- நான்டி ஓகுகே
- தமிழில் : கௌதம சித்தார்த்தன்
நான் அதை முதன்முதலில் கேட்டபோது எனக்கு பதினான்கு வயது இருந்திருக்க வேண்டும் – கர்ஜனை. அதற்கு எதுவும் என்னை தயார் படுத்தவில்லை. முந்தைய நாள் வேட்டையிலிருந்து திரும்பி வந்த அப்பா, என் தோளில் தட்டிக் கொடுத்து, “கிமுர்குக், சிறுவனாகப் போ, ஆனால் மனிதனாகத் திரும்பு” என்றார்.
அம்மா என்னை நினைத்து பயந்தாள். காடுகளில் சடங்குக்காக எண்ணப்பட்ட ஓகிக் சிறுவர்களின் குழுவைச் சந்திக்க நான் என் குடும்பத்தை விட்டுச் சென்றபோது, அவளுடைய கண்கள் கண்ணீரால் மூழ்கின. முந்தைய நாள் இரவு, அவள் என் படுக்கையில் தவழ்ந்து, “ஒரு தாயின் அன்பு இப்படித்தான் இனிமையானது” என்று கிசுகிசுத்து, என் வாயில் தேன் கட்டியைத் திணித்தாள்.
மறுநாள் சடங்கிற்காக வீட்டை விட்டு கிளம்பும் போது தேனின் சுவை இன்னும் என் வாயில் இருந்தது. நான் அதையெல்லாம் விழுங்க மறுத்துவிட்டேன். என் வாய் இனிமையால் ஊறும்போது நான் துளிகளை விழுங்கினேன். ஆனால், அதில் பெரும்பகுதி என் வயிற்றுக்குச் சென்றிருந்தாலும், சவரக்கத்தியின் கூர்ந்த முத்தமாக என் வாயில் அதன் எச்சம் இருந்தது.
கத்தியை ஏந்திய பெரியவர் ஒவ்வொரு பையனாக, ஒரு இடுப்பிலிருந்து மற்றொரு இடுப்புக்கும் நகரும் போது – அவனுடைய காலடியில் நுனித்தோல் விழுவதும், இரத்தத்தின் ஓட்டத்தையும், குழந்தைப் பருவத்தின் அழுகையும் பீறிட்டது – நான் நடுங்கினேன், நான் காத்திருந்தபோது, அம்மாவின் தேன் என் வாயின் மூலைகளிலிருந்து கசிந்தது. பெரியவர் என்னிடம் வந்ததும், வயதின் சுளிவுகளுடன் முகம் சுளித்து, கத்தியைப் பிடித்திருந்த கைகள் இறுகின. அவர் முகம் என் அம்மாவின் முகமாகவும், அவரது கைகள் என் அம்மாவின் கைகளாகவும் இருப்பதை நான் கற்பனை செய்தேன்.
என் அருகில் அமர்ந்திருந்தவர்கள் பல மாதங்கள் கழித்து இதைப் பற்றி கூறுவார்கள். “அவர் உன்னை வெட்டும்போது நீ சிரித்தாய். அதன்பின், நீ அதனைக் கடந்துவிட்டாய்.”
நான் வெளியேறினேன், ஆனால், சில சிறுவர்களைப் போலல்லாமல், நான் கத்தவில்லை. என் வாயில் தேனின் இனிமை மறைந்து, பயங்கரமான வறட்சி என் வாயில் நிறைந்திருந்தது, பெரியவரின் முகத்தில் அம்மாவின் முகம் மறைந்தது. அவர் பேச வாய் திறந்த போது, காட்டு மிருகம் போல் ஒரு கர்ஜனை எழுந்தது, நான் கடந்து சென்றேன்.
நான் வெளியேறினேன், ஆனால், சில சிறுவர்களைப் போலல்லாமல், நான் கத்தவில்லை.
பெரியவர் என் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் விழிப்புக்கு வந்தேன். சிறுவர்கள், அவர்களில் சிலர் சிணுங்கினார்கள் அல்லது அழுதார்கள் அல்லது அலறியடித்துக் கொண்டு வெளியே சென்றனர், இப்போது உற்சாகமடைந்து சிரித்தனர். எங்கள் குழுவில் நான் மிகவும் பலவீனமானவனாக கருதப்பட்டிருக்க வேண்டும், ஆனால் சில சிறுவர்கள் தங்கள் இரத்தப்போக்கு வலியால் புலம்பிக்கொண்டிருந்தபோது, நான் என்னுடையதைத் தாங்கிக் கொண்டேன், தைரியத்துடன் அல்ல, ஏனென்றால் என்னிடம் எதுவும் இல்லை. நான் மட்டும் கேட்ட கர்ஜனையின் பயம், என் இரத்தக் கசிவின் வலியைக் குறைத்துவிட்டதோ என்று நான் சந்தேகிக்கிறேன்.
“அந்த கர்ஜனையைக் கேட்டீர்களா?” என் அருகில் குனிந்திருந்த ஒரு பையனிடம் கேட்டேன்.
“என்ன கர்ஜனையா?” என்று வலியால் சுருங்கிய முகத்துடன் சொன்னான். “இல்லை.”
அவனுக்குப் பக்கத்தில் ஒரு சிறுவன், வெளிறிப்போன முகத்துடன், ஓடிப்போய், “எந்த கர்ஜனையும் இல்லை! நாங்கள் இன்னும் அந்தப் பகுதிக்கு வரவில்லை.”
“என்ன பகுதி?” என்று கேட்டேன்.
“உனக்குத் தெரியாதா?”
“இல்லை,” நான் சொன்னேன்.
“அப்படியானால் உனக்கு எதுவும் தெரியாது.”
எனக்கு எதுவும் தெரியாது. அப்பா என்னிடம் எல்லாவற்றையும் மறைத்தார். “கிமுர்குக், சிறுவனாகப் போ, ஆனால் ஆணாகத் திரும்பு” என்ற வார்த்தைகளைத் தவிர, வேறு எதுவும் அவர் என்னிடம் சொல்லவில்லை. அம்மாவைப் பொறுத்தவரை, ஆண்களுக்கான ரகசியங்களை ஆண் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதற்கான இடமாக அது இல்லை. எனக்கு அப்பா மீது கோபம் வந்தது. அவர் எப்போதும் அப்படித்தான். தான் செய்யத் திட்டமிட்டதை யாரிடமும் சொல்லவில்லை. அவர் தன்னைப் பற்றியோ அல்லது மற்றவர்களைப் பற்றியோ மிகக் குறைவாகப் பேசினார். எங்கள் மக்கள் இதுவரை அறிந்திராத சிறந்த வேட்டைக்காரர்களில் இவரும் ஒருவர் என்று ஓகிக் மக்கள் கூறினர். அவர்கள் சில சமயங்களில் என் தந்தையை அவர்களில் ஒரு சிறிய கடவுள் உருவாகப் பேசினார்கள். அவர்கள் என்னிடம், “கிமுர்குக், ஒரு மைல் தொலைவில் ஒரு கழுதைப்புலி வருவதை உங்கள் தந்தையால் உணர முடிந்தது.” மேலும், “அவர் அம்பு எய்தபோதும் தவறவில்லை” என்றார்கள். மேலும் அவரது தேன் அறுவடைத் திறன் குறித்து, “அவர் ஒருபோதும் தேனீக்களுக்கு பயந்ததில்லை, தேனீக்கள் எப்போதும் அவரைப் பார்த்து பயந்து கொண்டிருந்தன” என்று அவர்கள் கூறினர். மேலும், “தேனீக்கள் உங்கள் தந்தையின் புகை எது, எது இல்லை என்பது தெரியும், மேலும் அவை, அவரது புகைக்கு மிகவும் கீழ்ப்படிந்தன.” “உன் தந்தை தேன் கூட்டில் கையை நனைத்தார், குத்தவில்லை” என்று மக்கள் சொல்வதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அவர்கள் அப்பாவை “கர்ஜனை” என்று அழைத்ததில் ஆச்சரியமில்லை. பெயரில் பெருமை கொண்டேன். நான் கர்ஜனையின் மகன். அம்மா கர்ஜனையின் மனைவி, என் தந்தையை அறிந்திராத ஓகிக் மக்கள் அல்லாதவர்களிடம் அவர் சொன்னது இதுதான்: அந்நியர்கள், பாதுகாவலர்கள், சுற்றுலாப் பயணிகள், கென்ய அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள், வனத்துறையினர் மற்றும் காலநிலை மாற்ற ஆர்வலர்கள், பலர். ஓகிக் மக்களைப் பற்றியும், மவூ காடுகளுக்காக நாம் செய்யும் காரியங்களைப் பற்றியும் கேள்விப்பட்டவர்கள், இவை அனைத்தையும் நாங்கள் எங்கள் முன்னோர்களிடமிருந்து கற்றுக் கொண்டோம்.
நான் எப்படி வித்தியாசமாக மாறினேன் என்பது அப்பாவை ஆச்சரியப்படுத்தியிருக்கும். நான் வேட்டையாடுவதில் பரிதாபமாக இருந்தேன். நான் ஓடும்போது மிக எளிதாக சோர்வடைந்து விடுவேன். இரவைக் கண்டு பயந்தேன். மரங்கள் என்னை பயமுறுத்தின. அவரது இடுப்பின் ஒரே குழந்தையாக, அவரது பாராட்டப்பட்ட குணங்கள் எதுவும் என்னிடம் இல்லை என்று அப்பா வெட்கப்பட்டிருக்க வேண்டும். எங்கள் குடிசைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதை நான் முதன்முதலில் பார்த்தேன் – அப்போது எனக்கு பத்து வயது இருக்கும் – நான் ஒரு பேயைப் பார்த்தது போல் பயந்து நடுங்கினேன்.
அவரது இடுப்பின் ஒரே குழந்தையாக, அவரது பாராட்டப்பட்ட குணங்கள் எதுவும் என்னிடம் இல்லை என்று அப்பா வெட்கப்பட்டிருக்க வேண்டும்.
“ஒரு பாம்பு! ஒரு பாம்பு!” நான் அழுதேன். “ஓ, நான் செத்தேன்! ஐயோ, நான் செத்தேன்!”
அப்பா ஒரு மான் தோலை உரித்த இடத்திலிருந்து நிதானமாக எழுந்தார். அவர் வெறும் கைகளுடனும், ஓகிக் மக்கள் மீது வானம் நீலமானது என்று அவர் என்னிடம் சொன்னது போல், நிலையான முகத்துடனும் வந்தார். அவர் என் கைகளைத் திருப்பிப் பார்த்து, என் கால்களையும் உண்ணிப்பாகக் கவனித்து, “உன்னை எங்கே கடித்தது?” என்றார்.
“இல்லை,” நான் அழுதேன். “ஐயோ, நான் செத்து விட்டேன்! ஒரு பாம்பு! நான் செத்தே விட்டேன்!”
“வாயை மூடு!” அவர் எரிச்சலுடன் சத்தம் போட்டார்.
நான் குலுங்கி தரையில் விழுந்தேன். அவர் எங்கள் கதவைத் திறந்து வீட்டினுள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து, பழுப்பு நிறப் பாம்பை, அதன் வாலைப்பிடித்து இழுத்தபடி, அவர் வெளியே வந்தார். அதன் பேய்த் தலையை அசைத்தபோது அதை வாவகமாகப் பற்றி தன் மேல் அணிந்தார். இன்னொரு கையால், அதன் தலையை நெருங்கி அதன் கழுத்தை இறுக்கினார். அப்படியே, அவர் தனது பையை நோக்கி நடந்து, ஒரு கத்தியை எடுத்து, பாம்பின் தலையை வெட்டினார். நான் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டமாக ஓடிவிட்டேன். நான் அம்மாவைத் தேடி வயல்களுக்குள் ஓடினேன், மாலையில் அவளைக் கண்டுபிடிக்கும் வரை திரும்பி வரவில்லை, சிரித்து சத்தமாகச் சிரித்து, காட்டின் வாயில் வெள்ளை சுற்றுலாப் பயணிகளுக்கு போஸ் கொடுத்தேன்.
நான் குலுங்கி தரையில் விழுந்தேன். அவர் எங்கள் கதவைத் திறந்து உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்தார், பழுப்பு நிற பாம்பை அதன் வாலால் இழுத்து, அதன் தீய தலையை அசைத்தபோது அதை அணிந்தார். இன்னொரு கையால், என் தந்தை அதன் தலையை நெருங்கி அதன் கழுத்தை இறுக்கினார். அவர் தனது பைக்கு நடந்து, ஒரு கத்தியை எடுத்து, பாம்பின் தலையை வெட்டினார். நான் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். நான் அம்மாவைத் தேடி வயல்களுக்குள் ஓடினேன், மாலையில் அவளைக் கண்டுபிடிக்கும் வரை திரும்பி வரவில்லை. அங்கு, காட்டு வயல்களில், புகைப்படம் எடுக்கும் வெள்ளை சுற்றுலாப் பயணிகளுக்கு, சிரித்தபடி, சத்தமாகச் சிரித்தபடி, அபிநயம் செய்தேன்.
* * *
விருத்தசேதனம் சார்ந்த சடங்குகளுக்காக, நாங்கள் எங்கள் சமூகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிந்து பன்னிரெண்டு வாரங்கள் கழிந்துவிட்டது என்று நான் இப்போது எண்ணுகிறேன். காட்டு உயிரினங்களை ஒத்திருந்த எங்கள் உடலை, களிமண்ணால் வர்ணம் பூசப் போகிறோம் என்று எண்ணியிருந்த – எங்கள் குழுவில் இருந்த – ஒரே பையன் நான்தான் என்று தோன்றியது. என் அறியாமை அம்பலமானதும், எல்லோரும் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள், அப்போதுதான் சிறுவன் ஒருவன், “கிமுர்குக், கர்ஜனை உன் தந்தையா?” என்றான்.
எல்லாரும் இப்போது என்னை ஆராய்கின்ற கண்களால் பார்த்தனர். தங்கள் இடுப்பில் இருந்த புதிய காயங்களிலிருந்து இன்னும் புத்திசாலித்தனமாக இருப்பவர்கள் கூட, ஒருவர் பின் ஒருவராக தலையசைத்து, “உன் அப்பா கர்ஜனையாக இருக்கும் போது உனக்கு எப்படி இந்த விஷயங்கள் தெரியாமல் போனது?” என்றார்கள்.
“இல்லை, அவர் என்னிடம் சொல்லவில்லை,” என்றேன்.
“நீ கேட்டாயா?” என்று அவர்களில் ஒருவன் கேட்டான்.
“இல்லை.”
“ஏன்?”
“என் அப்பா எப்போதும் மிகுதியான பணியில் இருக்கிறார்,” என்றேன்.
“அப்படியானால் உன் அம்மா?”
“அவன் அம்மாவைப் பற்றிக் கேட்காதே” என்று இன்னொரு பையன் பதறினான். “இது ஆண்களின் விவகாரம்.”
“ஆனால் நாம் இன்னும் ஆண்கள் இல்லை.”
“இல்லை, ஆனால் நாம் விரைவில் வளர்வோம்.”
என் அறியாமையைப் பொருட்படுத்தாமல், எங்கள் பிரிவின் சோதனைகள் மற்றும் எனது விருத்தசேதனத்தின் வலி அனைத்தையும் நான் தாங்கிக் கொண்டேன், நான் சிறுவனாக விட்டுச் சென்ற அப்பாவை மகிழ்விக்கும் நம்பிக்கையில், நான் ஒரு மனிதனாகத் திரும்ப வேண்டும். நான் சிறுவனாக இருந்த அனைத்தையும் அறிந்தேன் – அப்பா காட்டில் இருந்து வேட்டையாடிய மிருகங்களின் பெயர்கள்; ஓகிக் மக்களுக்காக ஓடும் ஆறுகள்; அம்மா சொன்ன எல்லாக் கதைகளும்; வேட்டையாடும் போது நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் அல்லது உண்பதற்கு போதுமான தேன் இருக்கிறதா அல்லது நம் நோய்களைக் குணப்படுத்தும் மூலிகைகளை நினைவில் வைத்துக்கொள்ளும் நம் முன்னோர்களின் பெயர்கள். கர்ஜனையின் மகன் என்று அழைக்கப்படுவதன் மகிழ்ச்சியும் எனக்குத் தெரியும், அந்த ஆரம்ப நாட்களில் – நான் மோசமாக மாறத் தொடங்குவதற்கு முன்பு – என் தந்தை என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு, நாங்கள் ஊரூராக ஓடுவோம். வயல்வெளிகள் மற்றும் சில சமயங்களில் காட்டுக்குள், என் முகத்தில் அடிக்கும் காற்று, காலடியில் நொறுங்கும் இலைகள், வனப் பறவைகளின் சீழ்க்கை… அவை எனது சிறந்த நாட்கள்.
மோசமான நாட்களையும் பார்த்திருக்கிறேன். நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நாட்கள், அம்மா என் உடல்நலக்காப்பு மூலிகைகளைப் பறித்துவரக் காட்டிற்குச் செல்வார். என் அம்மாவும் நோய்வாய்ப்பட்ட நாட்கள் உண்டு. அவளுக்கு என்ன வியாதி என்று நான் கேட்டபோது, அவள் என்னை தன் வாயில் இழுத்து கிசுகிசுத்தாள், “உன் உடன்பிறப்பு எங்களிடம் வந்தான், ஆனால் ஒரு மிருகம் வந்து அதை துண்டு துண்டாகக் கிழித்துவிட்டது.” பிறகு அவள் மெலிந்த உடம்பில் என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
என் பெற்றோர் சண்டையிட்ட நாட்களும் இருந்தன; அப்பா கோபத்தில் கர்ஜித்தார், அவருடைய குரல் எங்கள் குடிசையை உலுக்கியது. சில சமயங்களில், அம்மா, கென்யாவைப் பார்க்க வேண்டும் என்ற தனது தேடலில், ஓகிக் மக்களின் நிலங்களை விட்டு வெளியேறியது. அப்போது, எனக்கு ஏழு வயது, என் அப்பா, ஓகிக் மக்கள் மற்றும் மரபுகளுக்குச் சேவை செய்வதற்காக வெளியில் போயிருந்தபோது, அம்மா என்னைப் பேருந்தில் அழைத்துச் சென்றார், எங்களிடம் இருந்ததெல்லாம் நான் பார்த்த முதல் கென்யப் பணம் — 100-ஷில்லிங் நோட்டு — மற்றும் எங்கள் ஓகிக் சமூகத்திற்கு வருகை தந்த ஒரு NGO பெண்ணின் பெயருடன் ஒரு அட்டை. ‘ஓகிக் பெண்களை நமது பழமையான வழிகளில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்ற அவரது கனவைப் பற்றிப் பேசினார். NGO அமைந்திருந்த நைரோபிக்கு நாங்கள் பாதி வழியில் செல்வதற்கு முன்பே பணத்தின் மதிப்பை அம்மா மிகைப்படுத்தி மதிப்பிட்டிருந்தார். எனவே நாங்கள் ஓகிக் நிலத்திற்குத் திரும்பிச் செல்ல பணத்தைக் கேட்டு தெருத் தெருவாகச் சென்றோம். நாங்கள் திரும்பியபோது, அப்பாவும் திரும்பி வந்துவிட்டார், அவர் தனது ஆத்திரத்தில் அம்மாவைக் குமிறினார் .
அடுத்த முறை என் குடும்பம் ஏறக்குறையப் பிரிந்தது, ஒரு வெள்ளை புகைப்படக்காரர் வெளியிட்ட ஓகிக் மக்களின் புகைப்படங்கள் கொண்ட புத்தகத்தை அம்மா வீட்டிற்கு கொண்டு வந்தபோது, அம்மாவும் அந்தப் படங்களில் இடம் பெற்றிருந்தார். அந்தப் புகைப்படக்காரர் தனது புத்தகத்தின் மூன்று பக்கங்களை என் அம்மாவுக்கு அர்ப்பணித்திருந்தார், அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்பதில் என் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை. என் அம்மா, கர்ஜனையின் மனைவி, மிக அழகான ஓகிக் பெண் என்பது இங்கு ஒரு பொதுவான பழமொழி. சுற்றுலாப் பயணிகள் உடனடியாக அவளைத் தேடி, தங்களது புத்தகங்கள் அல்லது படங்களுக்காக அவளது படத்தை விரும்பினர். மேலும் என் அம்மா பெண்களில் மிகவும் தாராள குணம் கொண்டவர். அவள் தன்னைச் சுதந்திரமாக கேமராக்களுக்குக் கொடுத்தாள், அதை விரும்பினாள். அவள் புன்னகைத்தாள். அவள் வாய் விட்டுச் சிரித்தாள். அப்பொழுது அவளிடம் ஒரு அசாதாரணக் கருணை பிரதிபலிக்கும். சில நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் அவருக்கு கென்ய ஷில்லிங்கில் பணம் கொடுத்தனர். புகைப்படப் புத்தகத்தின் பிரதி அவள் மடியில் விழுந்தபோது, அவள் தன் முழு அழகையும் எங்கள் ஓகிக் கட்டுப்பாடுகளையும் கண்டு கண்ணீர் உகுத்தாள். ஆனால், அப்பா அவளுடன் குறுக்கீடாக இருந்தார். அவள் மகிழ்ச்சியான, தாராளமான சைகைகளுடன் அபிநயம் கொடுத்த பக்கங்களை அவரிடம் காட்டியபோது, என் தந்தை புத்தகத்தைப் பிடுங்கி நெருப்பில் எறிந்தார்.
“எங்களுடைய சமூகங்களுக்கு எதிரான நபர்களுடன் ஒரு ஓகிக் நபர் எவ்வாறு கலக்க முடியும்?” அவர் கர்ஜித்தார்.
அன்று இரவு அம்மா கசப்பான விசும்பலுடன், எங்கள் குடிசையின் தரையில் புரண்டாள், ஏனென்றால் அந்தப் புத்தகத்தில் அவளுக்கு நிறைய அர்த்தம் இருந்தது. அன்றிரவு நான் சோகமாக அவள் அருகில் படுத்திருந்தபோது, அவள் என் வலது காதில் சாய்ந்து கிசுகிசுத்தாள், “கிமுர்குக், ஒரு நாள் நான் உன்னை இந்த இடத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்று உலகத்தைப் பார்க்கிறேன்.”
சிறுவயதில் அந்த கசப்பான நாட்கள் நினைவுக்கு வந்தது. ஆனால் அந்தப் பருவத்தில், ஆண்களின் வலிமை பற்றி எனக்கு என்ன தெரியும்?
* * *
எனது விருத்தசேதனத்தின் வலியை தோழர்களுடன் சகித்துக் கொண்டேன், அவர்களில் பெரும்பாலோர் கொரில்லாக்களைப் போல கால்களை வெளியே வளைத்துக் கொண்டு நொண்டியபடி நடந்தார்கள். ஒவ்வொரு முறையும், எங்களில் ஒருவர் எங்கள் கவட்டையைச் சுற்றி தோலைக் கிள்ளியபடி அழுதார். ஆனால் ஆண்களைப் போல வலியைத் தாங்கக் கற்றுக்கொண்டோம். எங்களைப் போலவே இங்கு வந்தாலும் ஆண்களாக வெளியே வர முடியாத சிறுவர்களின் துரதிர்ஷ்டத்தை எனது நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர்: கத்திக்கீறலில் இறந்த சிறுவர்கள், இரத்தம் நிற்காமல் வழிந்தபடியிருக்கும் சிறுவர்கள், காயங்கள் மோசமாகி காய்ச்சல் மற்றும் நரம்புப் பிடிப்பு ஏற்பட்டு இறந்த சிறுவர்கள்… இந்தக் கதைகள் எனக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியது, ஆனால், களிமண், இலைச்சாறு கொண்டு வரையும் உடல் ஓவியங்கள் மூலம், விரைவில் எங்களை திசை திருப்பிக் கொண்டோம்.
நாங்கள் எங்கள் உடலை வெள்ளை களிமண்ணால் வரைந்தோம். எங்கள் முகங்களை மிருகத்தனமான அம்சங்களாக மாற்றுவதை நான் விரும்பினேன். நாங்கள் கண்களை வெளியே உருட்டித் தள்ளிஎப்படி சிரித்தோம். நாங்கள் குரைத்தோம். நாங்கள் கத்தினோம். நாங்கள் கர்ஜித்தோம். நாங்கள் சிணுங்கினோம். நாங்கள் நினைக்கும் அனைத்துக் காட்டு மிருகங்களையும் விளையாடினோம். நாங்கள் விலங்குகளின் தோல்களை அணிந்தோம், எங்கள் தலைமுடியில் பறவை இறகுகளை ஒட்டிக் கொண்டோம். அந்தச் செயல்கள் பயமுறுத்தினாலும் தீங்கற்றவை, நாங்கள் அப்படியான இரவுகளைக் கழித்தோம்.
எனது நெருங்கிய தோழர்களுக்கு இரவுச் சடங்கு பற்றித் தெரியும். மீண்டும், கர்ஜனையின் மகனான எனக்கு சடங்கு பற்றி எதுவும் தெரியாது என்று அவர்கள் கேலி செய்தனர்.
“என் அப்பா என்னிடம் சொல்லவில்லை,” என்றேன்.
“ஒருவேளை அவர் அதை வேண்டுமென்றே தவிர்த்திருக்கலாம்,” என்று ஒருவன் கூறினான்.
“அல்லது அவர் உனக்காக அந்தப் புதிரை அழிக்க விரும்பவில்லை,” இன்னொருவன் கூறினான்.
“ஆம்,” மற்றொருவன் ஒப்புக்கொண்டான். “கதையைச் சொல்வதற்கு முன்பே ஒரு கதை எப்படி முடிவடையும் என்று யாராவது என்னிடம் சொன்னால் நான் அதை வெறுக்கிறேன்.”
“ஒரு கதையின் முடிவை அதன் ஆரம்பத்திலிருந்தே அறிய விரும்புகிறேன்” என்று மற்றொரு சிறுவன் கூறினான்.
“முட்டாள்தனம். அது பிறப்பதற்கு முன்பே இறப்பது போன்றது”.
“எனக்குக் கதைகள் பிடிக்காது.”
“நல்ல ஓகிக் கதைசொல்லிகளை நீ கேட்கவில்லை என்று நினைக்கிறேன்.”
“என் தந்தையைப் போல.”
“என் தந்தையைப் போலவே.”
“ஓ, என் அம்மா உயிருடன் இருக்கும் சிறந்த ஓகிக் கதைசொல்லி.”
“அது உண்மையல்ல” என்றேன். “என் பிரியமான அம்மா சிறந்த கதைகளைச் சொல்கிறார்.”
சிறுவர்கள் கெக்கலியுடன் சிரித்தனர், அவர்களில் ஒருவன் அபிநயம் செய்தபடி, “இல்லை, உன் அம்மா சுற்றுலாப் பயணிகளுக்காக சிறந்த புகைப்படங்களைத் தருகிறார்” என்றான்.
மற்ற சிறுவர்கள் தங்கள் சிரிப்பை சட்டென நிறுத்தி, மின்னலுக்குப் பிறகு அடிக்கும் இடியின் தீப்பொறிக்காகக் காத்திருந்தனர்.
நான் ஒன்றும் சொல்லவில்லை. நான் எதுவும் செய்யவில்லை. என் அம்மா சுற்றுலாப் பயணிகளுக்கு புகைப்படங்களுக்கான அபிநயம் கொடுப்பதும், அப்பா போன்ற சில ஓகிக் மக்கள் சுற்றுலாப் பயணிகளின் செய்கைகளைப் பிடிக்கவில்லை என்பதும் செய்தி இல்லை. நாங்கள் – ஓகிக் மக்கள் – இருளில் இருப்பதைப் போல பணத்தைக் கொண்டு வந்து கேமரா விளக்குகளை ஒளிரச் செய்யும் வெளிநாட்டினரை எம் மக்கள் விரும்பவில்லை, ஆனால், அவர்கள் எங்களை விடுவிக்க வந்தவர்கள் என்று அம்மா சொல்கிறாள். ஆனால் அத்தகைய வெளியாட்களுடன் பழகுவதாக அம்மாவுக்குப் பெயர் இருந்தது.
“என் அம்மாவின் கதைகளை நீங்கள் கேட்கவில்லை,” நான் இறுதியாகச் சொன்னேன். “அவை அவளுடைய முகத்தைப் போலவே அழகாகவும் அவளுடைய புகைப்படங்களைப் போலவே அற்புதமாகவும் இருக்கின்றன.”
சிறுவர்கள் என் வார்த்தைகளை மென்று தலையசைத்தார்கள். ஒன்றன் பின் ஒன்றாக, அவர்கள் என்னிடம் தடுமாறி, “அந்தப் புத்தகத்தில் அவள் படத்தைப் பார்த்தேன்” என்றார்கள்.
“நானும் பார்த்தேன்.”
“நானும்.”
“நானும் பார்த்தேன்.”
“ஓகிக் நிலத்தில் சுற்றுலாப் பயணி அந்தப் புத்தகத்தின் மூன்று பிரதிகளைக் கொண்டு வந்ததை நான் கேள்விப்பட்டேன்.”
“இல்லை, நான்கு.”
“ஐந்து.”
“இல்லை, ஏழு.”
“இல்லை, மூன்று.”
ஒரு பெரியவர் எங்களிடம் ஊடுருவி, சத்தத்துடன் எங்களை அடக்கும் வரை அவர்கள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.
* * *
இரவு மெல்ல வந்து மவூ காடுகளையும் ஆறுகளையும் எட்டிப் பார்த்தது. ஒரு சில நட்சத்திரங்கள் வெளியே வந்தன. காடுகளின் இரவு நேர இரைச்சல்களில் கலந்து எழுந்தது ஓர் ஒற்றொலி. அந்த வினோதமான சத்தம் எனக்கு முன்பே தெரிந்திருந்தது. எனது பெற்றோரின் குடிசைகளில் இருந்தபோதும், இரவுகளில் என் குடும்பம் வெளியில் அமர்ந்து அப்பா இரவு உணவை சாப்பிட்ட போதும் அல்லது அம்மா சொன்ன கதைகளிலும் நான் கேட்டிருக்கிறேன்.
ஆனால் இங்கே காடுகளில், ஒலிக்கும் அந்தப் பேரொலிக்காக, காத்திருந்தது போல சுழட்டிச் சுழட்டி ஆடியது. விவரிக்க வார்த்தைகள் இல்லாத இரவின் ரகசியத்தை என் இரத்தத்தில் மெதுவாக உணர்ந்தேன். எனது நெருங்கிய தோழர்கள் அதைப் பற்றி கிசுகிசுத்தார்கள், அவர்களின் பெற்றோர், மூத்த உடன்பிறப்புகள் சொன்ன வார்த்தைகள் அல்லது தங்கள் உயிரணுக்களில் சுரக்கும் அதிர்ச்சி, மற்றும் இரவின் மர்மத்தை அவர்களிடம் வெளிப்படுத்தியவற்றின் துண்டுத் துணுக்காணிகள்… அவர்களுக்குள் சுருண்டு கொண்டது.
“ஒரு மிருகத்தின் அழுகை,” யாரோ என்னிடம் கிசுகிசுத்தனர்.
“ஒரு அரக்கனின் கர்ஜனை,” மற்றொருவன் கூறினான் .
“நீங்கள் முன்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டேன்.
“இல்லை” என்றார்கள். “உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியாது ” நான் சொன்னேன்.
“ஆனால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.”
“என் மூத்த சகோதரன் இந்தக் கர்ஜனை பற்றி என்னிடம் கூறியுள்ளான்.”
“ஓ.. கர்ஜனை.”
அவர்களிடையே சிரிப்பு வெடித்தது, ஆனாலும், விரைவில் பதட்டமான சூழலையும் உட்படுத்தியது.
முதன்முதலில் அதைக் கேட்டபோது, என் இரத்தம் குளிர்ந்தது போல் தோன்றியது. திடீரென்று ஒரு நடுக்கம் என்னுள் ஓடியது. காற்றுப் புடைப்புகள் என் உடலை மூடின. மலேரியா வந்துவிட்டது போல் நடுங்கினேன். என் தோழர்களில் சிலர் பயந்து சிணுங்கினார்கள், குறிப்பாக என் வயது அல்லது சற்று குறைவான சிறுவர்கள். ஆனால் எங்களில் மூத்தவர்களும் சத்தத்தில் குமுறுவது போல் தோன்றியது. ஓகிக் காடுகளிலோ வயல்களிலோ உடல் வடிவில் காணப்படாத ஒரு மிருகத்தின் தொண்டையில் இருந்து வெளியேறுவது போல, ஒரு மிருகம், பல்லைக் கவ்வுதல், பாதங்கள் விரிந்து, இரையின் இரத்தம் சொட்டச் சொட்டச் சொட்டுவது போன்ற ஒரு பயங்கரமான சத்தம் அது, கொடூரமானதும் கொடுமையானதுமான உயிர் பிடுங்கும் ஒலிச்சேர்க்கை.
ஒருவகையில், எங்கள் குடிசைக்குள் பாம்பு ஊர்ந்து வந்து நான் அப்பாவைக் கூப்பிடும்போது ஏற்பட்ட அச்சத்தை விடவும், அந்தச் சத்தம் எனக்குள் நுழைந்து ஆழமான பீதியை உண்டாக்கியது. அப்பாவிடமிருந்தும் அவரது புராணக்கதையிலிருந்தும் துண்டிக்கப்படுவோமோ, என் தாயின் அன்பிலிருந்து துண்டிக்கப்படுவோமோ அல்லது ஓகிக் மக்களின் நிலங்களிலிருந்து தொங்கும் என் தொப்புள் கொடி துண்டிக்கப்படுமோ என்ற பயம் அது. மரண பயம் அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இருந்தது. இது வாழ்க்கையின் குறுக்குவெட்டாய் கிழித்துப்போடும் முரண்பாடுகளின் மொத்த பயம். என் உரு சிறுவனாக அப்பாவிடம் திரும்பி வந்துவிடுமோ என்ற பயம், என் குடும்பம் பிரிந்து கிடப்பது, என் முன்னோர்கள் என்னை முற்றாக நிராகரித்து துப்புவது போன்ற பயம். இவை அனைத்தும்.. இன்னும் அதிகமாக உருவேறிக் கொண்டே இருந்தது…
கர்ஜனை! கர்ஜனை! இன்னதென்று பெயரிட முடியாத உரு அதில் தெரிந்தது. இன்னும் அது என்னிலிருந்து மிகவும் அந்நியமானதாகவும், நான் முன்பின் அறியப்படாததாகவும் இருந்தது.
நாங்கள் யாருடைய புல்வெளியை ஆக்கிரமித்தோமோ, அது ஒரு குடியுரிமைப் பேயைப் போல காட்டில் எங்களை வேட்டையாடியது. அது நம் மீது வீசுமா? அது நம்மை விழுங்கிவிடுமா? அது நம்மைக் காப்பாற்றுமா? அது காலநேரம் காணாமல் இன்னொரு இரவு வருமா? அது எங்களை வேட்டையாடி பயமுறுத்தியது. எங்களில் சிலர் அழுதோம். குளிர்ந்த இரவில் என் கன்னங்களில் ததும்பிய கண்ணீர் சூடாக வழிந்தது.
ஒவ்வொரு நாளும் இரவோடு இரவாக உறுமல் வந்தது. காடுகளில் வாரக்கணக்கில், கர்ஜனை எங்களுடன் வாழ்ந்தது. மேலும், இயற்கையின் கட்டளை போல வந்து, நடு இரவில் ஒடுங்கி விடும் சடங்கு அது என்ற எண்ணம் எனக்குள் ஒலித்துக் கொண்டது.
வாரங்கள் கடந்து செல்ல, கர்ஜனையின் ரகசிய வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டோம். இது ஒரு ரகசிய மொழி, ஆண்களாக இருப்பவர்கள் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும். கர்ஜனையில், நான் அப்பாவையும் அவரது புராணக்கதையையும் கேட்டேன். நான் என் அம்மாவைக் கேட்டேன், அவளுடைய அழகையும் அவளுடைய எல்லாத் துயரங்களையும் பார்த்தேன். பின்னர் நான் அவர்களிடமிருந்து விலகி, என் சொந்த விதியாக இருந்த காட்டுக்குள் செல்வதைக் கண்டேன்.
கர்ஜனையில், நான் அப்பாவையும் அவரது புராணக்கதையையும் கேட்டேன். நான் என் அம்மாவைக் கேட்டேன், அவளுடைய அழகையும் அவளுடைய எல்லா துயரங்களையும் கண்டேன்.
இளம் வயதினராகிய நாங்கள், கர்ஜனையுடன் நன்கு பரிச்சயம் கொண்டதால், நாங்கள் வீட்டை விட்டுப் பிரிந்திருக்கும் நேரம் விரைவில் முடிந்துவிடும் என்பதை நாங்கள் அறிந்தோம். கர்ஜனையின் ரகசியக் கருவியை ஓகிக் பெரியவர்கள் எங்களுக்கு அம்பலப்படுத்தியபோது அதன் முடிவு குறித்து உறுதியாக இருந்தோம்.
அப்பாவின் கைகளில் நான் பார்த்த அது அங்கே இருந்தது – உரோமம், தோல் போன்ற ஒரு விலங்குக் கொம்பு!. என் பெருமையையும் சந்தோஷத்தையும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நாங்கள் சிறுவர்கள் அல்ல, இப்போது ஆண்கள்! அவரைப் புகழ்ந்து கத்தினார்கள். “கர்ஜனை! கர்ஜனை!” என்ற எங்களின் அழைப்பொலி ஓகிக் காடுகளில் நிறைந்தது. அப்பா கொம்பை உயர்த்தி சிரித்தபடி கர்ஜனை செய்ய, அந்த அற்புதமான அழைப்புக்கு நான் எதிர்க் குரல் கொடுத்தேன், கொம்பை மேலே உயர்த்தியபடி.
* * *
நான் சிறுவனாக வீட்டை விட்டு வெளியேறினேன், ஆனால் இப்போது என் அம்மாவிடம் ஒரு ஆணாகத் திரும்பியிருக்கிறேன், அவள் அவசரமாக என் கையைப் பிடித்துக் கொண்டு, “இது நைரோபிக்கு செல்ல நமக்கு ஒரு வாய்ப்பு, என் மகனே. இப்போது சுற்றுலாப் பயணிகளிடமிருந்து அதிக பணம் பெற்றுள்ளேன். கடந்த முறை போல் இது இருக்காது. வா போகலாம், கிமுர்குக். போகலாம், இந்த இடம் போதுமானதாக இல்லை. இந்தக் காட்டிற்கு வெளியே நிறைய இருக்கிறது. என்னுடன் வா.”
“இல்லை, அம்மா,” நான் திட்டவட்டமாகச் சொன்னேன். “நான் இங்கேயே இருப்பேன்.”
“நீ இங்கே இருக்க முடியாது. வா.”
“இல்லை.”
“வா..”வெளியே ஏதோ அரவம் கேட்கத் திரும்பி பார்த்தேன், “ஓ வாருங்கள் அப்பா..”
என் அம்மாவின் கண்களில் பயம் பற்றிப் படர்ந்தது,
என் தந்தை என் பின்னால், இறந்த மிருகத்தை தோளில் சுமந்தபடி நின்று கொண்டிருந்தார். மெல்ல, அதைத் தோளில் இருந்து இறக்கிப் போட்டு விட்டு, இரத்தம் தோய்ந்த கையை உலர்ந்த இலைகளால் சுத்தம் செய்தார், “நீங்கள் விரும்பினால் அவளைப் பின்தொடரலாம்” என்றார்.
“இல்லை,” நான் சொன்னேன். “நான் இங்கேயே இருக்கிறேன். நான் இப்போது ஒரு ஓகிக் மனிதன்.”
அப்பா என் பதிலால் ஈர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது அவர் அப்படி இருந்தார், ஆனால் அவர் எப்போதும், தனது உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டிய ஒரு மனிதர் அல்ல. அமைதியாக தன் குடிசைக்குள் நடந்தார்.
அம்மா ஒரு பையை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே போனாள். அவள் கண்ணீர் ததும்பித் தேம்பும் இரு கண்களாலும் என் கண்களைப் பார்த்தாள். நான் விலகிப் பார்த்தேன், அவள் வயல்களுக்கு வெளியே ஓடினாள், அவளுடைய உயரமான, அழகான உருவம் அவள் போகும் வரை தூரத்தில் மெதுவாகச் சுருங்கியது.
நான் அவளை மீண்டும் பார்த்ததில்லை.
நானும் அப்பாவும் இதைப் பற்றிப் பேசவே இல்லை. நான் அவளுடைய பெயரைக் கொண்டு வரும்போதெல்லாம், அவர் ஒரு கர்ஜனையுடன் என்னை உறுமினார்.
ஒன்றாக வேட்டையாடச் சென்றபோது கூட நாங்கள் அதிகம் பேசவில்லை. அவர் வார்த்தைகளை விட செயலாகவும், பேச்சாற்றலை விட கர்ஜனையாகவும் இருந்தார். பின்னர் ஒரு நாள், அப்பா வேட்டையாடும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு நான் இல்லாமல் காட்டிற்குச் சென்றார். அவர் திரும்பவே இல்லை.
அவருடைய முன்னோர்கள் சிலர் செய்ததைப் போலவே, அவர் அப்படிச் செல்வார் என்று எங்களுக்குத் தெரியும் என்று, எங்கள் ஓகிக் மக்கள் கூறுகிறார்கள். அவர் காட்டுக்குச் சென்று அங்கிருந்து முன்னோர்களின் உலகத்திற்குச் சென்று விட்டார். ஆனால் அவர் ஒரு காட்டு மிருகத்தால் தாக்கப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள். அவர் தனது மனைவியைத் தேடுவதற்காக ஓகிக் நிலத்தை விட்டு வெளியேறினார் என்றும் சிலர் கூறுகிறார்கள். நைரோபியில் அப்பாவைப் போன்ற ஒரு மனிதரைப் பார்த்ததாக வேறு சிலர் கூறுகிறார்கள். ஆப்பிரிக்காவின் தென்மேற்கு கென்யாவில் உள்ள மசாய் மாரா தேசிய வனவிலங்குக் காப்பகத்தில் பணி புரிந்த ஒருவர் அப்பாவைப்போல இருப்பதாக ஒருவர் பேசினார். எங்கள் காட்டின் உட்பகுதிகளில் அப்பாவைப் பார்த்ததாகக் கூறுபவர்கள் இன்னும் இருந்தனர், ஆனால் அவர்கள் அவரைச் சந்திக்க அருகே ஓடியவுடன், அவர் மறைந்து விட்டார் என்கிறார்கள்.
அம்மாவைப் பொறுத்தவரை, நான் அவளிடமிருந்து எதுவும் எதிர்பார்க்கவுமில்லை, அவளைப் பற்றி எதுவும் கேட்கவுமில்லை. எங்களை விட்டுப் பிரிந்த பிறகு அவள் மகிழ்ச்சியாக இருந்தாளா என்று எனக்கு சில சமயங்களில் ஆச்சரியமாக இருக்கிறது. எங்கள் ஓகிக் மக்கள், அவளையும் அவளுடைய அழகான புகைப்படங்களையும் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கும் அந்நியர்களுக்கும் அவள் வழங்கிய புகைப்படங்களின் அற்புதம் எனக்கு நினைவிருக்கிறது. நைரோபிக்கு எங்கள் சாலைப் பயணம் தோல்வியடைந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அவளைப் பற்றிய எனது சிறந்த நினைவு என்னவென்றால், எனது பருவமடைதல் சடங்கிற்கு முந்தைய இரவில், அவள் என் வாயில் ஒரு தேனைத் திணித்து, “ஒரு தாயின் அன்பு இது போன்ற இனிமையானது” என்று சொன்னது.
***
*விருத்த சேதனம் அல்லது ஆண் விருத்த சேதனம் எனப்படுவது, ஆண்குறியின் முன் தோலை நீக்கும் ஆப்பிரிக்க மக்களிடையே தொன்று தொட்டிருக்கும் சமயச் சடங்கு ஆகும்.
***
நான்டி ஓகுகே (Nnamdi Oguike) ஒரு நைஜீரிய எழுத்தாளர். மார்ச் 2016க்கான The Missing Slate என்னும் விளிம்புநிலை சமூகங்களின் குரல்களை ஒலிக்கும் பத்திரிக்கையின் ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது கதை ‘Easter in Jungle City’ ஏப்ரல் 2015 இல் ஆப்பிரிக்கா புக் கிளப் சிறுகதை போட்டியில் முதல் ரன்னர்-அப் பரிசைப் பெற்றது, அதே நேரத்தில் ‘I’m Wearing a Wine-Red Smoking Jacket, How about You?’ என்ற அவரது கதை இதே போட்டியின் 2018 பதிப்பின் இறுதிப் பட்டியலில் இருந்தது. Do Not Say It’s Not Your Country என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ஏப்ரல் 2019 இல் க்ரியட்ஸ் லவுஞ்ச் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஆப்பிரிக்காவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பத்து நாடுகளில் வாழும், ஆப்பிரிக்கர்கள் மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. மேலும், பான்-ஆப்பிரிக்க புத்தகமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் மனிதகுலத்தைக் கொண்டாடும் கதைகளை விரும்பி எழுதுகிறார். அவர் ஆப்பிரிக்க எழுத்தாளர்களுக்கான 2019 மோர்லாண்ட் எழுத்து உதவித்தொகையை வென்றுள்ளார்.
Threepenny Review, Dalhousie Review, Weganda Review, African Writer, மற்றும் Brittle Paper ஆகியவற்றில் அவரது பல படைப்புகளை எழுதியுள்ளார். அவர் தற்போது பிளைமவுத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக, படைப்பாற்றல் எழுத்தைப் படித்து வருகிறார்.
நன்றி : World Literature Today

சிறப்பு
அருமை. இது வரை வாசித்திராத களம்.
ஒரு கிராமத்தின் மன்மாதிரியாக மக்களால் உணரப்பட்ட குழந்தையின் நினைவுகளால் அமைக்கப்பட்ட கதைக்களம், அருமையான மொழிபெயர்ப்பு, ,மேலாக கடினம் நிறைந்த பணியும்,வாழ்த்துகள் தமிழி,,❤️