• தமிழாக்கம் : ச.வின்சென்ட் 

 

மேன் புக்கருக்கான நாவலை எப்படி உருவாக்குவது?

2017 மேன் புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் ஆறு நாவல்கள் இடம்பெற்றன. அவற்றின் ஆசிரியர்கள், ஒரு நாவல், புக்கர் பரிசுக்குத் தகுதியானதாக எது ஆக்குகிறது எனபதற்கான தங்கள் எழுத்து நுட்பங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

 

4321 நாவலின் ஆசிரியர் பால் ஆஸ்டர்:

வழக்கமாக எனது மனத்தில் நாவலின் வடிவம் வருவதற்கு முன்னர் அதன் கதைப்பொருள் வந்துவிடும். ஆனால் 4321 ஐப் பொறுத்த வரையில், எனது வாழ்க்கையில் முதன்முறையாக வடிவத்தின் கருத்து – ஒருவருடைய வாழ்க்கையை நான்கு வடிவுருக்களாக உடைத்து எழுத முடியும் என்ற கருத்து – முதலில் வந்தது. இந்த எண்ணம் என்னை எவ்வளவு கட்டாயப்படுத்தியது என்றால் அதனைக் கொண்டு என்ன செய்வது என்று உடனே எண்ணத் தொடங்கி விட்டேன். கதை மெல்ல மெல்ல என்மேல் திணித்துக் கொண்டது. இந்தச் சிறுவன், இந்த ஆர்ச்சி ஃபெர்கூசன், – நூலில் அவனுடைய நான்கு அவதாரங்களில் ஒவ்வொரு அவதாரமும் ஒரு பாதையில் போகிறது – அங்கேயே, நான் கண்டுபிடிப்பதற்கு வசதியாக ஏற்கனவே இருப்பது போலத் தோன்றியது. ஒவ்வொரு நாளும் நான் எனது எழுது மேசைக்குச் செல்வேன், அங்கே எனது மேசைக்குமேல் தொங்கிக்கொண்டிருப்பது போல கதை எனக்காகக் காத்திருக்கும். நான் செய்யவேண்டியதெல்லாம், அதைச் சேகரம் செய்து தாளில் வைக்கவேண்டியது தான்.

என்னுடைய முதல் உந்துதல் ஃபெர்கூசனின் கதையை அவனுடைய மத்திய வயது வரையிலும், அல்லது அவனுடைய முதுமை வரையிலும் கொண்டு சென்றடைவது என்பதுதான். ஆகவே, நான் எழுதத் தொடங்கினேன். 40, 50 பக்கங்கள் போனவுடன், இந்த நூல் மனிதவளர்ச்சியைப் பற்றியதாக இருக்கப் போகிறது என்று புரிந்து கொண்டேன், உறுதியாகவே, நமது வாழ்க்கையின் மிகுந்த ஆழமான காலம், தொடக்கத்திலிருந்து முதல் 20 ஆண்டுகள்தான். அப்போது தான் நாம் வளர்ச்சியடையும் சிசுப் பருவத்திலிருந்து ஏறத்தாழ வயது முதிர்ச்சியடைந்தவராக முழுமையடைகிறோம். இந்த ஆண்டுகளில் நமக்கு ஏதாவது புதியது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. கதை எனக்குள் ஊடுருவத் தொடங்கிய போது நான் நாவலின் பரப்பை நான் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். 

4321 நான் எழுதிய மற்ற நூல்களிலிருந்து மாறுபட்டது. இதில் மிக அதிகமாக விபரங்கள் இருக்கும். நான் வழக்கமாகப் போகாத விஷயங்களுக்குள் போகும். 1950 மற்றும் 1960 களின் அமெரிக்காவை, ஓவியத்தன்மையோடு முன்வைக்கிறது. முக்கிய கதை மாந்தருடைய வாழ்க்கையின் கதைகளையும் சொல்கிறது. எனது கதையில் முதல் முறையாக வரலாற்று நிகழ்வுகள் முன்புலத்தில் இருக்கின்றன. தொனியும்கூட மாறுபடுகிறது. அதே சமயம், என்னுடைய முந்தைய நாவல்களைத் தெரிந்தவர்கள் 4321 நான் எழுதியது என்பதை அடையாளம் கண்டுகொள்வார்கள். கதைகள் சொல்வதில் புதிய அணுகு முறைகளை எடுக்க என்னையே நான் அறைகூவலுக்கு உட்படுத்த எப்போதும் முயன்றிருக்கிறேன். எப்போதுமே என்னுள் இந்தப் பெரிய புத்தகம் இருந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்திருந்தேன்.

ஃபெர்கூசனுடைய வாழ்க்கை என்னுடைய வாழ்க்கையோடு பொருந்திப்போகிறது. நான் பிறந்த ஆண்டான 1947இல் தான் அவனும் பிறந்திருக்கிறான். நான் வசித்த இடங்களில் எல்லாம் அவனும் வசிக்கிறான். எனவே நாங்கள் கால வரலாற்றிலும் நிலவியலிலும் பங்குகொள்கிறோம். என்னுடைய வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட சில கூறுகள் நூலில் இடம்பெறுகின்றன. ஆனால் எளிதான ஒன்றுக்கொன்று இடைத்தொடர்பு இல்லை. எடுத்துக்காட்டாக, என் வாழ்வில் அமி ஷ்னைடெர்மேன் இல்லை. ஃபெர்கூசனுக்கு அடுத்தபடியாக அவள்தான் முக்கிய பாத்திரம். ஃபெர்கூசனுக்கிருந்த ஓரினச்சேர்க்கை அனுபவமும் எனக்கில்லை. ஆனால் ஆசை ஆசைதான். கற்பனை ஒரு வலிமையுள்ள சக்திதான். இந்தப் பகுதிகளை எழுத எனக்கு ஒரு சவாலாக இருந்தாலும், நாவலில் அவை  மிகக் கடினமான பகுதிகளாக இல்லை.

இதனை எதேச்சையானது என்பது பற்றிய நாவலென்று சொல்கிறார்கள். ஆனால் ‘எதிர்பாராதது’ என்ற எண்ணத்தைப் பயன்படுத்துவதை விரும்புகிறேன். ‘விபத்து’ என்பது பயன்படுத்தப்படக் கூடிய இன்னொரு சொல். தத்துவார்த்த மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு விபத்து நடக்கவேண்டிய ஒன்றில்லை. அது ஐயப்பாடான, எதிர்பாராத ஒரு பின்னிகழ்வு. எனினும் நாம் எல்லோருமே ஏதாவது ஒருவகையான விபத்துகளுக்கு உட்பட்டிருக்கிறோம். நமது வாழ்க்கை முழுவதுமே எதிர்பாராததைச் சந்தித்து வந்திருக்கிறோம். நீங்கள் தெருவில் நடந்து போகிறீர்கள். பனிக்கட்டியில் சறுக்கி விழுந்து காலை உடைத்துக் கொள்கிறீர்கள். அடுத்த 50 ஆண்டுகளுக்கு உங்கள் கால் உங்களுக்கு வலி கொடுத்துக் கொண்டே இருக்கும். இந்த விபத்து நடந்திருக்க வேண்டியதில்லை. ஆனால் அதனுடைய விளைவுகள் நீங்கள் யார் என்பதின் மையப் பகுதியாக ஆகிவிட்டன.

நூலுக்கான எதிர்வினைகளில் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்னவென்றால் 4321-இல் நான் காட்டியுள்ள அமெரிக்காவின் கறுப்பின வெள்ளையின உறவுகள் பற்றிய பிரச்சினை பற்றி யாருமே என்னிடம் கேட்கவில்லை. இது நாவலில் முன்புலப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் இது நாவல் முழுவதுமே இருக்கிறது: உதாரணமாக சமூக உரிமை இயக்கங்களை விவரிப்பதில், நானே நேரில் பார்த்த நியூ ஜெர்சி, நெவார்க்கில் 1967-இல் நடந்த கலவரங்களில், ஏமிக்கும் அவளுடைய கறுப்பின நண்பனுடனான உறவில், புத்தகத்தின் கடைசியில் வரும் அட்டிகா சிறையில் நடந்த படுகொலையில் காணப்படும். இதைப் பற்றி யாரும் இன்னும் ஏன் குறிப்பிடவில்லை என்று அறிய இன்னமும் முயன்று கொண்டிருக்கிறேன். அது தெரிந்தால் நான் என்னுடைய நாட்டைப் பற்றி இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

 

 

History of Wolves நாவலின் ஆசிரியர் எமிலி ஃப்ரிட்லண்ட்:

ஒரு கதை என்னவென்று அதன் முடிவுக்கு வரும் வரையில், முன்னால் வந்த அனைத்துக்கும் கடைசிக் காட்சி அல்லது ஒரு வரி சட்டென ஒளி தந்து வெளிச்சம் தரும் வரையிலும் உங்களுக்குத் தெரியாது என்று சொல்லப்படுகிறது. ஓநாய்களின் வரலாறு எழுதியபோது முடித்துவிட்டேன் என்று பலமுறை நினைத்தது உண்டு. அந்த முடிவுகளில் முதலாவதாக வந்த ஒன்று ஒரு இரவில் ஒரு கனவுபோல வந்த ஒரு பத்தி. அது லாஸ் ஏஞசல்சில் நான் வசித்தபோது ஒரு சிறு கதையை முடித்தபோது எழுதப்பட்ட சில வாக்கியங்கள். அந்தச் சிறுகதை உணர்ச்சி மழுங்கி சிக்கனமாக இருந்தது. அப்போது லாஸ் ஏஞ்சலிலிருந்த எனது வாழ்க்கைக்கு முற்றிலும் மாறாக இருந்தது. கதையினுடைய நாயகியான கதையின் 14 வயது கோபக்காரச் சிறுமியாக இருந்த ஒருத்தி தனது பழைய வாழ்க்கையை விட முடியாமல் வளர்ந்து விட்டாள். இந்தக் கடைசிப்பத்தி காலம் இடம் வழியாக குழப்பம் மிக்க குவியலாக இருந்தது,

சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை இரண்டாவது முறையாக முடித்தேன். இதற்குள் லிண்டா (அல்லது மேட்டி, மேட்லின்) கதைக்கு மூன்று மாதங்கள் ஒரு குறிப்பேட்டில் காலையில் கிறுக்கிய குறிப்புகளைக் கொண்டு பிற்பகல் தட்டச்சு செய்து 150 பக்கங்கள் சேர்த்துவிட்டேன். அண்மையில்தான் எனது கணவர் தனது பட்டப் படிப்பை நியூ ஜெர்சியில் முடிப்பதற்காக எனக்கு மிகவும் விருப்பமான எல் ஏ நண்பர்களை விட்டு விட்டு வந்திருந்தேன். நான் வேற்றிடத்திற்கு வந்துவிட்ட உணர்வுடன், தனிமையை அனுபவித்தேன். ஒவ்வொரு நாளும் லிண்டாவின் நார்த்வுட் வீடு நான் வசிப்பதற்குப் பழக்கமான இடத்தை அளித்தது. ஏரிகள் சாலைகளின் சிறு  வரைபடம் வரைந்தேன். மீன்களின் வகைகளையும், பனிக்கட்டிகளின் தன்மைகளையும் பற்றி ஆய்வு செய்தேன். ஆனால் லிண்டாவின் குரல்தான் என்னை அதிகம் கட்டாயப்படுத்திற்று. நான் முதலில் எழுதிய முடிவிற்கு அப்பால் அவளைத் தொடரந்து போன போது அவளுடைய அறிவுக்கூர்மையும் வெகுளித்தனமும் சேர்ந்து அவளுக்கு எப்படி ஒரே நேரத்தில் உட்பார்வையையும் பார்வையின்மையும் தந்தன என்பதில் நான் அதிகமதிகமாக ஆர்வம் காட்டினேன். புதிதாக எழுதிய உச்சகட்டத்தில் லிண்டா தனது சொந்த ஊரில் உதவி தேடி அலைந்ததை நீண்ட ஒரு காட்சியாக அமைத்தேன். மிகச்சிறந்த எழுத்தாளரான ஐமீ பெண்டரிடம் அதைக் காட்டியபோது, அதுதான் முடிவுபோல இருக்கிறது என்றார். நெடுங்காலம் அந்தக் கருத்தை எதிர்த்தேன். ஏனென்றால் அவருடைய விமர்சனம் கதையின் ஆழ்ந்த தர்க்க நிலையை எனக்குத் திறந்து காட்டிற்று. கதை நிற்கும் இடம் ஏன் அதனுடைய கால முடிவாக இருக்க வேண்டியதில்லை எனறு காண எனக்கு உதவிற்று.

எனவே இந்த இரண்டாவது முடிவு மூன்றாவதற்கு வழி வகுத்ததாக நினைத்தேன். நினைவு, குறிப்பாக பேரதிர்ச்சியின் நினைவு அலைந்து திரும்பியதாகவும் நினைக்கத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ச்சிகளைவிட நாவலைப் பற்றி லிண்டா என்ன நினைக்கிறாள் என்பது பற்றிய எண்ணங்களே எனக்குத் தோன்றின. இந்தத் திசைகளில் நாவல் பரிணாம வளர்ச்சியடைந்தபோது நானும் நகரங்களுக்கிடையே பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். முதலில் ஃபிலடெல்ஃபியாவின் புற நகர்ப்பகுதியிலும் பிறகு நியூயார்க்கிலும் வசித்தேன். இந்தக்கால கட்டத்தில் தான் ஒரு கணத்தில், லிண்டா நகரின் வழியாகப் போகும் காட்சி நாவலின் முடிவிற்கு அருகில் இருக்கலாம், அது முடிவாக இருக்காது என்று உணர்ந்தேன். இதற்குள் நாவலின் பிரதான நிகழ்வுகளை முடிவிற்குக் கொண்டுவந்துவிட்டாலும், லிண்டாவிடம் மிச்சமிருக்கும் கோபம், எச்சமிருக்கும் பசி இருக்கிறதே, அவை வெளியில் கொண்டுவரப்பட வேண்டும். எனவே நான் இன்னொரு முடிவை எழுதினேன். அதுதான் கடைசி அதிகாரம். வாழ்க்கையின் ஒருபகுதியின் நிகழ்வுகள் இன்னொரு பகுதியின் அனுபவங்களைத் தவிர்க்க முடியாதவாறு எப்படி பாதிக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்வதாக அமைந்தன. 

ஆனால் அதுவும்கூட அந்தநூலின் முடிவு இல்லை. கைப்பிரதி வெளியீட்டாளரிடம் போனபோது சிறு சிறு திருத்தங்கள் தொடர்ந்தன. 2016 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் நான் நியூயார்க் நகரில் திருத்தப் பிரதிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் நகரத்தில் மகப்பேறு சிகிச்சைக்காக இருந்தேன் என்று சொல்லுவது பொருத்தமாக இருக்குமா? இருக்கும் என்றே நினைக்கிறேன். மருந்துகளை ஊசிகள் மூலம் ஏற்றிக்கொண்டு, மருத்துவமனைக்குப் போய்க்கொண்டு அவசரமாக முடிக்க வேண்டிய காலக் கெடுவையும் சந்தித்துக் கொண்டிருந்தேன். குழந்தை இல்லாமல், ஹார்மோன் பிரச்சினையில், ஓநாய்களின் வரலாற்றின் தொடக்கத்தில் வருகின்ற இறப்பை புதிய அவசரத்தோடு பார்க்க வேண்டியிருந்தது. முதலில் சிறுகதையைத் தூண்டிய ஆசிரியரின் சாவு இல்லை, மாறாக அந்தச் சிறுவன் பாலினுடைய இறப்பு. அவனை அவனது பெற்றோர் அப்படிப் புறக்கணித்துவிட்டார்கள். அந்தக் காலக்கட்டத்தில் நான் ஒரு தாயாக ஐந்து ஆண்டுகளாக முயன்று கொண்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில் தான் சரியாக நான் புத்தகத்தின் பிரதிகளைத் திருத்தி சரிபார்க்கவும் வேண்டியிருந்தது. திருத்தி எழுதி முடித்த பிரதியைக் கொடுத்ததற்குப் பலநாட்களுக்கு முன்னர் நான் இரண்டாவது சுற்று மருந்துகளை நரம்பு வழியாக ஏற்றுவேன் என்று எனக்குத் தெரிந்திருக்க முடியாது. அதுபோலவே அடுத்த இலையுதிர் காலத்தில் எனது கடைசி முயற்சி எனது மகன் எலியட் பிறப்பதற்கு இட்டுச் செல்லும் என்றும் எனக்குத் தெரிந்திருக்க முடியாது. ஒரு முடிவைக் கொண்டு கதையை நீங்கள் புரிந்துகொள்ளும் தளமாகப் பிறகு வரும் நிகழ்ச்சிகளின் தேவையான முடிவு என்று பார்க்கும் ஒரு நம்பிக்கை அமைப்பைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஆனால் எந்த நிலையிலும் ஓநாயின் வரலாற்றை எழுதுவதும் முடிப்பதும் தவிர்க்க முடியாததாக இல்லை. கடைசியில் துரதிர்ஷ்டத்தினால், அல்லது பகையினால் அல்லது பயங்கரமான மனித அறியாமையால், சிறுவன் பாலைப் போல திறந்ததொரு முடிவு எனும் நேர்த்தியான பரிசு தரப்படாமல் வாழ்க்கையின் ஏதாவது ஒரு பகுதி வித்தியாசமாக இருக்கும் வரையில், வழியில் எந்தக் கட்டத்திலும் அது சிதைந்து போகலாம் அல்லது பாதை மாறலாம் அல்லது எழுதப்படாமல் போகலாம்.

 

 

Exit West நாவலின் ஆசிரியர் மோஹ்சின் ஹமித் :

நான் லாகூரில் பிறந்தேன். ஆனால் ஒரு கலப்பினத்தவன். நம்மில் பலர் கலப்பினத்தவர் போலவே தோன்றுகிறார்கள். நாம் வேறொரு கண்டத்தைச் சார்ந்தவர்கள் என்று நினைக்குமாறு நமக்குக் கண்கள் இருக்கும், தலைமுடி இன்னொரு கண்டத்திற்கு உரியதாக இருக்கும். நம்மில் பலர் உள்ளே கலப்பினத்தவராக இருப்போம். நிழற்படத்தில் நாம் வெளியில் தெரியாத அளவிற்கு கலப்பினத்தவராக இருப்போம். நாம் சிந்திப்பதில், நாம் பேசுவதில், நமது நம்பிக்கையில், நாம் யாரென்பதில் கலப்பினத்தவராக இருக்கிறோம். நான் பசிபிக் பெருங்கடலின், அட்லாண்டிக்பெருங்கடலின் இருகரைகளிலும் வசித்திருக்கிறேன். அரபுக்கடலின் வழியாக இந்தியப்பெருங்கடலில் ஒரு காலத்தில் கலந்த வற்றிய ஆறறின் அருகில் ஆசிய நிலப்பரப்பில் வாழ்ந்திருக்கிறேன்.

இது கலப்பினத்தாருக்கு அச்சம் தரும் காலம். தூய்மை, கலப்பில்லாததுதான் இப்போது தீயெனப்பரவுகிறது. அமெரிக்காவில் வெள்ளையரின் உயர்வு வெளிப்படையாகச் சொல்லப்படுவதன் எழுச்சியை மீண்டும் காண்கிறோம். ஐரோப்பாவில் குடிபெயர்வோருக்கு எதிராக வளர்ந்துவரும் உணர்வை, இந்தியாவில் இஸ்லாமியருக்கு எதிரான உணர்வை, சீனா, துருக்கி, மியான்மர் போன்ற ஆசிய நாடுகளில் வளர்ந்துவரும் குறுகிய மதவாதத்தைப் பார்க்கிறோம். நான் வசிக்கிற ‘தூய்மையானவர்களின் நிலம்’ என்று பொருள்படுகின்ற பாகிஸ்தானில் தூய்மையின்மையால் எவ்வளவு கொலைவெறியான போக்கு இருக்கிறதென்றால் எந்ந மனிதரும் பாதுகாப்பாக இருக்கும் அளவிற்கு தூய்மையாக இருக்க முடியாது.

சிலவேளைகளில் நான் வரவிருக்கும் பேரழிவை உணர்கிறேன். குழந்தைகளுடன் காரில் போகும்போது, மனைவியுடன் படுக்கையில் படுத்திருக்கும்போது, எங்களுடைய தொன்மையான நகரம் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்க ஆகியவற்றுக்கு இடையே இருந்த பண்டைய நகரங்களைப்போல, தினமும் நாம் செய்தித்தாளில் வாசிக்கும், திரையில் பார்க்கும் நகரங்களைப்போலப் போய்விடும் என்று நான் கற்பனை செய்கிறேன். இரத்த வெள்ளத்தை நான் கற்பனை செய்கிறேன். பயந்து ஒடுவதைக் கற்பனை செய்கிறேன். பிரியமானவர்களை விட்டுவிட்டுப் போவதைக் கற்பனை செய்கிறேன். இது நடக்குமென்று நான் நினைக்கவில்லை. நடப்பது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்.  ஆனால் குழந்தையாக இருக்கும்போது ஜாஸ் படத்தைப் பார்த்தபிறகு கடலில் நீந்தும்போது இருந்ததுபோல அந்தப் பயம் என்னுள் அடிக்கடி இருக்கிறது.

அந்த அச்சுறுத்தலிருந்துதான் Exit West வளர்ந்தது. நான் மிக மோசமானதை ஆராயவிரும்பினேன். நம்பிக்கையைக் காணவும் எனக்குத் தேவை இருந்தது. நான் ஒரு தந்தை. நம்பிக்கை இப்போது எனக்கு ஓர் ஆடம்பரம் இல்லை. என்னுடைய வேலையின் மிக அடிப்படையான தேவை.

இந்த நாவல் தன்வரலாறு இல்லை. அதாவது என்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் கதை இல்லை. எனினும் நான் அதை எழுதிய போது தன்வரலாற்றுக் கூறுகள் ஊர்ந்து நுழைந்ததைப் பார்த்தேன். நிலவியலைப் பொறுத்தவரையில் அது தன் வரலாறு. நாடியாவும், சயீதாவும் வாழ்ந்த பெயரிப்படாத நகரில் நான் வாழ்ந்திருக்கிறேன். அவர்கள் புகலிடம் தேடி ஓடிய லண்டனிலும். பிறகு சேர்ந்த சான் ஃபிரான்சிஸ்கோ பேயிலும் நான் வசித்திருக்கிறேன். நாவலின் கதைமாந்தர் திடீரென்று தோன்றும் ரியோ டி ஜெனிரோ, டிஜுவானா, டோக்கியோ இன்னும் பிற நகரங்களிலும் நான் காலம் கழிதிருக்கிறேன். எதேச்சையாக அந்த இடங்கள் வரவில்லை. அவை எனக்கு முக்கியமானவை. என்னுடைய வாழ்க்கைக்கு முக்கியமானவை அந்த இடங்கள். நாவலில் வரும் உணர்ச்சிகள், காதலின், குறிப்பாக முதல் காதலின் நினைவுகள், வயதாகிக் கொண்டிருப்பது பற்றிய எனது சிந்தனைகள், எனது குழந்தைகள் வளர்வதைப் பார்ப்பது, நமது வாழ்வுகளின் வேறுபாடுகளை அடையாளம் காண்பது, எனது அடுத்த வீட்டில் வசிக்கும் எனது பெற்றோரை அதன் விளைவாக வித்தியாசமாகப் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றைப் பற்றிய எனது உணர்ச்சிகளுக்கு நெருக்கமாக இருக்கின்றன.

கலப்பினத்தவனாக நான் மற்ற மக்களிடமிருந்து வேறுபட்டவன் என்று முன்னால் நினைத்தேன். ஆனால் எல்லோருமே கலப்பினத்தவர்கள்தான் என்பதை அறிகிறேன்.  ஒட்டுப்பிறவி என்பது மனித இனத்தின் உட்கூறு. அது நமது இயற்கை. ஒருசெல் உயிரிகளைப் போல நாம் இரண்டாக ஒரே மாதிரியான மனிதர்களாகப் பிரிவதில்லை. நாம் கலப்பினத்தவரோடு, தூய்மைக்காகப் போராடும்போது நம்மை எது மனிதராக ஆக்குகிறதோ, அதைத்தாக்குகிறோம். நம்மையே நாம் தாக்கிக்கொள்கிறோம்.

நான் Exit West ஐ எழுதியபோது, அத்தியாயங்கள் வளர வளர மொழி நடை மாறியதைப் பார்த்தேன். வாக்கியங்கள் நீளமாகி, மாயமந்திரச் சொற்கள் போல் ஆயின, பிரார்த்தனைகள் போல. அது எனக்குத் தகுதியானதாகத் தோன்றியது. நமக்கு எது அதிகமாகத் தேவையோ அதையே எழுதுகிறோம்

 

 

Elmet நாவலின் ஆசிரியர் ஃபியோனா மோஸ்லி:

நான் ‘எல்மெட்’டைத் தொடங்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நண்பர்கள் கூட்டத்தைப் பற்றி ஒரு நாவல் எழுதத் தொடங்கினேன். அவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வாழ்க்கையை அமைக்க முயன்று கொண்டிருந்தார்கள். அந்தக் கதை ஒரு பெண்ணால் கூறப்பட்டது. அவள் கொஞ்சம் உயரமானவள், சிவப்புத் தலைமுடி, கண்ணாடிகள்,  இலக்கிய நோக்கங்கள். அவளை லியோனா போஸ்லி என்று அழைப்போமே! லியோனா லண்டனுக்கு வந்து ஒரு வீட்டில் வேறு ஆட்களோடு சேர்ந்து வசித்தாள். அவள் அடிக்கடி காஃபிக் கடைக்குப் போவாள். அவளுடைய உணர்ச்சிகளைப் பற்றிச் சிந்திப்பதிலும் அவற்றை விவாதிப்பதிலும் அதிக நேரம் செலவிட்டாள். அவளுக்கு உறவு ‘நாடகம்’ இருந்தது.

இந்த நாவலை நான் முடிக்கவே இல்லை, முடிக்கவும் மாட்டேன். அதைப்பற்றி நினைக்கும் போதே கூனிக்குறுகிப்போகிறேன். கதைப்பின்னல் மந்தமானது. முக்கியப் கதைப்பாத்திரம் சப்பென்று இருந்தது. (என்னுடைய தனிப்பட்ட ஆளுமை எழுத்தில் சரியாக வரவில்லை போலும்) எல்லாவற்றிற்கும் மேலாக நான் அதை எழுதுவதையே வெறுத்தேன். நான் கதைப்படுத்திக் கொண்டிருந்த வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரவில்லை: அதை விவரிப்பதும் அதைப் பின்னர் வாசிப்பதும்கூட மகிழ்ச்சி தருவதாக இல்லை.

நான் எனது எழுத்தை ஒரு மருத்துவமாகவே பயன்படுத்துகிறேன். இது தன்னிலேயே ஒரு சிக்கலும் தரவில்லை. எனக்கு விருப்பமான எழுத்தாளர்கள் பலரும் இது போன்றதை மிகுந்த தாக்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திருக்கிறார்கள். சென்ற ஆண்டு தெளிவாகவே தன்வரலாறாகவும் உன்னதமாகவும் இருக்கும் பல நாவல்களை வாசித்திருக்கிறேன். எனக்கு அது சரிப்பட்டு வரவில்லை. சலிப்பூட்டும் தனிமொழியாகப் பல பக்கங்களை எழுதினேன். எப்போதாவது சுவையானது நடந்தால் என்னையே பாராட்டிக் கொண்டேன். நான் வேறு ஏதாவது எழுதினால் அது வழக்கமான ஒன்றைவிட்டு என்னை விலக்கிச் செல்லவேண்டும், அது என்னை எங்கேயாவது கொண்டு செல்லவேண்டும்.

என்னுடைய அனுபவங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவற்றைக் கொண்ட கதை மாந்தரைப்பற்றி ‘எல்மெட்’ சொல்கிறது. கதை டேனியல் என்ற 14வயது சிறுவனால் சொல்லப்படுகிறது. அவனுடைய தந்தை ‘டாடி’ என்று அழைக்கப்படுகிறார். அவனுடைய சகோதரி கேத்தி கோபக்காரி, இப்படித்தான் அவள் செய்வாள் என்று சொல்ல முடியாது. அவர்கள் வாழ்க்கை வசதியில்லாதது; நிலையில்லாதது. சமுதாயத்தின் விளிம்பில் அவர்கள் வசிக்கிறார்கள். ஒரு நிலைத்தன்மைக்காக அவர்கள் அவர்களுக்கென்று இல்லம்  ஒன்றுக்காகவும் ஏங்கினார்கள். வெஸ்ட் ரைடிங் யார்க்ஷையரில் ஒரு தோப்புக்கு அருகில் அவர்கள் வீடு கட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இடம் சொந்தம் இல்லை. இடச்சொந்தக்காரர்கள், அரைகுறை பிரபுத்துவ வம்சத்தினர் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்.

ஆகஸ்டில் எல்மெட் வெளியிடப்பட்ட பிறகு என்னிடம் இந்தப் பாத்திரங்களும் கதையும் எங்கிருந்து வந்தன என்று கேட்கிறார்கள். எளிமையான விடைகள் உள்ளன. வீட்டின் நில அமைப்பால் நான் உள்தூண்டல் பெற்றேன். இது உண்மை. நான் யார்க்கில் வளர்ந்தேன். அது சர்ச்சைக்கு உள்ளான பகுதிக்கு வடகிழக்கே இருந்தது. அப்பகுதியில் நான் என்னுடைய தந்தையுடன் சைக்கிளில் போயிருக்கிறேன். என்னுடைய பள்ளிக்கென்று குறிப்பிட்ட பகுதி அது. கதைப்பின்னலின் தொடக்கம் எதுவென்று புள்ளியிட்டுக்காட்டுவது எளிதில்லை. தாள லயம், தொனி, கதைவீச்சு ஆகியவை அனைத்தும் மேற்கத்தியது. பாத்திரங்களில் பலரும், நாவலினுடைய மையத்தின் நோங்கங்களும்கூட. நிலம், மனிதர், வன்முறை. இவைதான் கீல்கள். எனினும் நான் எழுதத்தொடங்கியபோது எடுத்துக்கொள்ளவிரும்பிய சமுதாய விஷயங்கள் நிறைய இருந்தன. ஒரு நாவலைத் தொடங்க இது சிறந்த வழியா என்பது பற்றி எனக்கு நிச்சயமில்லை. வேறொன்றை எழுதுவேனா என்று எனக்குத் தெரியாததால் இதனையே எழுதத் தொடங்கிவிட்டேன்.

உண்மையில், நான் சேர்த்துக்கொள்ள முடிவுசெய்த போட்டிபோடும் பல கருத்துக்களைப்பற்றி நான் சிந்திக்கும்போது,  நாவலில் ஏதாவது இசைவு இருக்கிறது என்றால் அது என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒன்று நான் சில அரசியல் திட்டங்களுக்கு இடையேயான அழுத்தங்களை ஆராய விரும்பினேன். வகுப்பு, தொழில், சொத்து உரிமை ஆகியவற்றின் முக்கிய பிரச்சினைகளாகத தோன்றுகிற சூழலை அமைக்க முடிவு செய்தேன். ஆனால் பாலியல் எதிர்பார்ப்புகள் சோதிக்கப்படும்போது அவை அதற்கு வழிவிடுகின்றன. மனித உடலின் எல்லைகள், அந்த எல்லைகள் பற்றிய பண்பாட்டுக் கருத்தியல்களோடு காட்டப்படும் கணங்களை உண்டாக்க முயன்றேன். ஆணின் ஆக்கிரமிப்புக்குப் பலியாக நேரிடலாம் என்ற நிலை குறித்து கேத்தி என்ற பதின்மவயதுப் பெண் அச்சமடைகிறாள்; வளரும்போது தாக்கப்பட்ட பெண்களின் அல்லது கொல்லப்பட்ட சிறுமிகளின் படிமங்களைச் சந்திக்கிறாள். பல சமயங்கள் அவை கற்பனைவயப்பட்டவை. இந்தச் சித்திரங்களின் உளவியல் தாக்கத்தை நான் தொடவிரும்பினேன் என்று நினைக்கிறேன். கேத்தி வன்முறை தவிர்க்கமுடியாதது போன்றதொரு தோற்றத்தினால் துன்புறுகிறாள். அவளது சக்தியின் பெரும்பகுதி, நாவலின் சக்தியும்கூட, இதனை வெற்றி கொள்ளும் அவளது முயற்சியிலிருந்து வருகிறது.

இப்படி, போட்டியிட்டுக் கொள்ளும் நோக்கங்களும், உயர்ந்த எதிர்பார்ப்புகளும் இருந்தன. எல்மெட் ஒரு நாவலாக செயல்பட்டால், அது கவர்ந்து, மகிழ்ச்சி தர வேண்டுமென்றால், அதற்குப் பார்வையாளராக உள்ள ஆனால் குறுக்கிடாத கதைசொல்லி தேவைப்பட்டது. அவர்  இந்தக் கருத்துக்களைக் குறிப்பாலுணர்த்த வேண்டும் அல்லது பிரச்சாரம் செய்யாமல் அலட்டிக்கொள்ளாமல் அந்தக்கருத்தைக் கொண்டுவர வேண்டும்.

 

 

Lincoln in the Bardo நாவலின் ஆசிரியர் ஜார்ஜ் ஸாண்டர்ஸ்:

பார்டோவில் லிங்கன் நாவலுக்கான உள்தூண்டல் நான் கேட்ட ஒரு கதை. சோக மயமான லிங்கன் அண்மையில் இறந்த தனது மகனுடைய கல்லறைக்குள் நுழைந்து அவனுடைய உடலோடு பேசுகிறார். இது என்னை மிகவும் பாத்தித்தது. ஆனால் அதை எழுத நான் தயங்கினேன். ஏனென்றால் அதற்கு என்னிடம் இல்லாத வளங்கள் தேவைப்படும் என்று (சரியாகவே) உணர்ந்திருந்தேன். ஒரு வரையறைக்குட்பட்ட திறமையும், அதனைவிடக் குறைவான கல்வியறிவும் கொண்ட ஒரு எழுத்தாளன் தனக்காக ஒரு தனிப்பட்ட இடத்தைப் பிடிக்கத் தொடக்கத்தில் கடினமாக உழைக்க வேண்டும். அவர் மட்டுமே செய்யக்கூடிய செய்யும் ‘இடம்’ அது. என்னைப் பொறுத்தவரையில் இந்த இடம் (என்னுடைய முப்பது வயதுக்கு மேல்தான். நடையில் பிறரைப் பல ஆண்டுகளாகப் பின்பற்றி அதன் பிறகு தான் அந்த இடத்தைக் கண்டுபிடித்தேன்) வேகமான, தன்னிலை (First Person) கதை சொல்லியாக, வேடிக்கையான நடையைக் கொண்டது. இந்த நடை அதன் கோட்பாடாக செக்காவ் சொன்ன கருத்தைக் கொண்டிருக்கும். “மகிழ்ச்சியாக இருக்கும் ஒவ்வொரு மனிதனும், எல்லோருமே மகிழ்ச்சியாக இல்லை என்பதை அடித்து தொடர்ந்து நினைவு படுத்த அவனுடைய உள்ளறையில் சம்மட்டியுடன் ஒரு சோகமான ஆளை வைத்திருக்க வேண்டும்”  என்றார். கதைகள் இருளடர்ந்து, அங்கதத்துடன், வசீகரத்துடன் இருந்தன. உலகாயதமும் கார்ப்பரேட் மயமும், உண்மையான அமெரிக்காவில் இருந்ததை (இருப்பதை) விட முடைநாற்றம் வீசுகின்றவையாக இருக்கும் மிகைப் படுத்தப்பட்ட அமெரிக்காவில் ஒரு கதைப் பாத்திரத்தின் வாழ்க்கையில் மோசமான நாட்களில் கதை அமைந்திருக்கும்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக, என்னுடைய நடையின் துணைக்கூறுகளும், லிங்கன் கதையைப் பெருமைப்படுத்தத் தேவையானதும் சந்திக்கத் தவறிவிட்டன. இங்கு அழகான புத்தகம் ஒன்று இருக்கிறது என்று என்னால் உணர முடிந்தது. ஆனால் அது வேறு யாராலாவது எழுதப்பட வேண்டும் என்று நான் அஞசத் தொடங்கினேன். சிக்கல் என்ன? எனக்குத் தேவையான் நடை வேகத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும் அதே நேரத்தில் உண்மையான மனித மனவெழுச்சியை நேரடியாக வெளிப்படுத்தும் திறமை எனக்கு இருக்கிறதா என்று நான் அஞசத் தொடங்கினேன். அதாவது, நேர்மறையான உடன்பாட்டு மன்வெழுச்சியை வெளிப்படுத்துவது பற்றி நான் பயந்தேன். “மகிழ்ச்சி வெள்ளையாக எழுதுகிறது” என்றார் ஹென்றி டி மோந்தர்லாண்ட். அது போலவேதான் எனக்கு நம்பிக்கை, உண்மையான துயரம், நேர்மறையான நோக்கம், மகிழ்ச்சியான விளைவுகள் ஆகியவையும் இருந்தன. உயர்ந்த இலக்கியவாதச் சொல்லான ‘அதிகப் பிரசங்கி’ என்று நான் அழைக்கப்படும் அளவிற்குப் பிழை செய்து விடுவேனோ என்று அஞ்சினேன்.  

2011 இல் ‘Tenth December’ என்ற சிறுகதையை முடித்துக் கொண்டிருந்தேன். அதன் கதாநாயகன் பெரிய இக்கட்டில் இருந்தான். அவனுக்குத் தனது மனைவியைப் பற்றிச் சிந்திக்க வேண்டியிருந்தது. எழுத்தாளனாக நானும் அதைத்தான் செய்தேன். என்னுடைய மனைவியைப் பற்றி நினைத்தேன். அதைத் தட்டச்சும் செய்தேன். அதன் விளைவு ஒரு அவசரகாலம், ஒரு ‘நடையில்லா நடை’, நான் அப்படிச் சொல்ல முடியுமென்றால். அவ்வளவு முற்போக்குக் கொள்கையில்லாத என்னுடைய ஹீரோக்களிடம் (ஹெமிங்வே, பேபல், ஹென்றி கிரீன்), நான் எல்லோரும் விரும்பியதையே என்னுடைய வேடிக்கை ஹீரோக்களிடமும் (மான்டி பைதோன், ஸ்டீவ் மார்ட்டின்) விரும்பினேன் என்பதை  உணர்ந்தேன். ஒரு சிந்தனையின் மிக நேரடியான வெளிப்பாடு வழக்கமான பழக்கப்பட்ட தன்மையிலிருந்து நீக்கப்பட்ட ஒரு சொற்றொடரை உண்டாக்கி கவிதைப் பரப்புக்குள் நுழையும் தருணம் அது. என்னிடம் உண்மையான மனவெழுச்சி இருக்குமானால் (அல்லது என்னுடைய கதைப்பாத்திரம் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்தால்) அந்த மன்வெழுச்சியை முடிந்த அளவு உடனடியாக, உண்மையுடனும் அவசரமாகவும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது, அந்தக் கருத்து புதிய நடையுடனான ஆடையில் வெளிவர வேண்டும்.

அதற்கு இணையான இரண்டாவது காரணம், அந்த இருபது ஆண்டுகளில் கதையில்லாமல் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்த போது, யாரென்று காட்டிக்கொள்ளாமல் மறைவாக கலிஃபோர்னியாவில் ஃப்ரெஸ்னோ என்ற இடத்தில் வீடில்லாத முகாமில் வசித்து வந்தேன். அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை வரையில் காரில் போனேன். அதிசயமான பதின்மவயது யோகியுடன் நேப்பாளக் காட்டில் இரவைக் கழித்தேன். பில் கிளின்டனுடன் ஆப்பிரிக்கா போனேன். இந்தக் கட்டுரைகள் எளிமையாக அலங்காரமில்லாமல் சொல்லப்படும் விபரங்களின் மதிப்பைச் சொல்லிக் கொடுத்தன. ஒரு காட்டில் தூர்த்துச் சரிசெய்யப்பட்ட இடத்தில் 15 வயது துறவி நான்கு மாதங்கள் தியானத்தில் ஈடுபட்டிருந்தாரென்றால், பன்படுத்தப்பட்ட இலக்கிய நடையாக இல்லாவிட்டாலும், அந்தச் சரிசெய்யப்பட்ட இடத்தை எளிமையாக விவரிக்கும்போது நீங்கள் கதை சொல்லியின் உண்மையான சக்தியைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த வெளிப்பாடு யாப்பதில் பொறுமையான தன்மை போன்ற ஒரு எண்ணமாக ஆகிறது. எழுத்தாளன் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ஒரு விருந்து வைக்க வேண்டிய அவசியமில்லை. அவனிடமுள்ள இளமை உணர்வு சாதாரணமானவை என்று கருதப்படும் ஒரு சில வாக்கியங்களில் அவன் அதைத் தயாரித்திருந்தானென்றால், அவன் தரும் விருந்து இன்னும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

இறுதியாக மூன்றாவது காரணம்: வயது. வயது எனக்கு ஓரளவு நம்பிக்கையையும். ஓரளவு நம்பிக்கையின்மையையும் கொடுத்தது. நான் வாழ்ந்ததில்லையா? வாழ்ந்தேன். எந்த மனித மனவெழுச்சியும் எனக்கு ஏன் உரிமையில்லாததாக இருக்க வேண்டும்? இப்படி இருக்கலாம் என்று நினைத்தபோது மனமே வெடித்ததுபோல இருந்தது. ஆற்றல் குறைவாக இருப்பதால். அது உண்மையாக இருந்தால் அதைக் கண்டுபிடிக்க வேண்டும். முயற்சி இல்லாததால் அது உண்மையாக இருந்தால் – அது கலைச்சாவின் ஒரு வடிவமாக ஆகிறது. (லிங்கன் புத்தகத்தை நான் எழுதிய தொடக்க காலத்தில் என்னை நானே உற்சாகப் படுத்திக் கொண்ட சொற்கள் நினைவுக்கு வருகின்றன. “இங்கே பார், இப்போதே இறந்தாயென்றால், நீ நன்றாக ஓடியிருக்கிறாய்; தொடக்கத்தில் நீ எதிர்ப்பார்க்க உரிமை இருந்ததை விட அதிகமாக இப்போது ஆபத்தை எதிர்கொண்டாலென்ன?”)

ஒரு கலைஞனுக்கு கலை செய்கின்ற ஒன்று தொடர்ந்து அறிவு விரிவடையும் ஒரு அமைப்புசார் முறையைத் தருவது. அவன் ஒரு சடங்காகத் தவிர்த்து வந்திருக்கக்கூடிய உளவியல் சார்ந்த பரப்புகளில் அவன் உறுதியாக இருப்பதை உணருமாறு கட்டாயப்படுத்தும் அன்றாட வழக்கத்திற்குச் சவால்விடும் செயல் முறை. அது ஒரு ஆபத்தான யுக்திதான். நாவலில் மூன்றில் ஒரு பகுதியை முடித்தபோது எனது நாவலாசிரிய நண்பர் ஒருவருக்கு. “நான் எழுதியதிலேயே இது மிகச்சிறந்ததாக இருக்கும் அல்லது நாவலாசிரியன் என்ற எனது பணிக்கு முடிவு கட்டுவதாக இருக்கும்,” என்று எழுதினேன்.

அவர் அதற்கு விடையாக, “மறக்காதீர்கள். இரண்டுமே நடக்கலாம்,” என்று எழுதினார்.

  

 

Autumn நாவலின் ஆசிரியர் அலி ஸ்மித் :

ஒருநாவல் என்பது, அதன் வடிவத்தைப் பொறுத்தவரையில் இயற்கையாகவே அதன் புதுத்தன்மையைப் பற்றியது, சமகாலத் தன்மையைப் பற்றியது. அதனால்தான் அதை நாவல் என்று சொல்கிறோம். நாவல் என்பது எப்போதும் காலத்தினுடைய கடிகாரத்தின் பிராணி, அது காலத்தின் தன்மை பற்றி ஈடுபாடு கொண்டுள்ளது என்றும் நான் எண்ணுகிறேன். நீள்கோட்டிலும், சுழற்சியிலும் பருவங்களின் இயக்கம் கதைப்பின்னலின் செயல்பாடுகளுக்கு இணையாக இருக்கிறது. கதைப்பின்னலை வரிசையாகவும். ஒன்றின் விளைவாகவும் இருக்கிறது. அல்லது மார்கரெட் அட்வுட் சொல்வது போல, “ஒன்றிற்குப் பின்னால் நாசமாகப்போன ஆபத்தாக” இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், மரங்களின் தூர்களினுள்ளே வளையங்கள் அவற்றினூடே செல்வதுபோல, காலத்தின் பருவங்களும் நம்முன் செயல்புரிகின்றன. திரும்பச் செய்வதும் திரும்பப் பெறுவதும் காலத்தை எப்போதும் புதுத்தன்மையோடு இருக்கச் செய்வதால், வரலாறாகவும், ஒன்றாக இணைவதாகவும் இருக்கும் வெவ்வேறான பரிமாணங்களுள்ள வழியில் நாம் காலத்தை அனுபவிக்க அவை அனுமதிக்கின்றன.

இதனோடு கூட அழுத்தத்திற்கு உட்படும் சுற்றுச்சுழல், அவற்றின் சுழற்சி இயக்கங்கள், புதுப்பித்தல், நம்பிக்கை, சடங்கு, அதனோடு வரும் இடைவிடாத தொடரின் பெரியபொருள் – புதிதான வேறான அவசியத்தைப் பெறுகிறது.

ஒலிவியா லெய்ங் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன் மனைவி, நாங்கள் பல ஆண்டுகளாக நண்பர்கள். சென்ற ஆண்டு மே மாதமோ, ஜுனிலோ, ‘Autumn’ நாவலை எழுதிக் கொண்டிருந்தபோது, அவள் இரவு உணவுக்கு வந்திருந்தாள். நெடுங்காலத்திற்கு முன்னர் இறந்துபோன எங்கள் பூனை ஒன்றின் மங்கிப்போன புகைப்படத்தைக் கொடுத்தாள். அதன் பின்புறம் எனது கையெழுத்து இருந்தது. – 1996 ஆம் ஆண்டு அவளுக்கு எழுதிய கடிதம். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய கையெழுத்தில் அதைப் படித்தேன். “ஒவ்வொரு பருவத்திலும் ஒரு குறுநாவலை எழுத நீண்ட காலத்திட்டம் வைத்திருக்கிறேன்.” – நிம்மதி! நான் இப்போது புதிதாகக் கட்டவில்லை. இந்த நாவலைப்பற்றி – இந்த நாவலைப்பற்றி நினைவு நிலைக்கும் உள்மனத்துக்கும் இடையில் 20 ஆண்டுகளாக சிந்தித்து வந்திருக்கிறேன்.

ஆனால் எப்படி ‘Autumn’ எழுதப்பட்டது என்ற கதை வேறு. அதற்கு முன்னர் நான் எழுதிய How to be Both  என்ற நாவலை முடித்து வெளியீட்டாளர்களுக்கு 2014ல் கொடுக்கக் கால தாமதம் ஆகிவிட்டது. நான்தான் முடித்திருக்க வேண்டிய நாளைத் தவறவிட்டேன். ஆனால் அவர்களது காலக்கெடுவை அல்ல என்பதைக் கண்டேன். ஜுன் மாதம் கொடுத்தேன். ஆகஸ்டில் வெளிவந்தது. ஆறேழு வாரங்கள் தான். கடினமாக உழைக்கும் அந்த அணியின் மொத்த உழைப்பு (ஒவ்வொரு வெளியீட்டாளர் பின்னாலும் பணியாற்றும் பிழை திருத்துநர்கள், பிரதித்தொகுப்பாளர்கள்)  How to be Both என்பது ஒரே சமயத்தில் இரண்டு வடிவங்கள் கொண்ட சிக்கலான வடிவமைப்பு கொண்டதாக இருந்தாலும், நூல் வந்தது. எழுத்துப் பிரதியிலிருந்து புத்தக வடிவிற்குக் கொண்டுவர வழக்கமாகக் குறைந்தது ஒன்பது மாதங்களாவது ஆகும்.

ஒரு நாவல் என்ன செய்யமுடியும் என்பதையும், விக்டோரியா காலத்தவர்கள் நாவலை என்ன செய்தார்கள் என்பதையும் பற்றி இது என்னை வித்தியாசமாக சிந்திக்க வைத்தது டிக்கன்ஸ் தனது ‘ஆலிவர் ட்விஸ்ட்’ ஐ மாதத்தவணையில், கதை அவரை எங்கு கூட்டிச்செல்லும் என்று தெரியாமல், அது நடப்பதுபடியே நடக்கட்டும் என்று விட்டுவிட்டு வெளியிட்டது நினைவிற்கு வந்தது.

எனவே 2015 ஆம் ஆண்டு என்னுடைய பதிப்பாளர் சைமன் பிராசரிடம், பருவகாலங்களின் தலைப்புடன் ஒன்றோடொன்று தொடர்புடைய ஆனால் தனித்தன்மையுள்ள தொடர் நாவல்களை எழுதலாமா என்று கேட்டேன். எழுதும் நேரத்திற்கு நெருக்கமுடையவையாகவே அவை இருக்கும். அவர் வெளியீடு பற்றிய சாத்தியக்கூறுகளைப் பார்த்துவிட்டு சரியென்றார். 2015 இன் கடைசியில் 2016 தொடக்கத்தில் ‘Autumn’ எழுத உட்கார்ந்தேன். அதன் தலைப்பு ஏற்கனவே பொருள் தருவதுபோல இந்த நாவலின் நடுச்சூழல் கீட்ஸ் சொன்ன வாழ்க்கையின் பிரகாசமான குறுகிய காலத்தையுடையதாக இருக்கும்.

இந்தக் கூறு என்னைச் சில ஆண்டுகளாக நிலைகொள்ளாமல் தவிக்கச்செய்த ஒரு கதையின் உரையாடலாக இருக்கலாம் என்று நினைத்தேன். அந்தக் கதை சிறிது காலம் வாழ்ந்து இளமையிலேயே மரித்த பெண் பாப் இசைப் பாடகர் பாவ்லின் போடியைப் பற்றியது. அவருடைய படைப்பு பல ஆண்டுகளாகத் தொலைந்துபோய் இப்போதுதான் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அது எவ்வளவு ஆற்றலும், உயிரோட்டமும், விரைவும், அறிவும் நிறைந்திருந்ததென்றால், அதில் ஏதோ ஒன்று அவலத்தைத் தூக்கி எறிகிறது. அதில் அவர் சமகாலத்து படிமங்களான மரிலின், எல்விஸ், கென்னடி, கிறிஸ்டின் கீலர் போன்ற முடிவில்லாமல் கலந்திருந்த புகழ்மிக்க படிமங்களை எடுத்துக்கொண்டு படிமத்திடமிருந்தும், பார்வையாளரிடமிருந்தும் ஒரு புதிய தற்சார்பற்ற, தன்மையையும், உயிரோட்டத்தையும் எதிர்பார்க்கிறார். கீலர் பற்றிய அவருடைய படைப்பு, Profumo வழக்குகளின் பதிவுகள், பாலியல், வகுப்புவாதம், நாடாளுமன்றத்தின் பொய்கள் ஆகியவற்றைத் தேடி என்னையும் போகச் செய்தது.

ஆனால், நான் எழுதத் தொடங்கிய நாவல் வேலைகளைப் பற்றி, சுவர்களைப்பற்றி, கடவுச்சீட்டுகள் பெறும் வழியுள்ள இடைஞ்சல் பற்றி, மக்களிடையே உள்ள வகுப்புகளின் அடுக்குகள் பற்றி,  நமக்குப் பொதுவாக ஒன்றுமில்லாதது போலத் தோன்றிய. அநியாயங்களுக்கிடையே நடக்கும் அன்றாட நட்பு உரையாடலின் அழுத்தங்கள் அல்லது பரிசு பற்றியதாக இருந்தது.

புத்தாண்டு நாள் 2016. ஒரு நண்பர் வந்தார். நாங்கள் வரவிருக்கும் ஆண்டு பற்றிப் பேசினோம். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா வெளியில் வருவதா என்பது பற்றிய வாக்குப்பதிவு இருக்கலாம் என்பது பற்றி ஊடகம் மௌனம் சாதிப்பது பற்றி நம்பிக்கையில்லாமல் சிரித்தோம். இந்த ஆண்டா? எப்படி? எனது நண்பர் என்னைப் போல ஸ்காட்லாந்துகாரர். ஸ்காட்லாந்து விடுதலை பற்றிய வாக்கெடுப்பு நீண்டதாக, கடினமாக இருந்தது என்றும், பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டது என்றும் எங்களுக்குத் தெரியும். விவாதங்கள் நீண்டதாக உண்மையில் அரசியலாக்கப்பட்டன, நாட்டைத் துண்டாக்கின. உறுதியாக அதுபோன்ற ஒரு பெரிய வாக்கெடுப்பைச் சில மாதங்களில் நடத்த முடியுமா?

மாதங்கள் கடந்தன. குளிர்காலம், வசந்தகாலம், கோடை. 

இலையுதிர்காலம். (Autumn)

 

நன்றி : தி கார்டியன் 

 

பின்னிணைப்பு :

மேன் புக்கர் பரிசு பெற்ற நாவல் ‘Lincoln in the Bardo’  பற்றிய சிறு அறிமுகம்:

“நாவல் என்பது இரட்டைப் பொருளைத் தாங்கிக் கொண்டு உண்மையை நாம் காணச்செய்யும் ஒரு வழி.” –  புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் அளித்த நேர்காணலின்போது இவ்வாறு சொல்கிறார் ஜார்ஜ் ஸாண்டர்ஸ்.

அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது 1862 இல் லிங்கனின் மகன் வில்லி டைஃபாய்ட் காய்ச்சலில் இறந்துவிட்டான். லிங்கன் அவன் அடக்கப்பட்டிருந்த கல்லறைக்குப் போய் அவனது உடலைத் தூக்கி வைத்துக் கொண்டதாகச் சொல்லப்பட்டது. ஸாண்டர்ஸின் நாவல் இந்நிகழ்வை மையமாகக் கொண்ட ஒரு சோதனை நாவல். 

கல்லறைத்தோட்டத்திலிருந்த 166 ஆவிகள் கதையைச் சொல்வதாக அமைக்கப்பட்டுள்ளது. பார்டோ என்பது திபெத்தியப் புத்தமதத்தில் இறப்புக்கும் மறுஅவதாரத்திற்கும் இடையேயுள்ள இடம். கிறிஸ்தவர்களின் இறப்பிற்குப் பின் ஆன்மாக்கள் தங்கும் கழுவிடம். வாழ்க்கையில் மகிழ்ச்சியின்றி திருப்தியின்றி இருந்ததால் இங்கே மாட்டிக்கொண்டவர்கள். நாவலில் இந்த ஆவிகள் தான் ஒன்றொடு ஒன்று கலந்து கொள்கின்றன, வில்லியின் ஆன்மாவிற்காகப் போராடுகின்றன. நாவல் இலக்கியத்தில் ஒரு புதிய வடிவத்தை ஸாண்டர்ஸ் தருகிறார். இறந்தோரும் ஆவிகளும் உண்மை வரலாற்று மனிதரும் கற்பனை மாந்தரும் பேசுகிறார்கள்

நாவலில் முதன்மையான இடம்பெறுவது கரிசனைதான்; பிறர்பால் அக்கறைதான். உண்மையில் ஒருவரோடு தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அவரது ஆன்மாவுக்குள் நுழைந்துகொள்ள வேண்டும் என்பது ஸாண்டர்சின் நம்பிக்கை. அதற்கு நூல்களே வழி. எழுத்தாளனும், வாசகனும் தனித்தனி ஆளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் வாசிக்கும் தருணத்தில், ஆசிரியர் மேல் மட்டத்திற்கு வருகிறார், வாசகனும் மேல்மட்டத்திற்கு வருகிறார். அங்கே மீன்களைப் போல முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இது நடக்கும்போது, வாசகர் அடுத்த நாள் உலகினுள் போகும்போது அவரிடம் ஒரு மாற்றம் நேருகிறது; அவர் நேர்மறையாகத் தாக்கம் பெறுவார்.  நீங்கள் மேல்மட்டதிற்கு வந்து பார்டோவில் லிங்கனைச் சந்தித்தால் உங்களது ஆகிருதியை மிகச்சிறந்த ஆளுமையாக ஆக்கும்.

***