- கௌதம சித்தார்த்தன்
(என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் குறித்து வெளியிட்ட “ஹெராக்ளிட்டஸ் நதிக்கரை” நூலுக்காக எழுதிய முன்னுரை)
இந்த நூலுக்கு முன்னுரை வேண்டியதில்லை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், என் மொழிபெயர்ப்பு சார்ந்த எழுத்தியல் ஈடுபாடு குறித்து வாசகர்களுக்கு ஒரு விளக்கத்தை முன்வைக்கவேண்டும் என்று எண்ணியதன் விளைவு இந்தக் கட்டுரை.
1970 – 80 களில் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமாகி, தமிழ் இலக்கியத்தின் போக்கையே திசைமாற்றிய ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்களே என் வாழ்வின் ஆதாரசுருதி என்று சொல்வேன். என் பதின்பருவத்தில் அறிமுகமான புஷ்கின், லேர்மன்தோவ், குப்ரீன், தஸ்தயேவ்ஸ்கி, துர்க்கேனிவ், மரீனா ஸ்வெட்டேவா, நிகோலாய் கோகல், ஆன்டன் செகாவ், டால்ஸ்டாய், மாயகோவ்ஸ்கி, அன்னா அக்மதோவா, ஷோலகோவ், மாக்சிம் கார்க்கி.. என்று எல்லையற்று நீளும் எழுத்துச் சுழிகள் என் ரத்த ஓட்டத்தில் கலந்து உடையாத குமிழிகளாக இன்றுவரை மிதந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பிராயத்தில், இந்த எழுத்துக்கள் அளித்த அந்த மகத்தான அனுபவத்தை இன்று வரை வேறு எந்த எழுத்தும் ஏற்படுத்தியதில்லை. இந்த மகத்தான அனுபவத்தை எனக்குள் ஏற்படுத்திய மொழிபெயர்ப்பாளர்கள் ரா.கிருஷ்ணையாவும், பூ.சோமசுந்தரமும், என் ரத்தத்தோடு கலந்தவர்கள். என் சிறு கிராமத்திலிருந்து, நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தைத் தேடித்தேடி நகரத்தெருக்களில் அலைந்து திரிந்த அந்தப் பயணத்தில், வான் முட்டும் மாஸ்கோவின் கட்டிடங்களிலும், பீட்டர்ஸ்பர்க் நகரத் தெருக்களிலும், வெண்ணிறப்பனி படிந்த ஆலிவ் மரங்களின் சாலைகளிலும், டான் நதிக்கரையிலும், என் மிதிவண்டி சுழன்றோடிய நினைவுகளை கல்லறை வரை மறக்க முடியாது.
அப்பொழுதெல்லாம், நான் ஒரு பெரிய எழுத்தாளனாவேன், என் எழுத்தும் இந்த ரஷ்ய மொழியில் மொழியாக்கம் பெற்று வெளிவரும் காலம் வரும் என்ற – எவரிடமும் பகிர்ந்து கொள்ளமுடியாத – ரகசிய எண்ணங்கள், என் குருதி ஓட்டத்தில் கலந்து ஓயாமல் ஓடிக்கொண்டே இருந்தன. கடந்த வருடங்களில், ரஷ்ய மொழியில் நான் Column எழுதிய போது குருதி ஓட்டத்தின் விசை, வெற்றிக்களிப்பில் வீறு கொண்டது.
நான் தொழில்முறை மொழிபெயர்ப்புப் படைப்பாளி அல்லன்; முதன்மையாக நான் கதைஞன், கவிஞன், மற்றும் விமர்சகன். கடந்த 40 வருடங்களாக மொழிபெயர்ப்புப் படைப்புகளையே சுவாசித்து வாழ்ந்து வந்த எனக்கு மொழிபெயர்ப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டதில் வியப்பென்ன?
என் வாழ்வில் ரத்தமும் சதையுமாக இரண்டறக் கலந்து இயங்கும் கதை, கவிதை சொல்லலில் உள்ள ஈடுபாட்டின் மொழி விளையாட்டானது, நான் உலக இலக்கியப் பிரதி ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு கணத்தில், Challenging Game ஆக மாறி என்னை இழுக்கும். அக்கணம், களத்தில் பாய்ந்து இறங்கும் பாய்ச்சலில், வசமாக மாட்டிக் கொள்வேன். நான் மாட்டிக் கொண்டது, மொழியிடமா பிரதியிடமா அல்லது காலத்தின் ஓயாத திகிரியாய் சுழன்று கொண்டிருக்கும் வாசகனிடமா என்பது இப்போது வரை விளங்கவில்லை.
என் மொழிபெயர்ப்புப் படைப்பு என்பது, முதலாவதாக, என் எழுத்தியக்கத்தின் மீது வசீகரம் கொண்டு பின்தொடரும் வாசகனுக்காகவே. அடுத்தபடியாகத்தான், வரலாற்றுக்கு, சமூகத்திற்கு, மற்ற பொது வாசகனுக்கு. இந்த ரீதியில் செயல்படும் என் செயல்முறை குறித்து சுருக்கமாக இங்கு சொல்ல விழைகிறேன்.
பொதுவாகவே, மொழிபெயர்ப்பு விற்பன்னர்கள், தங்களுக்கென்று தனித்த ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டு அந்தப் பாதையில் செயல்படுவார்கள். உலகம் முழுக்க மொழிபெயர்ப்பு செயல்முறைகளுக்கென்று பல்வேறு விதமான கொள்கைகள் கோட்பாடுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். ஒவ்வொரு காலமாற்றத்திலும் அவற்றின் பரிமாணமும், பரிணாமமும் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றன. ஆகவே, அவற்றின் முதன்மையான அம்சங்கள் சிலவற்றை மட்டுமே இங்கு கோடிகாட்டலாம்.
மூலமொழியிலிருந்து சற்றும் பிறழாத வார்த்தைக்கு வார்த்தை துல்லியமான மொழியாக்கம். தமிழ் வாசகனுக்குப் புரிபடாமல் போய்விடும் என்று புரிகிற மாதிரி வார்த்தைகளை மாற்றிப் போடும் மொழியாக்கம், தமிழ்த்தன்மையோடு மாற்றி அமைக்கும் மொழியாக்கம், தழுவல் பாணியில் அமையும் மொழியாக்கம் என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அதுமட்டுமல்லாது, மூல மொழியில் உள்ள உருவகங்கள், படிமங்கள், குறியீட்டு உத்திகள் போன்ற அம்சங்களை தமிழுக்கு ஏற்ப மாற்றிப் போடுவது அல்லது மூல மொழிக்கு நேர்மை செய்வது, மூலமொழியில் இயங்கும் பண்பாட்டியலையும் சமூகவியலையும் மானுடவியலையும் சிதைவு படாது காப்பது அல்லது அலட்சியப்படுத்துவது, ஒரு சில வார்த்தைகளை, வாக்கியங்களை, பகுதிகளை தேவையில்லை என்று வெட்டி வீசுவது அல்லது வெறுமையுடன் ஒட்டிக் கொள்வது.. இப்படிப் பேசிக்கொண்டே போகலாம். இதில், மொழியாக்கத்துக்கான மேலைநாட்டுக் கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்படும் மொழியாக்கங்கள் குறித்து விவாதித்தால் ஆயுட்காலம் போதாது.
என் மொழியாக்கக் கோட்பாடு என்பது மிகவும் எளிமையானது.
வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்க்கும் தன்மை குறித்து இணையத்தில், ஓயாத தேடலில் அவதானித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், 20 ஆம் நூற்றாண்டின் நவீன இலக்கியத்தில் பெரும் புரட்சிகரமான செயல்பாடுகளை ஏற்படுத்திய பிரெஞ்சுக் கவிஞரும், சர்ரியலிஸம் என்ற வார்த்தையை உருவாக்க மூலகாரணமாக இருந்தவருமான அப்போலினேர் (Guillaume Apollinaire) எழுதிய ஒரு அற்புதமான கவிதை கிடைக்கப் பெற்றது.
Et que la grenade est touchante
dans nos effroyables jardens
முதலாம் உலகப் போரின்போது எழுதப்பட்ட போர் எதிர்ப்புக் கவிதையான இதன் சொற்பிரயோகங்களில் எதிரெதிர் அர்த்தம் கொண்ட இருபொருள் படும் ஒரு சொல்லை வைத்து அவர் கட்டமைத்திருக்கும் பாங்கும், கவிதை அழகியலும், கவிதைக்குள் ஊடாடும் பாசிச எதிர்ப்பு அரசியலும் இந்த 2 வரிகளில் மிக அற்புதமான உணர்வுகளை எனக்குள் ஏற்படுத்தியது. இந்தக் கவிதை போர் எதிர்ப்புக் கவிதைகளில் முதன்மையானதாக பேசப்படுவதில் வியப்பொன்றும் இல்லை. பிரெஞ்சில் Grenade என்றால், மாதுளம்பழத்தையும் சொல்லலாம். கையெறி வெடிகுண்டையும் குறிப்பிடலாம்.
உலகப்போரின்போது, கலைஞர்களையும், புரட்சிகரச் செயல்பாட்டாளர்களையும் தேடித்தேடிக் கொன்றது நாஜிப்படை. எங்கு மறைந்திருந்தாலும் விரட்டி விரட்டி வேட்டையாடியது. தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சக நண்பர்களே காட்டிக் கொடுக்கும் அவலம்,
சித்திரவதை பீதிகளில் சக நண்பர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மரண நிகழ்வுகள்.. இப்படிப் பல்வேறு கொடூரங்களை அந்தக் காலகட்டம் அனாயசமாக நிகழ்த்திக் கொண்டிருந்தது.
இந்தக் குரூரமான பாசிசப் போக்குக்கு எதிராக எழுதப்பட்ட இந்தக் கவிதையின் பாடுபொருள் இது: ‘ஒரு வினோதமான மாதுளம் தோட்டத்தில் நாங்கள் மறைந்திருக்கிறோம், அந்த மாதுள மரங்களில் பழுத்துத் தொங்குகின்றன மாதுளைகள். அப்படித் தொங்குபவை உண்மையில் மாதுளம் பழங்கள்தானா அல்லது கையெறி வெடிகுண்டுகளா..’ என்று கலங்குகிறான் கவிதை சொல்லி.
இப்படி இருபொருள்படும் சொல்லை வைத்து, எழுதியுள்ள இந்த சொற்பிரயோகங்களை சற்றே மாற்றிப் போட்டாலும் அந்த மொழிக்கட்டமைப்பும், உள்ளடக்கமும் சிதைவு படும். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கவனியுங்கள்:
How touching this fruit
In our strange and terrible gardens
இந்த 2 வரி ஆங்கில மொழிபெயர்ப்பு, Barbara Bray என்பவர் மொழியாக்கம் செய்ததற்கான குறிப்புடன், போர் எதிர்ப்புக் கவிதைகள் மற்றும் படைப்புகள் குறித்த ஒரு கட்டுரையின் இடையில் சொருகப்பட்டிருந்தது.
எனக்கென்னவோ, இந்த 2 வரி ஆங்கில மொழிபெயர்ப்பு சாதாரணமாக அமைந்திருந்தாற்போல் பட்டது. அதாவது, இருபொருள்படும் சொல் அழகு, ஆங்கில மொழியில் மிஸ்ஸிங்! அப்படி அந்த சொற் பிரயோகம் இல்லாமல் போனதால், முழுமையாக அந்தக் கவிதையின் கவித்துவ அழகியல் மாறி, அந்த வரிகள் மிகச் சாதாரணமானவையாக மாறிப்போய் விட்டன என்பதை உணர்ந்தேன்.
இந்த ஆங்கில மொழியாக்கத்தில் grenade என்ற வார்த்தையே வரவில்லை. அதுவே தவறு. மேலும், கவிதையின் வடிவவியலான, எதிரெதிர் அர்த்தம் கொண்ட இருபொருள்படும் சொல் அலகும் வரவில்லை. (ஆங்கிலத்தில், Oxymoron என்று அழைக்கப்படும் 19 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இந்தச் சொல்லணியை வைத்து ஜான் மில்டன், ஆல்பிரட் லார்ட் டென்னிசன், டபுள்யூ ஹெச் ஆடன், டைலன் தாமஸ், தாமஸ் கிரே போன்ற பல முக்கியமான கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.)
ஒருவேளை, முழுமையான கவிதை மொழியாக்கத்தில் அந்த சொல்லணி வந்திருக்கலாம். அதிலிருந்து வெட்டப்பட்ட இந்த 2 வரியில் அது இல்லாமலிருந்திருக்கலாம். ஆகவே, இந்தக் கவிதையின் முழுமையான மொழியாக்கத்தைத் தேடி ஒரு நீண்ட பயணம் போனது தனிக்கதை. அந்தப் பயணத்தில் கிடைத்ததற்கரிய செல்வமாக முழுக்கவிதையும், மூலத்திலும் ஆங்கிலத்திலுமாகக் கிடைத்தது. அப்போலினேரின் அதிகார பூர்வ மொழிபெயர்ப்பாளரான Anne Hyde Greet என்பவர், அதன் மூலத்தோடு இயைந்த கவித்துவ மொழிபெயர்ப்பை அற்புதமாகச் செய்திருக்கிறார்.
குறிப்பிட்ட அந்த 2 வரிகளை, இவரது மொழியாக்கத்தில் வாசியுங்கள்:
How touching is the grenadine
In our frightful gardens
சரி, கவிதையின் வாக்கியக் கட்டமைப்பு ஒழுங்கு, வடிவ நேர்த்தி மாறுபடும்போது, கவிதையின், மொழியின் அர்த்தச் செறிவு மாறுபடுகிற நிலையையும் (மிளிர்வு நிலை அல்லது தளர்வு நிலை) இதுபோன்ற தருணங்களில் உணரலாம்.
முதலில், வாக்கிய ஒழுங்கமைவு, மொழிக் கட்டமைப்பு என்பதெல்லாம் நவீன இலக்கிய மொழி சார்ந்து பல்வேறு விதங்களில் மாறுபடும், உடைபடும், சுழன்று திருகிய வாக்கியமாகவும் நிற்கும். ஆனால், அதன் அர்த்தச் செறிவு மாறுபடாமல் இருக்கிறதா என்பதே முக்கியம். ஒரு வாக்கியம் அது மூலத்தில் என்ன சொல்ல விரும்புகிறதோ, அதன் உள்ளடக்கம் பிறழாமல் வருவதுதான் முதன்மையானது என்னும் பார்வையில் உறுதியாக நிற்கிறேன் நான்.
அதாவது ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு அதன் உள்ளடக்கத்திற்கு ஏற்ப ஒரு மூலப் படைப்பின் வரிகளை மேலும் கீழும் மாற்றுவது, வார்த்தைகளை மாற்றுவது என்கிற போக்கில் பெரும்பான்மையான தமிழ் மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன – வருகின்றன. இதுகுறித்து பேசினால் தனியாக ஒரு புத்தக அளவுக்கு பக்கங்கள் நீண்டுகொண்டே போகும். இருந்தும் ஒரு சிலவற்றைக் கோடி காட்டலாம்.
கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் முற்றுப்புள்ளியே இல்லாமல் ஒரு நீண்ட ஒற்றை வாக்கியத்தில் ஒரு கதை (El último viaje del barco fantasma) எழுதினார். உலகமே அந்த டெக்னிக்குக்காக அவரைக் கொண்டாடியது. அடுத்து, அதை எப்படி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்போகிறார் என்று அவரது பிரதான மொழிபெயர்ப்பாளரான கிரகோரி ரபெஸ்ஸாவின் படைப்புக்காக உலகமே எதிர்பார்த்திருந்தது. உலக மக்களின் எதிர்பார்ப்பை சற்றும் வீணாக்கவில்லை ரபெஸ்ஸா. அந்தக் கதையை மூலத்தின் வடிவமைப்பையோ, அந்த டெக்னிக்கையோ சற்றும் சிதைக்காமல், அதேபோல முற்றுப்புள்ளி இல்லாமல் ஒரே வாக்கியமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்தார் (The Last Voyage of the Ghost Ship). உலகம் இந்த முறை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடியது.இந்தச் செயல்பாடு மொழியாக்கத்தின் உச்ச பட்ச சாதனை என்று நான் மட்டுமல்ல, உலகமே அவரைக் கொண்டாடியது. இந்தக் கதைக்கும், கதையின் வடிவமைப்புக்கும் மிகப்பெரிய அடிமை நான்!
அடுத்ததாக, இது தமிழ் மொழியில் நாகார்ஜுனனால் மொழியாக்கம் செய்யப்பட்டது. தமிழ் வாசகர்கள் எதிர்பார்த்தார்களோ இல்லையோ, மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கிடந்தேன் நான். ஆனால், ஏராளமான முற்றுப் புள்ளிகளோடும், வாக்கியங்களோடும், மூல வடிவமைப்பின் தன்மைகளற்றும் வெளிவந்தது (பைசாசக் கப்பலின் கடைசிப் பிரயாணம்).
அதேபோல, The Garden of Forking Paths என்னும் போர்ஹேஸின் கதை. என் குருவாக ஆராதிக்கும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர். இந்தக் கதை தமிழில் ‘குறுக்கு வெட்டுப் பாதைகளாலான தோட்டம்’ என்ற தலைப்பில் நாகார்ஜுனன் மொழிபெயர்த்திருந்தார். இதை சற்று விளக்கலாம். Forking Path என்பதை ‘குறுக்கு வெட்டுப்பாதை’ என்று பெயர்க்கிறார். இது சரியானதுதானா? ஒவ்வொரு வார்த்தையாகப் பார்க்கலாம்: Fork என்பது உணவு வகைகளைக் குத்தி எடுத்துச் சாப்பிடும் முட்கரண்டி. இது நான்கு முட்கள் கொண்ட மூன்று முகக் கரண்டி! போர்ஹேஸ், இதை ஒரு labyrinth ஆக வடிவமைக்கிறார். அவரது புகழ்பெற்ற ‘புதிர் வழிப்பாதை’ என்னும் படைப்பியல் உருவகம்!
நான் என் ‘காலப்பயண அரசியல்’ என்னும் நூலில் சொல்லியிருப்பது போல, “உலகத்தையே ஒரு பெரும் நூலகமாகப் பார்த்த போர்ஹேஸுக்கு labyrinth என்பது மூன்று முகம் கொண்ட முட்கரண்டி! காலம், வெளி, காலாதீதம் என்ற மூன்று முனைகளிலும் பயணம் போகும் metaphor!” என்ற வாக்கியம் இங்கு நினைவிலாடுகிறது. நான் என்னை போர்ஹேஸின் labyrinth லிருந்து வெளிவந்தவன் என்றுதான் சொல்லிக் கொள்கிறேன். இந்த labyrinth என்னும் metaphor ஐ Forking Path என்று முன்வைக்கிறான் போர்ஹேஸ்; அதை ‘குறுக்கு வெட்டுப்பாதை’ என்று மொழிபெயர்க்கிறார் நாகார்ஜுனன். வெல்டன்!
இதன் தொடர்ச்சியாக, மொழிபெயர்ப்பின் பிரதான விஷயமான படைப்பின் தலைப்புகளை மாற்றிப் போடும் சுதந்திரம் குறித்துப் பேசலாம்.
இந்த சுதந்திரம் என்பது மிகவும் sensitive ஆகக் கையாள வேண்டியது. மிகச்சரியான பதத்தில் இதை அணுகவேண்டும். உள்ளடக்கத்திற்கு ஏற்ப, கதையின் மையக் கருத்து பொருந்தி வருகிறாற் போல, அதன் ஆன்மா எங்கும் சிதைவு பாடாமல், அதை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தன்மையுடன் தலைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.
கடந்த 30 வருடங்களுக்கு முன்பு, நான் பதிப்பாளராக வெளியிட்ட இடாலோ கால்வினோவின் If on a winter’s night a traveler நாவலை, ‘குளிர்கால இரவில் ஒரு பயணி’ என்ற தலைப்பில் பெயர்த்த சா தேவதாஸ் மொழியாக்கத்தை இங்கு முன்வைத்து பேசலாம். அப்பொழுது, ஆங்கில மொழிப்பயிற்சியும், உலகளவிலான மொழியாக்கக் கூறுகள் மற்றும் மொழியியல் சார்ந்த பார்வை எதுவும் இல்லாத காலகட்டம். என் ஒரே சிந்தனை, தமிழ் இதழ்களில் வெளிவந்த கால்வினோவின் படைப்புகள் குறித்த அறிமுகத்தைக் கொண்ட அதி தீவிர உணர்ச்சி வேகம். நான் Invisible ஆக உணர்ந்து பெரிதும் ஆராதித்த கால்வினோவின் படைப்புகள். நான் நொட்டையிட்டுக் கொண்டு பார்த்த பின் நவீனத்துவ நாவல் அது!
நாவல் வெளி வந்ததும், பிரம்மராஜன் மற்றும் சிலரிடமிருந்து விமர்சனம் வரத்துவங்கியது. “அதன் தலைப்பே தவறாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது, If என்கிற பதத்தை விட்டுவிட்டு மொழிபெயர்த்திருக்கிறார்..” போன்ற விமர்சனங்கள். அவற்றை ஏற்றுக் கொள்ளவும் செய்யாமல், தள்ளியும் வைக்காமல் தமிழில் வெளிவந்த அனைத்து மொழி பெயர்ப்புகளையும் தேடிப்பிடித்துப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு விரிவான ஆய்வு முகத்தை நோக்கி என்னை நகர்த்திய அந்த விமர்சனங்களுக்கு நன்றி!
பரந்து விரிந்த அந்த ஆய்வில், எனக்குக் கை கொடுத்தவர் ரா.கிருஷ்ணையா. பரந்து விரிந்த ருஷ்ய இலக்கியங்களின் செழுமை மிக்க மொழியாக்கங்களில் மூழ்கி எழுந்தேன். தஸ்தயேவ்ஸ்கியின் White Nights என்னும் குறுநாவல், ‘வெள்ளை இரவுகள்’ என்ற தலைப்பிலோ, ‘வெண்மை இரவுகள்’ என்றோ மொழியாக்கம் செய்யப்படாமல், ‘வெண்ணிற இரவுகள்’ என்ற கவித்துவமான தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. வெள்ளை இரவுகள் என்பதை விட வெண்ணிற இரவுகள் என்ற தலைப்புக்குள் ஒரு கவித்துவமான உருவகமும், வாழ்வியலும் இருக்கிறது. புஷ்கின் தனது ‘படகுப்பயணம்’ என்னும் கவிதையில், தனது பயணத்தை ‘வெண்ணிறப் பயணம்’ என்று சொல்கிறார். மாஸ்கோ வெண்ணிறப் பனி படர்ந்த இரவுகளைக் கொண்டது.
தேவதாஸின் தலைப்பை மிகவும் கொண்டாட்டத்துடன் ஏற்றுக் கொண்டேன். அதுமட்டுமல்லாது, எனக்குள் வாசிப்பு பூர்வமான ஒரு சில மொழியாக்கக் கோட்பாடுகளை வகுத்துக் கொண்டேன். ஆம். படைப்பின் மையத்தை சிதைக்காமல், அதன் உள்ளடக்கத்திற்கு ஊறு விளைவிக்காமல், தலைப்பை இலகுவாக அழகுபடுத்தி – செழுமைப்படுத்தி வெளியிடுவது, ஒரு நல்ல மொழிபெயர்ப்பின் சிறப்புக்குரிய அம்சம். ‘குளிர்கால இரவில் ஒரு பயணியாய் இருந்தால்..’ என்கிற தலைப்பு ஆங்கில மொழியிலக்கணத்திற்கேற்ப, அந்த மொழியின் லாவகத்துக்கேற்ப சிறப்பாக அமைந்திருக்கலாம். ஆனால், இந்தத் தலைப்பில், தமிழ் மொழியின் இலக்கணத்திற்கேற்ப ஒரு தொக்கி நிற்கும் தன்மையும், வாக்கியம் முழுமை பெறாத ஏதோ ஒரு நெருடல் தன்மையும் இருந்து கொண்டே இருக்கிறது.
ஆகவே,தேவதாஸ் முன்வைத்த தலைப்புத் தேர்வை 90 சதவிகிதம், நான் ஏற்றுக் கொண்டேன். அப்படியானால், மீதி 10 சதவிகிதம்? அதைப் பற்றி விளக்க வேண்டுமெனில், அந்த நாவல் வடிவமைந்திருக்கும் ‘டெக்னிக்’ பற்றிப் பேசவேண்டும். ‘அந்த நாவலின் உள்ளடக்கமும், அதன் உணர்வுகளும், நாவல் முன்வைக்கும் வடிவமைப்பும், ஒரு முழுமை பெறாத நெருடல் தன்மை கொண்டது…’ ஆகவே, 10 சதவிகிதம் விமர்சகர்களின் பார்வையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது மொழிபெயர்ப்பின் தார்மிக அறம்!
எஸ். யசோதா மொழிபெயர்த்த பிரெஞ்சு நாவலாசிரியர் மிஷேல் க்விந்த் எழுதிய, ‘விசித்திரத் தோட்டங்கள்’ என்னும் நாவலின் ஆங்கிலத் தலைப்பு : In Our Strange Gardens. இது போல தலைப்பை சீவி அழகு படுத்துவது சிறப்பான ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.
அதேபோல, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்ததில் முன்னோடியாக விளங்கும் சிறப்புக் கொண்ட எஸ். பாலச்சந்திரன் மொழிபெயர்ப்பு செய்த ஸ்பானிஷ் நாவலாசிரியர் அகஸ்டோ ருவா பஸ்டோஸின் ‘போர் தொடர்கிறது’ என்னும் லத்தீன் அமெரிக்க நாவலின் ஆங்கிலத் தலைப்பு: Son of Man! இதை ஒரு மனிதனின் மகன் அல்லது மானுடனின் மகன் என்று மொழியாக்கம் செய்வதில் தனக்கு உடன்பாடில்லை என்கிறார் எஸ்.பா. கிறித்துவ மதத்தின் விவிலியத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த நாவலுக்கான தலைப்பை எடுத்து வைத்து, தலைப்பின் மாற்றம் குறித்த பார்வையை விரிவாக முன்வைக்கிறார்.
எனக்கு மிக மிக மிகப் பிடித்தமான காலம் மற்றும் வெளி என்னும் உருவகங்களில் பெரிதும் ஈடுபாடு கொண்டு இயங்கும் என் படைப்பு மனத்தில், மிக மிக மிக மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய துருக்கி நாவலாசிரியர் அகமத் ஹம்தி தன்பினாரின் ‘நேர நெறிமுறை நிலையம்’ நாவலை, அந்த அற்புதம் சிறிதும் குன்றாமல் எனக்குள் நிகழ்த்திய மொழிபெயர்ப்பாளர் எத்திராஜ் அகிலன், தமிழின் நவீன மொழிபெயர்ப்பு தளத்தில் மிக முக்கியமானவர். இதற்கு முந்தைய இவரது மற்றொரு நாவலான, A Mind at Peace என்ற நாவலின் தலைப்பை ‘நிச்சலனம்’ என்று தமிழ் மொழி இலக்கணத்தின் கவித்துவத்துடன் பெயர்த்துள்ளார், தி.அ.ஸ்ரீனிவாஸன்.
மேலும், விமர்சனமல்லாத வாசிப்பு ரீதியான என் பார்வைகள் சிலவற்றை இங்கு பதிவு செய்யலாம்.
மார்க்வெஸின் Chronicle of a Death Foretold என்ற குறுநாவலை ‘முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்னும் தலைப்பில் மிக அற்புதமாக மொழிபெயர்த்திருந்தார் அசதா. ஆற்றொழுக்கான மொழிநடையும், உள்ளடக்கத்திற்கு சற்றும் பிறழாத மொழிபெயர்ப்பும் – ஏற்கனவே, தமிழில் குதறியிருந்த மார்க்வெஸின் எழுத்துக்கு நேர்மையும் மரியாதையும் செய்யும் விதத்தில் அமைந்திருந்தது.
இவர் இதற்கு முன் மொழியாக்கம் செய்த மெக்ஸிக எழுத்தாளரான மரியானோ அஸூவெலா வின் ‘வீழ்த்தப்பட்டவர்கள்’ என்னும் லத்தீன் அமெரிக்க நாவலின் ஆங்கிலத் தலைப்பு: The Underdogs!
இந்த The Underdogs என்கிற வார்த்தைக்கான பதம், ஒரு எளிய நிலையில் இருப்பவர்கள் வெற்றி கொள்வது, ஒரு பெரிய வீரனுடன் ஒரு எளியவன் மோதும்போது, அவன் தோற்றுப்போய்விடுவான் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அந்த எளியவன் வெற்றி அடைவான். அவனை The Underdog என்று குறிப்பிடுவார்கள். இந்த ஸ்பானிஷ் நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கும் 3 மொழிபெயர்ப்பாளர்களும் இதே ஆங்கிலத் தலைப்பையே பின்பற்றியிருக்கிறார்கள். ‘எளிய மக்களான மெக்ஸிகப் பழங்குடிகளால் 1910 ல் வெடித்த மெக்ஸிகப் புரட்சியை முன்வைத்து எழுதப்பட்டது இந்தப் பிரதியின் மையம்’ என்பதும் இங்கே குறிப்பிட வேண்டியது.
அடுத்து, க.நா.சு., ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலை ‘முத்தண்ணா’ என்று உப தலைப்பு போட்டதும், இதில் வருகின்ற Big Brother என்ற அரசியல் உருவகம் கொண்ட (பெயர்ச்) சொல்லை முத்தண்ணா என்று மொழியாக்கம் செய்ததிலிருந்தும், மிகத் தொன்மையான கழக வெளியீடுகள், ஜோதிநிலையம் வகையறாக்களின் தழுவல்களையெல்லாம் விடுத்து, ஒரே தாவாக நவீன எழுத்துத் தளத்திற்கு வந்து விடலாம்.
மொழிபெயர்ப்பின் நவீன மறுமலர்ச்சிக் காலம், க்ரியா ராமகிருஷ்ணனின் க்ரியா பதிப்பகச் செயல்பாடுகளிலிருந்து துவங்குகிறது என்று சொல்வது மிகையாகாது. ஆல்பர்ட் காமுவின் அந்நியனிலிருந்து, சார்த்தர், காஃப்கா, போத்லெர், ழாக் ப்ரெவெர், செந்த் எக்சுபெரி, ஸீக்ஃப்ரீட் லென்ஸ், இயொனெஸ்கோ, பியரெத் ஃப்லுசியோ, பியர் பூர்தியு, ஜோஸ் வண்டேலு, ரே பிராட்பரி… என்று ஒரு நீண்ட நெடிய வரலாற்றை உருவாக்கியது. இந்தச் செயல்பாட்டின் முதன்மையானவராக திரு வெ.ஸ்ரீராம் அவர்களைச் சொல்லலாம்.
மற்றும், ச.மதனகல்யாணி, ஏ.வி.தனுஷ்கோடி, என். சிவராமன், டி.எஸ்.தட்சிணாமூர்த்தி, ஜி கிருஷ்ணமூர்த்தி, குமரன் வளவன்.. என்று கரங்கள் இணைந்து உருவாக்கிய வரலாற்றுச் செயல்பாடு அது! தமிழ் நவீன இலக்கிய எழுத்துக்கள் இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் தற்கால சீரிய எழுத்துக்களின் போக்கிற்கு விதை போட்டவை இந்த மொழியாக்கங்கள்! இதற்காக, தமிழ் நவீன இலக்கிய உலகம் இவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. முதன்மையாக வெ.ஸ்ரீராம் அவர்களுக்கு.
ஆல்பர்ட் காமுவின் L’Étranger என்ற பிரெஞ்சு நூலை பெரிதும் கற்றறிந்த அறிவார்ந்த பெருமக்களும் வாசகர்களும் நிரம்பிய ஆங்கில மொழியில், இருவேறு தலைப்புகளில் – The Outsider, The Stranger – மொழியாக்கம் செய்தனர். உலக இலக்கியத்தின் போக்குகளையே தங்களது வலிய மீடியா கரங்களால் திசை மாற்றிவிடும் வல்லமை கொண்ட ஏகாதிபத்திய ஆங்கிலமொழி முன்வைத்த இந்தக் குழப்பங்களை மீறி, காமு குறிப்பிடுவது அயலானையோ, அயல் பிரதேசத்திலிருந்து வந்தவனையோ அல்ல, அவன் ‘அந்நியன்’, ‘தன் இருத்தல் நிலையிலிருந்து அந்நியமானவன்’ என்று மிக அற்புதமாக மொழியாக்கம் செய்தவர் வெ.ஸ்ரீராம். காமுவின் அத்யந்த நண்பரான மாபெரும் தத்துவவியலாரான சார்த்தர் முன்வைத்த எக்சிஸ்டென்ஷியலிசம் என்னும் இருத்தலியல்வாதத்தை அடியொற்றி எழுதப்பட்ட 20 ஆம் நூற்றாண்டின் மகத்தான நாவல், அதன் சாரம் குன்றாமல் தமிழில் வெளிவந்தது.
இந்தத் திரியின் தொடர்ச்சியாக அடுத்த விஷயத்தைப் பார்க்கலாம்.
ழீன் பால் சார்த்தரின் புகழ் பெற்ற நாடகமான No Exit என்பதை, ‘மீளமுடியுமா?’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார் வெ.ஸ்ரீராம். சார்த்தரின் புகழ் பெற்ற தத்துவப் பார்வை கலந்த அந்த நாடகத்தின் உள்ளடக்கம், ‘(தப்புவதற்கான) வழியே இல்லை’ என்பதுதான். அதை, ‘மீளமுடியுமா?’ என்று சொல்வதன் மூலம், தப்பிப்பதற்காக வழி இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. இந்த நாடகம், அது பேசும் தத்துவம், அரசியல், மானுட வாழ்வு குறித்தெல்லாம் தீவிர வாசகர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள்.
மற்றபடி, தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு கொண்டு சென்ற ஒரு நூலையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்:
தமிழில் “கோவேறு கழுதைகள்’ என்ற பெயரில் வெளிவந்த இமையம் எழுதிய நாவல். இது, Beasts of Burden என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்றுள்ளது. மொழியாக்கம் செய்தவர் லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் என்பவர். இந்தத் தலைப்பு மிக மிகத் தவறானதாகவும், நாவலின் மையக்கருத்து முன்வைக்கும் பார்வைக்கு எதிரானதாகவும் இருக்கிறது.
Beasts of Burden என்றால் பொதி சுமக்கும் மிருகங்கள் என்று சொல்லலாம். பொதி சுமப்பவை கழுதைகள் மட்டுமே அல்ல. குதிரை, மாடு, எருமை..என்று பல்வேறு பிராணிகள் பொதி சுமக்கின்றனவே, நுட்பமாக கவனியுங்கள்: இந்த நாவல் சுட்டுவது, வண்ணார் என்னும் அடித்தட்டு மக்கள் சார்ந்த சமூகத்தின் வாழ்வியலை. வண்ணாருக்கும், கழுதைகளுக்கும்தான் வாழ்வியல் சார்ந்த ஆத்மார்த்தமான உறவு – தாத்பர்யம் இருக்கிறது. அதனால்தான், ஆசிரியர், அவர்களது அவல வாழ்வை ஒரு குறியீடாக உருவகப்படுத்தி, “கோவேறு கழுதைகள்’ என்று தலைப்புக் கொடுத்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சமூகம், தாங்களும் கழுதைகளாக மாறும் அவலத்தை, அதன் அவலச்சுவை குன்றாமல் அந்த நாவலில் சித்தரித்திருப்பார் ஆசிரியர். ஆனால், ஆங்கில மொழியாக்கத்தில், தலைப்பிலேயே அதன் உயிரோட்டத்தைக் கொன்று விடுகிறார் மொழிபெயர்ப்பாளர். இன்னும் அந்த மொழியாக்கத்தை நுட்பமாகப் பார்த்தால், குறைந்த பட்சம், Animals of Burden என்று தலைப்பு வைத்திருக்கலாம். மாறாக, Beast என்கிறார். அதாவது விலங்குகள் அல்ல. மிருகங்கள்! முழுமையாக நாவலின் ஆன்மாவையே படுகொலை செய்து விடுகிறார். வீட்டு விலங்குகள் அல்லது வீட்டுப் பிராணிகள் என்னும் அப்புராணிகளான, பரிதாபம் மிகுந்த கழுதைகள் என்னும் metaphor இந்தத் தலைப்பில் மிருகமாக மாறுகிறது.
இப்படிப் பல விஷயங்களை – பல மொழியாக்க விமர்சனங்களை சுட்டிக் காட்டிக் கொண்டே போகலாம். இவையெல்லாமே பொருட்படுத்தத் தக்க படைப்புகளின் மீதான சுட்டிக் காட்டல். பொருட்படுத்தத் தகாத எழுத்துக்கள் தமிழில் மலிந்து கிடக்கின்றன. அவை குறித்து எதுவும் பேச விருப்பமில்லை.
மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம் க.நா.சு.விடமிருந்து தொடங்குகிறது. அந்த நீண்ட பாரம்பரியத்தை தமிழின் சீரிய தன்மை கொண்ட நவீன இலக்கியத் தளத்திற்கு நகர்த்தி அதை மேலும் மறுமலர்ச்சியாக்கியவர் பிரம்மராஜன் என்று சொல்லலாம். டி.எஸ்.எலியட்டின் உலகப் புகழ் பெற்ற Waste Land கவிதையை ‘பாழ் நிலம்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்து, தமிழின் செவ்வியல் தன்மைக்குப் பெருமை சேர்த்தவர். இதன் தொடர்ச்சியாக இன்னொரு விஷயத்தையும் இங்கு பார்க்கலாம்.
உலகப்புகழ் பெற்ற இந்தக் கவிதையை செம்மை (edit) படுத்தியவரான நவீன கவிதையாளரும் மாபெரும் விமர்சகருமான எஸ்ரா பவுண்டின் மொழியாக்கங்கள் (குறிப்பாக: சீனமொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு) குறித்து உலகம் முழுவதிலும் கடுமையான விமர்சனங்கள் வெளிவந்திருக்கின்றன. The Pound Error என்ற தலைப்பில் நியூயார்க்கர் இதழில் கட்டுரை வெளிவந்தது. Modernist Scandals என்று அவரது மொழியாக்கத்தைச் சாடினர். “பவுண்டின் அசல் படைப்பையும் அவரது மொழிபெயர்ப்பையும் தனித்தனியாகக் கருத்தில் கொள்ள வேண்டும்..” என்று எலியட் எழுதினார்.
அவை மொழிபெயர்ப்புகள் அல்ல மொழிபெயர்ப்பு – தழுவல்கள் (translations-adaptations) என்று இன்னொரு சாரார் அவரது மொழி பெயர்ப்புப் பாணிக்கு ஆதரவாகக் களமாடியதும் வரலாறு.
“மொழிபெயர்ப்பின் தன்மையுடன் பவுண்டின் மல்யுத்தம் 20 ஆம் நூற்றாண்டில் வசன மொழிபெயர்ப்பின் வரையறை மற்றும் இலட்சியங்களை மாற்றியமைத்தது, அவருடைய மொழிபெயர்ப்புகள் நவீன ஆங்கிலம் மற்றும் அமெரிக்கக் கவிதைகளை புதுப்பித்து தலைகீழாக மாற்றியுள்ளன..” என்கிறார்கள் தற்கால இளந்தலைமுறை விமர்சகர்கள்.
“காலம், மற்றும் மொழி இடர்பாடுகள் கொண்ட பிரதிகளினூடே செயல்படும் மொழிபெயர்ப்பாளர், வார்த்தைகள் மற்றும் வாக்கியக் கட்டமைப்புகளிலிருந்து வேறுபடுவது மட்டுமல்லாமல், சந்தர்ப்ப சூழ்நிலை அமையும்போது அவை இரண்டையும் கைவிடுவதற்கான
சுதந்திரத்தையும் கூட எடுத்துக் கொள்கிறார்; மற்றும் தான் விரும்பியபடி, அசலில் இருந்து சில பொதுவான குறிப்புகளை மட்டும் எடுத்து. புதியதொரு பிரதியை உருவாக்கம் செய்கிறார். ஒருவகையில் இந்தச் செயல்பாட்டைத்தான் நவீன மொழி இலக்கணத்துடன் நிகழ்த்தியவர், என்று பவுண்டைச் சொல்லலாம்..” என்று கொண்டாடுகிறார்கள் அவர்கள்.
எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் போன்ற வாக்கியச் சொல் அமைப்பு விதிகளின் வரிசையை மாற்றிப்போட்டு, ஒரு புதிய பாணியை நவீன தமிழில் உருவாக்க முனைந்த நாகார்ஜுனனின் நினைவு இங்கு வருகிறது.
“நம் சமகால உலகில், ஒரு விஷயத்தின் தேர்வை நீங்கள் எங்கு தொடங்குகிறீர்கள் என்பது முக்கியமில்லை, உங்கள் தொடக்கப் புள்ளியை மீண்டும் வந்து அடையும் வரை, நீங்கள் தொடர்ந்து செயல்படும் வரை, நீங்கள் ஒரு கோளத்தில் அல்லது ஒரு கனசதுரத்தில் தொடங்குகிறீர்கள்; நீங்கள் எல்லாப் பக்கங்களிலும் இருந்து பார்க்கும் வரை, அது தொடர்ந்து இருக்க வேண்டும்…” என்கிறான் எஸ்ரா பவுண்ட், தனது A B C of Reading நூலில்.
***
முன்னுரையின் இறுதியாக, முன்னுரையின் முதல் பகுதிக்கு வருகிறேன்.
“பிரெஞ்சு கவிஞரான அப்போலினேரின் அந்த மாதுளைக் கவிதையை,
நான் தமிழில் மொழியாக்கம் செய்தால் எவ்வாறு இருக்கும்?”
முதல் வேலையாக, அவரது Calligrammes: Poems of Peace and War 1913-1916 (Tr.Anne Hyde Greet) என்ற இருமொழித் தொகுப்பு நூலை அமேஸான் தளத்தில் வாங்கினேன். தொகுப்பின் கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தபோது, இன்னொரு கவிதை என்னைச் சலனப்படுத்தியது. அது, Southward! இந்தக் கவிதை மாதுளைக் கவிதையின் தொடர்ச்சி அல்லது அதன் கருத்துருவத்தை முன்வைத்து எழுதப்பட்ட கவிதைக் கண்ணி என்பதை உணர்ந்த கணத்தில், அந்தக் கண்ணியில் என் கால்கள் மாட்டிக் கொண்டன.
முதலில், இந்தக்கவிதையை தமிழில் உள்வாங்கிக்கொண்டுதான் அடுத்த கவிதைக்கு நகர முடியும் என்பதை clear-cut ஆகச் சொல்லியது. clear-cut க்குத் தமிழில் என்ன, தீர்க்கம்? திட்ட வட்டம்?
***
தெற்கு நோக்கி
– குய்லூம் அப்போலினேர்
அந்த முடிவற்ற தோட்டங்களின்
வான்முகட்டில்
மோதித்தெறிக்கும் இரங்கற்சொற்களை
ஆகாயத்தின் நீலமாகத் தேம்புகின்றன தேரைகள்
அன்பின் ரணம் பாடும் வானம்பாடியை
மானின் மருட்சியுடன் கடக்கிறது நிச்சலனத்தின் பீதி.
உன் உடலின் சிதைந்த ரோஜாக்களை ஒன்று கூட்டுகிறேன்
மாதுளை மரத்தில் தொங்குகின்றன நம் இதயங்கள்
மேலும் நம் கண்களில் விழும் மாதுளம் பூக்கள்
தோட்டத்தின் குறுக்கு வெட்டுப் பாதைகளில் சிதறுகின்றன
***
‘தெற்கு நோக்கி’ என்பது பலிபீடத்தை நோக்கியபடி இருக்கும் திசை என்று அடையாளப்படுத்தப்படும் மேலைத்தேயச் சொல்லணி. (வடக்கிருந்து உயிர் நீத்தல் என்று இந்திய ஆன்மிக மரபில் போற்றப்படும் வடதிசை என்னும் சொல்லணி போல, அதன் எதிர் அர்த்தம் கொண்ட சொல்லணி)
இப்பொழுது ஒரு நல்ல முன் அனுபவத்துடன் மாதுளைக் கவிதைக்குப் போகலாம்.
மாதுளம் பழத்திற்கு ஆங்கிலத்தில் Pomegranate என்று பெயர், ஆரம்பகால ஆங்கிலத்தில் Apple of Grenada என்று அறியப்பட்டது. பிரெஞ்சில் இது Grenade என்று அழைக்கப்படுகிறது. லத்தீன் நாட்டுப்புற சொற்பிறப்பியலின் அடிப்படையில் இந்தப் பெயர் வந்ததாக விக்கிப்பீடியா சொல்கிறது. Grenade என்னும் கையெறி குண்டின் தோற்றமும் மாதுளையினுள் பொதிந்துள்ள விதைகள் போன்ற உள்வடிவமைப்பு போல இருப்பதாலும் அந்தப்பெயர் வந்ததாக கையெறி குண்டின் வேர்ச்சொல் ஆய்வு தெரிவிக்கிறது.
இதெல்லாவற்றையும் விட அடுத்து வருவதுதான் கவிதை ஆக்கத்திற்கு முக்கியமானது.
பண்டைய காலங்களில் மாதுளைகள், பல்வேறு தேசங்கள் சார்ந்த பல்வேறு மானுட வாழ்வியல் சார்ந்த பண்பாடுகளின் பல்வேறு அடையாளங்களாகக் கருதப்பட்டன. பண்டைய யூதம், கிரேக்கம், ஹீப்ரு, எகிப்து, ரோமன், பெர்சிய கலாச்சாரங்களில், கடவுளுடன் தொடர்புடையவையாக மாதுளைகள் இருந்தன. ஆனால், காலமாற்றத்தில், மாதுளை, மதங்களின் ஆக்கிரமிப்பில் மத அடையாளங்களாக மாறின. புகழ்பெற்ற பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர் ழாக் தெரிதா, தனது Die Religion என்னும் நூலில் மாதுளையின் மத அடையாளத்தை விரிவாக விளக்குகிறார்.
யூத மதத்தில் இது பெரும் பங்கு வகிக்கிறது. யூதர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டமான Roch Hachana என்னும் விழாவில் மாதுளையை உண்ணும் உணவுச் சடங்குகளைக் கொண்டாடுகிறார்கள். 613 விதைகளை உள்ளடக்கிய மாதுளை உணவை உண்கிறார்கள். இதன் தாத்பர்யம்: ‘மோசஸுக்கு கடவுளால் அருளப்பட்ட 613 கட்டளைகள்’. அதாவது, யூத மதத்தின் ரபினிக் பாரம்பரியத்தின்படி, கடவுளால் மோசஸுக்கு அனுப்பப்பட்ட தெய்வீக போதனையானதென்று, தோரா என்ற நூல் தொகுப்பில் சொல்லப்படுகிறது. தோரா என்பது, யூத மற்றும் கிறித்துவ விவிலியத்தின் முதல் 5 நூல்களைக் கொண்டது. அதில் உள்ள புனிதச் செய்தியான 613 கட்டளைகளுக்கும் மாதுளை விதைகளுக்குமான தாத்பரியத்தை தோரா உணர்த்துகிறது.
இங்கு கட்டுரையின் சுவாரஷ்யம் கருதி ஒரு விஷயத்தைப் பகிர்கிறேன்.
1980 களில் பெரும் புகழ்பெற்ற ஹாலிவுட் படமான Raiders of the Lost Ark படம் குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள், ஸ்டீவன் ஸ்பீல்பீர்க்கை உலகளவில் கவனப்படுத்திய படம். அதில், புதையலைத் தேடி அலையும் சாகச நாயகனான, அமெரிக்க தொல்பொருள் ஆய்வாளர் இன்டியானா ஜோன்ஸும் மற்றும் வில்லன் குழுவினரும் ஒரு வழியாய் இறுதியாக புதையலைக் கண்டுபிடித்து எடுப்பார்கள். அந்தப் பேழையை உடைத்து, திறந்து பார்த்தால், உள்ளே வெறும் மண்தான் இருக்கும். அந்த மண்ணை அள்ளி எடுத்து ஏமாற்றத்துடன் வீசியெறிவான் வில்லன். அக்கணத்தில், அந்த இடமெங்கும் பூகம்பம் போல வெடித்து, இடிந்து, மனித உருவங்கள் சிதைந்து, தசைகள் தீயில் பட்டாற்போல ஒழுகி, ஒரு பெரிய disaster ஏற்படும்.
இந்தப் படம் என் சிறு வயதில் பார்த்தபோது மிகப்பெரும் வீரதீர சாகச உணர்வுகளை எனக்குள் ஏற்படுத்தியது. பொதுவாகவே, நம் தமிழ் மசாலா திரைப்பட சிந்தனைகள் சார்ந்த கண்ணோட்டத்தில், ‘புதையல் தேடும் பயணம்’ என்பதாகத்தான், நான் மற்றும் தமிழ் சார்ந்த அனைவரும் நம்பியிருந்தோம். விஷயம் அதுவல்ல. கடந்த பல வருடங்களுக்கு முன்பு, இந்தப் படத்தை மீண்டும் பார்த்தபோது, ‘தங்கம் எப்படி மணலாக மாறும்’ என்ற கேள்வி எனக்குள் உறுத்திக் கொண்டே இருக்க, இந்தப் படம் குறித்த நீண்ட தேடலில் இறங்கினேன்.
யூத மற்றும் கிறித்தவ விவிலியத்தின் தோராவில் இரண்டாவது நூலாக இடம் பெறும் யாத்திராகம நூலின்படி, ‘கடவுள், மோசஸுக்கு பத்துக் கட்டளைகள் தந்தருளுகிறார்’. அவை கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள். அவற்றை ஒரு பேழையில் வைத்து காலங்காலமாகப் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள் சம்பந்தப்பட்ட மதக்குழுவினர். காலச் சுழல்வில், அந்தப் பேழை எங்கோ மறைந்து விடுகிறது. அதை மையமாக வைத்துத்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும், அந்த 10 கட்டளைகளையும் தேடித்தான் தொல்பொருள் ஆய்வாளர்களும், தொல்பொருள் வேட்டைக்காரர்களும் அலைந்து திரிந்து கண்டு பிடிக்கிறார்கள் என்பதையும் உணர்ந்தேன். ஹாலிவுட்காரர்கள் பாப்புலரான படம் எடுத்தாலும் அதற்குள் அற்புதமான வரலாற்று ஆவணங்களை சான்றாக வைத்து, அந்தப் படத்திற்கு ஒரு கிளாசிக்கல் அந்தஸ்தை உருவாக்குவார்கள் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
இப்படியான கண்ணோட்டத்தில், அந்த அப்போலினேரின் கவிதையை நோக்கினால், அவர் அந்த மாதுளை என்னும் metaphor க்கு 2 உருவகங்களை மட்டும் தரவில்லை. 3 வதாக ஒரு உருவகத்தையும் கவிஞனுக்கே உரித்தான பூடகத்துடன் வழங்கியுள்ளார். அது மத எதிர்ப்புச் சிந்தனை! ஆம், மாதுளை என்பது, கையெறி வெடி குண்டு மாத்திரம் அல்ல. அது மதங்கள் ஆராதிக்கும் மத அடையாளச் சிந்தனை. ஆக, ஒரு புரட்சிகரக் கவியுள்ளம் கொண்டவன், போர் எதிர்ப்பாளன், சர்ரியலிசக் கோட்பாட்டாளன், தங்களது தோட்டங்களில் அசையும் மாதுளையை இப்படியாகத்தான் முன்வைத்திருப்பான்..!
தமிழ்ச் சூழலில் மாதுளையின் பங்கு என்ன என்பதை நோக்கலாம். மாதுளை ஓர் இனிய கனி. மட்டுமல்லாது, அது ஒரு கவிப்பா அழகியல் சொல்லாக – ‘மாதுளையில் பொதிந்திருக்கும் விதை முத்துக்கள் போல, கண்ணகியின் காற்சிலம்பில் பொதிந்திருக்கும் மாணிக்கப் பரல்கள்’ என்ற அழகியல் சொல்லாக – சிலப்பதிகாரத்தில் வருகிறது.
அரசின் அநீதிக்கு எதிராக ஒரு எளிய பெண்மணியின் குரலாக ஒலித்த சிலப்பதிகாரத்தின் ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்ற மகத்தான வரியிலிருந்து நாம் ஆரம்பிக்கலாம். பாசிச அரசுகள், தங்கள் எதேச்சதிகாரத்தால் எளிய மக்களை ஒடுக்கும் போது, வரலாறு என்னும் அறம் கூற்றாகிறது.
மன்னனுக்குரிய இடம் என்னவென்பது காலம் தோறும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. புறநானூற்றுக் காலத்தில் மன்னனை உயிராகவும், மக்களை உடம்பாகவும் காட்டப் பெற்ற கருத்துருவை, பின்னால் வந்த கம்பன் மாற்றுகிறான். ராமாயணத்தில் தசரதச் சக்கரவர்த்தி நாட்டைப் பரிபாலனம் செய்யும் சிறப்பைப் பற்றி,
வயிரவான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்
செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்…
– கம்பராமாயணம் (பாலகாண்டம் – அரசியற் படலம் -177)
மக்கள் உயிராகவும் மன்னன் உடம்பாகவும் மாற்றப் பெற்று, மக்களாட்சிக்கு வித்திட்ட முன்னோட்டத்தின் புரட்சிகரமான கருத்தை
9 ஆம் நூற்றாண்டில் உருவாக்கி வைக்கிறான் கம்பநாடன்.
இப்படியான நற் சொற்களை காதாரக் கேட்கும் நிலை குறித்து வள்ளுவன் சொல்வது ஈண்டு நோக்கவேண்டும்.
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. குறள்-418
‘நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி, கேட்பினும் கேளாத் தகையவே..’ என்று, பரிமேலழகரிலிருந்து மு.வரதராசனார் வரையிலான உரையாளர்கள் இயம்புகிறார்கள். இதில் மிக முக்கியமாக அவதானிக்க வேண்டியது. ‘துளைக்கப்படாத செவி’ என்னும் சொல்லாக்கத்தை. இதில் மணக்குடவரின் உரையில், ‘துளை’ என்கிற சொல்லுக்கு ‘துளை’ என்பது வெறுமனே துவாரம் மட்டுமல்ல. அது ஒரு ஊடுருவல். ஊடுருவிச் சென்று உங்களை தனது கருத்துக்களால் சலனப்படுத்துவது..’ என்கிறார்.
துளை என்பதை அகராதிகள் இப்படிப் பொருளர்த்தம் சொல்கின்றன:
துளை – துவாரம், பிலம், அதலபாதாளம், (Verb) துளைத்தல், ஊடுருவுதல்,
மனிதர்களை விழுங்குதல்..
“சரி, இதனாலேயே துளை என்பதை சித்திரவதை என்னும் கருத்துருவிலோ, மனிதத்திற்கு எதிரான ஆயுத உருவகமாகவோ அனுமானிக்க முடியாது. ஏனெனில், காதுகளில் மூக்கில், உடலில் ஆபரணம் அணிந்து கொள்ளத் துளை போடுவதும் கூட, ‘துளை’ தானே!” என்றொரு வினாவை நீங்கள் எழுப்பிவீர்களேயானால், ஆஹா, இதற்குத்தானே காத்திருந்தேன் வாசகா…!
1887-ல் கபிஸ்தலத்தில் தோற்றுவிக்கப்பட்ட ‘சூத்திர சீர்திருத்த சபை’ திராவிட இயக்கங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய இயக்கம் எனலாம். தமிழ்தொல் கலாச்சாரமாக கருதப்படும் ‘தொள்ளைக்காது’ அல்லது ‘காது வளர்ப்பது’ என்னும் கலாச்சார நிகழ்வு நடைமுறையில் இருந்த காலகட்டம். பெண்கள் காதுகளில் போட்டுக் கொள்ளும் ஆபரணங்கள் காதுகளை வளர்க்கும், அதாவது, கீழ்நோக்கி இழுத்துப் பெரிதாக்கும் நடைமுறை இருந்த காலகட்டம். காது வளர்த்தல் என்பது, காதில் ஓட்டை போட்டு அதில் கனம் மிகுந்த ஆபரணத்தைத் தொங்கவிட்டால், காதின் கீழ்ப்பகுதி நீளமாக வளர்ச்சி கொள்ளும். பெண்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஓருபாயமாக ஆண்கள் இதைக் கையாண்டார்கள். பெண்கள் இதைச் செய்யும்போது, மிகுந்த உடல் ரீதியான சித்திரவதைக்கும், மன ரீதியாக தங்களது பெண் என்னும் பால் பேதப்படி, அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டியது என்னும் உணர்வுகளுக்கும் ஆளாவார்கள். இந்தப் பழக்கத்தை புனிதப்படுத்த வேண்டி, பெண்களை உயர்த்திக் சொல்லும் விதமாக, ‘குறிப்பிட்ட சாதி அந்தஸ்து கொண்டவர்கள்தான் இதை அனுஷ்டிக்க வேண்டும்..’ என்ற நடைமுறை இருந்து வந்தது. 19ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் வின்சுலோ தயாரித்த அகராதியில், ‘தமிழ்நாட்டில் எந்தெந்தச் சாதி மக்கள் காது வளர்க்கும் வழக்கம் உடையவர்கள்’ என்பதைப் பட்டியல் இடுகிறார். இந்த உயர்சமூக அந்தஸ்துக்கு எதிராகவும், அடிமை உணர்வுகளை மாற்றும் விதத்திலும், இந்தப் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானித்த சூத்திர சீர்திருத்த சபை, ‘தொள்ளைக்காது ஒழிப்பு இயக்கம்’ என்று ஒரு இயக்கம் நடத்தியது. இது பற்றிய ஆவணத்தை உன்னதம் இதழில் வெளியிட்டுள்ளேன்.(உன்னதம் எண் 18, 2008)
காது வளர்ப்பது என்பதை, தொள்ளைக்காது என்று குறிப்பிடுவார்கள். ‘தொள்’ என்றால், ‘துளை’ என்று பொருள். தொள்ளை (தொல்லையின் மரூஉ) என்றாலும் துளைதான்.
மற்றபடி, நற்காரியங்களுக்குப் போடப்படும் துவாரத்தை ‘நுழை’ எனவும், மற்றவற்றை ‘துளை’ எனவும் அழைப்பார்கள். நுழைதல் வேறு, துளைதல் வேறு. நுண்ணிய சிறந்த பல நூல்களில் நுழைந்து கற்ற கல்விமான், ‘நுண்மான் நுழைபுலம் கொண்டவர்’ என்று அழைக்கப் படுகிறார். கன்னக்கோலால் சுவரைத் துளைத்து கன்னமிடுபவர், ‘கன்னத்துளைக் கள்வன்’ எனப்படுகிறார். ‘துப்பாக்கிக் குண்டு துளைக்கிறது’ என்பதுதான் வழக்கு. இப்படி ஆவணங்களை நீட்டிக் கொண்டே போகலாம். நாளடைவில், இந்த நுழை மற்றும் துளை ஆகிய இரு சொற்களும் கலந்து வழக்குத்திரிந்து போயின என்பது வேறு விடயம்!.
மிக்க மகிழ்ச்சி நண்பர்களே, மிக விரிவாகவே ஆய்வு செய்து விட்டோம்.
இனி மொழியாக்கம் செய்யலாம்:
எங்கள் பயங்கரத் தோட்டத்தில்
காய்த்துத் தொங்குவது மாதுளையா? மா துளையா?
***
கவிதையின் முழுமையான வடிவம்:
மருட்சியூட்டும் மாதுளைகள்
– குய்லூம் அப்போலினேர்
எனவே, இரு வேறு மாதுளைகள் தொங்குகின்றன
பாவப்பட்ட ஆன்மாவிற்காக அழுபவை எவை
இங்கே அசைபடும் கையெறி குண்டுகளின் ஆட்டத்தில்
சூல் கொண்ட மாதுளைகள் வெடிக்கின்றன.
சிதறிய முத்துக்களிலிருந்து பிறக்கும்
செங்குருதிப் பூக்களின் பாடல்களைக் கேளுங்கள்:
எங்கள் பயங்கரத் தோட்டத்தில்
காய்த்துத் தொங்குபவை மாதுளையா, மா துளையா..
***
குறிப்புகள்:
இந்தக் கவிதை Poems of Peace and War 1913-1916
என்ற இருமொழித் தொகுப்பு நூலில் வெளிவந்துள்ளது. இந்தக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர், கவிஞரின் அதிகாரபூர்வ மொழிபெயர்ப்பாளரான ஆன்னி ஹைட் க்ரீட்.
‘கேலிகிராம்’ என்பது, அப்போலினேரின் தனித்த பாணி. கோடுகள் மற்றும் எழுத்துக்களின் கிராஃபிக் வரைகலை வடிவில் கவிதையை எழுதி வடிவமைக்கும் பாணி. கவிதை பேசும் உள்ளடக்கத்தின் உருவம் அல்லது பொருளின் உருவமாக உருவாகிற இந்த கோட்டோவியம் போன்ற – கிராஃபிக் வரைகலை வடிவம் போன்ற – கவிதை அமைப்பு பாணியை கேலிகிராம் என்ற பெயரில் நிறுவினார் அப்போலினேர். இந்தச் சொல், எல்லா மொழிகளிலும் இதே விளிப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரு கவிதையின் எழுத்துப் பிரதி வாசகனின் மனதில் என்னவிதமான உணர்வுகளை ஏற்படுத்துகிறதோ, அதையும் தாண்டி, இந்த வடிவ வார்த்தைகள், அதன் உருவ அமைப்புகள், அர்த்தத்திலும் இடம் சார்ந்த அமைப்புகளிலும் ஒரு கவிதையைக் காட்சியாக அல்லது காட்சியைக் கவிதையாக மாற்றுகிறது. இந்த கேலிகிராம்களின் தொகுப்புதான் இந்நூல்!
19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆரம்பிக்கப் பட்ட டாடாயிஸத்தின் அடுத்த கட்டமாக நவீனக்கலைகளின் மறுமலர்ச்சிக் காலமாக அவாந்த்-கார்ட் என்னும் இலக்கிய இயக்கம் தோன்றியது. அப்போலினேரின் இந்த கேலிகிராம் கவிதை இயக்கம், பல அவாந்த்-கார்ட் ஓவியர்களைப் பாதித்தது. அந்த ஓவியர்களின் ‘க்யூபிஸம்’ என்ற ஓவிய பாணிக்கான மூலம் கேலிகிராம்களிலிருந்துதான் தோன்றுகிறதென விமர்சகர்கள் வரையறுக்கிறார்கள்.
உலகளவில் உள்ள பல்வேறு மொழிகளில் இயங்கிய அந்தக் காலகட்டத்தின் நவீன கவிஞர்கள் இந்த வகையை தங்களது கவிதை உருவாக்கங்களில் செயல்படுத்தினார். இதில் மிக முக்கியமானவர் ஸ்பானிஷ் மொழியின் புகழ்பெற்ற கவிஞர் விசென்டே ஹுய்டோப்ரோ.
அப்போலினேரின் ஒரு கேலிகிராம், ஆரம்பகட்ட 1990 களின் உன்னதம் இதழில் வெளிவந்திருக்கிறது.
***
பின் குறிப்புகள்:
இந்த முன்னுரையில், நான் முன்வைத்திருக்கும் விமர்சனப் பார்வைகளை, புனைவுப் படைப்புகள் சார்ந்தே அமைத்துள்ளேன். புனைவல்லாத கட்டுரைப் படைப்புகளில், முக்கியமாக, கோட்பாடு சார்ந்த படைப்புகளில் செயல்படும் மொழிபெயர்ப்பாளர்களின் உழைப்பும், நுட்பமான நீண்ட தேடலும் பெரிதும் தேவையாகிறது. தமிழில் அதன் மூலப்பிரதி சார்ந்த கலைச் சொற்கள் இல்லாத – இதுவரை அறிமுகமாகியிராத – நிலையில், புதிய சொற்களை அறிமுகப்படுத்தப்பட வேண்டிய நிலையில் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் பொறுப்பும், கடப்பாடும் உள்ளது.
உதாரணமாக: ரோலாண்ட் பார்த்தின் The Death of the Author என்ற சொற்றொடரை ‘ஆசிரியரின் மரணம்’ என்றும் ‘எழுத்தாளரின் மரணம்’ என்றும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. மிஷேல் பூக்கோவின் What Is an Author? என்ற சொல்லும் இவ்வாறாகவே பெயர்க்கப்படுகிறது. பார்த் மற்றும் ஃபூக்கோ சொல்லும் Author என்பவர் யார் என்பதை விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. ஆசிரியன் (Author) – எழுத்தாளன் (Writer) என்று முன்வைக்கும் ஐரோப்பியப் பார்வையின் அரசியல் – தத்துவப் பின்புலத்தையும், அந்தப் பார்வை தமிழ் மொழியிலக்கணத்தில் எவ்வாறாக உருப்பெறுகிறது என்பதையும், அந்தத் தமிழ்ச்சொல் உருமாற்றத்தின் தத்துவ – அரசியலையும் முன் வைக்க வேண்டும். இதையெல்லாம் பக்கம் பக்கமாக எழுத வேண்டியதில்லை. (எழுத வேண்டிய தேவையுமிருக்கிறது, அதை கோட்பாட்டு விமர்சகர்கள் பார்த்துக் கொள்வார்கள்.) ஆனால், மொழிபெயர்ப்பாளர் விரிவான விளக்கக் குறிப்புகளை அளிக்கவேண்டும். வெறுமனே போகிறபோக்கில் ஒரு வார்த்தையை போட்டுவிட்டுப் போகும் பொறுப்பற்ற செயலிலிருந்து, விரிவான பார்வையை – சரியான வேர்ச் சொல்லை முன்வைக்கும் தார்மிகப் பிரக்ஞை, தமிழ் மொழிபெயர்ப்பாளனுக்கு உள்ளது.
இவ்வாறாக, புனைவல்லாத கட்டுரை மற்றும் கோட்பாட்டுப் படைப்புகளின் மொழியாக்கங்கள் குறித்து, பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.
கௌதம சித்தார்த்தன்
நவம்பர் 9, அப்போலினேர் நினைவு நாள்,
2022.
***
