• இரா. முத்து நாகு

 

மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது என்றால் தெலுங்கானா எந்த மொழி அடிப்படையில் பிரிந்து சென்றது?

இனவாரியாக நாடு பிரிக்கப்பட்டது என்றால் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து சென்ற வாங்க தேசப்  பிரிவினை, மொழிக்கானது என்பதை அறிவோம். இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் கண்டபோது முதலில் பிரிந்து சென்றது ஒடியா. இவர்கள் மொழியின் அடிப்படையில் தனிநாடு கண்ட போது ஒடியா மொழியை பேசும் அங்குள்ள பழங்குடி மக்கள் இன்னும் தனி நாடு கேட்கிறார்களே ஏன்?

இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களில் உள்ள பழங்குடி மக்கள் பெரும்பாலும் ஒரு மொழி அல்லது அதனை ஒத்த தன்மையுடைய மொழிக்குச் சொந்தக்காரர்களே. ஆனால் அவர்கள் நில அடிப்படையில் தனிநாடு கேட்கிறார்கள். இவர்களை ஒடுக்க இந்திய அரசு தனி இராணுவச் சட்டங்களை கொண்டு கையாண்டது வருகிறது. இதற்கு எதிர்ப்பு பலமாக இருந்தும் வருகிறது. இராணுவ அடக்கு முறை கொடுமையை எதிர்த்து சாத்வீக
வழியில் உண்ணா நோன்பு இருந்த பெண்ணுக்கு அம்மக்கள் கொடுத்த மதிப்பு சொற்ப வாக்குகளே.

மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது தமிழகத்திலிருந்து ஆந்திரம் பிரிந்து செல்ல மொழி காரணமாக இருந்ததென்றால், தமிழகத்திலுள்ள தெலுங்கு பேசும் மக்கள் ஏன் ஆந்திரம் செல்லவில்லை? வந்து குடியேறிய தெலுங்கு கன்னடம் பேசும் மக்கள் தங்களது பூர்வீகத்தை இழந்தாலும் தமிழக நிலங்களை கைப்பற்றியதால் செல்லவில்லை என்ற காரணத்தை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியுமா? அப்படியென்றால் மொழிவாரி மாநிலம் பிரிக்கும் போது ஏன் சிறு சலசலப்புக்கூடக் கிளம்பவில்லை. அப்போதும் தூய தமிழ் சிந்தனையாளர்கள், தனித்தமிழ்நாடு கோரிக்கையை கையாண்ட, அறிஞர்கள் அவர்களால் உருவான போராளிகள் வாழ்ந்தனர். அவர்கள் தற்போதுள்ள வந்தேறிச் சொல்லாடல்களைக் கையாளவில்லை என்பதை கவனத்தில் கொள்ள நாம் மறுப்பதேன்?

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கும் போது தமிழர்கள் அதிகம் வாழ்ந்த சித்தூர், கனடா, கோலார், காசர்கோடு, கொல்லம், பாலக்காடு, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளில் தமிழ் பள்ளிகள் துவக்க வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளன. ஆனால் தெலுங்கு கன்னட மக்களுக்கு அவர்கள் மொழியில் கற்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்களும் அப்போது வைக்கவில்லை. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தலைவர்களும் பேசவில்லை என்பதைக் கவனப்படுத்தவும்.

திராவிட நாடு என்பதை அண்டை மாநிலமான கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ஒரிசா போன்ற மாநில மக்கள் ஏற்கவில்லை. அப்படியானால் தனித்தமிழ்நாடு கேட்டு போராட அணி திரட்டலை ஒன்றிய அரசு ஏற்காது என்பது பொன்பரப்பியிலிருந்தும், தெலுங்கானாவிலிருந்தும் கற்ற பாடம்.  இதை எதிர்கொள்ள நாம் வைத்திருக்கும் திட்டம் என்ன? வட இந்தியாவில் அசாம் மாநிலத்தில் பிரபுல்லகுமார் மகந்தாவை வளர்த்தெடுத்து தனி மாநிலம் கண்டது, அங்குள்ள மக்கள் தீவிர பொதுவுடமைச் சிந்தனையாளர்கள் பக்கம் இருப்பதை பிரித்தெடுப்பதற்காகவே என்பதை நாம் மறக்க இயலுமா?

தெலுங்கு, கன்ன டம் பேசும் மக்களின் கடவுளை, தமிழர்கள் குலசாமியாகக் கும்பிடுவதும், தமிழர்களின் சாமிகளை இம்மக்கள் குலதெய்வமாக கும்பிடுவதில் உள்ள சமரசம் அல்லது கலப்பு அல்லது ஒருங்கிணைப்பு குறித்த பார்வையை நாம் கூர்ந்து பார்க்க மறுப்பது ஏன்?

தமிழ்நாடு தனிநாடு கேட்கும் நாம், இராமாயணம் மகாபாரதம் போன்ற காப்பியங்களால் இந்திய தேசம் முழுவதும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதை கணக்கில் கொள்ள ஏன் மறுக்கிறோம்?

தமிழ்நாடு, விஜய நகர ஆட்சியாளர்கள் தமிழகம் முழுவதையும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு முன்பு வரை தமிழர்களாகிய நம்மை பாண்டியர்கள், சோழர்கள் என தனித்தனியாகவே ஆண்டார்கள். இந்த மன்னர்களுக்குள் கூட மண உறவு நடந்ததில்லை (சேர மன்னருடன் சோழர்களும், பாண்டியர்களும் இரண்டு மண உறவு வைத்தனர்). இவர்களுக்குள் குல அரசர்களாக பெரும்பிடுகு முத்தரையர், பாணர்கள், கெடிலத்தை ஆண்ட கோப்பெருஞ்சிங்கன், வன்னிய குல அரசர்கள், குறும்பர்கள் என தனித்தனியாக ஆண்டார்கள் என்பதே நமது வரலாறு.

பொதுவான சாதிச் சம்பிரதாயங்களும், பொதுச் சமூக வழக்கில் ஒரே சாதியமான பார்வைகளும், பெயர் அடையாளங்களும் இருந்தால் கூ ட, தங்களது பிரதான சாதிகளிலிருந்து உட்பிரிவுகளாகப் பிரிந்திருக்கும் உட் சாதிப்பிரிவுகளுக்குள் ஒருவருக்கொருவர் மண உறவு வைத்துக் கொள்வதில்லை. இது, தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் வாழும் சாதிக்காரர்களுக்கும் பூரணமாகப் பொருந்துமே.

அதே போல், தமிழகமும் முழுவதும் பரவலாக்கமாக உள்ள ஒரே சாதி சமூகத்தினர் கூட, தங்கள் சமூகம் சார்ந்து, அந்தந்தப் பகுதியிலேயே மணஉறவு வைக்கிறார்களே தவிர, மண்டலங்களைத் தாண்டுவதில்லை. இப்படித்தான் மற்ற இனகுழுக்களின் நிலை உள்ளது.

மிகத்துல்லியமாக 306 ஆண்டுகளும் குந்தாங்கூறாக 420 ஆண்டுகளும் தமிழகத்தை இணைத்து ஆண்ட விஜயநகர, நாயக்க அரசர்கள் தெலுங்கு மொழியை அலுவல் மொழியாக வைத்திருந்தார்களே தவிர ஆட்சி மொழியாக்கவில்லை. அன்றைய காலத்தில் கல்வி கொள்கை இல்லை என்ற வாதத்தை ஏற்க சரியான வாதம் இல்லை என்பதை அறிக. ஆனால் இவர்கள் காலத்தில் பள்ளுப்பாட்டு, குறவஞ்சி, கலப்பம், சிந்து, காவடிச் சிந்து, கும்மி, வில்லுப்பாட்டு என ஏராளமான சிற்றிலக்கியங்கள் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்தன.

ஆனால் ஆங்கில ஆட்சியில் ஆங்கிலம் அலுவல் மொழியாக மட்டுமல்ல ஆட்சி மொழியாக்கப்பட்டதன் விளைவாக நமது இலக்கிய அறிவை இழந்தோம். கவி மரபை, கலைகள் அனைத்தையும் மொத்தமாக இழந்து கதை எழுதுகிறோம்.

காக்கதேயர்களும், காடர்களும், சாளுக்கியர்களும், மேலைச் சாளுக்கியர்களும், கங்கர்களும், போசாள அரசுகளும் நம்மை ஆண்டதற்கான வரலாற்று ஆவணங்கள் கோயில்களாக, கற்றுளியாக நம் கண்முன்னே உள்ளன.

அதே போல் பாண்டியர்களும், சோழர்களும் கடல் கடந்தும் தமிழகம் அல்லாத பிற பகுதியை ஆண்டதற்கான பிரமாண்டமான சுவடுகள் இருப்பதை வரலாறு தெளிவுபடுத்துகிறது.

மாநிலங்களின் எல்லை, நாடுகளின் எல்லை என்பது நிர்வாகத்திற்கானதும் அம்மக்களின் பண்பாட்டைக் காப்பதற்கானதும் ஆகும். இதில் கலப்பு என்பது தவிர்க்க இயலாது என்பது விஞ்ஞானமும் காலமும் நமக்குச் சொன்ன விடை.

*கட்டுரையாளர் விருது பெற்ற தமிழ் நாவலாசிரியர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்.