சீனச்சிறுகதை

– மால்ச்சின்ஹூ
தமிழில் : ஜெயந்தி சங்கர்

 

***

என் வீடு இருந்த சிறுகிராமத்தின் பெயர் பாயான் ஹோட். பான்னர் இளவரசரின் இருப்பிடம். என் சிறுவயதுப் பிராயம் இக்கிராமத்தில் தான் நிகழ்ந்தது. உண்மையில் யாரும் அறியாத மர்மம் நிறைந்த இவ்வூரை நினைக்கும் போதெல்லாம் என் நினைவுகள் பின்னோக்கிப் போகும்.

எங்கள் அடுத்த வீட்டில் ‘தேகுஸ்’ என்ற பெயருடன் ஒரு லாமா இருந்தார். மரபுப்படி லாமாவானவர் திருமணம் மற்றும் குடும்பம் போன்றவை மறுக்கப் பட்டவர். ஆனாலும், தேகுஸ் திருமணம் புரிந்தது மட்டுமில்லாத குடும்பமும் உருவாக்கியிருந்தார். இதெல்லாம் எப்படி என்றே எனக்கு இது வரை தெரியவில்லை.

தேகுஸ் லாமாவுக்கு மூன்று மகன்கள். மூத்தவன் ஹஸென்ஜியாப். இரண்டாவது மகன் கார்ஹே. மூன்றாவது மகன் மலஹா. மலஹா என் வயதினன். பேசக் கற்கும் பருவத்தில் நாங்கள் இருவரும் காற்சட்டை கூட அணியாமல் எங்களது வெற்று பிருட்டங்களை வீட்டின் முன் இருந்த மணல் குவியல்களின் மீது இருத்தியிருந்து விளையாடியிருக்கிறோம்.

மலஹா மிகவும் அழகிய சிறுவனாக இருந்தான். நேர்த்தியான புருவங்களும் தெளிந்த கண்களும் சிவந்த உதடுகளும் வெண்பற்களும் வட்ட முகமும் கூர் மூக்கும் அடர்த்தியான சுருண்ட கருங்கேசமும் கொண்டவன். அவனது காதுகள் மட்டும் கொஞ்சம் விநோதமான உருவில் சற்றே நீளமாக இருக்கும். மூத்தவர்கள் அதை புத்தரின் அம்சம் என்றார்கள். அவ்வகையான காதுடையவர்கள் மிகுந்த அதிருஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்றும் சொல்லி வந்தார்கள். அதிருஷ்டம் என்றால் என்னவென்று தான் அந்நாளில் எனக்குத் தெரியவில்லை. ஆனால், அப்போதெல்லாம் மலஹா என்னை விட அறிவுடனும் திறன் மிக்கவனாகவும் துணிச்சல் மிக்கவனாகவும் இருந்தான். ஆகவே, அவனை நான் பெருமையுடன் நிமிர்ந்து பார்த்தேன்.

என் குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்தது. மலஹாவினது குடும்பம் கொஞ்சம் சுமாரான நிலையிலிருந்தது. எனக்கு ஆறு வயதான அந்த வருடத்தின் வசந்த காலத்தில் எங்கள் கிராமம் கடும் பஞ்சத்தில் விழுந்தது. பான்னர் இளவரசரின் மாளிகை மற்றும் ஓரிரு ‘பாயான்’ வீடுகள் தவிர மற்ற அனைத்து வீடுகளிலும் உண்ண உணவில்லை. ஒரு நாள் மலஹா என்னிடம் வந்து, “கூடைய எடுத்துக்கோடா. நாம போய் ஓர்மரம் ஏறுவோம். ஓர்மரக் காய்கள் பறிப்போம்”, என்றான்.

“இந்த இருளிரவில் எப்படி அங்கே போக?”

“பான்னர் இளவரசரின் மாளிகையின் முன்பு இருக்கிறதே ஒரு தோப்பு, அங்கே போவோம்.”

இதைக் கேட்டதுமே எனக்கு பயமாகிவிட்டது. “அதெல்லாம் புனித மரங்களாயிற்றே. அங்கே போய் மக்கள் அம்மரங்களை நமஸ்கரித்து வணங்கி வழிபடுவதை நீ கண்டதில்லையா? அதில் யாரேனும் ஏறத் துணிவார்களா? இளவரசர் அறிந்தாரென்றால் நம் காலை வெட்டுவார்.”

கையை ஆட்டி மறுத்த படியே மலஹா, “ஏய் போதுண்டா. புனித மரமா? அப்டின்னா என்னடா? அதுல ஏதும் ஆவி இருக்கறத யாராவது பார்த்திருக்காங்களா? ம்? சொல்லு, நீ பாத்திருக்கியாடா?”, என்றான்

நான் என் மொட்டைத் தலையை இடவலமாக ஆட்டினேன்.

“பின்ன? நிலவொளி மேலுறுவதற்கு முன்பே போவோம் வா. சீக்கிரம், போய் மரமேறிக் காய் பறிப்போம்.”

ஓர்மரக் காய்கள் தின்பதற்குச் சிறந்தவை. வழக்கமாக மாவுடன் பிசிறி அவித்தெடுப்பர். அதுவும் குறிப்பாக பஞ்ச காலங்களில் அது ஓர் அரிய உணவாகி விடும். மறு நாள் சமைக்க ஒன்றுமில்லை என்ற நினைவு வந்தது. ஆகவே, நான் துணிச்சலை வரவழைத்துக் கொண்டபடி என் கூடையை எடுத்துக் கொண்டு அவன் பின்னால் கிளம்பினேன். பான்னர் இளவரசரின் மாளிகைக்கு முன்னால் இருந்த தோப்பை நோக்கிக் நடந்தோம்.

மலஹா பையல் மிகவும் குறும்பன்; படு போக்கிரி. தூரத்தில் புள்ளிகளுடனான பசு ஒன்று தலையை நீட்டிக் கொண்டு புல் மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டான். அவனைப் பார்த்து அவன் செய்வதை அப்படியே செய்யும் படி என்னிடம் சொல்லிவிட்டு, புல் மீது குந்தி தவளையைப் போல பசுவை நோக்கி தத்தித் தவழ்ந்தான். அவன் மனதில் என்ன இருந்தது என்று எனக்கு முதலில் தெரியவில்லை. ஒரு சிறு குச்சியை வைத்துக் கொண்டு அவன் பசுவை விரட்டக் கண்டேன். பசுவின் பின்னால் மறைந்து கொண்டே புனித மரத்தை நோக்கி முன்னேறுவது தான் அவனது திட்டம் போலும். இளவரசரது மளிகைக் காவல்காரர்களின் பார்வையிலிருந்து சாமர்த்தியமாகத் தப்பி விடுவதே திட்டம். புள்ளியுடனிருந்த பசு மிகவும் சமர்த்தாகக் கீழ்ப்படிந்தது. எங்களைத் தனது கொழுத்துப் பருத்த உடலால் வாகாய் மறைத்து நடந்தது. மரம் வரை நாங்கள் நடந்த பிறகு தன் போக்கில் பக்கவாட்டில் போய் மேய ஆரம்பித்து விட்டது.

இரவின் இருள் மரத்தை மேலும் மையிருட்டாக்கியிருந்தது. முன்னும் பின்னும் அசைந்தாடிய மரம் என்னில் பீதியைக் கிளப்பியது. பேச்சு மூச்சற்று நான் அங்கு நின்றிருக்க, மலஹா கிடுகிடுவென்று மரத்திலேறிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்து நானும், வேறு வழியின்றி பின்னேலே ஏறினேன். அது நிச்சயமாகப் புனித மரம் தான். இத்தனை பஞ்ச காலத்திலும் பசேலென்றிருந்ததே. சீக்கிரமே இரண்டு கூடைகளையும் நிரப்பியாயிற்று. கிழக்கு வானில் முழுநிலவு எழுந்து மிகவும் மென்மையாகவும் மர்மமாகவும் அன்பாகவும் ஒளிர்ந்தது. எனக்கும் மலஹாவுக்கும் நிலாவின் காட்சி மிகவும் புளகாங்கிதமாக இருந்தது. கிளையில் கூடைகளைக் கவனமாக மாட்டினோம். சிரிக்கும் நிலாவைப் பார்த்து மரத்தின் மீதிருந்தபடியே மகிழ்ச்சியுடன் கை அசைத்தோம்.

நிலா தோப்பின் மீது தன் ஒளியை வீசியபடியே மேலும் மேலேறியது. சட்டென்று எனக்கு வீடு திரும்பும் நினைவு வந்தது. ஆகவே, பதட்டத்துடன் மலஹாவைப் பார்த்து, “நிலா எத்தனை பிரகாசமாக மின்னுகிறது! இல்லையா? அதிருக்கட்டும். இப்போ, தோப்பிலிருந்து வெளியே தப்பிப்பது எப்படி?”, என்று கேட்டேன். “மீண்டும் பசுவைத் தான் உதவும்படி கேட்க வேண்டுமா?”

தோப்பிலிருந்து நாங்கள் வெளியேறிய பிறகு கூடைகளிரண்டையும் தரையில் வைத்து விட்டு நாங்கள் நிலத்தில் உருண்டு புரண்டு சிரித்தோம். ஓர்மரக் காயைத் திருடும் போதிருந்த பதட்டமும் அதற்குப் பிறகு எமக்கிருந்த மகிழ்ச்சியில் சிரித்த சிரிப்பும் சேர்ந்து பெரியளவில் சோர்வை ஏற்படுத்தியிருந்தன. பனி படர்ந்திருந்த புற்றரையில் கைகளையும் கால்களை நீட்டி மல்லாந்து படுத்து தெளிந்த நீல வானை வெறித்தோம். எதைக் கொண்டு இந்த வானம் படைக்கப் பட்டிருக்கிறது? ஏன் இவ்வளவு நீலம்? இந்த நீல வானுக்கப்பால் வேறு உலகம் இருக்குமோ? புத்தர் சொல்வதைப் போல அங்கே நாகரீக பண்பாளர்கள் வாழ்வார்களோ? நிச்சயமாக பான்னர் இளவரசரைப் போல ஒரு கொடுமைக்காரர் அங்கு இருக்க மாட்டார்கள். ஏழ்மையில் உழலும் பாவப் பட்டவர்களும் ஓர்மரக் காயைத் தின்று வாழ வேண்டியவர்களும் இருக்க மாட்டார்கள்.

அதற்கடுத்த நாள் எங்கள் இரு குடும்பங்களுமே இனிப்பான, மாவு சேர்த்துப் பிசிறி அவித்த ஓர்மரக் காயையே உணவாகக் கொண்டோம்.

அவ்வருடம் வசந்தம் வறட்சியாகவே இருந்தது. வெள்ளம் பெருகிய கோடையும் வாய்க்கப் பட்டிருந்தது. கோடையிலிருந்தே துவங்கிக் கொட்டித் தீர்த்த மழையும் சேர்ந்து கொண்டது. ஊரிலிருந்த ஓடைகளில் கிராமத்தினர் சிறுமீன்கள் பிடித்தனர். ஒரு நாள், மலஹா என்னைத் தேடி ஓடி வந்தான். புருவங்களில் முத்து முத்தாக வியர்வை கட்டியிருந்தது.

“வா, ஓடையில் மீன் பிடிக்கப் போவோம்”, என்றான்.

எனக்கும் வீட்டில் பொழுது போகாதிருந்தது. ஆகவே, மறுப்பேதும் சொல்லாமல் உடனே அவனுடன் போனேன்.

வெள்ளம் வடிந்திருந்தது. அடிவரை பார்க்கக் கூடிய தெளிவில் நீர் ஓடியது. கீழே ஆழத்தில் கிடந்த பல வண்ணக் கூழாங்கற்கள் சிறு மீன்களைப் போலத் தோற்றமளித்தன. ஆடைகளைக் களைந்து எறிந்து விட்டு நீருக்குள் குதித்தோம். திடீரென்று ஒரு வித குளுமை என் உடலெங்கும் பரவி இதயம் வரை ஊடுருவியது. முழு அம்மணமாக நீரினுள் இருந்தோம். ஒருவர் மீது ஒருவர் நீரை அடித்துக் கொண்டும் கேலி பேசிக் கொண்டும் இருந்ததில் வந்த வேலையை மறந்தே போனோம்.

அடுத்த நாள், மதியத்தின் போது என்னால் கொஞ்சமும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒரு செய்தி கிராமத்தில் பரவியது. முன் தினம் வரை என்னுடன் மீன் பிடித்து, என்னுடன் நிர்வாணமாக நதியில் நீந்திய மலஹா பயலை கேகன் மடாலயத்தில் ‘வாழும் புத்தர்’ என்று அறிவித்திருந்தார்கள்! தேர்ந்தெடுத்திருந்தார்கள் என்று கூறுவது கொஞ்சம் சரியாக இருக்காது. பௌத்தக் கோட்பாடுகளின் படி ‘வாழும் புத்தர்’ முற்பிறவின் மறு அவதாரம். அடுத்த ‘வாழும் புத்தர்’ யார், எந்த குடும்பத்தில் மீண்டும் பிறப்பார் போன்ற எல்லா விவரங்களையும் முற்பிறவில் பொன் நிறத்திலான மையைக் கொண்டு சிவப்புப் பட்டுத் துணியில் எழுதி வைப்பார். அந்தப் பட்டுத் துணியை வெள்ளிக் குடத்தினுள் வைத்துப் பூட்டி ரகசிய இடத்தில் வைத்து விடுவார்கள். வாழும் புத்தரின் மறைவுக்குப் பிறகு, சூத்ரா ஆசானின் தலைமையில் மூத்த லாமாக்கள் எல்லோரும் கூடிப் பேசுவர். அப்போது தான் பூட்டிய குடத்திலிருந்து பட்டுத் துணி எடுக்கப் பட்டு பிரித்து வாசிக்கப் படும். அதில் விடுகதைப் போலக் குறிப்பிட்டிருக்கும் குறிப்புகளின் படி ‘வாழும் புத்த’ருக்கான தேடல் துவங்கி விடும்.

கேகன் மடாலயத்தின் முந்தைய ‘வாழும் புத்தர்’ புதிர் போல எழுதியிருந்தாராம். பிறக்கவிருந்த புத்தரின் குடும்பத்தில் சில குறிப்பிட்ட அடையாளங்கள் இருக்கும். முதலில் அக்குடும்பத்தின் மகன்களின் பெயர்களின் முதல் எழுத்துக்கள் மங்கோலிய மொழியின் அ, ந, ப, ஹ, கா மற்றும் ‘மா’வில் அமைந்திருக்கும். அதன் படியே முதல் மகனின் பெயரின் முதல் எழுத்த ‘ஹ’வாகவும் இரண்டாம் மகனின் பெயரின் முதல் எழுத்து ‘கா’வாகவும் மூன்றாவது மகனான மலஹாவின் பெயரின் முதல் எழுத்து ‘ம’விலும் இருந்தது.

இரண்டாதாக, அவர்களின் வீட்டிலிருந்து தென்கிழக்கில் எண்ணூற்று பத்து அடிகள் நடந்தால், ஐந்து பேர் இரு கரங்களையும் கொண்டு சேர்ந்து அணைத்தாலும் முழுவதும் தொட்டுத் தழுவிட முடியாத பருமனில் ஒரு பெரிய மரம் இருக்கும்.

மூன்றாவதாக, வீட்டிலிருந்து எண்ணூற்று பத்து அடிகள் வடமேற்கில் நடந்து போனால் நிலத்தடியில் பெரிய ஓர் எருது அளவிலான ‘கிரானைட்’ கல் இருக்கும். இவற்றில் ஒரே ஒரு விதி மட்டும் பொருந்தினால் போதாது. மூன்றுமே பொருந்த வேண்டும். அப்போது தான் லாமாக்கள் தேடிக்கண்டு பிடிப்பவரை ‘வாழும் புத்தர்’ என்று மடாதிபதிகள் ஏற்பார்கள்.

வாழும் புத்தரைத் தேடவென்று மடாலயத்திலிருந்து கிளம்பியவர்கள் ரகசியமான தங்களின் தேடலைப் பல வருடங்களுக்குத் தொடர்ந்திருந்தனர். பிறகு தான், என் சின்ன நண்பன் மலஹா தான் அந்த ‘வாழும் புத்தர்’ என்று முடிவுக்கும் வந்திருந்தனர். என்னுடன் மீன் பிடித்துக் கொண்டு விளையாடித் திரிந்த மலஹா ஒரே இரவில் கேகன் மடாலயத்தின் எட்டாம் புத்தராக, எல்லோரும் தொழுதிடும் தெய்வமாக மாறிப் போனான்.

அது ஒரு மறக்க முடியாத நிகழ்வு. கிராமத்தினர் எல்லோருக்கும் கட்டுக்கடங்காத ஒரே பெருமை. பானையில் கொதித்துத் தெறித்திடும் நீரைப் போல எல்லோரும் பெரியதொரு பரபரப்பில் விழுந்தனர். கேகன் மடாலயத்தின் மூத்த லாமா, மலஹாவை கிராமத்தினர் பணிந்து வணங்கும் நேரத்தை மதியம் இரண்டு மணி என்று அறிவித்தார்.

என் அம்மா ஒரு தீவிர பௌத்தர். என் முகம் கைகால்களைக் கழுவிக் கொள்ளச் சொன்னாள். எல்லோருக்கும் வழிபட ஒதுக்கியிருந்த நேரத்திற்குப் போய்ச் சேர என்னைக் கிளப்பினாள். இதைக் கேட்டு நான் உரக்கச் சிரித்தேன். விநோதமாக நடந்து கொண்ட என்னைப் பார்த்து விட்டு என் காதைத் திருகினாள் அம்மா. “சிரிக்காதடா!”, என்றாள் கண்டிப்புடன். அதற்குப் பிறகு நான் சிரிக்கத் துணியவில்லை.

சீக்கிரமே இரண்டு மணியாயிற்று. மலஹாவை வழிபட அம்மா என்னையும் கூட்டிக் கொண்டு கிளம்பினாள். வாழும் புத்தராகி விட்டிருந்த மலஹா பார்க்க எப்படியிருப்பான் என்று என் சிறுபிள்ளை மனம் கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்தது.

அம்மாவுடன் மலஹாவின் வீட்டுக்குப் போனேன். ஏராளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஏற்கனவே அங்கே குழுமியிருந்தனர். இப்போது மலஹா ‘வாழும் புத்தர்’. ஆகவே, வெளியுல உறவுகள் இனி அவனுக்குப் பொருட்டில்லை. அவன் மாமா என்றும் அத்தை என்றும் தாத்தா என்றும் பாட்டி என்றும் கூப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் அவனை வழிபடவென்று வந்து காத்திருந்தனர். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு உள்ளே போய் வழிபட வேண்டிய எங்களது முறை வந்தது. என் இதயம் படபடவென்று வேகமாக அடித்துக் கொண்டது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனேன்.

மேடையின் மீது நிமிர்ந்து உட்கார்ந்திருந்தான் மலஹா. அவன் முன்னால் இரவல் வாங்கப் பெற்ற ஒரு மேசை. அதன் மீது பௌத்த சூத்திரங்கள். அத்துடன், மயில் பீலி நீட்டிக் கொண்டிருந்த ஒரு வெள்ளி ஜாடியில் புனித நீர். அந்த மயில் தோகையினால் தான் புனித நீரை பக்தர்கள் மீது தெளித்தார்கள். நான் உள்ளே போகும் போது, சட்டென்று மலஹா என்னைப் பார்த்துப் பளீரென்று சிரித்தான். நான் திரும்பச் சிரித்தேனா என்பது எனக்கு நினைவில்லை. அவனது மறுபுறம் அவனது தாயும் பௌத்த சூத்திர ஆசிரியரும் நின்றிருந்தார்கள். ஆசிரியரின் கண்களும் உதடுகளும் தொங்கிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருந்தன. வாயின் இருபுறமும் இரண்டு பள்ளங்களும் தெரிந்தன.

மலஹாவின் முகம் ஏனோ இருண்டிருந்தது. அவன் கொஞ்சம் பயந்தாற்போலவும் காணப் பட்டான். நான் அவனைப் பார்த்துக் கொண்டேயிருப்பதைத் தவிர்த்தேன். அம்மாவும் நானும் தரையில் முழந்தாளிட்டிருந்தோம். கைகளைக் கூப்பி தலையை நிலத்தில் குனிந்து அம்மா வணங்கினாள். முதல் முறை குனிந்து நமஸ்கரித்து எழுந்த போது மலஹாவின் கண்களைச் சந்தித்தேன். அவன் புன்னகைக்கவில்லை. மாறாக, உற்சாக மிகுதியில் அவன் குபீரென்று சிரித்து விட்டான். ஆசிரியர் கோபத்தில் இரண்டு முறை ‘உஷ்’ஷென்று எச்சரித்தார். மலஹாவின் தாய் பயந்தாள். பிறகு, சட்டென்று, “வாழும் புத்தரே, பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருங்கள்”, என்று கொஞ்சம் கண்டிப்புடனும் அன்போடும் சொல்லி அவனை எச்சரித்தாள்.

அம்மாவும் நானும் வழிபாட்டை முடித்த பின் மலஹா சூத்திர ஏடு ஒன்றைக் கையில் எடுத்தான். அதில் ஒரு சொல் கூட அவனுக்குத் தெரியாது. ஆசிர்வதிக்கும் பாவனையில் அதை எங்களது தலையில் வைத்து எடுத்தான். பிறகு, புனித நீரை எடுத்து எங்களது தலையில் தெளித்தான். அத்துடன் சடங்கு முடிந்தது. மலஹாவின் வீட்டை விட்டு வெளியேறிய அம்மா என்னைக் கூட்டிக் கொண்டு நடந்தாள். வெளியேறும் போது நான் தைரியமாகத் தலையைத் திருப்பி ஒரு முறை மலஹாவைப் பார்த்தேன். என் நண்பன் மிகவும் துணிச்சலாகப் புருவத்தை உயர்த்தி, ‘நீ காத்திரு. நாம் சேர்ந்து போய் மரம் ஏறுவோம். அதன் பிறகு போய் மீன் பிடிப்போம்’, என்று சொல்வதைப் போல என்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான்.

மலஹா புத்தராக மாறவில்லை. அவன் இன்னும் என் நண்பனாகத் தான் இருக்கிறான் என்று மகிழ்ச்சியுடன் நினைத்துக் கொண்டேன்.

மறு நாள் காலை நான்கு மணியாகும் போது, மலஹா மடாலயத்திற்குப் போய் தன் பதவியை ஏற்கக் கிளம்பினான். கிராமத்தினர் எல்லொருமே சென்று மண் சாலையோரம் நின்று நீர் தெளித்தனர். அவனை வழியனுப்பவென்று அங்கு கூடி நின்றனர். நானும் அதிகாலையில் எழுந்தேன். உற்ற நண்பனைப் பிரிய வேண்டும் என்ற எண்ணமே என்னைச் சோகத்தில் ஆழ்த்தியது. கூட்டத்தில் நின்ற போது எனக்கு அழுகை வந்தது. ஆனால், அந்தச் சூழல் மிகவும் அமைதியாகவும் புனிதமாகவும் இருந்ததால், நான் அழுகத் துணியவில்லை. மலஹா தோன்றவிருந்த வாயிலையே வெறித்தபடி நின்றிருந்தேன்.

சிறுது நேரத்திலேயே, பெரும் ஓசையுடன் லாமா இசைக் குழுவினர் பெரிய பெரிய எட்டு முரசுகள், பத்து ஜோடி ராட்சத ஜால்ராக்கள், இருவர் இசைக்கும் பத்தடி இருக்கக் கூடிய மிகப் பெரிய குழல் வாத்தியங்கள் போன்றவற்றை இசைத்த படி வந்தனர். காதைத் துளைத்து பயப்படுத்தும் அந்த பேரோசையில் இசையின் கூறு என்று ஒன்றுமில்லை என்றே எனக்குத் தோன்றியது. இத்தனை ஆர்பாட்டங்களினூடே, பெரிய பொன்னிறமாக ஒன்று தோன்றி எங்களை நோக்கி வந்தபடியிருந்தது. முழந்தாளிட்டுக் காத்திருந்த மக்கள் நிறுத்தாமல் தரையில் நெற்றிபட பலமுறை நமஸ்கரித்த படியே இருந்தனர்.

‘வாழும் புத்த’ரான மலஹாவின் பல்லக்கு எங்கள் முன்னே நின்றது. கடைசியாக என் நண்பனை ஒரு முறை பார்க்கும் ஆர்வத்தில் நானும் முழந்தாளிட்டேன். நமஸ்கரிக்க மறந்தேன். “விழுந்து கும்பிடு, விழுந்து கும்பிடுடா”, என்று அம்மா என்னை ஒரேயடியாக நச்சரித்தாள். குழம்பிய படி, ஒரு முறை குனிந்து வணங்கிவிட்டு மலஹாவைப் பார்க்க நிமிர்ந்தேன்.

அடடே! தரை வரை வழிந்த பெரிய மஞ்சள் பட்டு போர்த்திய ஒன்பது உயரமான பெரிய குதிரைகள் வரிசையாக வந்தன! லாமாக்கள் உடன் நடந்தனர். சில மடாலய பிக்குகளும் புரோகிதர்களும் கூடவே நடக்க மலஹாவின் குடும்பத்தினர் ஊர்வலத்தின் இறுதியில் மற்ற பொது மக்களுக்கு முன்னால் நடந்தனர். மஞ்சள் உடையில் இருந்த மலஹா மிகவும் தனிமையாகவும் துயரமாகவும் உணர்ந்தவனைப் போலத் தெரிந்தான். அவன் ஐந்தாம் குதிரையின் மீது சவாரி செய்தான். இருபுறமும் நான்கு லாமாக்கள் அவனைக் கவனித்துக் கொள்ள இருந்தனர். இருந்தும் தான் விழுந்து விடுவோமோ என்று அவன் மிகவும் பயந்தாற்போலத் தெரிந்தான். ஆகவே, கடிவாளத்தை மிகவும் உறுதியாகப் பற்றியிருந்தான். என் முன்னால் வந்ததும் அவன் லேசாகக் குனிந்து எங்கள் பக்கம் பார்த்தான். அவன் என்னைப் பார்த்தாற்போலத் தான் இருந்தது. பார்க்காதது போலவும் தான் இருந்தது. அவனது அடர்ந்த புருவம் ஒருமுறை சுருங்கியது. முகம் ஏனோ பெரும் வலியில். ஒரு வேளை உற்றார், குடும்பம், உறவினர், நண்பர்கள், கிராமம் என்று எல்லோரையும் விட்டுப் பிரியும் சோகமோ. கண்ணோரத்தில் கண்ணீரின் லேசாக பளபளப்பைக் கூட என்னால் காண முடிந்தது.

மஞ்சள் ஊர்வலம் மெதுவாக தூரத்து மஞ்சள் மண்ணில் கரைந்து மறைந்து போனது. கிராமத்தினர் தரையிலிருந்து நெற்றில் ஒட்டியிருந்த மண்ணத் தட்டியபடியே ஒவ்வொருவராக எழுந்தனர். அதிக முறை விழுந்து கும்பிட்டவர்களின் நெற்றியில் அதிக மண் ஒட்டியிருந்தது. பக்தியில் மூழ்கியதில் சிலர் நெற்றியைத் துடைக்கவும் கூட மறந்திருந்தனர்.

நான் கூட்டத்துடன் ஊருக்குள் திரும்பிப் போனேன். ஏதோ கொள்ளை போனாற் போல உள்ளம் வெறுமையாக இருந்தது. இதயத்திற்குள் இரண்டு எருதுகள் சண்டையிட்டாற் போலவும் இருந்தது. என்னால் தாங்கவே முடியவில்லை! நான் அன்றைய நாள் முழுவதும் ஒன்றுமே சாப்பிடவோ குடிக்கவோ இல்லை. பெரிய தோப்பின் மரத்தின் மீது எனது வெறித்த பார்வையை இருத்தி தனியே உட்கார்ந்திருந்தேன். நேரம் அதிகமாகியிருந்த போது அம்மா வந்து என்னைக் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனாள்.

மூன்று வருடங்கள் ஓடி விட்டிருந்தன. நான் மேலைப்பாணியிலான ஒரு பள்ளியில் சேர்ந்திருந்தேன்.

ஒரு நாள் பள்ளியிலிருந்து நான் வீடு திரும்பிய போது, ஏழ்மைச் சுருக்கங்கள் நிரம்பிய என் தாயின் முகத்தில் புது ஒளியைக் கண்டேன். என்னைக் கண்டவுடன், “கிராம மக்களை ஆசிர்வதிக்க ‘வாழும் புத்தர்’ வருகிறார்”, என்றாள். மங்கோலிய எழுத்துக்கள் நிரம்பியிருந்த என் மூளையில் என் பால்ய நண்பன் மலஹாவின் பிம்பங்கள் சட்சட்டென்று தோன்றின.

வாழும் புத்தர் கிராமத்து பக்தர்களை ஆசிர்வதிக்க கிராமத்தின் கிழக்குப் பகுதியிலிருக்கும் பழமைமிகு மடாலயத்தின் பளிங்குப் படிகளில் வீற்றிருப்பார். வாழும் புத்தரின் முன்பு விழுந்து வணங்கும் ஒருவர் தன் துரதிருஷ்டங்களையெல்லாம் விரட்டியடித்து நல்லதிருஷ்டங்களைப் பெறுவர் என்று பெரிதும் நம்பப் பட்டது. ஆகவே, முதியோர்கள் பலர் இப்பிறவியில் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடியும் புனிதம் பெற்று அடுத்த பிறவியில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அனுபவிக்கவும் விரும்பினர். அதற்காக தம் வீட்டின் வாசலிலிருந்து ஒவ்வொரு அடிக்கும் தரையில் குனிந்து விழுந்து வணங்கியபடியே வாழும் பத்தரின் திருவடிகள் வரை சென்றனர். இதைச் செய்யவென்று சிலர் நள்ளிரவிலேயே எழுந்திருந்தனர்.

மேற்கத்தியப் பள்ளியில் சில ஆண்டுகள் படித்திருந்ததில் சமயம் சார்ந்த விஷயங்களில் நான் ஏற்கனவே கொஞ்சம் அவநம்பிக்கை கொண்டிருந்தேன். மடாலயத்தின் பிரமாண்டத்தை வியந்து ரசிக்கவோ சடங்குகளைக் கண்டு களிக்கவோ நான் கொஞ்சங்கூடத் தயாராக இல்லை. ஆனாலும், நான் கூட்டத்தினூடே ஊடுருவிச் சென்றேன். என் அருமை நண்பனைக் காணவே நான் அவ்வாறு முன்னேறிச் சென்றேன். அவன் இப்போது பார்க்க எப்படியிருப்பான் என்று அறிய மிகுந்த ஆவல் கொண்ட நான் வத்திப் புகையின் நடுவே முன்னேறி மலஹாவை, இல்லையில்லை வாழும் புத்தரை நெருங்கினேன். அவன் மஞ்சள் பட்டு மெத்தையின் மீது அமர்ந்திருந்தான். நான் மேடைக்கு கீழே முழந்தாளிட்டிருந்தேன். நான் தலையை நிமிர்த்தி கண்களை அகலத் திறந்து அவனைச் சில நொடிகளுக்கு வெறித்தேன்.

என் நண்பன் முழுக்கவே மாறியிருந்தான். அவனது கன்னங்கள் ஒட்டிப் போய் கண்கள் குழிக்குள் விழுந்து முகம் வெளுத்துப் போய் உணர்ச்சியற்றவனாக இருந்தான். முக்கியமாக, அவனது கண்கள் ஒளியனைத்தையும் இழந்து சோர்வாகக் காணப் பட்டன. அவன் என்னை அடையாளம் கண்டு கொண்டான். அதன் அடையாளமாக ஒரு முறை தன் கண்களைச் சுழற்றினான். ஆனால், என் எதிர்வினைக்குக் காத்திராமல் தனது வாழும் புத்தர் உருவத்தை மீண்டும் ஏற்றான். மீண்டும் கண்கள் அசைவற்றிருந்தன. அடடா! மூன்றே வருடங்களில் துறுதுறுவென்று இருந்த என் பால்ய நண்பன் முற்றிலும் மாறிப் போய் கல் போன்ற தெய்வமாகிப் போயிருந்தான்! இதயம் ஏனோ வலித்தது.

மலஹா வாழும் புத்தராகி ஐந்தாண்டுகளாகியிருந்தன. அந்த வருடம் கோடையின் போது, கேகன் மடாலயத்தில் ஒரு பிரமாண்ட கூட்டம் நடந்தேறியது. அங்கு நடக்கவிருந்த பெரியதொரு சடங்கில் தான் வாழும் புத்தர் பௌத்த சூத்திர வியாக்கியானம் செய்வார். நானும் என் பக்கத்து வீட்டுக்காரருடன் அந்த கோலாகலத்தைக் காணச் சென்றேன். கடைசி நாளன்று, மாலையில் ‘வாழும் பத்தர்’ பக்தர்களின் வழிபாட்டை ஏற்று ஆசிர்வதிப்பார் என்று கேகன் மடாலயத்தின் மூத்த லாமா அறிவித்தார்.

மாலையில், மடாலயம் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. நீண்டிருந்த வரிசையில் நானும் நின்றேன். நூறடி தூரத்திலிருந்தே ‘வாழும் புத்தர்’ அமர்ந்திருந்த அரியணையையும் கண்டேன். விடாமல் எரிந்து கொண்டிருந்த விளக்குகளும் அவ்வெண்கல விளக்குகளின் பெரிய அளவையும் பிரமிப்புடன் கண்டேன்.

அத்தனை விளக்குகளின் வெளிச்சத்தையும் தாண்டியும் கூட என்னால் வாழும் புத்தரின் முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. பெரிய மஞ்சள் அங்கியினுள் இருந்த ஒரு உருவத்தை மட்டுமே காண முடிந்தது. தலையிலும் கூட மஞ்சள் அங்கியின் ஒரு பகுதி மூடியிருந்தது. இரு கரங்களையும் கூப்பியவாறு அசைவற்று மண் பொம்மையாக உட்கர்ந்திருந்தார் வாழும் புத்தர்.

நான் அந்தப் பெரிய கூடத்திலிருந்து சற்றே விலகி முன்னால் போனேன். பக்தகள் எல்லோரும் ஒரு வித பரவச நிலையில் இருந்தனர். பலர் கண்ணீர் விட்டு அழுது ஆசிகள் கேட்டனர். மூடிய கண்களைத் திறந்து வாழும் புத்தர் பக்தர்களைப் பார்க்கவில்லை. ஒரு சிறு கண்ணிமை அசைவைக் கூடப் பார்க்க முடியவில்லை. கவனத்தை ஈர்க்கவென்றே நான் முன்னால் நடந்துப் போய் நிமிர்ந்து நின்றேன். மலஹா கண்ணைத் திறந்து என்னைப் பார்ப்பான் என்று மிகவும் எதிர்பார்த்தேன். ஆனாலும், ஒரு அசைவுமில்லை.

என் எதிர்பார்ப்புகள் எல்லாம் வீணாகின. திடீரென, என்னுள் ஒரு துணிச்சல் எழுந்தது. எப்படியென்றே தெரியவில்லை. மென்குரலில் மஞ்சள் அங்கியிலிருந்த வாழும் புத்தரைப் பலமுறை அழைத்தேன். “மலஹா, நான் தான்,.. நான் தான் மலஹா! கண்ணத் தெறந்து பாரு”, என்றேன். நான் இரைந்து கூப்பிடா விட்டாலும், அவன் என்னைக் கேட்டிருக்க நிறைய வாய்ப்புக்கள் உண்டு. ஆனாலும், ஒரு சிறு அசைவைக் கூட அவன் ஏற்படுத்தவில்லை.

என் இதயம் உடைந்தது. ஒரு வேளை அவன் நிஜமாகவே புத்தராகியே விட்டானோ? மர்மங்களும் தீவிரமும் நிறைந்த அந்தச் சமயச் சூழலில், நானும் ‘வாழும் புத்தர்’ முன்னால் மண்டியிட்டேன். அனிச்சையாக பலமுறை நமஸ்கரித்தேன். ஒரு வழியாக எழுந்து நின்று வெளியேறிய போது என் இதயம் உடைந்திருப்பதை வலியுடன் உணர்ந்தேன். என் பால்ய நண்பனை நிரந்தரமாக இழந்ததற்கு உரக்கவே அழுதேன்.

மேலும் சில சதாப்தங்கள் கடந்தன. இப்போது நமது மக்களில் பலர் சமூகத் தலைவர்களாகியிருந்தனர்.

மக்களின் வரிப்பணத்தில் கொழுத்து வளர்ந்திருந்த நான் நன்றாகப் படிக்காத ஒரு பையனிலிருந்து எழுத்தாளராகி இருந்தேன். என் எழுத்துக்களில் நான் அடிக்கடி என் குழந்தைப் பருவத்தை மீட்டெடுத்தபடியிருந்தேன். பல வருடப் போராட்டம், சிறு வயது நண்பர்கள், வாலிப வயது நண்பர்கள் ஆகிய எல்லோருமே என் எழுத்துக்களில் உலவிய பாத்திரங்களுக்கான மாதிரிகள் ஆகியிருந்தனர். ஏதோ காரணத்திற்காக நான் என்றுமே குட்டிப் பையல் மலஹாவைக் குறித்து எழுதியிருக்கவில்லை. ஒரு வேளை என் நினைவில் அவன் இருக்கவில்லையோ? இல்லையானால், அவன் புத்தராகி விட்டதாலோ? நிதர்சன வாழ்க்கையைச் சித்தரித்த என் எழுத்துக்களில் உணர்வுகளுடனான மனிதர்களுக்கும் ரத்தமும் சதையுமானவர்களுக்கும் தான் வேலையிருந்தது. பெயரைக் கூப்பிட்ட பிறகும், கண்ணிமையைக் கூட அசைக்காத வெறும் மண் பொம்மைகளுக்கல்ல.

அமைதியான ஒரு பனிக்கால இரவில் நான் என் மேசையினருகில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது தான் யாரோ கதவைத் தட்டினார்கள். டக் டக் டக்! அறுபத்தெட்டு வயதாகியும் திடமாக இருந்த என் தாய், “வரேன், வரேன்”, என்று சொல்லிக் கொண்டே போய் கதவைத் திறந்தாள். பிறகு, என் சின்ன மகள், “அப்பா, இங்க வாங்க. பாட்டி மயங்கி விழுந்துட்டாங்க!”, என்று உரக்கக் கத்தினாள். பேனாவைக் கீழே வைத்து விட்டு விடுவிடுவென்று எழுந்து ஓடிப் போனேன். அம்மா பல முறை தரையில் தலைபடக் குனிந்து குனிந்து வணங்கிக் கொண்டிருந்தாள். அதையெல்லாம் இது வரை என் மகள் பார்த்ததில்லை. ஆதலால், அப்படிச் சொல்லிக் கத்தியிருக்கிறாள். இதற்கிடையில், முன்னால் வந்து அம்மாவைத் தூக்கி எழுப்பிக் கொண்டிருந்தார் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர். “அத்தை, இதையெல்லாம் நீங்க இனி செய்யக் கூடாது. நான் இப்போது வெறும் மனிதன். வாழும் புத்தரில்லை!”

நான் திரும்பி அந்நபரைக் கூர்ந்து பார்த்தேன். மிக நேர்த்தியாக உடுத்தியிருந்தார். கதோரம் நரைத்திருந்தது. வாயோரம் கீழிறங்கி, தலை கொஞ்சம் சொட்டை தட்டி இருந்தாலும் முடி முறையாக பின்னோக்கி சீவப்பட்டிருந்தது. அம்மாவை எழுப்பி விட்ட பிறகு, என்னை நேராகப் பார்த்தார். பிறகு சிரிக்கும் கண்களிலிருந்து தான் அவரை நான் அடையாளம் கண்டேன். என்ன ஆச்சரியம், என் பால்ய நண்பன் மலஹா!

“இத்தனை வருடங்களாக எங்கயிருந்த?”, முகமன் கூறி வரவேற்றபடியே கேட்டேன். அவனை என் அறைக்குள் கூப்பிட்டேன்.

“நான் நிறைய பயணம் செய்தேன். ஆங்காகே தங்கக் கூடிய இடங்களில் தங்கி மருத்துவமும் செய்தேன். ஆனால், நான் ஏதோ தெருவெங்கும் திரிந்து நாய்த் தோல் வியாபாரம் செய்தேன் என்று மட்டும் நீ நினைத்துவிடாதே”, என்று நான் கொடுத்த தேநீரைக் குடித்துக் கொண்டே சொன்னான். தன்னைத் தானே கேலி செய்து கொள்பவனைப் போல மெதுவாகப் பேசினான். “நம் வட்டாரம் விடுதலை அடைந்த பின்னர் நான் மடாலயத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் மூத்த லாமாவிடம் ஒப்படைத்தேன். பிறகு, நான் வசித்த ஆலயத்திலேயே மங்கோலிய மற்றும் திபெத்திய மருத்துவம் படித்தேன். பாரம்பரிய மங்கோலிய மற்றும் திபெத்திய மருத்துவம் அறிந்தோர் உண்மையில் மிகவும் செல்வந்தர்கள்”, என்றபடியே தன் பையிலிருந்து பெரிய தடித்த நூல் ஒன்றை எடுத்தான். “இது தான் நான் மேற்கொண்ட நாற்பது ஆண்டு ஆராய்ச்சியின் தொகுப்பு நூல். சமீபத்தில் தான் இதை நான் பதிப்பித்தேன்”, என்றான்.

நான் அந்நூலைக் கையில் வாங்கினேன். ‘மங்கோலிய மற்றும் திபெத்திய மருத்துவக் களஞ்சியம்’ என்ற தலைப்பு மங்கோலிய, திபெத்திய, ஹ்ஹான் மொழிகளில் பொன்னிற எழுத்துக்களில் அழகாகப் பொறிக்கப் பட்டிருக்கக் கண்டேன். அதன் கீழே அந்நூலின் ஆசிரியரின் பெயர் ‘மலஹா’ என்றெழுதப் பட்டிருந்தது.

“பத்தொன்பதாம் நூற்றாண்டில் இப்பகுதிகள் மிக முக்கிய எழுத்தாளரும் வரலாற்றியல் வல்லுனருமான யின்ஜான்னாஸியை உலகுக்குக் கொடுத்தது. இப்போது இந்த இருபதாம் நூற்றாண்டில் மலஹா என்ற அருமையான மருத்துவரைக் கொடுத்துள்ளது. இது குறித்து நாம் பெருமைப் படலாம்”, என்றேன் நான் அவனிடம் மிகவும் உற்சாகமாக.

மலஹாவின் முகம் உணர்ச்சியில் தத்தளித்தது. மிகவும் பெருமைப் பட்டான் என்று புரிந்தது. அறிவு ஒளி வீசும் அவனது கண்கள் மின்னின.

“நான் இப்போது தான் ஷாங்காய்யில் தேசிய மருத்துவ மாநாடு ஒன்றிற்குப் போய் வந்திருக்கிறேன். திரும்பும் வழியில், முக்கியமாக உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்.”

மூன்று நாட்களுக்கு எங்களுடன் இருந்தான் மலஹா. அவன் கிளம்புவதற்கு முதல் நாள் நான் அவனுக்கு ஒரு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்தேன். கவமானவும் சிறப்பாகவும் தயார் செய்த உணவு வகைகளை மதுவுடன் பறிமாறினேன். அவன் அதிகம் குடிக்காதவன். இருந்தும் அன்றைக்கு தொடர்ந்து மூன்று கோப்பைகள் குடித்தான்.

சூடேறி எங்களது முகங்கள் சிவந்திருந்தன. எங்களிடையே இருந்த சிறு வயதின் அன்பு மீட்டெடுக்கப் பட்டது போல உணர்ந்தோம். மிகவும் மகிழ்ந்தோம். நான் போதையில் இருந்ததாலோ என்னவோ, வெகு நாட்களாக அவனிடம் கேட்க நினைத்தும் கேட்காத அந்தக் கேள்வியைத் துணிந்து கேட்டு வைத்தேன்.

“நீ இப்போது ஒரு மருத்துவரா? இல்லை வாழும் புத்தரா? ஒரு மருத்துவர் மனிதர். ஆனால், நீ இன்னமும் ‘வாழும் புத்தர்’ தான் என்றால் நீ மனிதன் இல்லை. ஒரு தெய்வம்.”

மலஹா சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான். கையில் ஒரு தேநீர் கோப்பை இருந்தது. சோகமாகச் சிரித்தான். வேகமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் நிதானத்துடன் கூறினான். “ஆ! நிச்சயமாக இவ்வுலகில் தெய்வங்கள் இருக்க முடியாது. ஆனால், முட்டாள் தனத்தினால் எதன் மீதாகிலும் ஒரு முக்கிய நம்பிக்கை வைக்கவும் மனிதன் தெய்வங்களை உருவாக்குகிறார்கள். முதலில் சக மனிதர்கள் அவனை வணங்கும் போது முதலில் தானும் ஒரு தெய்வம் என்றே எண்ணத் தலைப்படுகிறான். தெய்வமாக நடந்து கொள்ளவும் ஆரம்பிக்கலாம். மனிதர்களும் முன்பை விட அதிகமாக அவனை நம்பவும் பைத்தியமாக வழிபடவும் ஆரம்பிக்கலாம். மக்களுக்குத் தெரியாது அவர்கள் ஏமாற்றப் பட்டிருப்பது. சொல்லப் போனால் தெய்வமாக்கப் பட்டிருக்கும் மனிதனுமே ஏமாற்றப் பட்டிருக்கிறான். ஆனால், காலம் செல்லச் செல்ல அம்மனிதன் வேறு வழியில்லாமல் தெய்வத்தைப் போலவே நடக்க முயற்சிக்க வேண்டியதிருக்கிறது. இது மக்களை மேலும் முட்டாளாக்கும் வேலை. இதே போன்ற ஏமாற்று வேலைகளில் பல்லாண்டுகள் கழிந்து போயின. அவ்வருடங்கள் அபத்தங்கள் நிறைந்தவை. அபத்த வருடங்கள் எல்லாம் போனது போனது தான். ஆனால், அதே மக்களால் தான் வரலாறும் எழுதப் படும் என்பது தான் வேடிக்கை.”

ஆங்கில மொழிபெயர்ப்பு: Wen Xue (10 June 1980)

***

ஆசிரியர் குறிப்பு:
1930ல் லியாவ்னிங் மாநிலத்தின் துமுட் பான்னர் எனும் ஊரில் பிறந்த மால்ச்சின்ஹூ ஒரு மங்கோலியர். 1945ல் இராணுவத்தில் சேர்ந்த இவர் பிறகு கலாசாரப் புரட்சியின் குழுவில் எழுத்தாளரானார். 1951ல் ‘ஹோர்ச்சின் புல்வெளி’யில் வேலையில் இருந்த போது ‘ஹோர்ச்சின் புல்வெளியின் மனிதர்கள்’ என்ற தன் முதல் கதையைப் பிரசுரித்தார். அப்போதிலிருந்து நிறைய எழுதிப் பிரசுரித்தார். அவற்றுள் முக்கியமானவை; ‘எல்லையற்ற புல்வெளி’ எனும் புதினம் மற்றும் 3 சிறுகதைத் தொகுதிகள். பல திரைப்படக் கதைகளையும் இவர் எழுதியுள்ளார். ‘வாழும் புத்தரின் கதை’ தேசிய இலக்கிய விருது பெற்றது.

 

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
ஜெயந்தி சங்கர் – மதுரையில் பிறந்து பல இந்தியமாநிலங்களில் கல்வி பெற்று, திருச்சி சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் 1985ல் இயற்பியல் பட்டம் பெற்றவர். 1995திலிருந்து எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் இவர் 1990 முதல் சிங்கப்பூரில் பொறியாளரான கணவர் மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். ஓர் எழுத்தாளராக தான் உருவாக முக்கிய காரணம் தனது தொடர்ந்த வாசிப்பும் அதற்கு உறுதுணையாக அமைந்த சிங்கப்பூரின் நூலகக்கிளைகளுமே என்று கூறும் இவருக்கு எழுத்து தவிர இசையிலும் ஈடுபாடு உண்டு. இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கி வரும் இவர், தான் எழுதுவதுடன் தமிழிலக்கியத்தில் சிங்கையின் எதிர்கால எழுத்தாளர்களுக்கான இடத்தை மேலும் ஆழமும் அகலமுமாக்கி வருகிறார். சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டுள்ள இவர் சிங்கப்பூர்வாசிகளின் இருப்பையும் வாழ்வையும் சிறுகதைகளாகவும் நெடும்புனைவுகளாகவும் எழுவதன் மூலம் அவற்றை உலக அனுபவங்களாக்குவார். தனது சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து புனைவுகளாக சிருஷ்டிக்கும் இவரின் ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் சிங்கப்பூர் தமிழர்களின் முகத்தை அதன் அத்தனை எழில்களுடனும் நிரந்தரமாகப் பொறித்து வருகிறது. சிறுவயது இடப்பெயர்வுகளூடாக கற்றதும் இழந்ததுமான அனுபவம் வாய்க்கப் பெற்றுள்ள இவர்மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். சிங்கப்பூரின் பல்லினச் சமூகத்தினை உள்வாங்கிக் கொண்டு இவர் எழுதியிருக்கும் டிசம்பர் 2008 வரையிலான 16 நூல்களும் ஒவ்வொரு வகையில் கவனிக்கத் தகுந்தவை. சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தின் பக்கம் உலகத் தமிழர்களின் பார்வையைத் திருப்பக் கூடியவையும் கூட. நிறைய சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல்கள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள இவர் இலக்கியச் சிந்தனை (டிசம்பர் 2008) உள்ளிட்ட எண்ணற்ற பரிசுகள் வாங்கியுள்ளார். 2006ஆம் வருடம் பிரசுரமான ‘நியாயங்கள் பொதுவானவை’ என்ற சிறுகதைத் தொகுப்பு திருப்பூர் அரிமா சங்கத்தினர் ஏற்பாடு செய்த ‘அரிமா சக்தி விருது 2006’ல் சிறப்புப் பரிசு பெற்றது. உலகளாவிய பரந்துபட்ட வாசகர்களைப் பெற்றுள்ள இவர் சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட இவரின் எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறுபவர். சில சிறுகதைத் தொகுப்புகளிலும் இவரின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவரது சிறுகதைகள் வேற்று மொழியில், குறிப்பாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மொழிபெயர்ப்பும் காணவிருக்கின்றன. அதன் துவக்கமாக பாரதிய வித்யா பவனின் நவ்னீத் ஹிந்தி டைஜஸ்ட்டில் ஜனவரி 2008 இதழில் இவரின் ‘திரிசங்கு’ சிறுகதை ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2008 ஏப்ரல் 30 அன்று நடந்தேறிய நிகழ்வில் உரையாற்றிய மலேசிய மூத்த தமிழ் எழுத்தாளர் சை. பீர் முகமது அவர்கள் ஜெயந்தி சங்கர் எழுதிய ‘ஈரம்’ சிறுகதையைப்பற்றிப் பேசிவிட்டு, ‘இருபத்தைந்தாண்டுகளில் எழுதப்படாத ஆகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை’ என்று கூறிப் பாராட்டினார். ‘சிங்கப்பூர் இலக்கிய விருது – 2008’ல் இவரது சிறுகதைத் தொகுப்பான ‘பின் சீட்’ தேர்வானது.