• வாலெண்டினா கோஸெட்டி
  • தமிழில் : அண்ணல் 

 

வரலாற்று அதிர்ச்சிகளை உள்வாங்கி, மனித வாழ்வின் நிலையின்மையை வெளிப்படுத்தும் செறிவான கவிதை வரிகளுக்காக தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங் 2024 ம் ஆண்டிற்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார். 53 வயதான இவர் தென் கொரியாவிலிருந்து  முதல் நோபல் பரிசை பெற்றவரும், உலக அளவில் 18 வது பெண்ணும் (இதுவரை 121 வெற்றியாளர்களில் ) ஆவார். மேலும் இசைக் கலைஞராகவும், காட்சிக் கலையில் ஆர்வமிக்கவாராகவும் விளங்குகிறார். 

அவருடைய சிறந்ததும், பரவலாக அறியப்பட்டதுமான The Vegetarian (2007 ல் கொரியாவில் வெளியிடப்பட்டது) நாவலே முதன் முதலில் ஆங்கிலத்தில் 2015 ல் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நாவலுக்காக ஆசிரியருக்கும், மொழிபெயர்ப்பாளர் டெபோரா ஸ்மித்துக்கும் பொதுவான பங்கீட்டுப் பரிசாக 2016 ன் மேன் புக்கர் பரிசு கிடைத்தது. 

அந்த நேரத்தில் ஸ்மித் மொழிபெயர்ப்பின் துல்லியத்தன்மை குறித்து பொறி பறக்கும் விவாதங்கள் எழுந்தன. ஆனால் அந்தத் தன்மையும் புனைவு செயல்பாடு போன்று இலக்கிய மொழிபெயர்ப்பின் அழகு தானே. அது கற்பனை தானே தவிர அசலாக இருக்க முடியாது என்றபடி ஹான் காங் மொழிபெயர்ப்பாளர் பக்கம் நின்றார்.

இதுவரை ஹான் காங்க் ஆறு புத்தகங்களை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார். The Vegetarian  நாவல்தான் உலக அளவில் கவனத்தைப் பெற்றுத் தந்தது. இதோடு Human Acts, The White Book, Europa மற்றும்  Greek Lessons போன்ற புத்தகங்களும் அடங்கும். இருமொழி வெளியீடாக அவரது சிறிய புத்தகமான Convalescence 2013 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

அவருடைய சமீபத்திய நாவலான We Do Not Part, 1948-49 ஜெஜூ எழுச்சியை (Jeju uprising : கொரிய தீபகற்பத்தில் பிரிவுவாத பனிப்போருக்கு எதிரான எழுச்சி) ஆராயப் போகும் ஒரு எழுத்தாளரின் நண்பர் குடும்பத்தை எப்படிப் பாதிக்கிறது என்ற கதையாக 2025 ல் வெளியிட இருக்கிறது.

தனக்கென்ற பாணியை கண்டெடுத்தல் 

தினசரி வன்முறைகளின் கொடூரமான கதையான “The Vegetarian” நாவலின் கதை சொல்லல் மும்முனை உத்தியைக் கையாள்கிறது. அசைவத்தை கைவிடும் ஒரு சாதாரணப் பெண் தன் குடும்ப உறுப்பினர்களால் கேலி கிண்டலுக்கு உள்ளாகிறாள். அவளுடைய உடல் நலன் குறித்த கவலையென்று வாதிட்டாலும், சமூக எதார்த்தத்திற்க்கு புறம்பானது என்றுதான் அதை மறுக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க அவள் தன்னை ஒரு செடியெனக் கருதிக்கொண்டு, தண்ணீரையும் சூரிய ஒளியையும் தவிர வேறு ஆகாரங்களை மறுக்கிறாள்.

நோபல் குழு ஹானின் கதையில் வரும் கதாபாத்திரங்களின் “ நிலையற்ற பெண் வாழ்வின் வலி உணர்தலை” வெகுவாகப் பாராட்டியது.

Greek Lessons என்ற கதை தன் தாயை இழந்த, மகனை இழந்த (தந்தையின் பராமரிப்பில்) மற்றும் பேசும் திறன் இழந்த பெண் மூலமாகவும், தனது வாழிடம், குடும்பம் மற்றும் பார்வையை இழந்த ஆண் மூலமாகவும் சொல்லப்படுகிறது. அவன் அவளுக்கு பண்டைய கிரேக்க மொழியை கற்றுக் கொடுக்கிறான். அவள் அவனது மாணவியாகிறாள்.

மற்ற ஹான் காங் -ன் எழுத்துகளைப் போலவே Greek Lessons சுருக்கமான உணர்வுமிக்க வரிகளில், வார்த்தையில் விவரிக்க முடிந்தவை கடந்து, சொல்லப்பட்டதற்கும், சொல்லாமல் மீந்திருப்பதற்கும் இடையே உடைவதும், நிலையற்றதுமான ஒரு வெளியை உருவாக்குகிறார். இது துயரம் மற்றும் இழப்புகளின் ஊடாக, சில நேரம் அதன் காரணமாக, உறவுக்குக் கை நீட்டும் மனிதத் தேடலின் சக்தியை அடையாளம் காட்டுகிறது.

Greek Lessons ஐ விமர்சித்த The Gaurdian இப்படி முடிக்கிறது. “நல்லதாய்ப் போயிற்று, ஹான் காங் -ன் இலக்கியக் குரல் அவரது பெண் கதாபாத்திரங்களின் போராட்டங்களின் வழியாக தனக்கென்ற ஒரு பாணியை கண்டெடுத்து விட்டது ” 

திகைப்பூட்டும், உருக்கமான, காலமாயங்கள் கொண்ட சுயசரிதையான The White Book, 2018 ன் மேன் புக்கர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. அது ஒரு கலைப்புத்தகம், கவிதையின் நீட்சி, மேலும் தோற்றத்தில் வெள்ளைப் பொருள்களைப் பற்றிய வெள்ளையான புத்தகம். 

அப்புத்தகம் சுருக்கமாக இப்படித் தொடங்குகிறது. “வசந்த காலத்தில் நான் வெள்ளைப் பொருட்களைப் பற்றி எழுத நினைத்த போது , முதலில் வெள்ளைப் பொருட்களைப் பற்றிய ஒரு பட்டியலைத் தயாரித்தேன்.” 

பொதி ஆடைகள் 

கைக்குழந்தையின் கவுன் 

உப்பு 

பனி 

ஐஸ்

நிலவு 

அரிசி 

அலைகள்  

யுலன் மலர்கள் 

வெள்ளைப் பறவைகள் 

வெள்ளைச் சிரிப்பு 

வெற்றுத்தாள் 

வெள்ளை நாய் 

வெள்ளை முடி 

சவப் போர்வை 

இந்தப் பட்டியல் பொருட்களிலிருந்து ஹான் காங் பிறப்பதற்கு முன்பு இழந்த ( பிறந்து இரண்டு மணி நேரத்தில் இறந்த ) தன் பிஞ்சு சகோதரியின் சுயசரிதை கதை விரியத் தொடங்குகிறது. கூட்டுக் குரல்களின் நடுவே  ஹான் காங் தனக்குத்தானே  பல மன்றாட்டங்களுடனும், கேள்விகளுடனும் தான் எப்போதும் சந்திக்காத சகோதரியிடம் பேசுகிறார்.

ஹான் காங் வார்சாவின் எழுத்தாளர் குடியிருப்பில் இருந்த போது இந்த பிரக்ஞை கடந்த, ஆழ்நிலை தியானம் போன்ற இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த வெள்ளைப் பனி, வெண்மையான  நினைவுகளோடு கலந்துவிடுகிறது. 

எழுத்து ஒரு தூய்மைப்படுத்தும் செயலாய், தனது சகோதரியின் மரணத்தை மறு கட்டமைப்பு செய்து மீண்டும் வாழத் தொடங்குகிறது. அதன் விளைவு எதிரொளிப்பில் பிரார்த்தனையின் தாளத்தை, ஆமாம் மதச்சார்பற்றதாக, ஒரு ஆழமான மானுட பிரார்த்தனையைப் பின்தொடர்கிறது. நினைவுகளை சுண்டி நினைவு கொள்வதன் மூலமே, அதன் முடிவற்ற நறுமணத்தில், நாம் துயருற்றுக் கொண்டே மீதி வாழ்வை வாழ முடியும்.

ஒரு நாட்டின் துயரம் 

Human Act  ல் இந்த சுயசரிதை துயரம் மொத்த நாட்டின் துயரமாக மாறுகிறது. 

Human  Act  மே 1980ல் காங் -ன் பிறந்த இடமான க்வாஞ்ஜூ வில் நடந்த படுகொலையை பற்றி சொல்கிறது. நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான குடிமக்களும் மாணவர்களும் தென் கொரிய சர்வாதிகார ஆட்சியின் மிக கொடுங்கோலான ராணுவ எதேச்சதிகாரி “சுன்-தூ-வான்”க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது ராணுவத்தால் அனைவரும் கொல்லப்படுகின்றனர். 

முரண்பாடாக, சரியாக சொல்ல வேண்டுமென்றால் இந்த வன்கொடுமைகளுக்கு மத்தியில் தொடர்ந்த ரீதியிலான போராட்டத்திற்கு    முக்கியமானதாக அவசியப்படுவது ஒற்றுமை, கண்ணியம், மற்றும் வலிமை, மேலதிகமாக உயிர்த்திருத்தலின் பொறுப்பும் நினைவு கொள்ளுதலும் தான். 

ஹான் காங் ஒருமுறை சொல்லியிருக்கிறார். “என்னுடைய நாவல்கள் மானுட துயர்நிலையை ஆராய்கின்றன”. க்வாஞ்ஜூ படுகொலைகளை பற்றி எழுதும் போது வாசகர்கள் முதல் முறை இதுபோன்ற கடுமையான துயரங்களை வாசிப்பதற்கு தயாராகும்படி விழிப்பூட்டுகிறார்.

தணிக்கை அரசியலின் விளைவால் ஏற்படும் கூட்டு சமூக மறதியை கேள்விக்குள்ளாக்குவதே இந்த நாவலின் நீதி நோக்கமாக இருக்கிறது.  எங்கே நிகழ்காலம் இறந்த காலத்தோடு, வாழ்வு மரணத்தோடு குழப்பிக் கொள்ளப்படுகிறதோ, மற்றும் தணிக்கையான நினைவுகளால், எங்கே ஒரு வார்த்தை மனிதத்தன்மையற்ற வன்முறைகளை விவரிக்க முடியாதோ அங்கே அது ஒரு கூட்டிசைக் குழுவின் புனிதமான பாடலுக்கு மட்டுமே வழிவகுக்கிறது. மௌனச் சம்மதத்தின் வடிவத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதில் உயிர்த்திருத்தல் சாத்தியமான காரியமா?

ஆனால் The white book ன் எழுத்தில் மௌனம் நொறுங்கி தாங்க முடியாத பேரிரைச்சலாக மாறுகிறது. எத்தடையாயினும் தொடர்ந்து உருவாக்குதல், நினைவுறுதல், மற்றும் பேசாப் பொருளை பேசுதல் எழுத்தாளரின் கடமையாகிறது. மேலும் தனித்து விடப்படினும், அமைதியிலும், மானுடம் நம்மை தோல்வியில் தள்ளுவதாய் தோன்றும் போதும். 

இதனாலும், இன்னும் பல காரணங்களாலும் ஹான் காங் நோபல் பரிசு பெரும் சரியான தகுதியுடையவராகிறார்.

***

கட்டுரையாளர் வாலெண்டினா கோஸெட்டி, நியூ இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில், பிரெஞ்சு மொழியில் இணைப் பேராசிரியராக உள்ளார் 

நன்றி : The Conversation இணையதளம்