- மியேகோ கவாகாமி
- ஆங்கிலத்தில்: டேவிட் பாய்டு
- தமிழில்: க. ரகுநாதன்
நான் சிறுமியாக இருந்த போது பார்வையற்ற ஒரு தூரத்து உறவினரைச் சந்தித்தேன். இப்போது அவர் இறந்துவிட்டார் எனினும் நான் பெரியவளாவதற்கு முன் அவரை ஒரு சில முறை மட்டுமே பார்த்துள்ளேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இறுதிச் சடங்கு நடைபெற்ற வீட்டில் நாங்கள் இருவரும் ஒரு அரை நாளை ஒன்றாகக் கழித்தோம். எளிமையும் கனவானைப் போன்ற பண்புகளும் கொண்ட அவர் சலிப்புற்ற குழந்தைகளுடன் விளையாடுவதில் மகிழ்ச்சி அடைபவராக இருந்தார். “என்னால் பார்க்க முடியாது, ஆனால் எதை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள், அது என்னவென்று என்னால் கூற முடியும்.” என்றார். போட்டி வைக்கப்பட்டது போல, குழந்தைகள் அறையெங்கும் ஓடிச் சென்று கைகளில் அகப்பட்டதை எல்லாம் எடுத்து வந்தனர்: தேநீர் குவளைகள், பேனாக்கள், காகிதங்கள், அவர்கள் கொண்டு வந்திருந்த பொம்மைகள், அவர்களது தாய்மார்களின் கைப் பைகளில் கைக்குச் சிக்கிய சின்னச் சின்ன பொருட்கள் என. ஒரு கணப்பொழுது கூடத் தயங்காமல் அவர் ஊகம் செய்து சொன்னதைக் கேட்டு குழந்தைகள் எல்லோரும் உற்சாகக் கூச்சலிடுவார்கள். அது மகிழ்ச்சியாக இருந்தாலும், அதற்குப் பின்னர் என்னால் அந்த மனிதரைப் பற்றிய சிந்தனையை என் தலைக்குள் இருந்து உதறித் தள்ள முடியவில்லை. எங்களது விளையாட்டின் போது, அவர் கண்டது என்ன?
அவர் பிறவிக் குருடர் கிடையாது என்று என் அம்மா கூறினார். அவரால் பார்க்க முடியாது எனில் ஒளியற்ற ஓருலகில் வாழ்கிறார் என்பதாகத் தானே அர்த்தம் என்றதற்கு ஆம் எனத் தலையசைத்தாள். இப்போது அவரால் பார்க்க முடியாது எனினும் அவரால் பார்க்க முடிந்த காலம் ஒன்றும் இருந்தது. வேறு சொற்களில் சொல்வது என்றால், அவருக்கு ஒளி என்றால் என்னவென்று தெரியும்- அவர் அதனை நினைவு வைத்துள்ளார். அவரை இன்னொரு முறை நான் சந்திக்க முடிந்திருந்தால், அவரிடம் நான் கேட்க விரும்பிய சில விஷயங்கள் என்னிடம் இருந்தன. நாங்கள் பார்க்கும் ஒளியிலிருந்து அவர் நினைவில் வைத்திருக்கும் ஒளி எந்த அளவிற்கு வேறுபட்டது? அல்லது எவ்வளவு ஒத்த தன்மையுடையது? அவரிடம் கேட்பதற்கு எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை எனினும், அந்தச் சமயத்தில் இருந்து, இரவுப் படுக்கையில் உறக்கத்தில் வீழும் முன், இருளில் என் கண்களை மூடிக் கொண்டு அந்த நாளின் ஒளியை நினைத்துப் பார்க்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. நினைவில் நிற்கும் இந்த ஒளியானது என்னைச் சுற்றியுள்ள இருளை எந்த அளவிற்கு பிரகாசமாக்கும் என்று எனக்குத் தெரிந்தாக வேண்டியிருந்தது.
***
ஆண்டுகள் பல கடந்து நான் நாவலாசிரியரான பின், அது போன்ற கேள்விகளை நாவல்களில் ஆராயத் தொடங்கினேன். எனது Breasts and Eggs நாவலின் பெரும்பான்மையான பகுதிகள் புனைவு எனினும், எனது சொந்த வாழ்வு மற்றும் அனுபவங்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாக எடுத்தும் எழுதினேன். உதராணமாக, கதைசொல்லியும் நானும் ஒஸாகாவின் ஏழ்மையான வீடுகளில் வளர்ந்தோம். நாங்களிருவரும் நாவலாசிரியர்கள் கூட.
தன்னை வளர்த்த பாட்டி பற்றி கதைசொல்லி கொண்டுள்ள உணர்வுகள் எல்லாம் எனது சொந்த உணர்வுகளும் கூடத் தான்.
2019ம் ஆண்டு கோடைக் காலத்தின் துவக்கத்தில் என் பாட்டி காலமானார். எல்லாவற்றிலிருந்தும் என்னைக் காத்த அவள் எனக்கு என் தாய் போன்றவள். ஒரு குழந்தையாக, அவள் இறந்து போவது பற்றிய சிந்தனையால் நான் அவ்வப்போது முடங்கிப் போயிருந்தேன். தவிர்க்க முடியாத அந்தக் கணத்தின் பிடியில் அகப்படுவதைப் பற்றி நான் கற்பனை செய்யும் போதெல்லாம் கண்ணீர் பெருகும். என் பாட்டி ஓர் அன்பான ஆன்மா; எனது பால்யக் காலத்தில் நான் வாழ முடிந்ததற்கு என் பாட்டி மட்டுமே காரணம்.
எனக்கு நினைவு தெரிந்தவரை, என் பாட்டி இறப்பது குறித்த அச்சத்திலேயே இருந்துள்ளேன். இப்போது அவள் சென்று மூன்றாண்டுகள் ஆன பின்பும், அந்த நிலையற்ற உணர்ச்சிகள் என்னை இன்னும் பேய் போல ஆட்டுவிக்கின்றன- நான் மீண்டும் ஒரு நிலையில் இருக்கமாட்டேன் என்பதைப் போல. புகைப்படங்களைப் பார்க்கையில் அழுவதைத் தவிர என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவள் முதுமையால் உயிரிழந்தாள். என் பாட்டியின் வாழ்க்கை கடினமானதாக இருந்தபோதும் 97 வயது வரை எந்தப் பெரிய நோயுமின்றி வாழ்ந்தாள். அவள் சென்றிருக்கக் கூடிய அமைதியான வழி இதைவிட வேறில்லை. திடீரென்றும் எதிர்பாராதவிதமாகவும் தங்களது அன்புக்குரியவர்களை இழந்ததை எல்லாம் சகித்துக் கொண்டு வாழ்பவர்களால் நிறைந்துள்ளது இவ்வுலகம். எனது பாட்டியுடன் அவள் இறுதிக் காலம் வரை நான் கழித்த பொழுதுகளை எல்லாம் நினைக்கும் போது, நான் வேதனைப்படத் தேவையே இல்லை என்பதைப் போல உணர்கிறேன். உண்மையில், நான் ஏன் இவ்வளவு துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. எனக்குள்ளே இருக்கும் வளர்ந்தவள் அல்ல- தனது பாட்டியின் இறப்பு குறித்து தன் வாழ்வின் ஒவ்வொரு கணப் பொழுதும் அச்சப்பட்டுக் கொண்டிருந்த ஒரு குழந்தை தான் காரணம் என்று சொல்வது விநோதமாக இருக்கும். எனக்குள் எங்கோ இன்னுமிருக்கும் அந்தக் குழந்தைதான், அந்தப் பகுதிதான் எனது உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, சோகத்தில் ஆழ்த்துகிறது. அது அப்படித்தான் உணர வைக்கிறது.
எனது சிறு வயதிலிருந்தே, உடை மாற்றும் போது என்னைப் பார்க்கையில் எனது முகமும் உடலும் ஏறத்தாழ என் பாட்டியைப் போலவே இருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அவளை உயிருடன் வைத்திருந்த மருந்தூசியை எடுத்துவிடலாம் என நான் முடிவு செய்தபோது, மருத்துவமனையில் நாங்கள் இருவருர் மட்டுமே இருந்த அறையில் அந்த இரவுப் பொழுதை ஒன்றாகக் கழித்தோம். சிறிது சிறிதாக அவளது உடலில் இருந்த ஆற்றல் வெளியேறுவதைக் கவனித்துக் கொண்டே, மருந்தூசி எடுக்கப்பட்டதால் நிறம் மாறிக் கொண்டிருந்த அவளைத் தொட்டுப் பார்த்து, நெற்றி, கை, கால்கள், தொடைகளை மணிக்கணக்காகத் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தேன். அவளைத் தொடுகையில், எல்லாவற்றிற்கும், நாங்கள் ஒன்றாகக் கழித்த காலங்களுக்கும் நன்றி சொன்னேன். அவளது உடலில் இன்னும் ரத்தம் ஓடிக் கொண்டிருந்ததால் உடல் வெம்மையாக இருந்தது. ஆனால் இன்னும் சில நாட்களில் என் முன்னால் உள்ள பெண்மணியின் உடல் எரித்துச் சாம்பலாக்கப்படும் போது- அவள் எப்படிச் சென்றிருப்பாள்- அந்த உணர்வை எப்படிச் சமாளிப்பது என்று கூட எனக்குத் தெரியவில்லை. கடைசியாக நான் என் பாட்டியுடன் பேசியது இரண்டு வாரங்களுக்கு முன் அவள் சுயநினைவுடன் இருந்த போது தான். நாங்கள் சிரித்துக் கொண்டே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். மருத்துவமனை அறையின் கதவை நான் மூடும் பொழுது கையசைத்தவாறே விரைவில் திரும்பி வருவேன் என்று கூறினேன். அதுவே நாங்கள் ஒன்றாக இருந்த தருணம். முடிவு எப்போதும் இது தான் முடிவு என்பதை நமக்குக் காட்டுவதில்லை. சில நேரங்களில் எல்லாம் முடிந்த பிறகே என்ன நடந்தது என்பதையே உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். உண்மையில் அது எனக்குத் தெரியும் என்றாலும், எங்களுக்காக இன்னுமொரு “கடைசி தருணத்தை” என்னால் உருவாகியிருக்க முடியாதா என்று வியக்கிறேன். அவள் எப்படி இருக்கிறாள் என்று அறிந்து கொள்வதற்காக நான் அடுத்த நாள் வந்திருந்தால்… திரும்பிப் பார்க்கும் போது மட்டுமே உணரும் இந்தக் “கடைசி தருணங்களை” இன்னும் எத்தனை முறைதான் நான் அனுபவிக்கப் போகிறேன்?
என் பாட்டி நினைவிழந்து கிடக்கையில் அவளது உடலை மணிக்கணக்காக தடவியபடி, அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவளது தோலின் தொடுவுணர்வை நான் ஒருபோதும் மறக்கக் கூடாது என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அவளைத் தொடும் உணர்வையும் வருடும் உணர்வையும் ஒருபோதும் மறக்கக் கூடாது எனச் சொல்லிக் கொண்டேன். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு அவளில் நான் பார்க்கும் அனைத்தையும் நினைவில் கொள்ள வேண்டும் என மிகத் தீவிரமாக விரும்பினேன். ஆனால் அதே நேரம், அந்தக் கணத்தில் என் கைகள் எதை உணர்ந்தனவோ அந்தப் புலனுணர்வை என்னால் எப்போதும் நினைவில் வைத்திருக்க முடியுமா எனவும் வியப்படைந்தேன். ஒரு புலனுணர்வை நினைவு கொள்வது என்பதன் பொருள் என்ன? நான் அவளைத் தொடத் தொட படிப்படியாக இழந்தேன். குளியலறையில் என்னுடன் என் பாட்டியின் உடலும் இருந்தது . அவளுக்கிருந்த இரத்த நிற கொப்புளங்கள் வெடித்துச் சிதறி அதன் மூலம் ரத்தம் வெளியேறி அவள் இறந்துவிடுவாளோ என்று நான் சிறுமியாக இருந்தபோது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பேன். அந்தக் கொப்புளங்களை மருந்துக்கட்டு போடும்படி நான் கெஞ்சிய போதெல்லாம் என்னைப் பார்த்துச் சிரித்தபடி ஒன்றும் கவலைப்படாதே என்பாள். உண்மையில், உங்களை விட்டுச் சென்றவர்களைப் பற்றி நினைவு கூர்தல் என்பது என்ன- மறைந்து போகும் புலனுணர்வை நினைவு கூர்வதா?
***
நான் மீண்டும் அதைப் பற்றிச் சிந்திக்கிறேன் என்பதை உணர்கிறேன். இரவும் பகலும் என என் பாட்டியின் கைகள், கால்களை வருடியவாறே நேரங்கழித்ததை நினைக்கிறேன். அவளது தோல் கதகதப்பாக இருந்தது. அவள் உயிரோடிருந்தாள். அவளை நான் தொட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அவள் சென்றுவிட்டாள். அவளது தோலை நான் மீண்டும் தொட இயலாது. நான் அதைப் பற்றிச் சிந்திக்கிறேன். நான் குழந்தையாக இருந்தபோது, இருளுக்குள் ஒளியை எவ்வாறு நான் ஞாபகப்படுத்திக் கொள்வேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். பார்வையை இழந்த என் தூரத்து உறவினர் தன் நினைவில் வைத்திருந்த அந்த ஒளியைப் பற்றிச் சிந்திக்கிறேன். ஒளியைப் பார்ப்பதும் நினைவுபடுத்துவதும் வேறு வேறா? ஒருபோதும் என்னால் இனித் தொட முடியாத என் பாட்டியினுடைய தோலின் தொடுவுணர்வு எப்படி? அது என் கைகளால் அவளைத் தொடுவதிலிருந்து வேறானதா?
ஒருவரைத் தொட முடியும் என்பது அவரை மீண்டும் தொட முடியாது என்பதும் தான். சிலர் உயிருடன் இருக்கிறார்கள், சிலர் இறந்து காணாமல் போகிறார்கள். நிஜ வாழ்வில் ஒருவரைப் பார்ப்பது, கனவில் அல்லது நினைவில் ஒருவரைப் பார்ப்பது, உங்கள் கண்களால் பார்க்கும் ஒளி, உங்கள் நினைவில் உள்ள ஒளி, அவற்றுக்கு இடையேயான உண்மையான வேறுபாடு தான் என்ன? நீங்கள் இழந்த ஒருவரைத் தொடுவது என்பது இயலாததா? இழந்த ஒளி என்பது உண்மையில் என்றென்றும் இழந்த ஒளியா? ஒருவேளை நம்மால் செல்ல முடியாத வேறொரு உலகில் வேறொரு இடத்தில் அவர்கள் நிஜமாகவே இருந்தால் என்னவாகும்? எனக்குத் தெரியாது. ஆனால் அவ்வாறு ஓருலகம் இல்லை என்றாலும் அல்லது நாம் அவ்விடத்தை அடையத் திறனற்றவர்கள் என்றாலும்- இதுவும் அதுவும் ஒன்றுதான் என்று உளப்பூர்வமாக நாம் நம்பும் அந்த ஒரு கணத்தைப் படைக்க வேண்டும் என்பதற்காகவே நான் புனைவுகளை எழுதுகிறேன்.
***
இந்தக் கட்டுரை Toronto International Festival of Authors 2020 Skin Hunger Commissions-க்காக எழுதப்பட்டது. Astra.com இணைய இதழில் வெளியானது.
மியேகோ கவாகாமி (Mieko Kawakami): 1976ல் ஜப்பானில் பிறந்தவர். Breasts and Eggs, Heaven, All the lovers in the night ஆகிய சர்வதேச அளவில் சிறந்த விற்பனை கொண்ட நாவல்களை எழுதியவர். அவரது Heaven நாவல் 2022ம் ஆண்டு இன்டர்நேஷனல் புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றது. ஜப்பானின் டோக்கியோவில் வாழும் அவர் Akutagawa Prize, the Tanizaki Prize, and the Murasaki Shikibu Prize உட்பட பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.

சிறந்த கதைசொல்லியின் வகை மூலம் இவர் சிறந்த நாவலாசிரியராய் காணமுடிகிறது,நல்ல புதுமைகள் இவருள் பல நாவல்களாக இருக்கின்றன,நன்றி தமிழிக்கு
நன்றி.