- சமந்தா ஹார்வே
- தமிழில் : நன்மாறன் திருநாவுக்கரசு
விஞ்ஞானப் புனைவு உண்மையாதல் பற்றியும், தொழில்நுட்பத்தில் ஒரு சகாப்தத்தின் முடிவு குறித்தும் அலசுகிறார் சமந்தா ஹார்வே.
***
சர்வதேச விண்வெளி நிலையம் என்பது வஞ்சனை நிறைந்தது. இருபத்து மூன்று ஆண்டு காலச் சுற்றுப்பயண வாழ்க்கை, இருபத்து மூன்று ஆண்டுகளாக மனித வாசம், பங்களிக்கும் பதினைந்து நாடுகள் என அதன் கதை சர்வதேச மானுட ஒத்துழைப்புக்கு ஆகச்சிறந்த சான்றாகும். மனிதர்கள் உருவாக்கிய விலையுர்ந்த பொருள் அது. திகைக்கப்பூட்டும் வகையில் சிக்கலானதும் கூர்மதியுடைய தனித்துவமானதும்கூட.
அதேசமயம், மனித உளத்தின் தொன்மமாகவும் அது மாறி நிற்கிறது – பூமியில் இருந்து தெரியும் நகரும் ஒளிக்கீற்றாக, நிலவைக் கடக்கும் நிழல்மிகு வண்ணத்துப்பூச்சியாக, அதன் இடையுறாத தொடர் பயணங்களால் ஆசுவாசமளிக்கிறது.
தொழில்நுட்பம், தொன்மம் போன்று அது ஒரு காலப்பெட்டகமும்கூட. ஆம், புதிய கூறுகள் சேர்க்கப்படுகின்றன. தொடர் புதுமைகளும் புதுப்பித்தல்களும் இருக்கின்றன. ஆனால் சர்வதேச விண்வெளி நிலையத்தின் அசல் பாகங்களுக்குத் தற்போது இருபத்து ஐந்து வயதுக்கு மேல் ஆகிறது. பூமியின் தாழ் வட்டப்பாதையில் மணிக்கு 17500 மைல் வேகத்தில், இரவு பகலாக அதீத வெப்பத்தையும் குளிரையும், சூரியக் கதிர்வீச்சையும், விண்வெளிக் குப்பைகளின் தாக்குதலையும் தாங்கியபடி பயணிக்கும் ஒன்றுக்கு, அது கம்பீரமான வயதுதான்.
அதிசயமாக, அதன் வயதின் காரணமாக அந்நிலையத்தின் சில பகுதிகள் இன்னமும் பழமையைத் தாங்கி நிற்கின்றன. அதிநவீனத்தைக் காட்டிலும் வயது முதிர்ந்ததாகக் காட்சியளிக்கின்றன. அதன் ரஷ்யப் பிரிவுகளான ஜார்யாவும் (Zarya) ஸ்வெஸ்டாவும் (Zvezda) மிகப் பழையவை. அவற்றின் உட்பாகங்கள் 1980களின் மத்தியில் பொருத்தப்பட்டவை. அவற்றின் சுவர்கள் அடர் பச்சை நிற வெல்க்ரோவால் போர்த்தப்பட்டுள்ளன. வெல்க்ரோ, குறைந்த ஈர்ப்பு விசையில் பொருட்களை ஒட்டி வைத்துக் கொள்ள உதவும், ஆனால் இப்போது தீப் பிடிக்கும் அபாயம் உள்ளதாகக் கருதப்படுகிறது.
நிலையத்தின் பல்வேறு பாகங்கள் தரம் குறைந்தவை. கரடுமுரடானவை. ஸ்பேஸ் எக்ஸ் தொழில்நுட்பத்தில் இன்று நாம் காண்பது போன்ற பெருநிறுவன டிஸ்னித்தன்மை வாய்ந்த வனப்புகள் இருக்காது. சோர்வூட்டும் வெளிர் பழுப்பு நிறைந்திருக்கும். ‘குளியலறை’ என்பது ஒரு பை தண்ணீரும், துணியும், அலச லாயக்கற்ற சோப்பும்தான். சமீபத்தில் ஜார்யா கூறுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. எளிமையாகச் சொன்னால், அவை‘மோசமான’ நிலையில் உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.
இந்த அற்புதமான, விஞ்ஞானப்புனைவுத் தன்மை வாய்ந்த கலைப்பொருள், வழக்கொழிவை நோக்கிப் பயணிக்கிறது. ஒருகாலத்தில் முன்னோடியாக இருந்து, இன்று நினைவேக்கமாய் கடந்து செல்வது, எழுத்தின் பார்வையில் மனம் கனக்கச் செய்கிறது. விஞ்ஞானப் புனைவு நிஜமாகும்போது, அது விஞ்ஞான மேய்ச்சல் பரப்பு எனும் புதிய கற்பனைத் திணையாகி விடுவதைப் பார்க்கிறேன். விண்வெளி மேய்ச்சல் பரப்பு, காலாவதியான நிலையத்துடனும், அதன் படிப்படியான அழிவுடனும் ஒரு சகாப்தமாக முடிவடைகிறது. ஒரு தொழில்நுட்ப, அரசியல் சகாப்தம் மட்டுமல்லாமல் விண்வெளியையும் அதனுடனான நமது உறவை உணர்ந்து கொள்ளும் முறையும்கூட முடிவடைகிறது. ஒரு குறிப்பிட்ட வெகுளித்தன்மையை இழக்கிறோம்.
விண்கலத்திற்கு மட்டும் வயதாகவில்லை, அதை ஸ்தாபித்த சில கொள்கைகளுக்குமே வயது முதிர்ந்து விட்டது. கால்நூற்றாண்டுக்கு முன்பு ரஷ்ய விண்வெளி நிறுவனமான Roscosmos அதன் சர்வதேச விண்வெளி நிலையக் கூறுகளில் ஒன்றுக்கு ஜார்யா (விடியல்) எனப் பெயரிட்டது. இது, புவி மற்றும் விண்வெளி அரசியலில் ஏற்பட்ட சர்வதேசக் கூட்டுறவை, ஒரு புதிய விடியலாகக் குறிக்கிறது. ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயான உறவு அன்பைக் காட்டிலும் தேவையின் காரணமாகப் பிறந்திருந்தாலும், அந்த வார்த்தை மிகப் பொருத்தமானது.
இப்போது, நாம் முன்னேறி இருக்கிறோம் (அது சரியாக வார்த்தையாக இருந்தால்). ஆம், போர் மற்றும் அந்த உறவின் முழுமையான சிதைவை நோக்கி முன்னேறி இருக்கிறோம். எங்கே போனது அந்தப் புதிய விடியல்? அதன் கடைசி எச்சங்கள் பூமியைச் சுற்றுகின்றன. விடியல், சேரிடம், நல்லிணக்கம், ஒற்றுமை என்கிற அதன் லட்சியங்கள் அதிவேகத்தில் நகரும் டைட்டானியத்திலும், எஃகு தொகுதிகளிலும் குறிக்கப்பட்டுள்ளன. அந்த உலோகக் கூடுகள் விரிசலடைந்து வருகின்றன.
எதிரெதிர் இருப்பவர்கள்அங்கு கூடி வாழ்கிறார்கள், ஒத்துழைக்கிறார்கள், உணவைப் பகிர்கிறார்கள், ஒருவருக்கு ஒருவர் சவரம் செய்து கொள்கிறார்கள். இது அநேகமாக நீண்ட காலத்திற்கு இருக்காது. ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்தில் இருந்து விலகப்போவதாக அச்சுறுத்துகிறது. இது ஒருகட்டத்தில் நிச்சயம் நடக்கும். ஆனால் இப்போதைக்கு அந்தக் கலைப்பொருள் அற்புத நினைவுச்சின்னமாக, சிதைந்த ராஜதந்திரக் கனவுகளின் களஞ்சியமாக இருக்கிறது.
இன்னொன்று, அங்குள்ள பூமியின் தாழ்வட்டப்பாதை சூழலும் மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது. 1961 ஆம் ஆண்டில் ஒரு ராக்கெட்டின் மேற்பகுதி வெடித்தது. அதன் சிதைவுகள், நாம் அறிந்த அதன் 200 துண்டுகள்தான் பூமியின் சுற்றுப்பாதையில் முதன்முதலில் நுழைந்த குப்பைகள். அதற்குமுன் செயற்கைக்கோள் உடைவால் உருவான மனிதனால் உருவாக்கப்பட்ட விண்வெளிக் குப்பைகள் எதுவும் இல்லை. படிப்படியாக இது வழக்கமானது. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக நாடுகள் அனைத்தும் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை ஏவத் தொடங்குகையில் குப்பைகளின் அதிகரிப்பு அதி வேகமெடுத்தது.
இப்போது பூமியைச் சுற்றி மனிதர்களால் உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான விண்வெளிக் குப்பைகள் உள்ளன. அவை மனிதத் தேடலை கடினமாக்குகின்றன. ஆபத்தான ஒன்றாய் மாற்றுகின்றன. ஒப்பீட்டளவில் நாம் அறிந்து வைத்திருக்கும் சிதைவுகளைத் தவிர்க்க, நிலையம் அதன் போக்கைக் கொஞ்சம் மாற்றிக்கொள்கிறது. ஆனால் பெரும் பிரச்னை என்னவென்றால், இந்தக் குப்பைகள் நம்மால் அறிய இயலாத அளவிற்கு பொடியவை. பயணத்தின் வேகத்தைக் கருத்தில் கொள்ளும்போது, ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறிய துகள்கூட சர்வதேச விண்வெளி நிலையத்தின் சாளரத்தை உடைத்துவிடும்.
ஒருகாலத்தில் புதிய எல்லையாக, மாசற்றதாக, மனிதர்களற்றதாக, பூமியின் தாழ்வட்டப்பாதையின் மூர்க்கத்தன்மை வாய்ந்த விரிவாக இருந்தது, இன்றைக்கு நம்மால் அகற்ற முடியாத குப்பை மேடாக மாறிவிட்டது. நமக்குக் கொடுக்கப்பட்டதை நாம் செய்தோம் – கண்டறிந்தோம், பழக்கினோம், குப்பையாக்கினோம். நமது காலப்பெட்டகக் கலைப்பொருள் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில், விண்வெளியில் நடக்கும் வீரர்களால் கைவிடப்பட்ட பழைய ராக்கெட் கழிவுகளையும், ஸ்பேனர்களையும் வேகமாகத் தவிர்த்தபடி பயணிப்பதை மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்யுங்கள். பூமியின் தாழ்வட்டப்பாதை வனாந்திரத்தில் நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதைப் பார்த்து உண்மையில் வேதனைப்படாமல் இருக்க முடிகிறதா? மீதம் இருப்பதாவது சேதமாகாமல் இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறதா?
நான் அதை அனுபவித்ததில்லை என்ற காரணத்தினால் வனாந்திரத்தைப் பொறுத்தவரை காடுகளும், கழுகுகளும், காட்டுப்பன்றிகளும் நிறைந்த மத்திம கால இங்கிலாந்தில் உணரும் அதே விசித்திரமான, அடிப்படையற்ற நினைவேக்கத்தை உணர்கிறேன். எனக்குள் ஆழமான ஒன்று அதற்காக மீண்டும் ஏங்குகிறது. விண்வெளி மேய்ச்சல் பரப்பு என்ற கற்பனைக் களம் மூலம் இதைதான் நான் சொல்ல வருகிறேன். விண்வெளி எனும் கருத்தும்கூட கதகதப்பான, பயனற்ற பழைய நாட்களின் நல்நினைவுகளுக்கு ஆட்பட்டு விட்டது.
இருப்பினும், இடையில் நாம் பார்வையை செவ்வாயின் மேல் செலுத்தியுள்ளோம். விண்வெளி என்பது இனி ஒற்றை விஷயமல்ல; அது மாசடைந்த கடந்த காலப் பரப்புகளையும் அதிநவீன எதிர்காலப் பரப்புகளையும் ஒன்றுக்கொன்று பகிர்ந்துள்ளது. செவ்வாயைப் பொறுத்தவரை,அந்த வடிவமைப்புகளும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பழைமையான வசீகரத்தைக் கொடுக்கத் தொடங்குகிறது. சர்வதேச விண்வெளி நிலையம் என்பது நினைவுச் சின்னமாக, குறிப்பிட்ட இலக்குகளைக் கொண்ட அறிவியலின் ஒரு பகுதியாக, குறைந்த பட்சம் நீண்ட, ஆழ்விண்வெளிப் பயணங்களுக்கு உபகரணங்களையும் விண்வெளி வீரர்களையும் தயார்படுத்தும் ஒன்றாக இருக்கிறது.
அது எப்போதுமே செவ்வாயை நோக்கிய ஒரு படிதான். இது மிகையுணர்ச்சி பற்றியது அல்ல, ஆனால் அது 250 மைல் தொலைவில் இருந்து பூமியைச் சுற்றி வரும் ஒரு கலைப்பொருள். தேசிய விண்வெளி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பால் இயங்குகிறது. மேலும், அங்கு நடைபெறும் விஷயங்கள் ஒவ்வொன்றும், (குறைந்தது நாசா/ஐரோப்பிய விண்வெளி நிலையங்களைப் பொறுத்தவரை) அறிவியல் நிகழ்வுகளும், அனைத்துத் தரவுகளும் வெளிப்படையான பொதுநலனுக்காக பொதுக்களத்தில் உள்ளன. அது உலகளாவியது. தான் கொண்டு சேர்த்த கூட்டுறவின் விழுமியங்களால் உருவானது.
தற்போது விண்வெளி ஆய்வு என்பது அதற்கு மாறாக வணிகரீதியாக இயக்கப்படும்போது, விண்வெளிப் பயணத்தில் முன்மொழியப்படும் ஒவ்வொரு முயற்சியும் தனியார் மயமாக்கப்பட்ட போட்டி முயற்சிகளின் ஒரு பகுதியாகிறது. இது பூமியை வட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் அல்ல. அதில் இருந்து விலகிச் சென்று சந்திரனில் நாம் சுரங்கம் அமைக்கவும், இயங்குதளம் அமைக்கவும் திட்டமிடுகிறோம். இறுதியாக செவ்வாய் கிரகத்திலும். ரஷ்யா, சீனா, இந்தியாவிற்கு முன் வேகமாக அங்கு செல்வது உரிமைகோருதல், வளங்களைச் சுரண்டுதல் போன்ற வணிக ஆதாயங்களுக்காகத்தான்.
இதை ஒப்பிடும்போது கால்நூற்றாண்டை தாழ்வட்ட பாதையில் கழித்துள்ள சர்வதேச நிலையம், நமது கோளுக்கு அதன் அர்ப்பணிப்பை தாழ்மையுடன் வழங்குகிறது. குறியீடாக இருந்தாலும் விழிப்புணர்வு, அர்ப்பணிப்பு, ஜனநாயகம் ஆகியவை அதன் நிலையான சுற்றுப்பாதையில் இருக்கின்றன. அதன் திறனும், மேற்பார்வை பண்பும் வானிலை, விலங்குகளின் இடப்பெயர்வு, மாறும் நிலப்பரப்பு ஆகியவற்றைக் கண்காணிக்கவும், தீ மற்றும் எண்ணெய் கசிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எப்படிப் பார்த்தாலும் அந்த அழகிய பரிசோதனை தன் காலத்தை நிறைவு செய்துவிட்டது. 2030 ஆம் ஆண்டில் அது சுற்றுப்பாதையில் இருந்து வெளியேற்றப்படும். பசிபிக் பகுதியில் மோதி துண்டுத் துண்டாக தரையிறக்கப்படும். நமது ஆர்வம் குலையா ஓய்வற்ற உந்துசக்தி புதியவற்றுக்கான நமைச்சலைத் தூண்டும் வேளையில், பூமியில் இருந்து புறக்கோள்களுக்கு இடம் பெயர்ந்த மனித குலத்தின் உளமாற்றத்தை அது மிகச்சரியாக முன்னிறுத்துகிறது.
பழைய விண்வெளி நாட்களின் கதகதப்பான, பயனற்ற நல்லெண்ணங்களைப் பற்றி என்ன சொல்வது? நினைவேக்கம், மந்தமான உந்துதலற்ற விஷயம் என்பதை நான் அறிவேன். அவள் தகவமைப்பதில் சிறந்தவள் என்கிற சொற்கள் என் கல்லறையில் எழுதப்படாது என்பதும் எனக்குத் தெரியும். என்னைப் பொறுத்தவரை மனிதகுலம் இன்னும் குகை வாழ்க்கையில் இருந்து முன்னேறவே இல்லை. அது இன்னும் மரிக்காமல் இருந்தால், முயல்களைப் பிடிப்பதிலும், அதைச் சாப்பிடுவது குறித்த குற்றவுணர்ச்சியிலும் வாழ்ந்து கொண்டிருக்கும்.
நான் விண்வெளி குறித்து எழுத வந்தபோது இலக்கிய மேய்ச்சல் பரப்பு பற்றிய யோசனை ஆற்றல் மிகுந்ததாக இருப்பதை அறிந்து கொண்டேன். நம் கோளினுடைய வளிமண்டலத்தில் மெல்லிய, முணுமுணுக்கும் வளைவு இங்கிருக்கிறது. அதற்குள் துருவ ஒளிகள் சஞ்சலம் செய்கின்றன; அதன் பின்னால் சந்திரன் சிதைந்து, நட்சத்திரங்கள் விழுகின்றன. பால்வீதியின் இதயத்தில் விண்மீன்களின் அடர் நெரிசல் மிகுந்த களம் இங்கிருக்கிறது. பிரமாண்ட நிகழ இயலாத் தன்மையால் உங்களைப் பரவசப்படுத்துகிறது.
அப்படி எழுதுவதற்கு எப்போதாவது ஒரு களம் வாய்த்தால், அது சர்வதேச விண்வெளி மையம் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு காலமாக நம்மையும் நமது பிரபஞ்சத்தின் பரப்பளவையும் ஒரு விசுவாசத்துடனும், நிதானமான கவனத்துடனும் கண்காணித்து வருகிறது, பாரம்பரிய இலக்கிய மேய்ச்சல் பரப்பில் உள்ள இடையர் தனது மந்தையை நோக்குவதுபோல.
விண்வெளி நிலையம், இந்த ஆயிரமாண்டு காலத்தின் மேய்ப்பராக, நெடுங்காலம் அலைந்து திரிபவராக, அன்பிற்குச் சாட்சியாக, நாம் அதனைச் சார்ந்திருக்கும் வகையில் சுற்றி வருகிறது. விண்வெளி விளக்கங்களில் அமைந்துள்ள அதன் இருப்பே, அந்த விளக்கங்களில் காலத்தைப் பொறிக்கக்கூடியதாகவும், அவற்றுக்கு மறைபுள்ளியை வழங்கக்கூடியதாகவும் இருக்கிறது. இந்த விண்வெளிக் கால நினைவுச் சின்னத்தை, போர்த் தழும்பேறிய கனவுப் பெட்டகத்தை, அது குறிக்கும் விஷயங்கள் அனைத்தையும் வசீகரமானதாகப் பார்க்கிறேன். அது பயணிக்கும்போது மணிக்கு 17,500 மைல் வேகத்தில் தொலைந்துபோன சகாப்தத்தை சுமந்து செல்கிறது, நமது பொன்னான எதிர்காலமாக இருந்த ஒரு சகாப்தத்தை.
***
Pastoral : இந்த ஆங்கில வார்த்தையின் பொருளடக்கமாக, கலை இலக்கியப் படைப்புகளில், மனித வாழ்வியல் சார்ந்த சூழலில் மனிதநேயத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்ட ஆயர்களின் ஒரு மேய்ச்சல் பரப்பாக வரையறுக்கப்படுகிறது. இந்த மேய்ச்சல் வகையானது, மேய்ப்பனின் வாழ்க்கை முறையின் சிறந்த வடிவத்தை சித்தரிக்கிறது – பருவங்களுக்கு ஏற்ப நிலத்தின் திறந்த பகுதிகளில் கால்நடைகளின் பரிணாம வளர்ச்சி மற்றும் மேய்ச்சலின் மாறும் தன்மை ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாக உருவகப்படுத்தப்படுகிறது.
சமந்தா ஹார்வே தனது இந்த Orbital நாவல் குறித்து எழுதும் போதும், நேர்காணல் காண்பவருடன் உரையாடல் நிகழ்த்தும் போதும், இந்த வார்த்தையை உபயோகிக்கிறார். ‘I wanted to write a space pastoral’.
***
நன்றி : Lit Hub, Photograph: Karen Robinson/The Observer

மிகச் சிறப்பான கட்டுரை.