- நெற்கொழு தாசன்
விலகல்கள்
முடிவற்றவைகளாக நேர்ந்து விடுகையில்
வண்ணத்துப்பூச்சிகள் எங்கு சென்று விடுகின்றன
எப்படியோ ஒருதுளி வெளிச்சத்தை
இருளுக்குள் ஒளித்து விடுகையில்
அழிவுற்ற நகருக்குள்
வரும் முதல் பயணியைப் போல்
எப்படித் திரும்பி வருகின்றன
நெடுஞ்சாலையொன்றின் விபத்தென
நின்றுவிட்ட நினைவின்
இடைவெளிகளுக்குக்கிடையில்
நதியை கடலை ஒரு மலரை எதற்காக வைக்கின்றன
மிஞ்சியிருப்பது
ஒரு சிறு தானியம் தானே.
***
நெருக்கமென்பது
அந்தியில் உதிர்கின்ற
மஞ்சள் இலையைப்போல
சலனமில்லாமல் நீங்கிவிடுதல்
பரிசுத்தமான
கேள்வியேதுமில்லாமல்
ஒரு துரோகத்தை செய்துவிடுதல்
புராதனங்களால்
பொதி செய்யப்பட்ட அன்பை
கருணைகளின் கைகளால் பற்றிக்கொள்ளாமலிருத்தல்.
இவைகளில் எதோவொன்று நேர்ந்துவிடுகையில்
கனிந்துவிட்ட கூழாங்கற்களென
இயல்பாகிவிடுகிறது வாழ்வு.
***
சாமி தெருவில் நடக்கத்தொடங்கிவிட்டது.
வழிபாட்டின் உச்சத்தொனி
வாழ்கின்றவர்கள் பாக்கியவான்களானோமென்றபடி
நிகழ்ந்தவைகள் நிகழாதவைகள்
நிகழ்ந்து விடுபவைகளென
கலையாடிக்கொண்டிருக்கின்றன.
புனிதர்கள் பேருரையை தயார் படுத்திவிட்டார்கள்
அற்புதங்களின் வருகையென
தூதுவர்கள் முன் சென்று கொண்டிருக்க
குறிசொல்லிகள் வாலாயமிக்கதான ஒப்பிப்புக்களை
ஒத்திகை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
நகரத்தின் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்ட
பழைய காலத்தின் மீதும்
வீட்டுக்கு திரும்பாதவர்களின் வாசனைகள் மீதும்
அகல்களின் புதைமேட்டில் மூடிக்கிடக்கும்
இருளின் மீதும்
உள்ளங்கையில் நலிந்து கிடக்கும்
வாழ்வின் மீதும்
எந்த அதிசயமும் நிகழ்ந்து விடாதோவென
கட்டியக்காரனின் குரலுக்காய் காத்திருக்கிறாள்
தேச ஒருமைப்பாட்டின்
எரியுண்ட வரைபடத்துடன் தாயொருத்தி.
சாமி
புனிதர்கள் குறிசொல்லிகள்
தூதுவர்களுக்குமான வரலாறு
ஒருபோதும் அந்தத் தாயை எழுதி விடுவதில்லை.
***
நெற்கொழு தாசன் – சமகால இளம் தலைமுறையைச் சார்ந்த ஈழக் கவிஞர்.
