• அமி லோவெல்
  • தமிழில்: மோகன ரவிச்சந்திரன்

 

 

ஒரு நாற்காலியை எப்படி உருவாக்குவது என முதலில் தெரிந்து கொள்ளாமல் ஒரு மனிதனால் நாற்காலியை உருவாக்க முடியும் என யாரும் எதிர்பார்க்க முடியாது, ஆனால் ஒரு கவிஞன் உருவாக்கப்படுவதில்லை, அவன் பிறக்கிறான், அவனுடைய கவிதைகள் தாமாகவே அவனது நிரம்பி வழியும் இதயத்திலிருந்து வெடித்துக் கிளம்புகிறது என ஒரு பிரபலமான கருத்து நிலவுகிறது. உண்மையாகவே கவிஞன் அவனுடைய தொழிலை ஒரு அமைச்சரவையை உருவாக்குதல் போல, அதே பாணியில், அதே கடும் பிரயத்தனங்களுடன் கூடிய அக்கறையுடன் கற்றுக் கொள்ள வேண்டும். அவனுடைய இதயம் உயர்ந்த சிந்தனைகளாலும், தீப்பொறி என மின்னும் கற்பனைகளாலும் பிரவகிக்கலாம், ஆனால் எழுதப்படுகிற வார்த்தைகள் மூலம் வாசிப்பவர்களுக்கு அவற்றை எடுத்துச் செல்ல முடியாமல் போனால், அவன் ஒரு கவிஞன் என உரிமை கோர வாய்ப்பில்லை. ஆகவே, ஒரு கைவினைஞர் தமது தொழில் நுட்பம் குறித்து விளக்கவும் விவரிக்கவும் ஒரு சில தருணங்களைச் செலவிட்டதற்காக மன்னிக்கப்படலாம். உள்ளார்ந்த ஆய்வாக நிலைநிறுத்த முடியாத அழகின் படைப்பு குறைபாடு உடையதாகும், மலிவான கூறுகளால் மிக மோசமாக வடிவமைக்கப்பட்டதாகும்.

முதலில், நான் எனது உறுதியான நம்பிக்கையைக் குறிப்பிட விரும்புகிறேன், கவிதை கற்பிக்க யத்தனிக்கக் கூடாது, அது வெகு இயல்பாகத் தோன்ற வேண்டும், ஏனென்றால் அது ஒரு படைக்கப்பட்ட அழகு, சில சமயங்களில் அந்த அழகு திகிலூட்டும் விகாரத்தின் அழகாகக் கூட இருக்கலாம். ஒழுக்கவியல் குறித்த போதனைகளைக் கற்பிக்கச் சொல்லி மரங்களிடம் நாம் கேட்கவில்லை. வீடு பேற்றைப் போதிப்பவர் மட்டுமே அவற்றின் மீது பிரதிகளைப் பிணைப்பது அவசியம் என நினைக்கிறார். இந்தப் பிரதிகள் முட்டாள்தனமானவை என்பது நமக்குத் தெரியும். கலை, ஓவியம், சிற்பம் அல்லது கவிதைகளின் படைப்புக்களில் ஒரு கருத்து மாறுபாடற்ற ஒழுக்கவியல் குறித்து எழுதுவது என்பது முட்டாள் தனமானது மட்டுமல்ல, அது கோழைத்தனமானது, இழிவானதும் கூட. நாம் ஒரு அழகின் மீது ஐயம் கொள்ளும் போது, நாம் அரைகுறையாகப் புரிந்துள்ளோம், நமது வீறாப்பான சிந்தனைகளுடன் அவசரப்படுகிறோம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். நாம் “இப்பேரண்டத்தின் உண்மைகளை ஒப்புக் கொள்வதிலிருந்து” எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம்! பெருநிலப் பகுதிகளையும் சமுத்திரங்களையும் தூக்கி எறியும் இந்தப் பேரண்டம் அவற்றை எவ்வித விளக்கமும் இல்லாமல் விட்டு விடுகிறது. கலை என்பது இரவு பகல் சமமாக இருக்கும் வேளைகளில் எழும் புயல் காற்றைப் போலவோ அல்லது புவிஈர்ப்பு விசைக் கோட்பாடு போலவோ இப்பேரண்டத்தின் அதிகபட்சச் செயல்பாடு போன்றதுதான்; அது ஒரு சின்னஞ்சிறிய ஒப்பனை வேலைப்பாடு மட்டுமே, அல்லது மிகப்பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை என்று கருதுவதற்கு நாம் வற்புறுத்துகிறோம், இல்லாவிட்டால் அது அழகான உச்ச உணர்ச்சிகளைத் தொங்கவிடும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்!

 

***

அமெரிக்கக் கவிஞரான அமி லோவெல் (1874 -1925)  அவர் வாழ்ந்த காலகட்டத்தில், முக்கியமான கவிஞராகவும், சதா பிரச்னைகளில் செயல்படும் விமர்சகராகவும் இருந்தார். அமெரிக்கக் கவிஞரும்  விமர்சகருமான லூயிஸ் ஆன்டர்மேயர் எழுதுகிறார், “அவள் ஒரு குழப்பம் தருபவள் மட்டுமல்ல, ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துபவளாகவும் இருந்தாள்.” அவள் பலகவிதைகளில் வரிகளை மேலும் கீழும் முறித்துப் போடுபவராக இருந்தார். இதன் விளைவாக கவிதை அமைப்பு களைந்து உரைநடை போன்ற தோற்றத்திற்குத் தாவியது. இந்த நுட்பத்தை அவர் “polyphonic prose” என்று பெயரிட்டார். “பாலிஃபோனிக் உரைநடை” என்ற சொல் முதன்முதலில் 1916 -ல் பயன்படுத்தப்பட்டது. லோவெல் தனது 1918 புத்தகமான Can Grande’s Castle -ல் பாலிஃபோனிக் உரைநடையின் நுட்பங்களை விளக்கினார்.

லோவெல் தனது  51 வயதில் 1925 -ல் பெருமூளை இரத்தப்போக்கால் மரணத்தைத் தழுவினார்.  அடுத்த ஆண்டு, What’s O’Clock கவிதைக்காக “புலிட்சர் பரிசு” அவருக்கு வழங்கப்பட்டது.

இவருக்கும் எஸ்ரா பவுண்டுக்குமான முரண்பாடுகளும் சர்ச்சை களும் பெரும் பிரசித்தி பெற்றவை. லோவல், தனது சொந்த படைப்புகளை மட்டுமல்ல, மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் வெளியிட்டார். அப்பொழுது, ஆன்டர்மேயரின் கூற்றுப்படி, லோவெல், எஸ்ரா பவுண்டிலிருந்து,  இமேஜிஸ்ட் இயக்கத்தை “கைப்பற்றினார்” என்கிறார். பவுண்ட் தனது மூன்று- தொகுதிகள் கொண்ட நூலிலிருந்து,  சில இமேஜிஸ்ட் கவிஞர்களை வெளியே கொண்டு வந்ததற்காக அவர் மீது வழக்குத் தொடுப்பதாக அச்சுறுத்தினார், அதன்பின் அமெரிக்க இமேஜிஸ்ட்களை “அமிஜிஸ்ட்” இயக்கம் என்று கேலி செய்தார். மேலும், லோவெல் ஒரு இமேஜிஸ்ட் அல்ல, மாறாக இமேஜிஸக் கவிதைகளை வெளியிடுவதற்கு நிதி ரீதியாக உதவக்கூடிய ஒரு பணக்காரப் பெண் என்று விமர்சித்தார். 

முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் , லோவெல் பெரும்பாலும் மறக்கப்பட்டார், ஆனால் 1970 களில் பெண்கள் இயக்கம் மற்றும் பெண்கள் ஆய்வுகள் அவரை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. 

***