- கௌதம சித்தார்த்தன்
***
ஓப்பனிங் ஷாட்:
1990 கள் உன்னதம் என்ற நவீன இலக்கிய இதழை புதிதாக ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறார் கௌதம். தமிழ் மொழியை உலகளவில் உயர்த்துவது என்பது உன்னதத்தின் லட்சியம். அதில் பெருமளவில், உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகின் போக்கையே மாற்ற வேண்டும்.. என்ற தீ பெரு நெருப்பாக அவருக்குள் எரிந்து கொண்டிருந்தது. அப்பொழுது, சென்னையில் ஒரு இலக்கிய நண்பரை மொழிபெயர்ப்பு சம்பந்தமாக சந்திக்கிறார். அவருடன் பெரிய்ய இலக்கியவாதி ஒருவர். மூவரும் தேநீர் அருந்த வெளியே செல்கிறார்கள்.
காட்சி :1
கௌதம் தனது மகனை உலகிலேயே மிகப்பெரிய ஓவியனாக்க வேண்டும் – வான்கோவுக்கு நிகராக – என்பது அவரது கனவு. அந்தக் கட்டத்தில், அவன் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறு பையன். கௌதமின் ஓவிய நண்பரும் செயல்பாட்டாளருமான கதிர்வேல் ஈரோடு, கோவை அதைச் சுற்றியுள்ள இடங்களில் ஓவியக் கண்காட்சி ஏற்பாடு செய்கிறார். லோக்கல் பள்ளிக் குழந்தைகள் லாங் சைஸ் அன்ரூல்டு நோட்டில் வரையும் ஓவியங்களை வாங்கி வந்து காட்சிப் படுத்துவார். லோக்கல் கல்வித் தந்தைகள் குழந்தை ஓவியர்களைப் பாராட்டி உரை நிகழ்த்துவார்கள். ஊக்கப் பரிசாக நடராஜ் பிராண்ட் கலர் பென்சில்கள், பிரஷ்கள் என கொடுப்பார்கள். கௌதம் தன் மகனையும் அழைத்துக்கொண்டு போய் இதில் கலந்து கொள்ள வைப்பார். மகன், நிறைய பென்சில், பிரஷ்கள் வாங்கி வருவான்.. இந்த லோக்கல் தளத்திலிருந்து அடுத்த தளத்திற்கு அவனை நகர்த்த வேண்டும் என்று சென்னை, கோவை, சேலம் போன்ற பெருநகரங்களில் நடக்கும் பெரிய ஓவியர்களின் கண்காட்சிக்கு அழைத்துப் போவார் கௌதம். ஆதிமூலம், வீரசந்தானம், தட்சிணாமூர்த்தி (சிற்பி) பாஸ்கரன், பொன் ரகுநாதன், புகழேந்தி.. என்று அவனுக்குள் ஓவியங்களை ஏற்றுவார். மகனுக்கு முனுசாமியின் ஓவியங்களும், பாஸ்கரனின் பூனைகளும் ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக ஓவியன் ஆகிக் கொண்டிருந்தான் அவன்.
காட்சி : 2
ஒருமுறை பிரமிளைப் பார்க்கச் சென்னை போயிருந்தார் கௌதம். அப்பொழுது அவரைப் பார்க்க வந்திருந்த ஒருவரை அறிமுகப்படுத்தினார் பிரமிள். அவர் பெயர் பொன்னுசாமி. கௌதம் ஊருக்கு அருகாமையில் இருந்த ஒரு சிற்றூரைச் சார்ந்தவர். கௌதமுக்கு பெரும் உற்சாகமாகி விட்டது. தனது வரப்பட்டிக்காட்டுக்குப் பக்கத்து வரப்பட்டியில் பிரமிளின் நண்பரா? அதுவும், அவரது பெயரை பொன் பொன்னுசாமி என்று பிரமிள் நியூமராலஜிக்களாக மாற்றி அமைத்திருந்தார். ஹோவ்! பெரும் குதூகலிப்பில் இருவரும் நட்பாகிறார்கள்.
பொன் பொன்னுசாமி பெரிய ஆன்மிக ஆர்வம் கொண்டவரும் கூட, அதாவது சீரியஸான ஆன்மிக ஆர்வலர். அடிக்கடி, திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்கப் போய்விடுவார். இலக்கியத்தைப் பொறுத்தவரை பரந்துபட்ட வாசிப்பு கொண்ட தீவிரமான வாசகர்.
காட்சி : 3
இப்பொழுதெல்லாம், பொன்னுசாமி அடிக்கடி கௌதம் வீட்டிற்கு வந்து விடுவார். அவர், பெரிய அரசு வேலையில் இருந்தார். உன்னதம் இதழ்களை வானளாவப் புகழ்வார். “தமிழில் சீரியஸாக வரும் ஒரே இலக்கியப் பத்திரிக்கை உன்னதம்தான்” இதைக்கேட்டதும் கௌதம் தலை சுற்றி ஆடுவார். அந்த வார்த்தைகள் பிரமிளே சொன்னது போலிருக்கும். கௌதமை, வெளியே ஒரு ரவுண்ட் போகலாம் என்று அழைப்பார் அவர். கௌதம் மறுத்து விடுவார். ஏனெனில், அடுத்த உன்னதம் வேலைகளை கௌதம் தான் பார்த்தாக வேண்டும். (ஒன்மேன் ஆர்மி) வெளியே போனால், 1 ஆம் தேதி உன்னதம் வராது.
காட்சி : 4
அன்றைக்கு பொன்னுசாமி காலை 11.00 மணி சுமாருக்கு கௌதம் வீட்டுக்கு வந்தவர், பெட்சீட்டை எடுத்து விரித்து கீழேயே படுத்து விட்டார். அவர் வாங்கி வந்திருந்த ஹிண்டு பேப்பரை முகத்தின் மீது போட்டுக் கொண்டு கண்களை மூடியபடி கொஞ்ச நேரம் படுத்திருந்தார். கௌதம் கம்ப்யூட்டரில், உன்னதத்திற்கு வந்திருந்த ஒரு மொழிபெயர்ப்பு கட்டுரையை புரூஃப் பார்த்துக்கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரம் கழித்து எழுந்த பொன்னுசாமி, காலையில் நடந்த விஷயத்தை கௌதமிடம் பகிர்ந்தார்.
அவர், காலையில் அலுவலகம் போகப் புறப்பட்டு தனது வண்டியில் போகும்போது, ஒரு வண்ணத்துப் பூச்சி குறுக்கிட்டிருக்கிறது. அது ஒரு நீல நிறப் பட்டாம் பூச்சி! அந்தப் பூச்சியின் வண்ணப் பளபளப்பு வினோதமாக, தான் இதுவரை பார்த்திராத விதத்தில் இருந்திருக்கிறது. அந்த எண்ணம் வரும்போதே இன்னொரு எண்ணம் குறுக்கிட்டு அந்த எண்ணத்தைக் கிழிக்கிறது. இல்லை. தான் எங்கோ இதற்கு முன் அதைப் பார்த்திருக்கிறோம் என்ற ஞாபகம் வருகிறது. சட்டென வண்டியை நிறுத்திவிட்டு அதன் பின்னே போயிருக்கிறார்.
கௌதம் குறுக்கிட்டு, “ஐயையோ வண்டி எங்கே..?” என்றேன். அவர் “ப்ச்” என்று உதட்டைப் பிதுக்கினார். பிறகு பேச்சைத் தொடர்ந்தார்.
அந்த வினோதமான வண்ணத்தி, அவருக்குப் போக்குக் காட்டி, சாலையை விட்டுப் பறந்து காடுகளுக்குள் நுழைகிறது. அதற்குப் பின்னாலேயே போகும் பொன்னுசாமி, ஒரு கட்டத்தில் நெருங்கி விடுகிறார். இப்பொழுது ஒரே தாவாகத் தாவி அதைப் பிடிக்க வேண்டியதுதான் பாக்கி. ஆனால், பின் வாங்குகிறார். “எனக்கு, நபக்கோவின் லொலிதா மிகவும் பிடித்த நாவல். ஆனால், நபக்கோவ் பயங்கரமான Lepidopterist! வண்ணத்துப் பூச்சிகளைக் கொன்று பாடம் செய்த கில்லர். அது எவ்வளவு கொடூரமானது? ” என்கிறார்.
“நான் காலையில் பார்த்தது, அந்தக் கில்லரிடமிருந்து தப்பித்து வந்த Karner blue! அது நபக்கோவின் பட்டாம்பூச்சி! அதை நான் பிடித்தால், அது செத்துவிடும். ஆகவே, நான் கொன்று விடுவதாகக் கணக்கு. அதை நான் பிடிக்காமல் அப்படியே விட்டால், நபக்கோவ் கொன்று விடுவான். நான் என்ன செய்வது கௌதம்..? ” என்று கௌதமின் கண்களில் அவர் கண்களை ஊடுருவினார். கண்கள் கலங்கிப் போயிருந்தன
கௌதம் பெரும் திகைப்பில் திக்குமுக்காடலில் உறைந்து போனார்.
கம்ப்யூட்டர் திரை சற்றைக்கெல்லாம் அணைந்தது.
காட்சி : 5
ஒருநாள், “நான் உங்களுக்கொரு டிரான்ஸ்லேசன் செய்து தருகிறேன்..” என்றார் பொன்னுசாமி. கடந்த காட்சிகளில், கௌதம் ஒரு ட்ரான்ஸ்லேஷன் பைத்தியம் என்று சொல்லியிருந்தது உங்களுக்கு ஞாபகம் வந்திருக்கும். (அந்தக்கட்டத்தில், கௌதம் சிறுகதை தான் எழுதுவார். சிறுகதை ஸ்பெசலிஸ்ட். மொழிபெயர்ப்பெல்லாம் பெரிய விஷயம். கற்பனை கூடச் செய்ய முடியாது. எனவே, பொன்னுசாமி அப்படிச் சொன்னதும், அப்படியே சுருண்டு பொன்னுசாமியின் காலடியில் விழுந்து விடுகிறார் கௌதம்.
காட்சி : 6
ஆனால், மொழிபெயர்ப்பு செய்து தருகிறேன் என்று வாயில்தான் சொல்கிறாரே தவிர, இதுவரைக்கும் ஒரு சின்ன விஷயத்தைக்கூட செய்து தந்ததில்லை.. என்ற எண்ணமிட்ட கௌதமுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீதான ஈடுபாட்டைக் குறைத்தது. மெல்ல ஒரு இடைவெளிக் கோட்டை வரைகிறார் கௌதம்.
காட்சி: 7
ஒரு நாள் அவசரமாக கௌதம் வீட்டிற்கு வந்த பொன்னுசாமி, மேஜையின் மீது சில காகிதங்களை வைத்தார். கௌதம் அசுவாரஷ்யமாக எடுத்துப் பிரித்துப் பார்க்கிறார். ஹோவ். உலகப்புகழ் பெற்ற விஞ்ஞான புனைவு எழுத்தாளர் ஊர்சுலா லா குன் கதையின் மூலப்பிரதி! கடவுளே.. தலை சுற்றி ஆடிப்போகிறார் கௌதம். தமிழ் இலக்கிய உலகில், வெறுமனே, லத்தீன் அமெரிக்கக் கதைகளும், மனித வாழ்வியல் சார்ந்த இலக்கியக் கதைகளும் தான் வெளிவந்து கொண்டிருந்தன. விஞ்ஞானப் புனைவு எழுத்துக்கள் இதுவரை வெளி வந்ததேயில்லை. முதன் முதலாக உன்னதத்தில் ஒரு சயின்ஸ் பிக்சன் கதை.. கௌதமின் கால் பாதங்கள், நிலத்தில் நிலை கொள்ள மறுத்தன.
“நான் வேலையைத் தொடங்கி விட்டேன். இன்னும் இரண்டு நாளில் முடித்துக் கொடுத்து விடுவேன் ..” என்கிறார் பொன் பொன்னுசாமி. கௌதமுக்குப் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை.
காட்சி: 8
இப்பொழுது கௌதம், பொன்னுசாமியின் பின்னால் அவரது வீடு, அலுவலகம்.. என்று நாயாய் அலைந்து கொண்டிருக்கிறார். அப்போதுதான் ஒரு விஷயம் தெரிய வருகிறது. பொன்னுசாமி மிகப் பெரிய “மதுப் பிரியர்” (நன்றி: தமிழ் மசாலா ஊடகங்கள் உருவாக்கிய சொல்) காலையிலிருந்து குடித்தால் இரவு வரை குடித்துக் கொண்டே இருப்பார். கௌதம், அவரது வண்டிக்குக் காவலாய் மதுபானக் கடைக்கு வெளியே காத்திருப்பார். ஒரு இரண்டு மூன்று மணி நேரங்கள் கடந்து பொன்னுசாமி, மெல்லிய தள்ளாட்டத்துடன் வெளியே வருவார். அப்பொழுது, எதிர்ப்படும் ஏழை பாளைகள், பிச்சைக்காரர்கள்.. என்று யாரைப் பார்த்தாலும் பணத்தை அள்ளிக் கொடுப்பார். பெரும் பரோபகாரியாக மாறிவிடுவார். அதன் பிறகு, மாலை அல்லது இருட்டிய பிறகு கௌதம் தான் அவரது வண்டியை ஓட்டிக் கொண்டு போவார், பொன்னுசாமியை முதுகில் சுமந்தபடி.
காட்சி: 9
கௌதமுக்கு, பொன்னுசாமி மதுப்பிரியராக இருக்கும் விஷயம் சற்றும் பிடிக்கவில்லை. ஏனெனில், கௌதம் சிறுவயதிலிருந்தே, எம் ஜி ஆர் ரசிகர். எம் ஜி ஆர் வழி வந்தவர். அதனால், பீடி சிகரெட், குடி எதுவும் கிடையாது. குடிக்காதது மட்டுமல்ல, குடிப்பவர்களோடும் சேர மாட்டார். பெண்களை சகோதரி ஸ்தானத்தில் வைத்துப் போற்றுவார். யாராவது தவறு செய்தால் உடனே முன்னால் நின்று தட்டிக் கேட்பார். (இந்த குணாம்சம்தான் அவரை, இன்று இலக்கிய விமர்சகராக மாற்றியிருக்கிறதோ) ஆனால், பொன்னுசாமியை விட்டு விலக முடியவில்லை. கௌதமுக்கு அந்த மொழியாக்கம் வேண்டும், அந்த ஊர்சுலா லா குன் வேண்டும், இதுவரை நவீனத் தமிழ் இலக்கியம் கேட்டறியாத அந்த சயின்ஸ் பிக்சன் கதை வேண்டும்…
காட்சி : 10
திடீரென்று ஒருநாள் காலையில் கௌதம் வீட்டிற்கு வந்தார் பொன்னுசாமி. “உங்கள் வேலை முடிந்தது. ட்ரான்ஸ்லேஷன் அலுவலகத்தில் இருக்கிறது. வாருங்கள் போய் எடுத்து வரலாம்..” என்றார். கௌதம் பெரும் ஆரவாரத்துடன் புறப்பட்டார். ஆனால், வழியில் அவர்களுக்காகவே, காத்திருந்தது போல வரவேற்றது அந்த மதுப்பிரியர்களின் கடை.
காட்சி : 11
ஒரு வழியாய் மதியம் 2..00 மணியாகி விட்டது. பொன்னுசாமி மெல்லத் தள்ளாடியபடி வெளியே வந்தார். கௌதமுக்குப் பசியோ பசி. “என்னங்க..இப்படிப் பண்றீங்க..” எரிச்சலுடன் அவரைக் கடிந்து கொண்டே, ஹோட்டலுக்குப் போனார்கள். சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்து, வண்டியை எடுக்கும் போது, பொன்னுசாமி, ஓவ் என்று ஓலமிட்டபடி வாந்தி எடுத்தார். கௌதமுக்குள் மனசு துணுக்கென்றது. ஒருநாளும் அவர் வாந்தி எடுத்ததில்லை. உடனே அருகாமைக் கடைக்கு ஓடிப்போய் தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து தந்தார் கௌதம். பொன்னுசாமி முகம் கழுவி, தண்ணீர் அருந்தி, சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துவிட்டு புறப்பட்டார்கள்.
அவர், மெல்ல கௌதம் மேல் சாய்ந்து காதருகில் கிசுகிசுத்தார். “கௌதம்.. என்னை எப்படியாச்சும் வீட்டுக்குக் கொண்டு போய்டுங்க..”என்றார். பெரும்பாலும், அவரை ஈரோட்டிலிருந்து அவருடைய வண்டியில் அனுப்பி விட்டு கௌதம் தனியாக பஸ் ஏறி தன் வீட்டிற்குப் போய்விடுவார் என்பது ரொட்டீன். ஆனால், இன்றைக்கு என்னென்னவோ பேசுகிறாரே..என்னாச்சு இவருக்கு..”ஒண்ணுமில்லே.. சும்மா வாந்திதான்.. ஒண்ணும் ஆகாது.. வாங்க..” என்று சாதாரணமாகப் பேசுபவன் போல அசட்டையாகப் பேசினார் கெளதம்.
“இல்லே கெளதம்.. நான் De Addiction Medicine எடுத்திட்டேருக்கேன்.. அதா.. உங்க கிட்டே சொன்னேன்.”
“அடப் படுபாவி.. XXXXX..” (இப்பொழுது இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாமா?).. கிரீச்சென்ற சப்தத்துடன் எங்கள் வண்டி நின்றது.
காட்சி : 12
ஈரோட்டு ஸோட்டா மற்றும் படா இலக்கியவாதிகள் அனைவரையும் ஆதரிக்கும் ஒரே ஒரு டாக்டர் ஜீவானந்தம் தான். அது மட்டுமல்லாது, குடி நோயாளிகள் மீட்பு மையமும் அதுதான். அவரது Nalantha கிளினிக் வரவேற்பு வாசலில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். டாக்டர் வெளியே போயிருக்கிறார். சிஸ்டர், இலக்கியவாதிகள் எல்லோருக்கும் நன்கு தெரிந்தவர். அவரிடம் எல்லாவற்றையும் சொன்னார் கெளதம். அவர் உடனே, டாக்டருக்கு போன் செய்து பேசினார். கெளதமுக்கு நிலை கொள்ளவில்லை. பொன்னுசாமி சாய்ந்து படுத்திருந்தார்.
நல்லவேளையாக அடுத்த ஒரு முக்கால் மணி நேரத்தில், டாக்டர் வந்து சேர்ந்தார். கெளதமைக் கண்டதும் உடனே உள்ளே அழைத்து விசாரித்தார். கெளதம் கலங்கிய கண்களுடன், கம்மிப்போன குரலில் எல்லாவற்றையும் சொன்னார். டாக்டர் ஸ்டெதாஸ்கோப்பை எடுத்துக் கொண்டு வந்து பல்ஸ் பார்த்தார். “ஓகே, உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பித்துவிடலாம்..” என்றவர், நர்ஸை அழைத்து பெட் ரெடி பண்ணச் சொன்னார். பிறகு, நம் கதாநாயகனை மெல்ல கைத்தாங்கலாக எழுப்பி, பெட்டில் கொண்டு போய் படுக்க வைத்தார் கௌதம். சிஸ்டர் ஏதோ மருந்தை எடுத்து வந்தபோது, நாயகன் எழுந்து உட்கார்ந்து கொண்டார். “இது என்ன மருந்து? இந்த மருந்தோட பேர் என்ன? என்ன கம்பெனி? இதனுடைய சைடு எஃபக்ட் என்ன?” என்று விசாரணைக் குரலில் கேட்க ஆரம்பித்தார். சிஸ்டர் உள்ளே போய் டாக்டரிடம் சொல்லவே, டாக்டர் கௌதமை அழைத்தார்.
“கௌதம்.. இதெல்லாம் பெரிய தலைவலி புடிச்ச கேஸ்.. நீங்க வேற எங்காச்சும் கூட்டிட்டுப் போங்க.. இதையெல்லாம் வெச்சு மேய்க்க முடியாது..” என்று சலித்துக் கொண்டார். கௌதம் இரு கரங்களையும் கூப்பி அழுதார்.. “டாக்டர் எப்படியாச்சும் அவரைக் காப்பாத்துங்க..” கௌதமின் அழுகையைப் பார்த்த டாக்டர், கொஞ்சம் சமாதானமானார்.”சரி, இப்ப, இவர் கூட வேற யார் வந்திருக்காங்க?”
யாருமில்லே டாக்டர் நான் மட்டுந்தான்..”
“அப்படின்னா இங்கே யாரு இருக்கப்போறீங்க..”
“டாக்டர் நான் இருக்கேன் டாக்டர்..”
“இல்லீங்க கௌதம், இதிலே நிறைய பார்மாலிட்டீஸ் எல்லாம் இருக்கு.. ஃபார்ம்லே கையெழுத்துப் போடணும்.. அவுங்க ஒய்ஃபை வரச் சொல்லுங்க.. “
“டாக்டர்.. நான் கையெழுத்து போடறேன் டாக்டர்.. நீங்க உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பியுங்க..” என்று அவரது கைகளை பிடித்துக் கொண்டு கம்மிய குரலில் சொன்னார் கௌதம்.
டாக்டர் என்ன நினைத்தாரோ, அல்லது கௌதம் அல்லும் பகலும் சேவித்துக் கொண்டிருக்கும் ரெங்கநாதர் நினைத்தாரோ, உடனே பொன்னுசாமிக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பமானது.
பிறகு, சிஸ்டர், மறக்காமல், கௌதமிடம் ஒரு ஃபார்மில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். கையெழுத்து போடும்போது கௌதமின் இதயத்துடிப்புகள் பன்மடங்கு அதிகமாகின.
“இந்தமாதிரி ஆட்களோடெல்லாம் சேராதீங்க.. ஏதாவது பிரச்னை வந்தா உங்களைப் புடுச்சுக்குவாங்க..” என்ற சிஸ்டர், “தூக்கம் வந்தா தூங்குங்க.. பக்கத்து ரூம்லே பெட் காலியாத்தான் இருக்கு..” என்றார்.
“தேங்க்ஸ் சிஸ்டர், எனக்குத் தூக்கம் வல்லே..”
அந்த இரவு, கௌதம் வாழ்க்கையின் கொடூரமான இரவு, அவர், விடிய விடியத் தூங்காமல், பொன்னுசாமி பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தார். உலகில் உள்ள அனைத்து கடவுளர்களையும் வேண்டியபடி அமர்ந்திருந்தார். பயம், ஒவ்வொரு உயிர்க்காலிலும் செங்குத்தாய் நின்றிருந்தது. அந்த கணங்களில் கௌதமின் உடலில் ஏதோ ஒருவித மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார். வயிறு கலங்கியது. பாத்ரூம் போனார். அதன் பிறகு, ஒரு சில நிமிடங்கள் கழிந்து, சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்தது. மீண்டும் பாத்ரூம் போனார். இப்படியே விடியும் வரை 10 – 20 முறை சிறுநீர் கழித்துக் கொண்டேயிருந்தார். ஒரு ஐந்து மணிக்கு மேல், தூக்கம் கண்களைக் கப்பிய, உடல் அசதியின் மயக்கத்தில், தூங்கி விட்டார்.
தூக்கத்தில் பயங்கரமான கனவுகள், பொன்னுசாமியின் மனைவி அழுது கொண்டிருக்கிறார். அந்த அழுகையின் ஓலம் கௌதமின் தலையில் வெடிக்கிறது.
தூக்கம் கலைந்து ஆ ஓ என்று கத்திக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார் கௌதம்.
எதிரில், ஜாலியாக தலையணையில் சாய்ந்தவாறு, Hindu பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் நம் கதாநாயகன். கௌதமைப் பார்த்ததும் புன்னகைத்தார். கௌதமுக்கு அந்தப் புன்னகை பெரும் வெறுப்பாக இருந்தது. சிறுநீர் வயிறெங்கும் நிரம்பி வழிவதை உணர்ந்தார். எழுந்து பாத்ரூம் ஓடினார்.பேப்பரை மடித்து வைத்த பொன்னுசாமி, ஓகே கௌதம், நாம வீட்டிற்குப் போகலாம்..” என்று எழுந்தார். அங்கிருந்த சிஸ்டர், “இருங்க, டாக்டர் வந்து செக்கப் பண்ணி சொன்னாத்தான், டிஸ்சார்ஜ் பண்ண முடியும்.” என்று சத்தம் போட்டார்.
எட்டு மணிக்கெல்லாம் டாக்டர் வந்துவிட்டார். பொன்னுசாமியைப் பார்த்து, “எப்படியிருக்கீங்க..?” என்றார்.”நீங்கதான் சொல்லணும்..” என்றார் பொன்னுசாமி, பேப்பரின் அடுத்த பக்கத்தைத் திருப்பியவாறு,
டாக்டர் புன்முறுவலுடன் தனது அறைக்குத் திரும்பி விட்டார். கௌதமை அழைத்தார். ” ஓகே.. கௌதம்.. கூட்டிட்டுப் போலாம். ஒண்ணும் பிரச்னை இல்லை.. நார்மலாத்தான் இருக்காரு..” என்றார்.
“தேங்க்ஸ் டாக்டர் ..” என்றார் கௌதம். நன்றிப் பெருக்கில் கண்கள் நனைந்தன. கௌதம் சொன்னது ஒற்றை வார்த்தை அல்ல..அவரது வாழ்நாளில் தனது இதயத்துடன் ஒட்டி உறவாடியிருந்த ஓராயிரம் சொற்கள் கொண்ட வார்த்தை அது.
வணக்கம் சொல்லிவிட்டு பொன்னுசாமியின் அறைக்கு வந்தார். அவரைக் காணவில்லை. “ஐயோ கடவுளே.. மறுபடியும் ஏதாவது…” என்று பதறிச் சிதறிப் போனார். அங்கு வந்த சிஸ்டர், “அவர் பாத்ரூம் போயிருக்கார்.. இந்தாங்க பில்” என்று கௌதமிடம் நீட்டினார்.. டாக்டர் பில் மிகமிக குறைவாகத்தான் போட்டிருந்தார். “சரிங்க சிஸ்டர், நான் வாங்கிட்டு டாக்டர் கிட்டே வரேன்..” என்றார் கௌதம். சிஸ்டர் தலையை ஆட்டி விட்டுப் போனார்.
‘பொன்னுமியிடம் பணம் எதுவுமிருக்காதே.. என்ன செய்வது.. கடவுளே..’ என்று கைகளை பிசைந்தவாறு காத்திருந்தார் கௌதம்.
சற்றைக்கெல்லாம் பாத்ரூமிலிருந்து வந்தவரிடம், “ஓகே.. புறப்படலாம்.. உங்களுக்கு ஒண்ணும் இல்லே..” என்றார்.
” நானும் அதைத்தான் சொன்னேன்..” என்று சிரித்தார் பொன்னுசாமி.
“சரி, இந்தாங்க பில், டாக்டருக்குப் பில் கொடுக்கணும்..” என்று நீட்டினார் கௌதம். பொன்னுசாமி அதை வாங்கிப் பார்த்துவிட்டு, ” ஓகே, என்கிட்டே பணம் இல்லே.. அதை அப்பறம் கொடுத்துக்கலாம்.. மொதல்லே நான் வெளியே போகணும்..” என்று பில்லை கௌதமிடம் திருப்பித் தந்தார், அலட்சியமாக. (அப்பொழுதெல்லாம் ஜி பே வகையறாக்கள் இல்லை)
கௌதமுக்குக் கோபமும் வந்தது, கூடவே தன் மீது வெறுப்பும் வந்தது.
கௌதம் டாக்டரிடம் சென்று விபரத்தைச் சொன்னார், “டாக்டர்.. பணம் நான் கொடுத்திர்றேன் டாக்டர், சாயங்காலம் உங்களை வந்து பாக்கும்போது.. நான் குடுத்திட்றேன்..” என்றவாறு கீழே பார்த்துக் கொண்டு சொன்னார்.
டாக்டர் எதுவும் பேசவில்லை.. “ஓகே கௌதம்.. போயிட்டு வாங்க..” என்றார்.
அந்தக் கணத்தில் அவர் தெய்வம் போல – ஏன் அதற்கும் மேலாகத் தெரிந்தார்.
அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தார்கள்.
பொன்னுசாமி தன் வண்டியை ஸ்டார்ட் செய்தார். “ம்..ஏறுங்க கௌதம்..” என்றார்..
காட்சி : 13
அவரது வீட்டிற்குப் போனதும், ஏன் இரவு வரவில்லை..” என்று விசாரித்தார் அவரது மனைவி.
அது, ஒண்ணுமில்லே.. கொஞ்சம் ட்ரிங்க்ஸ் பண்ணேன். அது கொஞ்சம் பிரச்னை ஆயிடுச்சி.. கௌதம் அதை பெருசாக்கிட்டார்..” என்றபடி உள்ளே போனார்.
“உங்களுக்கு இதே வேலையாப் போச்சு” என்று கடிந்து கொண்டார் அவரது மனைவி.
கௌதம் அவருக்கு பெரிய கும்பிடு போட்டுவிட்டு அங்கிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு ஒரே ஓட்டமாய் வந்து பஸ் ஏறி வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
காட்சி : 14
வீட்டில் நுழைந்தவுடன் முதல் வேலையாக பாத்ரூம் போனார்.
வீட்டில் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்த விதி இடி இடி என நகைத்தது. அவருக்கு அன்றைக்குப் பிடித்தது ஏழரை சனி!
இரவு ஆரம்பித்த உடல் நடுக்கம் குறையவே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதிகம்தான் ஆனது. இப்பொழுது, இதயப் பகுதியில், அமிலத்தைக் கொட்டியது போல எரிச்சலெடுத்தது. அவருடைய அந்த 30 வயது வாழ்வில், அது வரை ஒருமுறைகூட மருத்துவமனைக்குப் போனதில்லை. முதன் முதலாக தங்கள் ஊருக்கு அருகாமையிலிருந்த கவுந்தப்பாடி மருத்துவமனைக்குப் போனார்.
டாக்டர் ஸ்டெதாஸ்கோப்பில் செக்கப் செய்து, மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். பீஸ் வாங்கிய பிறகு அந்த டாக்டர் சொன்னார், “எதுக்கும் இப்பிடியே இருந்தா நாளைக்கு வாங்க.. ஒரு ஈசிஜி எடுத்துப் பார்த்துடலாம்..” கௌதமுக்கு பக்கென்று பற்றிக் கொண்டது. ‘ஐயோ எனக்கு ஏதோ ஆகிவிட்டது. இரவு கண்டதையும் யோசித்து, இதயம் அதிகமாகத் துடித்து, ஹார்ட் அட்டாக்கின் ஆரம்ப கட்டம்..’
“நோ, அப்படியெல்லாம் இருக்காது, நான் இன்னும் எழுதவேண்டும்.. நான் எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.. தமிழ் மொழியை உலகத்தரத்துக்கு உயர்த்த வேண்டும்.. கடவுளே.. காப்பாற்று..”
அன்றைக்கு இரவு 6.00 மணி. வலி எல்லை மீறிப் போய், “கவுந்தப்பாடி வேண்டாம்.. அதை விடவும், பெரிய டாக்டர்கள் இருக்கும் பவானிக்குப் போய்விடலாம்..” என்று தனது மனைவியை அழைத்துக் கொண்டு பவானி ஓடினார். அந்த டாக்டர், ஒரு இன்ஜெக்ஸன் போட்டு மருந்து எழுதிக் கொடுத்தார். “நீங்க போகலாம்.. மறுபடியும் வலி இருந்தா நாளைக்கு வாங்க..” என்றார்.
கௌதம் வெளியில் வந்து யோசித்தார். “இரவில் ஹார்ட் அட்டாக் வந்து விட்டால்.. அவ்வளவுதான்.. இங்கேயே இருந்தால் அந்த சமயத்தில் டாக்டர் வந்து காப்பாற்றி விடுவார்..” என்று முடிவு செய்து டாக்டரிடம் போய், “டாக்டர் நான் இங்கேயே இருந்துக்கறேன்.. எனக்கு ஒரு பெட் கொடுத்துடுங்க..”
“சரி.. சிஸ்டர் இவருக்கு ஒரு பெட் கொடுங்க.” என்றார் டாக்டர்.
பெட்டில் படுத்த பிறகுதான் ஒரு ரிலாக்சேஷனே வந்தது. தன் மனைவி, ஒன்றும் புரிபடாமல், பயத்துடனும் பாவத்துடனும் அவர் அருகில் அமர்ந்திருந்தார். கௌதம், அவரை அதுவரை வெளியிலெல்லாம் எங்கும் அழைத்துக் கொண்டு போனதில்லை. கிராமத்துப் பெண்மணி.
ஒரு ஒன்பது மணியிருக்கும். இதயப்பகுதியில் பயங்கரமான வலியெடுக்க ஆரம்பித்தது. கௌதம் உடனே சிஸ்டரை பதற்றத்துடன் அழைத்தார். அவர் ஓடி வந்து செக்கப் செய்து பார்த்துவிட்டு டாக்டருக்குப் போன் செய்தார். பிறகு, சில மாத்திரைகளைத் தந்தார். “இதைப் போடுங்க சரியாகிவிடும்..” என்றார்.
மாத்திரைகளைப் போட்ட பிறகு, கொஞ்ச நேரம் நன்றாக இருந்தது. பிறகு மறுபடியும் வலி, உயிர்போகும் வலி. சிஸ்டர் வந்தார். ” சிஸ்டர் டாக்டரைக் கூப்பிடுங்க.. அவர் வந்து செக்கப் பண்ணிப் பாக்கட்டும்..” என்று பதறினார் கௌதம்.
“அவரெல்லாம் இப்போ வரமாட்டார்.. நாளை காலையில் தான் வருவார்.” என்றார் சிஸ்டர். ‘நான் இங்கு பெட் எடுத்து இருப்பதே டாக்டரின் முழுநேரக் கண்காணிப்பில் இருக்கத்தானே..’ என்று கௌதமுக்கு கோபம் எகிறியது. “அதெல்லாம் முடியாது.. நீங்க டாக்டரை கூப்பிடுங்க..” என்று சத்தம் போட்டார்.சிஸ்டர் டாக்டருக்கு போன் செய்தார். பிறகு, கௌதமிடம் வந்து, “அவர் இப்பல்லாம் வரமுடியாதுன்னு சொல்லிட்டாரு.. உங்களை ஈரோடு ஆஸ்பத்திரியிலே போயி அட்மிட் ஆகச் சொல்லிட்டாரு..” என்று சொன்னார்.
கௌதமுக்கு வலி உச்சபட்சமாக எகிறியது. உடனே எழுந்து வெளியே ஓடினார். அவரது மனனவியும் பின்னால் ஓடி வந்தார்.
பவானியிலிருந்து தங்கள் கிராமத்திற்கு வருவதற்கு, பஸ் வரவேண்டுமே.. கடவுளே..” என்று வேண்டிக் கொண்டார். கிராமத்திற்கு எதற்கென்றால், ஈரோடு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகப் பணம் வேண்டுமே.. ஊரில் போய் பணம் அரேஞ் பண்ணிட்டுத் தான் போகமுடியும்..
சட்டென்று ஒரு குயுக்தியான யோசனை வந்தது கௌதமுக்கு. எதிரிலிருந்த வாடகைக் கார் ஸ்டாண்டுக்குப் போய், பேசி காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
“சீக்கிரம் போங்க.. கவுந்தப்பாடி போயி, அங்கிருந்து, ஈரோடு போகவேண்டும்.. அவசரம். அவசரம்..” என்றார். கார் டிரைவர், அவரது மனைவிக்கு ஏதோ உடல்நலப் பிரச்சினை போலிருக்கிறது என்று, “என்னங்க.. அம்மா உடம்புக்கு..” என்று ஆக்சிலேட்டரை அழுத்தினார். “அவங்களுக்கு ஒண்ணும் இல்லே.. எனக்குத்தான்..” என்றார் கௌதம். டிரைவர் தனக்கு முன்னால் மாட்டியிருந்த கண்ணாடியில் தெரிந்த கௌதமின் முகத்தை விநோதமாகப் பார்த்தார்.
காரில் வரவர, யோசித்துக்கொண்டே வந்தார் கௌதம். ‘வீட்டில் பணம் ஒத்தைக் காசு கூட இல்லை. ஊருக்குப் போய் அண்ணன்களிடம் கடன் கேட்டால் ஒத்தைக் காசு தரமாட்டார்கள். ஆனால், கார் எடுத்துக் கொண்டு போனால், என்னவோ ஏதோ என்று மனசு இளக்கமாகி பணம் கொடுத்துதவுவார்கள்..’ என்று நம்பிக்கையுடன் ஓடியது கார். இப்பொழுது, இதய வலி சற்று குறைந்திருந்தாற்போல் தெரிந்தது.
காட்சி : 15
எதிர்பார்த்தது போலவே, அண்ணன்கள் தங்களிடம் ஒரு பைசா கூட இல்லை என்று கையை விரித்து விட்டார்கள். நீ காரில் வந்தாலும் சரி, ஏரோபிளேனிலேயே வந்தாலும் சரி.. தன்னுடைய மாஸ்டர்பிளான் சுக்கு நூறாக நொறுங்கிப் போனது. என்ன செய்வதென்றே விளங்கவில்லை. சட்டென அவரது மனைவி, அருகாமையிலிருந்த வீட்டில் உள்ள அவளது ஸ்நேகிதகாரி பழனியம்மா என்பவரிடம் போய் பேசி, 2,000 ரூபாய் வாங்கி வந்து விட்டார். கௌதம் எதிர்பார்த்தது வெறும் 1000 ரூபாய்தான். 1990 -ல் அது பன்மடங்கு பெரிய தொகை.
மற்றபடி, அதுவரை வலி எடுக்காமலிருந்த இதயம் உடனே வலியெடுக்க ஆரம்பித்தது. பரபரவென மாற்றுத்துணி எடுத்துக் கொண்டு காரில் ஏறினார்கள். கார் ஈரோட்டை நோக்கிப் பறந்தது.
காட்சி : 16
நல்ல வேகத்தில் வந்த கார், ஈரோட்டுக்கு முன்னால் உள்ள சித்தோடு என்ற சிறு நகரத்தை அடைந்ததும், வேகம் குறைந்தது. சத்தமில்லாமல் அழுது கொண்டே வந்த அவரது மனைவி, அழுகையை நிறுத்தினார். டிரைவர், சட்டென ஓரிடத்தில், வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு, ” இங்கே ஒருத்தரைப் பாக்கணும்.. ஒரே நிமிஷத்தில் வந்துடறேங்க..” என்று சொல்லி விட்டுக் கீழிறங்கி ஓடினார்.
கௌதம் வலியின் வாதையில், சீட்டில் சாய்ந்து கொண்டார். அவரது மனைவி, மெதுவான குரலில் கௌதமிடம் சொன்னார்: ” என்னங்க, அந்தாளு சாராயக் கடைக்குள்ள போறானுங்க..”
அந்தச் செய்தியின் விஷயம், படீரென கௌதமின் மண்டையைத் தாக்கியது. “ஏலி ஏலி லாமா சபக்தானி..” என்று வாய்விட்டு அரற்றினார் கௌதம்.
அந்தக் கணத்தில், தான் படித்த இலக்கியம், தான் அவதானித்த மனிதாபிமானம், தான் எழுதும் சக மனிதனை நேசிக்கும் தன்மையை போதிக்கும் எழுத்துக்கள்.. எல்லாமே செத்துப் போயின. ஒருவேளை அவரும்தான் செத்துப்போனாரா..?
காட்சி: 17
வேகமெடுத்தோடிய வண்டியின் வேகத்தைக் குறைத்தபடி பேசினார் அந்த டிரைவர். “எந்த ஆஸ்பத்திரிக்குப் போறதுங்க..?” முன்னே பின்னே செத்திருந்தா சுடுகாடு தெரியும்.. கௌதம் பதில் தெரியாமல் முழித்தார். அதை உணர்ந்து கொண்ட டிரைவர் பெருந்துறை ரோட்டில் மெதுவாக காரை நகர்த்திக் கொண்டே இருமருங்கிலும் பார்வையைத் துழாவிக் கொண்டு வந்தார். முழுக்க முழுக்க ஆஸ்பத்திரிகளால் நிரம்பிய அந்த ரோட்டில் அவர்கள் கார் ஊர்ந்தது..
சட்டென ஒரு மருத்துவமனையின் முன் நிறுத்தினார். அது சுதா ஹாஸ்பிடல். முன்னால் கலர் கலராக நியான் விளக்குகள் போடப்பட்டு மிகப் பெரியதாக இருந்தது. இதில் பயங்கரமான பில் போடுவார்கள் என்று கௌதமின் உள் மனம் கணக்குப் போட்டது. ஆனால், ‘எனக்கு அதுதான் வேண்டும். ஏனெனில், சின்ன ஆஸ்பத்திரியில் யாரும் இருக்க மாட்டார்கள். இது போன்ற பென்னம்பெரிய ஆஸ்பத்திரியில், 24 மணிநேரமும் சேவை செய்வார்கள்…’
கிரீச் என்று கத்தியபடி நின்றது கார்.
கௌதம் உடனே கதவைத் திறந்து கொண்டு மருத்துவமனைக்குள் ஓடினார். வரவேற்பு அறையில் ரிஷப்சனிஸ்ட்டிடம் பதற்றமாகப் பேசினார். ரிசப்ஷன் பெண், நர்ஸ்கள் இருந்த திசையை நோக்கிக் கை காட்டினார். அவர்களிடம் ஓடினார். அவர்களின் விசாரிப்புக்கேற்ப, “ஹார்ட் பயங்கரமாக வலிக்கிறது..” என்று சொன்னார்.
ஒரு நர்ஸ், உடனே ஒரு பணியாளை அழைத்து பரபரப்புடன் செயல்பட்டார். உடனே, சக்கர வண்டியை எடுத்துவரச் சொன்னார். அந்த அவசர செயல்பாடுகள் கௌதமுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. பணியாள் உடனே ஓடி சக்கர வண்டியை எடுத்து வந்தார். “சரி வாங்க போகலாம்..” என்று பரபரப்புடன் நர்ஸ் அவர்களது காரை நோக்கி நடந்தார். பின்னாலேயே வண்டியை உருட்டிக் கொண்டு வண்டிக்காரனும் வந்தான். கௌதமும் அவர்களைப் பின்பற்றி ஓடிவந்தார்.
காரிடம் வந்ததும், அவரது மனைவியைப் பார்த்து ” மெதுவா இறங்குங்க..” என்று பதனத்துடன் கைகளைப் பிடித்து இறக்கி விட்டார் நர்ஸ். அவர் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. கலவரத்துடன் கௌதமைப் பார்த்தார். “சொல்லும்மா.. இப்ப வலி இன்னும் இருக்குதா?” என்று நர்ஸ் அவர் மனைவியிடம் கேட்க, “ஐயோ எனக்கில்லீங்க..அவருக்கு..” என்று மிரட்சியுடன் பதிலளித்தார் அவர்.
கௌதம் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்.
“அய்யய்யோ, உங்களுக்கா? ஹார்ட்லே வலிங்கறீங்க.. இங்கும் அங்கும் ஓடிட்டிருக்கீங்க..” என்றார் நர்ஸ். வண்டியோட்டி, “ஐயோ நீங்க நிக்கவே கூடாது, வண்டியிலே உக்காருங்க.. அய்யய்யோ மெதுவா ஏறுங்க…” என்றார். கௌதம், சக்கர வண்டியில் ஏறி குறுக்கியபடி உட்கார்ந்தார். அவரை உடனே குடுகுடுவெனத் தள்ளிக்கொண்டு போக, தன் மனைவியிடம் ஏதோ சொல்ல நினைத்தார் கௌதம். கடைசியாக தன மனைவியின் முகத்தைப் பார்க்கவேண்டும் என்று உள்மனசு உலுக்கியது.. அவரிடம் பேச எத்தனிக்கையில், “ஐயோ நீங்க பேசவே கூடாது..அவுங்களையெல்லாம் நாங்க பாத்துக்கறோம்..” என்றார் நர்ஸ்.
கௌதம் சக்கரவண்டியில் சுருண்டு போனார்.
காட்சி : 18
கௌதமைக் கொண்டு போய் ஐ சி வார்டில் சேர்த்து முகத்துக்கு முகமூடியெல்லாம் போட்டுவிட்டார்கள். அதற்குள் அவரைப் பார்ப்பதற்காக, அண்ணன் மகன்கள் இருவரும் வந்துவிட்டார்கள். கௌதமின் மனைவியிடம் (சித்தியிடம்) பணம் இருக்கிறதா என்று கேட்டு 2,000 ரூபாய் ஒருவன் கொடுத்தான். அழுது கொண்டே இருக்கும் சித்தியை ஆறுதல் படுத்தினார்கள். “ஒண்ணும் ஆகாது.. அழுவாதீங்க ..”
இரண்டு மணி நேரம் கழித்து, “சரி சித்தி நாங்க உள்ளே போய்ப் பாத்துட்டு வந்தோம்.. நல்ல தூங்கறார்.. நீங்களும் இங்கேயே இருங்க.. நாங்க போறோம்.. ஏன்னா.. வீட்டிலே தேடுவாங்க..” என்று சொல்லிவிட்டு, “சித்தி, நீங்க தனியா இருக்கீங்க.. அதனாலே, நகையெல்லாம் வேண்டாம்.. அந்த சங்கிலியை கழட்டிக் கொடுங்க.. நாங்க பத்திரமா வெச்சிருக்கோம்.. நாளைக்கு காலையிலே வரும்போது கொண்டு வர்றோம்..” என்று அவர் போட்டிருந்த ஒத்தைவடச் சங்கிலியை வாங்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். (அநேகமாக, இந்தக் காட்சியை வெட்டிவிடலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில், நம் பந்த பாசத்தைக் குறை சொல்வதுபோல, காட்சிகள் இருக்கக்கூடாது.. இதெல்லாம் நம்பறா மாதிரியா இருக்கு? என்று விமர்சகர்கள் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்)
காட்சி : 19
அடுத்த நாள்,
முந்திய இரவே, ஈ சி ஜி எல்லாம் எடுத்துப் பார்த்து விட்டார்கள். அது மட்டுமல்லாது, இன்னொரு ஹார்ட் பேஸண்ட் வந்துவிட்டதால், ஐ சி வார்டில் பெட் இல்லை. அதனால், கௌதமை சாதாரண வார்டுக்கு மாறிவிட்டார்கள்.
காலையிலேயே அண்ணன் மகன்கள் இருவரும் ஆஜராகி விட்டனர்.
“எப்படியிருக்கீங்க?” என்று கௌதமை நலம் விசாரித்தார்கள்.
“நான் அப்படியே தான் இருக்கிறேன்” என்று சொன்னதும், அவர்கள் சித்தியிடம் பேசப் போய்விட்டார்கள். “இங்க பாருங்க சித்தி, அவருக்கு ஒண்ணும் இல்லே.. நாங்க நர்சம்மா கிட்டே பேசினோம்.. நாம் டிஸ்சார்ஜ் பண்ணிட்டு வீட்டுக்குப் போலாம்..” என்றார்கள். சித்திக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“சித்தி, இது ஈரோட்டிலேயே பெரிய ஆஸ்பத்திரி.. பில்லு போட்டு தீட்டிருவாங்க.. அதனாலே. இப்ப நல்லாருக்கார்.. ஏதாச்சும் ஒண்ணுன்னா நாம அங்கேயே பாத்துக்கலாம்..”
“அது போக, இது குழந்தைகள் ஆஸ்பத்திரி.. இங்கே இவுங்களுக்கு என்ன தெரியும்..?”
ஒரு வழியாக சித்தியையும் கௌதமையும் கன்வீன்ஸ் செய்து ஒருவழியாய் டிஸ்சார்ஜ் ஆகி விட்டார்கள். பில், ரொம்ப பயப்பட்டது போலில்லாமல், நார்மலாகத்தான் இருந்தது. “இந்தா சித்தி போட்டுக்கங்க..” என்று கௌதமின் மனைவியிடம் சங்கிலியை திருப்பிக் கொடுத்தார் ஒருவர். அவரும் செலவு செய்யாமல் வைத்திருந்த 2,000 ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார். ரொம்பக் கேஷுவலாக நடந்தது அந்தக் காட்சி.
காட்சி : 20
வீட்டில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கௌதமின் மகன், அவரது மாமனார், அத்தை, மச்சினன்கள் எல்லோரும் வெளிறிய முகத்துடன் காத்திருந்தனர். கௌதமுக்கு தன் மகனைப் பார்த்ததும் அழுகை வந்து விட்டது. “நீ இன்னிக்கு ஸ்கூல் போகலையா?” என்று விசாரித்தார். அவன், இல்லையென்று தலையாட்டினான். என் கனவுகளையெல்லாம் நனவாக்கப் பிறந்த தவமாய் தவமெடுத்த தவப்புதல்வன்! என்று தனக்குள் ஏதேதோ எண்ணங்கள்..எல்லா உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் மறைத்தபடி, “எனக்கொண்ணும் இல்லே.. அது வெறும் தசைப்பிடிப்புதான்..” என்று சாதாரணமான தொனியில் பேசினார். அவன் அப்பா அருகில் அமர்ந்து அவரது கைகளைப் பிடித்துக் கொண்டான். அந்த உள்ளங்கையில் ஓடிய உணர்வுகளை அவர்களது தலைக்கு மேலே சுவரில் மாட்டியிருந்த Edvard Munch னுடைய Melancholy ஓவியம் பிரதிபலித்தது. பின்னணியில், Mahler – ன் 6-வது சிம்பொனி “Tragic” (49:30) இசைந்தது.
அன்று இரவு. மீண்டும் வலி எடுத்தது, வெளியே சொல்வதற்கு வெட்கமாக இருந்தது கௌதமுக்கு. மருத்துவமனையில் எழுதிக் கொடுத்திருந்த மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு கண்களை மூடிப் படுத்துக் கொண்டார். கடவுளர்களின் பெயர்களை உச்சாடனம் செய்து கொண்டே படுத்துத் தூங்கி விட்டார்.
காட்சி : 21
அடுத்த நாள், கௌதம் மகன் பள்ளிக்குப் போய்விட்டான். அவரது மாமனார், மச்சினன்கள் , உறவுகள் அனைவரும் போய்விட்டனர். அத்தை மட்டும் தங்கி விட்டார். கௌதம் காலை உணவை முடித்து விட்டுப் படுத்தே இருந்தார். அவரது மனைவி, “அப்படியே எழுந்து காலாற வெளியே போயிட்டு வாங்களேன்…. என்றார். கௌதம் மறுத்து விட்டுப் படுத்துக் கிடந்தார். கண்களை மூடிப் படுத்தபடி, அந்த வலியின் சத்தத்தை அவதானித்துக் கொண்டிருந்தார். வலி கொஞ்சம் கொஞ்சமாகக் கூடியது. மெதுவாக மனைவியிடம் சொன்னார். அவர், கணவரை விநோதமாகப் பார்த்தபடி, மருத்துவமனைக்குப் புறப்படுவதற்கு ஆயத்தமானார்.
இது ஆப்பக்கூடல். சிறு டவுன். வேறு ஒரு மருத்துவமனை. அங்கேயே அட்மிட் ஆனார்.
இப்பொழுது கொஞ்சம் வலி குறைந்திருந்தது.
அப்படியே கணைகளை மூடியவர், தூங்கிப் போனார். சடாரென ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்த்தால், எதிரே பொன் பொன்னுசாமி! உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தாற்போல தூக்கியடித்தது கௌதமுக்கு. ஏதோ, ஆங்கிலப் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த பொன்னுசாமி, கௌதம் விழித்துக் கொண்டதைப் பாத்ததும், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, அவரைப் பார்த்துப் புன்னகைத்தார்.
“கௌதம் எப்பிடியிருக்கீங்க..”
கௌதம் பீதியுடன் தலையசைத்தார்.
“இங்கே பாருங்க.. உங்களுக்கு ஒண்ணும் இல்லே.. இதெல்லாம் ரொம்ப ஓவர்.. எந்திரிங்க வீட்டுக்குப் போலாம்.. ” என்றார். அப்பொழுது, சட்டென மின்சாரம் போய், தலைமேல் சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறி நின்று போனது.
ஏதோ கேட்ட சகுனம் போல, கௌதம் பயத்தில் பிதற்ற ஆரம்பித்தார், அவரது மனைவி, “உட்டுருங்க..அவர் கொஞ்சம் தூங்கட்டும்..” என்றார்.
பொன்னுசாமி தனது சட்டையில் உட்புறமாகக் கையைவிட்டு சில பேப்பர்களை உருவி எடுத்தார். மடிக்கப்படாமல், ஓரம் எதுவும் மழுங்காமல், லாங் சைஸ் பேப்பர்கள். “இந்தாங்க ட்ரான்ஸ்லேஷன்.. வாங்க வீட்டுக்குப் போலாம்..” என்று கௌதமிடம் நீட்டினார்.
கௌதம் அவைகளை வாங்கவில்லை. ” சரி, ரெஸ்ட் எடுங்க.. நேரம் இருக்கும்போது படிங்க..” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார் பொன்னுசாமி.
அவர் போனபிறகு, எழுந்து உட்கார்ந்து, தனது பெட்டில் வைத்து விட்டுப் போயிருந்த மொழிபெயர்ப்புத் தாள்களை வெறித்துப் பார்த்தார் கௌதம். அப்பொழுது, சட்டென மின்சாரம் வந்து விடவே, மின் விசிறி சுழல, அந்த அறை முழுவதும் தாள்கள் சுழன்று சுழன்று பறந்தன.
காட்சி : 22
அடுத்தடுத்த காட்சிகளில் பல்வேறு மருத்துவமனைகளில் ஏறி இறங்குகிறார் கௌதம். டாக்டர் வருவார். அவரது ரிப்போர்ட்டை எடுத்துப் படிப்பார். ஊசி போடுவார்.. பிறகு அடுத்த பேஸண்டிடம் போய்விடுவார். இப்படி அவர் போன எல்லா மருத்துவமனைகளிலும் ஒரே காட்சிதான் திரும்பத் திரும்ப கொண்டிருந்தது. டாக்டர் அவரிடம் எதுவும் பேச மாட்டார். என்ன நோய் என்று எந்த டாக்டரும் சொல்லியதில்லை. மேலும், “அவரும் டாக்டரிடம் எதுவும் பேசக்கூடாது” என்றும், “கோபத்துக்கு வந்துவிடுவார்.. எங்களைத் திட்டுவார் ” என்றும் நர்ஸம்மாக்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
இப்பொழுது அவரது மனைவி, முன்புபோல பதற்றப்படுவதெல்லாம் இல்லை. தன் கணவரது செய்கைகளை அலட்சியம் செய்ய ஆரம்பித்து விட்டார். இப்பொழுது, அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு, அவர் ஒரு பொழுது போக்கு காமெடியன் போல ஆகிவிட்டார். ‘இன்றைக்கு எந்த ஆஸ்பத்திரி?’ என்று கேட்குமளவுக்கு,
காட்சி : 23
இன்றைக்கு வானம் மட்டுமல்ல அவரது மனசும் வெறுமையாய் இருந்தது.
சட்டென ஞாபகம் வந்தவராக எழுந்து போய், அவரது மேஜையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த பொன் பொன்னுசாமியின் மொழிபெயர்ப்பை எடுத்தார். பொன்னுசாமியின் கையெழுத்து குண்டுகுண்டான அழகான சிற்றெழுத்து வடிவத்தில், சற்றே சாய்ந்து சாய்ந்து தாள்களில் பரவியிருந்தது. கருத்த மைக்கும், வெண் தாள்களுக்கும் இடையில், தனது வலி மறைந்து போவதையும், பொன்னுசாமியின் வழி, விரிந்து அகல்வதையும், மின்விசிறியின் வளி, ரம்மியமாகத் தன்னைப்பற்றிப் படர்வதையும் அவதானித்தார் கௌதம்.
இதுவரை நவீனத்தமிழ் இலக்கிய உலகத்தில், விஞ்ஞானப் புனைவுகள் வந்ததே இல்லை. சயின்ஸ் ஃபிக்சன் என்றால்,குழந்தைகள் படிக்கும் கதைகள் என்ற கருத்து நவீன இலக்கியவாதிகள் மத்தியில் பரவியிருந்தது. அதுமட்டுமல்லாது, கமர்ஷியல் எழுத்தாளர் என்று இலக்கிய வாதிகளால் அடையாளப்படுத்தப்பட்ட சுஜாதா தான் இந்த சயின்ஸ் ஃபிக்சன் துறையை அறிமுகப்படுத்தினார் என்பதுவும், உலகப்புகள் பெற்ற இந்தக் கதைகளைப் பற்றி விளக்கமாகப் பேசினார் என்பதுவும், இந்தத் துறைமேல் வெறுப்பு வருவதற்கு ஒரு காரணம். ( இதற்குப் பலவருடங்களுக்கு முன்பே உலகப் புகழ் பெற்ற ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய விலங்குப் பண்ணை மற்றும் 1984 ஆகிய நாவல்களை, க.நா.சு மொழிபெயர்த்திருந்தாலும், அவைகளை, சயின்ஸ் ஃபிக்சன் Genre என்று எடுத்துக்கொள்ளாமல், அந்த நாவலுக்குள் இருக்கும் Dystopian தன்மையைத்தான் பிரதானப்படுத்தி, அதை ஒரு political fiction ஆகத்தான் கொண்டாடினார்கள் டமில் இலக்கியவாதிகள். டிஸ்டோபியன் என்பதன் அர்த்தம், மக்கள் துயரம் மிக்கவர்களாகவும், எந்தநேரமும் அச்சத்துடனேயே வாழும் ஒரு கற்பனை இடம். மிக மோசமான அல்லது நியாயமற்ற சமூகத்துடன் தொடர்புடையது, மனிதநேயமற்ற, பயமுறுத்தும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் குறித்த ஒரு கற்பனை உலகம் அல்லது சமூகம் என்று சொல்லலாம்.)ஆக,முதன் முதலாக உன்னதத்தில்தான் சயின்ஸ் ஃபிக்சன் கதை வெளிவருகிறது. அதுவும், ஊர்ஸுளா லா குன் – ன் சயின்ஸ் ஃபிக்சன். பெரும் ஆனந்தத்துடன் பொன் பொன்னுசாமியின் மொழிபெயர்ப்பைப் படிக்க ஆரம்பித்தார். மொழிபெயர்ப்பு மிக அபாரமாக இருந்தது. கதை, சயின்ஸ் ஃபிக்சன் மட்டுமல்ல, சயின்ஸ் ஃபேண்டஸி! உடலெங்கும் ரத்த ஓட்டம் ஜிவ் வென்றி எகிறிப் பாய, லா குனின் ஃபேண்டஸி உலகத்துக்குள் சொருள் அடித்தார். மிக லாவகமான மொழியாக்கம் எந்தவிதத் தடங்களுமின்றி அவரை அதன் அடியாழத்துக்கு அழைத்துப் போனது.
வெளியே மோட்டார் பைக் வந்து நிற்கும் சப்தம். சமீபகாலமாக புதியதாக அறிமுகமாயிருந்த பழனிச்சாமி என்னும் ஒரு இலக்கியத் தம்பி!
உள்ளே வந்து அமர்ந்ததும், அவரிடம் ஏதோ சொல்லவேண்டும் என்ற பரபரப்பு அவனுக்குள் இருப்பதை உணர்ந்தார் கௌதம்.
“அப்புறம், சொல்லு தம்பி .. என்ன விஷேசம்?”
“சார், உங்களுக்கு விஷயம் தெரியுமா?” என்றான். அவர் தலையை உயர்த்தினார். அவன் தயங்கித் தயங்கிப் பேசினான். “உங்க பொன்னுசாமி இருக்கிறார்ல்லே, அவர் நேற்று, அவரோட தம்பியை குத்திட்டாரு.. நல்லவேளை கத்தி ரொம்ப ஆழமாப் போகலே.. தம்பி தப்பிச்சிட்டாரு..”
கௌதமுக்கு உடலெங்கும் ஒருகணம் பதறிப் போனது.
“அவரைக் கேட்டதற்கு, சும்மா குத்திப் பாத்தேன்.. கத்தியினுடைய கூர்மைக்கும், அவனுடைய வயிற்றுக்கும் எவ்வளவு தூரம் இருக்குதுன்னு பாக்கலாம்னு தோணிச்சு.. சும்மா 4.33 தான்.. அப்பிடின்னாராம்..” என்றான் பழனிசாமி.
சரேலென, அவருக்குள், உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர் ஜான் கேஜ் – ன் 4.33 என்ற ஒலியற்ற இசைச் சுரம் ஒளித்தது
அவர் எதுவும் பேசுவதாக இல்லை. தன்னை அதற்கு ஒப்புக் கொடுத்து நின்றார்.
காட்சி : 24
கௌதம் எல்லாவற்றையும் வெறுத்துப் போய் வீட்டில் வெறுமையாய் படுத்திருந்தார். தன்னை சரியாக ஸ்பெஷலாக கவனிக்காத டாக்டர்களின் அலட்சியம் மீது அவருக்குள் பெரும் கோபம் கிளர்ந்தெழுந்தது. ‘நான் தமிழ் மொழியின் மிகப்பெரிய எழுத்தாளன். 2000 வருடத் தமிழ் மொழியை உலகத் தரத்துக்கு உயர்த்தப் பாடுபடுபவன். என்னை தமிழ்நாட்டில் இருக்கும் டாக்டர்கள் எல்லோரும் சேர்ந்து காப்பாற்றவேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஆனால், நடப்பது என்ன?’
தன்னை அட்மிட் செய்யும்போது, பெயர் வயது தொழில் என்று கேட்கும்போது, எழுத்தாளர் என்று சொல்வார். அந்த மிகை அலங்கார வரவேற்பாளினிக்கு “எழுத்தாளர்” என்றால் புரியாது, என்ன என்பதுபோல தலையை உயர்த்திப் பார்ப்பார். அவர் உடனே “ரைட்டர்” என்பார். “ஓ போலீஸா ?” என்று புன்னகைத்தபடி, ‘ரைட்டர்’ என்று எழுதுவார். அவர் இல்லை என்று தலையை ஆட்டுவதற்குள் சீட் எழுதி கையில் கொடுத்து விடுவார்கள். அருகிலிருக்கும் அவரது மனைவி, சிரிப்பார்.
அது மட்டுமல்லாது, அவரது பெயரை ‘கொளதம சித்தாதான்’ ‘சித்தான்’ என்று உயிரோடிருக்கும்போதே கொலை செய்வார்கள்.
அப்படியான ஒரு நாளில், தன்னைப் பார்க்க வந்திருந்த இலக்கிய நண்பர் ஆறுமுகம், ” நீங்க ரொம்ப பயப்படுறீங்க.. உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கெல்லாம் வராது.. அது மட்டுமில்லாமே, அது வந்தா இதயம் கொஞ்சம் கொஞ்சமா வலிக்காது, உடனே அட்டாக் ஆயிடும்.. உங்களுக்கு வலிக்குது, செரியாயிடுது, அப்பறம் வலிக்குது, செரியாயிடுது.. இது அல்சர் பிரச்னையாத்தான் இருக்கும்..” என்றவர், “கோபிச்செட்டிபாளையத்தில் ஒரு நல்ல டாக்டர் இருப்பதாகவும், அங்கு போய் ஒருமுறை பாருங்கள்..” என்றார். “அது மட்டுமல்லாது, அவர் உங்க இலக்கிய நண்பருக்கு (ஒரு பெரிய அரசியல்வாதியின் பெயர்) கிளாஸ்மேட்.. ஆகவே, நீங்க எழுத்தாளர்னா அதுவும் அந்த இலக்கியவாதிக்கு தெரிந்தவர்னா .. கொஞ்சம் care எடுத்துப் பார்ப்பார்..” என்றார். அவர் சொன்ன முதல் விஷயம் என மண்டையில் ஏறவே இல்லை. ஆனால், கடைசி விஷயம் மிகவும் பிடித்துப் போய் விட்டது.
இப்படி சில இலக்கியவாதிகள், அவரது பெயரைச் சொல்லி அடிக்கும் லூட்டிகள் சிலவற்றை இங்கு குறிப்பிடலாம். (ஆனால், கதை ஓட்டம் தடைப்படும்)
காட்சி: 25
அடுத்தநாள், அதிகாலை, கோபி செட்டிபாளையம். நித்தியானந்தம் மருத்துவமனை
கௌதமும் அவர் மனைவியும் வெளியே காத்திருக்கிறார்கள். கூட்டம் நிரம்பி வழிகிறது.
ஒரு 9.00 மணி வாக்கில், அவரது டோக்கன் அழைக்கப்படுகிறது. அவர் அவசரமாக உள்ளே ஓடுகிறார். அவரது மனைவி சாவகாசமாக வருகிறார்.
டாக்டர், நர்ஸ் எழுதிக் கொடுத்த சீட்டை ஆராய்கிறார். “எத்தனை நாளா இருக்கு?” என்று கேள்விக்கு, “இந்த ஒரு மாசமாவே இருக்கு டாக்டர்..” என்று பதிலளிக்கிறார்.
டாக்டர், தலையை அசைத்துவிட்டு வயிற்றைத் தட்டித் தட்டிப் பார்க்கிறார்.
“சரி, வெளியே போயி உக்காருங்க.. எண்டோஸ்கோப்பி பாத்துடலாம்..” என்கிறார் டாக்டர்.
கௌதம், அந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாமல் தடுமாறுகிறார், “டாக்டர்.. நான் இங்கே கவுந்தப்பாடி.. பக்கத்திலே ஒரு வில்லேஜ்..”
“ஓ, அப்பிடியா?”
“நான் ஒரு எழுத்தாளர் டாக்டர் ..” என்றவர், அந்த இலக்கிய – அரசியல் நண்பரின் பெயரைச் சொல்லி, “அவரெல்லாம் எனக்குத் தெரியும் டாக்டர்..” என்கிறார் ஒருவழியாக.
டாக்டர் ஒரு வினாடி ஒன்றும் விளங்காமல் முழித்தவர், “ம்.. அதனாலென்ன..?” என்கிறார். கௌதமின் மனையாள், படீரெனச் சிரித்து விட்டார்.
கௌதம் சுத்தமாக உடைந்து போகிறார். செய்வதறியாது அப்படியே அமர்ர்ந்திருக்கிறார்.
“சரி.. வெளியே வெயிட் பண்ணுங்க..” என்கிறார் டாக்டர்.
கணவன் மனைவி இருவரும் வெளியே வருகிறார்கள். இன்னும் அவரது மனைவியிடமிருந்து சிரிப்பு விலகவில்லை. கோபமும், பரிதாபமும் ஒருங்கே கலந்த கௌதமின் முகத்தை சுக்கல் சுக்கலாக உடைத்து வெறுமையாக்குகிறது அனல் காற்று.அப்பொழுது பக்கத்தில் வந்து உட்கார்ந்து அவரது கைகளை பிடித்துக்கொண்டார் ஒருவர். ஹோவ்! துறையூர் சரவணன்! ‘என் தம்பி, என் வாசகன், என் எழுத்தின் முதல் வாசகன், என் கடவுள்!’
அவனைப் பார்த்ததும் அழுகை வந்து விட்டது. அவன் கௌதமின் கண்ணீரைத் துடைத்து விட்டபடி அணைத்துக் கொண்டான். இப்பொழுது, கௌதமுக்கு ஓராயிரம் யானைகளின் பலம் கூடிவிட்டது. ‘இனி எது வந்தாலும் அவன் பார்த்துக் கொள்வான்’.
எண்டோஸ்கோப்பி எடுத்தார்கள், ஈ சி ஜி எடுத்தார்கள்..இன்னும் என்னென்னவோ.. எல்லாவற்றுக்கும் சரவணன்தான் பணம் கொடுத்தான். மேலும், எதற்கும் “இதை கையில் வைத்திருங்கள்” என்று பணத்தாள்களை கௌதம் கையில் திணித்தான். அதில் எல்லையற்ற அன்புடன், எண்ணற்ற காந்தித் தாத்தாக்கள் சிரித்தார்கள்.
பெட்டில் அட்மிட் ஆகியாச்சு. நல்ல காற்றோட்டம் கொண்ட அறை. அருகில், துறையூர் சரவணன். இருவரும் ஆனந்தமாக இலக்கியம் பற்றிக் கதைக்க ஆரம்பித்தார்கள். கௌதம் தன் மனைவியின் முகத்தைப் பெருமையாகப் பார்த்தார். ஆனால், அவர் இன்னும் கொஞ்சமாக சிரித்துக் கொண்டுதானிருந்தார்.
மாலை, பள்ளி முடிந்து கௌதம் மகன் வீட்டிற்கு வந்து, பையை வைத்து விட்டு, இங்கு வந்து விட்டான்.” ஏஞ்சாமி, ஒருத்தனே .. தனியாத்தான் வந்தியா?”
“ஆமாம்” என்று ஒருவித சோகத்துடன் தலையாட்டினான்.
அவனை அருகில் அழைத்து, தலையைக் கோதினார் கௌதம். சரவணன், எழுந்து வெளியே போனான்.
சிலபல நிமிஷங்களில், அவர் மகன் சமநிலைக்கு வந்தான். அப்பா, “நைன்த்லே ஆப் இயர் எக்ஸாம்லே.. நான் ஸ்கூல் ஃபஸ்டுப்பா..” என்றபடி முக மலர்ச்சியுடன் சொன்னான். கௌதம் அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். அவன் முதுகில் இறங்கிய கண்ணீர்த் துளிகள் அவனை நனைத்திருக்கும்.
“டேய் நீ ஜெயிக்கணும்டா.. நீ ஜெயிக்கறதுக்கென்றே பொறந்தவன்..” என்று வாய்விட்டு அரற்றினார்.
அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவரது மனதில், பல்வேறு எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தன, அலையடித்தெழும் உணர்ச்சியோட்டங்களை சமநிலைப்படுத்தி, ஒரு முடிவுக்கு வந்தார்.
“ஆம், என் மகன் ஓவியன் இல்லை.. அவன் டாக்டர்! ஆம். அவன் டாக்டர்தான்.. நான் அவனை டாக்டராக ஆக்குவேன்..” இந்த எண்ணம் வந்தவுடன் அவருக்குள் உறுமிக் கொண்டிருந்த உணர்ச்சிப் பிரவாகம் ஓய்ந்து சமநிலைக்கு வந்து, நிச்சலனமாக மாறியது.
அவர்கள் இருவருக்கும் தேநீர் வாங்கிக்கொண்டு, அறைக்குள் நுழைந்தான் சரவணன்.
காட்சி : 26
ஒரு வழியாய் 17 – 18 மருத்துவமனைகள் மாறி, அவருக்கு அவரே ஆறுதல் படுத்திக் கொண்டு வீட்டில் படுத்திருந்தார். மேற்கொண்டு மருத்துவ மனைகளுக்குப் போகப் பணமும் இல்லை. மாமனார் வீட்டில் மற்றும் அண்டை வீடுகளில்.. என்று நிறைய கடன் ஆகிவிட்டது. அவர் மனைவி, திட்ட ஆரம்பித்து விட்டாள். “உங்களுக்கு ஒண்ணும் இல்லே.. இப்பிடியே போயிட்டிருந்தா நீங்க பைத்தியம் ஆய்டுவீங்க..”
அந்த வலி ஒரு ஓரமாக அவரது உடலில் இருந்து கொண்டிருந்தது. திடீரென, அது தூக்கத்திலிருந்து எழுந்து விட்டதுபோல கொஞ்சம் வலியெடுக்கும். அவர் உடனே, ஓரிரு மாத்திரைகளை விழுங்குவார். பிறகு அது தூங்கப்போய்விடும். காரமில்லாத சாப்பாடு, கொஞ்சநேரத்துக்கு ஒரு முறை தண்ணீர், வெளியில் எங்கும் போவது கிடையாது.
பிறகு, மெல்ல எழுந்து அப்படியே வெளியே போய்விட்டு வர ஆரம்பித்தார். எங்கு போனாலும், அந்த நேரத்துக்கு சாப்பாட்டுக்கு வீடு வந்து சேர வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அந்த வலியை ஆய்வு செய்ய ஆரம்பித்தார். அது எப்போது வரும், எப்போது தூங்கப் போகும், எப்போது வெறிபிடித்து பேயாட்டம் போடும், அந்தப் பேயாட்டத்தை எப்படி அடக்குவது.. என்றெல்லாம் அத்துப்படியாயிற்று அவருக்கு. இப்போது, அந்த வலி அவரது உடலின் ஒரு பாகமாக மாறிப்போனது.
காட்சி : 27
கௌதமும் புதியதாக அறிமுகமாயிருந்த பழனிச்சாமி என்னும் இலக்கியத் தம்பியும் ஈரோடு போய்க்கொண்டிருந்தார்கள். அங்கு, ஒரு வீதியோரப் புத்தகக் கடையில், பழைய புத்தகங்கள் நிறையக் குவிந்து கிடந்ததைத் தான் பார்த்ததாகவும், எல்லாமே, ஆங்கிலப் புத்தகங்களாக இருந்ததனால் தான் எதையும் வாங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தான் பழனிச்சாமி.
உடனே, அவருக்குள் பெரும் ஆர்வம் தொற்றிக் கொள்ள வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள்.ஈரோடு என்றதும் அவருக்கு பொன் பொன்னுசாமி ஞாபகம் வந்தது. அவரது வீட்டைத் தாண்டித்தான் ஈரோடு போக வேண்டும். சற்றே ஒரு சிறு கலவரமாக இருந்தாலும், புத்தகங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வண்டி விரைந்தோடியது.
ஈரோடு – கோபி ரோட்டுக்குள் நுழைந்ததும், ரோட்டோர வீட்டிலிருந்து எதிர்ப்பட்டார் பழைய நண்பர் முருகானந்தம். கையை நீட்டினார். வண்டி நின்றது. “வாருங்கள் ஒரு தேநீர் குடித்துக்கொண்டே பேசலாம்..” என்றார்.
தேநீர் சூடாக தொண்டைக்குள் இறங்கும்போது, “நம்ம பொன்னுசாமியைப் பற்றி தெரியுமா?” என்றார். கௌதம் சட்டெனத் தலையை உயர்த்திப் பார்த்தார்.
“சூசைட் பண்ணிட்டாரு..” ஆழ்ந்த அமைதி அந்த இடத்தை சூன்யமாக்கியது. கௌதமின் எண்ண ஓட்டத்துக்குள் பளீர் பளீரென மின்னல்கள் வெட்டின. அதன் பிறகு தேநீரை அப்படியே வைத்து விட்டார்..
“சும்மா வெளையாட்டுப் போல அட்டன் பண்ணியிருக்காரு..”
‘அந்த விஷயம்’ – மரணம் – எப்படி இருக்கும் என்ற தேடலில் இப்படி நிகழ்ந்திருக்குமோ? என்று கௌதமுக்குள் எண்ணங்கள் அலையடித்தன
“ஒரு மாசத்துக்கு மேலிருக்கும்..”
அவர்கள் எதுவும் பேசாமல் அங்கிருந்து எழுந்தனர். கௌதம் வண்டியை இப்படியே வீட்டுக்குத் திருப்பு..என்று பழனிச்சாமியிடம் சொன்னார்.
காட்சி : 28
கௌதம் தன் மகன் படிக்கும் பள்ளிக்குப் போய் அவனது டி ஸி யை வாங்கிக் கொண்டு, தங்கள் ஊருக்கு அருகாமையில் இருந்த ஐடியல் பள்ளியில் கொண்டுபோய்ச் சேர்த்தார். (பிளஸ் 1 க்கே ஐம்பதாயிரம் டொனேஷன்) அந்தப் பள்ளியைப் பற்றித் தெரியாதவர்களுக்கு, டாக்டர் படிப்புக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 924 சீட்டுகள்தான். (இந்தக் கணக்கு, அந்தக் கட்டத்தில்தான். இப்பொழுது அதிகமாகி இருக்கும்) ஒவ்வொரு வருடமும், 600 – 700 சீட்டுக்களை அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களே கைப்பற்றுவார்கள். அவவ்ளவு பிரசித்தம் பெற்ற பள்ளி அது)
அவனை பள்ளி + ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு, வீட்டிற்கு வந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். எதிரில், புத்தக ஸ்டாண்டில் தனது மகன் வரைந்த ஓவியங்களின் ஃபைல் தென்பட்டது. அதை உருவி எடுத்தார். பத்திரிகைகளில் வெளிவந்த வான்கா, பிக்காஸோ, டாலி .. இன்னபிற படங்களை அழகாக வெட்டி ஒட்டியிருந்தான். அடுத்தடுத்த பக்கங்களில், அந்தப் பாதிப்பில், க்ரேயானில் கோடுகளைத் தீற்றியிருந்தான்.
ஒரு கணம், நெகிழ்ந்து போனார் கௌதம். மறுகணம், ஒரு பெரும் வைராக்கியம் அவருக்குள் எழுந்து எல்லாவற்றையும் அழித்தது. ஃபைலை வீசி விட்டு, அருகிலிருந்த லாங்க் சைஸ் நோட்டை எடுத்தார். வெறுமையாக படபடத்தன பக்கங்கள். அருகிலிருந்த கிரேயானை (பென்சில்) எடுத்து, தனது மகன் பெயரின் முதல் ஆங்கில எழுத்தான A என்ற எழுத்தின் கோடுகளை இழுத்தார். டாக்டர் மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்களைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் சர்வதேச சிம்பலை (Rx என்னும் இரண்டு எழுத்துக்களை ஒரே எழுத்தாக இணைத்து R எழுத்தின் வளைந்த காலை மேலும் கொஞ்சம் கீழே இழுத்துவிட்டபடி இருக்கும்) கொஞ்சம் மாடிஃபை செய்தார். அதாவது, A எழுத்தில் x ஐ இணைத்து, A எழுத்தின் வளைந்த காலை மேலும் கொஞ்சம் கீழே இழுத்துவிட்டு, ஒரு புதிய மருத்துவ சிம்பலை உருவாக்கினார்.
இப்பொழுது அவருக்கு வலி முற்றாகக் குறைந்திருந்தது.
************
இப்பொழுது, இந்தத் திரைப் படத்திற்கு (திரைக்கதைக்கு) வரக்கூடிய விமர்சனங்களை ஒரு பார்வை பார்த்து விடலாம்.
சிகப்புச் சட்டை சேரலாதன் : படம் சுமாராக இருக்கிறது. முதல் பாதிவரை கதாநாயகனாக இருக்கும் பொன் பொன்னுசாமியை, பின்பாதியில் பதவி இறக்கம் செய்து, துணைக் கதாநாயகனாக இருப்பவரை கதாநாயகனாக மாற்றி இருப்பது புதிய முயற்சி என்று இயக்குனர் செய்திருக்கிறார். அங்கிருந்துதான் கதையின் வீழ்ச்சசியே தோன்றுகிறது. அந்த பொன் பொன்னுசாமி, அவரை, மருத்துவமனையில் சந்தித்து மொழிபெயர்ப்பைக் கொடுத்தபோதே படம் முடிவடைந்து விட்டது. அதற்கு மேல் ஜவ்வாக இழுத்திருக்கிறார் இயக்குனர்.
எழுத்தாளர் முனிராஜ் நரேந்திரன் : படம் ஒரு பெரிய வன்முறையை முன் வைக்கிறது. இதில், எழுத்தாளராக வருபவர், லௌகீகவாதியாக இருக்கிறார். லௌகீகவாதியாக சுட்டப்படுபவர், மிகப்பெரும் எழுத்தாளராக கலைஞனாக இருக்கிறார். எவ்வளவு பெரிய தலை கீழ் பார்வை! வண்ணத்துப் பூச்சியின் பின்னால் போகும் ஒருவனை, நபக்கோவின் மீது விமர்சனம் வைக்கும் ஒருவனை, பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் கருத்தை முன்வைத்து charactor assasin செய்துவிடுகிறார் இயக்குனர். காரணம், இயக்குனரும் நடித்திருக்கிறார். ஆகவே, தனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தில், ஒரு மகத்தான கலைஞனை கொலை செய்கிறார். ஜான் கேஜ் – ன் 4.33 என்ற இசை வடிவத்திற்கும், மனித வாழ்நிலைக்கும் உள்ள தூரத்தை அளக்கும் கலைஞனை பொதுப்புத்தியில் உறைய வைத்து கொன்றிருக்கிறார் என்றால் இந்தப்படத்தின் இயக்குனர் எப்படி ஒரு கலைஞனாக இருக்க முடியும்? பொன்னுசாமியின் புத்தகங்கள்தான் பழைய புத்தக்கடையில் இருக்கின்றன அவரது ஞாபகார்த்தமே இருக்கக்கூடாது என்ற மனோநிலையில் புத்தகங்களை வாங்காமல், திரும்பும் கௌதம் வீட்டிற்கு மட்டும் திரும்பவில்லை. கலைஞன் என்னும் வாழ்வியலிலிருந்து லௌகீக வாழ்க்கைக்கே திரும்பிவிடும் குறியீடுதான் அது.
எழுத்தாளர் ஆகாஷ் மனோகரன் : இந்தப் படத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தின் தன்மைகள் மேலோட்டமாகப் பார்க்கப்படும்போது, சுவாரஷ்யமாகத் தோன்றலாம். ஆனால், அதை கட்டுடைத்துப் பார்க்கும்போது மிகவும் அருவருப்பாக இருக்கிறது. இதில் வரும் இலக்கிய வாசகன் பெரும் குடியனாக காட்டப்படுகிறான். ஆனால், எழுத்தாளன் மிகவும் ஒழுக்க சீலனாக காட்டப்படுகிறான். அதற்கு, வெகுஜன சினிமாவில் வரும் ஒரு நடிகரை முன்வைத்து அந்த பிம்பத்தை தன் பிம்பமாக மாற்றப் படுகிறான். புனிதம் / அ புனிதம் மற்றும் ஒழுக்கம் / அ ஒழுக்கம் என்கிற இருவேறு பிம்பங்கள் கட்டமைக்கப் படுகின்றன. இந்த பிம்பங்கள் பாப்புலர் கல்ச்சர் தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதால், திரைப்படம் முன்வைக்கும் சீரியஸ் தளத்தில் பொருந்தவில்லை. இந்த இயக்குனருக்கு, பொதுப்புத்தியில் இருக்கும் எம்ஜியாரின், ‘குடித்தல் தவறானது, பெண்களை சகோதரிகளாகப் பார்க்கவேண்டும் என்ற போலியான பிம்பத்தை’ ஆராதிக்கிறார். இவர்,தன் மகனை ஓவியனாக்க வேண்டும் என்று வான்கோவை ஆதர்சமாகச் சொல்கிறார். ஆனால், வான்கோவைப் பற்றி இவருக்கு எதுவும் தெரியவில்லை போலிருக்கிறது. வான்கோ பெரும் குடிகாரன், மதுபான விடுதிகளிலும், வேசிகளின் நட்புகளிலுமே மூழ்கிக் கிடந்தவன். தன் காதை அறுத்து தான் காதலித்த ஒரு வேசிக்குத் தந்தவன். இந்தப் படம் பிம்பப் போலிகளைக் கொண்டாடும் தன்மை கொண்டது.
பெண்ணிய விமர்சகர் அமிதா கஸ்தூரி : இந்தப் படம் முழுக்க male chauvinism – த்தையே, ஒரு ஆண்மைய வாதத்தையே நிலை நிறுத்துகிறது. இந்த இயக்குனருக்கு பெண்கள் வெறும் போகப்பொருட்கள், எதுவும் தெரியாத மக்குகள் என்றுதான் காட்சிப்படுத்தியிருக்கிறார். மருத்துவமனை வரவேற்பறையில் இருக்கும் வரவேற்பாளினிகளை, மிகை அலங்கார பொம்மைகளாக சித்தரிக்கிறார். அவர்களுக்கு எதுவும் தெரியாதாம்.. இவர் எழுத்தாளர் (ரைட்டர்) என்பதை போலீஸ் என்றுதான் புரிந்து கொள்வார்களாம். இவரது பெயரை தப்பும் தவறுமாகத்தான் எழுதுவார்களாம். ஏன் எழுத்தாளன் என்றால் பெரிய கொம்பு முளைத்தவனோ? இதுதான் லிங்க மைய வாதம். மேலும், இவரது மனைவியின் பெயரைக்கூட படம் முழுக்க குறிப்பிடுவதில்லை என்பது எவ்வளவு பெரிய ஆணாதிக்க வாதம். கிராமத்துப் பெண்மணியாம். அதுவரை எங்கும் அழைத்துக்கொண்டு போனதில்லையாம்.. அவருக்கு எதுவும் தெரியாதாம்.. என்ன ஒரு பெண்ணடிமைத்தனம்.. இந்தப் படம் முழுக்க அவர் எதுவும் பேசுவதில்லை. ஒரு குரலற்ற பெண்ணாக காட்சிப்படுத்தப்படுகிறார். ஆனால், அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி என்பதை ஒரு காட்சி அடையாளம் காட்டி விடுகிறது,
டாக்டரும் அவரும் பேசும் காட்சியில், “நான் ஒரு எழுத்தாளர் டாக்டர் ..” என்றவர், அந்த இலக்கிய – அரசியல் நண்பரின் பெயரைச் சொல்லி, “அவரெல்லாம் எனக்குத் தெரியும் டாக்டர்..” என்கிறார்.
அதற்கு அந்த டாக்டர் அலட்சியமாக, “ம்.. அதனாலென்ன..?” என்கிறார். அப்பொழுது, அவர் மனைவி, படீரெனச் சிரிக்கிறாள். ஆக, ஒரு பெரிய விஷயத்தை ஜோக்காக மாற்றி, அந்தக் குரலற்ற குரல் வெடிச் சிரிப்பாக அரங்கம் முழுவதிலும் ஒலிக்கிறது. ஐ லைக் அந்தப் பெண்மணி!
தினேஷ் நீலவர்ணன் : படம் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. காரணம், இதில் வரும் ஒரு ஒடுக்கப்பட்ட எளிய சமூகத்தைச் சார்ந்த கார் டிரைவர் கதாபாத்திரத்தின் தன்மை. பொன்னுசாமி என்கிற உயர் சாதி இந்து, மொடாக்குடியன். ஆனால், அவர் குடிப்பது கலை. அவர் கலைஞர்! ஆனால், ஒரு எளிய வர்க்கத்தைச் சேர்ந்த பாமரரான டிரைவர் குடிப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானதாம். எவ்வளவு பெரிய பித்தலாட்டம் இது! அதுவும், அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போகும்போது, அவர் குடிக்கப்போவதாக காட்சி அமைத்திருப்பது படத்தில் வேண்டுமென்றே சேர்க்கப்பட்ட இடைச் செருகல்.
எழுத்தாளர், வழக்கறிஞர் அருண் புகழேந்தி : இந்தப் படம், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறது. நான் படத்திற்குள் போகவில்லை. இதில் சில இடங்களில், சட்டமீறல் பிரச்சினைகள் இருக்கின்றன. உதாரணமாக, XXXXX என்கிற வார்த்தையை எழுதவோ, பேசவோ கூடாது என்று (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989- ல் அமலாகியிருக்கிறது. சமீபத்தில் இந்தச் சொல் குறித்து நடந்த விவாதங்களை நாடறியும்.
மேலும், இதில் வரும் மது அருந்தும் பாத்திரத்தை, குடிநோயாளி என்று சித்தரிக்கிறார். அதுவும் சட்டப்படி தவறான பிரயோகம். ஏனெனில், குடிப்பது ஒரு நோயல்ல. அவ்வப்போது குடிப்பவரை அல்லது, தொடர்ச்சியாகக் பெருங்குடி குடிப்பவரையே கூட, குடி நோயாளி என்று சொல்வது தவறு.
செந்தமிழ் பரிதி : இந்தப்படத்தில், எதற்கெடுத்தாலும் ஆங்கில வார்த்தைகளையே பிரயோகப்படுத்தியிருக்கிறார் இயக்குனர், கணினி என்று தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் தமிழ்ச் சொல்லை கம்ப்யூட்டர் என்றே அழைக்கிறார். படத்தில் முக்கால்வாசி வரும் டாக்டர் என்ற பெயரை ஒரு இடத்தில் கூட மருத்துவர் என்று பயன்படுத்தவில்லை. நர்ஸ், ட்ரீட்மெண்ட், பஸ், ஸ்கூல், எக்ஸாம், லாங் சைஸ் அன்ரூல்டு நோட், டிரான்ஸ்லேஸன்.. இப்படி, ஒரு நூறு வார்த்தைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.. ஒரு இடத்தில், வண்ணக்கட்டி என்னும் வண்ண எழுதுகோலை “கிரேயான்” என்றே பயன்படுத்துகிறார். அதற்கு விளக்கம் சொல்லும்போது பென்சில் என்று இன்னொரு ஆங்கிலச் சொல்லையே சொல்கிறாரே தவிர தமிழ்ச் சொல்லை உபயோகிப்பதில்லை. ஆனால், வடமொழிச் சொற்களை மானாவாரியாக உபயோகிக்கிறார். அவர் நடத்துகிற ஏட்டின் பெயரையே பாருங்கள் “உன்னதம்!”
அதன்பிறகு, இன்னொரு முக்கியமான விடயம், அதிகக் குடிப்பழக்கம் கொண்ட கதாநாயகனின் பெயர் பொன் பொன்னுசாமி. எவ்வளவு அழகான தமிழ்ப்பெயரை யாருக்கு வைக்கிறார் பாருங்கள். இவர் ஒரு தெலுங்கராகத்தான் இருக்க வேண்டும். நான் ஏதோ கோபத்தில் கூறுகிறேன் என்று நினைக்காதீர்கள். இவர், தனது மனைவியைப் பற்றிச் சொல்லும் ஒரு இடத்தில், “மனையாள்” என்கிறார். “மனையாள்” “ஆள்” “ஆளு” என்பதற்கு தெலுங்கில் மனைவி என்று அர்த்தம். நம்முடைய சங்ககால இலக்கியங்களில் “இல்லக் கிழத்தி” என்று மனைவியை குறிப்பிடும் அழகான சொல் இருக்கிறது. அதையெல்லாம் பயன்படுத்தியிருக்கலாம்.
இன்னொன்று, இவருடைய மருத்துவச் செலவுக்கு உதவுபவர் ஒரு தமிழச்சி, எங்கள் முப்பாட்டன் முருகனின் பெயர் கொண்ட தமிழ் மூதாய்!
திரைப்பட விமர்சகர் சிங்கார வேலன் : பொன்னுசாமி கத்தியை எடுத்துக் குத்தும் போது, “சும்மா குத்திப் பாத்தேன்.. கத்தியினுடைய கூர்மைக்கும், அவனுடைய வயிற்றுக்கும் எவ்வளவு தூரம் இருக்குதுன்னு.. பாக்கலாம்னு தோணிச்சு..” என்று சொல்லும் அவரது வார்த்தைகள் பெரும் தத்துவத் தேடல்களை எனக்குள் ஏற்படுத்தின.
அப்பொழுது, ஆல்பர்ட் காம்யு எழுதிய “அந்நியன்” நாவல்தான் ஞாபகம் வந்தது. அதில் வரும் கதாநாயகன் மெர்சோ, கடற்கரையில், ஒரு அல்ஜீரியனை சுட்டுக்கொல்லும்போது, அதற்கு அவர் கூறும் காரணம், “எல்லாவற்றுக்கும் காரணம் சூரியன்தான். ஒரே வெயிலாக இருந்தது. அதனால்தான் சுட்டேன்..” என்கிறார்.
பொன்னுசாமியின் வாக்குமூலத்தைப் படிக்கும்போது, இந்தக் காட்சி எனக்குள் தோன்றி இருவரையும் அழகாக இணைத்தது.
***

சிறப்பான முயற்சி. வாழ்த்துகள் தோழர்.
அற்புதம். அருமை. இப்படி ஒரு சிறுகதையை இதுவரை வாசித்தது இல்லை. அதுவும் குஸ்டாவ் மஹலெரின் இசைக்கோர்வையை கேட்டவாறு (YouTubeல்) எட்வர்ட் மன்ச்சின் மனச்சோர்வான இளைஞனின் ஓவியத்தையும் இணைத்து, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து அமர்ந்திருக்கும் கௌதமின் சித்திரத்தின் தன்மையும் இணையும் வெளி நிகழ் தளத்தில் இருந்து மீபுனைவு வெளிக்கு கொண்டு சென்று அற்புதமான வாசிப்பனுபவம் அளிக்கிறது.