• ஜான் ஷெல்ஃப்
  • தமிழில்: க. ரகுநாதன்

 

ஜப்பானிய புனைவுகள் உலகப் புகழ் பெறுவது ஏன்?

 

இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக புத்தகக் கடைகளுக்குச் சென்ற ஒவ்வொருவரும் ஜப்பானிய புனைவுகள் அசாதாரணமான வரவேற்புப் பெற்றுள்ளதைக் கவனித்திருப்பார்கள். இங்கிலாந்தில் விற்பனையாகும் மொழிபெயர்ப்புப் புனைவுகளில் 25 சதவீதமானவை ஜப்பானியப் புனைவுகள் தான் என்பது 2022ஆம் ஆண்டில் நீல்சன் புக் ஸ்கேன் நிறுவனக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதன் தாக்கம் இந்த வருடம் மேலும் அதிகமாகி உள்ளது: கார்டியன் பத்திரிகை பெற்றுள்ள புள்ளிவிவரங்களின் படி, இவ்வருடம் முதன்மையான 40 மொழிபெயர்ப்பு நூல்களில் 43 சதவீதம் ஜப்பானியப் புனைவுகளே இடம் பிடித்துள்ளன. அதிலும் அஸாகோ யுஸூகி-யின் பகடியும் சமூகப் பார்வையும் கலந்த குற்றவியல் நாவலான Butter முதல் இடத்தில் உள்ளது. மேலும் இந்நூல் பதிப்பாளர்களால் தெரிந்தெடுக்கப்பட்டு வாசகர்கள் வாக்களித்துத் தேர்வு பெறும் Books Are My Bag Readers விருது பெற்ற நிகழ்வு, முக்கியத் திருப்பு முனையாக அமைந்தது.

இங்கிலாந்தில் நவீன ஜப்பானியப் புனைவுகள் புகழ் பெற்று விளங்குவது அதிசயமான விஷயமல்ல. 1990களில் இரண்டு எழுத்தாளர்கள் இங்கே தீவிரமாக வழிபடப்பட்டார்கள். 1998-ல் The Wind-Up Bird Chronicle என்ற நாவலை பிரிட்டனின் ஹார்வில் பதிப்பகம் வெளியிட்டபோது உலக இலக்கிய அதிசயம் ஹாருகி முரகாமி இங்கே புகழ் பெறத் தொடங்கினார். 2000-ல் வாட்டர்ஸ்டோன் புத்தகக் கடையின் கொள்முதல் குழுவை முன்னெடுத்த முரகாமியின் தீவிர ரசிகரான ஸ்காட் பேக், “மிகுந்த கவனம் செலுத்தினோம். அவருடையது என்ன புத்தகம் வந்தாலும் சரி, நாங்கள் வாங்கிக் குவிக்கத் தொடங்கினோம்” என்று கூறுகிறார். இந்த வாரம் முரகாமியின் 15வது நாவல் The City and its Uncertain Walls வெளியாகி உள்ளது. புதிரான சுவர் கொண்ட ஒரு நகரத்தில் தன் காதலியைத் தேடிச் செல்லும் ஒருவன் விசித்திரமான நூலகங்கள், வரைபடங்கள், கனவுகள் காண்பதைப் பற்றியது இந்த நாவல். தனிமையில் உலவும் நாயகர்கள், ஜாஸ் இசை, பூனைகள், மிகுபுனைவுக் கூறுகள் கொண்ட முரகாமியின் நாவல்கள் இங்கு தொடர் வெற்றி பெறக் காரணம்  “இந்த விந்தைக் கதைகள் எளிதாகக்  கிடைக்கின்றன” என்பது தான் என்கிறார் ஸ்காட். ஆனால் பனானா யொஷிமோட்டோ தான் முதலில் இங்கு வந்தார். “முரகாமிக்கு முந்தையவர் அவர் என்பதை கட்டாயம் குறிப்பிட்ட வேண்டும்.” ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் எண்பதுகளின் பிற்பகுதியிலும் தொண்ணூறுகளின் முற்பகுதியிலும் யொஷிமோட்டோ Kitchen and Lizard போன்ற புனைவுகள் வழியாக இங்கு வந்தார்.  பெரும்பாலானவை தனிமைப்படுத்தப்பட்ட இளம் பெண்கள் தங்களது துன்பத்தைக் கடந்து வர முயற்சிப்பது போன்ற கதைக் களம் கொண்டவை.

முரகாமிக்கும் யொஷிமோட்டோவிற்கும் பொதுவான ஒரு விஷயம் உள்ளது: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கென்ஸாப்ரோ ஓய் 1990 -ல் எழுதிய ஒரு கட்டுரையில் இருவரையும் விமர்சனம் செய்துள்ளார். “அவர்கள் எழுதியவை அரசியலில் ஈடுபடாத அல்லது பாதிக்கப்படாத இளைஞர்களின் அனுபவங்களையும் விடலைப் பருவ உள்ளடக்கமும் பின்விடலைப் பருவ துணைக் கலாச்சாரக் கூறுகளையும் வெளிப்படுத்துபவை“ என்றார். முரகாமி மற்றும் யொஷிமோட்டோ இருவரையும் இணைக்கும் கூறுகளான “அந்நியப்படுதல், சர்ரியலிஸம், சமூக எதிர்ப்பார்ப்புகளை எதிர்த்தல்”- போன்றவை இன்றைய ஜப்பானிய படைப்புகளில் ஏராளமாக இடம் பெறுகின்றன. ஆனால் கடந்த பத்தாண்டுகளாகத்தான் அதிகமான ஜப்பானிய எழுத்தாளர்கள் கவனம் பெறத் தொடங்கி உள்ளனர்.  செவ்வியல் மற்றும் நவீன ஜப்பானிய குற்றவியல் நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. முதன்மையான 20 நாவல்களில் யுஸூகியின் Butter உடன் ஸெய்க்கோ மட்ஸுமோட்டோவின் செவ்வியல் புனைவான Tokyo Express-ம் இடம் பிடித்துள்ளது. பெண் எழுத்தாளர்களான சயாகா முராட்டா, ஹிரோமி கவாகமி, மியேகோ கவாகமி ஆகியோரின் இலக்கியப் புனைவுகளும் அதிக கவனம் பெற்று வருகின்றன.

“2018ல் முராட்டாவின் Convenience Store Woman நாவல் வெளியிடப்பட்டது ஒரு முக்கியத் தருணம்” என்கிறார் Granta பத்திரிகையின் பதிப்புத் துறை இணை இயக்குநர் ஜேஸன் ஆர்தர். ஒரு சிறு கடையில் பணியாற்றும் 36 வயதான கெய்கோ எனும் பெண் அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள சிரமப்பட்டாலும் அன்றாட வேலையில் மனநிறைவு கொள்கிறாள். முதலில் இந்த நாவலும் அதன் பின்னர் Earthlings மற்றும் Life Ceremony ஆகிய நாவல்களும் கிரண்டாவால் வெளியிடப்பட்டு ஐந்து லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. “அவர் ஓர் அதிசயம்” என்கிறார் ஆர்தர். “ஜப்பானிய நாவல்களின் வளர்ச்சியில் Convenience Store Woman முக்கிய பங்கு வகிப்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல” என்கிறார் Read Japanese Literature இணையதளம் மற்றும் பாட்காஸ்ட் ஆசிரியர் அலிஸன் ஃபின்ச்சர்.

டோக்யோவில் இருபது ஆண்டுகள் வாழ்ந்தவரும் முராட்டாவின் ஆங்கில மொழிபெயர்ப்பாளருமான ஜின்னி டேப்லே டகேமோரி, “முராட்டாவின் நூல்கள் வெற்றி பெற்றது உண்மையாகவே வியப்பூட்டுகிறது” என்கிறார். Convenience Store Woman நாவலை ஆட்டிஸ பாதிப்பு தொடர்பானதாக வாசகர்கள் நோக்கத் தொடங்கினர். ஆனால் சயாகா முராட்டா அந்த நோக்கத்தில் எழுதவில்லை எனினும் வாசகர்களின் பார்வை பற்றி அவர் கவலைப்படவில்லை. நாம் இயல்பாக எடுத்துக் கொள்ளும் எதுவும் இயல்பானவை அல்ல. ஜப்பானிய பெண் எழுத்தாளர்களின் நாவல்களை மொழிபெயர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் டகேமோரி. அவர் தனது சகாக்களான ஆலிஸன் மார்க்கின் பாவெல், லூஸி நார்த் ஆகியோருடன் இணைந்து Strong Women, Soft Power என்ற குழு மூலமாக இதை சாத்தியமாக்கி உள்ளார். “பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் மிகுந்த பிரதிநிதித்துவம் செய்யப்பட்டு மொழி பெயர்க்கப்படுகின்றன எனும் கருத்து உண்மையல்ல. 2023 -ல் சமபங்காக இருந்தது. இவ்வருடம் அப்படி இல்லை” என்கிறார் ஃபின்ச்சர்.

“முரகாமி போன்று வேறு ஏதாவது இருக்கிறதா? என்பதிலிருந்து சயாகா முராட்டா போல வேறு நூல் உள்ளதா?” என்று பதிப்பாளர்கள் கேட்கும் அளவிற்கு பெண் எழுத்தாளர்கள் புகழ் பெறத் தொடங்கிவிட்டனர் என்கிறார் ஃபின்ச்சர். இந்த வெற்றியின் மீது கட்டமைக்கப்படும் விருப்பத் தேர்வின் மற்றொரு பக்கம் என்னவெனில், ஒரே மாதிரியான புனைவுகளாக அவை இருக்கலாம் என்ற நோக்கம் தான். அந்நியமாதல் பற்றிய அடுத்த மிகப் பெரிய நாவல் ஒன்றை கண்டறியும் தேடல் மட்டுமல்லாமல் இந்த ஜப்பானிய மொழிபெயர்ப்பு துயராற்று நூல்களில் மாபெரும் சக்தி வாய்ந்த படைப்புகள் கிடைக்கலாம் என்ற நோக்கமும் உள்ளது. பதிப்புத் தொழிலில் ‘இதயம்வருடும்’ என்றும் ‘தேற்றல்’ என்றும் வகைப்படுத்தப்படும் இந்த துயராற்றுப் புனைவுகள் பற்றி பத்திரிகைகள் விமர்சனம் செய்யாவிட்டாலும் கூட இந்த ஆண்டில் அதிவிற்பனையான ஜப்பானிய புனைவுகளில் பாதிக்கும் மேலானவை இந் நாவல்களே ஆகும். இவற்றில் தொடர்ச்சியான சிந்தனைப் போக்கு உள்ளது: காஃபிக் கடைகள் (Before the coffee gets cold- டோஷிகாஸு கவகுச்சி); புத்தகக் கடைகள் மற்றும் நூலகங்கள் (What are you looking for Is in the Library- மிச்சிகோ அயாமா); மற்றும் பெரும்பாலும் பூனைகள் (She and her cat- மகாட்டோ ஷன்காய்).

ஜப்பானிய துயராற்று நாவல்களின் வெற்றிகர வெளியீட்டாளரான டபுள்டே பதிப்பகத்தில் ஜேன் லாசன் துணைப் பதிப்பாளராக உள்ளார். ஜப்பானிலேயே வளர்ந்த அவர்  இப்பதிப்பகத்தில் உதவி ஆசிரியராக இருந்தபோது “ஜப்பானிய புனைவுகளை அதிகம் எதிர்நோக்கியது நான் மட்டுமே. 2001ல் அதிவிற்பனையான டகாஷி ஹிராடே எழுதிய The Guest Cat நாவலைப் பார்த்தபோது அது போன்ற ஒரு நாவலை நான் வெளியிட வேண்டும் என்று விரும்பினேன்” என்கிறார்.  2017ல் ஹிரோ அரிகவா எழுதிய The Travelling Cat Chronicles என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார் ஜேன் லாசன். அது பத்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையானது.

துயராற்று வகைமையின் ஆர்வமூட்டும் விஷயம் என்னவென்றால் அது எல்லைகள் கடந்து இளைஞர்கள் மற்றும் முதியவர்களின் மனதைக் கவர்ந்துள்ளது என்பது தான் என்கிறார் லாஸன். இந்நூல்கள் பாவ்லோ கொய்லோவின் ரசவாதி நாவல் போன்ற தரத்தைக் கொண்டிருந்தாலும் இன்ஸ்டாகிராம் மற்றும் புக்டாக் போன்றவற்றால் உயர்த்தப்பட்டு சிறப்பான அம்சமாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த துயராற்று நாவல்களைப் பற்றியும் குறிப்பாக பூனை துணை வகைமை குறித்தும் இகழ்ந்துரைக்கப்படுகிறது. “ஏராளமான பிரதிகள் விற்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை; இவை குறித்து பொறாமையோ இறுமாப்போ கொண்டிருப்பவர்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை” என்பார்கள். இந்த மனப்பான்மை தனிப்பட்ட நூல்களை விட பேரளவில் பதிப்பகங்களால் வெளியிடப்படும் நூல்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

இங்குள்ள பதிப்பாளர்கள் ஜப்பானிய புனைவுகளில் நிறுவப்பட்ட போக்குகளை பிரதிபலிக்கும் நூல்களை வெளியிடுவதில் திறமை மிக்கவர்கள்.  கிழக்காசிய இலக்கியங்களில் நிபுணத்துவம் உடைய இலக்கிய முகவர் லீ காங்கின், தனது பதிப்பகம் ஒன்று வெளியிட்ட பெண் புத்தக விற்பனையாளர் பற்றிய அபுனைவு நூலுக்கு ஜப்பானிய மொழியில் முற்றிலும் வேறு தலைப்பு வைக்கப்பட்டிருந்தும் Convenience Store Woman என்ற தலைப்பு போலிருக்க வேண்டும் என்பதற்காக The Bookshop Woman என்று தலைப்பிட்டது. (ஆனால் அது நன்றாக விற்கிறது!).

நூல் அட்டையில் பூனை கருத்துருவாக்கம் இருப்பது என்பது மிக சக்தி வாய்ந்தது மட்டுமின்றி நாவலுக்குள் பூனை இடம் பெறுவது என்பது மீமிகையானது என்கிறார் Blogger எழுத்தாளரும் ஜப்பானியப் புனைவுகளின் ரசிகருமான டோனி மெலோன். அவர் அண்மையில் வாசித்த சடோஷி யகிசவாவின் Days at the Morasaki Bookshop என்ற நாவல் 2024ம் ஆண்டு சிறந்த விற்பனையடைந்த நூல்களில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது. “அட்டையில் பூனை உள்ளது. ஆனால் கதையில் பூனை இல்லை. அது பற்றிய சிறு குறிப்பு கூட இல்லை. (அதன் தொடர் நாவல்களின் அட்டையில் இரண்டு பூனைகள் இடம் பிடித்துள்ளனவாம்.)

“ஜப்பானில் பூனைகள் கொண்ட நூல்கள் நிறைய உள்ளன என்று அர்த்தமல்ல. அவை நாவல்களில் உள்ளன. ஆனால் இங்கிலாந்தில் பரப்பப்படுவதைப் போல அதிகமாக அல்ல. ஜப்பானிய புனைவுகள் பொதுவாக மிகை உணர்ச்சி கொண்டவை” என்று சொல்லும் டகேமோரி, ஷின்காயின் She and Her Cat  போன்ற நிறைய பூனைப் புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார். “நான் மிகை உணர்ச்சியின் பெரும் ரசிகை கிடையாது. ஆனால் அந்தச் சிறிய நூலை மிக விரும்பினேன். அது ஆங்கிலத்தில் மிகை உணர்ச்சி மிக்கதாக இருப்பதைத் தவிர்க்க மிகக் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.” என்கிறார்.

“துயராற்று நாவல்கள், ஜப்பானிய இலக்கிய உலகில் நுழைவதற்கான வாயில் போன்றவை. அவற்றின் வெற்றியானது காத்திரம் மிக்க  இலக்கிய வகைமைகளை ஆங்கிலத்தில் கொணர்வதற்கு வழிவகுக்கும். இல்லாவிடில் அவை வெளிச்சத்திற்கே வராமல் போகலாம். இங்கிலாந்தில் பிரபலமாக இருக்கும் ஜப்பானிய புனைவு வகைமைகளான குற்றம், இளம் பெண் படைப்பாளிகளின் இலக்கிய வகைமை, துயராற்று நூல்கள் ஆகியவை ஜப்பானில் புகழ் பெற்றிருக்கும் காத்திரமான இலக்கிய வகைமைகளைப் புறந்தள்ளி பதிப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவையே ஆகும்.” என்கிறார் ஃபின்ச்சர்.

“தீவிரமான அறிவியல் புனைவுகள், மீயியற்கை அல்லது திகில் நாவல்கள் ஆகியவற்றைக் காண முடியவில்லை. மாங்கா மற்றும் எளிய நாவல்களைத் தாண்டி காதலைப் பார்க்க இயலவில்லை. ஜப்பான் இலக்கியம் வரலாற்றுப் புனைவு மரபிற்கு பெயர் பெற்றது, குறிப்பாக சாமுராய் நாவல்கள். அவற்றையும் காணவில்லை. ஜப்பானில் மிக அதிகமாக விற்பனையாகும் நூல்கள் அதிக தொலைவு பயணிப்பதில்லை. சிறுகதைத் தொகுப்புகள் விற்பதில்லை” என்கிறார் லீ காங்கின்.
சில இலக்கிய வகைமைகள் மேலாதிக்கம் பெற்றுள்ளன என்பதற்கு அப்பால், இங்குள்ள வாசகர்களைக் கவரும்படியான ஜப்பானிய இலக்கியத்தின் பேசுபொருள் அல்லது நடையினைக் கொண்ட நூல்கள் உள்ளனவா?  மரியோ ஒகாரா எழுதிய  Hybrid Child என்ற ரோபாட் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய நாவலை 2018ல் வாசித்ததாகவும் ஆனால் அது 1990ல் எழுதப்பட்டது என்றும் பிற்கால முதலாளித்துவப் பிரச்சினைகளைப் பற்றியும் பால் சமத்துவம் மற்றும் பெண்ணியப் பிரச்சினைகளைக் குறித்தும் ஜப்பானிய இலக்கியம் படைத்திருந்த போதும் “இது போன்ற படைப்புகள் ஆங்கில இலக்கியத்தில் அடுத்த இருபது ஆண்டுகளாகத் துவங்கப்படவே  இல்லை”என்று  கூறுகிறார் ஃபின்ச்சர்.

“இன்றைய நவீன ஜப்பானிய இலக்கியத்தின் எழுத்தாளர்கள் பெரும்பாலும் நகரப் பின்புலம் கொண்டவர்கள். இந்த நகர்புறச் சூழ்நிலை இங்குள்ள வாசகர்களுக்கு பழக்கப்பட்டதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருக்கிறது. ஏனெனில் அது கிழக்கில் உள்ளது” என்கிறார் காங்கின். “வாசகர்கள் ’மற்றமையை’ விரும்புகிறார்கள். ஆனால் ‘மிகை மற்றைமையை’ அல்ல. சௌகரியமான மற்றமையை விரும்புகின்றனர்” என்கிறார் மலோன். “மேற்கத்திய இலக்கியங்களை விட ஜப்பானிய இலக்கியங்கள் மிகக் குறைவான சரிநிலைகளைக் கொண்டவை.   மேற்கத்திய இலக்கியங்கள் நன்மை அல்லது தீமை என்ற கருதுகோள்களில் முனைப்பாக இருப்பவை. ஆனால் ஜப்பானியத்திலோ நன்மை மற்றும் தீமைக்கு இடையிலான வித்தியாசம் மிக மங்கலானது. மோசமான பாத்திரங்கள் சில நேரங்களில் நல்ல குணங்கள் கொண்டிருக்கும்; நல்ல பாத்திரங்கள் அடிக்கடி தவறிழைக்கும். நாவலின் முடிவுகள் மிக வெளிப்படையாக இருக்கும்” என்று குறிப்பிடுகிறார் டகேமோரி.

காலத்தின் போக்கிற்கு ஏற்ப மாறும் தன்மை கொண்ட பதிப்புத் தொழிலில், ஜப்பானிய புனைவுகள் தங்கள் கவர்ச்சியை இழக்கும் அபாயத்தில் உள்ளனவா? ஏற்கெனவே உச்சம் தொட்டுவிட்டனவா? “பதிப்புத் துறையில் எப்போதும் ஓர் அலை இருந்து கொண்டே இருக்கும். அது ஒரு நாள் கடந்து போகும். பூனைப் புத்தகங்கள் மணல் போல பறந்து போவது பற்றி எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் மற்ற ஜப்பானிய நூல்கள் எப்போதும் இருக்கும்” என்கிறார் காங்கின். தான் கர்ப்பமாக இருப்பது போலப் பாசாங்கு செய்து சமூகத்திற்கு எதிராகப் போராடும் ஓர் இளம் பெண்ணின் கதையை எழுதிய எமி யாகி -ன் Diary of a Void என்ற நாவல் இலக்கிய ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படலாம் என அனுமானிக்கிறார். “நாம் இப்போது ஒரு பெரிய அலையின் முகட்டில் இருக்கிறோம்” என்று நம்பும் கிரண்டாவின் ஜேசன் ஆர்தர், “கிரண்டா எப்போதும் ஜப்பானியப் புனைவுகளை வெளியிடும். எனினும் சில நூல்களுக்கு அதிக முன்னுரிமை தரும் கார்பரேட் பதிப்பகங்கள், அவை கவைக்குதவாதவை என்று தெரிந்துவிட்டால், தங்களின் ஆர்வத்தை இழந்துவிடுவார்கள்” என்று கூறுகிறார்.

ஜப்பானோ அல்லது வேறு நாடுகளோ, குற்றமோ அல்லது பூனைப் புத்தகங்களோ புனைவுகளை விற்பது எதுவென்றால், இலக்கிய வகைமை மற்றும் மொழிகளுக்கிடையிலான எங்குமுள தன்மையே ஆகும். சயாகா முராட்டாவின் நாவலை நுணுகி வாசித்த ஃபின்ச்சர் இவ்வாறு கூறுகிறார்: நாம் அனைவருமே கொஞ்சம் விநோதமானவர்கள் தான். மனிதச் சமூகமே விநோதமானது தான். நாம் எல்லோரும் தான் இந்தக் கதையில் இருக்கிறோம்.

***

நன்றி : The Guardian