- ஜொனாதன் கேப்
- தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு புக்கர் பரிசை வென்ற பெண்மணி என்ற பெருமையை சமந்தா ஹார்வே (Samantha Harvey) பெற்றிருக்கிறார், அவரது வெற்றிப் படைப்பான ”ஆர்பிட்டல்” குறித்து சில சுவராசியமான தகவல்களை இப்போது பார்ப்போம். .
எட்மண்ட் டி வால் (Edmund de Waal), புக்கர் தேர்வுக்குழு நடுவர்களின் தலைவர்:
புனைகதைகளை மறக்க முடியாத ஆண்டில் காயம்பட்ட உலகத்தைப் பற்றிய நூல். சில சமயங்களில் நீங்கள் ஒரு நூலை எதிர்கொள்ளும்போது அந்த அதிசய நிகழ்வு எப்படி நடந்தது என்று கண்டுபிடிக்க முடியாது. நடுவர்களாகிய நாங்கள் அனைத்து நூல்களையும் விரும்பினாலும் எங்களைத் தூண்டக்கூடிய ஒரு நூலைக் கண்டுபிடிப்பதில் உறுதியாக இருந்தோம்.
ஆர்பிட்டல் எங்களது புத்தகம். பதினாறு சூரிய உதயங்கள் மற்றும் பதினாறு சூரிய அஸ்தமனங்களின் அழகால் உந்தப்பட்ட ஒரு நாவலை ஹார்வே எழுதியுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் வசித்து வரும் ஆறு விண்வெளி வீரர்கள் பூமியைச் சுற்றி வருவதன் மூலம் பலவீனமான எல்லைகள், வேறுபட்ட நேர மண்டலங்கள் என அனைத்தையும் அவதானித்து வருகிறார்கள். இதில் அனைவரும் கதாபாத்திரங்கள் என்றாலும் குறிப்பிடும்படியாக யார் ஒருவரும் இல்லை. ஹார்வே தனது கூர்மையான உணர்வுகளுடன் கூடிய கவித்துவத்துடன் நம் உலகத்தை நமக்கு விசித்திரமானதாகவும் புதியதாகவும் ஆக்கிக் காட்டியிருக்கிறார்.
ஆண்டு முழுவதும் நாங்கள் புனைகதைகளைக் கொண்டாடினோம், அது பிரச்சினைகளை வெளிப்படுத்துவதை விட யோசனைகளை உள்ளடக்கியதாக இருந்தது. பதில்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் நாங்கள் எதை ஆராய விரும்பினோமோ அந்தக் கேள்வியையே மாற்றுவதாக இருந்தது. சுற்றுவட்டப்பாதை பற்றிய எங்களுடைய ஒருமித்த கருத்து அதிலிருக்கும் அழகையும் ஆர்வத்தையும் அங்கீகரிக்கிறது. நாம் பகிர்ந்து கொள்ளும் விலைமதிப்பற்ற, நிலையற்ற உலகின் மீதான ஹார்வேயின் அசாதாரண கவனத்தை இந்நூல் பிரதிபலிக்கிறது.
ஆர்பிட்டல் எதைப் பற்றியது?
அமெரிக்கா, ரஷ்யா, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆறு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுழன்று வருகின்றனர். அவர்கள் அங்கு முக்கியமான வேலையைச் செய்வதற்காக இருந்து வருகையில் மெதுவாக பூமி இல்லாமல் என்ன வாழ்க்கை? மனிதநேயம் இல்லாத பூமியா? என ஆச்சரியப்பட ஆரம்பிக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் மணிக்கு 17,000 மைல்களுக்கு மேல் வேகத்தில் பயணிக்கும்போது, தங்களுடைய அமைதியான நீல நிற கிரகத்தை ஒரே நாளில் 16 முறை சுற்றிப் பார்க்கிறார்கள், கண்டங்களைச் சுற்றுகிறார்கள், பருவகால சுழற்சி ஊடாகப் பயணிக்கிறார்கள், பனிப்பாறைகள், பாலைவனங்கள், மலைகளின் சிகரங்கள் மற்றும் பெருங்கடல்களின் அலைகள் ஆகிய அனைத்தையும் அவதானிக்கிறார்கள்.
குடும்பத்துடன் அவர்கள் மேற்கொள்ளும் சுருக்கமான தகவல்தொடர்புகள், அவர்களின் புகைப்படங்கள் மற்றும் சில பொருள்கள் மூலம் அவர்களின் வாழ்க்கையின் தருணங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது; அவர்கள் நீரில்லாத உணவை விரைவாக சமைப்பதையும், புவியீர்ப்பு இல்லாத இடத்தில் தூக்கத்தில் மிதப்பதையும், தசைகள் தேய்வதைத் தடுக்கும் வகையில் ஒழுங்குமுறைப்படி உடற்பயிற்சி செய்வதையும் நாம் தெரிந்து கொள்வதோடு தனிமையில் இருக்கும் அவர்களுக்கிடையே ஏற்படக்கூடிய பிணைப்பையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
அவர்கள் நாம் வாழும் கிரகத்திலிருந்து பிரிந்திருந்தாலும், அதன் நிலையான ஈர்ப்பிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியவில்லை. ஒரு தாயின் மரணம் பற்றிய செய்தி அவர்களைச் சென்றடையும் போது அதற்காக வீடு திரும்பும் எண்ணங்களும் அவர்களிடையே எழுகின்றன. சூறாவளியொன்று ஒரு தீவையும் அவர்கள் விரும்பும் மக்களையும் சூழ்வதை பார்க்கும் அவர்கள் அதன் மகத்துவத்தைப் பார்ப்பதோடு அதனால் ஏற்படக்கூடிய அழிவையும் பயத்துடன் பார்க்கிறார்கள்.
மனித வாழ்க்கையின் பலவீனம் அவர்களின் உரையாடல்களை, அவர்களின் அச்சங்களை, அவர்களது கனவுகளில் நிரப்பியிருக்கிறது. பூமியிலிருந்து இதுவரை, வெகு தொலைவில் இருக்கும் அவர்கள் ஒருபோதும் அதன் ஒரு பகுதியையோ அல்லது பாதுகாப்பையோ உணர்ந்ததில்லை.
பல ஆண்டுகளாக புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட விண்வெளி தொடர்பான சில நாவல்களில் ஆர்பிட்டல் ஒன்றாக இருந்தாலும் பரிசை வென்ற முதல் நூல் இதுதான். 1979 ஆம் ஆண்டு பரிசை வென்ற பெனிலோப் ஃபிட்ஸ்ஜெரால்ட் (Penelope Fitzgerald) – ன் Offshore போல் சிறியதாக இல்லாவிட்டாலும், புக்கர் பரிசு வென்ற நூல்களில் 136 பக்கங்களே கொண்ட இந்த நாவல் மற்றவற்றோடு ஒப்பிடுகையில் மிகக் குறுகியதாகும்.
சமந்தா ஹார்வே யார்?
1975 ஆம் ஆண்டில் ஒரு கட்டுமானவியலாளரின் மகளாக1975 ஆம் ஆண்டு கென்ட் என்னும் தென்கிழக்கு இங்கிலாந்து பிராந்தியத்தில் உள்ள நகரத்தில் பிறந்த இவர், ஒரு கட்டுமானவியலாளரின் மகள் ஆவார். சிறுவதிலேயே பெற்றோரின் விவாகரத்திற்குப் பிறகு, அம்மாவுடன் அயர்லாந்திற்கு குடிபெயர்ந்தார். பிறகு யார்க் பல்கலைக்கழகத்திலும் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்திலும் தத்துவம் பயின்றார். ஒரு எழுத்தாளர் மற்றும் சிற்பியான இவர் 2000 களில் யுரேனஸ் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டப் பகுதியான Bath என்னும் இடத்தில் உள்ள ஹெர்ஷல் வானியல் அருங்காட்சியகத்தில் பணிபுரிந்தார். இப்போது அவர் பாத் ஸ்பா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பருவ படைப்புக்கலை படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்து வருவதோடு ஐந்து நாவல்களும் எழுதியிருக்கிறார்.
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட வயதான கட்டிடக் கலைஞரைப் பற்றிய அவரது முதல் நாவலான The Wilderness 2009 ஆம் ஆண்டு புக்கர் பரிசுக்கான நீண்ட பட்டியலில் இடம் பெற்றது. இந்த நூலுக்கு Betty Trask Prize வழங்கப்பட்டது. வர்ஜீனியா வூல்ஃபின் எழுத்துடன் ஒப்பிடப்பட்ட ஹார்வி, தனது நாவல்களின் பல்வேறு விதங்களில் கதைசொல்லல் உத்திகளுக்கு பெயர் பெற்றவர் (2017-ல், அவர் புத்தக விற்பனையாளரிடம் இவ்வாறு கூறினார்: ‘ஒவ்வொரு நாவலிலும் முறைப்படி வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சிக்கிறேன்’). ஆர்பிட்டலுக்கு முன், அவரது முந்தைய நாவலான The Western Wind, 15 ஆம் நூற்றாண்டு சோமர்செட்டில் வாழ்ந்த ஒரு பாதிரியாரைப் பற்றியது. 2020 ஆம் ஆண்டில், ஹார்வே தனது முதல் புனைகதையல்லாத புத்தகமான The Shapeless Unease: A Year of Not Sleeping என்கிற நூலை வெளியிட்டார். இது நாள்பட்ட தூக்கமின்மையால் அவதிப்படுகிற அவருடைய தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றிய நூலாகும்.
James Tait Black Award, The Women’s Prize, The Guardian First Book Award and the Walter Scott Prize ஆகியவற்றின் இறுதிப்பட்டியல்களில் இவர் இடம் பெற்றிருந்தார். இவரது எழுத்து கிராண்டா, தி கார்டியன், தி நியூயார்க் டைம்ஸ், தி நியூயார்க்கர், தி டெலிகிராப் மற்றும் டைம் இதழில் வெளிவந்துள்ளது.
இவரது சமீபத்திய நூல் சர்வதேச விண்வெளி நிலையத்தின் உயர் தொழில்நுட்ப உலகின் பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஹார்வே மிகவும் எளிய தொழில்நுட்ப வாழ்க்கையை வாழ்கிறார். இவருக்கென சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை என்பதோடு தன்னிடம் தொலைத்தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லை என்றும் சொல்கிறார். .
புக்கர் பரிசு 2024 ஆம் ஆண்டின் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஒரே பிரிட்டிஷ் எழுத்தாளர் என்பதோடு 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு பரிசை வென்ற முதல் பெண்மணி ஹார்வே ஆவார், 2019 ஆம் ஆண்டு பரிசை பெர்னார்டின் எவரிஸ்டோவும், மார்கரெட் அட்வுட்டும் பகிர்ந்து கொண்டனர். .
நூல் எப்படித் தொடங்குகிறது?
நூலின் தொடக்கப் பத்தி இவ்வாறு விரிகிறது :
பூமியைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் தங்களது விண்கலத்தினுள் மிக நெருங்கியும், மிகத் தனித்தும் இருந்த அவர்களது எண்ணங்களும் சில நேரங்களில் மனத்தினுள் தேங்கியிருக்கும் பழைய தொன்மக் கதைகளும் கூட ஒன்று கூடுகின்றன. விதவித வடிவங்களை, நீலக் கோளங்களை, இருளில் அமிழ்ந்திருக்கும் பரிட்சயமான முகங்களை, சட்டென புலன்களை அடைக்கும் விண்வெளியின் பொலிவான ஆற்றல் மிகு கருமையை… என அவர்கள் அதே கனவுகளைக் கனவு காண்கிறார்கள். வெட்டவெளி என்பது ஒரு கைவிடப்பட்ட புராதன சிறுத்தை; அது தங்களது உறைவிடத்தில் பதுங்கி இருப்பதைப் போலக் கனவு கண்டனர்.
நூலைப் பற்றி புக்கர் தேர்வுக் குழுவினர் வேறு என்ன சொன்னார்கள்?
சமந்தா ஹார்வேயின் சிறிய ஆனால், அழகாக விரிவடையும் நாவலானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் வசித்து வரும் ஆறு விண்வெளி வீரர்கள் எதிர் கொள்ளும் துக்கம், தனிமை மற்றும் பணிச் சோர்வு ஆகியவற்றை அவர்களின் வேறுபட்ட கண்ணோட்டத்தில் பூமியின் சிறப்பை அவதானிக்க நம்மை அழைக்கிறது. அவர்கள் தங்களது சாத்தப்பட்ட அறைகளின் அரண் (claustrophobia) பற்றிய அச்சதிலிருந்து விண்வெளியின் எல்லையற்ற இடத்திற்கு, அவர்களின் மெய்ஞானத்திலிருந்து இயல்பான உலகிற்கு, மற்றும், ஒவ்வொரு மனித வாழ்க்கையின் தனிப்பட்ட மற்றும் கூட்டு விழுமியத்தின் ஆழமான ஈர்க்கும் ஒப்புக்கொள்ளலாக. நமக்கு ஒரு காதல் கடிதத்தை வழங்குகிறது, Orbital.
‘முழு கிரகத்தையும் ஒரே கதைச் சட்டத்திற்குள் நிலைநிறுத்துவதன் மூலம், சுற்றுப்பாதையானது எல்லைகள், நேர மண்டலங்கள் மற்றும் நமது தனிப்பட்ட கதைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மங்கலாக்குகிறது. புனைகதைகளில் இதற்கு முன்பு நாம் சந்திக்காத ஒரு வாய்ப்பு இது, மேலும் இது ஒரு வழிபாட்டுச் செயலாகப் படிக்கும் அளவுக்கு பிரமிப்பும் பெருமதிப்பும் ஊடுருவியுள்ளது.
எல்லையற்ற மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நமது கிரகத்தின் பார்வையை நமக்கு வழங்குவதில், ஹார்வே பிராந்திய மோதல்களின் பயனற்ற தன்மையையும், நமது பகிரப்பட்ட மனிதகுலத்திற்கான ஒத்துழைப்பையும் மரியாதையின் அவசியத்தையும் விளக்குகிறார். இது மிகவும் நிதானமானதாகவோ, சரியான நேரத்தில் அல்லது அவசரமாகவோ இருக்க முடியாத உள்ளடக்கத்தின் அடிநாதமாகும்.’
விமர்சகர்கள் என்ன சொன்னார்கள்?
ஜேம்ஸ் வுட், தி நியூயார்க்கர்:
தொடர்ந்து ஆச்சரியப்பட வைக்கும் சமகால பிரிட்டிஷ் நாவலாசிரியர்களில் ஒருவரான சமந்தா ஹார்வே, தனது மெலிதான, மகத்தான நாவலான ஆர்பிட்டல் மூலம் நமது சகாப்தத்தின் பிரபஞ்சக் கலைஞராக மாறுகிறார், இது சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு விண்வெளி வீரர்களின் அன்றாட வாழ்க்கையை கற்பனையாக உருவாக்குகிறது. ஆர்பிட்டல் என்பது மிகவும் விசித்திரமான, மாயாஜாலம் நிறைந்த திட்டமாகும், ஏனென்றால் பெரும்பாலான மக்கள் அதை ஒரு நாவல் என்று அழைப்பதில்லை, ஆனால் ஒரு நாவல் மட்டுமே தைரியமாக செய்யக்கூடிய பணியை அது செய்கிறது.
வெண்டி ஸ்மித், பாஸ்டன் குளோப்:
விண்கலத்தில் வாழ்க்கையை சித்தரிக்கும் சமந்தா ஹார்வியின் தியான நாவல் கிட்டத்தட்ட ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள வாக்கியங்களை மிகவும் அழகாகக் கொண்டுள்ளது, நீங்கள் புத்தகத்தை அச்சத்துடன் கீழே வைக்க விரும்புகிறீர்கள். ஆறு உறங்கும் விண்வெளி வீரர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் முதல் இரண்டு பத்திகளில், நாம் காண்கிறோம்: “ஒன்றுமில்லாத வெற்றிடமானது ஒரு சிறுத்தை, காடு, மற்றும் பழமையான வாழ்க்கை;” அது அவர்களின் தங்குமிடங்களில் பதுங்கியிருப்பதாக அவர்கள் கனவு காண்கிறார்கள்”; மேலும், “பூமிக்கு வெளியே ஒரு நிலவு ஒளியில் சுழல்கிறது, அவை அதன் விளிம்பு இல்லாத விளிம்பை நோக்கிச் செல்லும்போது பின்னோக்கி உரிக்கப்படுகின்றன.” ஆர்பிட்டலில் பெரிய தனிப்பட்ட மோதல்கள் எதுவும் இல்லை மற்றும் இரண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமே உள்ளன, இவை இரண்டும் பூமியில் நடக்கின்றன, ஆனால் ஹார்வேயின் நேர்த்தியான உரைநடை மற்றும் தத்துவ சிந்தனைகளால் வெளிப்படுத்தப்படும் ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சியின் உணர்வு தீவிர புனைகதை ஆர்வலர்களுக்கு இது ஒரு ஆழமான மகிழ்ச்சியான புத்தகமாக அமைகிறது.
அலெக்ஸாண்ட்ரா ஹாரிஸ், தி கார்டியன்:
இந்தச் சிறியதும் நீட்டிக்கப்பட்டதுமான தனது ஐந்தாவது நாவலின் மூலம், ஹார்வே சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு கற்பனைக் குழுவினருடன் ஒரு பரவசப் பயணத்தை மேற்கொள்கிறார், மேலும் ஒரு காதலனின் பார்வையுடன் பூமியைத் திரும்பிப் பார்க்கிறார். ஆர்பிட்டல் ஒரே நாளில் பறக்கிறது, ஆனால் அங்கே ஒரு நாள் என்பது வித்தியாசமான விஷயமாக இருந்தாலும், “ஒவ்வொரு தொண்ணூறு நிமிடங்களுக்கும் காலை நேரத்துக்கான ஓசை எழுகிறது” அது போல சூரியன் “ஓர் இயந்திர பொம்மை போல மேல்-கீழ்-மேலே-கீழாக” தோன்றிக் கொண்டிருக்கும்.. ஒவ்வொரு அத்தியாயத்தையும் பூமியின் சுற்றுப்பாதையுடன் நன்கு சீராக கட்டமைத்திருக்கிறது. அனைத்தும் சேர்த்து 16 சுற்றுப்பாதைகள். நகரும் திறன்கொண்ட இயந்திர விவரிப்பு கடந்த கால மற்றும் எதிர்காலத்திற்கான ஆய்வுகளை அனுப்புகிறது, ஆனால் அனைத்தும் நீள்வட்டப் பயணத்தின் சுழற்சி இயக்கத்தில் நடைபெறுகிறது.
சூசி மெஷூர், ஐ நியூஸ்
ஹார்வே கவிதை அழகின் உரைநடையோடு ( “ஒரு மெல்லிய உருகிய ஒளி மீறல் – அதன் வலது தோள்பட்டைக்கு மேல் காலை நேரத்தை கிசுகிசுக்கிறது “) நாம் வசிக்கும் இடத்திற்கு பொறுப்பேற்க ஒரு தெளிவான அழைப்பை கலவையாக்குகிறார். “நம் வாழ்க்கை சார்ந்திருக்கும் இந்த ஒரு விஷயத்தை கொடுங்கோன்மையாக்குவதையும், அழிப்பதையும், கொள்ளையடிப்பதையும், வீணடிப்பதையும் நிறுத்த முடியாதா?”
ஆர்பிட்டல் பற்றி சமந்தா ஹார்வே என்ன சொன்னார்?
கடந்த கால் நூற்றாண்டு காலமாக அறிவியல் புனைகதையாக இல்லாமல், யதார்த்தமாக, பூமியின் கீழ் சுற்றுப்பாதையை ஆக்கிரமித்திருக்கும் மனிதர்களைப் பற்றி நான் எழுத விரும்பினேன்.ஓர் இயற்கை ஆர்வல எழுத்தாளரின் கவனத்துடன் அந்த வாய்ப்புக் களத்தின் அழகை என்னால் வெளிப்படுத்த முடியுமா? என் மலைப்பைப் பற்றி எழுத முடியுமா? நான் இந்த விண்வெளி மேய்ச்சல் பரப்பைக் கட்டி இழுக்க முடியுமா? இவையெல்லாம் நானே முன்வைத்துக் கொண்ட சவால்கள்.’
ஒரு நாளைக்கு 16 முறை பூமியைச் சுற்றி எப்படி காலம் என்கிற உணர்வை வெடிக்கச் செய்கிறது என்பதைப் பற்றி எழுத, என்னை தூக்கமின்மை தூண்டியது. நம் வாழ்க்கையின் முக்கியமான ஒரு விஷயமாக இருக்கும் நேரத்தைப் பற்றி எழுத எப்போதும் நான் ஆர்வமாக இருந்தேன் என்பதோடு எளிதாக மாறக்கூடிய நாவல் வடிவத்தால் என்ன செய்ய முடியும் எனவும் எண்ணினேன்.. இவ்வளவு நீண்ட காலமாக இருந்து வரும் மிகவும் கடுமையான தூக்கமின்மை நான் சிந்திக்கும் விதத்தையும், வேலை செய்யும் விதத்தையும் மாற்றிவிட்டது. எனது மற்ற நாவல்களைக் காட்டிலும் ஆர்பிடல் குறுகியதாகவும், துண்டு துண்டாகவும், அமைதியற்றதாகவும் இருக்கிறது. நான் இப்போது இப்படித்தான் எழுதுகிறேன் – மிக விரைவாக, தீவிரமாக, சுவாரசியமாக!
சமந்தா ஹார்வே ஆர்பிட்டலை எவ்வாறு ஆய்வு செய்தார்?
நூலின் பெரும்பகுதி பெருந்தொற்று ஊரடங்கின் போது எழுதப்பட்டது, அந்த காலகட்டத்தின் போது ஹார்வே சர்வதேச விண்வெளி நிலையம் சம்பந்தமான ஆன்லைன் காட்சிகளைப் பல மணி நேரம் பார்த்தார். பிபிசி ரேடியோ 4 இன் Front Row நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், ஹார்வே: ‘நான் எழுதிய போது எனது மேசைக் கணினியில் பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் பூமியின் காட்சிகள் எப்போதும் இருக்கும். இது எனது முக்கிய உசாத்துணையாக இருந்தது. ஒவ்வொரு நாளும் அதைச் செய்ய முடிந்தபோது ஓர் அழகான விடுதலையை உணர்ந்தேன், அந்த சமயத்தில் ஒரு தகர டப்பாவில் சிக்கிய ஆறு பேரைப் பற்றி நான் எழுதினேன். அதைப் பற்றியும், ஊரடங்கு பற்றிய நமது அனுபவம் அதாவது, ஒருவரிடமிருந்து இன்னொருவர் தப்பிக்க முடியாத நிலை மற்றும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனது’ ஆகியவற்றை உணர்ந்தும் எழுதினேன்.
புத்தகம் நாவலுக்கான எழுத்துச் செயல்பாடு ஏறக்குறைய நடக்கவில்லையா?
ஆம். ஊரடங்குக்கு முன் புத்தகத்தின் சில ஆயிரம் வார்த்தைகளை எழுதியதாகவும் அதன் பின் தன்னிடமிருந்த தைரியத்தை இழந்து ஒதுக்கி வைத்து விட்டதாகவும் Front Row-க்கான நேர்காணலில் ஹார்வே கூறியிருக்கிறார், மேலும் அவர், ‘நான் ஒருபோதும் விண்வெளியில் இருந்ததில்லை, என்னால் விண்வெளிக்குச் செல்ல முடியாது, விண்வெளிக்குச் சென்ற மனிதர்கள் அதைப் பற்றி மிகவும் தெளிவாக எழுதுகிறார்கள், எனவே அதைப் பற்றி எழுத நான் யார்? என எனக்குள் நம்பிக்கை நெருக்கடி ஏற்பட்டதோடு எனக்கு அறிமுகமில்லாத பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக உணர்ந்ததால் அதை நான் கைவிட்டேன்.’ இறுதியில், அவர் தன்னுடைய ஆரம்ப வரைவுக்கு திரும்பி வந்த போது, ‘அதற்கு ஒரு ஆற்றலும் ஒருவிதத் துடிப்பும் இருப்பதாக உணர்ந்து’ அதோடு நேரடியாக என்னை இணைத்துக் கொண்டேன். அதன்பின், “நான் அதைச் செய்யப் போகிறேன்” என நினைத்துக் கொண்டேன். அப்படிச் செய்யும் போது அதை அதன் அனைத்துவிதமான உணர்வுகளோடும் – விழிப்போடும் செய்ய வேண்டியிருந்தது.’
***
நன்றி : புக்கர் இணைய தளம்
