• ஆ. தமிழ்மணி 

 

பல நேரங்களில் நாம் நினைப்பது மிக இயல்பாக நடக்கும். அப்படித்தான் அன்று காலையில்  தொலைபேசியில் அழைத்த கவிஞர். கே.ஜீவபாரதி, “தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற புதுச்சேரி மாநிலத் தலைவர் எல்லை.சிவக்குமார், 2018 ஆகஸ்டு 21 அன்று புதுச்சேரியில் ஜீவாவைப் பற்றிப் பேச வேண்டும் என்று அழைத்திருக்கிறார். அன்று ஜீவா பிறந்தநாள் என்பதால் அவசியம் வருகிறேன். அப்படியே பிரபஞ்சனைப் பார்த்துவிட்டு வர வேண்டும்;  நீங்கள் வருகிறீர்களா?”  என்றார்.

என் மனம் ஒரு பறவையைப் போல சிறகடித்துப் பறந்தது. புதுச்சேரிக்குச் சென்று தமிழின் மிகப்பெரிய இரண்டு ஆளுமைகளைச் சந்தித்து உரையாட வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆவல். அதற்கான வாய்ப்புக் கிடைத்து விட்டதே என்ற சந்தோசத்தில் “போகலாம் அய்யா” என்று சொல்லிவிட்டேன்.

அதன்பின் யோசிக்கும்போது தான் அன்றைய தேதியில் திருச்சி, மணப்பாறை, புதுக்கோட்டை என மொத்தம் 12 வழக்குகள் பட்டியல் இடப்பட்டிருந்தன.

உடனடியாக கவிஞரைத் தொடர்பு கொண்டு  “அய்யா… நீங்கள் புதுச்சேரி சென்று ஜீவா பற்றிய கூட்டத்தில் பேசிவிடுங்கள், நான் இரவு வந்து விடுகிறேன். மறுநாள் விடுமுறை நாளாக இருக்கிறது. காலையில் மருத்துவமனைக்குச் சென்று அய்யா பிரபஞ்சனைச் சந்திப்போம்” என்றேன்.

கவிஞரும் “சரி” என்றார்.

எனக்கு புதுச்சேரியில் தெரிந்த ஒரே நபர் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்தான். உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறினேன்.

“வாங்க தமிழ்!  நானும் பிரபஞ்சனைப் பார்க்க வேண்டும். மருத்துவமனையில் சேர்த்த உடன் பார்த்துவிட்டு வந்தேன். இப்போது எப்படி இருக்கிறார் என்று பார்க்க வேண்டும், எல்லோரும் சேர்ந்து போவோம்” என்றார்.

இரண்டு நாளில் மீண்டும் கவிஞர் கே.ஜீவபாரதி என்னைத் தெடர்பு கொண்டு, “புதுச்சேரி கூட்டம் ரத்தாகி விட்டதாம்”  என்றார்.

“கூட்டம் ரத்தானால் என்ன, நமது பயணம் திட்டமிட்டபடி நடக்கும். நான் மணப்பாறையில் இருந்து கிளம்பும் நேரத்தையும், நீங்கள் சென்னையில் இருந்து கிளம்பும் நேரத்தையும் கணக்கிட்டுப் புறப்படுவோம். இருவரும் புதுச்சேரியில் சந்தித்துக் கொள்ளலாம். இரவு தங்கிவிட்டு, காலையில் மருத்துவமனைக்குச் செல்வோம்” என்றேன்.

“ஆமாம், இந்தப் பயணத்தைத் தள்ளிப்போடக் கூடாது” என்றார் கவிஞர்.

19-ஆம் தேதியே, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் என்னைத் தொடர்பு கொண்டு “நீங்கள் எப்படி கிளம்புகிறீர்கள், எங்கு தங்குகிறீர்கள்?” என்று கேட்டார்.

“பிரபஞ்சனையும், கி.ரா.வையும் சந்திப்பதுதான் எங்களது பயணத்திட்டம். அதனால் இரவே புதுச்சேரிக்கு வந்து விடுவோம். காலையில் மருத்துவமனைக்குச் செல்வோம்”  என்றேன்.

“மணப்பாறையில் இருந்து வந்தால், நீங்கள் பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோ டிரைவர் முருகனைத் தொடர்பு கொள்ளுங்கள். அவர் உங்களை அறைக்கு அழைத்துச் செல்வார். ஜீவபாரதி சென்னையில் இருந்து வருவதால், அவர் நேரு சிலையில் இறங்கி ஆட்டோ டிரைவரை அழைத்தால் அவர் வந்து ஜீவபாரதியை அழைத்து வந்துவிடுவார். நீங்கள் இருவரும் அறையில் வந்து சந்தித்துக் கொள்ளலாம். பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டாம்” என்றார் பா.செயப்பிரகாசம்.

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ஒரு படைப்பாளி மட்டுமல்ல. ஒரு சிறந்த அரசு அலுவலராகவும் பணி செய்தவர் என்பது எங்கள் பயணத்திட்டத்தை ஒழுங்கு படுத்தியதில் வெளிப்பட்டது.

“நடு இரவில் வந்து சிரமப்பட வேண்டாம். இரவு 10 மணிக்கு முன்பாகவே வந்துவிடுங்கள்” என்ற பா.செயப்பிரகாசம், கவிஞரையும் தொடர்பு கொண்டு பேசிவிட்டார்.

நீதிமன்ற வேலைகளை முடித்துக்கொண்டு, மாலை 6 மணிக்கு மணப்பாறையில் இருந்து கிளம்பிய பேருந்து, திருச்சியைத் தாண்டும்போது இரவு மணி 8 ஆகிவிட்டது.

கவிஞரை நான் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இன்னும் அரை மணி நேரத்தில் புதுச்சேரியில் இறங்விடுவேன்” என்றார்.

நேர நிர்வாகத்தில் நான் பல முறை தோற்றுப் போயிருக்கிறேன். மிக மூத்த நபர்கள் சரியாக நேரத்தைக் கடைப்பிடிக்கும் போது, நம்மால் அதை சரியாகச் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம். சரி பரவாயில்லை; எப்படியும் இரவு 10.30 மணிக்குள் சென்றுவிடலாம் என்று மனதை தேற்றிக் கொண்டேன்.

ஆனால், விழுப்புரம் பேருந்து நிலையத்தில் நான் இறங்கும் போது, இரவு மணி 11.15 ஆகிவிட்டது. இரவு உணவு ஏதும் கிடைக்காது என்ற சூழல் தென்பட்டது.

“இரவு 10 மணிக்கு மேல் நான் வீட்டுக்குச் சென்றுவிடுவேன்” என்று ஆட்டோ டிரைவர் சொல்லிவிட்டு, தங்கும் விடுதியின் முகவரியை வாட்சப்பில் எனக்கு அனுப்பியிருந்தார். முகவரி தெரிந்தால் நாம் கண்டுபிடித்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் இரவு 12.30 மணிக்கு புதுச்சேரி பேருந்து நிலையத்தை அடைந்தேன்.

“நீங்கள் எப்போது புதுச்சேரிக்கு வருவீர்கள்?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார் கவிஞர்.

பேருந்தை விட்டு இறங்கியவுடன் ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் முகவரியைக் காட்டி விசாரித்தபோது ‘சரி போகலாம்” என்றார்,

“எங்காவது இரவு உணவு கிடைக்குமா?” என்றேன்.

“சாலை ஓரக் கடையில் புரோட்டா கிடைக்கும்” என்றார்.

பிடிக்காத உணவு என்றாலும் வேறு வழியில்லை. போகிற வழியில் இரண்டு புரோட்டாவை வாங்கிக் கொண்டு, அறைக்குச் சென்று நான் சாப்பிட்டு முடிக்கும் போது இரவு  1 மணி ஆகிவிட்டது.

அதன்பிறகு கவிஞருடன் பேசிக் கொண்டே இருந்ததில், அதிகாலை 4.30 தைத் தாண்டிவிட்டது. காலையில் விரைவாகக் கிளம்ப வேண்டும். சற்று தூங்கி எழுந்தோம்.

பா.செயப்பிரகாசம் இரவு அத்தனை முறை பேசினாரே; இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறாரே என்று யோசித்துக் கொண்டே காலை 6 மணிக்கெல்லாம் எழுந்தோம்.

“வந்து சேர்ந்துவிட்டோம்” என்ற தகவலை பா.செயப்பிரகாசத்திற்குச் சொல்ல வேண்டும்; அவர் எழுந்திருந்திருப்பாரா?  என்ற யோசனையில் நான் இருக்கும்போதே, அவர் காலை 6.30 மணிக்கே தொலைபேசியில், தமிழ்! எத்தனை மணிக்கு வந்தீர்கள்? நான் வரும்போதே காலை உணவை வாங்கி வந்துவிடுகிறேன். தோழர் பி.என்.எஸ் பாண்டியனிடம் சொல்லியிருக்கிறேன். அவர் நம்மை காலை 10.30 மணிக்கு அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்வார். அதற்குள் நீங்கள் தயாராகிவிடுங்கள்” என்றார்.

காலை 8 மணிக்கெல்லாம் உணவுப் பொட்டலங்களுடன் அறைக்கு பா.செ. வந்துவிட்டார். வந்தவுடன் தோழர் பி.என்.எஸ் பாண்டியனைத் தொடர்பு கொண்டு, பிரபஞ்சன் சிகிச்சை பெரும் ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லும் நேரத்தை உறுதி செய்தார்.

எழுத்தாளர் பா.செ.க்கு 75 வயது. இவரைப் போன்ற  மூத்த படைப்பாளிகளிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் அதிகமாக இருக்கிறது.

***

ஜமீன்தார் கார்டனில் உள்ள அருணா தங்கும் விடுதியில் இருந்து, காலை 10 மணிக்கு அருகில் உள்ள எஸ்.வி. பட்டேல் சாலைக்கு வந்தோம். அங்கே லெமன் டீயை அருந்திவிட்டு, பேசிக்கொண்டிருந்தோம். தோழர் பி.என்.எஸ் பாண்டியன் காலை 11.15 மணிக்கு தனது காரில் வந்து எங்களை அழைத்துச் சென்றார். சுமார் 28 கிலோ மீட்டர், பசுமை நிறைந்த வயல்வெளிகள்; அது புதுச்சேரியின் எல்லையாக இருந்தது. அதை ரசித்தபடியே பயணித்தோம்.

“இன்னும் 12 கிலோ மீட்டர் பயணம் செய்தால் விழுப்புரம் வந்துவிடும்” என்றார் பாண்டியன்.

வயல்வெளிக்கு நடுவே பிரமாண்டமாய் இருக்கும் ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மூன்றாவது தளத்தில் உள்ள சிறப்புப் பிரிவில் பிரபஞ்சன் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிற்கபகல் 12.30 மணிக்கு அறையின் உள்ளே நுழைந்தோம்.  படுக்கையில் இருந்தவாறே பிரபஞ்சன் கை நீட்டி வரவேற்றார்.

பா.செ., கவிஞர் ஜீவபாரதியை அறிமுகம் செய்வதற்கு முன்பே, “எப்படியிருக்கிறீர்கள் ஜீவபாரதி?” என்றார் பிரபஞ்சன்.

“மணப்பாறையில் இருந்து வழக்கறிஞர் தமிழ்மணி” வந்திருக்கிறார் என்று என்னை பா.செ. அறிமுகம் செய்யும்போதே, கவிஞர் ஜீவபாரதி குறுக்கிட்டு, “கடந்த முறை மருத்துவமனையில் இருந்து நீங்கள் வந்தவுடன் இவருடைய புத்தக அறிமுகக் கூட்டத்தில்தான் முதன் முதலாகக் கலந்து கொண்டீர்கள்” என்று சொன்னவுடன், என்னைப் பார்த்து எழுத்தாளர் பிரபஞ்சன் “ஆமா! நீங்க அதுக்குப் பிறகு என்னை அழைக்கவே இல்லையே!” என்றது எனக்கு வியப்பாக இருந்தது.

“நீங்கள் குணமடைந்து வந்தவுடன் அடுத்த புத்தகத்தை வெளியிடுவோம்” என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அப்போது பிரபஞ்சன், பா.செயப்பிரகாசத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டே,  “நாம எல்லாம் சந்தித்துப் பேச வேண்டும்; எல்லோரையும் சந்திக்கனும்; நண்பர்களைப்  பார்த்து நாளாகுது; அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.

ஜீவபாரதியைப் பார்த்து “ஜீவபாரதி, தமிழ் எழுத்தாளர்களுக்கெல்லாம் அரசாங்கம் மாதம் ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் என்ன?” என்ற போது, “நானே பலபேருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறேனே” என்றார் கவிஞர்.

“எனக்கு வேணும்னு நான் கேட்கல; ரெண்டாயிரம் இல்லாமல் எத்தனை எழுத்தாளன் சிரமப்படுகிறான்; அதில் தகுதியானவங்களுக்கு நாம் வாங்கிக் கொடுக்கனும்…” என்றார் பிரபஞ்சன்.

“என்ன சாப்பிட்டீங்க; சாப்பிட முடியுதா?” என்று பா.செ. கேட்டபோது, “இந்த சாம்பார் ஒன்னும் சரியில்ல” என்று பிரபஞ்சன் கூறியபோது, பா.செ., “நாம் வீட்டுல சாப்பிட்டு விட்டு வெளியில் சாப்பிடும் போது, அப்படித்தான் இருக்கும். இங்க நூறு பேருக்கும் பொதுவான ஒரு சுவையில்தான் சமைக்க முடியும்” என்றார்.

“இத நான் டாக்டருகிட்ட சொல்லியிருக்கக் கூடாது ஆனா சொல்லிட்டேன். சொன்ன பிறகுதான், சொல்லியிருக்கக் கூடாதுனு தோனுச்சு” என்று வருத்தப்பட்டார் பிரபஞ்சன்.

“அம்மா சமையலைத் தவிர நாம யாரு சமையலையும் ஏத்துக்க மாட்டோம்; மனைவி சமையலையே நாம குறை சொல்லுவோம்” என்று கவிஞர் கூறியவுடன் கைதட்டிச் சிரித்தார் பிரபஞ்சன்.

“தயிர் சாதம் சாப்பிடுங்களே” என்று பா.செ. கூறியவுடன், “தயிர் நல்ல உணவு தான், ஆனா அதச் சாப்பிட்டு பழக்கமில்லாமப் போயிருச்சு, மீன் சாப்பிடுற குடும்பத்தில தயிர் சாப்பிட மாட்டாங்க; அது பழக்கமாப் போயிருச்சு” என்றார் பிரபஞ்சன்.

மீன் உணவையும் குறிப்பாக கடல் மீனையும், தயிரையும் சேர்த்துச் சாப்பிட்டால் தோலில் வெண்படலம் வர வாய்ப்பு இருப்பதாக தற்போதைய கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. ஆனால் அதை நம் முன்னோர்கள் உணர்ந்திருக்கிறார்களே என்பது எனக்கு வியப்பாக இருந்தது.

பேசிக்கொண்டிருக்கும் போதே, மருத்துவமனையில் உடன் இருந்து அவரை கவனித்துக் கொண்டிருந்த அவருடைய தம்பி குமாரை அழைத்து, “இவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடு” என்றார் பிரபஞ்சன்.

ஆப்பிளை நறுக்கி அவரிடம் கொடுத்தவுடன், அதை எங்களைச் சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தினார் பிரபஞ்சன். அதன்பின் அங்கிருந்த செவிலியர்களை அழைத்துச் “சாப்பிடுங்கள்” என்றார்.

தன் கையில் எது இருந்தாலும் அதை மற்றவர்களுக்குக் கொடுத்தால்தான் பிரபஞ்சனின் மனம் அமைதியாகும் என்று, அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். அதை உறுதிப்படுத்தும் வகையில் தோழர் பி.என்.எஸ் பாண்டியன் பல சம்பவங்களை பயணத்தின்போது எங்களிடம் கூறினார். அதை நாங்கள் மருத்துவமனையிலும் கண்டோம்.

சமையலைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதே, “இப்ப குடும்பங்களில் பெண்களை அடிக்கும் பழக்கம் அதிகமாகிருச்சு, ரொம்பக் கவலையா இருக்கு;  திருப்பி அடிச்சுறுங்கனு நான் சொல்லியிருக்கேன்” எனச் சொல்லிச் சிரித்தார் பிரபஞ்சன்.

“எங்க அப்பா, எங்க அம்மாவைக் கடுமையா திட்டியிருக்காரு. எங்க அம்மாவும் அப்பாவை எதிர்த்து நிறைய வசவுச் சொல்லைப் பயன்படுத்தியிருக்காங்க. ஆனா சாயங்காலம் “மீன் குழம்பு வை”யினு எங்கப்பா சொல்லுவாரு; அம்மா மறு பேச்சு பேச மாட்டாங்க. “என்னம்மா உன்னை அப்பா அவ்வளவு திட்டுனாரே?” என்பேன்.

“என்னதான் இருந்தாலும் அவரு உங்க அப்பாடா! எம் புருசன் இல்லையா? நான் செஞ்சு கொடுக்காம வேற யாரு அவருக்குச் செஞ்சு கொடுப்பாங்க?” என்று கூறிக்கொண்டே மீன் பிடிக்கப் போவாங்க”  என்றார்  பிரபஞ்சன்.

பேசிக் கொண்டே நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை திருப்பிக் கொடுத்தார். “மாதுளை சாப்பிடுகிறீர்களா?” என்று கவிஞர் கேட்டபோது, “சாப்பிடலாமே” என்றார்  பிரபஞ்சன்.

மாதுளையை உடைத்து முத்துக்களைக் கொடுத்தவுடன், அதைப் பார்த்து “இதுக்கு அனார்னு பேர்,  அப்படினா சிரிக்கும் முத்துகள்” என்று விளக்கமும் சொன்னார் பிரபஞ்சன்.

“அனார்ங்குற பேர்ல ஒரு இலங்கைக் கவிஞர் இருக்கார்” என்று நான் நினைவு படுத்தியவுடன்,  “ஆமா நல்ல கவிஞர்” என்று சொல்லிச் சிரித்தார் பிரபஞ்சன்.

எழுத்தைப் பற்றிப் பேச்சு வந்தவுடன், “ஜெ.பி., இப்ப என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க?” என்று கேட்டுவிட்டு, பெண்களை ஜெ.பி.,  அளவுக்கு யாரும் வர்ணிக்க முடியாது என்பதற்கு, பா.செ.வின் ஒரு சிறுகதையை நினைவு படுத்திப் பேசினார் பிரபஞ்சன்.

தனது ‘மணல்’ நாவல் குறித்து பா.செ., சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குறுக்கிட்ட பிரபஞ்சன், “ஜீவபாரதி புத்தகங்களில் பரிட்சை வைத்தால் இப்பக்கூட நான் 100 மார்க் வாங்கிவிடுவேன்” என்று சொல்லி சிரித்தார்.
 
“ஜீவபாரதி, கண்ணகியைப் பத்தி நாம் ஒன்னுமே எழுதல… மாதவியைப் பத்தி நிறைய எழுதியாச்சு… அவளும் உயர்வானவள்தான். ஆனா, நாம் கண்ணகியைப் பத்தி இன்னும் எழுதனும்; எழுதியிருக்கனும்” என்று வருத்தப்பட்டார் பிரபஞ்சன்.

தோழர் பி.என்.எஸ் பாண்டியன் “நாம கண்ணகி நடந்த பாதையில் நடப்பதற்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறோமே” என்று ஞாபகப்படுத்தியவுடன், “ஆமா! எல்லோரும் வண்டியை எடுத்துக்கிட்டு கண்ணகி நடந்த பாதையில போய், இப்ப காலச்சூழலையும் பொருத்தி ஒரு படைப்பை உருவாக்கனும்… நாம சொல்றதுக்கு இன்னும் நிறைய சொற்கள் இருக்கு!” என்றார் பிரபஞ்சன்.
 
“பாண்டியன்… நாம, அதுக்கு முன்னாடி இங்க எங்காவது பக்கத்துல போய் அமர்ந்து பேசனும்… மீண்டும் எல்லோரையும் சந்திக்க வேண்டும்” என்றார் பிரபஞ்சன்.

இலக்கியத்தில் ஆழ அகலங்களைக் கண்ட மாபெரும் ஆளுமையான பிரபஞ்சனின் மனம் வெறுமையாய்த் தவிப்பதை உணர முடிந்தது.

“அய்யா! நீங்க குணமானவுடன் அவசியம் எல்லாரும் சந்தித்துப் பேசுவோம்” என்றேன் நான்.

மீண்டும் பிரபஞ்சன், “நம்மகிட்ட இன்னும் நிறையச் சொற்கள் இருக்கிறது, அதையெல்லாம் பேசனும், எழுதனும்” என்றார்.

கவிஞர் ஜீவபாரதி எழுதிய ‘சமுதாயப் பார்வையில் மணிமேகலை’ என்ற நூலைப் பற்றி நான் நினைவு படுத்தியவுடன், அதைப் பற்றி ஆவலுடன் கேட்டார் பிரபஞ்சன்.

“சாத்தனார் எழுதிய மணிமேகலையில், வாரணாசியில் இருக்கும் ஒரு அந்தணர் மனைவி, கணவனுக்குத் துரோகம் பண்றா, துரோகம் பண்ணிய பிறகு பிராயச்சித்தம் பண்றதுக்கு, வாரணாசியில இருந்து நடந்தே வந்து குமரியில குளிச்சா பிராயச்சித்தம் கிடைக்கும்னு, வாரணாசியில இருந்து வந்தாள்.

தமிழக எல்லைக்குள் வரும்போது அவள் நிறைமாதக் கர்ப்பிணி. இங்கே வந்தவுடன் குழந்தையைப் பெத்துப் போட்டுட்டு, திரும்பிப் பார்க்காம பிராயச்சித்தத்துக்குப் போறா… அப்ப ஒரு பசுமாடு ஆறு நாள் அந்தக் குழந்தைக்குப் பால் கொடுத்து வளர்த்தது. ‘ஆ’ என்பது பசு. அதனால் அந்தக் குழந்தைக்கு ‘ஆபுத்திரன்’னு பேரு. இதைப் படிக்கும்போது விட்டலாச்சரியார் படம் பார்த்த மாதிரி இருக்கும். ஆனா, ஒரு பசு மாடு எப்படி குழந்தைக்குப் பால் கொடுக்கும்? என்று சிந்திக்கும் போது தான், சாத்தனாரின் மனிதத் தன்மை வெளிப்படுகிறது.

எந்தப் பசு மாடும் கன்றை ஈன்றவுடன் அதை நக்கும். கன்று எழுந்திருச்சு நிற்கும் வரை அந்தப் பசு அங்கிருந்து போகாது. ஆக, பசுவுக்கு இருக்கும் பாசம் அந்தத் தாய்க்குக் கிடையாது. அந்தக் குழந்தை எந்தத் தவறுமே பன்னல. புருசனுக்குத் துரோகம் பன்னுனது அவதான். அந்தக் குழந்தை கருவானதுக்குக் காரணம் அவதான். அத்தனை தவறுகளையும் அவள் செய்துவிட்டு, சுயநலமாக திரும்பிப் பார்க்கமால் போறா. ஆனா, பசுமாடு அந்தக் குழந்தைக்குப் பால் கொடுத்து வளர்த்துச்சுன்னா பசு என்றைக்குமே தன்னுடைய சேயை நேசிக்கும்… அதனாலதான் அந்தப் பெண்ணுக்கு மாட்டுச் சிந்தனையையும், பசுமாட்டுக்கு மனிதச் சிந்தனையையும் சாத்தனார் வைத்தான்” என்று கவிஞர் ஜீவபாரதி  சொன்னவுடன் அதைத் திரும்ப கூறச்சொல்லி கைதட்டிச் சிரித்தார் பிரபஞ்சன்.

மதிய வேளைக்கான சிகிச்சையைத் தொடர்வதற்கு செவிலியர்கள் வந்தவுடன் நாங்கள் வெளியில் நிற்க முற்பட்டோம். ஆனாலும், பிரபஞ்சன் எங்களுடன் பேசிக் கொண்டே இருந்தார். பேசும்போது இருமல் வந்தது.

“மருத்துவமனையில் அனுமதிக்கும் போது இருமல் இல்லை; இப்போது எப்படி இருமல் வருகிறது?” என்று தோழர் பாண்டியன் கேட்டபோது, “மருத்துவர்களிடம் கேட்கிறோம்” என்று சொல்லிய செவிலியர்கள் பிரபஞ்சனுக்கு நெபுலைசர் வைத்தனர்.
“இந்தச் சிகிச்சை முடியும் வரை பேசாமல் இருங்கள்” என்று செவிலியர்கள் கூறியவுடன், “ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு பேசக்கூட உரிமை இல்லையா?” என்றார் பிரபஞ்சன்.

நெபுலைசர் சிகிச்சை முடிந்தவுடன், பாண்டியனிடம் ஒரு செவிலியரின் பேரைச் சொல்லி “அவருடைய திருமணத்திற்கு நாம் கட்டாயம் போக வேண்டும், ஞாபகப்படுத்துங்கள்” என்றார் பிரபஞ்சன்.

பேசிக்கொண்டிருக்கும் போதே நான் எழுதிய ‘உறங்கும் மனசாட்சி’ புத்தகத்தில் கையெழுத்திட்டுத் தருமாறு கேட்டேன். அந்த நூலை வாங்கி, “மிகவும் அன்புடன், வாழ்த்துகளுடன் பிரபஞ்சன்” என்று எழுதிக் கொடுத்தார்.

“நாம எல்லாம் பிறரை மதிக்கக் கத்துக்கணும்… நமக்குக் கொம்பு முளைக்கும். ஆனா நாம வளரவிடக்கூடாது; வளர்ந்துச்சுன்னா ஒடைஞ்சிடும். அதனால நாமலே அத வளராமப் பார்த்துக்கணும்” என்ற அறிவுரைய எனக்கு வழங்கிய பிரபஞ்சன், “ஒரு கூட்டத்தில் சேக்ஸ்பியர் பேசிக்கொண்டிருக்கும்போது, “இந்தக் கூட்டத்தில் உங்களையெல்லாம் விடத் தகுதி வாய்ந்தவன் நான்தான், நீங்கள் ஏன் என்னை மதிக்கக் கூடாது?” என்று சேக்ஸ்பியர் கேள்வி எழுப்பியதைக் கூறிய பிரபஞ்சன், “ஒரு அறிஞன் தன்னை மதிக்க வேண்டும் என்று தான் வாழும் சமூகத்திடம் எதிர்பார்ப்பது தப்பில்லையே!” என்றார்.

இதே கருத்தை திருவாவடுதுறை ராஜரெத்தினம் பிள்ளை அரங்கத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கலைஞர் பொற்கிழி வழங்கும் விழாவில் பேசிய பிரபஞ்சன்,  “வாழ்நாளெல்லாம் இந்தச் சமூகத்தைப் பற்றியே சிந்தித்து எழுதுகிறோம். இந்தச் சமூகம் ஏன் எங்களைக் கொண்டாடக் கூடாது?” என்று கேள்வி எழுப்பியது என் நினைவுக்கு வந்தது. அன்று கவிஞர் ஜீவபாரதிக்கும் கலைஞர் பொற்கிழி வழங்கப்பட்டது.

பேச்சு நீண்டு கொண்டே சென்றது. பலமுறை பிரபஞ்சன் கைதட்டி சிரித்தார். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. சரியாக மணி பிற்பகல் 2. 15. அவருடைய சிகிச்சைக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவலையில் “ஒரு இலக்கியச் சந்திப்பில் மீண்டும் சந்திப்போம்” என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினோம்.

தோழர் பி.என்.எஸ் பாண்டியனோடு மதிய உணவை சாப்பிட்டு விட்டு, பா.செ.வை அவருடைய இல்லத்தில் விட்டுவிட்டு எங்கள் அறைக்குச் செல்ல முற்பட்டோம்  அப்போது, “நீங்கள் ஏன் அறையில் தங்குகிறீர்கள்? எனது வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாமே!” என்றார் பா.செ.

“உங்களுக்குத் தொந்தரவாக இருக்கும், நாங்கள் அறைக்கே சென்று ஓய்வெடுக்கிறோம். நீங்கள் மாலையில் வாருங்கள்; கி.ரா.வைச் சந்திப்போம்” என்றார் கவிஞர்.

“ஒரு தொந்தரவும் இல்லை; நீங்கள் இங்கேயே ஓய்வெடுக்கலாம், பிறகு இங்கிருந்து கி.ரா.வைச் சந்திக்கச் செல்லலாம்” என்றார் பா.செ.

குளிரூட்டப்பட்ட அவருடைய அறையை எங்களுக்கு ஒதுக்கித் தந்ததோடு, “கி.ரா.வைச் சந்தித்துவிட்டு அதன்பின், நீங்கள் தங்கியிருக்கும் அறையைக் காலி செய்யுங்கள். இரவு இங்கையே தங்கிவிட்டு, காலையில் பாரதியார், பாரதிதாசன் இல்லங்களைப் பார்த்துவிட்டு, அதற்குப்பின் கிளம்புங்கள்” என்றார் பா.செ.

75 வயது நிரம்பிய எழுத்தாளர் பா.செ., அவரை விட வயது குறைவான சக எழுத்தாளர்களான எங்களை மதிக்கும் பா.செ.வின்  பண்பு  என்னை வியப்பில் ஆழ்த்தியது.

பா.செ.வின் உபசரிப்பைக் கண்டு, “இப்படி ஒரு நபரை நான் கண்டதே இல்லை” என கவிஞர் ஜீவபாரதி வியந்தார்.

***

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிரபஞ்சனைச் சந்திக்க வேண்டும் என்று பா.செ.விடம் கூறியபோது, அவர் அறிமுகப்படுத்திய நபர்தான் பி.என்.எஸ். பாண்டியன். தன்னுடைய தாயார் படுக்கை நோயாளியாக இருந்துவந்த நிலையிலும், எழுத்தளார் பிரபஞ்சனை கவனித்துக் கொள்வதில் பெரும் அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருபவர் தோழர் பி.என்.எஸ். பாண்டியன்.

தோழர் பி.என்.எஸ். பாண்டியன் என்ற பெயரை பா.செ.  கூறியவுடன்,  ‘ஊரடங்கு உத்தரவு – புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு’ என்ற  புத்தகம்தான் என் நினைவுக்கு வந்தது. அந்தப்  புத்தகத்தைப் படித்து ஒரு விமர்சனக் கட்டுரையை ‘மந்திரச்சிமிழ்’ இதழுக்காக எழுதித்தருமாறு நண்பர் செண்பகநாதன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கேட்டுக் கொண்டார். அதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக  நான் எழுதிய விமர்சனக் கட்டுரை இப்போது என் நினைவுக்கு வந்தது.

சமகால அரசியல் நிகழ்வை மிக நேர்த்தியாக அந்தப் புத்தகத்தில் ஆவணப்படுத்தியிருந்தார். ‘மந்திரச்சிமிழ்’ காலாண்டிதழ் தொடர்ந்து வராமல் போனதால் அந்த விமர்சனக் கட்டுரை வெளிவராமலேயே என்னிடம் இருந்தது. புதுச்சேரிப் பயணத்தின் போது அந்தக் கட்டுரையை தோழர் பாண்டியனிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக தேடி எடுத்து வைத்திருந்தேன்.

தோழர் பாண்டியனையும் புதுச்சேரிப் பயணத்தில் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது.

மருத்துவமனையில் பிரபஞ்சனைச் சந்தித்து விட்டு பா.செ.வின்  வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது, நான் எழுதிய விமர்சனக் கட்டுரையையும் எனது கட்டுரைத் தொகுப்பான ‘உறங்கும் மனசாட்சி’ என்ற நூலையும் தோழர் பாண்டியனிடம் கொடுத்தேன்; மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

***

“ஓய்வெடுங்கள்” என்று பா.செயப்பிரகாசம் எங்களுக்கு ஒதுக்கித்தந்த அறையில் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மாலை 5.00 மணிக்கெல்லாம் பா.செ.வின் தொலைபேசி வழியாக கி.ரா விடம் இருந்து அழைப்பு வந்தது.

“மாலை 5.30-க்குத்தானே வரச் சொல்லியிருந்தார்” என்று கேட்டுக்கொண்டே குளியல் போட்டுத் தயராகி விட்டார் கவிஞர் ஜீவபாரதி. ஆட்டோ டிரைவருக்குத் தகவல் சொல்லிவிட்டு, பா.செ.வும் தயாரானார்.

கி.ரா.வுக்காக வாங்கி வந்த முறுக்கு நாங்கள் தங்கியிருந்த விடுதியிலேயே இருந்ததால், அதைப் போய் எடுத்துக் கொண்டு வர மனம் நாடியது. ஆனால், கூடுதலாக நேரம் ஆகலாம் என்பதால், கி.ரா.வைக் காக்க வைப்பது சரியல்ல; பா.செ. மூலமாக மறுநாள் முறுக்கைக் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து, ஆட்டோவில் கிளம்பினோம். மாலை 5.30 மணிக்கு கி.ரா. வீட்டிற்குச் சென்றோம்.
 
பத்திரிகை, தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே அறிந்திருந்த மாபெரும் படைப்பாளி கி.ரா.வை  நேரில் பார்த்த நிமிடங்கள் மறக்க  இயலாதவை.

சாய்வு நாற்காலியில் எளிமையாக, வெள்ளுடையில், சிரித்தபடி அமர்ந்திருந்த கி.ரா. எங்களை வரவேற்றார். அவருக்கு பா.செ. எங்களை அறிமுகம் செய்தார்.

கவிஞரை அறிமுகம் செய்தபோது, கவிஞரின் பெரியப்பா தியாகி பூதலப்புரம் ஆர்.வேலுச்சாமித் தேவருடன் பழகிய நினைவுகளை கி.ரா. நினைவு கூர்ந்தார். மணப்பாறை என்றவுடன் கி.ரா.விற்கு ஜெயந்தன் நினைவு வந்தது.  95 வயதில் கி.ரா.வின் நினைவாற்றல் மிகத்தெளிவாக இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

சாத்தூர் சேவும், கருப்பட்டி காபியும் கி.ரா.விற்குப் பிடித்தமானவை என்பதைக் கேள்விப்பட்டிருந்தேன். சற்று நேரத்திலேயே எங்களுக்கு சாத்தூர் சேவு கொடுக்கப்பட்டது. தனது மகனையும் மருமகளையும் எங்களுக்கு கி.ரா. அறிமுகம் செய்தார்.

மீண்டும், தியாகி பூதலப்புரம் ஆர்.வேலுச்சாமித் தேவரைப் பற்றிய பேச்சு எழுந்தது.

“எங்க கிராமத்திற்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் பி.சீனிவாசராவ் கட்சி வகுப்பெடுத்தார். அந்த வகுப்புல, மாவட்டத்தில இருந்த முக்கிய கம்யூனிஸ்ட் தோழர்களெல்லாம் கலந்துக்கிட்டாங்க… அதுல வேலுச்சாமித் தேவர், நல்லகண்ணு,  நானும் கலந்துக்கிட்டோம்.  அதுல விசித்திரம் என்னன்னா… இதுவரைக்கும்  அந்த  ஊர்ல ஒருத்தங்கூட கம்யூனிஸ்ட் ஆகல!”

“வேலுச்சாமித் தேவர் பழகுவதற்கு அருமையான தோழர்… நல்லாப் பேசுவார்… எந்த இடத்தையும் கலகலப்பாக்கி விடுவார்” என்று கி.ரா. தியாகி பூதலப்புரம் ஆர்.வேலுச்சாமித் தேவரைப்  பற்றிய தன் நினைவுகளை வெளிப்படுத்தினார்.

“பூதலப்புரத்திற்கும் எங்க ஊருக்கும் நல்ல தொடர்பு உண்டு, அப்போது எங்கள் ஊர் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக விளங்கியது” என்று பழைய நினைவுகளைக் கோடிட்டுக் காட்டிய பா.செ., பூதலப்புரத்திற்கும் தங்கள் கிராமத்திற்கும் இருந்த இன்னொரு தொடர்பான பண்டார மடத்தைப் பற்றியும் குறிப்பிட்டார்.

“இந்த மடம் இருக்கு பாத்திங்களா?  ஊர் தவறாம மடம் இருக்கும்… அது சாதிய ரீதியான மடங்கள். பகலில் அது நீதி மன்றமாகச் செயல்படும். ஊர் வழக்குகளை அங்கு பேசித் தீர்ப்பார்கள். விருந்தாளிங்க வந்தாச்சுன்னா ராத்திரியில மடத்துக்குக் கூட்டிட்டுப் போய் தங்க வைப்பாங்க… அப்புறம் அந்த மடங்கள் பஜனை மடமாக மாறும். சுண்டலெல்லாம் கொடுப்பாங்க… அப்புறம் அந்த மடத்துல படுத்துட்டீங்கன்னு வச்சுக்கங்கோ… வீட்டுல உங்களால படுக்கவே முடியாது” என்று மடங்கள் குறித்த தனது நினைவுகளை கி.ரா. வெளிப்படுத்தினார்.  

“அப்புறம் இந்தக் கதைகள் இருக்கு பாருங்க… ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக்கிற கதைகள்… மடங்கள்ல இந்தக் கதைகள் நிறைய உண்டு. எப்படி கல்லூரிகளில் ஹாஸ்டல் கதைகள் இருக்கோ; அதுபோல மடங்கள்ல நிறையக் கதைகள் உண்டு” என்று கதைகள் பிறந்த வரலாறையும் டெக்கமரான் கதைகள் குறித்தும் அதன் தோற்றம் குறித்தும் விரிவாகக் கூறினார் கி.ரா.

“மடங்கள் ஒரு பொது இடமா இருந்திருக்கு” என்றார் பா.செ.

“ஆனா அதில கீழ்சாதிக்காரன் வந்திர முடியாது” என்று அங்கிருந்த பாகுபாட்டை கி.ரா. நினைவுபடுத்தினார்.

“மடங்களிலும் பாகுபாடு இருந்ததா?” என்ற எனது கேள்விக்கு,   “இந்த சாதி என்னைக்கு வந்ததுனு யாரும் சொல்ல முடியாது. அது மாத்திரமல்ல, அதை ஒன்னும் செய்ய முடியாது. சாதிய அழிக்கனும்னா ஒரே வழிதான் இருக்கு… இந்தக் கல்யாணங்கள நிறுத்தனும்”

இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “கல்யாணங்கள நிறுத்தனும்களா?” என்றேன்.

“ஆமா! சாதி எங்க இருக்கிறது? கல்யாணத்திலதானே சாதி பார்க்கிறான்? கல்யாணம் இல்லைன்னா சாதி ஒழிஞ்சிரும்!.”

“அப்ப, மனித குல வளர்ச்சி?” என்றேன்.

“மனிதன் ஒருத்தருக்கு ஒருத்தர் பொழிப்பு பன்னி பிள்ளைகள் உண்டாகிரும்” என்றார் கி.ரா.

“இன்றைக்கு புழக்கத்தில் உள்ள வசவு வார்த்தைகள் அனைத்தும் முன்பு நடைமுறை வாழ்க்கையில் இருந்தது. புராணங்களில், “இதைச் செய்யாதிங்க; அதைச் செய்யாதிங்க” என்று கூறியுள்ளவை அனைத்தும் நடைமுறையில் இருந்தவை. வள்ளுவர் பல விசயங்களை செய்யக்கூடாது என்று சொன்ன அனைத்தும், அப்போதும் நடைமுறையில் இருந்திருக்கிறது. அவைகளை ஒழுங்கு படுத்துவதற்காகத்தான் கல்யாணம் வந்தது” என்று சாதியக்கூறுகள் வளர்ந்து வந்த பாதையையும், அவைகளைக் களைய செய்ய வேண்டிய ரண சிகிச்சை பற்றியும் கி.ரா. கூறிய கருத்துகள் 500 பக்கங்களில் விரிவாக எழுத வேண்டிய ஆய்வுக் கருவாகும்.

தற்போதைய பிரான்ஸ் அதிபரின் வாழ்க்கையையும், அவருடைய குழந்தைகளைப் பற்றியும், பிரான்ஸில் உள்ள பல நல்ல விசயங்களையும் எடுத்துக்காட்டி, மனிதர்கள் பறவைகளைப் போல வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கி.ரா. கூறியபோது, எழுத்தாளர் அம்பையினுடைய வாழ்க்கையை பா.செ. உதாரணமாக எடுத்துரைத்தார்.

“சமுதாயத்தில் பல நல்ல விசயங்களைச் சொல்றவங்களை எல்லாம் கொன்னர்றாங்க, புத்தரக் கொன்னாங்க; ஏசுவைக் கொன்னாங்க; நபிகள் நாயகத்தைக் கொன்னாங்க; பல அறிவியல் அறிஞர்களைக் கொன்னாங்க. உண்மையைச் சொன்னா, அது கசக்கும். சமுதாயம் அதை ஏற்றுக் கொள்ளாது ”

“இவனுக்கு வயசாகிப்போச்சு… சாகப் போறவன்… எதோ சொல்றானுட்டு போயிருவாங்க… செப்டம்பர் வந்தா எனக்கு 96 வயசு… ஆனாலும் நான் சொல்றத ஒருநாள் உணர்வாங்க” என்று தனது நம்பிக்கையையும் கி.ரா. வெளிப்படுத்தினார்.

“கிராமங்கள்ல தீர்த்துக் கட்டுதல்னு ஒரு பழக்கமிருந்தது. அது எவ்வளவு பெரிய நல்ல விசயம் பாருங்க” என்று பழைய விவாகரத்து நடைமுறைகள் பற்றி பேச்சு எழுந்த போது, தற்போது நீதிமன்றங்களில் உள்ள காலநீட்டிப்புகள், நடைமுறைகள் குறித்து பல விசயங்களை நினைவு கூர்ந்தார் கி.ரா. பழங்காலம் முதல் தற்காலம் வரை உள்ள சமூகச் சிக்கல்களை அவர் உள்வாங்கி தனது கருத்தை வெளிப்படுத்திய விதம் அற்புதம்.

“நெல்லை சதி வழக்கிற்கு முன்பாக, கோவில்பட்டி  தாலுகா சதி வழக்கு என்று ஒரு வழக்கு இருந்தது. அதில் நான் ஒரு பிரதிவாதி. எனக்கு என்.டி.வானமாமலையும், பாளை சண்முகமும் வக்கீலாக இருந்தார்கள். அவர்கள் கட்சி வக்கீல்கள். அவுங்க யாரும் எங்ககிட்ட ரூவா எதுவும் கேட்கல… நாங்களும் கொடுக்கல… நாங்கள் நீதிமன்றத்திற்குப் போய்க்கிட்டிருந்தோம். அப்போ ஒரு கேஸ் வருது… ஒருவர் முதுமலையில் வெறகு வெட்டிட்டான் அப்படினு” என்று ஒரு வழக்கை நினைவு கூர்ந்தார் கி.ரா.

“விறகின் மதிப்பையும், அதற்காக விறகு வெட்டியவன் தண்டிக்கப்பட்டால் அரசிற்கு ஆகும் செலவையும் கணக்கிட்டுப் பார்த்தாயா? இதெல்லாம் என்ன வழக்கு? இது மாதிரியெல்லாம் வழக்குப் போடாதீங்க” என்று உதவி ஆய்வாளரைக் கண்டித்து, விறகு வெட்டியை நீதிபதி விடுதலை செய்தததைப் பற்றியும் சொன்னார் கி.ரா.

நாங்கள் கி.ரா.வுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்த பிரெஞ்சு பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் கி.ரா. அவர் கொண்டு வந்த ரிப்பன் பக்கோடாவை கி.ரா.விடம் கொடுத்து விட்டு அவசரமாக விடைபெற்றார்.
 
ரிப்பன்  பக்கோடாவை வாயில் போட்டுப் பார்த்த கி.ரா., “ரிப்பன்  பக்கோடா இப்படி இருக்கக் கூடாது; வாயில் போட்டா கரையனும்.  நம்ம வீட்ல இருக்கறதை கொஞ்சம் எடுத்துக் கொடுங்க” என்றவுடன், கி.ரா.வின் மகன் வீட்டிலிருந்த ரிப்பன் பக்கோடாவை எடுத்துவந்து கொடுத்தார். கி.ரா. சொன்னதைப் போலவே அந்த ரிப்பன்  பக்கோடா மெதுவாக இருந்தது. 
“இன்றைக்கு விவசாயிகள் விசம் குடித்துக் குடும்பம் குடும்பமாகச் செத்துப் போவதைப் போல, அன்று தறி நெசவாளர்கள், குடும்பம் குடும்பமாகச் செத்துப் போனார்கள்” என்று விவசாயிகளையும் தறிநெசவாளர்களையும் ஒப்பிட்டுப் பேசிய கி.ரா., பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் களையப்பட வேண்டும் என்பது குறித்தும், காந்தியும், ரமண மகரிஷியும் எளிய உடையைத் தறித்துக் கொண்டது குறித்தும் பேசினார்.

“நமது பள்ளிக் கூடங்களும், கல்வியாளர்களும் நமது சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி வாழ மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நாம் உடுக்கின்ற உடைகள் நமது மண்ணிற்கும், சூழலுக்கும் ஏற்ற உடைகள் அல்ல. ஆடையில் இருந்து நாம் உண்ணும் உணவு முறை வரை நாம் பல விசயங்களை மாற்ற வேண்டும். இதைக் கல்வியளர்கள்தான் செய்ய முடியும்” என்று கி.ரா. கூறிய போது, நமது குழந்தைகளின் கல்வி முறையைக் குறித்து பேச்சு எழுந்தது.

“தூங்குற குழந்தைங்கள  தலையத் தட்டி எழுப்பி, தண்ணிய ஊத்தி, கட்டாயப்படுத்தி பள்ளிக் கூடத்திற்கு அனுப்பும் முறையே தவறு. குழந்தைகளுக்கான கல்வி என்று, நாம கண்டதத் திணிக்கக் கூடாது. குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு நாம் பதில் சொல்வது மாதிரி கல்வி இருக்க வேண்டும்.

“குழந்தைகள் பதில் சொல்ல முடியாத கேள்வியைக் கேட்டால், அதற்கான பதிலை குழந்தைகளிடமே விட்டுவிட வேண்டும். குழந்தை அற்புதமான பதிலைச் சொல்லும்” என்று குழந்தைகளின் மனநிலையில் இருந்தும் பல விசயங்களைப் பேசினார் கி.ரா.

விடைபெறும்போது கவிஞர் ஜீவபாரதியை நோக்கி, “வேலுச்சாமித் தேவரைப் போலவே நீங்களும் கலகலப்பா பேசுறீங்க. ஆனா, அவரு சிவப்பு… நீங்க  கருப்பு!” என்று சொல்லிச் சிரித்தார் கி.ரா.

நமது மண்ணுக்கேற்ற உணவு, உடை, வாழ்க்கை முறை என பல விசயங்களை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எங்களோடு கி.ரா. பகிர்ந்து கொண்டது மறக்க முடியாத சந்திப்பாக  எங்கள் சந்திப்பை அமைத்தது.

***
 
திட்டமிட்டபடி பிரபஞ்சனையும் கி.ரா.வையும் சந்தித்துப் பேசிவிட்டோம். இடையில் எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள். உடனடியாக நான் ஊர் திரும்ப வேண்டும். கவிஞர் ஜீவபாரதியும் அடுத்து கோவையில் ஒரு கூட்டத்தில் பேச வேண்டி இருந்தது.

ஆனால் மனம் சற்று பின்தங்கியே ஊசலாடியது. கடந்த நூற்றாண்டின் மாபெரும் கவிஞர்களாக இருந்து, தமிழ் உலகத்திற்கு பெரும் புகழை ஈட்டித் தந்த பாரதியாரும், பாரதிதாசனும் வாழ்ந்த இல்லங்களைப் பார்க்காமல் போவது மன உளைச்சலாக இருந்தது. இறுதியில் இரவு தங்கி மறுநாள் காலையில் பாரதியார், பாரதிதாசன் இல்லங்களையும் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்புவது என முடிவு செய்தோம்.

மறுநாள், பா.செ. அடையாளம் காட்டிய இட்லிக்கடையை தேடிக் கண்டுபிடித்து காலை உணவை வாங்கினேன். காலை உணவை முடித்துக் கொண்டு, பா.செ.வுக்கு நன்றி சொல்லிவிட்டு, ஆட்டோவில் பாரதியார் இல்லம் நோக்கிப் பயணித்தோம்.

1908 இல் இருந்து 1918 ஆம் ஆண்டுவரை பாரதி வாழ்ந்த அந்த வாடகை வீடுதான் இன்றைக்கு பாரதியார் நினைவு இல்லமாக பராமரிக்கப்படுகிறது. அதற்கு முன்பு சிலகாலம் எதிரே உள்ள வீட்டில் பாரதியார் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள் தனியாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. பாரதியார் குறித்த ஆய்வுகள் அடங்கிய ஒரு நூலகமும், பாரதியார் படைப்புகள் குறித்த ஒரு நூலகமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எங்கும் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.

வீட்டின் மாடியில் ஒரு நூலகம் உள்ளது. அதன் எதிர் மூலையில் உள்ள ஒர் அறையில்தான் பாரதியார் உட்கார்ந்து கவிதைகள் கட்டுரைகள் எழுதியதாக அங்கு அறிவிப்பு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் நின்றுதான் பாரதியார் ஏகாந்தமாகப் பாடியதாக கவிஞர் ஜீவபாரதி ஒரு தகவலைச் சொன்னார்.

அந்த நினைவு இல்லத்தின் கீழ்ப் பகுதியில் இடது புறம் ஒரு கிணறு. அந்தக் கிணற்றைத்தான் பாரதியார் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆங்கிலேயே ஆட்சியின் நெருக்கடிகளில் இருந்து தப்பி, பிரெஞ்சு ஆட்சிப் பகுதியில் இருந்த புதுச்சேரியில், பாரதியார் வாழ்ந்த 10 ஆண்டுகளில்தான் பல கவிதைகளையும் கட்டுரைகளையும் பாரதியார்  படைத்திருக்கிறார்.

பாரதியாரின் ஒட்டுமொத்தப் படைப்புகளையும் உள்ளடக்கி சீனி.விஸ்வநாதன் ஒரு தொகுப்பைக் கொண்டு வந்திருப்பதாகவும் கவிஞர் நினைவுபடுத்தினார்.

அதன்பின் பாரதிதாசன் நினைவு இல்லத்திற்குச் சென்றோம். அங்கு பாரதிதாசனோடு பழகிய பலரது புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அவரது புத்தகங்கள் கொண்ட நூலகமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் தனி அறையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. இந்த இல்லத்தில்தான் பாரதிதாசன் 1944 முதல் 1964 வரை வாழ்ந்திருக்கிறார்.

புதுச்சேரிப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு, புதுச்சேரி பேருந்து நிலையம் திரும்பினோம். காலை 11 மணிக்கெல்லாம் கவிஞர் சென்னை பேருந்தையும், நான் விழுப்புரம் பேருந்தையும் பிடித்து ஊர் திரும்பினோம்.

பிரபஞ்சன், கி.ரா. ஆகியோரைச் சந்தித்தது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து எங்களை உபசரித்த பா.செ. மற்றும் தோழர் பி.என்.எஸ். பாண்டியன் ஆகியோரின் உபசரிப்பு, என புதுச்சேரியின் ஒவ்வொரு நினைவும் எங்கள் மனதை விட்டு நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டன.

 

***

22.08.2018