- லில்லி போட்பரா
- ஆங்கிலத்தில்: கிறிஸ்டினா ஸ்ட்ராவிக் ரியர்டன்
- தமிழில்: மோகன ரவிச்சந்திரன்
பல நாட்களாக அடுக்குக் குடியிருப்பு அமைதியாகக் காட்சி அளிக்கிறது. சகோதரர்களும் சகோதரிகளும் அமைதியாக விளையாடுகிறார்கள். அம்மாவும் அப்பாவும் பேசிக் கொள்வதில்லை. அமைதி மிகவும் திண்மமாகவும் வலுவாகவும் உள்ளது. பையன்களும் பெண்களும் தங்கள் பெற்றோர்களுக்கு இடையில் நின்று கொண்டு அவர்களைக் கேள்வி கேட்கும் பொழுது, சில சமயங்களில் அமைதி எதிரொலிக்கிறது. கேள்விகளுக்கு பெற்றோர்கள் ஒரே சமயத்தில் பதில் கூற வேண்டும். ஒரு நாள் பணியிலிருந்து சற்று முன்னதாகவே அம்மா வீட்டுக்கு வருகிறார். சகோதரன் இன்னமும் வரவில்லை. தந்தை ஏதோ வேலையில் இருக்கிறார். பெண் விளையாடிக் கொண்டிருக்கிறாள். தனக்குத் தானே பேசிக் கொண்டு, கேள்விகளைக் கேட்டு, அவற்றிற்கு வேறு குரலில் பதில் கூறிக் கொண்டிருந்தாள்.
அலென்கா தனது பொம்மைகளிடம் மன்னிப்பு கோரியவாறு, விரைவில் திரும்பி வந்து விடுவதாக, வேறு தொனியில் பதிலளிக்கும் குரலில் கூறுகிறாள். “அலென்கா, சமையலறைக்கு வா!” அம்மா கூறுகிறார்.
“அலென்கா, நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்,” அம்மா கூறுகிறார்.
அலென்காவை அச்சுறுத்தும் பார்வையுடன் அம்மா இருக்கிறார். அதற்கு என்ன அர்த்தம் என்று அவளுக்குத் தெரியாது. ஆனால் அது தவறான முகத்தில் வரவழைக்கப்பட்டது போல் இருக்கிறது.
“உனக்குத் தெரியுமா, அப்பா உனக்கு ஒரு பிறந்த நாள் ஆச்சரியம் தருகிறார்.”
உண்மைதான், அலென்கா விரைவில் பதினொரு வயதைப் பூர்த்தி செய்கிறாள். அவள் டீன் ஏஜ் பருவத்தை எட்டும் வருடம் இது. அலென்கா இனிமேல் ஒரு இனிய சிறுமி அல்ல.
“அப்பா உனக்கொரு சைக்கிள் வாங்கியிருக்கிறார்,” அம்மா கூறினாள். “ராக் போனி சைக்கிள்.”
அலென்கா எதுவும் கூறவில்லை. ஆனால் ஏதோ ஒன்று அவள் இதயத்தில் பதட்டத்தை உருவாக்கி, அவளைக் கோபம் கொள்ள வைக்கிறது. உண்மையில் அவளுக்கு ஒரு போனி தேவைப்படுகிறது. நீண்ட நாட்களாக அவள் ஒரு போனி சைக்கிள் மீது ஆசைப்பட்டாள். அதன் மூலம் அவள் சில்வா மற்றும் காத்ரீனாவுடன் ஒரு சிறிய அண்டைத் தெருவான “அமெரிக்கா” செல்ல முடியும். அவளிடம் சைக்கிள் இல்லாததால் அவளுக்கு அது மிகத் தொலைவாகத் தோன்றியது. அமெரிக்காவில் எப்படி எல்லாம் இருக்கின்றன, சரிவுகள் எவ்வாறு செங்குத்தாக இருக்கின்றன, எவ்வளவு கடினமாக பிரேக் போட வேண்டும் என்றெல்லாம் சில்வாவும் காத்ரீனாவும் கூறும் பொழுது, அவர்கள் வேறு ஏதாவது பேசினால் நல்லது என்று விரும்பினாள் அலென்கா.
“உனக்குத் தெரியுமா அலென்கா,” தவறான முகத்தில் வரவழைகப்பட்ட அதே பார்வையுடன் அம்மா தொடர்ந்தாள். ”மகிழ்ச்சியாய் இரு, அப்பா உண்மையில் மிகவும் முயற்சி செய்தார். உனக்கு அந்த சைக்கிள் வாங்க கடன் கூட வாங்கியிருக்கிறார்.”
“சரி அம்மா,” என்று கூறிய அலென்கா சன்னலோரம் உள்ள தனது பொம்மைகளிடம் செல்கிறாள். “எனக்கொரு சைக்கிள் பரிசாகக் கிடைத்துள்ளது,” என்று அவற்றிடம் கூறுகிறாள். பொம்மைகள் மேலும் கீழும் குதிக்கின்றன.
அவளுடைய பிறந்த நாள் வருகிறது. காலையில் அலென்காவுக்கு வயிற்று வலி. இருந்தாலும் பள்ளிக்குச் செல்கிறாள். அவ்வப்பொழுது வகுப்பு நடக்கும் பொழுது சைக்கிள் நீலநிறமாக இருக்குமா அல்லது சிவப்பு நிறமாக இருக்குமா என்று வியந்து போகிறாள் அலென்கா. அனைத்து போனி சைக்கிள்களும் நீலம் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கின்றன. சில்வாவின் சைக்கிள் மட்டும் பிங்க் நிறம். அவளுடைய அப்பா அதற்கு அவ்வாறு வண்ணம் தீட்டியிருந்தார்.
மதிய உணவுக்குப் பிறகு, அப்பா வந்தார். அலென்கா சற்று வினோதமாக உணர்ந்தாள். அவளுடைய முகம் அவ்வாறு மாறியது போல், அவளுடைய உண்மையான முகம் அதுவல்ல என்பது போலவும் அவளுக்குத் தோன்றியது. அவளை கீழ்த்தளத்திற்குச் செல்லுமாறு அப்பா கூறுகிறார். அலென்கா கீழே செல்கிறாள். அந்த சைக்கிள் அங்கு இருக்கிறது. இளம் நீல நிறம்.
அலென்கா அதைப் பார்க்கிறாள். பிறகு அவளுடைய அப்பாவைப் பார்க்கிறாள். அவள் இப்போது மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதை உணர்கிறாள். ஆனால் அவளுடைய வயிற்று வலி மேலும் வேதனை கொள்ள வைக்கிறது. அவள் அந்தச் சைக்கிளைத் தொடுகிறாள். குளிர்ச்சியான உலோகத்தின் ஸ்பரிசம் சற்று வலியைத் தருகிறது- அதுவும் சரிதான்.
“நன்றி அப்பா,” என்று கூறிவிட்டு, உடனடியாக அவளுடைய பொம்மைகளிடம் செல்ல விரும்பினாள். அவள் ஒரு ஆச்சரியமான பரிசைப் பெற்றதாக அவற்றிடம் கூற விரும்பினாள்.
“நீ ஒரு சவாரி செல்லவில்லையா?” அப்பா கேட்கிறார். அலென்காவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. “ஆமாம், கொஞ்ச நேரம் கழித்து.”
கீழ்த்தளம் மிகவும் குறுகலானது. அங்கு வெளிச்சம் குறைவு. அப்பா பெரிய உருவம். அலென்கா சிறியதாக இருக்கிறாள். அவளுடைய மூளையில் “கடன்” என்ற சொல்லை அவள் கேட்கிறாள். அவள் நகரவில்லை. அவளுடைய புதிய போனியின் அருகில், அப்பாவுக்குப் பின்னால் நின்று கொண்டிருப்பது அப்பா அங்கிருந்து செல்ல வேண்டுமென அலென்கா விரும்புவது போல தோன்றுகிறது. அப்போதுதான் சில்வாவும் காத்ரீனாவும் அங்கு வர முடியும். இறுதியாக அவர்களுடன் அமெரிக்காவுக்குத் தப்பித்துச் செல்ல முடியும்.
***
லில்லி போட்பரா (Lili Potpara) ஸ்லோவேனிய எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். ஜூபல்ஜனா பல்கலைக் கழகத்தில் ஆங்கிலமும் ஃப்ரென்ச் மொழியும் பயின்றார். ஸ்லோவேனியா மொழியிலும் ஆங்கிலத்திலும் பல படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். அவருடைய சிறுகதைகள் பல்வேறு ஸ்லோவேனியப் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவருடைய முதல் Bottoms up stories 2002 ஸ்லோவேனியா வெளியீட்டாளர் மற்றும் புத்தக விற்பனையாளர் அமைப்பின் சிறந்த இலக்கிய அறிமுகத்திற்கான விருதை வென்றுள்ளது.
நன்றி: World Literature Today

ஆச்சரியம், கதை உண்மையில் ஆச்சரியமாக்கியிருக்கிறது அதன் கடன் ஒரு நெருடலான சொல் அப்பாவின் அன்பையும் மீறி கடன் ஒரு மகளை மகிழ்ச்சியாக்கவில்லை,கதை அற்புதம் மொழிபெயர்ப்பு எழுத்தாளரின் பிரதிபலிப்பை தரம் குறையாமல் வாசகனிடம் கொண்டுசேர்க்கும் இலக்கியப்பண்பை பாராட்டியே ஆகவேண்டும்,தமிழிக்கு வாழ்த்துகள், வரவேண்டும் இன்னும்,