• கௌதம சித்தார்த்தன்

 

கடந்த ஒருவாரமாகவே முகநூல் டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில், ஐ.நா. அவை நிகழ்ச்சியில் நாட்டியமாடிய திருமதி ஐஸ்வர்யா தனுஷின் நாட்டியத்தைப் பற்றி கேலியும் கிண்டலும் பெருமளவில் வந்தவண்ணமுள்ளன.

அய்கிரி நந்தினி என்னும் இசைப்பாடலுக்கு மகிஷாசுரமர்த்தினியாக ஆடியிருக்கும் அவரது நாட்டிய அடவுகள் மிகவும் மோசமாக அமைந்திருக்கின்றன என்கிற கடுமையான விமர்சனங்களும், கேலி மீம்ஸ்களும் இணையத்தில் கொட்டுகின்றன.

இத்தனை கேலி கிண்டலுக்கு உட்படுத்தப்படும் அளவிற்கு அது ஒரு மோசமான நிகழ்வுதானா என்பதை விரிவாகப் பார்க்கலாம்: அந்த இசைப்பாடல் பரதநாட்டியத்தில் மிகமுக்கியமானதாகக் கருதப்படுவது. புகழ்பெற்ற பரதக்கலைஞர்களிலிருந்து இளம் கலைஞர்கள்வரை அந்த இசைப்பாடலில் தங்களது நாட்டிய அடவுகளைப் பதித்திருக்கிறார்கள்.

ஆதிசங்கரர் இயற்றிய இந்த ஸ்லோகம், சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சிதரால் பிரபல்யப்படுத்தப்பட்ட ஸ்துதி. பின்னாட்களில் அது நாட்டிய இசைப்பாடலாகப் பரிணாமம் பெற்றது.

“மலை மகளே, எங்கள் துன்பங்களைப் போக்குபவளே, தீயசக்திகளை அழிப்பவளே, அநீதி கண்டு பொங்கி எழுபவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, உன்னைப் போற்றுகிறேன்.” என்ற பொருள்படும்படியானது அந்தப்பாடல். ஒரு தேர்ந்த பரதக்கலைஞர், பரதத்தின் அடிப்படையான சிருங்காரம், வீரம், கருணை, அற்புதம், ஹாஸ்யம், பயானகம், பீபல்சம், ரௌத்ரம், சாந்தம் போன்ற நவரச பாவங்களையும் இந்தப்பாடலில் வெளிப்படுத்த முடியும் என்றாலும், ரௌத்ரம், வீரம், கருணை போன்ற பாவங்களே கம்பீரம் கொள்ளும் என்று நாட்டிய விமர்சகர்கள் கூறுவார்கள்.

ஒரு சில பாடல்களில் ஒருசில பாவங்கள் மட்டுமே பெரும் பங்கு வகிக்கும். பாவங்களைப் பற்றியெல்லாம் பேசுவதால் நான் மெத்தத் தெரிந்த பரதவிற்பன்னன் அல்லன். ஒரு மிகச் சாதாரண எளிய பார்வையாளன் மற்றும் ரசிகன். அந்த ரசனைப் பார்வையையே இங்கு முன்வைக்கிறேன்.

ஈரோடு கருங்கல்பாளையம் திருப்பாவை குழுவினர் ஏற்பாடு செய்திருந்த பத்மா சுப்ரமண்யத்தின் நாட்டிய நிகழ்வு, உடையாத நினைவுக் குமிழியாக எனக்குள் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம், அதன் பாவார்த்தங்கள்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணனைக் காதலிக்கும் ஆண்டாள், அவன் நினைவாகவே உருகி நிற்கும் ஒரு இசைவடிவம் அது. அதில், அவள் ஸ்ரீகிருஷ்ணனை ஒரு குழந்தையாக மாற்றிப் பார்க்கிறாள். அவனைப் பாராட்டிச் சீராட்டித் தாலாட்டித் தூங்கவைக்கும் அபிநயங்களின் பாவ லயத்தில் நான் முழுவதுமாகக் கரைந்து உருகி அந்த பாவமாகவே மாறிப் போனேன். காலத்தை உறையவைக்கும் அற்புதமான இசைக்கணங்கள் அவை. ஸ்ரீகிருஷ்ணனை தொட்டிலில் தாலாட்டித் தூங்கவைக்கும் அடவுகளில் இசைச்சுருதி மங்கித் தோய்ந்து, அந்த இடமெங்கும் பரிபூர்ண அமைதி நிலவிற்று. அந்த அமைதியை தன் அடவுகளில் பற்றியெடுத்து அதை ஒரு இசைவடிவமாக மாற்றினார் பத்மா. சிலநிமிடங்கள் அந்த இசையற்ற இசையில் கட்டுண்டு இருந்தனர் பார்வையாளர்கள்.

அப்பொழுது கூட்டத்திலிருந்து ஒருவர் உணர்ச்சி மிகுதியில் மெல்லிய விசிலொலியை எழுப்பினார். ஒரே ஒரு கணம்தான். சட்டென நிமிர்ந்து அவரை நோக்கிய பத்மா, “குழந்தை தூங்குகிறது.. சத்தம் போடாதீர்கள்..” என்ற அபிநயிப்புடன் முகமெங்கும் தாய்மையின் பாவம் இழையோட விழிகளை படபடவென்று அடித்துக் கொள்ளும் பாவார்த்தத்தை அபிநவம் புரிந்தார். ஓரிரு கணங்கள் பிரமித்துப்போனது அந்த அரங்கம். பிறகு சுதாரித்துக் கொண்டு கைதட்டல்களால் அதிர்ந்தது.

தெருக்கூத்து போன்ற நாட்டுப்புறக் கலைவடிவங்களில் மட்டுமே பார்வையாளனும் கலைஞனும் பங்குபெறும் நிகழ்வு சாத்தியப்படும். உயர்கலைகள் (Elite) என்று போற்றப்படும் செவ்வியல் கலை வடிவங்களில் ஒரு போதும் அங்கீகரிக்கப்படாத பார்வையாளனின் இடையீட்டை, மிக அபாரமான வகையில் தனது கலையில் பொருத்திக் கொண்ட அந்த அபிநயிப்பின் பாவத்தைக் கண்டு நான் உணர்ச்சிப் பிழம்பாக மாறிப் போயிருந்தேன்.

சரேலென பழைய குளம் ஒன்றில் தவளை குதித்தது போல, என் நினைவுக் குளத்தில் ஸ்திரீபார்ட் சடையப்பன் என்கிற அல்லி அரசாணி குதித்தாள். அல்லி அரசாணிமாலை நாட்டுப்புறக் கூத்தில் அல்லி நிகழ்த்திய பாவ அபிநயங்கள் எனக்குள் நிழலாடின: தனக்கு பவளத்தேர் வேண்டும் என்று அழுது அடம் பிடிக்கிறான் அவளது மகன் புலேந்திரன். பெரும் கோபத்துடன் இகழ்ந்து துரத்தியடித்து விட்ட அர்ச்சுனனை பவளக்கால் கொண்டு வருவதற்காக மீண்டும் அழைத்து சமாதானப்படுத்துகிறாள் அல்லி. அர்ச்சுனன் பயணக்களைப்பு தீர சற்றே உறங்கவேண்டும் என்று சப்பிரகூட மஞ்சத்திற்கு அழைக்கிறான். அங்கே அவளை சல்லாபிக்க நினைக்கும் அர்ச்சுனனை சட்டென ஒரு குழந்தையாக மாற்றிப் போடுகிறாள் அல்லி அரசாணி.

அர்ச்சுனனை ஒரு குழந்தையின் ஆலிங்கனத்துடன் அரவணைத்து சீராட்டித் தாலாட்டுகிறாள். தாய்மையின் காதலும், காதலின் தாய்மையும் இணைந்த அபூர்வமான நாட்டிய அடவுகளோடும், ராக ஆலாபனைகளோடும் பாடுகிறாள்.

ஆண்வாடையே பிடிக்காத அல்லிராணி, அதிகாரம், அகந்தை, ஆவேசம் போன்ற பல்வேறு நடை பாவனைகளும் நாட்டிய அடவுகளும் கொண்ட அவளது தன்மை, அந்தக் காட்சியில் தலைகீழாக மாறிப் போய்விட்டது.

வெகுநாள் கழித்து வந்திருக்கும் தனது புருஷனை மகிழ்விக்கும் தோரணை, தனக்குள் எழும் பாலியலின் தீராத அலைக்கழிப்பு, தனது மகனின் ஆசையை நிறைவேற்றப் பாடுபடும் தாய்மையின் அர்ப்பணிப்பு என்ற நானாவிதமான நாட்டிய அடவுகள் அவளது உடலெங்கும் அளைகின்றன.

தாய்மையின் பாவார்த்தங்களும், காதலின் சிருங்காரங்களும் அவளது ஒவ்வொரு அசைவிலும் மாறிமாறிப் பூக்கின்றன. இத்தனை நேரமும் தங்களை மிரட்டிக் கொண்டிருந்த அல்லி அரசாணியா இவள் என்று நாட்டு ஜனங்கள் வியக்க, காதல் சேயாகிக் கசிந்துருகித் தாலாட்டிச் சீராட்டுகிறாள்.

நாட்டுப்புறக்கூத்துக்கே உரித்தான உச்சஸ்தாயியும், நிலம் அதிரக்குதிக்கும் ஆட்ட அடவுகளும் இல்லாமல், மிருதங்கம் அப்படியே மெல்ல மெல்ல மங்கிக்கரைந்து, புல்லாங்குழலின் சுரவரிசையில் அந்தக் காட்சியை ஒப்படைத்து விடுகிறது. மௌனமாக அசையும் அல்லியின் அபிநயிப்புகள் சற்றைக்கெல்லாம் அந்த இடத்தை அமைதிச் சோலையாக மாற்றுகிறது. உரத்த சப்தங்களை உயிர்ப்பாகக் கொண்ட கிராமத்துச் சூழல் பெரும் வியப்புடன் தன்னை அமைதியாக்கிக் கொள்கிறது. சுற்றிலும் சூழ்ந்த அந்த நிசப்தத்துடன் தங்களை ஒப்புக் கொடுத்து மெய்மறந்து அமந்திருக்கிறார்கள் மக்கள்.

அப்பொழுது, கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர், வெளியே போகும் யத்தனிப்புடன் சட்டென எழுந்தார். அவரது செய்கையில் அந்த நிச்சலனம் கலைய, அல்லி சரேலென அவரை நோக்கி நிமிர, ஹ்ஹா, அடுத்த கணம்.. அவள் அல்லி அரசாணியாகியிருந்தாள்! படபடவென்று அடிக்கும் விழிகள் ஆக்ரோஷத்துடன் ஜொலிக்க, கன்னங்கள் எங்கும் செவ்வரியோடி ரௌத்திர பாவமாய் சிவக்க, உஷ்ஷ்.. என்று சுட்டு விரலை உயர்த்தி எச்சரித்து அவரை அமருமாறு விரலால் சைகை செய்தாள். அவர் முகமெங்கும் பயானகம் சூழ, அப்படியே இருந்த இடத்தில் அமர்ந்தார். இதெல்லாம் நடந்து முடிந்தது ஒரு கணம்தான். அடுத்த கணம் அல்லியின் முகமெங்கும் சேய்மை சூழ்ந்தது. தளுதளுப்பான குரலில் “கண்ணுறங்கு மகனே, கண்ணுறங்கு..” என்று அந்தப்பாடலின் கடைசிவரியை மெல்லிய ராகத்தில் பாடி அர்ச்சுனனை அணைத்துக் கொள்ள, கிராமத்து மக்கள் ஆடிப்போய்விட்டனர். வெகுநேரம் கொண்டாட்டத்துடன் கைதட்டல்களும் விசில்களும் பறந்தன.

காதலைத் தாய்மையாக மாற்றும் பத்மா சுப்ரமண்யமும், தாய்மையைக் காதலாக மாற்றும் ஸ்திரீபார்ட் சடையப்பனும் எனக்குள் உலக இலக்கியங்களால் கூட தரமுடியாத அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார்கள்.

பத்மா சுப்ரமண்யத்தின் ஆண்டாள் ஸ்ரீகிருஷ்ணனைக் குழந்தையாக மாற்றினாரென்றால், கிளியாக மாற்றுகிறார் அனிதா ரத்தினம்.

ஆண்டாள் பற்றிய சித்திரமானது தோளில் பச்சைக்கிளி அமர்ந்திருக்கும் நிலை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அனிதா ஆண்டாளாக மாறி அபிநயிக்கும் அந்த நாட்டிய அடவுகளில் சிருங்காரமும், அற்புதமும், கருணையும், சாந்தமும் முகமெங்கும் பிரவகிக்கின்றன. தன் மனதைக் கொத்திப் போன ஸ்ரீகிருஷ்ணனுக்காய் ஏங்கும் சிருங்கார ரசம் இழையோடும் தன்மையை அவ்வளவு அற்புதமாகக் கொட்டிவிடுகிறார்.

பிற பரதநாட்டியக் கலைஞர்கள் வெளிப்படுத்தும் இந்த பாவங்களிலிருந்து அனிதா எவ்வாறு தனித்துவமாக நிற்கிறார் என்பதை வெறும் பாவஅபிநயங்களாக மட்டுமே உணரக்கூடாது. அதாவது, நம் கண்களுக்குப் புலனாகும் காட்சி மயக்கங்களிலிருந்து, புலனாகாத வேறு வேறு தோற்றங்கள் உருக்கொள்ளும் நிலையை அவதானிக்க வேண்டும்.

ஆண்டாளின் தோளில் அமர்ந்துள்ள கிளி, தன் மனநிலைகளை பகிர்வதற்கான ஒரு தோழியாகவும், அழகியல் தன்மை கொண்ட ஒரு பறவையாகவுமே காலங்காலமாக சித்தரிக்கப்பட்டு வந்ததை அறிவோம். அந்த ‘கிளி’ என்னும் எளிய உருவத்தைப் படிமமாக மாற்றுகிறார் அனிதா.

“பைங்கிளி வண்ணன் ஸ்ரீதரன் என்பதோர் பாசத்து அகப்பட்டு இருந்தேன்..” என்னும் நாச்சியார் திருமொழியின் பாடல் வரிகள் பல்வேறு ராக ஆலாபனைகளுடன் ஒலிக்க அந்தக் கிளியை ஸ்ரீகிருஷ்ணனாக மாற்றுகிறார் அனிதா. தோளில் வந்தமரும் அந்தக் காதல் அவளது உடலெங்கும் விளையாடிக் களிக்கும் அற்புத தரிசனத்தை நிகழ்த்திக் காட்டுகிறார் ஆண்டாள்.

விஷயம் இத்தோடு நின்று விடுவதில்லை. அந்தக் கிளியைத் தான் மட்டுமே வைத்துக் கொள்ளாது, சமூக வெளியை நோக்கிப் பறக்கவிடுகிறார் ஆண்டாள். இதுதான் விவரிக்க முடியாத மகாஅற்புதம்.

இதுதான் புத்தம் புதிய பரதமொழி. மரபான பரதமொழியின் அடவுகள், பாவங்களிலிருந்து தரிசனத்திற்கு நகரும் அபூர்வமான தருணம் இது. இதை பரதத்தில் ஒரு பின்நவீனத்துவப் பார்வை என்று கூட முன் மொழியலாம்.

1980 களில் உருவான தமிழின் சிறுபத்திரிகைச் சூழல் கதை, கவிதை, கட்டுரை, நாவல், விமர்சனம், ஓவியம், நாடகம், இசை, சிற்பம், நாட்டியம், சினிமா போன்ற நவீன கலை இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களை முன்வைத்தது. வெங்கட் சாமிநாதன் மற்றும் பிரமிள் ஆகியோரின் நவீன இசை, நாட்டியம் பற்றிய எழுத்துக்கள், இசை ரசனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் நுட்பமானவையாகவும் ஆழமான பார்வை கொண்டவையாகவும் இருந்தன. இதனால், சிறுபத்திரிகை வாசகன் என்பவன் பல்வேறு துறைகளிலும் அறிவார்த்தமாக நகர முடிந்தது.

சுபமங்களா என்ற சிறு பத்திரிகை பங்களிப்பு செய்திருந்த, சந்திரலேகாவின் நவீனத்துவ நாட்டிய நிகழ்வை எளிதில் ரசிக்கமுடிந்தது. மரபான பரதக்கலையை நவீனத்துவத்தை நோக்கி நகர்த்தும் சந்திரலேகாவின் நாட்டிய அடவுகள் குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசலாம். ஆனால் பிர்ஜுவைப் பற்றி இத்தருணத்தில் பேசியாக வேண்டும்.

1990 களில் கோவை மலையாள சமாஜம் ஏற்பாடு செய்திருந்த பிர்ஜுமகராஜின் கதக் நாட்டிய நிகழ்ச்சிக்கு நானும் நண்பர் அருளும் போயிருந்தோம். எனக்கு நாட்டியங்களிலேயே மிகவும் பிடித்தமானது கதகளி. செண்டையின் வெருட்டும் இசையும் பிரம்மாண்டமான கதகளிக் கலைஞனின் உருட்டும் கண்களும் பெரும் ஆனந்தத் தாண்டவமாக இருக்கும். அந்தப் பெயரையொத்த இன்னொரு நாட்டியவடிவம் என்றதும் ஆர்வத்துடன் போனேன். கதகளியின் பிரம்மாண்டத்தை எதிர்பார்த்து வந்த எனக்கு பெருத்த ஏமாற்றம். ஆனால், சிறிது நேரத்திலேயே என் உடலெங்கும் இனம் புரியாத ஒரு விறுவிறுப்பு ஏறியடிப்பதை உணர்ந்தேன். சலங்கைகளின் ஆரோகணத்தில் இயைந்து பெரும் உணர்ச்சி வசத்திற்குள்ளானேன். பிர்ஜுவின் கால்பாதங்களில் நெகிழும் அடவுகளும், அதன் அசைவுகளில் இசைவுபடும் சலங்கைகளின் இசைக்கோர்வையும் கைகளின் நளினங்களும் எங்களூர் ஒயிலாட்டத்தை நினைவுபடுத்தி விட்டன. சற்றைக்கெல்லாம் மேடையில் பிர்ஜு மறைந்து தொப்புளான் என்கிற பொம்மையாவே ஆடிக் கொண்டிருந்தார்.

நிகழ்வு முடிந்து ஊர் திரும்பும்பொழுது கதக்கின் பெரும்பான்மையான நாட்டியக்கூறுகள் ஒயிலாட்டத்தைப் போலவே இருக்கின்றன என்று அருளிடம் வாதிட்டுக் கொண்டே வந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

ஒயிலாட்டம் என்பது கதைசொல்லிகள் ஆட்டமாடிக் கொண்டே கதைசொல்லும் நாட்டுப்புற மரபான ஒரு நாட்டியவகை. ஒயிலாட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவர் பொம்மையா.

உறுமியும், பறைக்கொட்டுகளும், இசை கொட்டி முழங்க, அதன் தாளகதிக்கேற்ப ஆட்டக்காரர்கள் சுழன்று சுழன்றாடும் தேவராட்டத்திலிருந்து மேம்பட்ட ஆட்டவகை இது.

பறைக்கொட்டுகளில் வெறுமனே காலடி எடுத்து வைத்துச் சுற்றும் அடவுகள் இதற்குப் பொருந்தா. தேவராட்டத்தில் சுழன்றோடும் வேகம், ஒயிலாட்டத்தில் நளினமான லயமாக உருமாறும். பறைக்கொட்டுகளோ, வேறு இசைக்கருவிகளோ ஏதுமில்லாமல், தங்களது காலில் கட்டியுள்ள கெச்சங்களின் இசைராகமும், பாத அடவுகளும், கைகளின் நளினமான அசைவுகளும், அந்த அசைவுகளுக்கேற்ப கைகளில் கட்டியுள்ள வண்ணத்துணிகளின் அலையடிப்பும், முக பாவங்களும் இயைந்து இயைந்து ஓர் அழகான ஒயில்வெளியை விரிக்கும். கால்களின் திசையை கலைஞனின் கதைப்பாட்டுக்களே தீர்மானிக்கும்.

காலடி எடுத்துச் சுற்றும் ஒயிலிலும், நளினமான கை அசைவுகளிலும், கெச்சங்கள் குலுங்கும் ஒலிச் சிதறல்களிலும் நாட்டுப்புறக் கதைமாந்தர்கள் உயிர்பெற்று ஆடிப்பாடுவர். மான் துள்ளிக் குதிக்கிறாற்போல, பறவை பறக்கிறாற்போல, மீன் நீந்தி விளையாடுகிறாற்போல குதிகாலைப் பூமியில் தட்டி கெச்சத்தைப் பேச வைத்து வண்ணத் துணியைச் சுற்றுகிற அழகில் ஒயிலாட்டம் உன்னதம் பெறும்.

(பிற்காலத்தில் மதுரை இலக்கியக் கருத்தரங்கில் சந்தித்த ஒரு பாதிரியார், கதக் என்னும் வடிவம், வடஇந்திய மரபான கதைசொல்லிகளிடமிருந்து திரிந்த வடிவம் என்று விளக்கினார். கதக் என்கிற சொல்லாடலே ‘கதா’ என்னும் வார்த்தையிலிருந்து உருவானதுதான் என்று அதன் மரபு குறித்து விரிவாகக் கதைத்தார்.)

உதாரணத்திற்கு, பத்மா சுப்ரமணியத்தின் காளிங்கநர்த்தனத்தை எடுத்துக் கொள்ளலாம். காளிங்கனாகவும் ஸ்ரீகிருஷ்ணனாகவும் மாறிபோய்விடுகிற ஆனந்த நிலையை அவர் வெளிப்படுத்தும் அலாதியான பாவங்களை தரிசிக்கும் பாக்கியம் எவ்வளவு பேறு பெற்றதோ, அதற்கு சற்றும் குறைவில்லாதது பொம்மையாவின் அரிச்சந்திர காண்டம்.

அரிச்சந்திர காண்டத்தில் லோகிதாசனைப் பாம்பு கொத்திப் பிடுங்கும் படலத்தில் அவர் லோகிதாசனாகவும், அரவமாகவும், அரிச்சந்திரனாகவும் மாறிமாறி நிகழ்த்தும் பாவ லயங்களும் பாத அடவுகளும் அவ்வளவு அபாரம்.

“பாம்பு வருகுதையா – பழிகாரப் பாம்பு வருகுதையா” என்னும் பாடல் வரியில் அவர் சுழன்று சுழன்றாட அவரது பின்னணி ஆட்டக்காரர்கள் ஒரே லயத்துடன் காலெடுத்துப் பாம்பாகச் சுழற்ற, அவரது காலடிக்கெச்சங்கள் மட்டும் பதற்றத்துடன் ஒலிக்கும்.

“பாம்பு வந்திட – படமெடுத்தாடிட…” என்ற அடியில் அவர் பாம்பாக மாறிப்போய்விடுவார். அவரது காலடிக்கெச்சங்கள் சீற்றத்துடன் சீறிப்பாயும்.

‘அய்யகோ நான் என்ன செய்குவேன் – என் லோகிதாசா அய்யகோ நான் என்ன செய்குவேன்.’ என்ற வரியில் அரிச்சந்திரனின் துயர்மிகு அடவுகள் அவரிடமிருந்து பிறக்கும். இப்பொழுது அவரது கெச்சங்கள் அழுது புலம்பும்.

காளிங்க நர்த்தனத்தில் பத்மாசுப்ரமணியம் வெளிப்படுத்தும் பாவங்கள் ஒரு தேர்ந்த வகைப்பட்ட செவ்வியல் தன்மை. பொம்மையாவின் ஒயில் அடவுகள் வெளிப்படுத்தும் பாவங்கள் நாட்டுப்புறச் செவ்வியலின் தேர்ந்த வகையென்று ஓங்கிச் சொல்லலாம்.

இவ்வளவு தொலைநோக்குப் பார்வைகளும் முக்கியத்துவமும் கொண்ட பாவ அபிநயங்களை முழுமையான ஈடுபாட்டுடன் வெளிப்படுத்தத் தவறிவிட்டார் ஐஸ்வர்யா. வெறும் ரௌத்திர பாவத்தில் மட்டுமே கவனம் குவித்துவிட்டார்.

யோகி ஸ்ரீசுத்தானந்த பாரதியார் தனது “நாட்டியக் கலை விளக்கம்” நூலில், “அற்புதம், கோபம், கருணை, குற்சை, சாந்தம், சிருங்காரம், பயம், பெருநகை, வீரம் என ரசங்கள் ஒன்பதாயினும், அவற்றுள் துன்பம், வெறுப்பு, பொறாமை போன்ற எத்தைனேயா உபரசங்கள், உட்பிரிவுகள் உண்டு. குணதொந்த விகாரங்கள் மலிந்த வாழ்வில், ஆயிரக்கணக்கான நுட்ப உணர்ச்சிகளைக் காண்கிேறாம். இந்த ரசங்களையெல்லாம் அபிநயபாஷையில் விளக்குவதே பரதநாட்டியத்தின் குறிப்பாகும்…” என்று சொல்கிறார். இப்படி ரசங்கள், உப ரசங்கள், உட்பிரிவுகளிலெல்லாம் தேர்ந்த ஒரு நிகழ்வை முன்வைத்திருக்க வேண்டும்.

இணையத்தில் நமக்குப் பார்க்க வாய்த்த அந்தக் காணொளி, முழுமையானதல்ல. அதில் ஒலிக்கும் அய்கிரி நந்தினி இசைப்பாடலின் ஒரு பகுதிக்கு, ஆவேசமாக அவர் ஆடுகிற சில நடன அடவுகளின் பகுதிதான். முழு காணொளியையும் பார்க்காமல் மொத்த நடனத்தில் ஒரு நிமிடக் காட்சியை மட்டுமே பார்த்துவிட்டு விமர்சனம் செய்வது சரியானது அல்ல என்று எதிரொலிக்கும் மேலோட்டமான பார்வைகளுக்கும், வாஸ்தவமான குரல்களுக்கும் சில வார்த்தைகள்.

பரதம் என்பது ஒரு கவிதை போன்றது. போகிறபோக்கில் சில பல கவிதை வரிகளைப் பாராயணம் செய்து, அந்த பாதிப்பில் சில வார்த்தைகளை ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்து பிரசுரம் செய்துவிட்டால் கவிதையாகி விடாது. “சொற்களைத் தேறவேண்டும்.. கவிதையில் ‘நெருப்பு’ என்று சொன்னால் வாய் சுட்டுவிட வேண்டும்” என்கிறார் எழுத்தாளர் லா.ச.ரா.

கவிதையின் முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்குமாக இணைவில் மறைந்திருக்கிறது எல்லையற்ற கவிதைவெளி. பரதத்தில், பாவத்திற்கும் அபிநயிப்புக்கும் இடையில் இசையின் திசைமீறி மலர்கிறது ஏகாந்த வெளி.

இப்பொழுது வேறு ஒரு பார்வையை அந்த நிகழ்வில் பொருத்திப் பார்க்கலாம்:

அய்கிரி நந்தினி என்னும் அந்தப்பாடல் தங்களது குடும்பத்திற்கு துன்பம் நேரும்பொழுது குறிப்பிட்ட மக்களால் பாடப்படும் மகிஷாசுரமர்த்தினி ஸ்துதி. நான் மிகப்பெரும் துன்பத்தில் இருக்கிறேன் என்னைக் காப்பாற்று என்பதுதான் அதன் உட்பொருள். இன்னும் விரிவாகப் பார்த்தால், ‘தீய சக்திகளால் என்குடும்பம் சூழப்பட்டிருக்கிறது அவைகளை அழித்தொழித்து எங்களைக் காப்பாயாக’ என்று சொல்லலாம்.

இந்த இசைப் பாடலின் நயம் என்பது, உள்ளத்தில் பொங்கியெழும் உணர்ச்சிபோதங்களை கணம் கணமும் மாற்றவல்ல பாவநயங்களாக வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.

ரௌத்திரம், ஸ்ருங்காரம், அற்புதம், பயானகம்.. எனப் பல்வேறு ரசங்கள் இழைந்த அய்கிரி நந்தினியை அவர் ஏன் தேர்வு செய்ய வேண்டும்? வேறு சில சிருங்காரரசங்கள் கொண்ட சர்வதேச ரசனையாளர்களை எளிதில் வசீகரிக்கும் விதத்தில் வேறு ஒரு நாட்டிய நிகழ்வைத் தேர்ந்து ஆடியிருக்கலாமே..

நாட்டுப்புற வழக்கில் மழைமாரி பொய்த்து விட்டால், மழை வேண்டி விரதம் இருந்து ஊர்ப்பெண்கள் கோயில் மேடையில் மழைப்பாட்டுப் பாடுவார்கள். அந்த நாட்டுப்புறச் சூழலைத்தான் ஒரு செவ்வியல் வடிவத்தில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா.

தமிழ்ச் சூழலை தீயசக்திகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அவைகளை அழிக்க மகிஷாசுரமர்த்தினிகளின் பார்வை இன்றைய தேவை என்பதைப் புலப்படுத்தும் விதத்தில் ஐகிரி நந்தினியை நிகழ்த்தியிருக்கிறார் ஐஸ்வர்யா என்றும் இந்த நிகழ்வை மாற்றுப்பார்வை பார்க்கலாம்.

இனி இவர் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்:

நிஜமாகவே இவருக்கு பரதத்தில் எல்லையற்ற ஈடுபாடும், கலாபோதமும், சமூகப்பார்வையும் இருக்கும் பட்சத்தில், இவர் மீது தொடுக்கும் விமர்சனக் கணைகளைத் துடைத்தெறிந்து விட்டு, அந்த ஆடலை மீண்டும் நிகழ்த்தவேண்டும்.

மகிஷாசுரமர்த்தினியின் ரௌத்திரத்திற்குப் பின்னால் உள்ள நுண்கண்ணிகளை மீள்பாவங்களாக மாற்ற வேண்டும்:

“தீய சக்திகளை அளித்த முருகப்பெருமானை மகனாகப் பெற்றவளே, எல்லா முகங்களையும் தனித்தனி அடையாளத்துடன் மலரச் செய்பவளே, மல்லிகை, முல்லை, பிச்சி போன்ற பல்வேறு மலர்களைச் சூடிய பெண்களால் சூழப்பட்டவளே, யானையின் மத்தகத்தை ஒத்த, மேருமலைக்கு நிகரான மார்பகங்களை உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே.. உன்னைப் போற்றுகிறேன்.”

“இடையர்கள் வாசிக்கும் புல்லாங்குழலின் சுருதிபோதம் கொண்டவளே, தீயவர்களின் கழுத்தில் திரிசூலத்தை நாட்டியவளே, மலைவாசிகள் கூடித்திரியும் மலைகளில் உறையும் மலைமகளே, வேடுவப் பெண்களின் கூட்டத்தில் சிறந்து விளங்கும் வனமகளே, குறிஞ்சி நிலத்து மகளிர் குவித்து விளையாடிய வகுள மலர்களைத் தலையில் சூடியவளே, மஹிஷாசுரனை அழித்தவளே.. உன்னைப் போற்றுகிறேன்.”

“அய்கிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே..”

***
2017 மார்ச், உயிர்மை இதழில் வெளிவந்தது.