ஏன் மேகன் மெக்டவல் தனது உழைப்பை ஒருபோதும் நிறுத்துவதில்லை?
- நாதன் ஸ்காட் மெக்நமரா
- தமிழில் சுனந்தா சுரேஷ்
கெண்டுக்கி (Kentucky) மாநிலத்தைச் சேர்ந்தவரும் தற்போது சிலியில் வசித்து வருபவருமான மேகன் மெக்டவல் (Megan McDowell) கடந்த இரண்டு வருடங்களில் 8 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். ”நான் அதிகளவில் உழைக்கிறேன் என்பதில், நான் என்ன செய்கிறேன் என்பதில் ஆரோக்கியமிருப்பதில்லை, மாறாக நீண்ட காலமாக அந்த எண்ணற்ற புத்தங்களின் மீது பணியாற்றிக்கொண்டிருப்பதில்தான் ஆரோக்கியம் இருக்கிறது” என்கிறார்.
மெக்டவல் 2012-ல் சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த போது, முதலில் கார்லோஸ் பொன்சேகாவின் (Carlos Fonseca) Colonel Lágrimas என்கிற நாவலை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். பைரினீஸ்(Pyrenees) என்னும் மலைத்தொடரின் ஒரு சிற்றறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் புகழ்பெற்ற கணிதவியலாளரைப் பற்றிய புதினமாகும் அது. நான்கு வருடங்கள் கழித்து Restless Books பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டது. அதே நேரத்தில், எழுத்தாளர் லினா மெருவான் (Lina Meruane) பார்வையிழப்பை நோக்கிச் செல்வது பற்றிய நாவலான Seeing Red என்கிற புத்தகத்தை மொழிபெயர்ப்பிற்காக தேர்ந்தெடுத்தது அவரது இன்னொரு வேலைத்திட்டமாக இருந்தது. அவர் அந்த புத்தகத்தை வாசித்தார்; நேசித்தார்; மொழிபெயர்ப்பைச் செய்ததோடு மட்டுமன்றி, ஓர் அமெரிக்கப் பதிப்பாளரைக் கண்டுபிடிக்க அவர் மெருவானுடன் இணைந்து செயல்பட்டார். இறுதியில் Deep Vellum பதிப்பகம் இப்புத்தகத்தை தேர்ந்தெடுத்து 2016-இல் வெளியிட்டது.
மற்ற ஆறு புத்தகங்கள்: சமந்தா ஸ்வெப்லினின் Fever Dream (ரிவர்ஹெட் பதிப்பகம்); மரியானா என்ரிகியூஸின் Things We Lost in the Fire (ஹொகார்த் பதிப்பகம்); டீகோ ஜுனிகாவின் Camanchaca (காபி ஹவுஸ் பதிப்பகம்); கான்சலோ டார்னேவின் Divorce Is in the Air (நாப் பதிப்பகம்); அலெஹாந்த்ரோ ஸாம்ப்ராவின் My Documents (மெக்ஸ்வீனி பதிப்பகம்), Multiple Choice (பெங்குயின் பதிப்பகம்)
”மொழிபெயர்ப்பென்பது படைப்பாக்கம் கொண்ட வாசிப்பைப் போன்றதாகும்; நீங்கள் அதனை ஆழமாக வாசிக்க வேண்டும்; மீளுருவாக்கம் செய்திட உங்களுக்கு ஒரு பொருள்விளக்கமும், அதன் மீதான ஒரு ஈர்ப்புணர்வும் இருக்க வேண்டும்” என மெக்டவல் கூறுகிறார். பொதுவாக அவர் தனது முதல் மொழிபெயர்ப்பு வரைவை முயற்சிப்பதற்கு முன்பாக ஒரு சாதாரண வாசகராக அந்த புத்தகத்தை அணுகி, பின்னர் அவ்வரைவு நேர்த்தியானது என உணரும் வரைக்கும் அதனை திருத்தியமைக்கிறார். பிறகு அம்மொழிபெயர்ப்பை ஒரு சில மாதங்களுக்கு ஓரங்கட்டி வைத்துவிட்டு பின்னர் ஒரு புத்துணர்ச்சியோடு ஒரு பதிப்பாசிரியரின் கண்கொண்டு அனைத்தையும் கேள்வி கேட்கத் திரும்ப வருகிறார். இறுதியாக மெக்டவல் அந்தப் பிரதியை பதிப்பாசிரியருக்கு அனுப்பி வைக்கிறார்.
இந்த செயல்முறையானது ஒவ்வொரு புத்தகத்திற்கும் மாறுபடுகிறது: ஒரு தரப்படுத்தப்பட்ட சோதனை வடிவில் எழுதப்பட்ட அலெஹாந்த்ரோ ஸாம்ப்ராவின் Multiple Choice, அதிகளவிலான வார்த்தை விளையாட்டும், நுட்பமான ஜிம்னாஸ்டிக்கும் கொண்ட நாவலாகும். இதன் பொருட்டு அந்நாவலை அதன் மூல மொழியான ஸ்பானிஷ் மொழியில் மீண்டும் எழுதி பின்னர் அதனை மொழிபெயர்க்கும் தேவையிருந்தது. ஸாம்ப்ராவின் அசலான சிந்தனையின் தாக்கத்தை எடுத்துச் செல்ல புதிய உள்ளடக்கத்தின் மீது மெக்டவல் மற்றும் ஸாம்ப்ரா இருவரும் ஒரு முழுமையான கூட்டுழைப்பை மேற்கொண்டார்கள்.
மெக்டவல் மொழிபெயர்க்கிற அனைத்து புத்தகங்களும் அதன் அணுகுமுறையில் புதுமை கொண்டதாக இருக்க விழைகின்றன. அவை ஒரு சீர்முனைக் கத்தியின் கூர்மையைப் போன்ற வாக்கியங்களையும், தன்னிறைவான வரிவடிவத்தையும் கொண்டுள்ளன. அவற்றில் பலவற்றை ஒரே மூச்சில் வாசித்து விடுவதற்கான சாத்தியம் உண்டு. தென்னமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவின் கனவு நிலத்தோற்றங்களினூடாக வாசகரை வழிநடத்திக்கொண்டே மரபார்ந்த கதைசொல்லும் வழக்கங்களை அவை மறுதலித்தன.
2017 ஆம் ஆண்டிற்கான ஆண்களுக்கு வழங்கப்படும் புக்கர் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட Fever Dream நாவலை எடுத்துக் கொள்ளுங்கள். 25000 வார்த்தைகளுக்கு மிகாததுதான் அந்நாவல். அர்ஜெண்டினாவின் ஒரு கிராமப்புற மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் உள்ள ஒரு பெண்மணிக்கும் ஒரு இளைஞனுக்குமிடையேயான, நம்மை திகிலுறச்செய்கிற தொய்வற்ற, உரையாடலைக் கொண்டிருப்பதுதான் அதன் தனிச்சிறப்பு. மெக்டவலின் பல புத்தகங்களைப் போன்றே Fever Dream நாவல் சாதாரண படிமங்கள் – சூடான திருப்புச் சக்கரம், முகப்பு புல்வெளியில் காணப்படும் காபி கோப்பை, உதடுகளுக்கிடையேயான சிகரெட்- மீது ஒரு தீவிர கவனத்தை செலுத்துவதன் மூலம் அதன் உள்ளார்ந்த தாக்கத்தை கண்டறிகிறது. ”விசித்திரம் முற்றிலும் சாதாரணமானது” என அந்நாவலில் ஒரு பாத்திரம் விவரிக்கிறது. எல்லாவற்றிற்குமான பதிலாக “அது ஒன்றும் முக்கியமானதல்ல” என்கிற சொற்றொடர் இருப்பது போல, விசித்திரம் என்பதும் ஒரு சொற்றொடராக மட்டுமே இருக்க முடியும். உங்களது மகன் இதைப்போன்று பதிலளிக்கவில்லையென்றால், நான்காவது முறையாக அவன் ஏன் சாப்பிடவில்லை என நீங்கள் கேட்கிறீர்கள்; அல்லது அவனுக்கு சளி பிடித்திருந்தால் அல்லது அவனைப் படுக்கைக்கு அனுப்புகிறீர்கள், அவன் இப்பொழுதான பேசக்கற்றுக்கொண்டிருப்பது போல வார்த்தைகளை மென்று விழுங்கி ”அது ஒன்றும் முக்கியமல்ல” என பதிலளித்தால், சத்தியமாகச் சொல்கிறேன் அமந்தா, உங்களது கால்கள் நடுங்க ஆரம்பிக்கின்றன”.
ஒரு பகுதிநேர இலக்கிய மொழிபெயர்ப்பாளராக (வேறு வகையினம் எதுவுமில்லை) மெக்டவலின் மொழிபெயர்ப்பு பட்டியலானது நமது பிணிதீர்க்கும் சக்தியாக அதன் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. மேலும், அவரது பணியின் நிலையற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது. அவரது கடைசி எட்டு புத்தகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பதிப்பகங்களில் வெளிடப்பட்டுள்ளன; அந்த எட்டு புத்தகங்களில் இரண்டு புத்தகங்களின் அட்டை மீதுதான் அவரது பெயரைக் காணமுடியும். பெரிய எழுத்தாளர்கள் மற்றும் அச்சகங்களோடு அவர் பணியாற்றிக் கொண்டிருந்த போதும் கூட அவர் பெற்ற ஈட்டுத்தொகை என்பது மிகவும் சொற்பம்தான். சில நேர்வுகளில் அதுவும் இல்லையெனலாம். தனது புத்தகத்திற்கான உரிமைத்தொகையாக முதன்முதலாக 500 டாலர்களுக்கான காசோலையைப் பெற்றார். அதற்காக அவர் தனது தோள்களை மெல்ல ஆட்டிகொண்டார்;
சிறிய அச்சகங்கள் விதிவிலக்கானவை என அவர் கூறுகிறார். “ஒரு பெரிய அச்சகத்தோடு நீங்கள் பணியாற்றுகையில், அவை மொழிபெயர்ப்பாளரின் பெயரை மறைக்கவே விரும்புகின்றன. இதனை இப்படிக் கூறலாம்: என்னுடைய பெயர் ஒன்றும் புத்தகங்களை விற்பனை செய்யப்போவதில்லை. புகழ் அல்லது பணத்திற்கான மொழிபெயர்ப்பாளர் நானில்லை”.
“பிறகு நான் ஏன் ஒரு மொழிபெயர்ப்பாளராக இருக்கிறேன் என்கிற கேள்வியை கேட்டுப்பார்த்துக் கொள்கிறேன்”.
***
“கெண்டகியில் வளர்ந்தேன், நிறைய புத்தகங்களை படித்தேன்” என மெக்டவல் என்னிடம் சொல்கிறார். அவரது தந்தை அலபாமாவைச் சேர்ந்தவர்; தாயார் மிசெளரியைச் சேர்ந்தவராவார். “கெண்டகியை விட்டு வெளியேற வேண்டும் என்பதை எனது மனதில் வைத்திருந்தேன், நான் கல்லூரியில் சேர்ந்தபோது அவ்வாறே செய்தேன்”. சிகாகோ டிபால்(DePaul) பல்கலைக்கழகத்தில் மெக்டவல் ஆங்கிலம் பயின்றார். அங்குதான் இலக்கியத்தில், மொழிபெயர்ப்பில் ஆர்வமுடையவராக மாறினார். குறிப்பாக ஜுலியோ கொர்த்தாஸாரை(Julio Cortázar) வாசித்தது அவர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கல்லூரிப் படிப்பிற்கு பிறகு, டால்க்கி ஆர்க்கைவ் பிரஸ்ஸில் (Dalkey Archive Press) பதிப்பிக்கும் மாணவர் என்ற நிலையில் அமர்ந்தார். அந்த காலகட்டத்தில் டால்க்கி பிரசுரிக்கும் புத்தகங்களை மட்டுமே படித்தார், அவை யாவும் ஒரு விசித்திரப் பெட்டகமாகவே இருந்தன. “கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை படிக்கும் போது, ஒவ்வொருவரும் படிக்கிற அதே விஷயங்களைத்தான் நீங்களும் படிக்கிறீர்கள், அந்த விஷயங்களைத்தான் நானும் நேசித்தேன்; ஆனால், இங்கு நான் இதற்கு முன்னெப்போதும் கேட்டிராத பெரும் எழுத்தாளர்களை வாசித்துக்கொண்டிருப்பதற்கான புதையலை கண்டுபிடித்துக்கொண்டிருப்பது போல உணர்ந்தேன்” என மெக்டவல் சொல்கிறார். டால்க்கியில் முழுநேர ஊழியராக பணியாற்ற விண்ணப்பிக்கச் செய்தார். தான் இளம் வயதுக்காரராகவும் பயந்தவராகவும் இருந்ததால் தனது நேர்காணலில் சொதப்பியதாகவும் அவர் கூறுகிறார். மெக்டவல் இன்னொரு மொழியைப் பேசுவதில்லை என்பதால்தான் அவரை மீண்டும் பணியில் அமர்த்தவில்லை என பின்னர் டால்க்கி கூறியது.
மெக்டவல் அதனை சரி செய்ய முயன்றார். சிலியில் உள்ள வால்பரைசோவில்(Valparaíso) அவரது நண்பர் ஒரு கலாச்சார மையம் திறந்திட மெக்டவல் உதவுவது பற்றி அவருடன் பேசியிருந்தார். இந்தக் கருத்தினால் ஆகர்ஷிக்கப்பட்டு அவருக்கு முன்னதாகவே இவர் அங்கு சென்றுவிட்டார். அந்தப் பயணத்தில் சிலியில் மொத்தம் மூன்று வருடங்கள் கழித்தார் மெக்டவல். அவர் ஸ்பானிய மொழியைக் கற்றுக்கொண்டார். இருப்பினும் புத்தகம் பதிப்பித்தலையே அவர் விரும்பினார். ஆனால் அவ்வாறு முடியவில்லை.
டல்லாசில்(Dallas) அமைந்துள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு ஆய்வுகளுக்கான மையத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக அமெரிக்கா சென்றார் மெக்டவல். இருப்பினும் அவரால் சிலியை விட்டு நீண்டகாலம் பிரிந்திருக்க முடியவில்லை. முதல் பருவத்தேர்வு முடிந்து மெக்டவல் மூன்று மாதங்களில் சாண்டியாகோ திரும்பினார். புத்தக நிலையங்களை சுற்றி வட்டமடித்தார்; பதிப்பாசிரியர்களோடு பேசினார்; சிலியில் பணியாற்றிக்கொண்டிருக்கிற சுவராசியம் மிக்க எழுத்தாளர்கள் பற்றி ஒவ்வொருவரிடமும் கேட்டார். ”பல்வேறு விஷயங்கள் பற்றி அவர்கள் சொன்னார்கள், அதேநேரம் அவர்கள் எல்லோரும் அலெஹாந்த்ரோ ஸாம்ப்ரா பற்றியும் சொன்னார்கள்” என மெக்டவல் சொன்னார்.
மெக்டவல், ஸாம்ப்ராவின் Bonsai நாவலை வாசித்துவிட்டு அவரிடம் தான் அதனை மொழிபெயர்க்க முடியுமா என கேட்டார். அந்த பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது எனக்கூறி Private Lives of Trees என்கிற நாவலை மொழிபெயர்க்க அனுப்பி வைத்தார். Private Lives of Trees என்பது இரவில் படுக்கைக்குச் செல்லும் தனது மகளுக்கு ஒரு தந்தை சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அதிபுனைவாகும். அதனை மொழிபெயர்த்து Melville House பதிப்பகத்திற்கு அனுப்பி வைத்தார் மெக்டவல். அவர்கள் அந்த படைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையவில்லை என கவலைப்பட்டு அதனை ஒதுக்கி வைத்துவிட்டார் அவர். ஒரு வருடம் கழித்து, Open Letter பதிப்பகத்தைச் சேர்ந்த சாட் போஸ்ட் அவரது மொழிபெயர்ப்பை பார்க்கவேண்டுமென்று கூறினார்; பின்னர் 2010-இல் Private Lives of Trees புத்தகமாக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து 2013-ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்புக்கான PEN விருதை வென்ற Ways of Going Home உள்ளிட்ட மேலும் மூன்று புத்தகங்களை ஸாம்ப்ராவும் மெக்டவலும் வெளியிட்டார்கள்.
” நான் இதற்கு முன்னெப்போதும் செய்திராத அதிஷ்டகரமான செயல் எதுவென்றால் அது அலெஹாந்த்ரோவை மொழிபெயர்த்ததுதான், நான் நேசிக்கிற ஒரு சிறந்த ஆசிரியர்; அதனால் அவரோடு இணைந்து செயலாற்றுகிறேன். அவரோடு பொருந்திப்போகிற ஒரு எழுத்தாளராக இருக்கும்போது, நான் அவரது தேர்வுக்குரியவராக இருக்கிறேன்”.
நாடோடியாக அலைந்த சில ஆண்டுகள் போக, 2014-இல் சிலி திரும்பிய பிறகுதான் அவருக்கு ஒரு உயர் படைப்பாக்கத் திறன் கொண்ட கட்டம் ஆரம்பித்தது. ”என்னுடைய முதுகலைப் பட்டங்களை முடித்த பிறகு பதிப்பித்தலில் என்னால் எந்த வேலையினையும் பெறமுடியவில்லை; இந்த உலகில் எங்கு நான் போக விரும்புகிறேன்? என நினைத்துப் பார்த்தேன்”. அவர் போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்தில் வசித்தார்; ஆனால் ஆங்கில அச்சகங்களுக்காக ஸ்பானிய புத்தகங்களை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். இருப்பினும் இலக்கிய கலாச்சாரத்தோடு இணைந்திருப்பதாக அவர் உணரவில்லை. “இது ஒரு சிறந்த முடிவா என்பதை கூட அறியாமல் மீண்டும் சிலி திரும்ப முடிவெடுத்தேன்” என்கிறார் மெக்டவல்.
***
பொருளாதார ஸ்திரத்தன்மைக்காகவும், இலக்கிய மொழிபெயர்ப்பு நோக்கிய அவரது முயற்சிகளை சாத்தியமாக்கவும் சாண்டியாகோவில் உள்ள ஒரு முதலீட்டு வங்கிக்காக நாளைக்கு 5 மணி நேரம் உழைக்கிறார் மெக்டவல். சென்ற வருடத்தின் பயங்கரமான வேலைப்பளுவை பற்றி பேசுகையில் (அந்தவருடத்தில்தால் அவர் Fever Dream, Things We Lost in the Fire, மற்றும் Multiple Choice ஆகிய நாவல்களை மொழிபெயர்த்திருந்தார்), அப்பணி சோர்வடையச் செய்வதாக இருந்தது என மெக்டவல் கூறுகிறார். முதலீட்டு வங்கிப் பணி மற்றும் மேற்கண்ட நாவல்களை மொழிபெயர்த்தது அன்றி வேறெதற்கும் அவருக்கு நேரமில்லை.
மெக்டவல் மற்றும் அவரைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களின் ஓய்வறியா இந்த பணியென்பது முற்றிலும் ஆங்கில வாசகர்களின் நலனுக்கானது; ஏனென்றால் இவர்கள் மூலமாக புத்தாக்கமும், சிலிர்க்க வைக்கவும் செய்கிற சில எழுத்தாளர்களை அணுகுவதற்கான வாய்ப்பை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் முதன் முதலில் அறிமுகமான மூன்று லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களை இவர் மொழிபெயர்த்தார், கதைகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பது பற்றி ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த ஒழுங்கமைப்புகள் மீது குண்டு வீசி தகர்த்தெறிந்தவர்களாக இருந்தார்கள் இவர்கள். லினா மெருவேன், சமந்தா ஸ்வெப்லின், மரியானா என்ரிக்யூஸ் ஆகிய மூவரும் இலக்கிய வகைமைகளை ஒன்று கலக்கிறார்கள். ஒரு புதிய வடிவத்தை கண்டறிந்து நம்மை மிரட்டுகிறார்கள். புதினம் என்பது மரணித்துவிட்டது; அது இன்னும் நிலை கொள்ளாத, உணர்ச்சியூட்டுகிற ஏதோ ஒன்றாக அதன் கல்லறையிலிருந்து எழுந்து மீண்டும் வலம் வருகிறது என அவர்கள் உங்களை உணர வைக்கலாம்; சிலி மற்றும் அர்ஜெண்டினாவில் இலக்கிய பண்பாடென்பது ஆணாதிக்கம் கொண்டதாக இருக்கையில், பெண் எழுத்தாளர்களால் சிறப்பு வாய்ந்த இலக்கியத்தை கண்டறிவது ஒன்றும் கடினமான விஷயமில்லை” என மெக்டவல் கூறுகிறார். “ இங்கு அவ்வாறு நிறைய இருக்கின்றன; அவை சிறப்பானதுமாகவும் இருக்கின்றன” என்றும் கூறுகிறார்.
“மொழிபெயர்ப்பின் இலக்கியம், காலகட்டம் பற்றி பேசுவதை நாங்கள் வழக்கமாகக் கொண்டோம்; பெண்களோடு ஒப்பிடுகையில் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்களின் விகிதாச்சார சமமின்மை பற்றி இப்பொழுதுதான் பேச ஆரம்பித்திருக்கிறோம்” என மெக்டவல் கூறுகிறார். இதற்கு முன்னர் இவ்வாறு இருந்ததில்லை. “இலக்கிய வரலாறென்பது ஆண்பாலுக்குரியதாக இருக்கிறது; பெண்கள் விதிவிலக்குகளாக இருக்கிறார்கள்” எனவும் அவர் கூறுகிறார்.
அதே நேரத்தில், முற்றிலும் வேறுபட்ட ஒன்றின்பால் இயங்கிக்கொண்டிருக்கிறார் மெக்டவல்: பாப்லோ எஸ்கோபார்(Pablo Escobar) உடனான தனது 5 வருட காதல் அனுபவங்கள் அனைத்தையும் சொல்கிற, விர்ஜினியா வலேஜோவால்(Virginia Vallejo) எழுதப்பட்ட Loving Pablo, Hating Escobar என்கிற படைப்புகள்தான் அவை. ”இதே அனுபவங்களை முன்வைத்து பென்லோப் குரூஸ்(Penélope Cruz) மற்றும் ஜேவியர் பார்டம் (Javier Bardem) உடன் இணைந்து அவர்கள் ஒரு திரைப்படம் உருவாக்கிக் கொண்டிருந்ததால், இந்த புத்தகத்தை அந்த மாத இறுதிக்குள் மொழிபெயர்த்திட நான் கடும் பிரயத்தனம் மேற்கொண்டேன். அது ஒரு அழகான, நம்மை பித்துபிடிக்கச் செய்கிற கதை” என மெக்டவல் சொல்கிறார். குக்கி ஆடைகள்(Gucci) மற்றும் பயங்கரமான கொலைகள் என அருகருகில் பயணிக்கிற தன்மையைக் கொண்டிருக்கிறது அக்கதை. இது காமரசம் கொண்டதாகவும், ஒரு அந்தரங்க தொலைக்காட்சி நெடுந்தொடராகவும் இருக்கிறது”.
அவர் அப்போதுதான் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குனரும், ஆன்மீக குருவுமான அலெஹாந்த்ரோ கொடொரோவ்ஸ்கி(Alejandro Jodorowsky) என்பவரின் சுயசரிதை புத்தகத்தை மொழிபெயர்த்து முடித்திருந்தார். “அவருடைய தாயார் ஒருபோதும் பேசாத குணாதிசயம் கொண்டவர், அவர் பாட மட்டும் செய்கிறார்” என மெக்டவல் கூறுகிறார். “தனது வாழ்வின் நிகழ்வுகளைக் கொண்டு அவற்றை தொன்மமாக மாற்றுகிறார் அவர்”.
இதோடு முடிந்துவிடப்போவதில்லை. மெக்டவலின் அடுத்த செயல்திட்டம், சமந்தா ஸ்வெப்லினின் Pajaros en la Boca என்கிற சிறுகதை தொகுப்பு மற்றும் ஸாம்ப்ராவின் கட்டுரைத்தொகுப்பான No Leer ஆகியவற்றை மொழிபெயர்ப்பதுதான்.
மெக்டவல் ஒரு மொழிபெயர்ப்பாளராக உருவாக வேண்டும் என முடிவெடுத்த போது எந்தவொரு நகர்வும் இல்லை. “ஆனால், தற்போது குறைந்தபட்சம் கடந்த 10 ஆண்டுகளாக மொழிபெயர்ப்பை எனது வாழ்க்கைமுறையாக மாற்றியுள்ளேன்” என அவர் கூறுகிறார்.“இதுதான் நான் என்ன செய்கிறேன் என்பது, மொழிபெயர்ப்பிலிருந்து என்னை பிரிப்பதென்பது கடினமானது”. மெக்டவல் தனது சிறுவயதில் எழுத்தாளராக மாற விரும்பினார். அவர் வளர வளர நிறைய படித்தார்; பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்றார்; பயணங்கள் மேற்கொண்டார், மத்திய வர்க்க பின்புலத்திலிருந்தான வெள்ளை அமெரிக்க எழுத்தாளர்களின் புத்தகங்கள் எங்கும் இருக்கையில், ஆங்கிலம் பேசும் உலகிற்கு வெளியே உருவான கண்ணோட்டங்களைக் கொண்ட புத்தகங்கள் இல்லை என அவதானித்தார். ”தனிப்பட்ட முறையில் மொழிபெயர்ப்பு எனக்கு மிகவும் ஆர்வமூட்டுவதாக தோன்றியது; அதே போன்று முக்கியமானதாகவும் இருந்தது”.
இங்கு காணப்படுகிற ஒரு தன்னலமற்ற வகை கலைஞராக மெக்டவல் இருக்கிறார். தன்னுடைய மனம், நேரம், படைப்புத்திறன் மற்றும் அவரது மொத்த வாழ்க்கை – ஆகிய அனைத்தையும் மற்றவர்களின் எழுத்தை உயர்த்தி பிடிப்பதற்காகவே அர்ப்பணித்திருக்கிற ஒரு திறமை மிக்க எழுத்தாளர் அவர். ஆங்கில வாசகர்களைப் பொறுத்தவரை, இவர் அதியுழைப்பைக் கோருகிற இன்னுமொரு வருடத்தைப் பெறவிருக்கிறார் என்பது போலத் தோன்றுகிறது.
***
நன்றி : lithub.com
