• சீன ஓவியர் காய் குவோ-கியாங்  உடன் ஒரு நேர்காணல்
  • நேர்காணல் : எலெனா க்யூ
  • தமிழாக்கம் : எம்.கார்த்திகேயன்

 

 

     மே மாதத்தின் ஒரு காலை நேரத்தில் நியூயார்க் மாநில சோஹோ மாவட்டத்தில் காய் தனது மனைவி ஹாங் ஹாங் வு  மற்றும் அவர்களது இரு மகள்களோடும் வசிக்கும் அடுக்கு வீட்டுக்கு வந்தோம்.அந்த சமயத்தில் அவர் தனது தொழிற்கூடத்தைப் புதுப்பித்துக்கொண்டிருந்ததால் அறைகலன்களின் மேலும் தரையிலும் கிடந்த அவரது ஓவியங்கள் அவரது வீடு ஒரு வகையான பணிக்கூடம்போல் தோற்றம் தருவதைப் பார்க்கும் அதிர்ஷ்டத்தைப் பெற்றோம். காய் குடும்பத்தார் மற்றும் அவர்களது சில நண்பர்களுடன் மறக்க முடியாத ஒரு மதிய உணவை ரசித்து உண்டோம்.  அந்த நேரம் அந்த ஓவியரின் ஒழுங்கு முறை தோற்றம், இசையில் அவருக்கிருந்த பரந்த ஆர்வம் மற்றும் அவர் உரையாடும் முறை எல்லாவற்றையும் இயற்கையான அவரது வசிப்பிடத்தில் கவனிப்பதற்கு ஒரு பெரும் வாய்ப்பாக இருந்தது. 

காய் குவோ கியாங் உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட தற்கால சீன ஓவியர்களுள் முக்கியமானவர் என்று கூறலாம். அவர் சீனாவின்  பியூஜியன் மாகாணத்திலுள்ள  க்வான்ஸூ  நகரத்தில் 1957ம் ஆண்டு பிறந்தார். கடற்கரைப்பகுதியான இந்த நகரம் கலாச்சார வெளிப்படைத்தன்மை மற்றும் பலவகை மதங்களின் இருப்புக்கும் புகழ் பெற்றது. அவர் 1995ம் ஆண்டு நியூயார்க்குக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் சமூக மற்றும் கலாச்சாரக் கருப்பொருள் நிறைந்த ஓவியங்களை வரைந்தார்.  சீனாவின் சீர்திருத்தம் மற்றும் அந்த நாட்டுக்குள்ளேயே நிகழ்ந்த மாற்றம் முதலியவற்றால் உலகின் மற்ற பகுதிகளில் சீன ஓவியங்களின் உடனடி வரவுடன் இசைந்து போகும்படி அவரது ஓவியங்கள் அமெரிக்காவில் காட்சிப்படுத்தப்பட்டன.

கிழக்கிலிருந்து மேற்குலகிற்கு இடம் பெயர அவர் எடுத்த முடிவு இரண்டு கலாச்சாரங்களையும் ஒன்றுடன் ஒன்று நெருங்கச்செய்வதற்கான ஒரு பேரார்வத்தை அவருள் விதைத்தது.  தாவோயிஸ உலகியல் தத்துவத்தில் அவர் தீவிர ஆசை கொண்டிருந்தார்.  அதனால் அவர் நிரந்தரமான நிலை கொண்ட ஆழ்ந்த இயக்கத்திலும் மாற்றத்திலும் தன்னை உணர்ந்தார். கருத்தியல் ஓவியரான அவர் சமூக முரண்கள்,  அன்றே தோன்றி அழிகிற ‘வெடிப்பு  நிகழ்வுகள்’ மற்றும் வெடி மருந்துகளைக்கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் மூலமாக கலாச்சார நினைவை மீட்டெடுத்து கருத்தியல் பிரச்னைகள் மற்றும் வரலாற்று முரண்பாடுகளை கலை நயத்தின் வாயிலாகத் தீர்த்தார். அவரது ஓவியங்களில் அவரது கலாச்சார வேர்களை  எப்பொழுதும் நாம் உணரலாம். அது இயற்கையின் உலகம் மற்றும் ஆன்மீக உணர்வுக்கு நம்மைத் திரும்பவைக்கும்.மேலும் அது தெரிந்த மற்றும் தெரியாத உலகங்களுக்கு ஒரு வழியாய் அமையும்.காயின் ஓவியங்களில் அடிப்படையாக மீண்டும் மீண்டும் வரும் கருத்தியல் உணமையிலேயே இவ்விரண்டு உலகங்களையும் ஒன்று சேர்ப்பதுதான். அவரது கலைப்படைப்புகள் திறமையாகவும் விளையாட்டுப்போலும் வெளியிலும் காலத்திலும் பழமையிலும் சமகாலத்திலும் வித்தைகள் புரியும். அவை எந்த ஒரு பண்பாட்டிலும் நிலவும் இன்றைய சமூக மற்றும் கலாச்சார வரையறையை மறைத்து ஒன்றின் அமைப்பைப் பெயர்த்து இன்னொன்றில் வைத்து ஒரு புதிய முழுமையான உலகத்தை உருவாக்கும்.

இவர், ஷாங்காய் நாடக அகாடெமியில் மேடை வடிவமைப்பு படித்ததோடு இரண்டு தற்காப்புக்கலை தொடர்பான கலைப் படங்களிலும்  கலந்துகொண்டு திரைப்பட முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வயலின் வாசிப்பிலும் நாடகத்திலும் கூட முயன்றுள்ளார். அவருக்கு அற்புதமான குரல் வளம் உண்டு. நானே நேரில் அதை அனுபவித்திருக்கிறேன். அவரது தந்தை பரம்பரை ஓவியர் மற்றும் கையெழுத்துக்  கலைஞர். தீப்பெட்டிகளில் அவர் நிலா காட்சிகளைத் தீட்டுவார். காய் மீது அவரது தாக்கம் அதிகம். “ஒரு சிறு இடம் பூமியின் மூலைகளில் எளிதாக நிறைந்துவிடும்”

காய் யின் படைப்புகளில் ஒரு முக்கியமான  விமர்சனப்பார்வை இடம் பெற்றிருக்கும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம், அவருடைய உலகப் புகழ்பெற்ற ‘Head On’  என்ற தலைப்பிலான ஓவியக் காட்சியே (சிற்பக்காட்சி) சான்று. அதில் 99 ஓநாய்களால் கண்ணாடிச்சுவரொன்றில் தலை  மோதிப்படும்படி ஒரு தொங்கு வளைவு உண்டாக்கப்பட்டிருக்கும். இந்தப் படைப்பு சமகால ஜெர்மனியில் நாஸிசம் மற்றும் பனிப்போரின் தாக்கத்தைக் குறிப்பது. இது நமது சொந்தத் தவறுகளிலிருந்து படிப்பினைகள் பெறுவது முடியாத ஒன்று என்பதை ஆதாரப்படுத்துகிறது. (ஓநாய்கள் மீண்டும் தொடக்கத்துக்குத் திரும்பி மறுபடியும்  மறுபடியும் சுழற்சியை ஆரம்பிக்கிறது)

உறுதியான கோட்பாட்டுக்கு கனம்  மிக்க ‘Head On’  போன்ற கலைப்படைப்புக்களிலும், அவர் மிகுந்த தீவிரமும் அமைதியிழக்கச்செய்கிற படைப்பாக்கங்களைக்  கையாளும்போதும் அவரது படைப்புகள் உயர்ந்த கலைத் தன்மையை வெளிப்படுத்தும். அவற்றின் வடிவமைப்பில் ஒத்திசைவும் அமைப்பியல் அழகும் இருக்கும். ஓவியனின் தனிப்பட்ட தத்துவம் அழகான கலைத் தன்மையுடனும் கவிதை பாணியிலும் எப்போதும் வெளிப்படும்.

1995-ல்  46 வது  வெனிஸ் பியனலில்,   காய் குவா கியாங், “மார்க்கோ போலோ மறந்ததை வெனிஸுக்குக் கொண்டு வருதல்” என்கிற கலைக் காட்சியைக் காட்சிப்படுத்தினார்.  

காய் 1986 மற்றும் 1995 க்கு இடைப்பட்ட காலத்தில் ஜப்பானில் வாழந்திருந்தார். அங்குதான் அவர் வெடிமருந்தை ஓவியத்துக்கு ஒரு கருவியாக உபயோகப்படுத்தத் தெரிந்துகொண்டார். இந்த வகை கலைப்  படைப்புக்கு இவர் உலகப்புகழ் பெற்றவர். வெடிமருந்து அவர் கலைப்படைப்பாக்கத்துக்கு ஆதாரமாகி அது அவர் கலைஞர் என்கிற அடையாளத்தை வழங்குகிறது. இவர் சக்திவாய்ந்த இந்தப் பொருளை ஒரு மாற்றம் தரும் சக்தியாக உபயோகித்து ஓவியங்களையும் வெடிப்பு நிகழ்வுகளையும் படைத்துள்ளார்.  

***

எலெனா க்யூ:  சீன கம்யூனிஸக் கட்சி  ஒரு கருத்தியல் தெளிவை நோக்கிப் பயணித்த காலத்தில் வளர்ந்தபோது அந்த வளர்ப்பு முறையிலிருந்த  ஆன்மீக உந்துதல், இன்று  நீங்கள் ஓவியக் கலைஞராக இருப்பதை எவ்வாறு பாதித்தது?  

காய் குவோ-கியாங் : கலாச்சார புரட்சியின்போது இருந்த அரசியல் இயக்கங்கள் பெருவாரியான கூட்டங்களைத் தூண்டும் தந்திரங்களைக் கடைப்பிடித்தன. அந்தக் காலத்தில் நடந்த சில அணிவகுப்புக்களைப்  பார்த்ததும் அவற்றில் கலந்தும் கொண்டதினால் பிற்காலத்தில் அது போன்ற உத்திகளை எனது ஓவிய பயிற்சிக்கு நான்  பயன்படுத்திக்கொண்டேன். உதாரணமாக எனது கலைப் படைப்புக்களைப்  புரிந்துகொள்ள நான் அடிக்கடி உள்ளூரிலுள்ள பெருங்குழுக்களின் தன்னார்வலர்களோடு பணிபுரிவேன். எனது இலக்குகள் வேண்டுமானால் அரசியல் தலைவர்களின் இலக்குகளிலிருந்து மாறுபட்டிருக்கலாம், பெரும் மக்கள் குழுக்களோடு நான் பணி  புரிந்த  வழிகள் கூட மாறுபட்டிருக்கலாம். ஆனால் நான் இளமைக் காலத்தில் பெற்ற அனுபவங்களின் செல்வாக்கு இருந்தது என்பது உறுதி. எனது தலைமுறை மக்கள் தலைவர் மாவோவால் ‘புரட்சி நியாயமானது’ என்று அறிவுறுத்தப்பட்டவர்கள். மேலும் நாங்கள் அதிகாரத்தின் வடிவங்களை மதிக்கவேண்டாம் எனக் கற்பிக்கப்பட்டோம். ஒரு சம கால ஓவியனாக இது பழமையின் பாதையிலிருந்து விலகிச்செல்லவும் புதிய கலை வெளிப்பாடுகளைத் தேடவும், புதிய வழிகளில் செலாற்றவும்,பழமையான வடிவங்களை என் சொந்த கலைப்பார்வை மூலம் மாற்றவும் எனக்கு மனஉறுதியைக் கொடுத்தது.

எலினா: எவ்வாறு இந்த அனுபவங்களெல்லாம் இப்பொழுதிருக்கும் ‘நீங்களா’க உருவாகியது?  

காய்: ஷாங்காய் நாடக அகாடெமியில்  மேடை வடிவமைப்பு தொடர்பாக நான் பெற்ற பயிற்சி அக்காலத்தில் இயங்கிய மற்ற அகாடெமிகளிலிருந்து மாறுபட்டது.படைப்புக் கருத்துக்களைக் கொண்டுவரும் பலவித அணுகுமுறைகளை நான் கற்றுக் கொண்டேன். சுதந்திரமாகப்  பல்வேறு கலைப்   பொருட்களைக் கையாண்டதும், இடம் சார்ந்த கலைப் படைப்புக்களைப் பயின்றதும் கலையின் பலதரப்பட்ட வடிவங்களை உருவாக்க எனக்கு உதவியது. கூடிக் கற்றலில் உள்ள குழு ஆர்வமும், செயலாற்றலும், உயிர்த்துடிப்பான விளைவுகளை உண்டாக்குவதில் கொடுக்கப்பட்ட அழுத்தமும், பார்வையாளர்களுடனான உறவில் முழுக்கவனம் செலுத்தல் அல்லது நாடகத்தில் பங்கேற்றல் மற்றும் கலை வெளிப்பாட்டின் மாறிக்கொண்டேயிருக்கும் தன்மை  முதலியவை எனது கலைப்  படைப்பின் கூறுகளை வடிவமைக்க உதவின.  

எலெனா : 2008 ம்  ஆண்டில் குக்கன்ஹெய்ம் அருங்காட்சியகம், உங்களது “காய் குவோ-கியாங் :  “நான் நம்புவதிலிருந்து நம்பிக்கைக்கு ” என்கிற கண்காட்சியை ஏற்பாடு செய்தது. அந்தக் கண்காட்சி நியூயார்க், பீகிங், பில்பாவோ ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. அதில் இரு பத்தாண்டுகளுக்கும் மேலான தங்களது கலைப்  படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. காய் குவா-கியாங்கின்  நம்பிக்கை என்ன? 

காய்: ‘நான் நம்ப விரும்புகிறேன்’ என்பது எனது ஆரம்பகால படைப்புக்களைப்பற்றிய ஒரு விரிவான ஆய்வு. அவற்றில் பல என்னுள் ஆழமாகப் பதிந்திருந்த இந்தப் பேரண்டத்தைப்  பற்றியும், நம்மைச்சுற்றியுள்ள அறியப்படாத உலகங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பிய உந்துதலைச் சொல்பவை. எனவே இந்தக் கண்காட்சியின் தலைப்பு எல்லா சாத்தியப்பாடுகளையும் உள்ளடக்கியது. அவை பூமிக்கு அப்பாலுள்ளவையோ,பெங்  சுயி கோட்பாடுகளோ, சீன மருந்தோ அல்லது இயல் கடந்த உந்துதல்களோ அவை எதுவாக இருந்தாலும் அவற்றை உள்ளடக்கியது. அது மனப்பாங்கையும் எதிர்பார்ப்பு உணர்வையும் வெளிப்படுத்துவது.

எலெனா : தத்துவ மேதை  தாமஸ் ஹாப்ஸ் பிரபலப் படுத்திய பிளாட்டஸ் -ன் சொற்றொடரான “மனிதன், மனிதனின் ஓநாய்”  என்பதற்கு என்ன பொருளை நீங்கள் உணர்த்துவீர்கள்?

காய்: வளர்ந்து வரும், மனிதக் குடிமக்களை சித்தரிக்கும் ஓவியங்களை அரசியல் தலைவர்கள் அல்லது போர் வீரர்கள் எப்படி சித்தரிக்கிறார்கள் என்பதைப் பார்த்தேன், அவை பிரச்சாரத்திற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன,  எனவே நான் மனிதர்களைக்  காட்சிப்படுத்தும் முறையை என் படைப்புகளில் தவிர்த்துவிட்டேன். நான் கதைகளைச்சொல்வதற்கு அடிக்கடி மிருகங்களை உருவகமாக வைத்து . மனித நடத்தைகளைக் காட்டினேன். விலங்குகள் மனிதர்களையும் விட  மிகவும் இயற்கையானவை. முயற்சி எதுவும் இல்லாமலேயே அவை மனிதர்களைவிட உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடியவை. ஓவியக்காட்சிக்கான கருப்பொருளில் சுலபமாக ஒன்று சேர்த்து விடலாம்.

எலெனா :  1995 வெனிஸ் பியனலில், ‘மார்க்கோ போலோ மறந்த’ எதை நீங்கள் கொண்டு வந்தீர்கள்? 

காய்: 1995ம் ஆண்டு மார்க்கோ போலோ சீனாவிலிருந்து வெனிஸுக்குத் திரும்பிய 700 வது ஆண்டு  விழா.  எனது சொந்த நகரமான குவான்ஷோ விலிருந்து கடல் மார்க்கமாக அவர்  திரும்பியதனால்  அவரைக்  கேலி செய்ய முடிவு செய்தேன். கிழக்கிலிருந்து மேற்குக்கு அவர் பல கதைகளை  எடுத்துச் சென்றாலும் அவர் மேற்குலகுக்கு நம் கீழை நாடுகளின் சிந்தனை மற்றும் மெய்யியலைப் பற்றிக் கூறவில்லை. எனவே இந்தக் கவனக்குறைவை சரி  செய்ய சீன மூலிகை மருந்துகளை கிழக்கிலிருந்து அங்கு எடுத்துச்செல்ல முடிவு செய்தேன். நான் குவான்ஷோ  நகரிலிருந்து ஒரு பழைய பாணி மீன் படகை எடுத்துக்கொண்டு அதை வெனிஸின் கிராண்ட் கெனால் வழியாகச் செலுத்தி பியாசா சன் மார்க்கோ விலிருந்து பலாஸோ  ஜியஸ்டினியன்   லோலின் -ஐ அடைந்தேன். 

அந்தப் படகு பலாஸோவுக்கு வெளியே நிறுத்தப்பட்டது. அது பார்வையாளர்கள் அமர்ந்து மருந்தும், மருந்து நீரும்  குடிப்பதற்கான இடமாகப் பயன்பட்டது. பலாஸோவுக்கு உள்ளேயே சுவரொன்றில் ஒரு நவீன பொருள் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டு அதன் மூலம் பாட்டில்களில் அடைக்கப்பட்ட ஐந்து வகையான மூலிகை மருந்துகள் ஒன்று 10000 லிராக்களுக்குக் கிடைக்குமாறு செய்யப்பட்டது. இந்த மூலிகை மருந்துகள்  எல்லாம்  பண்டைய சீன முறையான ஐந்துவகைக்  கூறுகள் தத்துவப்படி செய்யப்பட்டவை. இதில் இயற்கையின் ஐந்து வகைக் கூறுகளும் (மரம், தீ, பூமி, உலோகம் மற்றும் நீர்) ஐந்து வகையான சுவைகளுடனும் (கசப்பு, இனிப்பு, புளிப்பு, காரம், மற்றும் கரிப்பு) மனித உடலின் ஐந்து உறுப்புகளுடனும் (கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், மற்றும் சிறுநீரகம்) ஒத்துப்போகும். சுவற்றில் எழுதப்பட்டுள்ள மருந்துப்பட்டியல் பங்குகொள்வோரின் தேவைக்கேற்ப மருந்துகளைத் தேர்வு செய்ய உதவும். அதற்கு எதிர்ச் சுவரில் பாரம்பரிய ஜின்செங் சூப்பும், ஜின்செங் மதுவும் பெரிய மண் ஜாடிகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்த சூப்பையும்,மதுவையும் பீங்கான் கோப்பைகளில் ஊற்றிக்கொள்ள பார்வையாளர்கள் மூங்கிலாலான கரண்டிகளை  உபயோகித்தனர்.  இவை ஒருவரது உடலின் சக்தியைப் பெருக்கும்.
வெனிஸ்  பியன்னியலின் 100 வது ஆண்டு விழாவைக் கொண்டாட 100 கிலோ கொண்ட ஜின்செங் மூட்டைகள்  ஒரு கை  வண்டியில், ஜின்செங் வழங்குமிடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன. நான் வாழும் உயிரினத்தைக் குணப்படுத்தும் கருத்தை உபயோகித்து அதன் சக்தி நகரத்திற்கும் அங்குள்ள சிறு கால்வாய்களுக்கும்  பாயுமாறு செய்தேன். பலாஸோவின் நுழைவாயிலுக்கு உள்ளே நான் கால்வாய் நீரால் நிரப்பப்பட்ட  ஒரு பிளாஸ்டிக் திரையைத் தொங்கவிட்டேன். அதில் பொது துளை மருத்துவ முறையின் அட்டவணையைச் சேர்த்துக் குறியீடாக  அதனை துளை மருத்துவ ஊசிகளால் துளைத்து வைத்தேன்.   

1966 ம் ஆண்டு கலாச்சாரப் புரட்சியின் ஆரம்ப நாட்களில் மக்கள் விடுதலை  இயக்கம், மலைப்பகுதியில் பாறையைக் குடைந்து ஒரு ஓவியம் வைக்க முடிவு செய்தது. இதுதான் நில  ஓவியத்துடன் எனது முதல் தொடர்பு. மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள இந்தத் தொடர்பு என் படைப்புக்களில் வெகுவாக வெளிப்படும். இது ஆஸ்திரேலியாவில் உள்ள குவீன்ஸ்லாண்ட் நவீன ஓவியக்  கூடத்தில்  காட்சிப்படுத்தப்பட்ட “Falling Back to Earth” என்கிற எனது முதல் தனி நபர் கண்காட்சியில் பிரதிபலித்தது. 

எலெனா :  இந்த ” Falling Back to Earth”  ” நீங்கள் மீண்டும் வேர்களை நோக்கித் திரும்ப,  அதாவது இயற்கை நோக்கி மீள்வதைக் குறிக்கிறதா?

காய் : இந்தக் கண்காட்சியின் தலைப்பான “Falling Back to Earth”  பண்டைய காலத்தின் சீன இலக்கிய ஓவியங்களில் காணப்படும் உணர்வுகளுக்காக ஏங்க வைக்கிறது. அந்தக் காலத்தில் மனிதர்கள் இயற்கைக்குப் பணிந்தும் அதோடு ஒத்திசைந்தும் வாழ்ந்திருந்தனர். தற்போது மக்கள்  இயற்கையோடு   நடந்து கொள்ளும் விதம் அதற்கு முற்றிலும் மாறானது.

சீனா அனுபவிக்கும் இயற்கை மற்றும் சூழலியல் நெருக்கடிதான் சமீபத்திய எனது “ஒன்பதாவது அலை ” என்கிற கண்காட்சியின் மையக்கருத்து. மேலும் ஷாங்காய் ” Power Station of Art”ல்  நடந்த இது, வாழும் ஓவியரின் முதல் தனிநபர் கண்காட்சியாகும். இதில் கடவுள் அருள் பெற்ற நோவாவின் படகு – ஒரு மீன்பிடி படகு முழுவதும் இறந்து கொண்டிருக்கும் செயற்கை மிருகங்கள் – இன்றைய அபாயகரமான நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் ஹுவாங்பு  ஆற்றில் செலுத்தப்படுகிறது. இயற்கைக்கும் நமது ஆன்மீக வேர்களை நோக்கித் திரும்புவதற்கும் வேண்டிய புரிதலை இது உணர்த்துகிறது.

எலெனா :  கலை என்பது ஒழுக்கவிதிகள், சமூக வாழ்க்கை,அரசியல் மற்றும் கலாச்சாரத்தைக் குறிப்பதாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நம்புகிறீர்களா அல்லது கலை  என்பது கட்டுக்கடங்காத நமது தீவிர உணர்ச்சியின் வெளிப்பாடா?

காய் :    பலவகையான கலைஞர்கள் நம்மிடையே உள்ளனர். ஒரு கலைஞர் இப்படித்தான் இருக்க வேண்டும், நடந்து கொள்ளவேண்டும் என்ற இறுக்கமான விதிகள் எதுவும் கிடையாது. அப்படி இல்லையென்றால் கலை என்பது வரலாறாக மாறி மாற்றமின்றிப்போய்விடும். கலை காலத்தையொட்டி முன்னேறிக்கொண்டும் மாறிக்கொண்டும்  இருக்க வேண்டும்.

எலெனா :    உங்கள் படைப்புகளிலிருந்து உங்களுக்கு காலம் மற்றும் வெளி, எதிரெதிர் சக்திகள்,பிரபஞ்சவியல் முதலியவற்றில்  உள்ள ஆர்வம் தெரிகிறது. உங்களைப் பொறுத்தவரை வழிப்படுத்தும் வாழ்க்கைத் தத்துவம் என்ன? 

காய் : In the ‘I’ Ching எனும் மாற்றங்களின்  புத்தகத்தில்  ‘I’ என்றால் மாற்றம் என்று பொருள். இது மிகவும் முக்கியம். தாவோயிசத் தத்துவத்தில் இரு கொள்கைகளை நான் பின்பற்றுகிறேன். “விதி இல்லாததே விதி” மற்றும் “மற்றவர்களின் சக்தியைத்” தூண்டி நமது வலிமையை வெளிப்படுத்துதல். கன்பூஷியத் தத்துவத்தில்  சகிப்புத் தன்மை என்பது மதிப்புமிக்க ஒன்று. மற்றவர்களைப் புறந்தள்ளாமலிருக்க அது எனக்கு கற்றுக்கொடுத்தது, பலதரப்பட்ட கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டு அவர்களோடு பணி செய்த அனுபவம், கலையில் புதிய வாய்ப்புக்களைக் கண்டறிய உதவியது. இந்தக் கொள்கைகள்தான் கீழைத்தேய தத்துவங்களிலிருந்து நான் அறிந்து கொண்ட மதிப்புமிக்க பாடங்கள். மேலோட்டமான அடையாளங்களை (புராண விலங்குகள்) அல்லது வெடிமருந்து போன்ற கலைச் சாதனங்களைவிட அவை எனக்கு மிக முக்கியம் வாய்ந்தவை.

***