரவில்லை. அவர்கள் உங்கள் கல்லூரியை மூடிவிடுவார்கள். உங்களை அடித்தே கொல்வார்கள். அதற்காக கைது செய்யப்படவும் மாட்டார்கள். அவர்களால் எல்லாதவிதமான கொடூர விஷயங்களையும் செய்ய முடியும். அவர்கள் உங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு உங்களை நிர்க்கதியாக விடலாம். அவர்கள் உங்களிடம் பொய்கள் சொல்லலாம். ஆண்கள் பெண்களின் வாழ்க்கையை ஆளும் அனைத்து விதமான நடைமுறை விஷயங்களும் கனவுலகத்துடன் பொருந்திப் போகின்றன. அங்கு சலனப் புத்தியுள்ள கடவுள்கள் விஷயங்களை நிகழ்த்துகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் தாங்கிக்கொள்ள வேண்டும். மோசமான நாட்களைச் சுற்றியே அவர்கள் தங்கள் பணியை செய்துகொண்டு, ஓய்வெடுத்து, சிறிய போட்டியாளர்களுடன் சண்டையிட்டு நாட்களை ஓட்ட வேண்டும்.
வெல்லித், ரேண்டோல்ஃப் கார்ட்ட ரைச் சந்திக்கும் பகுதி இப்புத்தகத்தில் இருக்கிறது. அப்போது அவளிடம் அவர், ‘பெண்கள் எப்போதும் பெரிதாய் கனவு காண்பதில்லை. அவர்களுடைய கனவுகள் குழந்தைகள், வீட்டு வேலைகள் என சிறியதாகவே இருக்கின்றன’ என்கிறார்.
அது நிச்சயமாக 30களில் சாத்தியம்தான். இப்போதும்கூட அது அர்த்தம் வாய்ந்ததாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட நன்றாகவே இருக்கிறது, ஆனால் பெண்கள் வீட்டில் இருப்பதை விரும்பாதது குறித்த எண்ணம் இப்போது மாறி வருவதாக இருக்கிறது. நான் சில ஆய்வுகளுக்காக 1910, 20கள், 30களில் வெளிவந்த மாதப் பத்திரிகைகளை அதிகம் வாசிப்பேன். அதில் பெண்களுக்கு உண்மையில் மிகப்பெரிய கனவுகள் இல்லை என்பதையே காட்டுகின்றன. நீங்கள் Little Womenஐ வாசித்தால் ஒரு நாவலாசிரியராக விரும்பிய பெண் அனைத்தையும் விட்டுவிட்டு ஒரு வயதானவரைத் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளை வளர்க்கத் தொடங்குவார். ஏமி எனும் கதாபாத்திரம் மட்டுமே அவ்வாறு இருக்காது. ஆனால் அவளது நிலையும் மோசமானால் – Little Women குறித்த முக்கியமான விஷயங்களைச் சொல்வதற்கு மன்னிக்கவும் – அவளால் தான் விரும்பியதுபோல பாரிஸில் ஒரு ஓவியராக முடியவில்லை என்றால் வீட்டிற்கு வந்து ஒரு செல்வந்தரை திருமணம் செய்து கொள்ளவே திட்டமிடுவாள். அப்படியான உலகமாகத்தான் இருந்தது. அந்த உலகத்தில்தான் வெல்லித் வாழ்கிறாள். அந்த உலகத்தில் இருந்துதான் வெல்லித் இறுதியில் தப்பிக்கிறாள்.
முடிவைப் பற்றிப் பேசும்போது, இந்த புத்தகத்தின் பெரிய கருப்பொருள் இந்த உலகில் இருக்கும் கடவுள்கள் சலனமுற்றவர்கள் என்று சொல்கிறது. மேலும் லவ்கிராஃப்ட் உங்களைப் பயமுறுத்தும் கிறிஸ்தவ எண்ணங்களான சொர்க்கம், நரகம், மீளா தண்டனை ஆகியவற்றில் இருந்து பயங்கரத்தைக் கடத்தி நாத்திகத்துவம் வாய்ந்த அண்டத்தின் பரந்தத் தன்மை பற்றியும், மனிதனின் முக்கியத்துவமற்ற நிலையை பற்றியும் பயத்தை ஏற்படுத்தி விடுவார்.
ஆம், ஆழ் விண்வெளியின் நடுக்கம் தரும் அண்டவியல் பயங்கரம்.
இந்தத் தீய கடவுள்களின் கருப்பொருளை வைத்து நீங்கள் சிந்தித்தது இதுதானா? அண்டம் சலனத்துடன் இருப்பதுபோலவே அவர்களும் சலனத்துடன் இருக்கிறார்களா?
நிச்சயமாக, அதேபோல அவர்கள் அற்பத்தனம் வாய்ந்தவர்களும்தான். காரணம் இறுதியில் கடவுள்கள் இல்லாத உலகில் அதற்கே ஏற்ற பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் கடவுள்கள் இல்லாத உலகத்தில் நிலவு என்பது இப்படியும் அப்படியும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டு இருக்காது. அதற்கென்று சட்டங்கள் இருக்கும். இந்த உலகத்திற்கு என்றே சில விதிகள் இருக்கும். அந்த விதிகள் சலன புத்தியுள்ள கடவுள்களால் ஆளுமை செய்யப்படவில்லை. விதிகள் மக்களுக்கு வடிவத்தைத் தருகிறது. எதிர்காலத்தைப் பற்றி யூகிக்க ஒரு வாய்ப்பைத் தருகிறது. சாத்தியக்கூறுகள் பற்றி யூகிக்கவும் வாய்ப்பளிக்கிறது.
இந்தப் புத்தகம் எந்த வகையில் பொருந்தும் என நினைக்கிறீர்கள்? லவ்கிராஃப்ட் புனைவுக்கு என்று முழு துறையே இருக்கிறது. சில பதிப்பகங்கள் லவ்கிராஃப்ட் புனைவுகளைத் தவிர வேறு எதையுமே பதிப்பதில்லை. இதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
அதுதான் நிலை. ஆர்க்கம் ஹவுஸ் எப்போதும் அதைத்தான் செய்கிறது. ஆகஸ்ட் டெர்லெத் – அவர்தான் அதை செய்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் நிறைய பேர் லவ்கிராஃப்டை பயங்கரங்களுடன் அல்லது கலை உணர்வுடன் இணைக்க விரும்புகிறார்கள். இந்த லவ்கிராஃப்ட் விஷயம் எங்கும் வியாபித்திருக்கிறது என்பதை நான் புத்தகத்தை முடித்தவுடன்தான் தெரிந்துகொண்டேன். ‘என்னால் இந்த களத்தில் ஆட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை’ என நான் நினைத்தேன். ஆனால் விளையாடியதற்காக நான் மகிழ்கிறேன். லவ்கிராஃப்ட் முன்னணியில் வந்ததற்குக் காரணம் உலக பேண்டஸி விருது குறித்து நடைபெறும் ஏகப்பட்ட விவாதங்கள். லவ்கிராஃப்டின் மார்பளவு சிலைதான் அந்த விருது.பயங்கரத்திற்குப் பெயர்போன எழுத்தாளரை ஏன் ஃபேண்டஸிக்கு பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்? இனவெறி எண்ணத்துடன் எழுதிய எழுத்தாளரை நாம் ஏன் விருதாய் கருத வேண்டும் என்கிற கேள்விகள் எழுகின்றன. அறிவியல் புனைவு, ஃபேண்டஸி எழுத்துலகில் ஏகப்பட்ட விவாதங்கள் நடைபெறுகின்றன. இத்தனை கவனத்திற்கும் அவர் தகுதியானவர்தானா? ஆம் என்றால் ஏன்? இல்லை என்றால் ஏன் கூடாது? இப்போது பலரும் லவ்கிராஃப்டை சுட்டிக்காட்டி, ‘நான் அவரை நேசித்தேன், ஆனால் நான் எப்போதும் சங்கடமாக இருந்ததற்கான காரணங்களை இப்போது காண்கிறேன்.’ அல்லது ‘நான் அவரை நேசிக்கிறேன், அவர் ஆழமான பார்வைக்குத் தகுதியானவர் போல் உணர்கிறேன்’ என்றெல்லாம் சொல்கிறார்கள்.
லவ்கிராஃப்டை வாசிப்பதில் பலவிதமான அணுகுமுறைகளைப் பார்க்கிறேன். ஆனால் அவை மறைந்துவிடும் என உறுதியாக நம்புகிறேன். இது ஒரு சாதாரண போக்கு. இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாம் லவ்கிராஃப்டை விட்டுவிட்டு வேறொன்றுக்குச் சென்றுவிடுவோம். இதுதான் ஷெர்லி ஜான்சனுக்கும் நடந்தது. லவ்கிராஃப்ட் குறித்து ஆராயக்கூடிய அல்லது எதிர்க்கக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. லவ்கிராஃப்டுக்கு நீங்கள் பல வழிகளில் பதிலளிக்கலாம்.
நீங்கள் ‘She Walks in Shadows’ தொகுப்பை வாசித்தீர்களா என்று தெரியாது? அது ஒரு வெளிப்படையான பெண்ணிய லவ்ஃகிராப்ட் புனைவு.
நான் அதைப்பற்றி கேள்விப்பட்டேன். ஆனால் எனது புத்தகத்தை முடிக்கும் வரை வேறு ஒருவருடைய லவ்கிராஃப்டைப் படிக்கக்கூடாது என முடிவெடுத்திருக்கிறேன்.
The Dream-Quest of Vellit Boe குறுநாவல் குறித்து நான் கேட்க விரும்பிய இன்னொரு விஷயம், இது பதிப்பிடுவதற்கு ஒருவகை மிகக் கடினமான கதை. ஆனால் நீங்கள் ஏன் இதை ஒரு குறுநாவலாக எழுத முடிவு செய்தீர்கள் என்று சொல்கிறீர்களா? அதற்கென்று எந்த வகையான சந்தை இருக்கிறது?
Tor.com தனிப்படைப்பு குறுநாவல்களைச் சில காலமாகவே பதிப்பித்து வருகிறது. எப்படியும் நான் குறுநாவல்தான் எழுதியிருப்பேன். ஆயினும் அந்த இணையதளம் குறுநாவல்களைப் பதிப்பிகிறது என்பது நல்ல விஷயம். இந்தப் புத்தகம் உண்மையில் இன்னும் பெரிதான ஒன்று. இப்போது 40,000 வார்த்தைகள். ஆனால் ஒரு கட்டத்தில் 60,000 வார்த்தைகள் இருந்தன. அது அழகிய மொழி, கண்கவரும் காட்சியின் 20,000 வார்த்தைகள். அதை சிலர் எடுத்து விடும்படி பரிந்துரைத்தார்கள். அதனை எடுப்பது என்னையே வெட்டுவதுபோல இருந்தது. ஆனால் வெட்டியவுடன் இப்போது புத்தகம் பார்ப்பதற்கு மேலும் சிறப்பாக இருக்கிறது.
குறுநாவலின் நீளம், அதற்கு என்று அற்புதமான பலன்கள் இருக்கின்றன. பிரமாண்ட துணை கதைகள் தேவையில்லை,நீங்கள் உங்கள் கருப்பொருளுக்கு விசுவாசமாக இருக்கலாம், உங்கள் தலைப்புக்கு உண்மையானவராக இருக்கலாம், நீங்கள் அப்படிப்பட்ட கதையைத்தான் சொல்கிறீர்கள் என்றால் தேவையில்லாமல் அதனை கடினப்படுத்த வேண்டாம். தேடல் கதைகளுக்கு இது மிக பொருத்தமான அளவு என நினைக்கிறேன். நீங்கள் மீண்டும் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் எந்தக் கூடுதல் கோணமும் இல்லாமல் தேடலை 40,000 வார்த்தைகளில் முன்நகர்த்திச் செல்லலாம். அதனால்தான் இதனை மிகச்சிறந்த நீளமாக கருதுகிறேன். யாரும் இதனை செய்யாததால் உண்மையில் பயன்படுத்திக் கொள்ளப்படாமல் இருக்கிறது.
பி.எஸ் பதிப்பகமும் தனிப்படைப்பு குறுநாவல்களைப் பதிப்பிக்கின்றது. பி.எஸ் பிரிட்டனில் இருக்கிறது என நினைக்கிறேன். சிலர் அதனுடன் இணைந்து பரிசோதனை செய்து பார்த்துள்ளார்கள். ஆனால் மின்புத்தகங்களால்தான் அதனை எங்களால் எழுத முடிகிறது என நினைக்கிறேன். காரணம் மக்களுக்கு அதிகம் பொறுமை இருக்கிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட நீளத்திற்கு எழுத வேண்டும் என்பதில்லை. அதில் 32 பக்க இடைவெளி இருக்கத் தேவையில்லை. வாசகரும் புத்தகத்தை வாங்கும்போது ‘இந்த நூலில் அதிக பக்கங்கள் இருக்கின்றன. அதனால் 18 டாலருக்கு தகுதியான நூல்தான்’ எனக் கருதத் தேவையில்லை. இப்போது எல்லாமும் மாறிவிட்டன. இப்போது குறுநாவல்களுக்கு நிறைய இடம் இருக்கின்றன.
இது உண்மையில் உற்சாகமளிக்கிறது. 60, 70 களில், பெரும்பாலான அறிவியல் புனைக்கதை நாவல்கள் 60,000 வார்த்தைகளைக் கொண்டதாக இருந்தன. ஆனால் இந்த நாட்களில் நாவல்கள் இரண்டு மடங்கு நீளமாகிவிட்டன. நான் புரிந்து கொண்டபடி அது கலை காரணங்களுக்காக அல்லாமல் பொருளாதார காரணங்களுக்காக. ஆனால் மக்கள் வேகமாக படிக்க கற்றுக்கொள்ளவில்லை.
சரிதான். புத்தகங்கள் ஒன்று நீளமாக இருக்க வேண்டும் அல்லது சிறுகதைகளாக இருக்க வேண்டும். இதற்கு நிறைய காரணங்கள் இருந்தன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் Tor.com-ல் பணிபுரிந்தபோது யாரும் குறுநாவல்களை வாங்க விரும்பவில்லை. யாரும் வாங்க விரும்பாத ஒன்றை நாங்களும் வெளியிடவில்லை. ஆனால் இப்போது நாம் இ-புத்தகங்களைப் படிக்கிறோம். இப்போது பணத்தின் மதிப்பு பக்கத்தால் மதிப்பிடப்படுவதில்லை. ஆனால் நீங்கள் இப்போது உங்களுக்கு வேண்டிய அளவில் எழுதலாம். இந்த அளவு அறிவியல் புனைவுக்கு, ஃபேண்டஸி வகைகளுக்கு பொறுத்தமான அளவு. பலரும் அறிவியல் புனைவு வாசிப்பதற்குக் கடினமாக இருப்பதாகச் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். முன்பு இருந்ததைவிட அறிவியல் புனைவு இப்போது குறைவாக அணுகப்படுகிறது. அதற்கு உள்ளடக்கமும் ஒரு காரணம் என்றாலும், அதன் வடிவமும் ஒரு முக்கிய காரணம். 60,000 வார்த்தைகள் என்றால் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.
எழுத்து, பதிப்புலகில் இல்லாத நண்பர்களிடம் நான் பேசும் போதெல்லாம், “நான் இப்போது அதிகம் படிப்பதில்லை” என்று எப்போதும் கூறுகிறார்கள். ஏன் என்று அவர்களிடம் கேட்டால், “நான் இந்த புத்தகத்தை வாங்கினேன். பாதி வரை படித்தேன். இப்போது முழுதாக படிக்க நேரம் இல்லை. அதை முடிக்கும்வரை வேறு புத்தகம் எதையும் வாங்கப்போவதில்லை’ என்கிறார்கள்.
ஆமாம். அதேசமயம் அது Mission of Gravity ஆக இருந்தால் அவர்கள் நிச்சயம் முடித்திருப்பார்கள்.
உங்கள் உண்மையான சிறுகதைகள் சிலவற்றைப் பற்றியும் உங்களுடன் பேச விரும்புகிறேன். உங்களின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று “Spar”. ஸ்பரைப் பற்றிக் குறிப்பிடாமல் உங்களுடன் பேச முடியாது, இல்லையா?
உங்களால் Spar ஐ நினைவு படுத்தவும் முடியாது.
இதனாலேயே பாட்காஸ்டில் வெளிப்படையான உள்ளடக்க எச்சரிக்கையைச் சேர்த்துள்ளோம்.
நல்லது. ஸ்பரைப் பற்றி என்ன கேட்கப்போகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஸ்பர் எழுதுவதற்கு சுவாரஸ்யமான கதையாக இருந்தது. ஏனென்றால் நான் ஒரு கதையை எழுதும்போது முதன்முறையாக, ‘மற்றவர்கள் கிடக்கட்டும். அவர்கள் என்னைப் பற்றியோ என் கதையைப் பற்றியோ என்ன நினைக்கிறார்கள் என்பது கவலை இல்லை. இதுமாதிரியான கதையாகத்தான் இருக்க வேண்டும்’ என்று நினைத்தேன். அதை எழுதுவது எனக்கு அசெளகரியமாக இருந்தது. நான் அதை ஒருவரிடம் காட்டினேன். ‘நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியாது’ என்பதுபோல இருந்தேன். பிறகு மீண்டும் திருத்தி எழுதினேன். என்னால் அந்த வரிசையில் இருந்த அத்தனையையும் ஒரே மூச்சில் படிக்க முடியவில்லை. அதனால் தனித்தனி பகுதிகளை தனித்தனியாக வாசித்தேன். ஒவ்வொன்றையும் செப்பனிட்டேன். ஒன்றை முடித்துவிட்டு அடுத்ததற்குச் சென்றேன். அந்தக் கதையே ஒழுங்கில்லாமல் சொல்லப்பட்டிருப்பதால் நான் செய்தது பலனளித்தது.
கிளார்க்ஸ் வோர்ல்டால் அது வாங்கப்படும் வரை என்னால் அதனை முழுமையாகப் படிக்க முடியவில்லை. ஏனென்றால் அந்த நேரம் வரை அதுபோதுமான மக்களால் வாசிக்கப்பட்டுவிட்டது. ‘நான் என் கண்களின் ஊடாக இல்லாமல் மற்றவர்களின் கண்கள் ஊடாகப் பார்க்கிறேன். அதனால் அதனை வேறு தரத்தில் மதிப்பிடுகிறேன்’ எனத் தோன்றியது. அந்தக் கதை எழுதுவதற்குக் கடினமானதாக இருந்தது. அதன் வார்த்தைகள் கடினமாக இல்லாவிட்டாலும் ஒரு லட்சியத்துவம் வாய்ந்த கதையாக இருந்தது. அது என்னில் எல்லாவற்றையும் மாற்றியது. காரணம் நான் பாவங்களைத் தைரியமாகப் பேசினேன். எனக்கு திருப்தியுறும் கடினமான விஷயங்களை எழுதினேன். மக்களுக்கு அது பிடிக்காவிட்டாலும் என்னைத் திருப்திப்படுத்தும் கடின விஷயங்களை எழுதுவது சிறந்தது என உணர்ந்தேன்.
அதைப் படிக்காதவர்களுக்கு, அக்கதையின் சுருக்கத்தைச் சொல்ல முடியுமா?
அதன் முதல் வாக்கியத்தை மட்டும் நான் படிக்கவா? அது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். ஸ்பார் 199 பக்கங்களில் இருக்கிறது. பதிப்பாளர்கள் அந்தக் கதையைப் புத்தகத்தின் இறுதியில் வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் புத்தகத்தை வாசித்து முடிக்காத வாசகர்களால் அந்தக் கதையை அடைய முடியாது.
அதை அவர்கள் முதலில் வைத்திருக்க வேண்டும். உங்களால் அதனை வாசிக்க முடியாவிட்டால் புத்தகத்தின் மற்ற பகுதிகளைப் படிக்க நீங்கள் தகுதி வாய்ந்தவர் அல்ல.
நீங்கள் மீதியைப் படிக்கவே வேண்டியதில்லை. முதல் வாக்கியமே, ‘அந்தச் சிறிய உயிர்காக்கும் படகில் அவளும் அந்த வேற்றுக்கிரகவாசியும் முடிவில்லாமல், இடைவிடாமல் புணர்கிறார்கள்’ என்று தொடங்குகிறது. இது முழு கதைக்குமான தொனியை அமைத்து விட்டது. இரண்டு விண்கலங்கள் மோதிக் கொண்டபோது உயிர் காக்கும் படகில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. அதில் பிழைத்தவர்கள் சிலியா எனப்படும் உணர் கொம்புகளை வைத்திருக்கும் வேற்றுக்கிரகவாசியும், ஒரு மனுஷியும்தான். அந்த மனுஷியின் பார்வையில்தான் நாம் நிகழ்வுகளை அணுகுகிறோம். அவள் தொலைத்தொடர்பை நிறுவ முயற்சிக்கிறாளோ இல்லையோ, ஏகப்பட்ட பாலியல் செயல்பாடுகள் அரங்கேறுகின்றன. அது தொடர்பாடலாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அவளுக்கே அதுபற்றித் தெரியவில்லை. அது உண்மையில் ஆழ் விண்வெளி கப்பலின் மோதல் பற்றிய கதை கிடையாது. அது நான் பயன்படுத்திய உவமை. அது நான் கண்டறிந்த மிக சக்திவாய்ந்த உவமை. சக்தி வாய்ந்த காட்சிப்படுகை. அதைத்தான் நான் செய்ய விரும்பினேன். உறவுகளில் இருக்கும் அசெளரியங்கள் எல்லாவற்றையும் என்னால் அதில் வைக்க முடிந்தது.
கதையைப் பற்றிய மக்களின் புரிந்துணர்வில் ஏகப்பட்ட மாறுதல்கள் இருந்தன என்று நீங்கள் சொன்னதை நான் கேள்விப்பட்டேன்.
ஆம் அது தெளிவாகத் தெரிந்தது. நிறைய மக்கள் நிறைய பின்னூட்டங்கள். ‘சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு வேற்றுகிரக ஆபாசபடம்’ எனும் விமர்சனத்தில் இருந்து, ‘இது திருமணம் தவறாக முடிந்த கதை’ என்பது வரை. மக்கள் மாற்று முடிவுகளை எதிர்பார்த்தார்கள். அந்தக் கதை முடிய வேண்டும் என்று அவர்கள் விரும்பிய விதம் வேறு. ஆனால் நிறையப்பேர் பல வித்தியாசமான விஷயங்களை இதில் கண்டார்கள். சிலர் அவளை ஆத்திரக்காரி என்றார்கள். சிலர் அந்த வேற்றுகிரகவாசிதான் ஆத்திரக்காரன் என்றனர். இது ’Ponies’ கதையைப் போல வேறுபட்ட விமர்சனத்தை பெறவில்லை. ஆனாலும் வலுவான எதிர்வினையைப் பெற்றது.
அடுத்து ‘Ponies’க்குதான் வருகிறேன். ஆனால் அதற்கு முன் கதையை யாரிடத்திலும் காட்டுவதற்கு உங்களுக்கு அச்சம் இருந்ததாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களுக்குப் பயம் அதிகரித்ததா? அல்லது அது எவ்வாறு உள்வாங்கப்படும் என்று நினைத்து பயந்தீர்களா?
எனக்கு பயம் அதிகரித்து இருந்தது. ஆனால் நீல் கிளார்க் அதில் இருந்து என்னைக் காப்பாற்றினார். கருத்துக்களில் தனிப்பட்ட தாக்குதல்கள் இருந்தன. அதை அவர் நீக்கிவிட்டார். கதையைப் பற்றிய விமர்சனமாக இருந்தால் அதை அவர் வைத்துவிடுவார். மக்கள் என் கதைகளை விமர்சனம் செய்வது எனக்கு எப்போதும் சங்கடம் ஏற்படுத்தாது. அது என் கைகளை விட்டுச் சென்ற பின் அது என் கதை இல்லை. நான் ஒரு விஷயத்தை பேச விரும்புகிறேன். மக்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படி அதை அவர்கள் படித்துக் கொள்ளட்டும். அவர்கள் மெல்லுணர்வு கொண்ட பாலியல் நகைச்சுவையாக படிக்க விரும்பினால் படித்துக் கொள்ளட்டும். நான் அவர்களை வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். அதுதான் என் நிலைபாடு. சிலர் என் கதைகள் புத்திசாலித்தனமாக இருப்பதாகவும், சிலர் சொதப்பிவிட்டதாகவும் எழுதுவார்கள். இரண்டுமே உண்மைதான். ஒரு விஷயம் நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். எனக்கு அது சரியானதுதான். அப்படித்தான் அவர்கள் என் கதையைப்பற்றி எப்போதும் சொல்கிறார்கள். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
இந்த நேரத்தில், அந்தக் கதையின் ஆரம்பத் தூண்டுகோல் என்னவென்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? முதல் படம், அல்லது பாத்திரம் அல்லது மனநிலை என்னவாக இருந்தது?
முதல் தூண்டுகோல் என்னவென்றால் அப்போது நான் ஒரு நீண்ட அறிவுசார்ந்த நாவல் குறித்து பணியாற்றி வந்தேன். ஆனால் அதை நிறுத்திவிட்டேன். அப்போது நான் சிலரிடம், ‘எனக்கு இந்தப் புத்தகத்தை எழுதுவது சோர்வாக இருக்கிறது. நான் உயிர் காக்கும் படகில் இரண்டு பேர் புணர்வதைப் பற்றி எழுதப்போகிறேன். அது மிகவும் எளிமையானதாக இருக்கும் இல்லையா?’ என்று சொல்வேன். அதன் பின் அது மாறுதல் அடைந்து, ‘ஒரு வேற்றுக்கிரகவாசியும் ஒரு மனுஷியும் படகில் புணர்கிறார்கள்’ என்று மாறியது. ஆனால் பசிபிக் பெருங்கடலில் இருந்த படகிற்கு வேற்றுக்கிரகவாசி எப்படி வந்தது என்று தெரியவில்லை. அதனால் நான் விண்வெளியைக் கொண்டு வந்தேன். அதன்பின் நான் முன்பு கூறிய முதல் வரி நினைவுக்கு வந்தது. அதன்பின் அதனுள் இருந்த கேளிக்கை நீங்கி, கதை தீவிரத் தன்மையை எட்டியது.
அதுபோன்ற ஒரு வரியை நீங்கள் எழுதிவிட்டால் அதற்கு சரியான விடை கொடுத்தாக வேண்டும். நீங்கள் பின் வாங்க முடியாது. நீங்கள் மொழியைப் பற்றி உங்கள் மனதையும் மாற்றிக் கொள்ள முடியாது. அதில் சொல்ல வரும் விஷயங்கள் பற்றியும் உங்கள் மனதை மாற்ற முடியாது. அந்த முதல் வரி கடுமையான கதையை எதிர்பார்த்தது. அந்த முதல் வரிக்குத் தேவைப்பட்ட கதையை நான் எழுத விரும்பவில்லை என்றால் நான் வெறுமனே முதல் வரியை எழுத வேண்டும்.
ஒரு நகைச்சுவையாக ஆரம்பித்து ஒரு தீவிர கதையாக மாறியது எனக்குப் புரிகிறது. எனது கதைகள் பலவும் நகைச்சுவையாக தொடங்கி தீவிரத்தன்மையை அடைந்தவைதான். ஒருமுறை ஸ்டீபன் கிங்கிடம், ‘உங்களுக்கு ஒரு கதைக்கரு தோன்றினால் அது நல்ல கருவா, இல்லையா என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு கிங், ‘அது எனக்குச் சிரிப்பூட்டினால் அது நிச்சயம் நல்ல கரு என நினைப்பேன்’ என்றார்.
அது உண்மைதான். நான் இப்போது ஒன்றில் பணியாற்றி வருகிறேன். அதுவும் ஒரு நகைச்சுவை போலவே தொடங்கியது. நான் எப்போதும் பயன்படுத்தும் வாக்கியம். நான் எப்போதும் விலங்குகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பேன். அப்போது நான் கோழிகளைப் பற்றி பேசிக்கொண்டிருதேன். அப்போது கோழிகள் பெரும் கூட்டமாக வந்து நிலப்பரப்பை விழுங்குவது போல சிந்தித்தேன். அதுதான் தொடக்கம். அது நினைக்கவே கேளிக்கையாக இருந்தது. பிறகு தோன்றியது, ‘அந்த கோழியே ரேப்டர் டைனோசர்களாக இருந்தால்? அந்த ரேப்டர்கள் நெருப்பு எறும்புகளாக இருந்தால்? அதில் எந்த நகைச்சுவையும் இருக்காது’. நான் இப்போது இதுவரை எழுதிய மிக இருள் வாய்ந்த கதையின் மத்தியில் இருக்கிறேன். அதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இப்போது ‘Ponies’ கதைக்குச் செல்வோம்.
Ponies உண்மையில் ஒரு சிறுகதை. நெபுலா விருதை வென்ற மிகச் சிறிய கதை என நினைக்கிறேன். சிறுமிகள் ஒரு மட்டக்குதிரை என அறியப்படும் போனிக்களை வைத்திருக்கிறார்கள். அந்த குதிரைகள் ‘My Little Pony’ கார்டூன் படங்களில் வரும் குதிரையைப் போல இருக்கின்றன. நான் அதற்காக கார்டூன் நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடையும் பார்த்து முடித்தேன். எண் கண்கள் இறுதியில் ரத்தம் சிந்தின. ஏனென்றால் எல்லோரிடமும் போனி இருக்கிறது. போனி எனும் அந்தக் குதிரைக்குக் கொம்பு உண்டு. அதேபோல இறக்கையும் உண்டு. அவற்றால் பேச முடியும். ஏனென்றால் எல்லா சிறுமிகளும் போனிக்கள் தங்களிடம் பேச வேண்டும் என்று விரும்புகிறார்கள். என் கதையில் ஒரு விருந்து நடைபெறும். அங்கு நீங்கள் ஒன்பது, அல்லது பத்து வயதுடையவராக இருந்து, மற்ற சிறுமிகள் உங்களுக்கு முக்கியமானவராக இருந்து, நீங்கள் அந்த விருந்துக்கு போனி குதிரையை கொண்டு சென்றீர்கள் என்றால் மோசமான விஷயம் நிகழும். அவ்வாறு நிகழாமல் இருக்க அந்த போனி குதிரை தன்னுடைய மூன்று சிறப்பம்சங்களைக் கைவிட வேண்டும். அதைப்பற்றியதுதான் இந்தக் கதை. பார்பராவும் அவரது போனியான சன்னியும் அதுபோல ஒரு விருந்துக்குச் செல்கிறார்கள்.
நீங்கள் சொன்ன விதத்தைப் பார்க்கும்போது உண்மையிலேயே அதுபோல ஒரு விருந்து இருப்பதாகத் தோன்றுகிறது.
கிட்டத்தட்ட. நான் சிறுமியாக இருந்தபோது, அதாவது, சிறுமிகள் எப்போதும் ஏதாவது விருந்து ஏற்பாடு செய்வார்கள். ஒன்பது முதல் பதினொன்று வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் ஒன்றாகக்கூடி விருந்துபோல ஒன்றை ஏற்பாடு செய்து விளையாடுவார்கள். அவர்கள் வட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே அதில் அனுமதிக்கப்படுவார்கள். அந்த விருந்துகள் பிறந்தநாள் விருந்து, ஹாலோவின் விருந்துகள்போல இருக்கும்.
விருந்துக்கு விரும்புபவர்களை அழைப்பார்கள். அதில் எந்த ஒரு அரசியல் தன்மையும் இருக்காது. அதைத்தான் நான் எழுதும்போது யோசித்தேன். ஒரு பிறந்தநாள் விருந்துக்கு எல்லா சிறுமிகளும் அழைக்கப்பட்டு நானும் இன்னொரு சிறுமியும் மட்டும் அழைக்கப்படவில்லை என்றால் எப்படி இருக்கும்? உண்மையில் குதிரைகளை வெட்டும் வகையிலான விருந்துகளோ அதை ஒட்டிய நிகழ்வுகளோ எனக்குத் தெரிந்த வரை கிடையாது.
My Little Pony நிகழ்ச்சியின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் பார்த்தபோது உங்களுக்கு இருந்த அபிப்ராயம் என்ன?
Friendship is Magic எனும் ஒரு அத்தியாயம் அப்போதுதான் தொடங்குகிறது. நான் அதை எழுதத் தொடங்கும்போது முதலில் பழைய நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு பிறகு புதிய அத்தியாயங்களைப் பார்த்தேன். புதிய நிகழ்ச்சி பழையதில் இருந்து வேறுபட்டது என்பதை நிறுவுவதற்கு அதிக மெனக்கெடல்கள் இருந்தன. Friendship is Magic எனும் அத்தியாயம் நாம் எப்படி ஒருவர் மற்றொருவருக்காக நிற்கிறோம், ஒவ்வொருவரும் மற்றவருக்கு துணையாகிறோம், ஒருவர் எப்போதாவது பாதுகாப்பற்று உணர்ந்தால் எல்லோரும் ஒன்றிணைந்து அச்சிறுமியை சிறப்பாக உணர உதவுகிறோம் போன்ற விஷயங்களைப் பேசுகிறது. அந்தக் கருத்து நன்றாக இருந்தது. ஆனால் அந்தக் குழந்தைகள் ஒருவரை ஒருவர் எப்படி நடத்துகிறார்கள் என்று சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அது ஒரு ஃபேண்டஸி உலகம்போல இருந்தது. அதனால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை. ஆனால் ஃபேண்டஸி உலகில் எல்லாமும் நன்றாக இருக்கும் என்ற பிம்பத்தைத் தருவதைத் தந்தது.
சிறுமிகளுக்கு ஒருவிஷயம் பிடித்திருந்தால் அதுகுறித்து அதிக எதிர்ப்புணர்வு வருகிறதே. அதில் உள்ள பாலியல் வேறுபாடுகளைப் பற்றிப் பேச முடியுமா?
உண்மைதான். Jem எனும் திரைப்படம் இதற்கு சிறந்த உதாரணம். Jem சிறுமிகளுக்குப் பிடித்த படம் இல்லை. ஒரு முதிர்ச்சியான ஆண் அந்தப் படத்தைப் பார்த்து அதுதான் சிறுமிகளுக்குப் பிடிக்கும் என நினைத்துக் கொள்கிறான். ஒரு ஆண் Jem திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, ‘சிறுமிகள் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறார்கள்? அவர்கள் ராக் இசைப் பாடகர்களாக வேண்டும் என்று விரும்புகிறார்கள்’ என நினைக்கிறான். ஆனால் போனிகள் விஷயம் அப்படியில்லை. போனிகள் உண்மையில் சிறுமிகள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதையே செய்கின்றன. ஆனால் அதை உயர்ந்த அளவில் செய்கின்றன.
உங்கள் Ponies கதைக்கு வந்த வரவேற்பு என்ன? அது நெபுலா விருது வெல்லும் என்று என்றைக்காவது நினைத்தீர்களா?
நிச்சயமாக இல்லை. அது முதலில் மிகவும் சிறிய கதை. மேலும் அது பெண்களின் கதை. அதுபோன்ற விஷயங்கள் நெபுலாக்களுக்குத் தெரிந்திருக்காது என நினைத்தேன். ஆனால் அதில் நடைபெறும் குறிப்பிட்ட நிகழ்வு, குறிப்பிட்ட வயதில் உள்ள குறிப்பிட்ட பாலினத்திற்கு நடப்பதால் அதற்குப் பரந்துபட்ட அர்த்தம் இருப்பதாகத் தெரிந்தது.
உங்கள் கதைகள் பல்வேறு வகையில் பொருள் விளக்கம் கொள்ளப்படுகின்றன. அது எல்லாக் கதைகளுக்கும் பொருந்துமா?
ஒரு கதையை ஆயிரம் வித்தியாசமான முறைகளில் படிக்கலாம். நான் கல்லூரியில் படிக்கும்போது சிக்கலில் மாட்டிக் கொள்வேன். காரணம், அனைத்து மதக் கவிதைகளும் கலவிக் கதைகள் என்பதுதான் என் கருத்து. நான் அதன் மொழியைச் சுட்டிக்காட்டி, பாருங்கள். பாருங்கள், இதுதான் பாலியல் மொழி என்று விளக்குவேன். அதன்பின் பேராசிரியருடன் வாக்குவாதம் ஏற்பட்டு நான் வகுப்பை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. அடுத்த ஆண்டு மீண்டும் அதே பாடத்தைப் படிக்க வேண்டி வந்தது. ஒரு கவிதை வகுப்பால் நான் கல்லூரிப் படிப்பையே முடிக்க முடியாத நிலை இருந்தது.
நீங்கள் Pride and Prejudice ஐ படித்துவிட்டு அது குதிரைகளைப் பற்றிய கதை என்று சொல்லலாம். நீங்கள் குதிரை இருப்பதைக்கூட நினைவில் வைத்திருக்க மாட்டீர்கள். ஆனால் குதிரைகள்தான் கதையை நகர்த்தும் முக்கிய அம்சங்கள். நாம் நமக்கு வேண்டியதுபோல கதையை மாற்றும் உத்தி இருக்கிறது. அதுதான் கதைகளின் அதிசயமே. அது பரந்த தன்மை கொண்டது. விநோதமானது. ஆச்சரியங்களை நிகழ்த்தக்கூடியது.
***
