உரையாடல்கள் : பெட்ரோ மைரல், சமந்தா ஸ்வெப்லின்,  ஃபேபியன் மார்டினெஸ்  மற்றும்  ஜே.எம். கூட்ஸி. 

 

ஃபேபியன் மார்டினெஸ் (Fabian Martinez -1964-ல் அர்ஜெண்டினாவில் உள்ள படகோனியாவில் பிறந்தவர்) பரிசு பெற்ற நாவலாசிரியர். பெட்ரோ மைரல் (Pedro Mairal – 1970-ல் பியூனஸ் அயர்ஸில் பிறந்தவர்) இவரது நாவல் ஆங்கிலத்தில் (The Missing Year of Juan Salvatierra) மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.. சமந்தா ஸ்வெப்லின் (Samanta Schweblin – 1978-ல் பியூனஸ் அயர்ஸில் பிறந்தவர்) இவரது நாவல் ஆங்கிலத்தில் (Fever Dream) மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இந்த மூன்று எழுத்தாளர்களும் ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்தபோது,  புகழ்பெற்ற சர்வதேச எழுத்தாளரான ஜே.எம். கூட்ஸி (J.M. Coetzee)  அவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்.

***

ஜே.எம். கூட்ஸி :  ஒவ்வொரு பெரும் சம்பாத்தியத்தின் பின்னரும் பெரும் குற்றம் இருக்கும் என்று பால்சாக் எழுதிய பிரபலமான மேற்கோள் ஒன்று உள்ளது. அதுபோலவே ஒவ்வொரு வெற்றிகரமான காலனிய முயற்சிகளுக்குள்ளும் வன்முறை, நிலஆக்கிரமிப்பு போன்ற பெருங்குற்றங்கள் ஒளிந்துள்ளன என்று கோர முடியும்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் பரம்பரைக் கதைகளில் உள்ளது போல, பெரும் செல்வந்தர்களின் வாரிசுகளை, அந்தப் பெரும் செல்வத்தை சம்பாதிப்பதற்காக நடத்திய பெருங்குற்றங்கள், முற்றுகை இட்டுக் கொண்டுள்ளது என்பார்கள். அதுபோல வெற்றிகரமான காலனிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவும், அதன் வரலாறும் தொடர்ந்து முடிவுறாமல், அதன் குடியேறி வாரிசுகள் மேல் முற்றுகையிட்டுக் கொண்டுள்ளது. மண்ணின் மைந்தரான பூர்வகுடி ஆஸ்திரேலியர்களுக்கு, அவர்கள் நிலத்தைச் சூறையாடியதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் அல்லது என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி ஆஸ்திரேலிய நினைவுகளில் இன்னும் அப்பட்டமாக எப்போதும் போல வாழ்ந்து கொண்டுதான் உள்ளது..

அதை அப்படியே அர்ஜெண்டினாவுக்கும் சொல்லலாம் அல்லவா? அதுவும் ஒப்பீட்டு அளவில் அதே போன்ற ரத்தம் தோய்ந்த வரலாற்றைத்தானே, தன் முதுகில் சுமந்து கொண்டுள்ளது?

 

ஃபேபியன் மார்டினெஸ் : அர்ஜெண்டினாவின் பூர்வகுடி மக்களின் இரத்தம் தோய்ந்த வரலாறும், அவர்களிடமிருந்து நிலங்கள் சூறையாடப்பட்டதும், ஏதோ கடந்தகால பிரச்னை என்று மட்டும் ஒதுக்கிவிட முடியாது, அது நிகழ்கால பிரச்னையும் ஆகும். நிலம் மற்றும் மற்ற உரிமைகளுக்காக நாடு முழுதும் நடக்கும் மோதல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், அந்த உண்மை புரியும். இருப்பினும் அர்ஜெண்டினாவின் பொது விவாதங்களில் இப்பிரச்னை மையம் கொள்வதில்லை. அரசியல் ரீதியாக முற்போக்காகவும், சமூகரீதியாக மிகவும் அக்கறையுடன் இருப்பவர்கள் கூட, இந்த விவாதங்களின் போது, அதற்கான முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை. என்னுடைய கருத்துப்படி, வரலாற்றை முழுமையாக நிராகரிப்பதின் மூலம்தான், இது இப்படி நடக்கிறது. காலனித்துவத்தின் போது நடந்த படுகொலைகள், வதைமுகாம்கள், பூர்வகுடிகளின் மேல், அப்போதும் இப்போதும் நடத்தப்பட்டும் துஷ்பிரயோகங்கள் என எதுவும் பாடப் புத்தகங்களில் வருவதில்லை. மைய ஊடகங்கள், பூர்வகுடிகளின் குரல் வெளியே கேட்காத முறையில், காற்றுபுகா வண்ணம் அடைத்து, அவர்களைப் பற்றிய அத்தனை வெளிப்பாடுகளையும் வெளியே தெரியாதபடி மூடி மறைக்கப்பட்டுள்ளன. மண்ணின் மைந்தர்களை, பொதுவாக அவர்கள் தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி, அவர்களைப் பற்றிய செய்திகளை, எந்த விவாதத்திற்குள்ளும் நுழைய விடுவதில்லை..

ஒரு உதாரணத்தைச் சொல்ல முடியும். 2017-ல், சாண்டியாகோ மால்டோனடா என்ற இளம் வெள்ளையர், Mapuche என்ற பூர்வகுடி மக்களின் போராட்டங்களில் கலந்து கொள்கிறார். அவர் படகோனியாவில் காணால் போய் விடுகிறார். இது நடந்த அடுத்த மாதத்தில் இருந்து, அவரது உடலைக் கண்டெடுக்கும் வரை, பெரும் போராட்டங்கள் நாடு முழுதும் நடந்தன. மால்டோனடாவுக்கு என்ன நடந்தது என்பதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று துவங்கிய அப்போராட்டம், பெரிதளவில் பெருகி, கடைசியாய் நாடு முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட பெரும் எதிரப்புப் போராட்டமாக வளர்ந்தது. மால்டோனடாவின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர்,  பிராந்திய அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக நடந்த ஒரு மோதலில், அர்ஜெண்டினிய படை ரபேல் நகுயேல் என்ற 27 வயது ஆயுதமற்ற  Mapuche பூர்வகுடிமகனை, முதுகில் சுட்டுக் கொன்றது. அவர் மரணத்துக்கான எதிர்ப்புப் பேரணியில், வெறும் 200 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

 

சமந்தா ஸ்வெப்லின்  :  நான் அட்லெய்ட் மற்றும் பெர்த் நகரங்களில் வந்திறங்கிய போது, அங்கு தெருக்களில் கூடியிருந்த பூர்வகுடி மக்களைப் பார்த்ததும், அதிர்ச்சி அடைந்தேன். இலக்கியரீதியாக உணரமுடியாத, வலியையும் வன்முறையையும் அவர்களிடம் உணர்ந்தேன். அதுதான் ஆஸ்திரேலியாவில் இருந்து, உலகம் முழுதும் ஒருவர் எடுத்துச் செல்லும் உணர்வாகும். அதுதான் கடந்த காலத்தில் இருந்து வந்த அந்த முற்றுகை உணர்வு, நிகழ்கால நிஜத்தில் இருப்பது மட்டுமல்ல, அது நமது கண்களுக்கும் தெளிவாகத் தெரிகிறது. அர்ஜெண்டினாவைப் பொறுத்த வரை, பூர்வகுடிமக்கள் உங்கள் கண்களில் தட்டுப்பட மாட்டார்கள். அவர்களைப் பற்றி எந்தப் பதிவையும் தெருக்களிலோ, ஊடகங்களிலோ, அல்லது எங்கள் கலாச்சார உணர்வுகளிலோ காண முடியாது. எங்கள் தலைமுறையில் பெரும்பான்மையானவர்கள், நகரங்களில் வளர்ந்தவர்கள். அவர்கள், புலம்பெயர்ந்த ஐரோப்பிய தாத்தாமார்களை மூதாதையர்களாய்க் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு, பூர்வகுடி கடந்தகாலம் என்பதை விட, ஐரோப்பிய புலம்பெயர்ந்த மூதாதையர்களைக் கொண்ட கடந்தகாலம் என்பது மிகவும் நெருக்கமானது. எங்களைப் பொறுத்த வரை, பூர்வகுடி மக்களைப் பற்றி, அவர்களின் காலனியவாதிகள் மூலம்தான் தெரியும். இந்நாள் வரைக்கும், அவர்களைக் குறித்து, எவ்வித வரலாற்றுத் திரிபும், எவ்வகையிலும் அர்ஜெண்டினாவில் நடந்ததில்லை.

 

பெட்ரோ மைரல் : அதைக் காணமுடியாதபடி ஒரு போக்கு உள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். தன்னை முழுவதும் ஐரோப்பியனாகப் பார்க்கும் ஒரு அர்ஜெண்டினிய சுயபார்வை உள்ளது. அர்ஜெண்டினாவில் உள்ள ஒரு முதுமொழியை எடுத்துக் கொண்டால் அது புரியும். ‘மெக்சிகர்கள், ஆஸ்டெக்கின் (Aztecs) வழித்தோன்றல்கள். பெருவியா்கள், இன்காஸின் (Incas) வழித்தோன்றல்கள். ஆனால், அர்ஜெண்டினர்கள், படகுகளின் (boats) வழித்தோன்றல்கள்.’ இந்த முதுமொழி அர்ஜெண்டினிய கலாச்சாரத்தில் பூர்வகுடி இரத்தம் உள்ளது என்பதை முழுவதுமாக நிராகரிக்கிறது. பூர்வகுடிகள் தாங்கள் பிழைக்க வேண்டுமானால், அவர்கள் தங்களைத் தாங்களே மறுத்து, தங்களது அடையாளத்தைப் புறந்தள்ளி, அழித்து, தங்களை ஐரோப்பிய அடையாளத்துடன் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.  The Devil’s Country என்ற ஆண்ட்ரே டி டெல்லாவின் ஆவணத்திரைப்படம் இதைத்தான் வலியுறுத்துகிறது.

தேசியம், காலப்போக்கில் ஒரு கோட்டைப் போட முயல்கிறது. போட்டு விட்டு, இந்த தேதியில் இருந்து, இது முறையான நாடாகிறது என்று அறிவித்து விடுகிறது. அதுதான் காலக் கோடாகவும்,  பிராந்தியக் கோடாகவும் நிலைத்து நிற்கிறது. அதில் நிலஅளவுகள், அளத்தல் முறைகள், வருடங்கள், கிலோமீட்டர்கள் என அனைத்தும் அடங்கி விடுகின்றன; அடங்கியே இருக்கப் போகின்றன. படுகொலை மற்றும் சூறையாடல் என்ற அடித்தளத்தில் கட்டப்பட்ட இத்தேசத்தில்தான், நான் பிறந்தேன். அர்ஜெண்டினாவின் ஜீவனற்ற நிலவெளியில் நிலவும் அந்த சூனியம், உண்மையில் அறிவு நிரப்பப்பட்டு பின்னர் அது காலியானதால் தோன்றிய வெற்றிடம்; தகவல்கள் கொண்டு நிரப்பப்படாததால் தோன்றிய காலியிடம்; ஞானம் புறம் தள்ளப்பட்டு, அமைதியாக்கப்பட்டதால் தோன்றிய சூனியம். இதை ஏதாவது ஒன்றாக மாற்றி மடைமாற்றாமல், வெறுமனே குற்ற உணர்வுடன் இருப்பதால் மட்டும், எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. இதில் நான் செய்யக் கூடியது என்பது நமது போதாமை மற்றும் முன்அபிப்ராயத்தை விட, இவ்விஷயங்களை அறிந்து கொள்வதிலுள்ள நமது குறுகுறுப்புக்கு முன்னுரிமை கொடுப்பதுதான். இந்நிலம் மறுபடியும் தானாக பேசத் துவங்கும் வரைக்கும், அமைதியாகக் கூர்ந்து அதை அவதானித்துக் கொண்டிருக்கப் போகிறேன். நடத்தப்பட்ட வன்முறைகளையும் தெரிந்து கொள்ளப் போகிறேன். இழந்த குரல்களை மீண்டும் உணரப் போகிறேன்.

 

ஜே.எம். கூட்ஸி :  ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேஸ் முப்பது வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். ஆனால் அர்ஜெண்டினாவுக்கு வெளியே உள்ளவர்களுக்கு, போர்ஹேஸ்தான் அர்ஜெண்டினிய இலக்கியத்திற்கு இன்னும் தலைமை தாங்கும் ஆன்மமாக உள்ளார். நீங்கள் போர்ஹேஸ்க்கு அடுத்த இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறை எழுத்தாளராக இருக்கலாம். நீங்கள் போர்ஹேஸ் -ஐ எப்படி உணர்கிறீர்கள்? போர்ஹேஸ் -ஐத் தலைமை தாங்கும் ஆன்மமாக நீங்கள் உணர்கிறீர்களா?

 

ஃபேபியன் மார்டினெஸ் : நான் எனது இளம் வயதில் போர்ஹேஸ் -ஐப் படிக்கவில்லை. அவரது எழுத்து துளைத்துக் கொண்டு உள்புக முடியாததாக இருந்ததும், அவரது பழமைவாதக் கருத்துகள், குறிப்பாக அர்ஜெண்டின உயர்வர்க்கத்தினருடன் (பூர்வகுடி மக்களின் படுகொலையால் பெரிதும் பயனடைந்தவர்கள்) அவருக்குள்ள தொடர்புகளும், என்னை எரிச்சலடையச் செய்தது.  ஆனால் சில வருடங்குக்கு முன்னர், எட்வின் வில்லியம்சன் எழுதிய அவரி்ன் வாழ்க்கை வரலாறு என்னை போர்ஹேஸ் -ன் அருகில் கொண்டு விட்டது. அவரை எழுத்தாளராக மீண்டும் மறுஅடையாளம் காண உதவியது. உதாரணத்திற்கு, ‘காப்காவும் அவரது முன்னோடிகளும்’  (Kafka and His Precursors) என்ற பிரதி என்னை மிகவும் கவர்ந்தது. இப்படியெல்லாம் இருந்த போதிலும், அவரை, அண்டோனியோ டி பெனிடெட்டோ  போலவோ, ஜுலியோ  கொர்த்தஸார் போலவோ, தலைமை தாங்கும் ஆன்மமாக நான் எண்ணவில்லை.

 

சமந்தா ஸ்வெப்லின்  :  போர்ஹேஸ்  என்னிடம் கொஞ்சம் காலதாமதமாகதான் வந்தடைந்தார். இடையில், அவருக்குப் பின் வந்த ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் உள்ளார்கள். அத்தலைமுறை எழுத்தாளர்கள்,  போர்ஹேஸ் – ன் புத்திசாலித்தனத்திற்கும் அவரது சந்தேகத்திற்கு இடமில்லாத முக்கியத்துவத்தையும் தாங்கி எதிர்கொண்டு நிற்க வேண்டி இருந்தது. நாங்கள் அந்தத் தலைமுறையினரின் வழித்தோன்றல்கள். அவர்களின் குழந்தைகள்.  போர்ஹேஸ் -ஐப் பற்றி, அனைத்துவிதமான முன்எச்சரிக்கையுடன்தான் நாங்கள் அவரை அணுகினோம்.  நீங்கள் உங்கள் தாத்தாவைப் பற்றி விவாதம் வரும் போது,  எவ்வளவு மரியாதையுடனும் எவ்வளவு ஆர்வத்துடனும் அதே நேரத்தில் இலகுத்தன்மையுடன் அதில் ஈடுபடுவீர்களோ, அப்படிதான் நாங்களும்  போர்ஹேஸ் -ஐ அணுகுவோம். இருப்பினும், அவரது மரபை, நாங்கள் எங்கள் இலக்கியத்தில், அனைத்து இண்டு இடுக்குகளிலும் உணரமுடியும். அர்ஜெண்டினிய கருத்துகளை, வடிவங்களை, மிகவும் விசித்திரமான அற்புதமான முறையில், துப்பறியும் கதைகளைச் சுற்றியும்,  Gaucho (அர்ஜெண்டினிய குதிரைவீர்களின் கலாச்சாரம்)  கதைகளைச் சுற்றியும், பிரமாதமாக அடர்த்தியாக சுண்டச் செய்தும், தேவையான அளவுக்கு வளர்த்தெடுத்தும், அதை இயல்பாகவே எங்களுக்கே எங்களானது என்று உணர வைத்தவர் அவர்.

 

பெட்ரோ மைரல் : இப்போதைய தலைமுறையினரைப் போல, போர்ஹேஸ் -உடனான எங்களது உறவு வெட்டிக் கொத்தும் அளவுக்குக் கடினமானது என்று சொல்ல முடியாது. கடந்த தலைமுறையாக  போர்ஹேஸ்  இருந்தாலும் எழுத வேண்டி இருந்தது. அவர் என் மீது எந்த நிழலையும் பாய்ச்சியதாக நான் உணர்ந்ததில்லை. அல்லது எழுத விடாது தடுப்பதாகவும் உணர்ந்ததில்லை. இதற்கு மாறாக, அவர் எங்களுக்கு எழுத உதவிகரமாகத்தான் இருந்தார். மொத்தத்தில்  போர்ஹேஸ்  எங்களுக்கு முக்கியமானவராக இருந்தார்; தொடர்ந்து முக்கியமானவராகவே இருந்தும் வருகிறார். அவர் ஒரு இலக்கியத் தந்தை என்பதைக் காட்டிலும், அவர் எங்களின் இலக்கியத் தாத்தாவாக உள்ளார். யாருக்கும் தாத்தாவுடன் பெரும் பிரச்னை வராது.  போர்ஹேஸ்  தனது புத்திக்கூர்மை மூலம் என்னை ஜொலிக்க வைத்தார். அவர் பல கதவுகளைத் திறந்து விட்டார். பல புது தலைப்புகளில் பேச வைத்தார். அவர் சரியான விஷயங்களை சர்வதேசிய தளத்திற்கு உயர்த்தி எழுத வைத்தார். அவர் ஏராளமான அறிவுஜீவிதமான பெருந்தன்மையுடன் திகழ்ந்தார். அவரை வாசித்தாலே, அவருடைய புத்திக்கூர்மையுடன் பங்கெடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அவர் தனக்கென்று சில கோட்பாடுகளைக் கொண்டிருந்தார்; அவரது தளங்கள் மிகவும் தெளிவானதாக இருக்கும்; அது நம்மை புதுச் சட்டகங்களைக் கொண்டு, மாற்றுவழிகளில் சிந்திக்கத் தூண்டும்.

 

ஜே.எம். கூட்ஸி : எழுத்தாளரது படைப்புகள் அன்னிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, வெளிநாடுகளில் பதிப்பிக்கப்படுவது, ஒரு ஏடாகூடமான வியாபாரமாகும். யாருடைய எழுத்து அப்படி மொழிபெயர்க்கப்பட்டு வெளிநாடுகளில் பதிப்பிக்கப் படுகிறதோ, அப்படிச் செய்யப்படுவதற்கு எழுத்தாளருக்குத் திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அனைவரும் ஒப்புக் கொள்வீர்கள் எனக் கருதுகிறேன். தற்போதைய அர்ஜெண்டினிய சககாலத்து எழுத்தாளர்களில் அதிகம் மொழியாக்கம் செய்யப்படுவது, சீசர் ஐரா (César Aira) படைப்புகள்தாம். இன்னும் சிறப்பாக வெளிநாடுகளிலும் அறியப்பட்டிருக்க வேண்டும் என நீங்கள் கருதும் எழுத்தாளர்கள் சிலரின் பெயரைச் சொல்ல முடியுமா? அத்துடன் அந்த எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல முடியுமா?

 

பெட்ரோ மைரல் : பல அர்ஜெண்டினிய கவிஞர்களின் கவிதைகளை மொழியாக்கம் செய்ய வேண்டுமெனக் கருதுகிறேன்.  ஜோக்வின்  கியானுஸி (Joaquín Giannuzzi), செர்ஜியோ ரைமோண்டி (Sergio Raimondi), ஃபேபியன் கஸாஸ் (Fabián Casas), ஓல்கா ஓரோஸ்கோ (Olga Orozco), யுவான் எல் ஓர்டிஸ் (Juan L Ortiz), எலனா அனிபாலி (Elena Annibali) போன்ற பலரைச் சொல்லலாம். கவிதைகளை மொழியாக்கம் செய்வது ரொம்ப கடினம். கதையாடும் புனைவுகளின்  கடினமான மேலோட்டை உடைப்பது, இப்போது ரொம்ப அவசியமான செயலாகும். அப்படி உடைக்காது விட்டால், சில நேரங்களில்  இலக்கிய முழுமையின் மாயையை உருவாக்கலாம். மற்ற மொழிகளில் உள்ள திண்ணமான தோராயமான விஷயங்கள் நமது மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த யுகம் அந்த பிராந்தியம் குறித்த அனுபவத்தை நாம் பெற முடியும்.

 

சமந்தா ஸ்வெப்லின்  : கடந்த சில மாதங்களாக நான் படித்தவைகள் கொண்டு, சிலரின் பெயரை மட்டும் இங்கு பரிந்துரைப்பது கடினம். இருப்பினும் எனது மனதுக்கு வரும் மகத்தான சமகால எழுத்தாளர் என்றால், அது மார்சிலோ ஹோகன் (Marcelo Cohen) தான். அவர் மிகவும் சிறப்பானவர் என்றாலும், அவரது படைப்புகள் போதுமான அளவுக்கு விரிவாக மொழியாக்கம் செய்யப்படவில்லை. நிறைய அர்ஜெண்டின இலக்கியங்கள் தற்போது மொழியாக்கம் செய்யப்படுகிறது என்று என்னால் தைரியமாகச் சொல்ல முடியும். அதுவும் கடந்த இரண்டு மூன்று வருடங்களில் ஏராளமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. உண்மையான பிரச்னை என்னவென்றால், மொழியாக்கங்கள் எவ்வளவு தூரம் பரவியுள்ளது, எவ்வளவு தூரம் சுற்றியுள்ளது என்பதுதான். ஏனெனில் இந்தப் படைப்புகள் சிறிய பதிப்பகங்களால் வெளியிடப்படுகின்றன. குறிப்பிட்ட அளவே அவைகள் அச்சிடப்படுகின்றன. இவைகளில் சில மொழியாக்கங்கள் ஆஸ்திரேலியாவுக்காகவும் தயாரிக்கப்படுகின்றன. இப்படித் தயாரிக்கப்படுபவைகளில், மிக அபூர்வமாய்தான் சில தயாரிப்புகள் மட்டுமே வியாபாரபூர்வமாய் சரியான அளவை எட்டுகின்றன.

 

ஃபேபியன் மார்டினெஸ் : இக்கேள்விக்குச் சரியாக பதிலளிக்கும் வகையில், போதுமான அளவுக்குச் சமகால அர்ஜெண்டின இலக்கியத்தை நான் படிக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் ஆங்கிலத்தில் தற்போது மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எண்ணற்ற படைப்பாளிகளை எனக்குத் தெரியும். உதாரணத்திற்கு சார்கோ பிரஸ் (Charco Press) பதிப்பகம் லூயிஸ் சஹாஸ்டி (Luis Sagasti), ஜோர்ஜ் கான்சிக்லியோ (Jorge Consiglio), கேபிரியேல் கேப்ஸோன் கமாரா (Gabriela Cabezón Cámara) போன்றவர்களின் படைப்புகளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அந்த மொழிபெயர்ப்புகள் மிகவும் அற்புதமானவை என நான் கருதுகிறேன். இந்தப் பதிப்பாளர், அரியானா ஹார்விஸ் (Ariana Harwicz) எழுதிய Die, My Love என்ற நாவலை மொழிபெயர்த்து, அது மேன் புக்கர் இன்டர்நேசனல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

ஜே.எம். கூட்ஸி : அர்ஜெண்டினா ராணுவ ஆட்சியின் கீழிருந்த பத்தாண்டுகள் நீண்ட நிழலை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகம் திரும்பிய பின்பும் கூட, எதுவும் நடக்காதது போல, தங்களது வேலையை எழுத்தாளர்கள் முன்னர் போல் பார்க்க இயலவில்லை. சர்வாதிகாரம் முடிவுக்கு வரும் போது, நீங்கள் அனைவரும் மிகவும் இளம் படைப்பாளிகள். அந்த ராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் நடந்தது உங்கள் நினைவில் இருந்து கொண்டு, அது உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறதா?

 

சமந்தா ஸ்வெப்லின்  : இது எப்போதும் தொடரும் கேள்விதான். காலம் கடந்தாலும், அதன் அடையாளங்களை நான் காணமுடிகிறது என்றாலும், இக்கேள்விக்கு என் முதல் எதிர்வினை அப்படியொன்றும் இல்லை என்று சொல்வதுதான். ஏன் அப்படிச் சொல்லத் தோன்றுகிறது என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் உள்ளது. இப்படித் தோன்றுவதற்கு எது காரணமாக இருக்கும் என்றால், அந்த மோசமான காலகட்டத்தால் நான் நேரடியாக பாதிக்கப்படவில்லை என்பதுதான். ஆனாலும் எங்களது குடும்பங்களும், எங்களது சூழலும், அந்த மாதிரியான அமைதிக்குள்ளும், அந்தமாதிரியான சட்டகங்களுக்குள்ளும், அம்மாதிரியான தெளிவற்ற எதிர்வினையாடி பயணித்துதான், தன்னைத் தற்காத்துள்ளன. ஆகவே அந்த மாதிரியான ‘வெளிகள்’ நான் எழுதும் அனைத்திலும் தவிர்க்க முடியாததாக ஏற்பட்டு விடுகிறது. அற்புதமான விசித்திரமான இம்மாதிரியான தனிமங்கள் எங்களது இலக்கியத்திற்குள் தொடர்வதற்கு, அந்த மாதிரியான அசுரனும் அந்த மாதிரியான கடந்த காலமும் இருந்ததே காரணம்.

 

ஃபேபியன் மார்டினெஸ் : நான் படகோனியாவில் இருந்த போது, சர்வாதிகாரத்தின் கீழ் என் காலத்தைக் கழித்தேன். படகோனியா வன்முறை மற்றும் சச்சரவுகளுக்கான மையத்தில் இருந்து ரொம்ப தூரத்தில் விலகித்தான் இருந்தது. அந்த கடுமையான காலங்கள், இன்னும் சில எனது நினைவுகளில் இருக்கத்தான் செய்கின்றன, அவைகள் எனது சில நாவல்களில் வெளிப்பட்டுள்ளன. ஆனால் தற்போது எனது இலக்கிய குவிமையம் என்பது, அர்ஜெண்டினா தனது பூர்வகுடி மக்களுக்கு எதிராக செய்த வன்முறையில் குவிந்துள்ளது. என்னைப் பொறுத்த வரை, அதுதான் மிகவும் அசலான வன்முறை; அதிலிருந்துதான் மற்ற அனைத்து வன்முறைகளும், சொல்லப் போனால் 70 மற்றும் 80களில் நடந்த வன்முறைகளும் கூட, ஜனிக்கின்றன.  அந்த எங்களது வரலாற்றை அர்ஜெண்டினா நேரடியாக எதிர்கொள்ளும் வரை, இதில் பாதிக்கப் பட்டவர்களிடம் பொதுவிடத்தில் மன்னிப்புக் கேட்கும் வரைக்கும், எங்கள் பூர்வகுடிகளைத் தண்டிக்கும் இன்றைய அநீதிப் போக்குகளை நிவர்த்தி செய்யும் வரைக்கும், இங்கே உண்மையான அமைதியைச் சாதிப்பது இயலாது என்றுதான் கருதுகிறேன். உங்கள் வீட்டு அடித்தளத்தில் டஜன் கணக்கில் பிணங்கள் விழுந்து கிடக்கும் போதும், உங்கள் விட்டுக் கூரையில் சில பிணங்கள் அழுகிக் கிடக்கும் போதும், யாரும் இங்கு அமைதியாக வாழ்ந்து விடமுடியாது.

 

பெட்ரோ மைரல் : 70-களில் பயமும் கொந்தளிப்பும் கலந்த இரண்டு தருணங்களை எங்கள் வீட்டில் அனுபவிக்க நேர்ந்தது. அர்ஜெண்டினாவில் நிருபராக இருந்த ஒரு இதழியலாளர் என் தந்தையின் நண்பராவார். அவரை அர்ஜெண்டினாவின் சர்வாதிகாரம் கைது செய்தது. வக்கீலான எனது தந்தையும் ஹேபியஸ் கார்பஸ் பேராணையின் படி சிறை செல்ல வேண்டியதாயிற்று. இதழியலாளருக்கு மோசமானது நடப்பதற்கு முன்னர் அவரை வெளிக் கொணர்வதில் என் தந்தை வெற்றியடைந்தார். எனது தந்தையின் மற்றொரு நண்பரின் வீடு, குடும்பத்தினர் வீட்டினுள் இருக்கும் போது, கெரில்லா குண்டு வீசப்பட்டு வீடு முழுவதும் சேதமாக்கப்பட்டது.  குடும்பத்தினர் பிழைத்துக் கொண்டனர் என்றாலும், கடுமையாக காயம் அடைந்தார்கள். அவர்களது இளைய எட்டு வயது மகன் முதலில் தேறினான். அவனது மற்றைய குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்ததால், அவனை எங்கள் வீட்டில் இருப்பதற்காக அழைத்து வந்தார்கள். அவன் படுக்கை அறையை என்னுடன் பகிர்ந்து கொண்டான். எனக்கு அப்போது ஒன்பது வயது. பயத்தால் அம்மா அவனுக்கு ஷாம்பு போடும் போது, கண்களை மூட மறுத்து விட்டான்.. அவன் கண் கரித்தாலும் பொறுத்துக் கொண்டான். எங்கள் வீட்டில் கவசக்கதவு உள்ளது என்றும், அது மிகவும் பாதுகாப்பானது என்றும் அவனுக்குக் கதைச் சொல்லி, அவனைச் சமாதானப் படுத்துவேன். ஒவ்வொரு இரவும் எனது எலெக்டிரானிக் விளையாட்டுகளை விளையாடிக் கொண்டே தூங்கிப் போவான். ஏனெனில், அப்படியாவது ஏதாவது வெளிச்சம் இருக்கும் என்று அவன் கருதினான். எனது பேட்டரி அனைத்தையும் அவனே பயன்படுத்தி, காலி செய்தான். அவனது உடல் முழுதும் இளஞ்சிவப்பு தழும்புகள் இருந்தன. அவனைப் பற்றி எழுதிய எதையும் நான் இன்று வரை பதிப்பிக்கவில்லை. எங்களைச் சுற்றி ஏதோ ஒருவிதமான பயம் ஒன்று இருந்தது இப்போதும் என் நினைவில் உள்ளது.

 

ஜே.எம். கூட்ஸி :  புலம்பெயர்ந்த அர்ஜெண்டினிய எழுத்தாளர்களின் இயல்பான வீடாக ரொம்ப காலமாக பிரான்ஸ் இருந்தது. ஆனால் பின்னர் அது தொடரவில்லை, மாறிவிட்டது. பிரான்ஸ், பிரெஞ்ச் இலக்கியம் மற்றும் கலாச்சாரம் தொடரந்து உங்களுக்கு அர்த்தப்பூர்வமாக உள்ளதா? ஜெர்மனியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அமெரிக்காவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

சமந்தா ஸ்வெப்லின்  : நான் முழுமையாக வளர்ந்த பிறகு படித்த புத்தகங்களில் பெரும்பான்மையானவை, வட அமெரிக்க எழுத்தாளர்கள் எழுதியவை. எனக்கு அப்புத்தகங்கள் பிடித்திருந்தன. நான் அப்புத்தகங்கள் குறித்து சிந்தித்துக் கொண்டே வளர்ந்தேன். உணர்வுப்பூர்வமாக அவைகளைச் சரியாகக் கற்றுக் கொண்டேன். அந்த மரபைப் பின்பற்றிச் சென்றது எனது தனிப்பட்ட தேர்வு என்று நான் நினைக்கவில்லை. தொண்ணூறுகளில் நான் புத்தகங்களை வாங்கத் துவங்கிய போது, அர்ஜெண்டினாவில் உள்ள 80 சதவீத புதிய பதிப்பாளர்கள் மொழிபெயர்ப்பைத்தான் வெளியிட்டார்கள். அவர்கள் வெளியிட்ட பெரும்பான்மையான மொழிபெயர்ப்புகள் அமெரிக்காவில் இருந்து வந்தவை. பிரெஞ்ச் இலக்கியம் ஒரு ஜீவத் துடிப்பை, கல்வி வெளிகளிலும், இலக்கிய முடுக்குகளிலும் ஏற்படுத்தியது போல் எனக்குத் தோன்றுகிறது. ஜெர்மன் இலக்கியம் அவ்வளவு பெரிய இருப்பை எங்கும் ஏற்படுத்தியதில்லை. நான் பெர்லினில் வாழ்ந்ததால், ஜெர்மன் இலக்கியத்தை ஒரளவுக்குத் தொடர்ந்தேன் என்று சொல்லலாம். சில குறிப்பிட்ட எழுத்தாளர்களைத் தவிர, ஜெர்மானிய இலக்கியம் ஆங்கில இலக்கியம் போல பரவலாக வாசிக்கப்படவில்லை.

 

பெட்ரோ மைரல் :  ஆங்கில கலாச்சாரமும் இலக்கியமும் என்னைப் பொறுத்த வரை, எனக்கு ரொம்பப் பொறுத்தமானது. 70-களில் பிறந்த எங்களது கலாச்சார அச்சு பிரான்சுக்கு மாறிச் சென்று விட்டது. 80-களில் அந்த அச்சு ஐக்கிய அமெரிக்கா நோக்கி நகர்ந்தது. மத்திய தர வர்க்கத்து அர்ஜெண்டினியர்கள் தங்களது குழந்தைகள் பிரெஞ்சுக்குப் பதிலாக ஆங்கிலம் கற்பதற்கு முக்கியத்துவம் தந்தார்கள். நான் முதலில் ஆங்கிலம்தான் கற்றேன்.. பின்னர் கொஞ்சம் பிரெஞ்சும் கற்றேன். நான் பிரெளஸ்ட் -ஐயும், செலின் -ஐயும் மொழிபெயர்ப்பில்தான் வாசித்தேன். போதலேர் எனது கவிதையில் சில தீர்க்கமான பாதிப்புகளை ஏற்படுத்தினார்.  ஆனால் தற்போதைய பல எழுத்தாளர்கள் படைப்பில், இவர்களின் கருத்துகள் வடிகட்டப்பட்டு உள்வாங்கப்படுகிறது.  நான் அப்போலினேர் மற்றும் தீவிர ஆளுமையான ஹல்லேபெக்  ஆகியோர் மேல் ஆர்வத்துடன் இருந்தேன். நான் பாரிஸில் இருக்கும் போது, நீதி மாளிகையின் முகத்தோற்றத்தில் உள்ள ‘விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற பொன்மொழிகளைக் கண்ட போது, நெகிழ்ந்து போனேன். ஏனெனில் எங்கிருந்து இந்தக் கருத்துகள் உருவானதோ, அங்கேயே அக்கருத்துகள் எனக்கு உணர்த்தப் பட்டதுதான் காரணம் என எண்ணுகிறேன்.

ஜெர்மன் கலாச்சாரத்தைப் பொறுத்த வரை, ஜார்ஜ் புச்னர் – ன் Woyzeck,  மற்றும் ஹெர்ஷாக் போன்ற திரைப்பட இயக்குனர்களின் படைப்புகளில் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

அமெரிக்கா என்னில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கதையாடலில் அங்கு கடைபிடிக்கப்பட்ட  “Show, don’t tell” என்னும் நுட்பமான கதை சொல்லல் பாணி என்ற கோட்பாடு என்னை மிகவும் கவர்ந்தது. மேற்பரப்பில் நின்று கொண்டு, ஆழக்கிடக்கும் சமுத்திர உணர்வுகளைக் கொண்டு வருவது என்னை மிரளவைத்தது. அந்த நுட்பத்தை ஹெமிங்வே  மற்றும் கார்வர் போன்றவர்கள் பயன்படுத்தினர்.   பீட் தலைமுறையினரிடம் இருந்து பெற்ற, மிகவும் இழந்து போன ஆனால் கவிதையின் நவீன கருத்துகளைக் கொண்ட வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் போன்ற கவிஞர்களிடம் இருந்து பெற்ற சில மாதிரியான வார்த்தைகளும் உயிரோட்டங்களும் கலந்த உற்சாக செயல்பாட்டில் நம்பிக்கை வைத்திருந்தேன்.

 

ஃபேபியன் மார்டினெஸ் : மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில், மொழிபெயர்ப்புகள் உண்மையில் எனக்குப் பெரும் எரிச்சலைத் தந்தன. அந்தக் காரணத்தினாலேயே, ஜெர்மன், பிரெஞ்ச் அல்லது வேறு இலக்கியங்களையோ மொழிபெயர்ப்பில் படிக்க மாட்டேன். ஸ்பானிய மொழிபெயர்ப்புகளைக் கூட படிக்க மாட்டேன். நான் அசலான் படைப்பை ஆங்கிலத்திலேயே படித்து விடுவேன். அதனால்தான் ஆங்கிலத்தில் வந்த அசல் இலக்கியப் படைப்புகள், அவைகள் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தாலும் சரி, இங்கிலாந்தில் இருந்து வந்திருந்தாலும் சரி, தென்ஆப்ரிக்காவில் இருந்து வந்திருந்தாலும் சரி, ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்தாலும் சரி, அது மற்ற இலக்கியங்களைக் காட்டிலும் எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

 

ஜே.எம். கூட்ஸி : இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எப்படி தங்கள் வருமானத்தை உறுதி செய்கிறார்கள்? எவ்வளவு நேரத்தை உங்கள் படைப்புகளுக்காகச் செலவிடுகிறீரகள்? எவ்வளவு நேரத்தை உங்களது இணைச் செயற்பாடுகளான இதழியல் கற்பித்தல் மற்றும் மொழிபெயர்ப்பு போன்றவைகளுக்குச் செலவிடுகிறீர்கள்? அர்ஜெண்டினிய அரசின் அமைப்புகள் எழுத்தாளர்களுக்கு ஏதாவது பொருளாதார ஆதரவு தருகிறதா? இந்தப் பரந்த உலகத்தின் கலாச்சார அமைப்புகள் ஏதாவது உதவுகிறதா?

 

சமந்தா ஸ்வெப்லின்  : நான் பெர்லினில் வசிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இதுதான். என்னுடைய எழுதும் நேரத்தை மீட்டெடுக்க அர்ஜெண்டினாவில் நாம் பார்க்கும் வேலையைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு நேர வேலையை ஜெர்மனியில் பார்த்தால் போதும். பொருளாதார நிலைமை தொடர்ந்து கவலை அளிப்பதாகத்தான் உள்ளது. தற்காலத்தில் எந்தவொரு எழுத்தாளரும் தங்களது புத்தகத்தைக் கொண்டே வாழ்ந்து விட முடியும் என்று நம்புவதில்லை. நாங்கள் அனைவரும் எங்கள் உண்மையான வேலையான எழுத்தை பராமரிப்பதற்காக, வேறு வேலை எதையாவது செய்து கொண்டிருக்கிறோம். உங்கள் வேலையை செய்து முடித்தபின், உங்களுக்கு எழுதுவதற்கும் போதுமான நேரம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் உங்கள் ஓய்வு நேரத்திலாவது, எழுத முடிய வேண்டும். எனது பெரும்பான்மையான எழுத்தாள நண்பர்கள், அதில் சிலர் அற்புதமான திறன் வாய்ந்தவர்கள், தாங்கள் எழுதுவதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று அறியும போது, மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.

 

ஃபேபியன் மார்டினெஸ் : நான் சில வியாபாரபூர்வமான மொழியாக்கம் செய்வேன். இலக்கிய மொழியாக்கம் உங்கள் செலவுகளை ஈடுகட்டப் போதுமான வருமானத்தை ஈட்டித் தராது. நீங்கள் இன்னும் பல வேலைகளைச் செய்ய வேண்டும். நான் காப்பீட்டு மனுக்கள், மருந்துகள் எடுத்துக் கொள்வதற்கான தகவல் பிரசுரங்கள், புரோஸ்டெட் அறுவைச்சிகிச்சைக்கான அறிவிப்புகள் என்று பலவற்றை மொழிபெயர்ப்பு செய்து தருவேன். இது தொடர்ந்து செய்ய வேண்டிய வேலை என்பதுடன், மிகவும் உற்சாகமற்ற வேலை. நான் காஃப்காவை நினைத்துக் கொள்வேன்.. காப்பீட்டு அலுவலகத்தில் அவர் செய்த  உற்சாகமற்ற வேலை, அதைத் தவிர்த்து தனது படைப்பு வேலைகளில் மூழ்க அவரைத் தூண்டுமாம். அதுதான் அவருக்கு கொஞ்சம் ஆசுவாமாக இருந்திருக்கலாம்.

 

பெட்ரோ மைரல் : அதிகமான புத்தகங்களைப் பதிப்பித்தால், எனது ராயல்டி அதிகரிக்கும் என்பது உண்மைதான். இது தவிர்த்து நான் வேறு வேலைகளும் செய்தால்தான், நானும் எனது மனைவியும் எனது குடும்பத்தை நடத்த முடியும். நான் இலக்கியப் பட்டறை நடத்துவேன், சில இதழ்களில் எழுதுவேன், சில திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதுகிறேன். பொதுவாக எனது நேரத்தை இரண்டாகப் பிரித்துக் கொள்வேன். பாதி நேரத்தை பணம் சம்பாதிப்பதற்காக செலவிடுவேன். பாதி நேரத்தை புத்தகங்கள் எழுதுவதற்காகச் செலவிடுவேன், அது எதிர்காலத்தில் எனக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கலாம். என்றாலும், அதை மட்டுமே கருத்தில் கொண்டு, இலக்கியத்தைப் படைக்க முடியாது.

அர்ஜெண்டினா தேசிய கலை நிதி என்ற அமைப்புகள் மூலம் பதிப்பக மானியம் தரப்படுகிறது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அது எப்படித் தரப்படுகிறது என்பது பற்றி எனக்கு நிச்சமாகத் தெரியாது.

எப்போதாவது எனது புத்தகம் நாட்டுக்கு வெளியே மொழிபெயர்க்கப்பட்டு விற்கப்படுகிறது. அப்போது கிடைக்கும் முன்பணம் சந்தோசம் அளிக்கும். அது முறையான வருமானம் என்பதற்குப் பதில், எதிர்பாராத வருமானம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆஸ்திரேலியாவிலுள்ள  அட்லெய்ட் க்கோ அல்லது பிரான்சிலுள்ள ரென்ஸ்க்கோ வரும்படி அழைப்பு வந்தால், நான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவேன்.  அப்போது எனது படைப்பாக்கத்திற்காக அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வதுடன், மற்ற கலாச்சாரத்தையும் மறுகண்டுப்பு செய்ய முயல்வேன்.

***

ஸ்பானிஷிலிருந்து ஆங்கிலத்தில் :  ஜெம்மா ஈவ்ஸ் 

தமிழில் : சொ பிரபாகரன்

நன்றி : சிட்னி ரெவ்யூ.