• ஹான் காங் உடன் ஒரு நேர்காணல்
  • நேர்காணல் கண்டவர் : கிறிஸ் லீ
  • தமிழில்: அவை நாயகன்

 

 

இந்த 2024 -ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் விருதை வென்ற, ஹான் காங் 1970 -இல் தென்கொரியாவில் பிறந்தவர். எழுத்தாளராக 1993 -ல் அறிமுகமானார். நாவல்கள் சிறுகதைகளை எழுதி வெளியிட்டு யி சாங் இலக்கிய விருது,  இன்றைய இளம் கலைஞர் விருது மற்றும் மான் ஹே இலக்கிய விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். தற்போது சியோல் கலைக்கல்லூரியில் படைப்பாக்க எழுத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். அவரது ஐந்து நாவல்களில் ஒன்றான Vegetarian, டெபோரா ஸ்மித்தின் மொழியாக்கத்தில் வெளியாகி 2016-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருதைப் பெற்றிருக்கிறது. சைவ உணவுக்கு மாறுவதன் மூலம் கட்டுப்பாடு மிகுந்த கொரியச் சமூக வழக்கங்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யும் ஒரு மணமான பெண், அதன் காரணமாகவே அவளது கணவர் பாலியல் வக்கிர நடவடிக்கைகளுக்கு உள்ளாகுவதையும் இந்த நாவலின் மையமாகப் படைத்திருக்கிறார்.

நேர்காணல் கண்ட கிறிஸ் லீ,  கொரிய – அமெரிக்க எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார்.  ஹான் காங், எழுத்தாளராக வளர்ந்த சூழலையும் தன் படைப்புகளில் வன்முறையைக் கருப்பொருளாக்குவதையும் பற்றிய உரையாடலாக இது நீண்டது என்கிறார் கிறிஸ் லீ.

***

கிறிஸ் லீ : நீங்கள் எப்படி எழுத்தாளர் ஆனீர்கள், இளம் வயதில் அதுதான் உங்கள் விருப்பமாக இருந்ததா.?

ஹான் காங் : இலக்கியங்களால் சூழப்பட்டது என் இளம் பருவம். தந்தை ஓர் எழுத்தாளர். அறைக்கலன்கள் கூட அதிகம் இல்லாத சிறு வீடு. அதனாலேயே வீடு மாற்றிக் கொண்டிருப்போம். நூல் சேகரிப்பில் பெருவிருப்பம் அவருக்கு. மூலை முடுக்கெல்லாம் புத்தகங்கள் போர்த்திக் கிடக்கும் – கதவு ஜன்னல் தவிர.  எங்கள் நூலகம் பெருகிக்கொண்டே இருந்தது. நண்பர்கள் வீட்டில் புத்தகங்கள் இல்லாதது வியப்பைத் தரும் அளவுக்கு அது போனது.

விடுதலை உணர்வோடு வாசிக்க ஆரம்பித்தேன். பெற்றோரின் இடையீடும் இல்லாததால் சவாலான நூல்களையும் மகிழ்ச்சியோடு வாசிக்க முடிந்தது. வாசிப்பை விரும்புகிறேன் என்பதும் புரிந்தது. அதனால் எழுத்தும் இயல்பாகவே தொடர்ந்து விட்டது. நான் யார்.?  எனது நோக்கம் என்ன.? மனிதர்கள் ஏன் சாக வேண்டும்.?  மரணத்திற்குப் பின் எங்கே போவார்கள் – என்பது போன்ற என் இளமைக்கே உரிய கேள்விகள் எழுந்து அழுத்த, மீண்டும் புத்தகங்களுக்குள் சரண் புகுந்தேன். அங்கும் எனக்கு விடை கிட்டவில்லை. எழுதுவதற்கு அதுதான் என்னை ஊக்குவித்தது. எழுத்தாளராக முடியும் என்பதையும் காட்டியது. அதுவும் கேள்விகளுக்குத் தான்; பதில்களுக்கு அல்ல.

கி. லீ : காட்சி வடிவிலான கலை அல்லது காட்சியுணர்வு என்பதை உங்கள் படைப்புகள் வலுவாகச் சுட்டுகின்றன. இதைச் சொல்லும் ஆர்வம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? உங்களது Vegetarian, Your Cold Hands ஆகியவற்றில் கலைஞனின் போக்கில் இது சொல்லப்பட்டிருக்கிறது என்பதை வியந்து பார்க்கிறேன்.

ஹா.கா : இளம் வயதில் என் அத்தை சில காலம் எங்களோடு இருந்தார். அவர் ஓர் ஓவியர். அவரது அறை முழுவதும் ஓவியங்களால் நிறைந்திருக்கும். நான் கூட அவருக்கு மாடலாக இருந்திருக்கிறேன்.

வெளிப்படையாகச் சொன்னால் அமைதியாக இருப்பதே கடினம். கலைஞனின் நோக்கில் சொல்வது என்பதை அந்த அனுபவம் தான் கற்றுக் கொடுத்தது. ஆயினும் நான் ஓவியங்கள் ஏதும் வரைய முயன்றதில்லை. அயோவா அனைத்து உலக எழுத்தாளர் நிகழ்ச்சியில் நான் பங்கு பெற்றபோது பயணம் மேற்கொள்வதற்காக உதவித்தொகை கிடைத்தது. அதைக்கொண்டு அமெரிக்க நகரங்களில் தனியாகப் பயணித்தபோது தானாகவே அங்குள்ள கலைக்கூடங்கள், அருங்காட்சியகங்களுக்குத்தான் சென்று பார்த்தேன். இருபதுகளிலேயே இது போன்ற அனுபவங்களைப் பெற்று விட்டதால் எழுத்தில் அவை பிரதிபலிக்கின்றன என்பதை ஊகித்து  இருப்பீர்கள்.

கேள்வி எழுப்புவதையும் ஆராய்வதையும் விரும்புகிறேன். எடுத்துக்காட்டாக ஒரு கருப்பு மேல்கோட்டின் மீது பனித்துளி விழுகிறது. ஒரு நொடியின் சிறு பகுதிக்குள் அது ஓர் அறுகோணமாகத் தோற்றமளிக்கிறது. இது காட்சிக் கலைக்கும் அப்பாற்பட்டது. எதையும் ஆழமாகப் பார்க்கும் தன்மை எழுத்தில் ஒரு பகுதிதானே. தற்போது ஓவியம் தீட்டவும் தொடங்கிவிட்டேன். இது கலைகளின் மீது எப்போதும் வைத்திருக்கும் நெருங்கிய உறவு. ஆகவே நான் இயல்பாக எழுதுகிறேன் – விழிப்பு நிலை தேவையின்றி.

கி.லீ : கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்‌. தனிமை என்பது தனது படைப்புகளில் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வருவதாக அவர் குறிப்பிடுவார்‌. ஓர் எழுத்தாளராக, மனிதப் பிறவியாக இது போன்ற கருத்துக்களும் ஊடாட்டங்களும் வந்து நம்மை ஆட்டிப்படைக்கின்றன என நம்புகிறேன். இதைத் தொடர்ந்து ஆராய்வதற்கான ஏதோ ஒன்று உங்களிடம் இருக்கிறதா?

ஹா.கா : நுட்பமான கேள்வி இது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் என் முதல் நாவலை எழுதினேன். எது என்னை எழுதத் தூண்டியதோ உள்ளத்தின் அடியாழத்தில் இருந்ததோ எதை எழுத முடியாதோ அதை எழுதினேன். ஆனால் எழுதத் தொடங்கிய பின் என்னை எது தொந்தரவு செய்ததோ எதையெல்லாம் பற்றிப் பிடித்திருந்தேனோ அவற்றை,  பிறகும் தொடர முடியும் என்பதையும் ஒரு கட்டத்தில் உணர்ந்தேன். ஏதோ ஒன்றைப் பற்றி மட்டுமல்ல;  மனித வன்முறை என்பதன் மீதான கேள்விகளுக்கு நான் திரும்ப வேண்டியதுதானே என்ற கேள்வியை அது எழுப்பியது. எடுத்துக்காட்டாக எனது Vegetarian நாவல், உண்பதற்கான விடுதலையையும் ஒரு பெண்ணின் மீதான வன்முறையையும் காட்டுகிறது. இன்னொரு நாவலில் தன்னை நிராகரிக்கும் மொழியின் பாற்பட்ட வன்முறையால் ஒருத்தி மொழியையே முற்றாக நிராகரிக்கும் நிலையை உணர்த்துகிறது. இதில் எனக்கு நேரடி அனுபவம் கிடையாது என்றாலும் என் இளமைக்காலம் முழுவதையும் இந்த வன்முறை தொடர்ந்து வந்ததை அறிவேன். வன்முறை என்பது மனிதப் பண்பாக இருக்கிறது என்றாலும் அதை இன்னொரு மனிதப் பிறவியால் எப்படி  ஏற்றுக் கொள்ள முடியும்? இது போன்ற துன்பங்கள் என்னை அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றன.

கி.லீ : நீங்கள் குவாங் ஜூ படுகொலைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்களா? (1980 -ல் தென் கொரிய சர்வாதிகாரியான, சுன் டூ-ஹ்வான் ஆட்சியை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள், மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு )

ஹா.கா : எனது அக்கறையானது அன்றாட வாழ்வின் மீது நிகழும் பிரச்சினைகள் மீது கவனம்  கொள்கிறது. இறைச்சி உண்பது, சமைப்பது என்பது போன்ற தினசரிச் செயல்பாடுகள் ஒரு வன்முறையாகிப் போனதன் வெளிப்பாடு இது.

கி.லீ : புல் தரையில் நடப்பதும் வன்முறை என்பது போல. புல்லுக்கும் வாழ்வுரிமை உண்டல்லவா.?

ஹா.கா : உண்மையே. தம்மைச் சுற்றியுள்ள இவ்வகையான வன்முறையைத் தமது வாழ்வின் அங்கமாக்கிக் கொண்டாலும் அவை வேறு திசையில் பயணிப்பதை எதிர்க்கும் இயல்பும் மனிதருக்கு உண்டு.  குவாங் ஜூ படுகொலைகள் பற்றி நான் Human Acts என்ற நாவலை எழுதியிருப்பினும் மனித மாண்புகள், வலிமை பற்றி இன்னும் ஆராயவே விரும்புகிறேன்.

கி.லீ : சியோல், கொரியா என்பவை ‘எனது இடம்’ என்பதை எந்த அளவுக்கு உணர்கிறீர்கள்.?

ஹா.கா : இது எனக்கு முக்கியமானது. சிறுவயதில் இடம் பெயர்ந்து கொண்டே இருந்தேன். தொடக்கப் பள்ளிகள் மட்டும் ஐந்து. இப்போது எங்கே போனாலும் சமாளித்துக் கொள்வேன். எந்த நகரத்தில் வாழ்ந்தாலும் அது என் எழுத்துக்களின் மீது பாதிப்பை ஏற்படுத்தி விடும். சியோலுக்குச் செல்வதற்கு முன் குவாங் ஜூவில் ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்தேன். அந்தச் சிறுநகரின் தாக்கம் என் வாழ்வின் மையப் பகுதியாக மாறிவிட்டது.

என் நாவல்களில் அடிக்கடி வரும் ‘கே’ என்பது அந்த நகரம்தான். தெற்கில் இருந்து 1980-ல் போன எனக்கு சியோல் நகரம் வெப்பமான பகுதியாய்த் தெரிந்தது.

உங்களைக் கேட்கிறேன். கொரியாவில் இருந்து எப்போது அமெரிக்காவுக்குத் திரும்பினீர்கள்.?

கி.லீ : எனது மூன்றாவது வயதில்.

ஹா.கா :  ஒப்பீட்டுக்காகச் சொல்லவில்லை. ஆனால் இது எனக்கு மிகப்பெரிய மாற்றத்தைத் தந்தது‌. குவாங் ஜூ வெப்பம் மிகுந்த ஊர். குளிர்காலத்திலும் அங்கே பூக்கள் பூக்கும். ஜனவரியில் சியோலுக்குச் சென்றபோது அங்கே குளிர் அதிகம் என்பதை உணர்ந்தேன். படுக்கையில் இருக்கும் போதும் நடுங்கிக் கொண்டே கனத்த ஸ்வெட்டரும் காலுறையும் அணிந்திருப்போம். வாழ்க்கை எனக்கு இனிமேல் குளிர்ந்தே இருக்கும் என்பதன் முன்னறிவிப்பாக அது இருந்தது.  பொது இடங்களுக்குச் செல்ல நான் அஞ்சியதில்லை. வாழும் இடங்களைப் போராடி ஆராய்ந்தும் அதை உள்வாங்கிச் செல்வாக்கு ஏற்படுத்தவும் தெரிந்த ஆள்தான் நான்.

கி.லீ : அவர் ஒரு பிரபல விமர்சகர். உங்கள் ரசிகரும் கூட. ஒரு முறை உங்களது படைப்புகளை வாசிப்பதற்கென்று ஒரு வேறுபட்ட மனநிலை இருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதை எப்படி விளக்குவீர்கள்.?

ஹா.கா : என் நாவல்கள் மனிதத் துயரங்களை நேரடியாக ஆராய்கின்றன. வெட்கித் தலை குனியாமல் அதன் ஆழங்களுக்குச் செல்ல முற்படுகின்றன. ஒருவரின் பின்புலமாக இருக்கும் உண்மையை ஆய்வது என் போக்கு. ஆகவே குவாங் ஜு படுகொலைகளைப் பற்றி நான் எழுதும் போது, அதில் உள்ள சோகங்களை நான் விவரிக்கும் போது அந்த அனுபவத்தை உணர்வதற்கு ஒரு விதமான மனநிலை தேவை என்பதை அவர் கூறியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

கி. லீ : உங்களது எழுத்தில் சொற்கள் எல்லாம் காட்சி உருக்களாகத் தெரிவதாகவே நான் கண்டு கொள்கிறேன். Greek Lessons, 2011 என்ற உங்களின் நூலின் தன்மையானது, ஒரு நுட்பமான உணர் திறனைக் கொண்டு நாவல் முழுவதிலும் உள்ள சொற்களைத் தேடுவது என்பதற்கான ஆதாரமாகக் கருதுகிறேன். மொழிக்கும் உங்களுக்குமான படைப்பு ரீதியான உறவை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்‌.

ஹா.கா : 20 ஆண்டுகளாக நான் எழுதிய கவிதைகளை நூலாக்கினேன். அதில் சொற்களும் காட்சி உருக்களும் இவ்வகையில் தெரிபவை. தனிப்பட்ட முறையில் மொழி என்பது எளிதில் கையாள இயலாத ஒரு கருவி என்றே நினைக்கிறேன். சில நேரங்களில் அதனால் முடியாமலும் போகலாம். இன்னும் சில சமயங்களில் நாம் சொல்ல வேண்டியதை வெற்றிகரமாக அது கடத்தி விடும். ஆயினும் அதைத் துல்லியமானது என்று அழைக்கவும் முடியாது. அதற்கும் மேலாக அது தோல்வியைத் தழுவும் எனத் தெரிந்திருந்தாலும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். ஏனென்றால் என்னிடம் இருக்கும் கருவி அது ஒன்றுதான். இந்தத் தடுமாற்றம் பல கவிஞர்களுக்கும் நேர்வது. குறிப்பாக  Greek Lessons -ல் கதாநாயகனால் பேச முடியாது. பதிலாகக் கவிதைகளை எழுதுகிறான். மொழியின் ஒவ்வொரு சொற்றொடரும் அழகும் கீழ்த்தரமும், தூய்மையும் அசுத்தமும்,  உண்மையும் பொய்மையும் கொண்டது. எனது நாவல் அவற்றையே ஆராய்கிறது. சொற்களின் எடை அதிகமாகும் போது சில நேரங்களில் பேசுவதும் கூடச் சவால் நிறைந்ததாகி விடுகிறது. இதையும் மீறியே நாம் பேசவும் எழுதவும் வாசிக்கவும் வேண்டும்‌. எழுத்தில் தோற்கும் போது நான் ஓய்வெடுத்துக் கொள்கிறேன்.  20 ஆண்டுகளாக எழுதுவதாகச் சொன்னேன். அதிலும் ஓரிரு ஆண்டுகள் இடைவெளி இருக்கலாம்.

கி.லீ : நாவல்களில் எழும் கேள்விகள் பற்றிப் பேசினோம். எல்லா விடைகளும் எழுத்தாளனிடம் இல்லை என்பதையும் புலப்படுத்தினீர்கள். இலக்கியத்தின் பங்கு என்பது கேள்விகள் எழுப்புவதில் இருக்கிறது என்று செகாவ் ஒரு முறை சொல்லியிருக்கிறார். நாவல்களை எழுதும்போது ஏதேனும் ஒரு கேள்வியை மையமாகக் கொள்கிறீர்களா அல்லது எழுத்துச் செயல்பாட்டில் இயல்பாகவே அது நடந்தேறுகிறதா.?

ஹா.கா : தொடர்ந்து ஓரிரண்டு ஆண்டுகளுக்கு எழுதுவது கடினம். Your Cold Hands எழுத ஓராண்டு மட்டுமே எடுத்துக் கொண்டேன்.‌ இன்னொரு நாவலுக்கோ நான்கு ஆண்டுகள் ஆனது. எப்போதும் இந்த வேறுபாடு இருக்கும். எரியும் கேள்விகளை எனக்குள் கேட்டுக் கொண்டே இருப்பேன். அதில் முக்கியத்துவம் பெறுவது நாவலாகப் பரிணமிக்கிறது. முந்தைய நாவலில் எஞ்சும் கேள்விகளின் தெறிப்பில் அடுத்த நாவல் உருக்கொள்கிறது. கேள்விகளும் நாவல்களும் தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, Vegetarian -ல் மனித வன்முறை மற்றும் முழுமையை வேண்டுகிற ஆற்றலைக் கேள்விக்கு உள்ளாக்கினேன். ஆயினும் அவையெல்லாம் விதைப்பதாக ஆகிவிடுவதில்லை.  நாம் வாழ்ந்தாக வேண்டும். வன்முறை சூழ்ந்த இந்த உலகில் எப்படி வாழ்வது.? Greek Lessons -ல் வாழ்வதற்கான சாத்தியங்களை ஊகித்திருக்கிறேன். மனித இயல்பின் வேர் எது.?  அதில் கதாநாயகி எழுதத் தொடங்கும் போது அவளது விரல் நகங்கள் வெட்டப்பட்டுக் குட்டையாக இருந்ததனால் அங்கே எவ்விதத் தடயங்களையும் அவளால் ஏற்படுத்த முடிவதில்லை. இன்னொரு பகுதியில் வேறொரு கரத்துடன் இணைந்து பொருள் பொதிந்த சொற்களை அவள் உருவாக்குகிறாள். இது போன்ற மிகச்சிறிய விஷயங்களே மனித குலத்திற்கு அர்த்தங்களை மீட்டுத் தரும் என்ற உணர்வைத் தரவே நான் விரும்பினேன்.

கி.லீ : ஒரு காலத்தில் நீங்கள் சைவ உணவு உண்பவர். Vegetarian -ல் இது எப்படி உணரப்பட்டிருக்கிறது.?

ஹா.கா : இருபதுகளின் மத்தியில் நான் சைவ உணவைத் தான் உண்டேன். உடன் இருந்தவர்கள் அனைவரும் என்னை மடைமாற்ற முயன்றவர்கள்தான். கொரியச் சமூகம் பற்றி உங்களுக்குத் தெரியும். அது ஒரு கூட்டுச் சமூகம். ஒருத்தி மட்டும் வேறு வகை உணவை உண்பது கடினமாக இருந்தது. எனது உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவர் கொஞ்சமாவது இறைச்சியை எனது உணவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப் பரிந்துரைத்தார். ஆகவே எனது அனுபவங்களே Vegetarian -ல் பதிவானது. என்னைச் சுற்றி இருந்தவர்கள் எனது முடிவைத் தனிப்பட்ட முறையில் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதும் நகைப்புக்கு உரியது.

எனினும் எனது 26 ஆவது வயதில் எழுதி வெளியான Fruits of My Woman என்ற சிறுகதையின் வேர்கள் தான் Vegetarian நாவலில் இருக்கிறது என்பதை அறிவேன். அதில் முக்கியக் கதாபாத்திரங்கள் ஓர் ஆணும் பெண்ணும். ஒரு நாள் வேலை முடிந்து கணவன் வீடு திரும்பும் போது தன் மனைவி ஒரு செடியாக மாறிவிட்டதைக் காண்கிறான். ஒரு தொட்டியில் இட்டு நீரூற்றி வளர்க்கிறான். பருவங்கள் மாறும்போது மனைவி தனது உறுதியான விதைகளை உமிழ்கிறாள். அவற்றைக் கணவன் பெற்றுக்கொண்டு, பால்கனிக்குச் செல்லும்போது தன் மனைவி வசந்த காலத்தில் மீண்டும் பூக்க முடியும் என்பதை வியப்புடன் உணர்கிறான். இது ஓர் இருண்மை கொண்ட சிறுகதை. மாயத்தன்மை கொண்டது. ஆனால் எழுதி முடித்த பின் அதை வேறு கோணத்தில் மீண்டும் எழுத விரும்பினேன். வருடக் கணக்கில் அதை முயன்று கொண்டு தான் இருக்கிறேன். அதன் இருண்ட வித்தியாசமான முதல் பக்கத்தில் இருந்து தான் Vegetarian உருவானது.

கி.லீ :  2007 இல் Vegetarian கொரியாவில் வெளியானது. அதன் பிறகு மூன்று நாவல்கள் வெளியாகின. பொதுவாக ஒவ்வொரு நாவலிலும் இருந்து எழுத்தாளர்கள் புதிய ஒன்றைக் கற்றுக் கொள்வார்கள். இந்த உணர்தல் தான் தொடர்ந்து எழுத வைக்கிறது. உங்களது படைப்புகள் உங்களை எவ்வாறு மாற்றுகிறது என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது.

ஹா.கா : Vegetarian எழுதும் போது நான் மாறத்தான் செய்தேன். முதலில் மூன்று மாதங்களுக்கு மேல் எழுதவும், கதாநாயகனின் மருமகனை நன்கு வெளிப்படுத்தவும் எண்ணினேன். ஆனால் முதன்மைக் கதாபாத்திரத்துடன் மூன்றாவது இறுதிப் பகுதியை அடைந்தபோது கதையை முடிவு செய்துவிட்டதாக அறிந்து கொண்டேன். இதை விவரிப்பது கடினம். நாவலை எழுதும் செயலில் நான் உறுதி அடைந்து விட்டேன் என்பதையும் உணர்ந்தேன்.

கி.லீ : கொரிய இலக்கியப் படைப்பு விற்பனை பற்றிய பரிச்சயம் இல்லை எனக்கு. ஆனால் கொரிய எழுத்தாளர்கள் பால் பேதம் இன்றி நடத்தப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். பல நாடுகளில் இந்தச் செயல்பாடு அரிது. தற்பொழுது கொரியாவில் இது தலைகீழாக மாறி இருக்கிறது. நான் சரியாக உணர்ந்திருக்கிறேனா, உங்களுக்கு வேறு கண்ணோட்டம் உள்ளதா.?

ஹா.கா : உண்மை. புதிரானதும் கூட. பெண் என்பதற்காக நான் எங்கும் பாகுபாடாக நடத்தப்படவில்லை. இது கொரியாவில் சாதாரணம். இன்னொரு காரணம் திறமையான பெண் எழுத்தாளர்கள் அதிகம் என்பதால் இலக்கிய உலகம் அவர்களை விடுத்து இயங்காது சரிந்து விடும். பிற நாடுகளில் காண முடியாத அளவுக்குக் கொரிய இலக்கிய உலகில் பாலின சமத்துவம் மதிக்கத்தக்கதாக இருந்தது என்பதை ஏற்கனவே நான் அறிந்திருக்கிறேன். எனினும் இதர கலைத்துறைகளில் அது வேறுபட்டு இருக்கிறது. எடுத்துக்காட்டாக உள்ளூர் திரைப்படத் தொழில் மிகவும் பழமையின் மாதிரியாக இருக்கிறது. கொரிய திரைப்பட உலகை இன்னும் ஆண் இயக்குநர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள். இதைப் பற்றியும் நாம் சிந்தித்தாக வேண்டும்.

 

***