• எம்பார் மோலிநெர்
  • ஆங்கிலத்தில்: நோவியா பகோன்
  • தமிழில்: மோகன ரவிச்சந்திரன் 

அது ஒரு கிறிஸ்துமஸ் தினம். அது கிறிஸ்துமஸ் தினமாக இருப்பதால் ஒரு பரிசு தருவதற்கு கூட ஒரு ஆண் நண்பன் இல்லாமல் இருப்பது விரும்பத்தகாதது போலத் தோன்றுகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு ஆண் நண்பன் என்பவன் அவ்வப்போது உன்னை ஈப்ரோ நதிக்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அனைத்து ஆண் நண்பர்களும் தங்கள் தோழிகளை அழைத்துச் செல்வதுண்டு. எனவே எனக்காக ஏதாவது செய்வதற்கு ஒரு டேட்டிங் ஏஜென்ஸியைத் தொடர்பு கொள்ள முடிவெடுத்தேன்.

வணக்கம் கூறி என்னை வாழ்த்திய உளவியலாளர் இவா லாரஸ் அவளுடைய அலுவலகத்தில் என்னை வரவேற்றாள். மேசை மீது வீஸா அட்டைகளைத் தேய்ப்பதற்காக இரண்டு கடன் அட்டைக் கருவிகள், நிறுவனப் பெயர் பொறிக்கப்பட்ட நாட்காட்டி, “நேசிக்கவும், நேசிக்கப்படுவதற்கும் ஏற்ற தருணம்: இப்பொழுது” என்னும் பிரத்யேக வாசகங்களுடன் கூடிய அடையாளக் குறிகள் இருந்தன. முன்னதாக நான் அவளிடம் திருமணமாகி விட்டதா என்று கேட்டேன். ஆம் என்றாள். நான் உள்ளே நுழையும் பொழுது எனக்கு வணக்கம் தெரிவித்த இரண்டு வரவேற்பாளர்களுக்குத் திருமணமாகி விட்டதா என்று கேட்டேன். ஒருத்திக்குத் திருமணமாகி விட்டது. மற்றொருத்திக்கு ஆகவில்லை என்றாள். பின்னர் நாங்கள் கலந்தாய்வைத் தொடங்கினோம். முதலில், அவளுடையதைப் போன்ற ஏஜென்ஸிக்கும் செய்தித்தாள்களில் வரும் தனிப்பட்ட விளம்பரங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை இவா விவரித்தாள். நிலையான உறவைத் தேடி வருபவர்கள் மட்டும் இங்கு வருகிறார்கள் என்று கூறினாள். தற்செயலாக இன்பம் தோய்ப்பதை விரும்புபவர்கள் இங்கு வருவதில்லை என்றாள். ஒரு தேதியை முடிவு செய்ய என்னை அழைக்கும் ஒவ்வொரு முறையும் “நண்பர் அழைக்கிறார்” என்று அவர்கள் கூறுவார்கள் என்றும் தெரிவித்தாள். எனக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. நான் ரகசியங்களை எனக்குள் பொத்தி வைப்பதில்லை.

பின்னர் நாங்கள் ஆய்வுக்குத் தயாரானோம். என்னுடைய தொலைபேசி எண், நான் பிறந்த தேதி மற்றும் நேரம் பற்றிக் கேட்டாள். “நேரம் எதற்கு?” நான் வினவினேன். “ஏனென்றால், உங்கள் ஜாதகக் கட்டத்தில் உங்கள் பிறந்த ராசியைத் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பொருத்தமானவர்தானா என்பதை அறிய வாடிக்கையாளர் இந்த விவரங்களைக் கேட்பார்.” எனக்குப் பெரிதாக ஒன்றும் தொந்தரவில்லை. ஈப்ரோ நதிக்கரைக்கு என்னை அழைத்துச் செல்லும் மனிதன் அது பற்றிக் கேட்பது போல அபத்தமானவனாக இருக்கக் கூடாது. என்னுடைய முகவரியையும் எடை அளவையும் தந்தேன். நிலையான உறவை அமைத்துக் கொள்ள எவ்வளவு காலம் பிடிக்கும், என்னுடைய கல்வி நிலை, எனக்கு மற்ற மொழிகள் தெரியுமா, குழந்தைகள் உண்டா, தனியாக வசிக்கிறீர்களா, உடன் பிறந்தவர்கள் உண்டா, பிறப்பு வரிசை நிலை என்ன, நான் ஆன்மிகவாதியா (நான் விசுவாசமற்றவள் என்று பாசாங்கு செய்கிறேன், ஏனென்றால், சலிப்பின் காரணமாக நான் மதத்தை ஒதுக்குகிறேன்) என அனைத்தையும் அவள் குறித்துக் கொண்டாள். நான் வீட்டிலேயே அடைந்து கிடப்பதை விரும்புகிறேனா என்று அவள் என்னைக் கேட்ட பொழுது, எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அது ஒவ்வொரு நாளைப் பொறுத்தது. பின்னர், நான் புகை பிடிப்பேனா, மது அருந்துவேனா, எனக்கு விலங்குகள் பிடிக்குமா, எந்தவிதமான சொத்துக்களை நான் பெற்றிருக்கிறேன் என்று அறிந்து கொள்ள விரும்பினாள். (நான் விலங்குகளை வெறுக்கவில்லை, எனக்கு ஒரு அடுக்குக் குடியிருப்பு வீடும் ஒரு ஸ்கூட்டரும் உண்டு. நான் குடிப்பேன், ஆனால் புகை பிடிப்பதில்லை.) நான் வருடம் எவ்வளவு சம்பாதிக்கிறேன், என்னுடைய உடல்நலத்தின் நிலைமை, என்னுடைய இடதுசாரி அரசியல் சார்பு பற்றியும் தெரிவித்தேன்.

“எம்பார், இப்போது பொழுதுபோக்கிற்காக என்ன செய்வாய் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்,” என்று இனிமையான குரலில் கேட்டாள் இவா. நான் ஈடுபடும் அளவின் விகிதத்திற்கு ஏற்றபடி, பூஜ்ஜியத்திலிருந்து ஐந்து வரை செயல்பாடுகளின் பட்டியலை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று இவா விளக்கினாள். “கிளாசிக்கல் மியூசிக்,” அவள் கேட்டாள். நான் சற்று மிகைப்படுத்தி மூன்றை வழங்கினேன். திரைப்படத்திற்கு பூஜ்ஜியத்தையும், பத்திரிக்கை வாசிப்புக்கு ஐந்தையும், உணவகங்களுக்கு ஐந்தையும், நிகழ்ச்சிகளுக்கும் கண்காட்சிகளுக்கும் மூன்றையும் ஒரு மோசமான புரிதலைத் தராதவாறு வழங்கினேன். “நடைப்பயிற்சி செல்வது பிடிக்குமா?” என்று கேட்டாள். ஆம் என்றேன். எளிதாக, “இல்லை” என்று கூறியிருக்க முடியும். விளையாட்டுப் பட்டியலுடன் அவள் தொடர்ந்து கொண்டிருந்தாள். “அந்த மனிதன்” விளையாட நேரும் பொழுது, நான் விளையாட நேரிடும் என்பதைக் கவனத்தில் கொண்டு நான் பதில் கூற வேண்டியிருந்தது. நான் சில கதவுகளை மூடியிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். கோல்ப், சைக்கிள், குதிரைச்சவாரி, நீச்சல் இவையெல்லாம் தெரியாது என்று கூறினேன். (மது அரங்கில் பொழுதைக் கழிக்கும் மனைவிகளை இழந்தவர்களும் விவாகரத்தானவர்களும் அங்கு இல்லை என்றுதான் தோன்றுகிறது.) ஓய்வு நேரத்தில் நான் என்ன செய்வேன் என்று கேட்டாள். உலகத்திலேயே மிகவும் தெளிவான பதிலைக் கூறினேன். எனக்கு உகந்த விடுமுறையை விவரிக்க விழையும் பொழுது நான் மென்மையைக் கையாள்கிறேன்.

“என் ஆளுமை பற்றி எனக்குப் பிடிக்காதது எது?” என்று கேட்டாள். “எனக்கு எல்லாம் பிடிக்கும்,” என்று கூறினேன். அதுதான் உண்மை. எனது வாழ்க்கை இலக்குகள் பற்றிக் கேட்ட பொழுது, எனக்கு அப்படி எதுவும் இல்லை என்று அறிவித்தேன். “நிலையான உறவில் பாலுறவு எவ்வளவு முக்கியம்?” அவள் அறிந்து கொள்ள விரும்பினாள். நான் ஐந்து என்று கூறினால், அது மோசமாக இருக்குமா? நான் வியந்தேன். இறுதியாக, அதை நான்கு என்று மதிப்பிட்டேன். ஏனென்றால், இந்த வருடம் நான் மிகவும் அதிகமான காதல் மனநிலையில் இருக்கிறேன். “சரி எம்பார், இப்போது நாம் அந்த மனிதனைப் பற்றிப் பேசலாம்… எந்த வயதுள்ளவனாக இருக்க வேண்டும்?” கொஞ்சம் வயதானவன் என்று அவளிடம் கூறினேன். அவனுடைய உயரம் பற்றிக் கேட்டாள். “உயரமானவன்” என்று கூறினேன். அவனுடைய சமூக நிலை பற்றிய கேள்விக்கு “உயர்ந்த நிலை” என்று கூறினேன். விவாகரத்தானவனா, குழந்தைகளுடன் இருப்பவனா, அல்லது மனைவியை இழந்தனவனா பற்றி எல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. அவனுடைய தோற்றம் பற்றியும் எனக்கு அக்கறை இல்லை என்று அவளிடம் விளக்கினேன்: “உண்மையில், அவனுடைய ஆளுமையை நீ அதிகமாக மதிப்பிடுகிறாய்” என்று அவள் கருதினாள். உடனடியாக “அவன் நடத்தை?” என்பதை இணைத்துக் கொண்டாள். எனக்கு இன்னமும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. “மற்ற வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?” என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். “நல்லது… அதிக வேடிக்கையான, அதிக பொறுப்புள்ள மனிதன் வேண்டும் என்றால், வழக்கமாக என்ன கேட்பார்கள் என்றால், விசுவாசமுள்ளவனாக, உறுதியுள்ளவனாக, வசீகரமானவனாக இருக்க வேண்டும்…” அது, அதுதான் நானும் விரும்புவது.

அடுத்து, கையெழுத்துச் சோதனைக்காக ஒரு வெற்றுத்தாளில் ஒரு வாசகத்தை நான் எழுத வேண்டும். பின்னர் ஆளுமைச் சோதனைக்கான நேரம். அது என்னுடைய நடத்தை பற்றித் தீர்மானிக்கும். உறுதிமொழித் தொடர்களுக்கு “ஆம்” அல்லது “இல்லை” என்று பதில் கூற வேண்டும். உதாரணத்திற்கு, “நீதியை மேம்படுத்தக்கூடிய, ஒழுக்கமின்மையையும் அறச்சீரழிவையும் தடுக்கக்கூடிய காரணிகள் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறேன்.” என்ன பதில் கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை. “என்னுடைய உணர்வுகளையும் ஆக்கச் சக்தியையும் வெளிப்படுத்தும் ஒரு அணுகுமுறையாக கலை வெளிப்பாட்டு வடிவங்களை (கவிதை, ஓவியம்…) நான் பயன்படுத்துகிறேன்,” என்பதற்கும் எப்படி பதில் கூறுவதென்று தெரியவில்லை. என்னுடைய சிறந்தவை மீது, உங்களுடையவை மீதும், உண்மையாக எனக்கு நம்பிக்கை இல்லை.

இறுதியாக, எனக்கு மிகவும் பொருத்தமான மனிதனைப் பற்றிப் பேசினாள். நல்லவளாகவும், விசுவாசமுள்ளவளாகவும் உண்மையானவளாகவும் உள்ள, மெலிந்த, மகிழ்ச்சியான, நேர்மறை எண்ணம் கொண்ட, நகைச்சுவை உணர்வு மிக்க பெண்மணியைத் தேடும் ஒரு மனிதனைப் பற்றிப் பேசினாள். (அந்தப் பெண்மணி நான் தான் என்று அவள் எண்ணுகிறாள்.) “எனவே, நாம் அந்த மனிதனிலிருந்து தொடங்குவோம்,” என்று கூறினாள். ஆனால் அவள் எனக்கு அவனுடைய தொலைபேசி எண்ணைத் தரவில்லை. ஏனென்றால், நான் அதற்காக அவளிடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கட்டணம் செலுத்த வேண்டும். ஆகவே, நான் அந்த “மனிதனிடம்” கேட்டுக் கொள்கிறேன், சந்தர்ப்பவசமாக, இந்தக் கதையை அவன் வாசிக்கிறான் என்றால், அறம் சார்ந்த விசயங்களைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு, உடனடியாக அவன் எனக்கு பதில் கூற வேண்டும்.

***

எம்பார் மோலிநெர் (1966- ) பார்ஸிலோனா எழுத்தாளரான இவர், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள்  In search of a man for friendship and possibly more,  Do you wish to save changes? மற்றும் El País பத்திரிக்கைகளுக்கான வழக்கமான கட்டுரைகளின் ஆசிரியர். பல சிறுகதைகளையும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்கான படைப்புகளையும் எழுதியிருக்கிறார். அவருடைய T’estimo si he begut  நாவல் ஆங்கிலத்தில் I Love You When I’m Drunk என மொழியாக்கம் பெற்றுள்ளது.