- பா.மணிகண்டன்
நான் கொடுக்கின்ற இடம்
நான் கொடுக்கின்ற இடம்
களைத்துப்போன உங்களுக்கு
கொஞ்சம் ஆசுவாசத்தை அளிக்கத்தான்.
நான் கொடுக்கின்ற இடம்
வெதும்பிய உங்களுக்கு
கொஞ்சம் இதமளிக்கத்தான்.
நான் கொடுக்கின்ற இடம்
உங்கள் தூக்கமில்லாத கண்களுக்கு
கொஞ்சம் தூக்கமளிக்கத்தான்.
நான் கொடுக்கின்ற இடம்
அடை மழையில் நனையும்
உங்களுக்கு ஒரு கூரை மட்டுமே.
நான் கொடுக்கின்ற இடம்
மறைந்து வாழும் உங்களுக்கு
கொஞ்சம் மறைவை தரத்தான்.
நான் கொடுக்கின்ற இடம்
போக்கிடம் இல்லா உங்களுக்கு
கொஞ்சம் பாதுகாப்பு தரத்தான்.
நான் கொடுக்கின்ற இடம்
வேறு எதற்கானதும் அல்ல.
***
பாறாங்கல்
யாராலும் சீண்டப்படாத
ஒரு பாறாங்கல் அது.
அதற்காக அது வருந்தப்போவதில்லை.
எனக்கும் கூட ஒரு பாறாங்கல்லாக
இருப்பது தான் மிகவும் பிடிக்கும்.
நானும் கூட ஒரு பாறாங்கல்லாக
மாறிவிடவே விரும்புகிறேன்.
என் மீது மழை பெய்யும்,
வெய்யில் அடிக்கும்,
புறாக்கள் ஓய்வெடுக்கும்,
ஒரு சிறுவன் என் மீது
ஏறி விளையாடுவான்…
உதிர்ந்த சருகுகள் என் மீது
உரசி விழும்…
நிலவையும் சூரியனையும்
எப்போதும் காணலாம்,
மேகங்கள் மிதந்து செல்வதையும் கூட
காணலாம்…
சில்லென்ற காற்று என்னை
தழுவும்,
மேலும்
யாரோ என்மீது தங்கள்
நினைவுச் சின்னத்தை செதுக்கிவிட்டுச்
செல்வார்கள்.
***
பா.மணிகண்டன் – புதிய இளம் தலைமுறை அறிமுக எழுத்தாளர்.
