- எஸ். பி. திவ்யா உடன் ஒரு நேர்காணல்
- நேர்காணல் கண்டவர் : கரோலின் எம் யோச்சிம்
- தமிழில் : கண்ணன் ராமசாமி
தற்கால விஞ்ஞானப் புனைவு இலக்கியத்தில், சர்வதேச தளத்தில் முதல் 10 எழுத்தாளர்களில் நம்பிக்கையூட்டும் எழுத்தாளராக கணிக்கப்படும் எஸ். பி. திவ்யா, தமிழ் வம்சாவளி கொண்டவர்.
தமிழ்நாட்டின் பாண்டிச்சேரியில் பிறந்த எஸ்.பி
திவ்யா கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (கால்டெக்) கம்ப்யூட்டேஷன் மற்றும் நியூரல் சிஸ்டம்ஸ் துறையில் BS பட்டம் பெற்றுள்ளார், மேலும் M.Eng. சான் டியாகோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்து சிக்னல் செயலாக்கத்தில். ஹைகிங், ஸ்னோபோர்டிங், ஸ்கூபா டைவிங், மவுண்டன் பைக்கிங், ஆயில் பெயிண்டிங் மற்றும் வாசிப்பு ஆகியவை அவரது ஆர்வங்கள் மற்றும் பொழுதுபோக்குகளில் அடங்கும்.
Tor.com என்னும் புகழ்பெற்ற விஞ்ஞான புனைவு இதழில் வெளியிடப்பட்ட அவரது முதல் குறு நாவலான Runtime, சிறந்த நாவலுக்கான 2016 நெபுலா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இது எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்களுக்காக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தழுவலுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அவரது முதல் நாவல், Machinehood, சாகா பிரஸ் மூலம் வெளியிடப்பட்டது, மேலும் அவரது Contingency Plans for the Apocalypse and Other Possible Situations என்னும் சிறுகதைத் தொகுப்பு, ஹச்செட் இந்தியாவால் வெளியிடப்பட்டது. தன்னுடைய பட்டறிவையும், மின்துறையில் தனக்கிருக்கும் அனுபவத்தையும் பயன்படுத்தி, ஒளிமயமான, ஆழ்ந்த கற்பனா தரிசனம் கொண்ட எதிர்கால படைப்புகளை கொண்டு வருகிறார். அதில் அவருடைய Runtime என்கிற நெபுலா விருதுக்கு தகுதி பெற்ற நாவலின் அதி நவீன விஞ்ஞான புனைவு உலகமும் அடங்கும்.
அவரது எழுத்துக்களில் இயங்கும் எதிர்காலத்தைப் பற்றிய அவரது பார்வை, கால்டெக்கில் அவர் படித்த ஆண்டுகளில் அவர் படித்த அறிவியல் முறையின் வெளிப்பாடுகள். இதற்கு ஒரு உதாரணம், செயற்கை நுண்ணறிவுக்கும் மனித நேயத்துக்கும் இடையேயான மோதலை அவரது புகழ் பெற்ற நாவலான Machinehood -ல் காணலா
முழு நேர எழுத்தாளராக மாறுவதற்கு முன்பு, திவ்யா பல ஆண்டுகள் சிக்னல் ப்ராசசிங் இன்ஜினியராகவும் தரவு விஞ்ஞானியாகவும் பணியாற்றினார்.
***
தற்கால அமெரிக்க விஞ்ஞானப் புனைவு எழுத்தாளரான கரோலின் எம் யோச்சிம், தற்கால விஞ்ஞானப் புனைவு இலக்கியத்தில் முக்கியம் பெற்று வருபவர். சர்வதேச விஞ்ஞானப் புனைவு இலக்கிய இதழ்களில் அவரது கதைகள் வெளிவந்து புகழ் பெற்றுள்ளன. இவரது எழுத்துக்கள் பல நூல்களாக வெளிவந்துள்ளன.
சர்வதேச அளவில் விஞ்ஞானப் புனைவு இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ள Uncanny Magazine இதழில் இந்த நேர்காணல் இடம் பெற்றுள்ளது.
****
கரோலின்: மனித உடலியல் கூறுகளோடு தொழில்நுட்பத்தை இணைத்து வழங்கும் பணியை உங்கள் நாவல்களில் தொடர்ச்சியாக செய்து வருகிறீர்கள். பல எதிர்காலம் குறித்த அறிவியல் புனைவுகள், மாற்றுத்திறனாளிகளின் எதிர்காலத்தை பிரகாசமாகக் காட்டி வருவது மனதிற்கு இனிமையாக இருக்கிறது. “Contingency Plans For theApocalypse” ல், முக்கிய கதாபாத்திரம், செயற்கை உடல் உறுப்புடன் வருவார். ரன் டைமில் நீங்கள் பல உடலியல் முன்னேற்ற தொழில்நுட்பங்கள் குறித்து எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய பட்டறிவு மற்றும் பொறியியல் பின்புலம், எந்த வகையில் உங்களுக்கு மருத்துவம் குறித்த அறிவைத் தருகிறது? மருத்துவ சாதனங்களை நாம் எதிர்காலத்தில் எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பது குறித்து முதலில் பேசலாம்..
எஸ்.பி.திவ்யா: கால்டெக்-ல் Computation மற்றும் Neural Studies என்கிற புதிய பல்துறை பிரிவில் நான் படித்துக் கொண்டிருந்த போது பல பேராசிரியர்களுடன் பணி செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது உடலின் அங்க அசைவுகளுக்கு துணை புரியும் மோட்டார் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக உடலில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மற்றும் வயர்லெஸ் தகவல் பரிமாற்றத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த ஆய்வில் நான் ஈடுபட்டிருந்தேன். Paraplegics மற்றும் quadriplegics போன்ற முடக்குவாத நோய்களை சரிசெய்ய இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது நான் வியப்படைந்தேன். தன்னுடைய தோலின் கீழ் எலக்ட்ரானிக் சிப்புகளை அதன் அனுபவத்திற்காகவே பயன்படுத்தத் தொடங்கி இருக்கும் ஒரு சமூக நிதர்சனத்தை நாம் பார்க்கிறோம். இந்த உலகியல் உண்மையை தான் நான் ரன் டைமில் பயன்படுத்தினேன். இந்த தொழில்நுட்பம் நாளடைவில் பரவலாக்கப் படுவதை நீங்கள் கண்கூடாகக் காண்பீர்கள்.
cybernetics எனும் பிரிவில் உள்ள சுவையான பக்கங்கள் குறித்தும் நாங்கள் நிறைய பேசியிருக்கிறோம். மனிதர்கள் இப்போதே சைபோர்க்களாக மாறி விட்டனரோ என்கிற ஐயப்பாடு எனக்கு உள்ளது. பேஸ் மேக்கர், டைட்டானியம் எலும்பு, பம்புகள் எல்லாம் நாம் உடம்புக்குள் ஏற்கனவே ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டன. பயோகெமிக்கல் துறையின் விளைவால், நாம் பல வகையான மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கி இருக்கிறோம். உடலுக்கு வெளியேவும் கூட, மருத்துவ மனையின் பெரிய எந்திரங்களில் மட்டும் மருத்துவ செயலிகள் இயங்குவதில்லை. நம்முடைய ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச், fitbit என எல்லாமும் இப்போது மருத்துவ பரிசோதனை செய்கின்றன. பயோ மருத்துவ துறையில் உள்ள பொறியியலாளர்கள், உங்களுக்கு மாத்திரை போல ஒரு மைக்ரோ பரிசோதனை எந்திரத்தை முழுங்கக் கொடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அடுத்த இரு பத்தாண்டுகளில் இதன் முன்னேற்றம் குறித்து அறிய நான் ஆவலாக உள்ளேன்.
கரோலின்: நீங்கள் விறுவிறுப்பான, அதே சமயம் தெளிவான பல சண்டைக் காட்சிகளை எழுதி இருக்கிறீர்கள். உதாரணத்திற்கு, உங்கள் கதையை துவக்கி வைக்கும் ஒரு தாக்குதல் மற்றும் அதை தொடர்ந்து வரும் தப்பித்தல் நிகழ்வைச் சொல்லலாம். ஒரு சீட் நுனியில் அமரக் கூடிய ஆக்ஷன் காட்சியை எழுத முனையும் புதிய எழுத்தாளர்களுக்கு நீங்கள் என்ன யுக்தியை கற்றுத் தர விரும்புகிறீர்கள்?
எஸ்.பி.திவ்யா: முதலாவதாக, உங்கள் பாராட்டுக்கு நன்றி. இரண்டாவதாக, என்னுடைய சாகச விளையாட்டு அனுபவங்களில் இருந்து தான் நான் சண்டை காட்சிகளை உள்வாங்கிக் கொள்கிறேன். பத்தாண்டுகள் முன்பு, நான் மேற்கொண்ட ஒரு மலையேற்ற சாகசத்தை மையமாக வைத்து ஒரு லைவ் ஜர்னல் போஸ்ட் எழுதினேன். அதில், என்னுடைய உடலியல் அசைவுகளை ஒத்த வார்த்தைகளை நான் எழுதப் பிரயோகித்தேன். திரும்பு, பதுங்கு, பாய்ந்திடு, தட்டு, தூக்கு என நான் எழுதிய வார்த்தைகளை படித்து அதனை சிலாகித்தவர்கள் பலர். இதே போன்ற ஒரு முயற்சியைத்தான் புனைவிலும் கையாள்கிறேன்.
ஒரு கதாபாத்திரத்திற்கு அருகில் இருக்கும் வகையில் ஒரு சண்டை காட்சியை எழுதும் போது, படிப்பவர்களுக்கு அந்த காட்சியின் உணர்வை கொடுக்க வேண்டும். உடலால் வேகமான இயக்கங்களை செய்யும் போது, அதனை உள்ளுணர்வின் உந்துதலால் செய்கிறோம் என்பதை உணர வேண்டும்.அசைவுகளால் திடீர் என்று உடைக்கப் படுவது நம்முடைய சிந்தித்து செயல்படும் நடைமுறை. நொடிப் பொழுதில் அபாயம் நம்மை ஆட்கொண்டதாக நாம் உணர்வோம். அதற்கு எதிர்வினையாற்றுவது தான் அடுத்த படி. இதனை ஆக்சன் காட்சிகள் எழுதும் போது நான் பின்பற்றுகிறேன். ஆயினும், நாயகர்கள் நின்று நிதானித்து, மூச்சு விட்டு, தன்னிலை விளக்கம் பெறுவதையும் நான் பதிவு செய்கிறேன். இந்த இடைவெளி படிப்பவர்களுக்கும் தேவை என்று நம்புகிறேன்.
கரோலின்: இந்த கதையை எழுதும் போது, மிகக் கடினமான பகுதி என்று ஒன்று இருக்கும். மிகவும் சுலபமாக கடந்து விட்ட பகுதி என்று ஒரு சில இருக்கும். அவை யாவை?
எஸ்.பி.திவ்யா: இந்தக் கதையை தேவையான அளவுக்கு விரைவாக என்னால் எழுத முடியவில்லை. எனக்கு இதன் கரு, mammoth lakes ல் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது திடீர் என்று கிடைத்தது. அன்று முதல், என்னை எழுதியே ஆக வேண்டும் என்று என்னிடம் அடம் பிடித்தது. முதல் கதை சுருக்கம் இரண்டு நாட்களில் தயாரானது. அது என்னளவில் ஒரு சாதனை என்றே தோன்றியது.
இந்தக் கதையை எழுதும் போது எனக்கிருந்த சவால், எந்த அளவிற்கு என்னுடைய சுயத்தை அதில் பயன்படுத்துவது என்பது தான். ஒரு கதாபத்திரத்தில் நான் உட்செலுத்தும் மிக அதிகமான ‘என்னை’ இக்கதையில் காணலாம். என்னுடைய மிகப் பெரிய பயம்: ஒரு பேரழிவை நான் எப்படி எதிர்கொள்வேன்? என்கிற கேள்விக்கு, என்னுள் இருக்கும் பதிலை பெறவே நான் அதிகம் திணற வேண்டி இருந்தது.
எனக்கு மோசமான கிட்டப் பார்வை பிரச்சனை உள்ளது. கண்ணாடி, காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதால் ஓரளவுக்கு சமாளித்துக் கொண்டிருக்கிறேன். இரவில் கேட்கவே வேண்டாம். குருடியாகி விடுவேன். அதனோடு வாழ நான் சில யுக்திகளை கடைபிடிக்கிறேன். ஆனால் இறுதிக் காலம் என்று வந்தால் நான் என்ன செய்வேன் என்பது ஒரு மிகப் பெரிய பயம். என்னுடைய கண்ணாடி மிகவும் தடிமனானது. அதனை வைத்து ஓடவோ, மரம் ஏறவோ முடியாது. காண்டாக்ட் லென்ஸ்-ஐ தினமும் கழற்றி மாற்ற வேண்டும். என்னுடைய கருவிழிக்கு அடியில் பொருத்தக் கூடிய லென்ஸ்-ஐ பெறுவதற்காக நான் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். இது தற்போது உதவிகரமாக உள்ளது. ஆயினும் எப்போது வேண்டுமானாலும் அந்த சிகிச்சை பலனை இழக்கலாம்.
என்னுடைய நாயக நாயகிகளை போல நான் உறுதியானவள் இல்லை. என்னுடைய தாங்கும் திறன் மிகப் பிரமாதமாக இருந்ததில்லை. அதனால் என்னை போன்ற ஒருவர் சமாளிக்கும் விதத்தில் அந்த கதையை எழுதினேன். நாம் அறிந்ததை காட்டிலும் அதிகமாக நம்மால் சமாளிக்க முடியும் என்பதையும், தேவை வரும் போது சவால்களை நாம் எதிர்கொள்ள முடியும் என்பதையும் இந்தக் கதையின் மூலம் உணர்த்த முயற்சித்திருக்கிறேன்.
கரோலின்: “Contingency Plans For theApocalypse” ல் உள்ள ஒரு முக்கிய கரு, குடும்பம். ஒரு குடும்பத்தின் பாதுகாப்பு, நம்மை விட அதிக முக்கியத்துவமான பிரச்சனையை சமாளிக்கும் நேரத்தில் ஆபத்திற்கு உள்ளாகலாம். இந்த குடும்ப அமைப்பு எதிர்காலத்தில் எந்த வகையில் மாற்றம் பெறும் என்று எண்ணுகிறீர்கள்? குடும்ப அமைப்பின் பரிணாமம் மற்றும் மாற்றங்கள், சமூகத் தேவைகளை குடும்பத் தேவைகளுக்கு ஏற்றபடி தகவமைக்கும் வகையில் தான் ஏற்படுகின்றனவா?
எஸ்.பி.திவ்யா: போகிற போக்கை பார்த்தால் ஆம் என்று சொல்வதற்கு இல்லை. சிறு குடும்ப அமைப்பு, நவீன வாழ்க்கை முறையோடு இணையும் போது, என் அனுபவத்தில் குடும்பத் தேவைகளை மற்ற தேவைகளோடு சமமான அளவில் பூர்த்தி செய்ய முடிவதில்லை. கூட்டுக் குடும்ப அமைப்பும், கிராம வாழ்க்கையும் அதற்கே உரித்தான பிரச்சனைகளுடன் திகழ்ந்தாலும், பெரியவர்களை பாதுகாப்பதில் அது மேலான முறையில் செயல்படுகின்றது.
இதற்கு மாற்று வழியை தொழில்நுட்பம், குறிப்பாக இணையம், மறைமுக பணிச் சூழலை உருவாக்கியுள்ளதன் மூலம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஆனால், அதுவே முழுமையான தீர்வு அல்ல. அன்றாட இணையவழி நெடும்பயணம் மேற்கொள்ளுதலை தொழில் மையங்கள் மெதுவாக தான் பரிசீலிக்கின்றன. இதனை விரைவில் நெறிப் படுத்தினால், குடும்பங்கள் வாழும். இணைய வழி முகாந்திரங்களான சமூக வலைதளங்கள், இரு முனை கத்தி போல செயல்படுகின்றன. ஒரு பக்கம் அவை குடும்ப அமைப்புகளுக்கு உதவுவது பொலிருந்தாலும், மற்றொரு பக்கம் அவையே சுமையாக மாறி விடுகின்றன.
குழந்தைகளை வளர்ப்பது என்பது குதிரைக் கொம்பு. நாம் பாலூட்டிகள். நமக்கு அரவணைப்பு தேவை. பள்ளிக் கூடங்களை வேண்டுமானால், மெய்நிகர் யதார்த்தம் சுலபமாக தூக்கி எறிந்து விடலாம். வீடு என்கிற அமைப்பை அது அசைக்கவே முடியாது. நமக்கும் இன்று கைகுலுக்கல்களும், நேரடிக் கூட்டங்களும் தேவைப் படுகின்றன. ஆனால் தொழில்நுட்பம் இவற்றில் இருந்து நம்மை விடுவித்து விடும். நாம் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து கொண்டு நமது பணிகளை செய்யும் சூழல் ஏற்படும்.
கரோலின்: ஒரு ஊழல் அரசாங்கத்தை மக்கள் எதிர்த்து நிற்கும் படியாக இந்த கதை பயணிக்கிறது. இந்தக் கதையில் நீங்களும் ஒருவராக இருந்தால், யாராய் இருந்திருப்பீர்கள்? அந்த மருத்துவரா? தகவல் சேகரிப்பாளரா? பின்னால் இருந்து மக்களை பாதுகாக்கும் அந்த நெட்வொர்க்-ல் ஒருவாரா? இல்லை இவை எதுவும் இல்லாமல் மற்றொருவரா?
எஸ்.பி.திவ்யா: தகவல் சேகரிப்பாளர்! மூன்றாவது கேள்விக்கு பதில் அளிக்கும் போது சொன்னபடி, இந்தக் கதையின் நாயகர்கள் என்னில் பலவற்றை எடுத்துக் கொண்டார்கள். நான் pattern recognition, machine intelligence மற்றும் signal processing பணிகளை செய்திருக்கிறேன். இவை அனைத்திலும், சச்சரவான சூழலில் இருந்து எப்படி தகவலை எடுப்பது என்பதை கற்றுத் தெளிந்திருக்கிறேன்.
பின்னணியில் இருந்து மக்களை காக்கும் ஒரு போராளிக் குழுவில் நான் இருப்பேனே என்பது தெரியாது. நான் ஆபத்திற்கு பயப்படுபவள். என் நிஜ வாழ்க்கையில் எனக்கு இருக்கும் தைரியத்தை காட்டிலும், என் கதைகளில் அதிகம் தைரியத்தை புகுத்தி இருக்கிறேன். ஆனால், நிஜ வாழ்க்கையிலும், தேவையான போது நான் நிச்சயமாக எதிர்த்து நிற்பேன்.
கரோலின்: அடுத்து என்ன?
எஸ்.பி.திவ்யா: ஒரு சிறிய புனைவுக் கதை எழுதிய எனக்கு தற்போது மூடில்லை. ஒரு காத்திரமான அறிவியல் புனைவுக் கதையை எழுதவே திட்டம். அது, ரன் டைம்-ஐ காட்டிலும் வித்யாசமான உலகமாக இருக்கும். அது தான் என்னுடைய நேரத்தை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது. சிறிய புனைவுக் கதைகளை நான் எழுதிக் கொண்டு தான் இருப்பேன். ஆனால், பெருங்கதைகள் நிகழ்த்திக் காட்டும் முயற்சியில் அவற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கி விட்டன. Escape pod ல் என்னுடைய பதிப்பாசிரியர் பணி மும்முரமாக போய்க் கொண்டிருக்கிறது. நான் விரும்பும் சிறுகதைகளை எழுத அதுவே தூண்டுதலாக இருக்கிறது.
கரோலின்: உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
***

நன்றி தோழரே. விஞ்ஞான புனை உலகின் யதார்த்தங்களை, திவ்யா
அழகாக, புரியும்படி விளக்கியுள்ளார்.
ஜெயானந்தன்