• கார்லோஸ் ஃபொன்சேகா உடன் நேர்காணல்
  • நேர்காணல் கண்டவர் : குந்தர் சில்வா
  • தமிழில் : கண்ணன் ராமசாமி

 

 

கார்லோஸ் ஃபொன்சேகாவின் முதல் நாவல் “Colonel Lagrimas” (கர்னல் லக்ரிமாஸ்) 2015 ல் வெளியிடப்பட்டது. தற்காலத்தில் கவனம் பெற்றுவரும் மொழிபெயர்ப்பாளரான மேகன் மெக்டவல் -ன் ஆங்கில மொழிபெயர்ப்பில், சமீபத்தில் Restless Books பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஃபொன்சேகா அந்த நாவலில் உலகப் புகழ் பெற்ற புதிர் நிறைந்த கணிதவியலாளர் Alexander Grothendieck  ஐப் பற்றி எழுதினார். நாவலின் மையக் கதாபாத்திரத்தினுடைய தனிப்பட்ட வாழ்க்கை எவ்வாறு உலக வரலாற்றோடு இசைவுடன் செல்கிறது என்பதைப் பற்றி பதிவு செய்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை உலகத்தோடு பேசுகிறது. கர்னல் தன்னுடைய வாழ்க்கையின் வரலாற்றை தொகுத்துக் கண்டதன் வாயிலாக வரலாற்றின் தொகுதியை பிரித்தறிந்து விட்டார். இந்த தொகுத்தல் மற்றும் பிரித்தறிதல் விளையாட்டில் கவித்துவமான, முக்கியமான யோசனைகளை ஒற்றைப்படையான, அதே நேரத்தில் கவர்ச்சிகரமான இலக்கிய கலைப்பொருளின் மேல் நீரோட்டமாக அலையாடவிட்டிருக்கிறார் பொன்சேகா. இதனை அர்ஜென்டினிய எழுத்தாளர் Ricardo Piglia “புதிரான மறக்க இயலாத எழுத்துக்களால் ஆன கலைடோஸ்கோப்” என்று வர்ணித்திருக்கிறார். லண்டனில் தன்னுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்த Henry James, ‘கோடையின் மதியவேளை’ என்கிற வார்த்தைகள் தான் ஆங்கிலத்தில் சிறந்த இரண்டு வார்த்தைகள் என்று அறுதியிட்டு கூறிய போது, Mancora Beach பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்திருப்பார். நான் கார்லோஸ் ஃபொன்சேகாவை சந்தித்த போது கோடை தொடங்கியதாக அறிவிக்கப் பட்டிருந்தது. லண்டனின் கோடையை யாராலும் கணிக்க முடியாது. அன்று நாய்களின் மூக்கில் நீர் சொட்டும் அளவிற்கு மழை பெய்து கொண்டிருந்தது. நாங்கள் ஆக்ஸ்போர்ட் தெரு அருகில் உள்ள விக்டோரியன் கட்டிட உணவகத்தில் சற்று ஒதுக்குப்புறமாக அமர்ந்தோம். அவர் வெள்ளை ஒயின் ஆர்டர் செய்தார். நான் ரம் போதும் என்று கூறிவிட்டேன். அவருடைய புத்தகம் குறித்த பேச்சே எனக்கு முக்கியமாகப் பட்டது.

 

குந்தர் சில்வா: ஆங்கிலத்தில் வெளியாகும் மொழி பெயர்ப்புகளின் சதவீதம் 3% தான் என்று நம் இருவருக்கும் தெரியும். லத்தீன் அமெரிக்க    BOOM -ற்குப் பிறகு ஒரு சில லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் தான் ஆங்கிலத்தில் மொழியாக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். இத்தகைய மொழி பெயர்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு காரணம் ராபர்டோ பொலானோ வின் நாவல்கள் ஆங்கில வெளியில் பிரபலமடைந்திருப்பதால் தானா அல்லது இந்த மாற்றத்திற்கான பாராட்டுப் பிரமாணத்தை தன்னிச்சையாக உழைத்து வெளியிட்ட பதிப்பாளர்களுக்கு கொடுக்க வேண்டுமா?

 

கார்லோஸ் ஃபொன்சேகா: என்னை பொறுத்தவரையில் லத்தீன் அமெரிக்க எழுத்தை வித்யாசமான பார்வையில் அந்நிய நாட்டு வாசகர்கள் கண்டதற்கு முக்கிய காரணம் ராபர்டோ பொலானோ வின் வெற்றி தான். கார்சியா மார்க்வெஸ், அலெஜோ கார்பென்டியர் ஆகியோரின் நாவல்களில் சித்தரிக்கப்பட்ட மாயக் காடுகளின் பகுதி போல் அல்ல; மாறாக, Crack Generation மற்றும் McOndo குழுமத்தின் நாவல்களில் முற்றிலும் உலகமயமாக்கப்பட்ட பகுதி. எனது தலைமுறையைச் சேர்ந்த பல வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பொலானோவின் படைப்பில் உள்ளூர் மற்றும் உலகத்தை இணைக்கும் ஒரு வழியைக் கண்டனர். Savage Detectives மற்றும் 2666 போன்ற நாவல்கள் உலக அளவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு முடிவில் லத்தீன் அமெரிக்க எல்லைக்குள் அடங்கி விட்டதை வாசகர்கள் கவனித்தார்கள். அவருடைய வெற்றி லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் புது வெளியை திறந்து விட்டது. லத்தீன் அமெரிக்க படைப்பு வெளி இனிமேல் மேஜிகல் ரியலிசத்திற்கு மட்டும் தான் என்றில்லாமல் அமைப்பு சார்ந்த தேடலுக்கும், புதிய பரிட்சார்த்த முயற்சிகளுக்கும் களமாகக் காணப்படுகிறது. இதனோடு கூடிய தற்சார்பு பதிப்பித்தல் முறையில் புதிய பல மரபு சாராத, அது வரை கண்டு கொள்ளப்படாத எழுத்தாளர்கள் உருவாகினர்: Sergio Pitol, Ricardo Piglia, Juan Villoro மற்றும் Alan Pauls போன்றவர்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். இன்றைய தற்சார்பு பதிப்பகத்தார் ஸ்பானிய மொழியில் படித்தலும், ஸ்பானிய மொழி அறிந்தவர்களை நண்பர்களாக கொண்டிருத்தலும் இதற்கு உதவிகரமாக உள்ளது.

 

சில்வா : லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் தங்களுடைய முதல் நாவலைப் பதிப்பிக்க ஸ்பெயின் செல்வது சம்பிரதாயமாக உள்ளது. ஆயினும் உங்களுடைய வளர்ச்சி வித்யாசமானது. உங்களுடைய பெரும்பாலான பட்டப் படிப்பு அமெரிக்காவிலே தான் நடந்திருக்கிறது. லண்டனுக்கு புலம் பெயரும் முன்னர் நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில்தான் நீங்கள் வசித்து வந்துள்ளீர்கள். இதனை எப்படிப் பார்க்கிறீர்கள். இந்த இடப் பிரச்சனை உங்கள் வேலையை பாதித்துள்ளதா?

 

ஃபொன்சேகா : என்னுடைய காலத்தில் இந்த விஷயத்தில் மாற்றம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் முதல்பாதியிலும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் புகலிடமாக விளங்கியது பாரிஸ் நகரம் என்றால், லத்தீன் அமெரிக்க BOOM-ன் போது பல எழுத்தாளர்களுக்கு பார்சிலோனா இடம் தந்தது போல, என் காலத்தில் அமெரிக்கா – குறிப்பாக – நியூயார்க் நகரம் பல எழுத்தாளர்கள் பவனி வருவதற்கு ரத்தினக் கம்பளம் விரித்துள்ளது. இதற்கு ஒரு சிறிய பொருளாதார உண்மை காரணமாக உள்ளது: 60 களில் பத்திரிக்கைத் துறை எழுத்தாளர்களுக்கு ஒரு பொருளாதார வழியை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது கல்வித் துறை அத்தகைய ஒரு வழியாக உள்ளது. இந்த வாய்ப்பு புனைவுக்கும் தத்துவத்திற்கும் இடையிலான, லத்தீன் அமெரிக்கப் புனைவுக்கும், ஆங்கில மொழிப்புனைவுக்கும் இடையிலான, மிக அவசியமான உரையாடலை ஏற்படுத்தி தருகிறது என்று நான் நினைக்கிறேன். இத்தகைய உரையாடல் எப்போதும் இருந்து வந்தது என்பதனை உணர்ந்தவன்தான் நான். ஆயினும் இத்தகைய உரையாடல் இருந்ததற்கான சுவடை இப்போது தான் பொது வெளியில் காண முடிகிறது: பூம் -ல் உருவான எழுத்தாளர்கள் Fulkner ஐ படித்தார்கள் என்றால், நாம் Don Delillo, J.g. Ballard,Cormac McCarthy, Thomas Pynchon அல்லது  Lydia Davis ஐ படித்துக் கொண்டிருக்கிறோம்.

 

சில்வா : Alexander Grothendieck ன் வாழ்க்கையை மையமாக வைத்துப் புனையப் பட்ட உங்களுடைய நாவலில் ஸ்பானிய   உள்நாட்டு யுத்தம் முதல் ரஷ்யப் புரட்சி வரை, மெக்சிகோ முதல் வியட்நாம் வரை, நீளும் பகுதிகளைப் பார்க்க முடிந்தது. கர்னலுக்கும் உலக வரலாற்றிற்குமான தொடர்பு குறித்து நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டீர்கள்?

 

ஃபொன்சேகா :  என்னைப் பொறுத்தவரையில் Alexander Grothendieck –ன் வாழ்க்கை இருபதாம் நூற்றாண்டிற்கு என்ன நடந்தது என்பதன் குறியீடு: உலக வரலாற்றில் நடந்த மிகக் கொடூரமான நிகழ்வுகளான ரஷியப் புரட்சி, ஸ்பானிய உள்நாட்டுப் போர், ஹோலோகாஸ்ட் மற்றும் வியட்நாம் போன்றவற்றால் அவருடைய குடும்பம் பாதிக்கப் பட்டிருந்தது என்பதை தாண்டி, Grothendieck தன்னுடைய கடைசி காலங்களை பிரெஞ்சு பிரதேசத்தில் உள்ள பிரனீஸ் மலைத்தொடரில் உள்ள தன் வீட்டின் உள் கதவுகளைத் தாளிட்டபடி வாழ முடிவெடுத்தார். அதன் உள்ளே அடங்கிக் கிடந்தபடி கணிதக் குறியீடுகளைக் கொண்டு ஒட்டு மொத்தமான கோட்பாட்டை, போர்ஹேஸிய கலைக் களஞ்சியமாக உருவாக்க முடிவெடுத்தார். அவருடைய கண்கவர் வாழ்க்கையின் கதை ஒரு நூற்றாண்டின் கதையை ஒற்றி இருந்தது. அந்த நூற்றாண்டு பிரபலமான அரசியல் முடிவுகளைக் காண போதை கொண்டிருந்தது. இந்த மாற்றத்தைப் பதிவு செய்து வரைபடமாக்க நான் நினைத்தேன். ஒருவரலாற்று நாவல் நம்முடைய இணைய உலகில் எத்தகையதாகக் காணப்படும் என்பதை நான் சோதித்து காண விரும்பினேன். இந்த சோதனையை நான் தனியாளாக செய்யவில்லை. நான் நாவலை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் தான் Álvaro Enrigue ன் அற்புத நாவலான Sudden Death  குறித்து கேட்டறிந்தேன். தகவல் காப்பகத்தோடு மட்டும் உறவு கொண்டிருந்த வரலாற்றை, அவர் அந்த நாவலின் பதிவு செய்திருந்தார். அவர் ஒரு வித்யாசமான கதை சொல்லும் முறையைக் கையாண்டிருந்தார். அது நம்முடைய நேர்கோட்டுக் கதையாடல் முறையில் இருந்து சற்று வித்யாசப் பட்டிருந்தது. வரலாற்றை எப்போதும் நேர்கோட்டில் பார்க்கும் முறையை அது தகர்த்திருந்தது. மாறாக வரலாற்றை பலவண்ணக் கற்களஞ்சியமாக காட்டியிருந்தது. ஒரு கதாபாத்திரத்தின் மடத்தனத்தை நான் காட்ட முற்பட்டேன். அதன் மூலம் ஒரு நாள் புதிய வரலாற்றை அந்த கதாபாத்திரமே வடிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளேன்.

 

சில்வா : பல இளம் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் சிறிய வாக்கியங்களை எழுதவே விரும்புகிறார்கள். நீங்கள் நீண்ட கவித்துவமான மொழி நடையைப் பின்பற்றுகிறீர்கள். உங்களுடைய நாவலை வடிப்பதில் மொழி ஒரு முக்கிய தடையாக இருக்கிறதா?

 

ஃபொன்சேகா : சிறிய வாக்கியங்களைக் கூட கவித்துவமாக எழுதலாம். அலெஹாந்ரோ ஜாம்ப்ரா அல்லது Diego Zúñiga’s ஆகியோரின் படைப்புகளை உதாரணமாக சொல்லலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் அந்த நாவலை எழுதிய போது கரீபிய பரோக் கலை வடிவத்தை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். கப்ரேரா இன்ஃபாந்தே, Luis Rafael Sánchez, அல்லது லெஸாமா லிமா போன்றவர்களின் மொழியியல் வளத்தோடு தான் நான் வாழ்ந்திருக்கிறேன். அந்த நாவலை எழுதிய ஒன்பது மாதங்களில் ஒவ்வொரு நாளும் மொழியியல் நன்னிலை உணர்வுடன் அந்த மொழியுடன் விளையாட முடிவெடுத்தபடி, அதிகாலையில் நான் எழுவேன். இந்த வகையில் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன்: என்னைப் பொறுத்த வரையில் ஒரு நாவலுக்கு மிக முக்கியமானது அதனுடைய வடிவம். தற்காலத்தில் ஒரு நாவலை மிக அவசரமாக உருவாக்கும் சூழல் நிலவுகிறது. அர்த்தங்களே ஆட்சி புரிகின்றன. ஆனால் உண்மையில் கவித்துமான கலைவடிவம் மொழியின் எல்லைகளை உந்தித் தள்ள வேண்டும். இவ்வாறு எழுதினால் புரியாதோ என்கிற எண்ணத்தை அது விதைத்து விட வேண்டும். தற்கால அவசரகதியான எழுத்து காணாமல் போய் விடுவதற்கான எல்லா வாய்ப்பும் இருக்கிறது. அதனால் உண்மையான அரசியல் கலைக்களஞ்சியம் வாசகனை நிறுத்தி நிதானமாக ஒரு மொழி அங்கே விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதனை உணரச் செய்ய வேண்டும்: அவசரமாக அருந்தி விடக் கூடாமல் பொறுமையாக ரசித்து ருசித்து அருந்த, நம்மை உற்சாகப் படுத்தும் ஒரு பானம் போல.

 

சில்வா : ஜார்ஜ் பெரக், இடாலோ கால்வினோ, டபிள்யூ. ஜி. செபால்ட், போர்ஹேஸ், யுவான் ருல்ஃபோ போன்ற எழுத்தாளர்களை பற்றி நான் யோசிக்கிறேன். ஒரு வகையில் அவர்கள் எல்லோரும் உங்களுடைய நாவலில் இருக்கிறார்கள். உங்களுடைய நூலகத்தில் அவர்களுக்கு இடம் இருக்கும் என்பது நிச்சயம். எந்தெந்த எழுத்தாளர்கள் உங்களை பாதித்திருக்கின்றனர்?

 

ஃபொன்சேகா : பாதிப்புகளைப் பற்றி பேசுவது கடினமான காரியம். பல லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் சொல்வது போலவே என்னுடைய மிக முக்கிய பாதிப்பு வில்லியம் ஃபாக்னர் தான். அவரிடம் இருந்த அந்த மொழியியல் ஆளுமையை நான் எங்கேயும் கண்டதில்லை. அதோடு, ஒவ்வொரு நாவலும் அதற்குரிய பாதிப்புகளைத் தாங்கியே வருகிறது. Colonel Lágrimas ஐ நான் எழுதிய போது ஃபாக்னர் இடம் இருந்து தள்ளி இருக்க விருப்பப்பட்டேன். ஏனெனில் அந்தப் புத்தகம் வேறெதுவோ ஒன்றைக் கோரியது. ஒரு புறம், தற்புகழ்ச்சிக்கான கருத்துருக்களை தாங்கி வரும் கதாபாத்திரங்களை கொண்ட நாவல்கள் குறித்து நான் யோசித்துக் கொண்டிருந்தேன்: Flaubert – ன் Bouvardand Pécuchet, அல்லது Thomas Bernhard -ன் Correction ஆகியவை உதாரணங்கள். மறுபுறம், நான் முன்பு வாசித்த ஒருநாவல் குறித்த சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்: Huysman -ன் பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலான A Rebours. நான் ஒரு நாள் இத்தகைய கதாபாத்திரம் குறித்து பேச முடிவெடுத்தேன்: ஒரு நபர் இந்த சமூகத்தில் இருந்து தன்னை வடி கட்டிக் கொண்டு கலைக்காக அல்லாமல் (Huysman நாவலில் உள்ளது போலில்லாமல்) தகவலுக்காக தனித்து வாழ்கிறார் என்கிற வகையில். இதற்கு எனக்கு கிடைத்த மாதிரி வடிவமே கர்னல்: அவரை நான் போர்ஹேஸ் -ஆக சித்தரிக்க முடிவெடுத்தேன். ஆய்வார்ந்த விஷயங்கள், கோட்பாடு, புத்தகம் என்று தன்னை ஒரு வீட்டிற்குள் புதைத்துக் கொள்ளும் ஆளாக. கதை சொல்லும் யுக்தியைப் பொறுத்த வரையில் எனக்கு இரண்டு முக்கியமான பாதிப்புகள் இருந்தன: Machodo de Assis -ன் Epiraphof a small Winner என்கிற விளையாட்டு புத்தியும் சலன மனோபாவமும் உள்ள கதை சொல்லி. Luis Rafael Sanchez – ன் La Guaracha del Macho Camacho வில் வரும் பரோக்கிய கதை சொல்லி. ஆனால் எப்போதும் போல நீங்கள் எதை விரும்பினாலும் முடிவில் வெளி வருவது வேறொன்றாக இருக்கும். Bernhard அல்லது Flaubert ற்கு நெருக்கமாக வந்திருக்க வேண்டிய என்னுடைய நாவல் நீங்கள் சொன்னது போல பெரக், கால்வினோ மற்றும்  போர்ஹேஸ் க்கு நெருக்கமானதாக வெளிவந்து விட்டது.

 

சில்வா : நாவலைப் படித்த போது அது ஜார்ஜ் பெரக் -ன் வாழ்க்கைக்கு ஒத்து வந்திருந்ததைக் காண முடிந்தது. இந்த நாவல்  ‘வாசகரின் பயன்பாட்டு’ புத்தகம் போன்றது. விடுபட்ட துண்டுகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து கதையை நாமே புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறாக புதிர் வினா போன்று ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்று Colonel Lagrimas ஐ எழுதிய போது நீங்கள் நினைத்தீர்களா?

 

ஃபொன்சேகா : ஜார்ஜ் பெரக் -ன் புதிர் வினா போன்ற ஒரு நாவல் வடிவம் எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். இந்த நாவலை நான் எழுதிக்கொண்டிருந்த போது Chuck Close ன் ஓவியங்களுக்கு அடிமையாகி விட்டேன். அவருடைய படைப்புகள் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்: அவருடைய படைப்புகளில் உண்மைத் தன்மையை பிரதிபலிக்கும் மனதை கவரும் நுணுக்கங்கள் இருக்கும். பிக்சல்கள் போன்ற சிறிய பெட்டி பெட்டியான சதுரங்களை பெருக்கி அவர் கைகளாலேயே அத்தகைய அசாத்தியமான ஓவியங்களை வரைகிறார். ஒரு மனிதனின் உருவத்தை ஆயிரக்கணக்கான சிறிய பிக்சல்கள் கொண்டு வரைய முடியும் என்கிற எண்ணமே என்னை அவருக்கு அடிமையாக்கியது. Close ஐ போலவே நானும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை சிறு சிறு பெட்டிப் பெட்டியான தகவல்களால் கூட்டி வடிவமைக்க முடிவெடுத்தேன். இதன் மூலம் ஒரு பிரம்மாண்டமான புதிர் வினாவை நாவலாக உருவாக்கி விட நினைத்தேன். அதன் உள்ளே பெட்டிகளை கவனமாகப் பொருத்தி முக்கிய கதாபாத்திரத்தின் முகத்தைக் கொண்டு வந்து விட நினைத்தேன். Oulipo வில் பெரக் ஒரு முக்கிய உறுப்பினர். அந்த அமைப்பு எழுத்தாளர்களாக மாறிய பல்வேறு கணித வியலாளர்களை வைத்து உருவாக்கப் பட்டது. அதனால்  பெரக் -ன் நாவலை மேற்கோளாகக் கொண்ட கணிதவியலாளர் குறித்த நாவல் உருவானதில் ஆச்சரியமே இல்லை.

 

சில்வா : ‘அசுரன்’ என்கிற வார்த்தையை குறித்த பாஸ்கலின் வாசகத்தை சுட்டிக் காட்டி இந்த நாவல் தொடங்குகிறது: “அவன் தற்புகழ்ச்சி செய்தால், அவனை நான் அடக்கி வைப்பேன். தன்னை தானே இழிவாக நடத்தினால், அவனை உயர்த்திப் பிடிப்பேன். அவனை நான் எப்போதும் மறுதலித்துப் பேசுவேன். அவன் தான் ஒரு புரிதல்படாத அசுரன் என்பதை புரிந்து கொள்ளும் வரை”.  இந்த அசுரன் யார்? கர்னலா, அவருடைய நினைவா? வரலாறா? காலமா?

 

ஃபொன்சேகா : பாஸ்கலின் வாசகத்தில் அசுரன் வேறு யாரும் இல்லை. மனிதன் தான். மனிதன் புரிதல் படாத அசுரன். அதனால் நாவலில் வரும் கர்னல்தான் அந்த அசுரன். பாஸ்கலின் வாசகத்தில் வரும் மனித வாழ்க்கையின் முரண்களை நான் தேர்ந்தெடுத்த குரலின் வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். ஒரு குரல் தன்னை தானே எதிர்நோக்கும் மூலக் கதாபாத்திரத்தை உந்தித் தள்ள எனக்கு தேவை பட்டது. அந்தக் குரல் வெளியேறும் அனைத்து வாயில்களையும் தடுக்கும் தொந்தரவான குரலாக இருக்க வேண்டும் – நமது பிரக்ஞை போல. ஸ்பானிய மொழியில் புத்தகம் வெளியானபோது, கதைசொல்லி யார் என்று நிறைய பேர் என்னிடம் கேட்டனர். என்னால் அதற்கு தீர்க்கமாக பதில் உரைக்க முடியவில்லை. இப்போதும் எனக்கு ஒற்றைப்படையான பதில் இல்லை. ஆனால் நீங்கள் கேட்டுவிட்டீர்கள். அதனால் ஒரு பதிலைத் தேடிப் பிடித்து சொல்லி விடுகிறேன்: இந்த நாவலில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கதை சொல்லிகள் அந்த மூலக் கதாபாத்திரத்தின் புறநிலை சார்ந்த, வெளித்தோற்றமுடைய பிரக்ஞையாக இருக்கலாம். தன்னுடைய பழைய நினைவுகளையும் வரலாற்றையும் போரில் தினமும் சந்திக்கும் மனிதனின் குரலாக அது இருக்கலாம்.

 

சில்வா : மேகன் மெக்டவல், குறிப்பிட்ட அந்தக் குரலை எப்படிக் கையாண்டார்? ஸ்பானிய மொழியைக் காட்டிலும் வித்யாசப்பட்டிருந்ததா?

 

ஃபொன்சேகா : மேகன் அசத்தி விட்டார் என்றே நினைக்கிறேன். நாவலின் மொழியாக்கத்தைக் கண்ட போது, அவர் அந்த புத்தகத்தின்  வரம்புகளுக்கு மதிப்பளித்து அதனோடு தன்னுடைய சாயலையும் தக்க வைத்துக் கொண்டது அசாத்தியமாகப் பட்டது. இது தான் எனக்கு முக்கியமாகப்படுகிறது: மொழியாக்கத்திற்கு உள்ளாகும் நாவல்கள் தனித்துவமான மற்றொரு நாவலாக விளங்க வேண்டும். அவை மொழியாக்கத்திற்கு உள்ளான மொழியிலேயே எழுதப்பட்டவை போலத் தெரிய வேண்டும். எனக்கு முந்தைய பல லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களை அவர் மொழி பெயர்த்திருக்கிறார் என்கிற வகையில் எனக்கு மேகனுடைய வேலை பற்றி தெரியும்: அலெஹாந்ரோ ஜாம்ப்ரா,  Lina Meruane மற்றும் Alvaro Bisama போன்றவர்களைக் குறிப்பிடலாம். ஆகையால் அவர் மிகவும் திறமை வாய்ந்த மொழிப்பெயர்ப்பாளர் என்பதை நான் அறிவேன். அவருடன் பணி செய்வதை அறிந்து நான் உற்சாகமடைந்தேன்.. அது ஒரு உன்னதமான கூட்டணியாக அமைந்தது, அவருடைய திறமையால் சாத்தியப் பட்டது.  நான் அவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

 

சில்வா : நீங்கள் தனித்தனியாக வார்த்தைகளைப் பற்றி அவருடன் கலந்தாலோசித்தீர்களா? மின்னஞ்சல் மூலமாக பேசிக்கொண்டீர்களா? அல்லது அவர் போக்கில் விட்டு விட்டீர்களா?

 

ஃபொன்சேகா : எழுத்தாளருக்கும் மொழி பெயர்ப்பாளருக்கும் இடையில் ஒரு வகையான நம்பிக்கை இழையோடவேண்டும். மேகனுடைய முடிவுகளை நான் நம்பினேன். அவரை மதித்தேன். நடந்த அனைத்தையும் அது இலகுவாக்கியது. அவர் எப்போதும் சரியான முடிவுகளை எடுப்பார் என்று என்னால் காத்திருக்க முடிந்தது. நாங்கள் மின்னஞ்சலில் பேசிக்கொண்டோம். சில நுணுக்கமான விஷயங்கள் குறித்து உரையாடினோம். ஆனால் பெரும்பாலான நேரங்களில் மேகன் சரியாகவே யோசித்தார். பொதுவாகக் கூறப்படும் ஒரு பாராட்டு இங்கேயும் பொருத்தமானது: அவருடைய மொழியாக்கம் என்னுடைய எழுத்தை மெருகூட்டியிருக்கிறது. அது என்னுடைய மூல எழுத்தின் சில பல எச்சங்களை நீக்கி விட்டது. அந்த நாவலை நான் நான்கு வருடங்களுக்கு முன்னால் எழுதினேன். அதனால் தற்போது என்னுடைய எழுத்து முறை மாறிவிட்டது. சில தவறான முன்னுதாரணங்களைப் பின்னால் சென்று அழித்து விட வேண்டும் என்று கை குறுகுறுக்கும். அதைத் தான் மேகனுடைய எழுத்து செய்திருக்கிறது என்று நினைக்கிறேன். என் எழுத்தை மேலும் சுருக்கி மூலத்தை பாதிக்காமல் அழகாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.

 

சில்வா : Restless Books பதிப்பகத்தோடு பணிபுரிந்தது எத்தகைய அனுபவமாக இருந்தது?

 

ஃபொன்சேகா : Restless Books பதிப்பகத்தார் முதல் நாளில் இருந்தே அற்புதமானவர்களாக நடந்து கொண்டனர். அவர்கள் என் நாவலை மொழிபெயர்க்கும் உரிமையை வாங்கியிருக்கிறார்கள் என்பதற்காக சொல்லவில்லை. அதற்கு முன்பாகவே Juan Villoro முதல் Hamid Ismailov வரை அவர்களுடைய எழுத்தாளர்கள் வரிசை மேல் எனக்கு தீராக் காதல் உண்டு. இனி அவர்களுடன் சேர்த்து பதிப்பிக்க காத்திருக்கும் Emiliano Monge போன்றவர்களும் முக்கியமானவர்கள். அதனால் அவர்கள் Colonel Lagrimas ஐ மொழிபெயர்க்க நினைத்தது என்னுடைய பாக்கியம். அன்றிலிருந்து இன்றுவரையில் அவர்களுடனான பணி எனக்கு சுகமான அனுபவமாகவும், படிப்பினையாகவும் இருந்து வருகிறது. US-UK புனைவுச் சந்தை எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து நான் அறிந்து கொண்டேன். அது ஸ்பானிய லத்தீன் அமெரிக்க களத்தில் இருந்து எவ்வாறு மாறுபட்டது என்பதையும் நான் அறிந்து கொண்டேன். இலக்கியப் புனைவை மொழி பெயர்த்தும் சந்தைப்படுத்தலாம் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் பைத்தியம் பிடித்த கூட்டத்தினர் தான் Restless Books (நகைச்சுவை உணர்வுடன்): இந்தக் கூட்டத்தார், இலக்கியப் புனைவுக்காகப் போரிடுவது தேவையானது தான் என்று அறிந்து வைத்துள்ள புத்தகப் புழுக்களை கொண்டிருக்கின்றனர். Indie பதிப்பகத்தோடு கூடி வேலை செய்ததைப் போலவே Restless உடன் வேலை செய்த போதும் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தனர்.

***

Crack Generation : கிராக் (விரிசல் அல்லது, உடைப்பு) தலைமுறையின் இலக்கியம் என்பது மெக்ஸிகோவில் 1990 களின் நடுப்பகுதியில் தொடங்கிய ஒரு நவீன இலக்கிய இயக்கமாகும். இது லத்தீன் அமெரிக்க BOOM க்கு எதிர்வினையாகக் கருதப்படும் இலக்கிய மரபுகளை உடைத்த பல இளம் மெக்சிகன் ஆசிரியர்களால் தொடங்கப்பட்டது . குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்கள்: Ignacio Padilla, Jorge Volpi, Eloy Urroz, Pedro angel Palou மற்றும் Ricardo Chávez-Castaneda.

***

Carlos Fonseca – கார்லோஸ் ஃபொன்சேகா கோஸ்டரிகாவில் பிறந்தவர். ப்யூட்டோரிகாவில் தன்னுடைய குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியை கழித்தவர். பின்பு US ற்கு சென்று கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் பிரின்ஸ்டன் யூனிவர்சிட்டியில் படித்து அவர் முனைவர் பட்டம் வென்றார். கேம்ப்ரிட்ஜ் – ல் உள்ள Latin American Studies Center ல் தற்போது பாடங்கள் நடத்தி வருகிறார். Colonel Lagrimas என்பது இவரது முதல் நாவல்.

 

நன்றி : words without borders