- தற்கால லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் யுவான் காப்ரியேல் வாஸ்க்வெஸ் உடன் ஒரு நேர்காணல்
- நேர்காணல் கண்டவர் : சில்வனா பாட்டர்னோஸ்ட்ரோ
- தமிழில்: கண்ணன் ராமசாமி
கொலம்பிய புனைவு எழுத்தாளர்கள் தற்போது வெற்றுக் காகிதத்தை எதிர்கொள்ளும் நிலையில் இரண்டு நிழல்களை சந்திக்க வேண்டியிருக்கும்: போதைப் பொருள் சந்தை மற்றும் கார்ஸியா மார்க்வெஸின் மேஜிகல் ரியலிசம் ஆகியவைதான் அந்த இரண்டு நிழல்கள். யுவான் காப்ரியேல் வாஸ்க்வெஸ் அந்த இரண்டையும் தன் இரண்டு நாவல்களால் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறார். Secret History of Costaguana என்கிற புத்தகத்தை 2007 ல் அவர் பதிப்பித்த போதுதான் எனக்கு அவர் பரிச்சயமானார். ஜோசப் கான்ராட்டின் புனைவு சார்ந்த தென்னமெரிக்க நாட்டின் பெயரை தலைப்பில் வைத்தது, கொலம்பிய எழுத்தாளர்களின் எழுத்தை சுருக்கி வரையறுக்க முற்படுபவர்களிடம் இருந்து தன்னை தனிமைப் படுத்திக் கொள்ள வாஸ்க்வெஸ் செய்த முயற்சி. சென்ற கோடைகாலத்தில் அவருடைய முந்தைய படைப்பான The Informers ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புக்கு உள்ளான போது அவரைப் பற்றிப் படித்தேன்.
கொலம்பியாவின் ஜெர்மானிய, யூத புலம்பெயர் மக்களைப்பற்றிய கதைதான்bThe Informers. இவ்விரண்டு குழுக்களும் இரண்டாம் உலகப் போரின் போது இணைந்து வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 1930களின் பின்பகுதியில், நாட்டிற்குள் நுழைந்த Sara Gutterman என்கிற ஜெர்மானிய யூதரைப் பற்றிய கதையைச் சொல்வதன் மூலம், கொலம்பியாவின் கூட்டு நினைவில் இருந்து அகலாத ஒரு ரகசிய காலத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார் வாஸ்க்வெஸ்.
ஜனாதிபதி எடுவர்டோ சாண்டோஸ் தன்னுடைய படைகளுக்கு ஆதரவாக ஒரு சட்டத்தை இயற்றியதால் நாஜி ஆதரவாளர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் சிறை படுத்தப்பட்டனர். வாக்னர் – ன் பேச்சுகளைக் கேட்பதோ ஜெர்மானிய மொழியில் பேசுவதோ ஒருவரை மலைக்கு மேல் உள்ள ‘retreat’ என்கிற சிறைக்குள் தள்ளுவதற்கு போதுமான ஆதாரமாகக் கருதப்பட்டது. மக்கள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கவனமாக இருக்கச் சொல்லியிருந்தார்கள். ஆதாரமில்லாமல் தண்டிக்கும் மெக்கார்த்தியிஸத்திற்கு கொஞ்சமும் சளைக்காத அடக்குமுறை பின்தொடர்ந்து வந்தது. இந்த நாவலை ஒரு எழுத்தாளர் சொல்வது போல எழுதியிருக்கிறார் வாஸ்க்வெஸ். அந்த எழுத்தாளர், தன்னுடைய அப்பாவே காட்டிக் கொடுக்கும் Informer ஆக இருந்ததைக் கண்டுபிடிக்கிறார். இதற்கு மேல் அதிகமாகச் சொல்வது கதை படிக்கும் நுட்பமான சுவாரஸ்யத்தைக் குறைத்து விடும்.
The Informers ஐ படித்தல் ஒரு வெங்காயத்தை உரிப்பது போன்று, மனித சூழ்நிலைகளின் சிக்கல் தன்மையை உரிப்பதாக அமைகிறது. வரலாற்றின் இதே போன்று நிகழ்ந்த நிகழ்வுகளை தேடிக் கண்டுபிடிக்கும் சாவியாகவும் விளங்குகிறது. க்ரிஸ்டர்நாக்டின் கொள்ளை, கொலம்பியாவின் தலைவரான Jorge Eliecer Gaitan கொல்லப்பட்டபோது Bogotazo என்றழைக்கப்பட்ட சம்பவம், போன்றவை நூலிழையாகக் கோர்க்கப்பட்டுள்ளன. இந்த கொலை 1948 ல் நடந்து, La Violencia என்கிற கொடுமையான நாட்களின் தொடக்கமாக அமைந்தது. இந்த நாவல் “மனித செயல்பாடுகளின் புரிபடாத பக்கங்களை காட்டுகிறது. நாம் தவறு செய்யக் கூடியவர்கள், ஏமாற்றக் கூடியவர்கள், உண்மையை மறைக்கக் கூடியவர்கள் என உணர்த்துகிறது. இதன் மூலம் ஒரு சங்கிலித் தொடரான நிகழ்வுகள் நடந்தேறி இந்த உலகத்தில் நிம்மதியற்ற நிலைக்கு நம்மைத் தள்ளி விடுகிறது” என்று கார்லோஸ் ஃபுயண்டஸ் சொல்கிறார். இதை நான் ஏற்கிறேன். ஆனால் The Informer புத்தகத்தில் மன்னிப்பதற்கான வெளியும் திறந்து கிடக்கிறது.
கடந்த அக்டோபரில் வாஸ்க்வெஸ் உடன் நியூயார்க்கில் உள்ள அவருடைய பதிப்பகத்தாரின் ஒரு கருத்தரங்கு அறையில் அமர்ந்து அவருடைய புத்தகங்கள் குறித்து பேசினேன். கொலம்பியாவின் வன்முறை சம்பவங்களை பற்றிப் பேச வேண்டியதாகிவிட்டது. சார்புகள் தென்படாத, சுய விவரணங்கள் இல்லாத அந்த அறையில் ஜோசப் கான்ராட்டின் Costaguana என்கிற புனைவு தேசத்தைப் போல நம்பமுடியாத தேசமாக இருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தோம்.
எங்களுடைய கலந்துரையாடலின் போது எப்படி வாழ்க்கையில் புனைவும் அரசியலும் கலக்குமோ அது போல இரண்டும் கலந்திருந்தது: The Informers ல் குறிப்பிட்டது போல, கதை சொல்வதை அமைதிப் பேச்சுவார்த்தை போல அதிபுத்திசாலித்தனமாகப் படைத்திருக்கிறார்.
***
சில்வனா பாட்டர்னோஸ்ட்ரோ: The Informers வெளி வரும் வரை கொலம்பியாவில் உள்ள யூதர்களைப் பற்றி ஒரு புத்தகம் கூட வந்திருக்கவில்லை.
யுவான் காப்ரியேல் வாஸ்க்வெஸ்: இவை குறித்து சில புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால் நாவல் என்று பார்த்தால் இது தான் முதல். யூதர்களைப் பற்றி மட்டுமில்லை. தவறாக பச்சை குத்தப்பட்ட ஜெர்மானியர்களைப் பற்றியும் இல்லை. நாவலாசிரியர்களான நாங்கள் மிகவும் தலைக்கனம் பிடித்தவர்கள். இந்த உலகத்தின் நிகழ்வுகளை நாவலாகப் பதிவு செய்யும் வரை இவ்வுலம் முழுமை பெறாதது போல நாங்கள் நினைத்துக் கொள்கிறோம்.
சில்வனா: Barranquilla வில் ஒரு ஜெர்மானிய பேக்கரி Pasteleria Alemana என்கிற பெயரில் இயங்கி வந்தது. அந்த பேக்கரியின் மங்கலான வெளிச்சத்தில் நான் இருப்பதாக உங்கள் புத்தகத்தைப் படித்த போது உணர்ந்தேன். ஒரு வகையான பேச்சு வழக்கைக் கொண்ட பெண்கள் தங்களுடைய வீட்டில் இருந்து அந்த பேக்கரியை நோக்கி ஓடுகிறார்கள். நான் அதன் உள்ள நுழையும் போது கொலம்பியாவில் நான் இல்லை என்பது போல தோன்றுகிறது. அவர்களுடைய பேக்கரி பொருட்கள் வித்யாசமான நறுமணத்துடன் உள்ளது. நாசிசத்தையும் Pasteleria Alemana வையும் ஒன்றாக இணைத்துப் பார்த்ததே இல்லை. நம்முடைய நாட்டின் வரலாற்றைப் போலவே ஜெர்மானியர்களில் பலர் சந்தேகத்திற்கு உள்ளான நபர்களாகவோ பாதிக்கப்பட்டவர்களாகவோ இருத்தல் என்னை மிகவும் பாதித்தது.
வாஸ்க்வெஸ்: அந்த நாட்களை மக்கள் நினைத்துக் கூடப் பார்க்க விரும்பவில்லை. ஆக்சிஸிற்கு எதிராக திரண்ட கூட்டத்தில் ஒரு நாடாக இருக்க இரண்டாம் உலகப் போரின் போது கொலம்பியா முடிவெடுத்த சமயத்தில், அது முதலில் செய்த விஷயமென எல்லைகளையும் கடற்கரையையும் பாதுகாத்தது. ஜெர்மானியர்கள், இத்தாலியர்கள், ஜப்பானியர்களை அங்கிருந்து வெளியேற்றியது. அட்லான்டிக் பகுதியின் முக்கிய துறைமுகமாக Barranquilla இருந்தது. அங்கே அதிக அளவில் புலம்பெயர்ந்தவர்கள் வசித்தார்கள். இத்தகைய மக்கள் அவர்களுடைய வீடுகளை விட்டு உள்நாட்டில் பல ஆண்டுகாலம் தவிக்கும் நிலையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்று பாஸ் போர்ட்டில் இருந்ததாலேயே அவர்கள் சந்தேகத்திற்கு உள்ளானார்கள்.
சில்வனா: வரலாற்றைப் புரிந்து கொள்ள சிறந்த வழி, புனைவைப் படிப்பதே என்கிற யோசனை கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது. அந்த பேக்கரி முதலாளிக்கு அக்கம் பக்கத்தில் இருந்து தகவல் இல்லாமல் அவர்கள் ஏன் மங்கிய வெளிச்சத்தில் வியாபாரம் செய்திருக்கப் போகிறார்கள் என்று நான் சிந்திக்கிறேன். என்னுடைய நினைவுகள் 70 களில் இருந்தன. அவை 40 களில் இருக்கப் போவதில்லை என்பதை நான் அறிவேன். உங்களுடைய புத்தகம் 40 களில் நடந்த கதை பற்றியது.
வாஸ்க்வெஸ்: Barranquilla வேறு வகையிலும் முக்கியமான இடமாகி விடுகிறது. கொலம்பியாவின் நாசி கட்சி அங்கு தான் நிலை பெற்றிருந்தது. Silvia Galvis மற்றும் Alberto Donadio ஆகிய பத்திரிக்கையாளர்கள் அற்புதமான புகைப்படங்களை எடுத்திருக்கிறார்கள். கரிபியன் கடற்கரையில் நின்று கொண்டிருந்த ஆயுதமேந்திய, ஜெர்மானியக் கொடி ஏந்திய ஸ்வஸ்திக் குறியீட்டுடனான பல புகைப்படங்கள் அவர்கள் மூலமாகக் கிடைத்தன. ஒரு நாவலாசிரியனுக்கு இவை அற்புதமான தீனி. இவை அரசு எந்திரம் பித்துப் பிடித்து அசையவில்லை என்பதையும் உணர்த்திய புகைப்படங்கள். பிரச்சனைக்கு உரிய காலமாகவே அரசுக்கும் அது இருந்திருக்கிறது. அதனால் நான் The Informers ல் வரும் சூழ்நிலைகள் சாம்பல் நிறப் பகுதிகளாக விடப்பட்டுள்ளன.
சில்வனா: The Informers என்னுடைய வாழ்க்கை எனும் வீட்டின் ஜன்னல்களில் திரைகளை நீக்கி வெளிச்சத்தைப் பரத்தி விட்டன. Barranquilla வில் ஜெர்மானிய மொழி வாடை அடிக்கும் பெயர்களைக் கொண்ட நண்பர் எனக்கு அதிகமாக இல்லை. அத்தகைய பெயர்களைக் கொண்ட ஒன்றிரண்டு நண்பர்கள் கூட ஜெர்மன் பள்ளிக்கு சென்று விட்டிருந்தார்கள். அமெரிக்கப் பள்ளியில் யூத நண்பர்கள் கிடைத்தார்கள். தொடக்கப் பள்ளியில் எனக்கு ஒரு யூதப் பெண் நண்பியாய் இருந்தாள். அவள் பெயர் Debbie Schwartz. அவளுடைய சுருட்டை முடியும், தோலின் வெயிற் களங்கமும், நீலக் கருவிழியும் என்னை வசீகரித்தன. ஆனால் என்னை பயமுறுத்தியது அவளுடைய பின்புலமே. கிருஸ்துமஸ் அன்று, அவர்கள் ஏன் கிறிஸ்து மரத்தையும், கிறிஸ்து குடிலையும் வைத்துக் கொள்ளவில்லை? அவளுடைய பெற்றோர் வித்யாசமான பேச்சு வழக்கோடு உரையாடினார்கள். அவர்கள் வீட்டிற்குச் செல்வதே வித்யாசமான ஒரு நகரத்திற்குச் செல்வது போலிருந்தது…
சில்வனா: நீங்கள் பாரிஸ் நகருக்கு சென்று விட்டீர்கள். அங்கே ஒரு எழுத்தாளராக வேண்டும் என்று திட்டமிட்டே தான் சென்றீர்களா?
வாஸ்க்வெஸ்: என்னுடைய சட்டக் கல்வியின் பாதியில் தான் அத்தகைய முடிவை நான் எடுத்தேன். புனைவுடன் காதல் களியட்டத்தில் ஈடுபட்டேன். அல்லது ஆர்.எல்.ஸ்டீவன்சன் சொன்னது போல, One Hundred Years of Solitude ஐ அப்படியே வெட்கமில்லாமல் காப்பியடித்து ‘காகிதத்துடன் விளையாடினேன்’. உங்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றை எடுத்துக் கொண்டு மீண்டும் அதையே எழுதுவது பத்திகளும் வாக்கியங்களும் எப்படி உருவாகின்றன என்பதைப் புரிந்து கொள்ள உதவும். ஒரு நாள் ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘The Dead’மற்றும் போர்ஹேஸின் ‘The Circular Ruins’ஐ வரிக்கு வரி திரும்ப எழுதினேன். என்னுடைய கதைகளை நானே எழுதுவதைத் தவிர்த்து, இதை செய்து கொண்டிருந்தேன். நான் எழுதத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் நான் எழுதிப் பிரசுரமான கதைகள் இவை தான். நான் எதிலும் கவனம் இல்லாமல் இருந்தேன். கதை சொல்வதில் தேர்ச்சி அடைய வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசையே இருந்தது கிடையாது.
சில்வனா: இதனை யாரிடமாவது வெளிப்படையாகத் தெரிவித்தீர்களா?
வாஸ்க்வெஸ்: ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்று எனக்குத் துளியும் ஆசையில்லை என்று நான் என் குடும்பத்தாரிடம் சொல்லி விட்டேன். எழுத்தை வார இறுதி நாட்களின் வேலையாக நான் பார்க்கவில்லை. நான் எதைச் செய்ய வேண்டும் என்று அப்போது முடிவெடுத்திருந்தேன்.
சில்வனா: நீங்கள் ரகசியமாக Escondidas என்றழைக்கப்படுவது போல எழுதியிருக்கிறீர்களா?
வாஸ்க்வெஸ்: என்னுடைய எட்டாவது வயதில் நான் முதல் சிறுகதையை எழுதினேன். பள்ளியில் அந்தக் கதை பரிசு வாங்கிக் கொடுத்தது. என்னுடைய வாழ்க்கையில் நான் எழுதாமல் இருந்த காலம் என்று ஒன்று இல்லை.
சில்வனா: அந்தக் கதை எதைப் பற்றியது. அதற்கு முன்பாக உங்களுடைய அப்பா இதனை எப்படி எதிர்கொண்டார் என்று கூறுங்கள். அவர் குடும்பத் தொழிலை உங்களிடம் எதிர்பார்த்தாரா?
வாஸ்க்வெஸ்: என் குடும்பத்திற்கும் எனக்குமான சில காஃப்கா தன்மையிலான சண்டைக் கதைகளை சொல்ல எனக்கும் விருப்பம் தான். ஆனால் என்னிடம் ஏதும் இல்லை. அவர்கள் தான் என்னுடைய நாவலுக்கு முக்கிய தொடக்கப் புள்ளிகளை எடுத்துக் கொடுத்தவர்கள். என் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் சாக்கர் விளையாட்டில் தான் நான் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தேன். 1981 என்று நினைக்கிறேன். ஸ்பெயினில் உலகக் கோப்பை நடக்க இருந்தது. பீலே என்கிற பிரேசிலிய ஆட்டக்காரரைப் பற்றி என் அப்பா ஆங்கிலத்தில் விவரித்துக் கொண்டிருந்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை ஸ்பானிய மொழியில் மொழிபெயர்த்து ஒரு சிறிய தொகையை அதற்கு சம்பளமாக பெற்றுக் கொள்ள முடியுமா என்று என் அப்பா என்னிடம் கேட்டிருந்தார். நான் செய்தேன். அவர் என்ன முயற்சித்தார் என்று பிறகு தான் தெரிந்தது: ஆங்கிலத்துடனும், புத்தகங்களுடனும் எனக்கு ஏற்பட்ட உறவை அவர் தான் தொடங்கி வைத்தார். எனக்கு பணமும் கிடைத்தது. அதே நேரம் நல்ல முறையில் நேரமும் கழிந்தது. கதைக்கு வரலாம்…. வினோதமாக அந்தக் கதை என்னுடைய புனைவுகளின் பெரும்பாலான கருக்களை மறைப்பதாக இருந்தது. உளவியல் ரீதியில் அந்தக் கதையில் இருந்து சில முன் முடிவுகளை எடுத்துக் கொள்வதற்காகச் சொல்லவில்லை. ஆனால் அதனை என்னால் கவனிக்காமல் கடந்து போக முடியவில்லை. அது ஒரு சிறுவனைப் பற்றிய கதை. லண்டனுக்கு செல்லும் ஒரு கப்பலில் நடக்கும் விபத்தில் அவன் சிக்கிக் கொள்கிறான். அவன் நகரத்தில் கை விடப் பட்டவன் ஆகிறான். பிறகு ஒரு ஹாட் டாக் வாங்கிக் கொண்டு கொலம்பியாவுக்கு திரும்பி விடுகிறான். இவ்வளவும் ஒன்றரை பக்கத்திற்குள் அடங்கி விடுகிறது.
சில்வனா: ஆக எட்டாவது வயதிலேயே நீங்கள் வீட்டை விட்டுச் செல்வதைப் பற்றி கற்பனையில் இருந்திருக்கிறீர்கள். நம்மைப் போன்ற கொலம்பியர்கள் எப்போதும் இந்த தாழ்வு மனப்பான்மையில் இருக்கிறோம். அல்லது இது ஒரு வகையில் தேடலுக்கான வேட்கையைப் பிரதிபலிகிறதா? Barranquilla வில் உள்ள என்னைப் போன்றவர்களுக்கு மியாமி எவ்வளவோ மேல் என்று தோன்றும். போகோடாவில் இருந்த உங்களுக்கு லண்டனைப் பார்த்து ஆசை. The Informers கதையில் முக்கிய கதாபாத்திரம், Sara Gutterman மற்றும் Enrique Deresser – ன் ஐரோப்பிய பின்புலத்தை அவன் மதிப்பதாக எழுதி இருந்தீர்கள். இந்தக் குறிப்பு நம்முடைய வெளி நாடுகளின் மீதான நன்மதிப்போடு தொடர்புடையதா?
வாஸ்க்வெஸ்: எந்த மூன்றாம் உலக நாடுகளை எடுத்துக் கொண்டாலும், அதற்கும் போகோடாவிற்கும் பெரிய வித்யாசம் ஒன்றையும் கண்டு பிடிக்க முடியாது. மெட்ரோபாலிஸ் நகரங்களின் மீதான ஈர்ப்பை நீங்கள் எங்கும் காணலாம். நைபாலின் ட்ரினிடாட்டில் இருந்து கெரேவின் அவுஸ்திரேலியா வரை. இந்த கண்ணோட்டம் தாழ்வுணர்ச்சியால் வருவதாக எனக்குத் தோன்றவில்லை. இதனால் மக்கள் தன் சொந்த இடத்தை விட்டுச் செல்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. எப்படியாயினும், கொலம்பியா ஒரு சிறப்பான இடம் தான். அது இரண்டு கடற்கரைகளைக் கொண்டிருக்கிறது. அதன் தலைநகர் நடு நிலத்தில் அமைந்திருக்கிறது. கரகஸ் ஒரு கடற்கரை நகரம். லிமா, சாண்டியாகோ, பியோனோ ஐரிஸ் போன்ற நகரங்களும் அவ்வாறே. வான்வழி போக்குவரத்திற்கு முன்னால் பாரான்க்விலாவில் இருந்து போகோடா செல்வதற்கு ஐந்து நாட்களில் இருந்து இரண்டு வாரங்கள் வரை பிடிக்கும். போகோடா ஒரு ரகசிய நகரம். என்னைப் பொறுத்த வரையில் அதன் நாகரிக குடிமக்கள் வெளி உலகை பார்க்க வேண்டும் என்றே சென்றனர். அல்லது, அவர்கள் மாகாண உரிமைகளுக்காக போராடி வெறுத்துப் போயிருப்பார்கள்.
சில்வனா: லண்டனைக் காட்டிலும் போகோடாவில் அதிகமாக மக்கள் ட்வீட் உடை அணிகிறார்கள். விக்டோரியா மற்றும் டியூடார் கட்டிடக் கலையை எங்கும் காண முடிகிறது.
வாஸ்க்வெஸ்: என்னுடைய மாமா ஐம்பதுகளில் சில வருடங்கள் லண்டனில் வசித்து வந்தார். அப்போது, சிறுவனாக இருந்த என்னை லண்டனில் உள்ள ஒரு போர்டிங் பள்ளியில் மூன்று வருடம் படிக்க அனுப்பி வைத்தார் அப்பா. அப்போதிருந்து அவரிடம் இருந்த அதீத ஆங்கில நாட்டம் எனக்கும் தொற்றிக் கொண்டது. அந்த மாமா நீங்கள் கூறுவது போல தலைக்கு தொப்பி, கைக்கு உறை, தடி என்று அலைந்தவர். அதெல்லாம் இப்போது மலை ஏறிவிட்டது. போகோடாவிற்கு அருகாமையில் உலகம் வந்து விட்டது. அது மட்டும் காரணம் இல்லை. இந்த நகரம் முன்பைக் காட்டிலும் ஐந்து டிகிரி அதிக வெப்பமயம் ஆகிவிட்டது. யாரும் தற்போது கையுறை அணிவதில்லை. போகிற போக்கில், “உலக வெப்பமயமாதலும் கொலம்பியாவின் பிரித்தானிய வேட்கையும்” என்கிற தலைப்பில் நல்ல கட்டுரை எழுதலாம் போலிருக்கிறது.
சில்வனா: Historia secreta de Costaguana என்கிற உங்களுடைய நாவல் லண்டனில் நடப்பது தற்செயல் இல்லை தான் போலிருக்கிறது. நூற்றாண்டு மாறும் காலத்தில் போகோடாவின் மேல் தட்டு வர்க்கத்தினர் லண்டனுக்கு புலம் பெயர்ந்தனர். அப்போது ஜோசப் கான்ராட்டும் அங்கிருந்து கொண்டு Nostromo
எழுதிக் கொண்டிருந்தார். அது ஒரு கற்பனையான லத்தீன் அமெரிக்க நாட்டில் நடக்கும் கதை. அந்த நாட்டிற்கு அவர் Costaguana என்று பெயர் சூட்டி இருந்தார். உங்களுடைய நாவல் கொலம்பியாவில் கான்ராட் செலவழித்த மூன்று நாட்களை மையப் படுத்தியது. அவர் லண்டனில் வசித்து வந்த ஒரு கொலம்பியருடன் நடத்திய சம்பாஷணைகளை வைத்தும் எழுதி இருந்தீர்கள். கான்ராட் ஒரு போகோடா வாசியை சந்தித்தது உங்களுக்கு நிஜமாகவே தெரியுமா?
வாஸ்க்வெஸ்: அவர் ஒரு கொலம்பியரை சந்தித்தது உண்மை தான். Santiago Pérez Triana என்பது அவனுடைய பெயர். அந்த நபர் முந்தைய தாராளவாத ஜனாதிபதியின் மகனாவார். அந்த ஜனாதிபதி மீது பழமைவாதம் பேசும் புதிய அரசாங்கம் வழக்கு தொடுத்து சிறைப் படுத்த முயன்றதால் அவர் கொலம்பியாவை விட்டு வெளியேற வேண்டியதாய் போனது. அவர் லண்டனில் தங்கி விடவே, சில ஆண்டுகளில் தூதுவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இருவருக்கும் பொதுவான ஒரு நண்பரின் உதவியுடன், கான்ராட், அவரைச் சந்தித்தார். அவர்தான் Nostromo எழுதிய ஸ்காட்லாந்த் நாட்டை சேர்ந்த Robert Cunninghame-Graham. இந்தக் காலகட்டம் பனாமாவில் இருந்து கொலம்பியா பிரிந்த காலகட்டத்தோடு ஒத்துப் போகிறது. அதே போல, ப்ரான்ஸ் உடனான நட்பும் அதிகரித்து வந்தது. பாரிஸ் நகரத்திற்கு சென்று கொலம்பியர்கள் படித்து வந்தனர்: Jose Asuncion Silva என்கிற கொலம்பியக் கவிஞரை உதாரணமாகச் சொல்லலாம்.
சில்வனா: கடற்கரை நகரில் எங்களுக்கு இங்கிலாந்தை பார்த்து கவர்ச்சி இல்லை. ஆனால் ப்ரெஞ்சுகாரர்களின் பாதிப்பு இருக்கத் தான் செய்தது. அதே போன்று இத்தாலியர்கள், லெபனியர்கள், சிரியர்களின் பாதிப்பும் இருந்தது.
வாஸ்க்வெஸ்: ஜெர்மானியர்களின் பாதிப்பை விட்டு விட்டீர்களே. Barranquilla விற்குள் பிற நாடுகளின் கலாச்சார பாதிப்புகளும், குடியேற்றமும் இயல்பாக நடந்து கொண்டிருந்தது.
சில்வனா: நிச்சயமாக. முக்கிய கடல்சார் வாணிபத் தளமாக விளங்கியதால் Barranquilla ஒரு முழுமையான சந்தையாக இருந்தது. அங்கு எதெல்லாம் கொண்டு வரப்பட்டதோ, அவை அனைத்து உள்நாடுகளுக்கு, எங்களுடைய மெக்டலேனா ஆற்றின் மூலமாகத் தான் எடுத்துச் செல்லப்பட்டது. Costaguna வில் இந்த நதியை “மண் அடர்ந்த மெக்டலேனா” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். என்னுடைய My columbian War புத்தகத்தில் அதை பற்றி நானும் எழுதியிருக்கிறேன். கான்ராட்டிற்கு இருளின் இதயமாக காங்கோ இருந்தது உண்மை என்றால், கொலம்பியாவுக்கு மெக்டலேனா தான் வெளிப்படையான காயம் போன்றது. தற்போது அனைத்தும் மெக்டலேனா வின் மேல் மிதக்கிறது: போதைப் பொருட்கள், ஆயுதங்கள், ராணுவ வீரர்கள், புரட்சியாளர்கள், பாரா மிலிட்டரி படையினர் ஆகியோருக்கு இடையில், மருத்துவ சாதனங்கள், ஆசிரியர்கள் மற்றும் போதகர்களும் கூடப் பயணிக்கிறார்கள். கொலம்பியாவில் எழுதியதும், அங்கிருந்து வெளியேறியதும் பற்றிப் பேசலாம்: உங்களுடைய காலகட்டத்தில் உருவான அதிகமான எழுத்தாளர்கள் ஐரோப்பாவில் தான் காலம் கழிக்கிறார்கள். அவர்கள் முதலில் பாரிஸ் நகருக்கு சென்று பின்பு ஸ்பெயினுக்கு இடம் பெயர்ந்து விடுகிறார்கள்.
வாஸ்க்வெஸ்: இது ஒரு வழக்கமாகி விட்டது இல்லையா? என்னளவில் நான் பாரிஸ் நகருக்கு செல்ல எடுத்த முடிவு, எழுத்தாளனாக வேண்டும் என்று எடுத்த முடிவினால் உண்டானது. லத்தீன் அமெரிக்க வழக்க முறை என்னை வெளியேறச் சொன்னது. போக வேண்டிய இடமாக பாரிஸ் அமைந்து விட்டது.
சில்வனா: பூம் எழுத்தாளர்களைப் பற்றித் தானே பேசுகிறீர்கள்?
வாஸ்க்வெஸ்: அவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள். அவர்கள் தங்களுடைய நாடுகளை இலக்கியத்தின் மூலம் மீட்டுருவாக்கம் செய்வதில் கடிவாளம் இட்டபடி செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். மரியோ வர்காஸ் யோசா, கார்லோஸ் ஃபுயண்டஸ் – ஐ எடுத்துக் கொள்ளுங்களேன். பெருவைப் பற்றிய பெருமை கொண்ட நாவல்கள் லண்டனிலும், பாரிஸிலும் எழுதப்பட்டன. மெக்சிகோவைப் பற்றிய புகழ் பெற்ற நாவல்களும் பாரிஸ் மற்றும் நியூயார்க்கில் எழுதப்பட்டன. One Hundred Years of Solitude மெக்சிகோவில் எழுதப்பட்டது. அது ஒரு லத்தீன் அமெரிக்க க்ளீஷே எழுத்து. இதனை பூம் எழுத்தாளர்கள் உருவாக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சம்: 19 ஆம் நூற்றாண்டில் ரூபன் டாரியோ தான் முதன் முதலில் பாரிஸில் இருந்தால் கவிஞராகி விடலாம் என்கிற எண்ணத்தோடு வந்தார். அவர் என்னைப் போலவே ஒரு உண்மையை கண்டறிந்தார். பாரிஸ் நகரில் உள்ள இலக்கிய உலகம் உங்களை நவீன உலகத்தைப் பற்றி எழுத விடுவதில்லை. அகலமான நிலப்பரப்புகளை பற்றி எழுதத் தேவையில்லை என்கிறது. அது டாரியோ விடம் லத்தீன் அமரிக்க நிலப்பரப்புகளைப் பற்றி தான் எழுதச் சொல்லி கேட்கிறது. கண்ணுக்கு குளிர்ச்சியான உள்நாட்டு வண்ணமிகு இடங்களை பற்றி மட்டும் எதிர்பார்க்கிறது. இந்த எரிச்சலான சூழல் எப்போதும் இருக்கிறது. என்னுடைய கொலம்பிய சந்ததியில் மேஜிகல் ரியலிசமே பிரதானமாகும்.
சில்வனா: உங்களுடைய புத்தகங்களில் மேஜிகல் ரியலிசம் அதிகமாய் இல்லையே. இது ஒரு முன்யோசனையுடனான முடிவா? Alberto Fuguet மற்றும் McOndo வை நிறுவிய Edmundo Paz Soldan – ன் மேஜிகல் ரியலிசத்திற்கு எதிரான இயக்கம் உங்களை பாதித்துள்ளதா?
வாஸ்க்வெஸ்: இல்லவே இல்லை. என்னுடையது புரட்சிகரமான முடிவல்ல. கார்ஸியா மார்க்வெஸின் எழுத்து முறை என்னுடையதல்ல என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அவருடைய முறையைப் பின்பற்றுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதில் நான் தெளிவாக இருந்தேன். எழுத்து முறையை கேள்வி எழுப்புவதே இலக்கியம். ஒரு எழுத்தாளனாக உங்களுடைய பணி அந்தக் கதைக்கு எது சரியான எழுத்து முறை என்று தேர்வு செய்வதும், கதாபாத்திரங்கள் சேர்த்து இணைப்பதும் தான். கார்ஸியா மார்க்வெஸ் எழுதத் தொடங்கியபோது அவர் முன்னால் இருந்த மாகாணத்திற்குள்ளான, குறுகிய வட்டத்திலான ரியலிசக் கதைகளால் மிகவும் அயர்ச்சி அடைந்தார். அது தான் லத்தீன் அமெரிக்க நாவல் வரிசையில் முக்கிய எழுத்து முறையாக இருந்தது. அவருக்கு 1899 ல் நடந்த உள்நாட்டுப் போரில் கர்னலாக இருந்த அவருடைய தாத்தா சொன்ன கதையை மறுபடியும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஃபாக்னரைத் தேடிப் படித்த போது அவருக்கு எந்த மாதிரியாக தன்னுடைய நாவல் வர வேண்டும் என்று புரிந்தது. அதனால் The Leaf storm கதை எழுத ஃபாக்னரை அவர் பணியில் அமர்த்தியதற்கு எந்த தயக்கத்தையும் காட்டவில்லை. அதற்கு பிறகு அவர் ஃபாக்னரை விட்டு விட்டு ஹெமிங்வே – வை கொண்டு வருகிறார். அவர் மூலமாக No One Write to the Colonel வெளிவருகிறது. அவர்களுடைய முறைகளை இவர் அப்பட்டமாகக் காப்பி அடிக்கிறார். என்னுடைய நாவல்களை எழுதும் சமயத்தில் நானும் இத்தகைய சூழல்களில் சிக்கியிருக்கிறேன் – ஆனால் கொலம்பியாவின் புகழ் பெற்ற நாவலாசிரியரின் முறை எனக்கு கொஞ்சமும் பயன்படவில்லை.
சில்வனா: கார்ஸியா மார்க்வெஸ் தன்னுடைய அம்மாவும் பாட்டியும் பேசும் வழக்கை அப்படியே தகவமைத்துக் கொண்டதாக சொல்லியிருக்கிறார். உங்களுக்கு அது அமைய வாய்ப்பில்லை – Bogota வில் மேஜிகல் ரியலிசம் வீட்டு படுக்கையறையில் கதையாக சொல்லப் படுவதில்லை.
வாஸ்க்வெஸ்: அதே தான். இங்குள்ள முறைக்கு எதிரானதாக என்னுடைய கதைகள் இருந்தன. அதனால் பிற முறைகளை தேடி நான் செல்ல வேண்டியதாய் இருந்தது. எனக்காக காத்திருந்த சில நாவல்கள் படிப்பினைகளாக அமைந்தன: Roth ன் American Pastoral, Banville ன் The Untouchable, Bellow வின் The Dean december போன்றவை.
சில்வனா: சரி நீங்கள் சட்டக் கல்லூரியில் இருந்து பாதியில் நின்று விட்டீர்களா? அல்லது நீங்கள் ஒரு லாயர் தானா?
வாஸ்க்வெஸ்: நான்The Iliad ல் இருந்து ஒரு பழிவாங்கும் கதையை சட்ட ரீதியாக கொண்டு சென்று வினோதமாக ஒரு தீசிஸ் எழுதி தேர்ச்சி பெற்றேன். அதனை ப்ராஜக்ட்டாக எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்றே தெரியவில்லை. சட்டக் கல்லூரி முடிக்கும் முன்பே நான் ப்ரெஞ்சு கற்றுக் கொண்டு விட்டேன்.
சில்வனா: பாரிசில் தங்க வேண்டியிருந்ததால் அந்த முடிவா? அமெரிக்க பள்ளியில் படித்த நீங்கள் ஏன் நியூயார்க்கை தேர்வு செய்யவில்லை?
வாஸ்க்வெஸ்: சுலபத்தில் எனக்கு நிகழும் விஷயங்களை நானே கடினமாக்கி கொள்கிறேன் என்று என்னிடம் யாரோ சொன்னார்கள். ஆனால் இது அது போன்றதல்ல. பாரிஸ் நகரம் எழுத்தாளர்களுக்கும், அவ்வாறு ஆக வேண்டும் என்று ஆசைப் படுபவர்களுக்கும் என்னவெல்லாம் செய்தது என்று நான் யோசித்தேன். என்னுடைய தொழிலுக்கு உதவிய பல எழுத்தாளர்கள் இந்த நகரத்தோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவர்களாய் இருந்திருக்கின்றனர்.
சில்வனா: பூம் எழுத்தாளர்கள் அல்லாத சில பெயர்களை பற்றி சொல்கிறீர்களா?
வாஸ்க்வெஸ்: The lost Generation, Hemingway Fitzgerald பற்றி சொல்கிறேன். ஆனால் அதிகமாக ஜேம்ஸ் ஜாய்ஸ் தான் எனக்கு உதவியவர். Ulysses மற்றும் One Hundred Years of Solitude ஆகியவை தான் என்னை எழுத்தாளனாக்கிய புத்தகங்கள். Ulysses பாரிஸில் எழுதப்பட்டது. கார்ஸியா மார்க்வெஸ் சில காலம் பாரிஸில் வாழ்ந்தார். எல்லா லத்தீன் அமெரிக்க பூம் எழுத்தாளர்களும் ஏதோ ஒரு கட்டத்தில் பாரிஸில் வாழ்ந்தார்கள்: ஜூலியோ கொர்த்தஸார், வர்காஸ் யோஸா, ஃபுயண்டஸ் போன்று. அதனால் எழுத்தாளராக வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு பாரிஸ் தான் சிறந்த இடம். எவ்வளவு அப்பாவித் தனமாக உள்ளது இல்லையா! நான் அங்கே மூன்றாண்டுகள் கழித்தேன். பலனுள்ள பல தகவல்களை தெரிந்து கொண்டேன். முதல் வருடம் மிக அருமையாக கழிந்தது. இரண்டாம் வருடம் அவ்வளவு சிறப்பாக இல்லை. மூன்றாம் வருடம் வேறு எங்காவது ஓடிப் போய் விட வேண்டும் போலிருந்தது.
சில்வனா: நீங்கள் வந்தவுடன், ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து, கணினியை அமைத்து, அடுத்த நாள் எழுதத் தொடங்கி விடுவீர்களா? இதை எப்படி செய்ய வேண்டும்?
வாஸ்க்வெஸ்: பாசாங்கான காரணமாக Sorbonne ல் ஒரு முதுகலை பட்டம் என்று கூறிக் கொண்டு புறப்பட்டேன். எனக்கு வேண்டியதெல்லாம் பாரிஸில் இருக்க வேண்டும் என்பதே. அங்கிருந்து கொண்டு எழுத வேண்டும். இந்த நாவலை எழுதத் தொடங்கும் போது Sorbonne ல் ஒரு தீசிஸ் என் முன்னால் நின்றது. அதனை என்னால் எழுத முடியவில்லை. ஒரு தீசிஸ்-ஐயும், நாவலையும் ஒப்பிட்டு பார்க்கும் போது நாவலை தேர்ந்தெடுக்க எனக்கொன்றும் கடினமாக இருக்கவில்லை.
சில்வனா: அப்படியென்றால், நீங்கள் பாரிசிற்கு போகும் முன்னரே ஒரு நாவலுக்கான யோசனையை தலையில் ஏற்றிக் கொண்டு தான் செய்தீர்களா?
வாஸ்க்வெஸ்: நான் கிட்டத் தட்ட முடியும் தருவாயில் இருந்த ஒரு நாவலை எடுத்து வந்தேன்.
சில்வனா: அதனை உண்மையிலேயே தீவிரமான மனநிலையுடன் எழுதி எடுத்து வந்தீர்களா?
வாஸ்க்வெஸ்: பாரிஸிற்கு வந்து, இரண்டு மாதங்கள் கழிந்த பிறகு அதனை 1997 ல் பதிப்பித்தேன். அது எனக்கு பிடித்த புத்தகம் தான். ஆனால் அவ்வளவு பக்குவத்துடன் எழுதியதில்லை. அதனால் அதனை நான் என் இரண்டாம் நாவலுடன் சேர்த்து பட்டியலில் இருந்து நீக்கி விட்டேன். அதனால் தான் The Informers என்னுடைய முதல் நாவலாக அறியப் படுகிறது. அந்த தகவல் குறைபாட்டுக்கு நானே பொறுப்பாளி.
சில்வனா: The Informers ல், உண்மை தெளிவற்றதாக இருப்பதையும், ஒரு கதைசொல்லியாக இருப்பதன் குழப்பமான மனநிலையையும் பற்றி எழுதியிருக்கிறீர்கள்- நீங்கள் எழுத்தாளர்களை ‘ஒட்டுண்ணிகள்’ என்று குறிப்பிடுகிறீர்கள்.
வாஸ்க்வெஸ்: அந்த நாவலின் மூலக் கரு, 1999 ல் நான் ஒரு ஜெர்மானிய யூதப் பெண்ணுடன் செய்த உரையாடலின் அடைப்படையாகக் கொண்டது. அவள் 1938 ல் கொலம்பியா வந்திருக்கிறார். அவள் ஜெர்மனியில் தன்னுடைய வாழ்க்கை குறித்தும், கொலம்பியாவில் குடியமர்த்தப் பட்டவளாக அவளுடைய வாழ்க்கை குறித்தும் என்னிடம் சொன்னாள். அந்த கரு மூன்று ஆண்டுகள் என்னுடைய பயன்பாட்டிற்காக பூட்டிக் கிடந்தது. இதற்கிடையில் என்னுடைய மாமனாருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. நான் அவருடைய உடல்நிலை சரியாகும் வரையில் மருத்துவமனையில் இருந்தேன். அந்த அறுவை சிகிச்சை குறித்து அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டதை கதையில் பயன்படுத்தினேன். அதனால் தான் நாவலாசிரியர்கள் ஒட்டுண்ணிகள் என்கிறேன்: வெட்கமே இல்லாமல் பிறருக்கும் உங்களுக்கும் நடக்கும் கெட்ட சம்பவங்களை கதையில் பயன்படுத்துவார்கள் நாவலாசிரியர்கள். எல்லாம் அவர்களை பொறுத்த வரையில் புனைவு தான்; எனக்கு இதைப்பற்றி எந்த விதமான சந்தேகமும் இல்லை. தாஸ்தயேவ்ஸ்கி, தன்னுடைய தாயின் கல்லறையில் இருந்த வாசகத்தை எடுத்து அவருடைய கதையில் இருப்பதிலேயே பிடித்தமில்லாத கதாபாத்திரத்திற்காக பயன்படுத்தியதை நினைத்து எனக்குள்ளேயே சிரித்துக் கொள்வேன்.
சில்வனா: அடையாளம் The Informers ல் மற்றொரு மாபெரும் கரு. Enrique Deresser அதனை “ரத்தக்கலப்பிலான, நிச்சயம் இல்லாத தேசிய அடையாளத்துடனான” என்று குறிப்பிடுகிறார். கொலம்பியாவில் இருந்து 15 ஆவது வயதில் நான் வெளியேறினேன். அன்றில் இருந்து நியூயார்க்கில் வசிக்கிறேன். அதனால் என்னால் இந்த வாசகத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வரையறைக்குள் உங்களை நிறுத்திக் கொள்ள விரும்புகிறீர்களா?
வாஸ்க்வெஸ்: அப்படி தான் என்று நினைக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கு நாட்களை வெளி நாட்டில் தான் கழித்தேன். பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் ஆகிய நாடுகளில். பார்சிலோனாவுக்கு பத்து வருடங்களுக்கு முன்னால் சென்ற போது, அது ஒரு நாட்டை விட்டு நான் வெளியேறிய மூன்றாவது முறை. நான் கொலம்பிய ஸ்பானிஷ் மொழியில் எழுதுகிறேன். என்னுடைய நாவல்களின் களம் கொலம்பியாவாக இருக்கிறது. அங்கு நான் இல்லை என்றாலும் இது தான் உண்மை. அதோடு நான் வாழ்ந்த நாடுகள் என்னுடைய கலாச்சார, இலக்கிய கருத்தியல்களை அமெரிக்காவும், இங்கிலாந்தும் மாற்றியது போல மாற்றி விடவில்லை. அதனால் நான் தேசியவாதம் குறித்து பேசுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. எந்த விதமான தேசியம் குறித்தும் நான் பேசும் போது சந்தேகக் கண்ணுடன் தான் பேசுகிறேன்.
சில்வனா: பாரிசில் இருந்து நீங்கள் பார்சிலோனாவுக்கு சென்றீர்கள். திரும்பவும் சொந்த நாட்டிற்கு செல்லவில்லை. கொலம்பியா எதனை பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
வாஸ்க்வெஸ்: 96 ல் நான் கொலம்பியாவை விட்டுச் செல்கிறேன். கடத்தல் மற்றும் மனிதவதத்தில் கொடூரமான பத்து வருடங்களை கடந்து போகோடா அப்போது தான் வெளியே வந்திருந்தது.
சில்வனா: அப்போது தான் நான் திரும்பச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். எல்லோரும் தன்னுடைய வீடுகளில் இருந்து வெளியேறவே பயம் கொண்டிருந்தார்கள். ஆயினும் பத்திரிக்கைகளில் நான் கொலம்பியர்கள் தான் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியானவர்கள் என்று படித்துக் கொண்டிருந்தேன். அங்கு நடக்கும் நிகழ்வுகளில் இருந்து துண்டிக்கப் பட்டது போல நான் உணர்ந்தேன்.
வாஸ்க்வெஸ்: போகோடாவிற்கு நான் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஏனெனில் என்னுடைய சிந்தனையில் 96 ல் போதைப் பொருள் விற்ற கும்பலுக்கும், அரசுக்கும் இடையில் நடந்த போர் வடுவாக பதிந்திருந்தது. அதற்கு பின்னால் கேட்ட குண்டு சத்தமும், ஆள் கடத்தலும் மிகவும் என்னை பாதித்திருந்தது. வன்முறை தான் நான் அங்கு செல்லாததற்கு முக்கிய காரணமாக இருந்தது. இலக்கியம் இல்லை. இலக்கியம் ஒரு சிறிய காரணம் மட்டுமே. வன்முறையும் கூட மூலக் காரணம் இல்லை. மூலக் காரணம் மிகவும் சுருக்கமானது: நான் நினைத்தது போன்ற ஒரு எழுத்தாளனாக என்னால் ஆக முடியாது என்று நான் நினைத்ததே மூலக் காரணம். நான் பாரிசை விட்டு சென்ற நேரத்தில் தான் இரண்டாவது நாவலை எழுதி முடித்திருந்தேன். ஆனால் இரண்டிலும் எனக்கு திருப்தி இல்லை. இரண்டாம் நாவல், Alina Suplicante பதிப்பிக்க தயாராக இருந்தது. அதற்கு முன்னாலேயே நான் மிகவும் கவலையுடன் இருந்தது என்னை மிகுந்த மனவேதனைக்குள் ஆழ்த்தி விட்டது. பாரிசில் நான் இருந்த காலத்தில் எழுபது வயது மிக்க ஒரு தம்பதியரை சந்தித்தேன். அவர்களுடைய பெயர் Suzanne மற்றும் Francis Laurenty. Belgian Ardennes ல் ஒரு பெரிய வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். அவர்களுடைய பிள்ளைகள் திருமணம் முடிந்து வேறு இடத்திற்கு சென்று விட்டிருந்தனர்.அதனால் அவர்களுடைய வீட்டில் அதிகமாக இடமிருந்தது. 1998 ல் அவர்களை ஒரு வார இறுதி நாளில் சந்திக்க சென்றேன். அவ்வாறு நான் அடிக்கடி செய்வது வழக்கம். அப்போது Francis இடம் என்னுடைய பிரச்சனை குறித்து பேசினேன். அவர், “நீ ஏன் எங்களுடைய வீட்டில் ஒரு வாரம் தங்கி பிரச்சனைக்கு ஒரு முடிவை எட்டக் கூடாது” என்று கேட்டார். வார இறுதியில் அவர், “பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லையா? சரி ஒரு மாதம் தங்கியிரு” என்றார். மாதத்தின் இறுதியில், “உனக்கு எத்தனை மாதங்கள் தங்கியிருக்க வேண்டுமோ அத்தனை மாதங்கள் தங்கியிருந்து தீர்வு காணுங்கள்” என்று கூறிவிட்டார்.
சில்வனா: இது ஒரு எழுத்தாளரின் கனவாயிற்றே. நீங்கள் எழுத்தாளர்களுக்கான தனி காலனியில் இடம் கேட்டு விண்ணப்பிக்க முடியாது. அந்த மாதிரியான காலனிகளில் கொலம்பிய எழுத்தாளர்களை இன்னமும் அனுமதிக்கின்றனரா?
வாஸ்க்வெஸ்: ஆம் என்னுடையது எழுத்தாளர்களின் காலனி தான். ஆனால்-
சில்வனா: அதனை முழுமையாக நீங்கள் மட்டுமே பயன்படுத்தினீர்கள்.
வாஸ்க்வெஸ்: ஆம். நான் ஒரு பத்து மாதங்களுக்கு இரண்டு இணையான வாழ்க்கைகளை வாழ்ந்து கொண்டிருந்தேன். காலையில் நாங்கள் வேட்டைக்கு கிளம்புவோம். பிறகு வீட்டிற்கு செல்வோம். அங்கே சூசன் இரவு சாப்பாட்டை தயார் செய்து வைத்திருப்பார்.
சில்வனா: உங்களுடைய சிந்தனையில் எந்த கதை அப்போது சமையல் ஆகிக் கொண்டிருந்தது?
வாஸ்க்வெஸ்: ஒரு கதையும் இல்லை. அப்போது நான் எத்தகைய எழுத்தாளன் ஆக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டிருந்தேன். எந்த வகையிலான எழுத்தை படித்தல், என்னை அந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்றும் யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆண்டில் நான் படித்த அளவிற்கு இப்போது படிக்க இயலவில்லை. பெல்ஜியத்தில் நன் இருந்த ஓராண்டுக்கு பிறகு, ட்ருமன் கபோட் சொன்ன, ஒரு நாளில் ஒரு புத்தகம் என்பது சாத்தியம் என்றே தோன்றியது. அப்போது தான் எனக்கான சில முக்கிய எழுத்தாளர்களை நான் கண்டு கொண்டேன். அவர்களில் ஒருவர் தான் கான்ராட்.
சில்வனா: அவருக்கான ஒரு முழு பக்க அஞ்சலியை செலுத்தி இருந்தீர்கள்.
வாஸ்க்வெஸ்: La historia secreta de Costaguana வை என்னால் ஒரு அஞ்சலி என்று கருத முடியாது. நான் கான்ராட்டின் கதாபாத்திரத்தை மனித உருவாக்கம் செய்ய முயன்றேன் என்று கூறலாம்.
சில்வனா: அது ஒருவகையில் அஞ்சலி தானே? எதற்காக கான்ராட்டிற்கு மட்டும் இத்தகைய கௌரவம்?
வாஸ்க்வெஸ்: அவருடைய எழுத்தின் மூலம் புனைவு என்றால் என்ன என்று நான் புரிந்து கொண்டேன். அது என்ன செய்ய வேண்டும்? எப்படி இயங்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். அவருடைய புனைவின் மூலம் மட்டும் இல்லாமல், முன்னுரை, கடிதங்கள், கட்டுரைகள் என் அனைத்தின் மூலமும் கற்றுக் கொள்ள முடியும். இவை மிகப் பெரிய கருத்தியல்கள். ஆனால் இவை என்னுடைய எழுத்துக்கு அடிப்படையாகவும், அவசியமாகவும் எப்படி அமைந்தன என்பது எனக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.உண்மையில் கான்ராட்டும், நைபாலும் என்னுடைய நாட்டை இருள் நிறைந்த பகுதிகளாக எப்படி காண்பது என்பதைக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள் தான் என்னுடைய பிறந்த இடத்தின் மீதான ஒரு இறுக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்று உணர்த்தினார்கள். நாட்டின் மீதான விசுவாசம் அதீதமானது என்பதை உணர்த்தினார்கள். வரலாற்றை தனி மனிதர்களின் பார்வையில் பார்க்க கற்றுத் தந்தார்கள். அதனை நாம் அவ்வப்போது செய்யத் தவறுகிறோம். உடலியல் இடமாற்றத்தை கற்பனைத் திறனுக்கான சக்தியாக மாற்ற முடியும் என்பதை அவர்களிடம் இருந்து தான் நான் கற்றுக் கொண்டேன்.
சில்வனா: உங்களுடைய இரண்டு புத்தகங்களிலும், இடமாற்றத்தையும், கொலம்பியாவை புரிந்து கொள்ள முயலும் பகுதிகளையும் மிகவும் வலிமையாக முன்வைத்திருக்கிறீர்கள். போர்ஹேஸின் “Ulrica”என்கிற கதையை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் மூலக் கதாபாத்திரம் தன்னை கொலம்பியனாக காட்டிக் கொள்ளும். அவனுடைய இச்சையின் உருவம் கொலம்பியனாக இருப்பது எத்தகையது என்று அவனிடம் கேட்கும் போது, அவன் சொல்கிறான், “அது ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலான செயல்பாடு” என்று. கொலம்பியர்கள் இதனை முடிவில்லாமல் சொல்லிக் கொள்கிறார்கள். போர்ஹேஸை அவர்கள் தவறாக பயன்படுத்துவதை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். அவர் அந்த வாசகத்தை தொடக்கத்தின் சுவாரசியத்திற்காக பயன்படுத்தினாரே ஒழிய தேசிய வாசகமாக பயன்படுத்தவில்லை! புதிய அரசின் “Colombia es Pasion” என்கிற வாசகத்தையும் நான் அவ்வாறு தான் மதிப்பிடுகிறேன். பேரார்வமும், நம்பிக்கையும் படுக்கை அறையில் மட்டுமே காட்ட வேண்டியவை. அது ஒரு குடிமகனின் கடமை அல்ல.
வாஸ்க்வெஸ்: இதை நீங்கள் காகிதத்தில் எழுதி எங்கே கையெழுத்து போட வேண்டும் என்று தெரிவியுங்கள். இதை தான் நானும் கூற நினைக்கிறேன். 1999 ல் என்னுடைய பிரச்சனை இந்த வகையில் என்னால் கொலம்பியாவை பற்றி எழுத முடியவில்லை என்கிற காரணத்தினால் தான் வந்தது. என்னுடைய நாட்டையும், அதன் வரலாற்றையும் அதன் அரசியலையும் நான் புரிந்து கொள்ளவில்லை.
சில்வனா: நானும் தான். இதனை உங்கள் வாயால் கேட்பது நல்ல உணர்வை தருகிறது. எங்களுடைய நட்பு வட்டத்தில் நாங்கள் வரலாற்றை பற்றி தெரிந்து வைத்திருந்த அளவில் பெரிய ஓட்டை இருந்தது. நாங்கள் ஜே.எஃப்.கே வின் புகைப்படம் தொங்கிய அமெரிக்கன் பள்ளிக்கு சென்றதால் தான் இது நடந்தது என்று நினைக்கிறேன். எங்கள் இடத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு வன்முறை சம்பவம் நடந்தது. இதற்கு காரணம் நம்முடைய பகுதிக்குள்ளாக இருந்த பிரிவினை எண்ணமும், நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததுமே என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் கொலம்பியா முழுவதும் பயணம் செய்திருக்கிறீர்களா? நான் செய்ததே இல்லை.
வாஸ்க்வெஸ்: ஆம். நான் பெல்ஜியத்தில் இருந்த ஓராண்டில், கொலம்பியாவை பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணமே என்னை மிரளச் செய்வதாக இருந்தது. ஹெமிங்வேயின் கருத்தின் படி, உங்களுக்கு தெரிந்த ஒரு இடத்தை பற்றி மட்டும் தான் நீங்கள் எழுத வேண்டும். ஆனால் போர்ஹேஸின் பார்வையில், லத்தீன் அமெரிக்கச் சிந்தனையான, எழுத்தாளர்கள் தங்களுடைய நாடுகளை பற்றி எழுதியே ஆக வேண்டும் என்பதனை உடைக்க முற்பட்டார். நாவலாசிரியர்கள் தூதுவர்களா என்ன? “The Argentine Writer and Tradition” என்கிற கட்டுரையில் அவர் இந்த முன்முடிவை எதிர்த்தார். அதன் பின்னரே எங்களுடைய வாழ்க்கை சற்று இயல்பாக இருக்கிறது. எனக்கு கொலம்பியாவை பற்றி எழுத வேண்டும் என்கிற கட்டாயம் இப்போது இல்லை. ஆயினும், எனக்கு அதனை செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கம் இருந்தது. நம் வரலாற்றின் சில சாம்பல் நிறப் பகுதிகளை பதிவு செய்வதில் எனக்கு வெறி இருந்தது. ஆனால் அதன் வரலாற்றை புரிந்து கொள்ளாமல் எழுதக் கூடாது என்கிற அடிப்படையில் நான் அமைதி காத்து வந்தேன். அந்த காலக் கட்டம் அசைவற்ற செயலிழந்த காலம் என்றே சொல்லத் தோன்றுகிறது. ஒரு வெள்ளைக் காகிதத்தை பற்றி பேசவேண்டும். ஒரு வெற்று உலகத்தை எதிர்கொள்ள வேண்டும்.
சில்வனா: நான் தலை கீழாக செய்ய முற்பட்டேன். நான் எழுத்தின் மூலமே கற்க முயன்றேன். உங்களுடைய நாட்டை பற்றி நீங்கள் புரிந்து கொள்ளாத விஷயம் என்ன?
வாஸ்க்வெஸ்: தன்னுடைய நாட்டின் ஆன்மாவை பற்றி மக்கள் பேசுவதை நான் வெறுக்கிறேன். ஒரு சிறு குழுவுக்கு இடையிலான தேச பக்தியையும் தான். ஆனால், அதே குணம் தான் எனக்கு புரிபடாமலும் இருக்கிறது: கொலம்பியாவின் ஆன்மா. அது வன்முறை நடப்பதற்கு அதிக அளவில் காரணமாக இருந்திருக்கிறது. அதையும் தாண்டிச் செல்கிறது.
சில்வனா: பெல்ஜியத்தின் நாட்டுப்புறத்தில், நம்முடைய வன்முறை குறித்த தெளிவான பார்வை உள்ளதா? கொலம்பியாவில் நடப்பவை குறித்த சங்கிலித் தொடரான பார்வையை உங்களுடைய எழுத்தின் மூலம் உருவாக்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்களா?
வாஸ்க்வெஸ்: இல்லை. நான் என்னுடைய கதாபாத்திரங்களின் கண்களை தான் திறக்க முடியும். என்னுடைய நாவலை படிக்கும் எந்த ஒரு நபரும் முடிவாக எதையோ தெரிந்து கொண்டதாக நினைக்க வேண்டும். ஆனால் நாவல்கள் வெறும் தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமல்ல. நாவல்களில் இருந்து கிடைக்கும் தகவல் மறைமுகமாக, தெளிவில்லாத முறையில், மிகவும் சுவாரசியமான முறையில் கிடைக்கின்றன. தனி மனிதனுக்கும் வரலாற்றிற்குமான தொடர்பை நாவல்கள் உணர்த்துகின்றன. திருமணம் எந்த வகையில் வினோதமாக செயல்படுகிறது என்பதையும்.
சில்வனா: இதையே புனைவல்லாத சிறந்த படைப்புகளை பற்றியும் கூறலாம். ஒவ்வொரு கதைக்கும் எப்படி இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை The Informers விளக்குகிறது. உண்மையின் தெளிவற்ற பக்கத்தை காட்டுகிறது. மீளுருவாக்கம் நடக்க வேண்டுமெனில் எப்படி இரண்டு பக்கத்தையும் அறிய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
வாஸ்க்வெஸ்: நாடுகளும், அரசுகளும் தான் சிறந்த கதை சொல்லிகள். எப்படியெல்லாம் பொய் சொல்லி நம்ப வைக்க முடியும்; எப்படி எல்லாம் உவமைகளை சொல்லி பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதன் முழு வடிவம் அவை. இந்த திறமை நாவலாசிரியர்களுக்கு கிடையாது. எந்த விஷயம் அவர்களுடைய கதை சொல்லும் முறைக்கு எதிராக உள்ளதோ அதனை தூர எறிந்து விடுவார்கள். வரலாறு பதவியின் மூலம் சொல்லப் படும் சேதி. இது புதிய செய்தி ஒன்றும் அல்ல. அதனால் ஒரு நாவலை எழுதுவதற்கான அவசியமாக எதிர்மறை விஷயங்களை சொல்லலாம். என்ன நடந்தது என்று பேசுவதை காட்டிலும், என்ன நடந்திருக்கலாம் என்று பேச நாவல்கள் உதவும். நம்முடைய இறந்த காலமாக நாம் எதை அழைக்கிறோமோ, (அது தனிப்பட்டதாகவும் அனைவருக்கும் தெரிந்ததாகவும் இருந்தாலும்) அது முதல் முறையாக சில விருப்பு வெறுப்புகள் மற்றும் முன்முடிவுகளுடன் ஒருவர் கூறும் கதை. நாவல்கள் இதனை அவ்வப்போது நினைவு படுத்திக் கொண்டிருக்கும். ஒரே உண்மை, ஒரே வரலாறு, ஒரே கடந்த காலம் என்று ஒன்றும் இல்லை.
***
நன்றி : Bomb Magazine
