21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றிய வெகுஜன ரசனைக்கு அப்பாற்பட்ட இலக்கியங்களானது அதற்கே உண்டான பரபரப்பும் ,ஊகிக்க முடியாத தன்மையின் காரணமாகவும் மக்களை எளிதில் வசீகரிப்பதாகவும் 1990களில் வாசிக்கப்பட்ட மரபார்ந்த வெகுஜன உரைநடைகளைவிட அதிகம் வாசிக்கப்பட்டதாகவும் இருந்தது. நவீன ரஷ்ய எழுத்தாளர்கள் பல விஷயங்களைப் பல புதிய பரிமாணத்தில் எழுதுபவர்களாகவும், எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு திறமைசாலிகளாகவும் இருக்கின்றனர்.பல வருடங்களாக கம்யூனிச அரசின் வசம் அடைபட்டிருந்த ரஷ்ய இலக்கியத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை இவர்கள் மீட்டெடுத்தார்கள் என்றே கூறலாம்.’தி அமெரிக்கன் ரீடர்’ல் சமீபத்தில் வெளியான தனது கட்டுரையில் ஜான் நரின்ஸ் அவர்கள் கூறுகையில் ” ரஷ்ய இலக்கியத்தின் மீதான அரசின் ஆணையுரிமையையும் அதிகாரத்தையும் தடுப்பதே இந்த படைப்புகளின் முதலாவதும் முக்கியமான குறிக்கோளாகவும் இருந்தது, மேலும் ஒரு எழுத்தாளர் என்பவரை ஒரு ஆசானாகவும் இலக்கியத்தை உண்மைக்கான வழியாக மறுநிர்மாணம் செய்வதும் இதில் அடக்கம்”, அது மக்களிடையே பெருமளவிற்கு வரவேற்பினைப் பெற்றது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிக்கலில் இருந்த சமூகத்தின் மக்களுடைய எதிர்மறை எண்ணங்களுக்கான வடிகால்களாகவும் , வாழ்வியல் முரண் மற்றும் சோக முரண் நாடகங்களின் பக்கம் அவர்கள் சென்றதற்கான காரண விளக்கமாகவும், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட பின்நவீனத்துவப் படைப்புகள் இருந்தன. புத்தாயிரமாண்டின் இறுதியில் எழுந்த புதிய இலக்கிய அலையில் குறிப்பிடத்தக்கவர்கள் விக்டர் பெல்வின், லுட்மில்லா பெட்ருஷெவ்ஸ்கயா, விளாதிமீர் சொரோகின் ஆகியோர். ரஷ்ய இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு அவர்கள் அளித்த பங்கு முக்கியமானது. பெட்ருஷெவ்ஸ்கயா மற்றும் சொரோகினின் படைப்புகள் போல பெலேவினின் படைப்பான ‘Chapaev I pustota ‘ நமது காலத்தின் முக்கிய நூல்களில் ஒன்று.
எனினும், கடந்த பத்தாண்டுகளில் எற்பட்ட சமூக கலாச்சார மாற்றம் மற்றும் உளவியல் சார்ந்த மாற்றங்களால் , ரஷ்ய இலக்கியத்தின் வடிவமைப்பு ஒரு புதிய கட்டத்தை எட்டியது. 2007-ல் மிக்கயீல் எலிஸரோவ் எழுதிய ‘ தி லைப்ரரியன்(பிப்ளியோடேகர்)’ சோவியத்திற்கு பிறகான துக்க மேற்கொள்கையினை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. சோவியத்திற்க்குப் பிறகான தொலைந்துபோன ரஷ்ய சமூகத்தின் ஒரு தலைமுறையின் தெள்ளத்தெளிவான துன்பியல் கோட்பாடுகளைப் பற்றி அந்த நூல் பேசியது.பெலேவின், பெட்ருஷெவ்ஸ்கயா மற்றும் பலரின் மாற்று இலக்கியக் கொள்கையானது பாரம்பரிய இலக்கியங்களுக்கு படிப்பவர்களை சென்று சேர்ப்பதாகவும், வரலாற்றுப் பூர்வ மனிதவியல் அம்சங்களைப் பிரதிபலிப்பதாகவும் இருந்தது. அதேபோல் ரஷ்யாவின் வலிமிகுந்த கடந்தகாலத்தையும் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய விவாதத்தை நோக்கி வாசிப்பவர்களை மெல்ல அழைத்துச் செல்கிறது.
தற்கால ரஷ்ய இலக்கியம், மற்றெதையும் போல, பொது மக்களின் இலக்கிய ரசனைகளில் ஏற்படுகிற மாறுதல்களைக் குறிப்பிடுவதாக இருக்கிறது. மரபார்ந்த மதிப்பீடுகளிலும், நேர்மறை எண்ணங்களிலும் எற்படும் மாற்றாங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியும் இந்த ரஷ்ய இலக்கியங்களாகும்.உள்ளதை அப்பட்டமாக எழுதும் தாஸ்தாவ்ஸ்கி மற்றும் டால்ஸ்டாய் போன்றோரின் எழுத்துமுறை இன்றும் எழுத்தாளர்களிடையே எதிர்பார்க்கப் படுகிறது, மேலும் பல ரஷ்யர்கள் தங்கள் கேள்விகளுக்கான பதிலை இலக்கியத்தில் தேடுகின்றனர் .ஆர்ச்சிமன்ட்ரைட் டிக்கான் (ஷெவ்குனாவ்) எழுதிய கதைத் தொகுப்பான ”எவ்ரிடே செயின்ட்ஸ் அண்ட் அதர் ஸ்டோரிஸ்” புத்தகம் மக்களிடையே பெற்ற வரவேற்பு சமூகத்தின் எதிர்பார்ப்பினை உறுதி செய்துள்ளது. இந்த புத்தகம் 2012ம் ஆண்டிற்கான ரஷ்யன் புக்கர் பரிசினையும் மரியாதைக்குரிய ‘பிக் புக் அவார்ட்’ னையும் வென்றது.
அவரது புத்தகத்தின் இந்த வெற்றியைப் பற்றி அவரே இவ்வாறு விளக்குகிறார் ”இந்த புத்தகத்தில் என்னுடைய அழகான புதிய உலகினைப் பற்றிக் கூறுகிறேன், ”வழக்கமான” உலக வாழ்வின் சட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சட்டங்களால் நாம் அந்த உலகில் வாழ்கிறோம், ஒளியாலும் அன்பாலும் ஆனதாக, ஆச்சரியமூட்டும் கண்டுபிடிப்புகளால் ஆனதாக, நம்பிக்கை மகிழ்ச்சி மற்றும் எத்தனிப்புகளால் ஆனதாக அந்த உலகம் இருக்கிறது.” இதில் சோவியத் வரலாற்றைப் பற்றி எழுத்தாளர் டிமிட்ரி பைகோவ் விவரித்ததின் பாதிப்பினையும், புரட்சிகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்கின் பின்னணியில் எழுதப்பட்ட அவரது ”ஆஸ்ட்ரோமோவ்” புத்தகத்தின் வெற்றியையும் இது விவரிக்கின்றது.
இன்றைய ரஷிய இலக்கிய உலகம் ஆழமானதாக இருக்கிறது; பல திறன் மிக்க எழுத்தாளர்களின் மூலம் பல்வேறு வகைமைகளை அது வாசகர்களுக்குத் தருகிறது. அந்த எழுத்தாளர்களில் பலரும் மேற்கத்திய உலக மக்களுக்கு கிட்டத்தட்ட்ட அறிமுகம் இல்லாதவர்கள். கூடுதலாக, ரஷ்யக் கூட்டமைப்பின் உள்ளடங்கிய பகுதிகளான டகெஸ்தானின் காகசஸ் பகுதி, சைபீரியா மற்றும் யுரல்ஸ் போன்ற பகுதிகளிலிருந்து வரும் எழுத்தாளர்கள், ரஷ்ய இலக்கியத்தின் பொதுநீரோட்டத்திற்கு தங்களது வண்ணமயமான துடிப்பான படைப்புகளைச் சேர்த்துள்ளனர். இளவயதுடன், திறமையாக, பயமற்று, கடந்தகாலத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு இன்றைய சமுகத்தின் குரல்களில் ஒருவராக இந்த அறிமுக எழுத்தாளர்கள் இருக்கின்றனர்.இவையனைத்தும் ரஷ்ய இலக்கியவெளியை மிகவேகமாக மாற்றியமைத்துள்ளது. இன்றைய ரஷ்ய இலக்கியவெளியின் செயல்பாடுகள் சிறந்த செவ்விலக்கியப் படைப்புகளுக்கு நிகரான படைப்புகளை உருவாக்கும் நிலைக்கு முன்னேறலாம். எனினும், அது எப்போது நடக்கும் என்பதைக் கூறுவது கடினம், அதனை ‘எதிர்காலத்தில் ரஷ்யாவின் மிகச் சிறந்த எழுத்தாளர் யார் என்று குறிப்பிடுவது கடினம்’ என்றும் கூறலாம்.
ரஷ்ய இலக்கியத்தின் போக்கினையும் , அது செல்ல சாத்தியமுள்ள திசைகளையும் பற்றிக் கேள்வி எழுப்புவதே இந்த கட்டுரையின் நோக்கம். மரபார்ந்த ரஷ்ய உளவியல் சார்ந்த நாவல்கள் மீண்டும் பிறப்பெடுக்குமா? அல்லது தற்கால எழுத்தாளர்களின் படைப்புகளை உதாரணமாகக் கொண்டு வாழ்வியல் குறித்த நகைப்புகள் சார்ந்த பின்நவீனத்துவ எழுத்துக்கள் உருவாகுமா? எதிர்காலத்தில், ரஷ்ய இலக்கியச் செயல்பாடுகளின் குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டு, விளங்குவதற்குரிய திறனுடன் பல போக்குகள் உள்ளன. இந்த போக்குகளை புதிய யதார்த்தவாதமாகவும் மாய யதார்த்தவாதமாகவும் நாம் வரையறுக்க முடியுமா? அப்படி வரையறுத்தாலும் முழு பரிமாணத்தையும் அது விளக்கிடுமா என்பது சந்தேகமே.
பெலவினும் அவருக்குப் பிறகான காலகட்டத்திலும் “post-Pelevin era” , வழக்கமான இலக்கியக் கோட்பாடுகளை மீறிய படைப்புகள் பல. எடுத்துக்காட்டாக, ஓல்கா ஸ்லாவ்னிகோவாவின் எழுத்தை முழுமையாக மாய யதார்த்தவாதத்தின் கீழ் அடக்கிவிட முடியாது. அவரது படைப்புகளின் மூலம் வழமையான பல ”இஸங்களையும்” அவர் தாண்டிச் செல்கிறார். அவரது குறுநாவலான ”பாஸிலேவ்ஸ்” செகாவ்வின் கதைகளை நினைவு படுத்துவதாக இருக்கின்றது. மேலும் ரஷ்ய இலக்கியத்திற்கே உரித்தான மாய யதார்த்தவாதங்களுடன் உளவியல் சார்ந்த கருத்துகளும் கலந்து, ரஷ்ய செவ்வியல் மரபு இலக்கியத்திற்கு வெளியே வேறு எங்கும் கண்டெடுக்க முடியாத படைப்பாகவும் அது இருக்கிறது. 2006-ல் ரஷ்ய புக்கர் பரிசினை வென்ற அவரது படைப்பான ‘2017’ அவரது அசாதாரணமான படைப்புகளில் ஒன்று.பொதுவாகச் சொன்னால் அது அழகைப் பற்றிய விவரணம், மனிதர்களை ஆட்சி செய்து அழிவின் மூலம் அவர்களைப் பழிவாங்குகிறது ‘அழகு’ ரஷ்ய இலக்கியப் பரப்பில் அழகைப் பற்றிய அவரது இந்த தீவிரப் பாராட்டு , அவரது படைப்பினை அசாதாரணமானதாக ஆக்குகிறது. அத்துமீறுபவர்களுக்கு எதிரான இயற்கையின் இணக்கத்தைப் பற்றிய புனைவான வர்ணனைகள் ரைஃபியன் மலைகளின் அழகுக்கு ஆராதனைப் பாடல்களாக அமைகின்றது. இதன் மூலம் செவ்விலக்கியங்களின் வரிசையில் அவரது படைப்புகள் இடம் பிடிக்கின்றன.
மற்றொருபுறம் ”புதிய யதார்த்தவாதம்” என்று பகுக்கப்பட்ட பாரம்பரிய ரஷ்ய உளவியல் சார்ந்த நாவல்களின் எழுச்சி குறிப்பிடத்தக்கது.. ஸகார் ப்ரிலேபின், ரோமன் சென்சின், பாப் செங்கோ, டெனிச் ஒசாகின் மற்றும் அலெக்சாண்டர் இலிசெவ்கி ஆகியோரது எழுத்துகள் ரஷிய சமூகத்தின் உளவியல் சார்ந்த செவ்விலக்கிய உரைநடை மரபுகளை மலரவைப்பதை முக்கியப்படுத்துகின்றன.
இலிசெவ்கியின் சமீபத்திய நாவலான ‘ அனார்ஹிஸ்டி’ , பாரம்பரிய ரஷ்ய செவ்விலக்கியத்தின் ஒரு நீட்சி எனலாம். காதல் வழிமுறைகள் பற்றிய உரையாடல்களும், கடந்த காலத்தைப் பற்றிய கருத்துக்களும். போதைக்கு அடிமையாதல், துன்பப்படுதல் போன்ற காட்சிகள் இருந்தும் புத்தகமானது தனது புத்துணர்ச்சியை இழக்காத வண்ணம் பார்த்துக் கொள்கிறது.
பிர்லேபின்னின் திறமை ஏற்கனவே பிரபலத்துவம் அடைந்ததே. அவரது எழுத்து பாணி அவரது கதாநாயகர்களின் உள் உலகங்களை எளிதில் வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது. அவரது துவக்ககால நாவலான ‘சன்க்யா’, வெறுப்பும் அநீதியும் கொண்ட சமூகம் ஒன்றை எதிர்த்துச் செயல்பட ஒரு தனிநபருக்கு இருக்கும் உரிமைகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இளம்போராளி ஒருவனைப் பற்றிய கதையாகும். நேஷனல் பெஸ்ட் செல்லர் ஆஃப் தி டிகேட் பரிசினைப் பெற்ற அவரது ‘கிரேக்’ (The Sin) நாவல் ரஷ்ய சமூகத்தின் உளவியல் சார்ந்த செவ்வியல் இலக்கியங்களானது மீட்டெடுக்கப்பட்டதற்கான ஒரு சிறந்த அத்தாட்சி.
புதிய யதார்த்தவாதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துதலில் சென்சினின் பங்கு முக்கியமானது. அவரது ‘எல்டிஷேவி’ (தி எல்டிஷேவ்ஸ்) என்ற நாவல் 2010-ன் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று. அது ‘சூப்பர் நேஷனல் பெஸ்ட் செல்லர்’ மற்றும் ‘பிக் புக்’ பரிசுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. கடும் சட்டங்கள் அமலில் உள்ள ஒரு கிராமத்தில் திடீரென அழிவினைச் சந்திக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றியும் வாழ்வும் மரணமும் எந்தவித முக்கியத்துவமும் இன்றி வெறுமனே மற்றுமொரு நிகழ்வாக இருந்து விடுவதைப் பற்றியும் இந்நாவல் பேசுகிறது. தன்னுள் மனித இனத்தின் வீழ்ச்சியையும், சமூகத்தின் சீர்குலைவையும் அடக்கிக்கொண்டு ஒரு முட்டுச் சந்தை நோக்கி ரஷ்யா பயணிப்பதாக சென்சின் காட்டுகிறார். தற்கால ரஷ்ய வாழ்வின் அபத்தங்களை அவர் படம் பிடித்துக் காட்டுவதை புதிய யதார்த்தவாதத்தின் கீழ் கொணர்ந்திட முடியுமா? அப்படியானால், தனது படைப்புகளின் மூலம் ரஷ்ய இலக்கியத்தை அகநிலையற்ற ஒரு படிக்குக் கொண்டு செல்ல முயன்ற மாக்ஸிம் கார்க்கியின் படைப்புகளின் கீழ் தொழிலாளர் யதார்த்தவாதம் சார்ந்த நூலாக இதனை வகைப்படுத்தலாம். சென்சினின் வலுவான எழுத்துக்கள் வாசகர்களை யோசிக்கவும் அழவைக்கவும் செய்யும்.
எனினும் அவரது இந்த எழுத்து அப்படி எந்த உந்துதலையும் கொண்டிருக்கவில்லை. அவநம்பிக்கையானது நாவல் முழுதும் பரவி இருக்கிறது. எவ்வாறு நோக்கமற்றதாகவும் முட்டாள்தனமானதாகவும் மக்களின் உணர்வும், நேசமும், மரணமும் இருக்கிறதோ அவ்வாறே அவர்களது வாழ்வும் இருக்கின்றது என்கிறது அவரது இந்த படைப்பின் சாராம்சம்.
இன்றைய சிறந்த ரஷ்ய எழுத்தாளர்கள் ரஷ்ய சமூகத்தின் நிரந்தரக் கேள்வியான ”என்ன செய்யப்பட வேண்டும்?” என்பதற்கு பதில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த எழுத்தாளர்களைப் போலவே அவர்களது அதற்கான பதில்களும் வேறுபட்டவையாக இருக்கின்றன. ஆனால், உலகை நோக்கிய அவர்களது வெளிப்படைத்தன்மையும், அவர்களது திறமையும் நிச்சயம் அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்று. தற்கால ரஷ்ய இலக்கியத்தின் போக்கினைப் பற்றி நாம் தொடர்ந்து பேசலாம்.
***
கட்டுரையாளர் எலினா டிமோவ் ரஷ்யன் அகாடமி ஆஃப் சயின்ஸிலிருந்து வரலாற்றுத்துறைக்கான பி.ஹெச் டி பட்டம் பெற்றவர். ரஷ்ய கலாச்சாரம் மற்றும் இலக்கியம் தொடர்பான ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவர். ரஷ்ய பாணர் இலக்கியம் பற்றியும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.
நன்றி: contemporary russian literatureatuva . com
