- சாம் ஷேக்ஸ்
- தமிழில் : சொ.பிரபாகரன்
இலக்கியச் சலிப்பு என்பது இப்போது எங்கும் ஒரு சகஜமாகி, அது தனக்கே உரித்தான அலுப்பை உருவாக்கிப் பரப்பிக் கொண்டிருக்கிறது. ஜான் பார்த்தின் மிகவும் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்ட கட்டுரையான “தீர்ந்து போனதன் இலக்கியம்” (The Literature of Exhaustion) கட்டுரையில் கூட இதைக் காணலாம்; ஜேடி ஸ்மித்தின் ஒப்புதல் வாக்குமூலமான “நாவல் – குமட்டல்” (novel – nausea) என்ற கட்டுரையி்லும் இப்போக்கைக் காணலாம்; சோர்வு இல்லாது சுயதம்பட்டம் அடித்துக் கொண்டு திரியும் டேவிட் ஷீல்டின், வழக்கம் போன்ற வெட்டி ஒட்டும் அறிக்கையான ‘யதார்த்தத்தின் பசி’ யிலும் (Reality Hunger) இதைத் தெளிவாகக் காணலாம்; யதார்த்தத்தின் பசியில், டேவிட், “கண்டு பிடிக்கப்பட்ட கதைக் கருக்களினாலும், கண்டுப்பிடிக்கப்பட்ட பாத்திரப் படைப்புகளினாலும்”, தான் பெரிதும் சலிப்பு அடைந்துள்ளதாய் ரொம்பவும் நொந்து கொள்கிறார். ஜே எம் கூட்ஸி, இப்புத்தகத்தைச் சுட்டிக்காட்டி, சிறந்த கதைக்கருக்களாாலும் சிறந்த பாத்திரப் படைப்புகளாலும் சிறந்த களன்களினாலும் அமைக்கப்பட்ட சிறந்த நாவல்கள் தன்னைப் பெரிதும் இம்சைப் படுத்துகின்றன என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். London Review of Books இதழின் மதிப்புரையில், நார்மன் ரஷ்சின் புதிய நாவலுக்குச் சிறப்பான மதிப்புரை எழுதியுள்ள பெஞ்சமின் குன்கெல் என்பவர் தனது மதிப்புரையின் இறுதிப் பகுதியில், தன்னெழுச்சியாய் “நாவல் செத்து விட்டது” என்று குறிப்பிடுகிறார். இந்த பெஞ்சமினின் கடைசி நாள் தீர்ப்பு, நன்கு பகுத்தாய்ந்த விவாதமாய் இருப்பதற்குப் பதிலாக, ஏதோ உணர்ச்சி வேகத்தில் எதிர்வினை ஆற்றியது போல் உள்ளது.
நாவல் ஆசிரியரும் விமர்சகருமான டிம் பார்க்ஸ் என்பவர், தன் அன்பார்ந்த குரல் மூலம் எழுப்பும் அதிருப்தி அதிமுக்கியமானது. New York Review of Books இதழின் வலைப்பதிவில், எழுத்துகளின் நிலை பற்றி இவர் எழுப்பும் முரண்பாடான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே உள்ளன. “மரபான நாவல்கள்” குறித்து, தனது அதிருப்தியை தனது கடைசி தவணை எழுத்தில், (அதைத் தொடர்ந்து மறுநாள் வெளியான கட்டுரையில் மேலும் விவரித்து எழுதி உள்ளார்) மிகவும் நேர்மையாகவும், எரிச்சல் ஊட்டும் வகையிலும், தனது பைத்தியக்காரத்தனமான தவறான கருத்துகளுடன் கலந்து வெளியிட்டு வருகிறார்.
பார்க்ஸிற்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியின் விஸ்தாரமும் ஆழமும் அச்சமூட்டுவதாக உள்ளது. நாவல் எழுத்து, அதிலும் குறிப்பாக யார்த்த நாவல் என்பது ‘எதிர்பார்த்த வடிவம்’ என்ற எலிப்பொறிக்குள் சிக்கிக் கொள்கிறது என்று அவர் கருதுகிறார். தற்போது வரும் (யதார்த்த) புத்தகங்களில், அடிப்படைப் பண்புகளான “குழப்பம், வியக்கத்தகு சிக்கல், இரக்கம், புத்திசாலித்தனமான சோகம் மற்றும் பொதுவாக பொறுத்துக்கொள்ள கூடிய கஷ்டங்கள் அல்லது அழகுமயமான உன்னதமான கஷ்டங்கள்” போன்றவைகள், முறையாக்கப் படுவதுடன், பொறுத்தமற்ற வகையில் செயற்கையாக புகுத்தப்படுகிறது என பார்க்ஸ் கருதுகிறார். “தவிர்க்கமுடியாத ஏமாற்றத்தைத் தொடர்ந்து வரும், போற்றத்தக்க (அளவுக்கு அதிகமாகப் போற்றப்படுகிறது என நான் சந்தேகப்பட்டாலும்) முதிர்ச்சியான ஞானம்” என்ற வழக்கமான பயணப் பாதையிலேயே இந்த நாவல்கள் செல்கின்றன என்பதுடன், அப்படிச் செல்வது மிகவும் மோசமானது என்று அவர் கருதுகிறார். இப்போக்கு, உலகத்தைப் பற்றிய பன்முகமற்ற தட்டையான ஒற்றைப் புரிதலை ஏற்படுத்தி, அதை வாசகர்கள் மேல் திணிப்பது என்பது அடக்குமுறையானது மட்டுமல்ல, பெரும் தீங்கு வி்ழைவிக்க கூடியதும் ஆகும் என்றும் பார்க்ஸ் கருதுகிறார். இக்கலைப் படைப்புகள் மயக்கத்தை தருவதுடன், “அழிவைத் தரும் பண்பாட்டு முறைகளையும்” தன்னுள் தக்க வைத்துள்ளது என்று பார்க்ஸ் தானே தெளிவாக உணர்ந்து வைத்துள்ளார். இம்மாதிரியான படைப்புகள், “துயரங்களை வி்வரிப்பதிலும் உணர்வதிலுமுள்ள மனித திறன் கண்டு திருப்தியடைந்து, இத்துயரங்களில் இருந்து விடுபட வேறு வழிகளை கண்டடைவது முக்கியமற்றது,” என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது என பார்க்ஸ் பெரிதும் வருந்துகிறார்.
டயரிக் குறிப்பு போல் இருக்கும் அவரது கட்டுரை, டயரிக் குறிப்பு வடிவத்தில் இருப்பதினாலேயே மிகவும் சுவாரசியமாக உள்ளது. இக்கட்டுரையின் காணப்படும் புலம்பல்களில், சில கேவலமான தனிப்பட்ட தன்மைகள் உள்ளன. பார்க்ஸ் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நாவல் வடிவ ஞானத்தின் மீதான நம்பிக்கையின்மை, இப்புலம்பல்களின் மூலம் தெளிவாக அம்பலமாகிறது. இலக்கியத்தின் மேல் அர்ப்பணி்ப்புடன் கூடிய வாழ்க்கையின் உள்ளுரை என்பதே, வாழ்க்கைக்கு அது கொடுக்கும் நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை எங்கிருந்து வருகிறது என்று நமக்கு ஒருவேளை தெரியாது போனாலும், அவைகள் பல நேரங்களில், இலக்கியம் காட்டும் அனுபத்தின் மூலமும், முதிர்ச்சியின் மூலமும், நம்மை வலுப்படுத்துகிறது. ஆனால் ஞானத்தின் ஆறுதல் நமக்கு வராமல் போனால்தான் என்ன?
பார்க்ஸ் தனது முன்னாள் குரு ஒருவரைச் சம்பந்தப்படுத்தி பேசுகிறார். அந்த குரு தற்போது ஓய்வுபெற்று, சக்கரநாற்காலியில் முடங்கிக் கொண்டு, ஒருகாலத்தில் அவருக்குப் பிடித்த பிட்ஜெரால்ட், ஹெமிங்வே, எலிஸபெத் போவன், ஹென்றி கிரீன் மற்றும் அது போன்ற பலரது நாவல்கள், தனக்கு தற்போது வெற்று ஜாலங்களாகத் தோன்றுவதாகப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். சில யதார்த்த வாதப் படைப்புகளில் ஒரு பொய் உள்ளுறைந்து இருப்பதாகத் தோன்றலாம். யதார்த்தம் உங்களுக்கு கடைசியாக எதைத் தர வேண்டுமோ, அதை எதி்ர்கொள்வதற்கு உங்களைத் தயார் செய்யும் பணியில், அந்த இலக்கியம் தோல்வி அடைந்திருக்கலாம். அதற்காக ஒரு எழுத்தாளராக இருந்து கொண்டு, வருகிற அனைத்துப் புத்தகங்களிலும் பொய்தான் உள்ளது என்று தாங்க முடியாத அளவுக்குத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது, பயனற்றது என்பதை உணர வேண்டாமா?
பார்க்ஸின் கட்டுரை ஒரு நினைவுக்குறிப்பு பகுதியாக மட்டுமே இருந்திருந்தால், அதை மறுக்க வேண்டிய எந்த அவசியமும் ஏற்பட்டிருக்காது. ஆனால் அவர் ஒரு விமர்சகராகவும் உள்ளார். அவர் தனது குளறுபடியான பார்வையை இலக்கியத்தின் மீதான தனது இறுதிமுடிவாக முன் வைக்கிறார். தனது சொந்த வெறுப்பை வெளி்வரும் புத்தகங்களின் மேல் ஏற்றிச் சொல்லும் ஒருவரது பண்பை முழுவதுமாக மந்திர ஜாலத்தால் கூட ஒழிக்க முடியாது என்றாலும், அப்படிச் செய்வது அளவுக்கு அதிகமாகத் தொடரும் பட்சத்தில், அதற்கு சவால் விட்டு எதிர்கொள்வது அவசியமாகிறது.
என்னுடைய கண்களுக்குத் தவறு எனத் தென்படுவது, பெருமைக்குரிய நாவல்களை பாரம்பரிய நாவல் மற்றும் பாரம்பரியமற்ற நாவல் என்று பிரிக்கும் அவரது குளறுபடி. சாமுவேல் பெக்கட், தாமஸ் பெர்ன்ஹார்ட், லிடியா டேவிஸ் மற்றும் பின்நவீனத்துவ சாகசங்களில் பங்கெடுக்கும் முகாம்களில் இருக்கும் பிற எழுத்தாளர்கள் அனைவருக்கும், பார்க்ஸ் நன்றாகவே இடம் கொடுக்கிறார்; இருந்தாலும் பாராம்பரியம் மற்றும் பாரம்பரியமற்ற நாவல்கள் என்று பிரிப்பதில் அவர் ரொம்ப மேலோட்டமாக ஆழமில்லாமல் உள்ளார். ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது, அவர் பாரம்பரியம் என்றாலே தரக்குறைவானது என்றும், பாரம்பரியம் நேரடியாகவும் சுயம் இல்லாமலும் மற்றதிலிருந்து தருவிக்கப்பட்டது என்றும், அது மிகவும் சாதாரண சிந்தனையில் இருந்து பிறந்தது என்றும் கருதுவதுடன், இதற்கான மாற்றுதான் புத்துணர்ச்சியையும், விடுதலையையும் தருவதுடன், ‘வார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதில் ஒரு வழியையும் காட்டுவதாகவும்’ இருக்கும் என்று கருதுகிறார்.
பார்க்ஸ் பாராம்பரியத்தின் கொடுங்கோன்மையை சந்திக்கு இழுக்கும் போது, ஏதோ சுமாரான நாவல்களை மட்டும் பேசி விட்டு வெறுமனே உட்கார்ந்து விடுவதில்லை. யாராவது வழக்கமான பாரம்பரிய வடிவங்களின் அம்சங்களைப் பயன்படுத்தினால், உடனே அவர்கள் தங்களது சிந்தனையில்லா பழக்கவழக்கங்களாலும் அல்லது விருப்பமில்லா தேவைகளினாலும் செயற்படுகிறார்கள் என்று பார்க்ஸ் நிந்திக்கத் துவங்கி விடுகிறார்.
ஆனால் இவரது இப்போக்கு உண்மைக்கு மாறானது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் என்று சொல்ல முடியாமல் போனாலும், பல எழுத்தாளர்கள், கதைக்கரு, பாத்திரப் படைப்பு, உணர்ச்சிப் பிரவாகம் போன்றவைகள் குறைபாடுடைய கதையாடலெனக் கருதாமல், தங்கள் மனதில் தலைதூக்கியுள்ள முக்கிய கருத்துகளைச் சொல்லக் கிடைத்த வலுவான இயக்கரீதியான கருவி என்றே கருதுகின்றனர். கதை சொல்லும் கலை ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது. எது பழையது என்றாலும் அது கண்டிப்பாக தேங்கிப் போனதாகதான் இருக்க முடியும் என்று கருதுவது, சீரற்ற உறுதியற்ற ஆய்வுப்பார்வை என்றுதான் சொல்ல வேண்டும். திறன் என்பதுதான் பாரம்பரியமாக மாறும் என்பதை ஏற்றுக்கொள்வதை பார்க்ஸ் கட்டுரை காணத் தவறுகிறது. பெரும் திறன்பெற்ற எழுத்தாளர்கள் பாரம்பரிய பழக்கமான முறைகளைப் பயன்படுத்தி, வெளிபடையாக அமைப்பியல் ரீதியான புதுமைகளைக் கொண்ட படைப்புக்கு நிகராக புதுமையாகவும் உயிர்துடிப்புடனும் உருவாக்கி உள்ளனர். இரண்டு விதமான படைப்பு முறைகளிலும் நோக்கம் தெளிவாக உள்ளது: வடிவம் என்பது கலைத்துறை பார்வையை வெளிக்கொணர்வதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
பார்க்ஸின் கட்டுரையைப் படித்த அதே வாரம், நான் புதிதாகப் பதிப்பிக்கப்பட்டஇரண்டு நாவல்களைப் படித்தேன். அந்நாவல்கள் பார்க்ஸ் மறுப்பது போல், மாறுதலை வலியுறுத்தும் பாரம்பரியம் என்ற கற்பனை ஒளிக்கற்றையாக இராமல், அவரது எண்ணங்களோடு ஏதோ ஒருமாதிரி கச்சிதமாக இல்லா விடினும், பொருந்துகிறது.
டேனியல் அலர்கானின் “நாம் இரவின் வட்டத்திற்குள் நடக்கிறோம்” (At Night We Walk in Circles) என்ற நாவல், தென்அமெரிக்காவிலுள்ள அடிக்கடி இடம்பெயரும் நாடகக் குழுவைப் பற்றிய நாவல். அதில் பார்க்ஸ் நிராகரிக்கும் அத்தனையும் உள்ளது. “இந்த அமெரிக்கன் வாழ்க்கை” (This American Life) போன்ற மேடை நிகழ்வைப் போன்ற வானொலி வடிவத்தை, அரங்கமுறை வடிவத்தைத்தான் தனது கதைச்சொல்லும் செயற்பாட்டுக்கு இந்நாவல் பயன்படுத்தியுள்ளது. அலர்கானின் முக்கிய பாத்திரங்கள் அனைவரும், நடிக நடிகைகளும் நாடக எழுத்தாளர்களும்தான்; அவர் அந்த வடிவத்தைப் பயன்படுத்தும் போது, கதை நிஜ வாழ்க்கை அனுபவத்தை வெளியிடும்போது, அதன் மெலோடிராமிக் அதிரடி மாறுதலையும், களன் முரண்நகையையும், உச்சக்கட்டக் குவியத்தையும், அப்பாவித்தனமான கஷ்டம் குறித்த சோகமான கீழ்நோக்கிய வளைவையும் கொண்டு வருகிறது. இந்நாவலைக் குறித்து எனக்கேயான விமர்சனங்கள் இருந்தாலும், (கதையின் பாதி சாக்கரின் கலந்த தேனாக இனித்தாலும்) புத்தகத்தின் பெரும் பகுதி நாடகத்தொழில் சார்ந்த உயிரோட்டம்தான்; இருந்தாலும் நாவல் மிகவும் சிறப்பானதாகவும் மனதைத் தொடுவதாகவும் அமைந்தது.
லாஸ்லோ கிராஸ்னாஹோர்கையின் “சீயோபோ, அங்கே கீழே” (Seiobo There Below) என்ற நாவல், இந்த மாதிரியான பாரம்பரியான கதைக்கருவுடன் எந்த தொடர்பும் இல்லாத ஒன்றுதான். இந்தக் கலாபூர்வமான நாவல், உள்ளடக்கம் மற்றும் புவியியல்ரீதியாக தனித்துவமானதாக இருந்தாலும், அவற்றை புனிதத்துடன் இணைத்துக்கொள்ளும் நோக்கங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் பூஜி்க்கும் அந்தப் பொருளை (அப்பொருள் சிறந்த கலைப் பொருளாகவும் இருக்கலாம் அல்லது மத அடையாளமாகவும் இருக்கலாம்) சுற்றியே வலம் வந்து கொண்டிருக்கிறது. அத்தியாயங்கள் கூட, ஃபிபோனசிய வரிசைப்படி எண்ணமிடப்பட்டுள்ளது. இத்தாலிய கணிதவியலாளர் Fibonacci உருவாக்கிய பிபோனிசிய வரிசை என்பது பண்டைய சமஸ்கிருத நூல்களில் தன வேர்களைக் கொண்டிருக்கும் ஒன்று; mathematical concept of the golden spiral என்னும் கணிதக் கோட்பாட்டுடன் தொடர்பு உடையது. கிராஸ்னாஹோர்கையி்ன் வார்த்தைகள் முடிவு இல்லாமல் சுழலுகின்ற சுழலைப் போல, சில சமயங்கள் பல பக்கங்களுக்கு நீண்டு கொண்டே செல்கிறது; அந்த வார்த்தைகளைச் சுழற்றி அடிக்கும் அவசரத்துடன் மறுபடைப்புச் செய்து பிரமிப்புடனும் பயத்துடனும் திரும்பிப் பார்க்கும் போது, ஏதோ வேறு உலகம் ஒன்றை எதிர்கொண்டது போல்தான் உள்ளது.
“சீயோபோ அங்கே கீழே” (Seiobo There Below) என்ற இந்த நாவல் பார்க்ஸ் விரும்பும் ஒரு கதையாடல் வடிவத்தை உண்மையில் வெளிப்படுத்துகிறது; அந்த வடிவம் யூத-கிறித்துவ வடிவத்தைக் காட்டிலும், மிக அதிகமாக புத்தக வடிவத்துடன் உள்ளது. அவ்வடிவம் வாழும் அனுபவத்தை தொடக்கம் முதல் முடிவு வரை தொடர்ச்சி்யாக முன்னேறிக் கொண்டிருக்கும் ஒன்றாகக் காட்டவில்லை; மாறாக நமது கவனத்தை ஒரு தருணத்துக்குள் கவர்ந்து இழுத்து, அந்த நிகழ்கால அனுபவத்தைப் பருகுவதைத்தான் மையப்படுத்துகி்றது. ஒரு புத்தகத்தை விட மற்றது சிறந்துதான் என்று விமர்சிப்பது விமர்சகனது உரிமைதான் என்றாலும், இங்கு அது பிரசினை இல்லை. (பார்க்ஸ் பெரும் திகைப்புடன் சாத்தியங்களை விளக்குகிறார் என்றாலும், உண்மை என்னவென்றால், பல தீவி்ரமான வாசகர்கள் அலர்கான் வகை நாவல்களில் அது மாதிரியான சாத்தியங்களைப் பெறுகிறார்கள்.) விஷயம் என்னவென்றால், ஒன்று மற்றவைகளுக்கு அடிப்படையில் எந்த தொடர்பும் அற்றது என்பதுதான். இரண்டும் செய்யும் ஒரே வேலை என்றால், அது நாவல் செய்யும் வேலையைச் செய்கிறது என்பது மட்டும்தான். நாவல் என்ற வகையில் தன்னால் முடிந்த சிறந்த வழியில் தனது கதைகளையும் தனது கதைக் கருக்களையும் தனது உண்மைகளையும் தான் தேர்ந்தெடுத்த வடிவத்திலும் முறையிலும் இரண்டுமே சொல்கிறது. ஒவ்வொன்றுமே ஒரு விளைவை வெவ்வேறு கோணத்தில் உருவாக்க முயற்சித்து, அதை அடைந்திருக்கவும் செய்கிறது.
என்ன இவ்வளவு சாதாரணமாய் சொல்லி விட்டதாகக் கருதலாம், ஆனால் நாவல் என்றால் இவ்வளவுதான். தனது பெரும் நாவலை அதன் வண்ணக்கலைவையான சாகச எழுத்து, காதல் கதைகள், சமூக மற்றும் வரலாற்றுப்பூர்வமான பெரும் பேச்சு ஆகியவற்றைக் கலந்து டால்ஸ்டாய் எழுதுவது என முடிவெடுத்த போது, அதை வி்ளக்க அவர் சொன்ன வார்த்தைகளை, நான் மிகவும் விரும்புவேன். “போரும் வாழ்வும் என்பது அதன் ஆசிரியர் விரும்பிய, அந்த ஆசிரியரால் வி்ளக்க முடிந்த வடிவத்தில்தான் வெளிப்பட்டுள்ளது.” வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், டால்ஸ்டாய் தனது கருத்துகளைச் சொல்வதற்கான நடைமுறை வழியாகத்தான் வடிவத்தைக் காண்கிறார், மாறாக தப்பிப்பதற்கான வித்தியாசமான உருக்குலைவைச் செய்வதற்கான வழியாக, அவர் அதைக் கருதவில்லை.
டால்ஸ்டாய் கூட பாரம்பரிய வடிவங்களை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பது என்பது புத்திசாலித்தனமான எழுத்தாளர்களுக்குப் பெரும் தடையாக இருக்கும் என்று நினைத்தவர்தான். ஆகவே சிறந்த படைப்புகள் அனைத்தும், நடைமுறையில் உள்ள கருவிகளையும் வழிமுறைகளையும் உபயோகிப்பது அல்லது கவிழ்ப்பது என்பதை மிகவும் தைரியமாகவும் ஊக்கமூட்டும் வழிகளில் செய்துள்ளன. பார்க்ஸின் கட்டுரைகளில் வெளிப்படையாகத் தெரிவது என்பது தற்போதுள்ள புத்திசாலித்தனமான படைப்புகளில் இருந்து, முற்றிலுமான வித்தியாசமான ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற தீராத ஆசைதான். அப்படியே புரட்டிப்போட்டு, அனைத்தையும் மாற்றிப் போட்டு, முன்னே எடுத்துச் செல்ல வேண்டும் என்ற தீராத ஆசை அவருக்குள் உள்ளது. அவரது ஆசை ரொம்பவும் முரணான முக்திக்கான வழிபோலவும், ஏதோ புதிதாய் கண்டுப்பிடிக்கப்பட்ட வழியில் பார்க்கக் கற்றுக் கொண்டால், எப்போதோ தோன்றும் மதவிழிப்பு போன்ற மனவீழ்ச்சியைச் சரிசெய்யும் என்பதுதான். இருப்பினும், அவர் கோரும் மாயாஜால மற்றும் விடுவிப்புத் தன்மைகளுடன் கூடிய கதையாடலும், அது தரும் புலனாகாத வடிவத்தை மட்டும் ஊக்குவிப்பது என்பது, அவர் வெளியே எப்போதும் முழங்குவது போல் பெரும் ஏமாற்றத்தைத்தான் உறுதி செய்யும்.
அப்படி என்றால் புத்திசாலித்தனம், அழகு மற்றும் உண்மை எல்லாம் என்ன ஆவது என்று கேள்வி எழுப்பலாம்தான். இன்றைய இலக்கியத்தில் அந்த அம்சங்கள் எல்லாம் இல்லை என்று பார்க்ஸே கூட மறுக்கவில்லை. அவைகள் தனது கருத்துகளைக் கொண்டுச் சேர்ப்பதில் தீர்ந்து போய் விட்டன என்று பார்க்ஸ் கருதுகிறார். அப்படிக் கருதுவதே, உலகம் குறித்த அவரது சோர்வுதான் அவருக்கு வழிகாட்டும் தத்துவமாக மாறியுள்ளது என்பதைக் காட்டுகிறது. புத்திசாலித்தனமும், அழகும் எலிப்பொறி என்றால், நமது மனமும் எலிப்பொறிதான். ஹம்லெட்டின் புகழ்பெற்ற கருத்தான உலகமே ஒரு சிறைச்சாலைதான் என்பதும் உண்மைதான். ஆனால் ஹம்லெட் ஓரளவுக்கு தனக்கு அறிவும் அழகும் போதுமான அளவு உள்ளது என்பதைப் புரிந்துதான் வைத்திருந்தார்.
பிரசங்கிகளின் புத்தகத்தில் (the books of Ecclesiastes), முதன்முதலாக மிகச்சிறப்பாக “நாவலின் சாவு” பற்றிய துன்பக்கதை எழுதப்பட்டது; உடனே பார்க்ஸ் போன்ற நம்பிக்கை இழந்த போதகர்கள், “எக்கச்சக்கமான புத்கங்களை உருவாக்குவது எந்த முடிவையும் கொண்டு வரப்போவதில்லை; ஏராளமான ஆய்வுகள் சதைக்குப் பிடித்த சோர்வுதான்” என்று அவதானிக்கத் துவங்கி விட்டார்கள். நவீனத்திற்கு எதிரான போக்குகளால், பாரம்பரிய நாவல்கள் போதுமான அளவுக்குச் சரியாக கைக்கொள்ள முடியவில்லை; ஆகவே அவைகள் அனைத்துப் பெரும் இலக்கியங்களும் வெற்றுச் செயல்திறன் என்று கூக்குரலிட்டன; இதைப் புரிந்து கொள்வதுதான் முதிர்ச்சியின் கடைசிப்பாடமாக இருக்கக் கூடும்.
உண்மை நிலைமை இப்படி இருக்க, பார்க்ஸ் தானே தனது சொந்த அறிவுரையைக் காது கொடுத்துக் கேட்டால் போதுமானது. செயற்கையான “பொருளைக் கட்டுவதற்கு” மேலாக, தற்போதைய அனுபவத்தை உட்கொண்டு, உடனடி உணர்வு மற்றும் புரிதல் என்ற சலுகையைப் பயன்படுத்துவது சிறப்பானது அல்லது அவர் தனது போதகர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு, தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் சின்னப் பத்திப் பகுதிகளில் எதையாவது படித்து சந்தோசமாக எழுதி்க் கொண்டிருப்பதும் சிறப்பானதுதான். இன்றைய நாவலில் பெரும் விநோதங்களும் பேரார்வங்களும் இருக்கதான் செய்கின்றன. பார்க்ஸினால் அதைப் பார்க்க முடியாவிட்டால், அதை அவரால் உணர முடியாவிட்டால், அது அவருடைய குற்றம்தானே ஒழிய, நாவல்களின் குறைபாடல்ல.
***
சாம் ஷேக்ஸ் தற்கால இலக்கிய விமர்சகர் மற்றும் Open Letters Monthly இதழின் நிறுவன ஆசிரியர். அவரது புத்தக விமர்சனம் தி அட்லாண்டிக், ஹார்பர்ஸ், தி வீக்லி ஸ்டாண்டர்ட், தி நியூ ரிபப்ளிக், மற்றும் நியூ யார்க்கர் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்காக நாவல்களின் தொடர்ச்சியான விமர்சனங்களை எழுதுகிறார்.
நன்றி : நியூயார்க்கர்
