• கௌதம சித்தார்த்தன்

 

உலகை அணு ஆயுதங்களிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளுக்காக ஜப்பானிய அணுகுண்டுகளில் இருந்து தப்பியவர்கள் குழுவான நிஹான் ஹிடாங்யோ  Nihon Hidankyo என்னும் ஜப்பானிய அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

‘நிஹான் ஹிடாங்யோ அமைப்பு  அமைதிக்கான நோபல் பரிசுக்காக  இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது’ என்ற  செய்தி உண்மைதானா என்று, அமைப்பின் இணைத்தலைவர் டோஷியுகி மிமாகி (Toshiyuki Mimaki) தன கன்னத்தைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டார். இந்த போட்டோ இணையத்தில் பெரும் வைரலாகப் பரவியுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, ஆகஸ்ட் 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் வீசப்பட்ட இரண்டு அமெரிக்க அணுகுண்டுகளில் இருந்து தப்பியவர்களால் உருவாக்கப்பட்ட ஜப்பானிய  அமைப்பான நிஹான் ஹிடாங்யோவுக்கு (Nihon Hidankyo) வழங்கப்பட்டது. இந்த அமைப்பு,  ஜப்பானிய அணு, ஹைட்ரஜன் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டமைப்பு (Japan Confederation of A- and H-Bomb Sufferers Organizations) என்பது 1956ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு குழு. இது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவை மேம்படுத்தவும், அணு ஆயுதங்களை ஒழிக்கவும் அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து அணு ஆயுதங்களை ஒழிக்கும் குறிக்கோள்களுடன், ஜப்பானிய அரசை வலியுறுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.  இவர்கள், அணுசக்தி இல்லாத உலகத்திற்கான போராட்டத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.

நோர்வே நோபல் கமிட்டி “அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்கான அதன் முயற்சிகளுக்காகவும், அணு ஆயுதங்களை இனி ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்று பாதிக்கப்பட்ட சாட்சிகள் (victimes) மூலம் நிரூபித்ததற்காகவும்” இந்த அமைப்பை அங்கீகரித்துள்ளது.

100,000 க்கும் மேற்பட்ட ஜப்பானிய மக்களைக் கொன்ற குண்டுவெடிப்புகள் பற்றிய விவாதம், போருக்குப் பிந்தைய உடனடி காலகட்டத்தில் பெரும்பாலும் தடைசெய்யப்பட்டது. அதே சமயம், 1954 ஆம் ஆண்டில், பசிபிக் பெருங்கடலில் உள்ள பிகினி அட்டோல் என்ற இடத்தில் அமெரிக்க அணு ஆயுதச் சோதனை நடத்தியது, அது லக்கி டிராகன் என்னும் ஜப்பானிய மீன்பிடிப் படகைப் பாதித்து, கதிரியக்க விஷத்தால் ஒரு மரணத்தை ஏற்படுத்திய அளவுக்கு விரிவான கதிரியக்க வீழ்ச்சியை உருவாக்கியது.

லக்கி டிராகன் சம்பவம் “ஹிபாகுஷா (hibakusha) என்று அழைக்கப்படும் அணுகுண்டுகளில் இருந்து தப்பிய பலரை” தங்கள் அனுபவங்களைப் பற்றி பேசத் தூண்டியது. இந்த சூழலில்தான் நிஹான் ஹிடாங்யோ 1956 இல் உருவாக்கப்பட்டது.

அப்போதிருந்து, ஹிபாகுஷா உலகளவில் அணு ஆயுதங்களுக்கு எதிரான செயல்பாட்டில் அளவிட முடியாத பங்கைக் கொண்டுள்ளது. தேர்வு செய்த நோபல் கமிட்டி அவர்களின் சாட்சியம்தான்,  “உலகம் முழுவதும் அணு ஆயுதங்களுக்கு பரவலான எதிர்ப்பை உருவாக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவியது” என்று கூறியது.

உதாரணமாக, 1975 ஆம் ஆண்டில், நிஹான் ஹிடாங்யோவின் உறுப்பினரும், அணு ஆயுதங்களுக்கு எதிரான உலகப் புகழ்பெற்ற பிரச்சாரகருமான செட்சுகோ தர்லோ (Setsuko Thurlow) போன்ற முக்கியமானவர்கள் கொண்ட  ஹிபாகுஷா குழு, டொராண்டோ பொது நூலகத்தில் அணுகுண்டு தாக்குதல்கள் குறித்த கண்காட்சியை ஏற்பாடு செய்தது. இது கனடாவில் ஒரு குறிப்பிடத்தக்க அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியைத் தூண்ட உதவியது. 1980 களின் முற்பகுதியில், பல்லாயிரக்கணக்கான கனடியர்கள் அமெரிக்க அணு ஆயுதங்களுக்கு எதிராக, தங்கள் அரசாங்கத்தின் ஆதரவை எதிர்த்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர் .

பின்னர், 1984 ஆம் ஆண்டில், ஹிரோஷிமா குண்டுவெடிப்பில் இருந்து தப்பிய மற்றொரு முக்கியமானவரான தகாஷி மொரிட்டா, சாவோ பாலோவை தளமாகக் கொண்ட ஹிபாகுஷா அமைப்பை நண்பர்களுடன் இணைந்து நிறுவினார், அணு ஆயுதங்களின் பேரழிவு விளைவுகளைப் பற்றி பிரேசிலில் தங்கள் போருக்கு எதிரான உரைகளைப் பகிர்ந்து கொள்ளவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த அமைப்பு விளங்கியது. 1980கள் முழுவதும் ஹிபாகுஷாவின் அனுபவங்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தது, ஐரோப்பியர்கள் தங்கள் நாடுகளில் புதிய அணுசக்தி ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க தூண்டியது. “இனியொரு ஹிரோஷிமா வேண்டாம்” என்ற சொற்றொடர் ஐரோப்பிய அமைதி இயக்கத்திற்கான பிரபலமான முழக்கமாக மாறியது. நிஹோன் ஹிடாங்யோவின் முயற்சிகள் ஹிபாகுஷாவின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை,  உலகளவில் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான ஆதரவைப் பெறுவதற்கும் அவற்றைப் பயன்படுத்தியது.

அணு ஆயுத தடை தொடர்பான ஐ.நா. ஒப்பந்தத்தின் முக்கிய ஆதரவாளராக இந்த அமைப்பு தற்போது இருந்து வருகிறது . 2017 இல் நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தம், 94 நாடுகளால் கையெழுத்திடப்பட்டுள்ளது, எந்த அணு ஆயுத நடவடிக்கைகளிலும் மாநிலங்கள் பங்கேற்க தடை விதிக்கிறது. அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச பிரச்சாரம் – இதில் செட்சுகோ தர்லோ ஒரு முன்னணி நபராக உள்ளார் – 2017 இல் அமைதிக்கான நோபல் பரிசு அத்தகைய ஆயுதங்களின் சட்டப்பூர்வ தடையை அடைவதற்கான முயற்சிகளுக்காக வழங்கப்பட்டது.

ஜப்பானிய அரசாங்கம், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் கண்ட பயங்கரங்கள் இருந்தபோதிலும், அமெரிக்க அணு ஆயுதங்களுக்கு ஆதரவாக உள்ளது, மேலும் அணு ஆயுதம் ஏந்திய பல அண்டை நாடுகளுக்கு எதிராக ஒரு தடுப்பாக அவற்றைச் சார்ந்துள்ளது. ஜப்பானுக்குள், அணு ஆயுதங்கள் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை,  நிஹான் ஹிடாங்யோ வலிமையான விமர்சனங்களுடன் முன்வைத்து வேலை செய்கிறது.

அடுத்தடுத்து வந்த ஜப்பானிய அரசாங்கங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அணு ஆயுதங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஜப்பானில் பலருக்கு இது ஒரு சர்ச்சைக்குரிய நிலைப்பாடாகவே உள்ளது. ஒவ்வொரு ஜப்பானிய பள்ளிக் குழந்தையும் பொதுவாக ஹிரோஷிமா அல்லது நாகசாகிக்கு சென்று அணு ஆயுதங்களின் பயங்கரமான விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்வார்கள்.

நிஹான் ஹிடாங்யோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவதற்கான முடிவு குறிப்பாக சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில், உலகின் ஒன்பது அணுசக்தி சக்திகள் அணு ஆயுதங்களுக்காக US$91 பில்லியன் (£69.5 பில்லியன்) செலவிட்டன. 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக பலமுறை அச்சுறுத்தியுள்ளார் .

இவை தொடர்பான நிஹான் ஹிடாங்யோவின் கண்டனங்களும் எதிர்ப்புகளும் நோபல் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டன. இந்தப்பின்னணியில் நிஹான் ஹிடாங்யோ வுக்கு விருத்தாளராகத் தேர்ந்தெடுத்தது மிகச் சரியான தேர்வு என்று விருதுக்குழு பரிந்துரைக்கிறது.  “இன்று அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான இந்த தடை அழுத்தத்தில் உள்ளது என்பது ஆபத்தானது” என்று கூறுகிறது.

உலகின் அணுசக்தி சக்திகள் – குறிப்பாக சீனா மற்றும் அமெரிக்கா – தங்கள் ஆயுதங்களை விரிவுபடுத்தி நவீனப்படுத்துகின்றன. வடகொரியா தனது அணு ஆயுத திட்டத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது . மேலும் அணு ஆயுதம் கொண்ட இஸ்ரேலுக்கும் அணுசக்திக்கு அருகில் உள்ள ஈரானுக்கும் இடையே பதட்டங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

அணு ஆயுதங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் பனிப்போருக்குப் பிறகு எந்த நேரத்திலும் இல்லாததை விட இப்போது தெளிவாகத் தெரிகிறது. இன்று 100,000 ஹிபாகுஷாக்கள் உயிருடன் இருப்பதால், அவர்களின் குரல்களுக்கும் அவர்களின் எச்சரிக்கைகளுக்கும் நாம் செவிசாய்க்க வேண்டியது அவசியம்.

குறிப்பிட்ட நாடுகளின் பெயரைக் குறிப்பிடாமல், நோர்வே நோபல் குழுவின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னெஸ் (Jørgen Watne Frydnes), அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை அணுசக்தி நாடுகள் சிந்திக்கக் கூடாது என்று எச்சரித்தார் .”அணு ஆயுதங்கள் நிச்சயமாக அதன் ஒரு பகுதியாக இருக்கும் மோதல்கள் நிறைந்த உலகில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக அணுசக்தி தடை, சர்வதேச விதிமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாங்கள் முன்னிலைப்படுத்த விரும்புகிறோம்” என்கிறார்  ஃப்ரைட்னஸ்.

“ஹிபகுஷாவின் வேதனையான மற்றும் வியத்தகு கதைகளை” உலகம் கேட்க வேண்டும் என்றும், “இந்த ஆயுதங்கள் உலகில் எங்கும் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடாது … அணுசக்தி யுத்தம் மனிதகுலத்தின் முடிவைக் குறிக்கும் செயல்பாடு ” என்றும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2022 உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்பிலிருந்து சாத்தியமான அணுசக்தி விளைவுகள் குறித்து மேற்கு நாடுகளுக்கு பலமுறை எச்சரித்துள்ள நிலைமைகளை அந்தப் பேட்டியில் மிக விரிவாக அணுசக்தி எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்.

இந்த மாதம், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், தனது நாடு அணு ஆயுதங்களுடன் இராணுவ வல்லரசாக மாறுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் என்றும் , அது எதிரி தாக்குதலுக்கு உள்ளானால், அவற்றைப் பயன்படுத்துவதை நிராகரிக்க மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுப்பதாக செய்திகள் வரும் இந்தச் சூழலில், போருக்கு எதிரான பலத்த குரல் எழுப்பியதால், இப்போது வரை சிறைத்தணடனை பெற்று வரும் ஈரான் பெண்ணிய போர் எதிர்ப்பாளர் நர்கீஸ் முகமதி, கடந்த 023 வருடத்திற்கான நோபல் அமைதி விருது பெற்றுள்ள இந்தச் சூழலில், அணு குண்டு வாங்கும் முயற்சியை ஈரான் மீண்டும் தொடங்கலாம் என சர்வதேச போர் எதிர்ப்பு விமர்சகர்கள் யூகிக்கிறார்கள்.

1974ல் முன்னாள் பிரதமர் இசாகு சாடோ (Eisaku Satō) வென்ற 50 ஆண்டுகளுக்குப் பிறகு, 123 ஆண்டுகால வரலாற்றில் ஜப்பானியர் ஒருவருக்கு அமைதிக்கான இரண்டாவது நோபல் பரிசு இதுவாகும்.

***

1960 களில் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்ற, சாடோ விரைவான பொருளாதார வளர்ச்சியின் காலத்திற்கு தலைமை தாங்கினார். ஒகினாவாவை ( இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து அமெரிக்கா ஆக்கிரமித்துள்ள ரியுக்யு தீவுகள்) ஜப்பானிய கட்டுப்பாட்டிற்கு முறையாக திரும்புவதற்கு அவர் ஏற்பாடு செய்தார் . சாடே ஜப்பானை அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கொண்டு வந்தார்.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் குறித்து சுருக்கமாக:1960 களில், சீனாவின் அணு ஆயுதங்களுக்குப் பதிலடியாக, ஜப்பானுக்கு அணு ஆயுதங்கள் தேவை என்று சாடோ வாதிட்டார், ஆனால் அமெரிக்கா அதை எதிர்த்தது. ஜான் எஃப். கென்னடியின் படுகொலைக்குப் பிறகு, LBJ என்று குறிப்பிடப்படும்  லிண்டன் பெய்ன்ஸ் ஜான்சன், அமெரிக்காவின் 36வது ஜனாதிபதியாக பதவியேறினார். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஜான்சனின் அரசு, ஜப்பானுக்கு அழுத்தம் கொடுத்தது.

1967 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி அணுசக்தி அல்லாத மூன்று கோட்பாடுகளை சாடோ அறிமுகப்படுத்தினார். அதாவது, அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாதது, கைவசம் வைத்திருக்காதது மற்றும் அறிமுகப்படுத்தாதது. பின்னர் அவர் “நான்கு தூண் அணுக் கொள்கையை” பரிந்துரைத்தார்.

(1) அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் , (2) உலகளாவிய அணு ஆயுதக் குறைப்பு , (3) அணுசக்தி தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்காக அமெரிக்க அணுசக்தி மூலோபாயங்களை  பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்வது மற்றும் (4) அணுசக்தி அல்லாத மூன்று கொள்கைகளை ஆதரிப்பது  (  அணு ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கான கோட்பாடுகளாக 1.அணு ஆயுதங்களை உருவாக்க ஒரு நாட்டின் நலன்களுக்கு சேவை செய்யும் நிபந்தனைகள், 2. அணு ஆயுத வகைகளை கொள்கைகள் வரையறுத்து உருவாக்க வேண்டும், 3. ஆயுதங்களை எப்படி, எப்போது பயன்படுத்த வேண்டும்)

சாடோவின் தனது இந்தக் கொள்கைகள்  ஜப்பான் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திற்கு முன்னோட்டமிட்டு, 1971 இல் கொள்கைகளை முறையாக ஏற்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இதற்காக இசாகு சாடோ  1974 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

***
இறுதியாக, என் தமிழ் மண்ணில், மிகவும் தவறான – அல்லது தவறாகப் புரிந்து கொண்டிருக்கிற,  ஒரு பார்வை கட்டியெழுப்பப் பட்டு வருகிறது. ஒரு சில நண்பர்களால், ஆயுதபூஜை என்னும் நாளை ஆயுத வழிபாட்டு நாள் என்று கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜை என்பது வடமொழிச் சொல். அதன் தமிழ் அர்த்தம் : “நாம் வாழ்வதற்கு – நம் வாழ்வியலுக்கு இன்றியமையாததாக இருக்கும் பண்டைய கால வேளாண் கருவிகளிலிருந்து , 21 ஆம் நூற்றாண்டில் நீக்கமற ஆக்கிரமித்திருக்கும் கணினிகள் உட்பட மக்களின் வாழ்வியல் கருவிகள்தான், அவைகளைப் போற்றி வணங்குவோம்.” என்பதுதான் அந்தச் சொல்லின் அர்த்தம். ஆக, இப்படி அழைக்கலாம்: “வாழ்வியல் கருவிகளின் வழிபாட்டு நாள்”

அதைவிடுத்து, தவறாகத் திரிக்கப்பட்ட அர்த்தம் கொண்ட “ஆயுத வழிபாட்டு நாள் ” என்னும் சொற்றொடரும், அது பற்றிய “இரு போர்வாள்கள்” மோதிக்கொள்ளும் இலச்சினைகளும் போருக்கான மனவோட்டங்களை உசுப்பிவிடும். அதுமட்டுமல்லாது, இதன் துணைத் தலைப்பாக “போரும் ஏரும்” என்ற முழக்கம் (slogan) எழுதப்பட்டிருப்பது, “பண்டைய காலத்தில் நாங்கள் போர்த்தொழிலையும் ஏர்த் தொழிலையும் செய்து வந்தவர்கள்” என்று தங்களது பண்டைய பெருமைகளை உசுப்பிவிட்டு, போர் பற்றிய அவலங்களை romanticize செய்து, ஆர்வக் கிளர்ச்சியையும் மனவெழுச்சியையும் தூண்டி விடுவது. 

உலகமே போருக்கு எதிராகத் திரண்டு வரும் தற்காலச் சூழலில், 2000 ஆண்டு பழமை வாய்ந்த செம்மொழியியிலிருந்து எழும் இத்தகைய போக்குகளும், பார்வைகளும் மிகத் தவறானவை, இவைகளை ஊக்குவிப்பது மிக ஆபத்தானது, அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் தீங்கு.

 

***

(கட்டுரைக்கான தரவுகள் இணையத்திலிருந்து பெறப்பட்டவை)

Japan Confederation of A- and H-Bomb Sufferers Organizations (Nihon Hidankyo) co-chair Toshiyuki Mimaki, who survived the 1945 atomic bombing of Hiroshima, reacts as he attends a press conference after the 2024 Nobel Peace Prize winner was announced in Hiroshima, Japan October 11, 2024, in this photo taken by Kyodo. Mandatory credit Kyodo/via REUTERS