- கௌதம சித்தார்த்தன்
உங்களுக்கு கமல்ஹாசனைத் தெரியுமா? நாயகன், விருமாண்டி, தசாவதாரம் போன்ற படங்களில் நடித்த உலகநாயகன் என்னும் திரைப்படநடிகர்… தற்போது தனது விஸ்வரூபம் என்னும் படத்தை வெளியிட படாதபாடு பட்டுக் கொண்டிருப்பவர்…
சரி… சரி… குளுமை… குளுமை…
கமல்ஹாசனுக்கு உங்களைத் தெரியுமா?
அப்படியான ஒரு சுபயோக சுபதினத்தில் அவரிடம் நமது நாயகன் ராமசாமிபாரதிராஜ் அறிமுகமான வரலாற்று நிகழ்வை தமிழ்(சினிமா) கூறும் நல்லுலகின் முன்வைக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
1980 களில் கலைஇலக்கிய உலகம் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த தருணம். தமிழ்ப்படங்கள் எல்லாம் குப்பைகள் என்ற போக்கு, கலை இலக்கியவாதிகளுடையேவேரூன்றியிருந்தது. (இன்றைக்கு அதில் மூழ்கித் திளைப்பதே லட்சியமாக மாறிப்போயிற்று!)
தமிழ்ப்படங்கள் பார்ப்பது கேவலமான விஷயமென்று உலகப்படங்களைத் தேடித்தேடிப் பார்த்த சூழல் அது. அப்போதெல்லாம் உலகசினிமாக்களின் குறுந்தட்டுகளோ, இணையமோ இல்லை. தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலைமுடுக்குகளில் செயல்படும் திரைப்படச் சங்கங்களில்தான் உலகசினிமாவைத் திரையிடுவார்கள்.
ஹங்கேரியன் படமான ஸோல்டான் ஃபேப்ரியின் ‘Balint Fabian Meets God’ படத்திற்காக, ஈரோடு பேருந்து நிலையத்தில் விடியவிடிய உட்கார்ந்திருந்தது, சத்யஜித்ரேயின் ‘சாருலதா’ படம் பார்ப்பதற்காக முந்தினநாள் இரவே திருச்சி போனது, அங்கே “மானுடம்” என்னும் சிறு பத்திரிக்கை ஆசிரியர் ஜீவி, தனது புத்தகக் கடையில் தங்க வைத்து, விடிய விடிய உலகத் திரைப்படங்கள் குறித்து பேசியது, பல்கேரியப் படமான ராஞ்செல் வுல்ச்சனோவின் ‘The Unknown Soldier’s Patent Leather Shoes’ படத்திற்காக, நடுஇரவு சைக்கிளிலேயே கோவை புறப்பட்டு(123கி.மீ) அதிகாலையில் டைட்டில் போடும்போது போய்ச் சேர்ந்தது… என்று ராமசாமியின் அந்த நாட்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்தக்காலகட்டங்களில் உலகத்தரமான ஒருசினிமா எடுக்க வேண்டும் என்கிற கொந்தளிப்பு ராமசாமிக்குள் கருக் கொண்டது. இனி சங்கங்களில் பார்ப்பதற்கு ஏதுமில்லையென்ற சூழலில், உலகத் திரைப்பட விழாக்கள் அவனை அழைத்தன. தோட்டத்தில் நெல்அறுவடை முடிந்திருந்தது. அம்மாவிடம் நைசாகப் பணத்தை அமுக்கிக் கொண்டு பயணமானான் புதுதில்லிக்கு.
சிறுபத்திரிக்கைகளில் மாய்ந்து மாய்ந்து படித்த உலகசினிமா கலைஞர்கள் கண்எதிரே திரிந்தார்கள். மிருணாள்சென், புத்ததேவ்தாஸ்குப்தா, கிரீஸ்காஸரவள்ளி, அடூர்கோபாலகிருஷ்ணன்… ராமசாமியின் உடலெங்கும் விறுவிறுப்பு ஏறியது. ராமசாமி அந்த உலகத்துக்குள் ஐக்கியமானான்.
ஒரு மராத்தி ஃபிலிம்மேக்கனுடன் ஓட்டை ஆங்கிலத்தில் பேசியவாறு தேநீர் பருகிக்கொண்டிருந்த சமயத்தில், எதிரில் பிரசன்னமானார் கமல்ஹாசன். ராமசாமிக்குள் விரீல் என்றது. அவரசமாக எழுந்து கமலின் அருகில் சென்றான். வணக்கம் கூறி, தான் தமிழகத்திலிருந்து வந்திருப்பதாக அறிமுகமானான். கமல்ஹாசன் கைகுலுக்கினார்.
“சார் உங்ககிட்டே ஒரு கதை சொல்லணும்…” என்றான்.
“நீங்கள் சென்னைக்கு வந்தா ஆழ்வார்பேட் வாங்க” என்றார் கமல். அதற்குள் அங்கு ஓடோடி வந்த அவரது பாதுகாவலர் கமல்ஹாசனின் கற்புக்கே பங்கம் வந்துவிட்டது போலப் பதறிப் போனார். “சார்… போலாமா சார்…” என்று கமலை மேற்கொண்டு பேசவிடாமல் அழைத்துக் கொண்டு நடந்தார். (பாதுகாவலர் இப்போது ஒரு குட்டி இயக்குனர்) கமலுக்கு ஒரே ஏமாற்றம். ‘என்னடா இது, ஒருத்தன்கூட நம்பளைக் கண்டுக்கமாட்டேங்கறானேன்னு இருக்கிற போது… யாரோ ஒருத்தன் நம்மகிட்டே வந்தா அவனையும் பேசறதுக்கு உடமாட்டேங்கறானே…’ என்ற உணர்வுகள் அவருக்குள் ஓடியிருக்கும்.
இன்னும் சில விஷயங்கள் பேசியிருக்கலாம் என்ற ஏமாற்றம் ராமசாமிக்குள் பரவியது. சட்டென்று அவனுக்குள்ளிருந்து எழுந்தான் இன்னொரு ராமசாமிபாரதிராஜ்,
‘டேய், நீ எவ்வளவு பெரியஆளு தெரியுமா? மிருணாள்சென்னோட பேசறே… புத்ததேவ்தாஸ்குப்தாவோட தேநீர் சாப்பிடறே… கிரீஷ்காஸரவள்ளியோட விமர்சனம் பண்றே… அடூர்கோபாலகிருஷ்ணனோட விவாதம் பண்றே… இவைதான் பெரியவிஷயம்… போ… படம் போட்டுட்டாங்க…’
அதன்பிறகு ராமசாமிக்கு கமல்ஹாசனைப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. பல்வேறு அரங்குகளில் மாறிமாறிப் படம் பார்த்தான். ஒருவாரம் கழித்து ஊர்திரும்பும் போது ரயிலில் கமல்ஹாசன் சொன்ன வார்த்தைகள் தலையில் ஒலித்தன. ‘ஒருகாலத்தில் கமலுக்காக ‘உன்னதம்’ என்ற கதையை உருவாக்கி வைத்திருந்த எண்ண ஓட்டங்கள் அலையடித்தன.
புகழ்பெறாத சராசரியான ஓவியக்கலைஞன். அதனால் ஓவியத்தின்மீதே வெறுப்பு. ஒருநாள் அந்த விரக்தியில் ஓவியம் வரையமுயற்சி செய்கிறான். அத்தருணத்தில் அங்கு மிதந்து வருகிறது, ஒரு வீணையின் ராகஆலாபனை. மெல்ல அந்த இசைச்சந்தம் அவனுக்குள் நுழைந்து வேறு ஒரு உலகத்திற்குள் இழுக்க அதில் ஒன்றிப்போய் ஓவியம் வரைய ஆரம்பிக்கிறான் இசைராகம் முடியும்போது, ஒரு அற்புதமான ஓவியத்தை வரைந்து முடித்திருக்கிறான்.
அது அந்த வருடத்தினுடைய ‘கலாஅகாடமிவிருது’ பெறுகிறது. விருதுவிழாவில் அனைவரும் அவனைப் பாராட்டுகின்றனர். “இந்த ஓவியம் வரைவதற்கான பின்னணி என்ன?” என்ற கேள்விக்கு, “ஒரு வீணையின் இசைமீட்டல்தான் காரணம்” என்கிறான். “அப்படியானால், இதுதான் உங்களது உன்னதமான (மாஸ்டர்பீஸ்) ஓவியமா?” என்று கேட்கின்றனர். “இல்லை இனிமேல்தான் அதை வரைய வேண்டும்” என்கிறான். “எப்போது வரைவீர்கள்?” என்றகேள்விக்கு, “அந்த வீணையை மீட்டும் விரல்கள் எப்போது நினைக்கிறதோ, அப்போதுதான்” என்கிறான்.
வீணையை மீட்டும் விரல்கள்தான் நாயகி என்பதை ‘சி’ பிரிவினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருகட்டத்தில் இருவரும் காதலர்களாகின்றனர்.
“அந்த உன்னதமான ஓவியத்தை எப்போது வரைவீர்கள்?” என்கிறாள் அவள். “நீ எப்போது மனது வைக்கிறாயோ அப்போதுதான்” என்கிறான் அவன். ‘அன்று இரவு தான் இசையை மீட்டப்போவதாகவும், நீங்கள் உன்னதத்தை வரைய வேண்டுமென்றும்’ வேண்டுகிறாள்.
அன்று இரவு ஓவியம் வரைவதற்கான ஆயத்தங்களுடன் காத்திருக்க, அவளிடமிருந்து இசை மெட்டுக்கள் ஏதும் எழுவதில்லை.
ஏமாற்றத்துடன் அடுத்தநாள் அவளிடம் விசாரிக்கிறான். ‘அன்று இரவு தனது தாய்மாமன் தன்னைத் மணந்து கொள்ளுமாறு தொந்தரவு செய்ததால், தன்னால் இசையை மீட்டமுடியவில்லை’ என்கிறாள்.
இப்படியான போக்கில் ஒரு திருப்பம். ஒருநாள் அவர்கள் வெளியே போகும்போது, தாய்மாமன் காரை ஏற்றிக் கொல்ல முயற்சிக்க, நாயகி தப்பித்துவிட, நாயகனின் இரண்டு கைகள்மீதும் கார்ச்சக்கரங்கள் ஏறி இறங்குகின்றன.
(பரபரப்பான இடைவேளை)
அதன்பிறகு ஓவியனுக்கு இருகைகளும் எடுக்கப்பட்டு விடுகின்றன. நாயகி அவனைத் திருமணம் செய்து கொண்டு போஷிக்கிறாள். அவனை மீண்டும் ஓவியனாக்க பெருமுயற்சி செய்கிறாள். கைகள் இல்லாத விலாத்தொங்கல்களில் தூரிகைகளைக் கட்டிக் கொண்டு ஓவியம் வரைய முயற்சிக்கிறான். ஆனால் முடிவதில்லை. அவனது கைகளும் வாழ்க்கையும் போனதற்குக் காரணம் தான்தான் என்ற குற்ற உணர்வுடன் கோயில்கோயிலாகப் போய் முறையிடுகிறாள் நாயகி. கோயில்சுவர்களிலும், விதானங்களிலும் உள்ள சுவரோவியங்களைப் பற்றிக் கதைக்கிறார்கள்.
ஒருநாள் கோயிலுக்குப்போய்த் திரும்பும்போது பிச்சையிட்டுக் கொண்டே வருகிறாள் நாயகி. பிச்சையாளர்கள் கைகளை ஏந்தியபடி பெற்றுக்கொள்கிறார்கள். பிச்சை ஏந்தும் கைகளுக்கு மத்தியில் ஒரு ஜோடிக்கை மட்டும் கூம்பியபடி மூடியிருக்கிறது. நாயகி ஒன்றும் புரியாமல் அவரைப் பார்க்க அவரது கண்களில் தீட்சண்யம் ஒளிவிடுகிறது. அவர் பிச்சையாளர்களிலிருந்து விலகிய துறவியாகத் தெரிகிறார். மூடியகையைத் திறக்கிறார். உள்ளே ஒருவிதை இருக்கிறது. “பூவை எடுத்துக் கொள்” என்கிறார். அவள் அந்த விதையை சாஷ்டாங்கமாகப் பெற்று உண்ணிப்பாக நோக்குகிறாள். “விதைதான் பூ; பூதான்விதை” என்று தத்துவம் பேசுகிறார். அவரது அமானுஷ்யமான தோற்றத்தில் ஆழ்ந்து போய் நின்றிருக்க, “இந்தப் பூ மலரும்போது உன் கணவனுக்குக் கைகள் சித்தியாகும்” என்கிறார். வீணையின் மீட்டலில் கசியும் ராக மெட்டுக்களாய் அந்தச் சொற்கள் அந்த இடத்தில் சூழ்கின்றன.
அதைக்கொண்டுவந்து ஓவியனிடம் காட்டுகிறாள் நாயகி. அதைசெடியாக வளர்ந்து, மலராக மாறும்போது உங்களுக்குக் கைகள் வந்துவிடுமென்று குதூகலப்படுகிறாள். ‘இதென்ன விட்டலாச்சார்யா படமா?’ என்று கேலி பேசுகிறான் நாயகன்.
அத்தருணத்தில் ஒரு ஆன்மீகப் பத்திரிகையில் அந்த மலர் பற்றிய செய்தி வந்திருக்கிறது. ‘சிவனுக்கு உகந்த அது நீலோத்பல மலர். அமாவாசையன்று சிவனின் வலதுகையில் உள்ள ஒருவெண்சுடர்போல, தனது இதழ்களைப் பரப்பி மலரும்போது அதன் மணமாகப்பட்டது பிரபஞ்சபோதமாக மாறும். அந்த வாசனையில், தெய்வாம்சம் பொருந்திய கருடப்பட்சி வந்து மலரைச் சுற்றி வட்டமிடும் என்பது அதன் தாத்பர்யம்.’
செடி கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து, பூப்பூக்கும் தருணத்தை அடைகிறது. தனதுகணவனுக்குக் கைகள் முளைப்பதற்கான தாத்பர்யம் அந்த மலரில்தான் இருக்கிறது என்று உளப்பூர்வமாக நம்புகிறாள். அமாவாசை வருவதற்கான ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டேயிருக்கிறாள் அவள்.
பூவின் கூம்பிய இதழ்கள் விரிந்து மலராக மலரும் தருணத்தில்தான் அந்தத் துயரம் நிகழ்கிறது, அமாவாசைக்கு முந்தினநாள்வரை நன்றாக இதழ் விரிந்த மலர் ஒரேயடியாகக் கூம்பிப்போக ஆரம்பித்தது. அதன் வெண்ணிற இதழ்கள் மக்கிப் போக ஆரம்பித்தன. இந்த அவலத்தைக் கண்ட நாயகி நிலைகுலைந்து போகிறாள். ஜுரத்தில் படுக்கையில் விழுந்து விடுகிறாள். ஓவியன் அவளைச் சமாதானம் செய்கிறான், அவள் கேட்காமல், படுக்கையில் விழுந்து மலரின் சாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
இந்தக் காட்சி அமைப்பை விரிவாக விவரிக்கவேண்டும். அதாவது, நாயகனும் நாயகியும் ஒருவீட்டின் மாடிப்பகுதியில் குடியிருக்கிறார்கள். அவர்களுக்குநேர் எதிரே பெரிய கோயில் ஒன்று இருக்கிறது. வீட்டின் அறைக்கு முன்பக்கமாக உள்ள கைப்பிடிச்சுவரின் மீது அந்தப் பூந்தொட்டி வைக்கப்பட்டிருக்கும். நாயகியின் படுக்கையிலிருந்து பார்த்தால், பூந்தொட்டியும் அதன் பின்னணியில் கோயிலின் சுற்றுப்புறச்சுவரும் அழகாகப் பரவிக்கிடக்கும் காட்சிகளும் கண்களுக்குப் படும்.
‘இன்று இரவு அமாவாசை முடிவதற்குள் அந்த மலர் மலரவில்லையெனில், அதனூடாக நானும் இறந்து போய்விடுவேன்’ என்று பிதற்றிக் கொண்டு மலரையே வெறித்துக்கொண்டு படுக்கையில் கிடக்கிறாள் நாயகி. அந்தத் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள வீணையை எடுத்து மீட்ட ஆரம்பித்துவிடுகிறாள். ஒரு நீண்டஇசையின் ராக மாலிகை. பல்வேறு ஆலாபனைகளுடன் இசை அந்த இடத்தை நிறைக்கிறது. இசையில் ஆழ்ந்தவளை கருடப்பட்சியின் கூவல் ஒலி சுயநினைவுக்கு இழுத்து வருகிறது. பதட்டத்துடன் எதிரில் பார்க்கிறாள். நீலோத்பல மலர் அற்புதமாக மலர்ந்திருக்கிறது. அதைச்சுற்றி வட்டமிடுகிறது கருடப்பட்சி. அபூர்வமான காட்சி! பிறகு அது ரெக்கைகளை அசைத்தபடி மெதுவாக வானத்தில் மறைகிறது. அவளது ஜுரம் விலகியோட படுக்கையிலிருந்து குதூகலத்தோடு பாய்ந்தெழுகிறாள்.
எதிரே நின்றிருக்கிறான் ஓவியன். உடைகளெங்கும் வண்ணச்சாயங்கள் படிந்திருக்க, விலாத் தொங்கலில் கட்டப்பட்டிருந்த தூரிகையை உயர்த்தி அதை நோக்கி, “இதுதான் என்உன்னதம்” என்கிறான். கருத்த இருட்டைப் பிளந்து கொண்டு அலர்ந்திருக்கும் அந்த மலரின் சுடர், அந்தப் பிரபஞ்சத்தையே வெண்ணிற இரவாக மாற்றியிருக்கிறது. அவளது பார்வைக்குப்படும் கோயிலின் சுற்றுப்புறச்சுவரில் என்றென்றைக்குமான உன்னதமாய்க் காட்சியளிக்கிறது அந்த ‘நீலோத்பலம்’.
மீண்டும் ‘சி’ பிரிவுக்காரர்களுக்கு ஒரு விளக்கம்: நாயகி வீணையை மீட்ட மீட்ட, ஓவியன் தனது விலாத்தொங்கல்களில் தூரிகைகளைக் கட்டிக் கொண்டு நீலோத்பல மலரை தனது உன்னத ஓவியமாக கோயிலின் சுற்றுப்புறச் சுவரில் வரைந்து விடுகிறான்.
(அன்றைக்கெல்லாம் உலக டி.வி.டி கள் இல்லை. ராமசாமிக்கு உலக இலக்கியம்தான் கை கொடுத்தது. ஓ ஹென்றியை கமலாக உருமாற்றினான்)
“இந்தக் கதைக்கு இசை யார் தெரியுமா மிஸ்டர் கமல்ஹாசன்… சாட்சாத் வீணை காயத்ரிதான்” என்று நிலைக்கண்ணாடி முன் சொல்லிப் பார்த்துக் கொண்டு புறப்பட்டான் சென்னைக்கு.
கமல்ஹாசனுக்கு கண்ணில்லாமல், காலில்லாமல், வாயில்லாமல் நடிப்பது மிகவும் பிடிக்கும். அதுவும் இரண்டு கைகளும் இல்லாத நாயகனின் கதை என்றால்… அட்டகாசம்! இனிமேல் லூயிபுனுவல்களும் கோடார்ட்களும், ட்ரூஃபோக்களும் தமிழில் தோன்றுவார்கள்.
காலையில் குளித்து புத்துணர்வுடன் புறப்பட சினிமாக்கார நண்பனின் அறைக்குப் போனான்.
“என்ன விஷயமாக வந்தாய்?” என்றான் அவன். சினிமாக்காரன்களிடம் கதையைச் சொல்லக்கூடாதென்று திங்களூர்செல்வராஜ் சொல்லியுள்ளார். இருந்தாலும் நண்பன் சினிமா கம் நவீனஇலக்கியவாதி.
ராமசாமி எல்லாவிஷயங்களையும் சொன்னான். நுட்பமாகக் கேட்ட நண்பன், “உனக்குக்கதை சொல்லத் தெரியுமா?” என்றான்.
‘சினிமாக்காரர்களுக்குக் கதைசொல்வதென்பதே பெரிய கலை என்றும், அதில் தோல்வியடைந்தால் வாழ்க்கையே போய்விடுமென்றும் எச்சரித்தான். கதைசொல்லும் கலையைக் கற்றுக் கொள்ளவே ஒருவருடம் ஆகிவிடுமென்றும் பயமுறுத்தினான்.
“கதையை எப்படிச் சொல்லப் போகிறாய்…?” என்றான் நண்பன்.
“காட்சிகாட்சியாகச் சொல்லி அசத்திவிடுவேன்…” என்று நெஞ்சை நிமிர்த்தினான் ராமசாமி.
அவனுக்கு வந்தது பார் கோபம், “இதோபார், உன்னைப் போலவே கமல்சாருக்கும் வேறுவேலை இல்லையென்று நினைத்து விடாதே… கமல்சாரோட அப்பாயிண்ட்மென்ட் கிடைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா…” என்றான்.
சிறிதுநேரம் அமைதி.
“கதையெல்லாம் சொல்லக்கூடாது… ஒன்லைன்தான் சொல்ல வேண்டும்” என்றான் நண்பன்.
“ஒன்லைன்…?”
“நல்லாக் கேட்டுக்கோ… கமல் சார் மிகச் சரியா அஞ்சுநிமிஷம்தான் உனக்கு டைம் ஒதுக்குவாரு… அதுலே நீ அவரு ஆஃபீஸ்லே போயி டீ குடிச்சுட்டு உன்னைப்பத்தி ஒரு சின்னஅறிமுகம் செய்யறதுக்குள்ளே நாலு நிமிஷம் போயிடும்… பாக்கி ஒரேஒரு நிமிஷம்தான்… அந்த ஒருநிமிஷத்திலே நீ கதை சொல்லியாகணும்…” என்றான்.
ராமசாமிக்குத் தலை கிறுகிறுவென்று சுற்றியது, “ஒரு நிமிஷத்திலா…?”
“அதாண்டா பெரிய சவால்… இந்த ஒருநிமிஷத்திலே கமல் சாரைப் புடிச்சிட்டேன்னா நீ பெரிய ஆளு…. சும்மா உன் இலக்கியப்பருப்பெல்லாம் இங்கே வேகாது…”என்றான் நண்பன்.
அகிராகுரோசவாவும், இங்மார்பெர்க்மனும், சத்யஜித்ரேவும், விக்டோரியாடிசிகாவும் ராமசாமிக்குள் சிரிப்பாய்ச் சிரித்தார்கள்.
அவனது மௌனத்தில் பரிதாபப்பட்டு, “செரி கவலைப்படாதே… இங்கே பக்கத்திலே நாகேஸ்வரராவ் பார்க் இருக்கு, அங்கேபோய் உக்காந்து இந்தக் கதையை எப்பிடி ஒருநிமிஷத்திலே சொல்றதுன்னு யோசனை பண்ணு, தானாவரும்…”என்று அவனை எழுப்பினான் நண்பன்.
ராமசாமி வெளியே நடக்க, “டேய், அது ராசியான பார்க்கு… பாக்கியராஜ்சார் அங்கேதான் பல கதைகளைப் புடிச்சாரு…” என்று தெம்பூட்டி அனுப்பி வைத்தான் நண்பன்.
ஒருவழியாக சினிமா ஜாம்பவான்களை உருவாக்கிய அந்த நாகேஸ்வரராவ் பார்க்கில் உட்கார்ந்து ‘ஒன்லைனை’ உருவாக்கினான் ராமசாமி.
ஆழ்வார்பேட் பேருந்துக்காக பதட்டத்துடன் காத்திருந்தான். ‘யாராவதொரு இலக்கியவாதி பார்த்து விட்டால்…’ 1990களில் இலக்கியவாதி சினிமாவிற்குக் கதை சொல்லப்போவதென்பது மஹாகேவலமான விஷயம்.
‘நல்ல காலம் பொறக்குது..’ என்ற குரல் கேட்டது. பேருந்து நிறுத்தத்தூணில் சாய்ந்திருந்த விதி இடிஇடியென நகைத்தது. “எங்கே இந்தப் பக்கம்…?” என்றபடி எதிரில் வந்து நின்றான் சகஎழுத்தாளன்.
தட்டுத் தடுமாறியபடி “கவிஞர் பிரமீளைப் பார்க்க…” என்றான் ராமசாமி.
அவர், தி.மலை போய்விட்டதாகத் தெரிவித்த எழுத்தாளன், சிகரெட்டைப் பற்றவைத்தபடி இலக்கிய விஷயங்கள் பேச ஆரம்பித்தான். பின்நவீனத்துவம், மார்க்வெஸ் என்றெல்லாம் கதைத்தவன், ‘தன்னைக் கமலஹாசன் பார்க்க விரும்புவதாகக் கூப்பிட்டதாகவும், தனக்கு நேரமில்லை, முடிந்தால் நீங்கள் எங்கள் ஊருக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டதாகவும்’ அலட்சியமான தோரணையில் தெரிவித்தான்.
இதுதானய்யா ட்விஸ்ட்!
ராமசாமியின் தலையைப் படீரெனப் பிளந்து கொண்டு வெளியே வந்தது கொம்பு.
‘தான் பின்நவீனத்துவ விமர்சகரைப் பார்க்க மயிலாப்பூர் போவதாகவும், நீயும் வரலாமே’ என்றும் அழைப்பு விடுத்தான் அந்த சகஎழுத்தாளன். ராமசாமி தலையை ஆட்டினான்;
மயிலாப்பூர் போகும் பேருந்து அவர்கள் அருகில் வந்து நின்றது.
***
நான் குமுதம் குழுமத்தின் இலக்கிய இதழான ‘தீராநதி’யில் வேலையில் இருந்தபோது, குமுதம் இதழின் ஆசிரியராக இருந்த பிரியா கல்யாணராமன் என்னிடம் ஒரு கதை கேட்டார். நான் இந்தக் கதையை அனுப்பி வைத்தேன். அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே, 2013 ஜனவரி மாத குமுதம் இதழில் கதையைப் பிரசுரித்தார்.
அதன் பிறகு, 2015 ஆம் ஆண்டு, இந்திய ஆய்வியல் துறை மலாயாப் பல்கலைக்கழகமும் கலைஞன் பதிப்பகமும் இணைந்து நடத்திய மலேசியா கலாச்சாரப் பயணத் திட்டத்தில், என் நான்காவது சிறுகதைத் தொகுப்பான ‘நீல ஊமத்தம் பூ’ சிறுகதைத் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டு, மலேசியாவுக்கு என்னை மற்றும் எழுத்தாளர்களை சுற்றுலா அழைத்துப்போய், மலேசியப் பல்கலைக்கழகத்தில், இந்திய ஆய்வியல்துறை மலாயாப் பல்கலைக்கழகமும் கலைஞன் பதிப்பகமும் இணைந்த வெளியீடாக இந்த நூலை வெளியிட்டனர். இந்தத் தொகுப்பில், இடம் பெற்றிருக்கிறது இந்தக் கதை.

அருமை. சிறப்பான தொடக்கம். ஒரு நல்ல இயக்குநரை, மகத்தான கலைஞனை உருவாகவிடாமல் தடுத்த அந்த பின்பின்நவீனத்துவவாதி யார்?
nice:)