• கார்மன் மரியா மச்சாடோ
  • தமிழில் : ச.ஆறுமுகம்

 

(நீங்கள் இந்தக் கதையை வாய்விட்டுச் சத்தமாக வாசிப்பதெனில் கீழ்க்கண்ட குரல்களைப் பயன்படுத்துங்கள் :

நான் : ஒரு குழந்தையைப் போல உச்ச ஸ்தாயியில், மறக்கத்தக்கதாக; ஒரு பெண்ணாக, அப்படியே.

ஆணாக வளர்கிற பையன், எனது கணவராக : அவனுக்கேயுரிய நல்வாய்ப்பும் வலுவுமாக.

என் தந்தை : உங்கள் தந்தையைப் போல, அல்லது உங்கள் தந்தையாக இருக்கவேண்டுமென நீங்கள் விரும்பும் நபர்.

என் மகன் : சிறு குழந்தையாக, மென்மை நிறைந்தவனாக, மழலை மாறாதவனாக; ஒரு ஆணாக, என் கணவரைப் போல.

இதர பெண்களெல்லோரும் : என்னோடு பதிலுக்குப் பதில் மாற்றிக்கொள்ளத் தக்கவர்களே)

***
ஆரம்பத்தில், அவனுக்கு நான் தேவைப்படும் முன்னரே அவன் எனக்குத் தேவைப்படுவதை நான் அறிகிறேன். காரியங்கள் எப்படி நிகழ்ந்து முடிகின்றன என்பதல்ல, அவற்றை நான் எப்படிச் செய்கிறேன் என்பதுதான் முக்கியம். என் வயது பதினேழு. என் பெற்றோருடன் பக்கத்து வீட்டு விருந்தொன்றில் இருக்கிறேன். அப்பா கவனிக்கவில்லையென்றாலும், ஒரு சில நிமிடங்களுக்கு முன், அடுக்களையில் பக்கத்து வீட்டுப் பதின்வயது மகளுடன் அரைத் தம்ளர் வெள்ளை ஒயின் விழுங்கியிருந்தேன். அனைத்துமே மென்மையாக, வழவழப்பாகப் புத்தம் புதியத் தைலஓவியம் போல இருக்கிறது.

அவன் என் முகம் பார்த்து அமரவில்லை. அவனுடைய கழுத்துத் தசைகளையும் முதுகின் மேற்பகுதியையும், அவனுடைய முன்புறம் பொத்தான் கீழிறங்கும் சட்டைக்குள்ளிருந்து எப்படி அழகாகப் பிதுங்கித் தெரிகிறானென்பதையும் காண்கிறேன். எனக்குள் வழுவழுப்பு கசிகிறது. அதற்காக, எனக்கு வேறு வாய்ப்புகள் இல்லையென்பதில்லை. நான் நல்ல அழகு. எனக்கு அழகான ஒரு வாய் இருக்கிறது. என் ஆடைக்கும் வெளியே, புடைத்துத் தெரிகின்ற என் மார்பகங்கள் வெகுளியாகவும் அதேசமயம் அடங்காத்தன்மை கொண்டனவாகவும் தோன்றும். நான், நல்லதொரு குடும்பத்தைச் சேர்ந்த நல்லதொரு பெண். ஆனால், அவன் கொஞ்சம் கரடுமுரடுதான், ஆண்கள் சிலவேளைகளில் அப்படித்தானே தெரிகிறார்கள்; அதைத்தானே நானும் விரும்புகிறேன்.

நான் கேள்விப்பட்ட ஒரு பெண்ணின் கதை. அவள், அவளுடைய ஆசைக் காதலனிடம் ஏதோ மோசமான ஒன்றைக் கேட்கப்போய், அவன், அவளது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் அவளைக் கொண்டுபோய் நல்வாழ்வு நிலையத்தில் சேர்த்து விட்டார்கள். அவள் அப்படியென்ன வழக்கம் மீறிய சுகத்தைக் கேட்டுவிட்டாளோ தெரியவில்லை, அதனை மூர்க்கமாய் விரும்பக்கூடிய நானும் அதைத்தான் கேட்க விரும்பியிருப்பேன். எல்லோரும் அறிந்த இவ்வுலகத்திலிருந்தே அப்புறப்படுத்தக் கூடிய அளவுக்கு அப்படி என்ன மாயமந்திர விஷயம் அவளுக்கு அவ்வளவு கண்டிப்பாகத் தேவைப்பட்டு விடும்?

அவன் என்னைக் கவனிக்கிறான். அவன் இனிமையானவனாக, பரபரக்கும் அவசரக்காரனாகத் தோன்றுகிறான். ஹலோ சொல்கிறான். என் பெயரைக் கேட்கிறான். எப்போதுமே சரியான நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நான், அந்தக் கணத்தை மிகச்சரியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டேன்.

அலங்கரிக்கப்பட்ட முன்கூடத்தில் நான் அவனை முத்தமிடுகிறேன். பதிலுக்கு அவன் என்னை முத்தமிடுகிறான், முதலில் மென்மையாக, பின்னர் அழுத்தமாக, அவனது நாக்கால் என் இதழ்களைக் கூடச் சிறிது திறந்து விடுகிறான். வெளியே இழுக்கும்போது, அதிர்வதுபோல் தெரிகிறான். ஒரு கணம் வட்டமடித்துச் சுழன்ற அவனது கண்கள் என் தொண்டையில் வந்து நின்றன.

அது என்ன? அவன் கேட்கிறான்.

– ஓ, இதுவா? என் கழுத்து ரிப்பனை நான் தொட்டுக்கொள்கிறேன். இது என்னுடைய ரிப்பன். எனது விரல்களால் அதன் வழவழப்பான பச்சையின் பாதி தூரத்தைத் தடவிப் பின்னர் முன்பக்கம் தெரிந்த இறுகிய முடிச்சின் மீது கொண்டுவந்து நிறுத்துகிறேன். அதைப் பிடிக்க நீள்கின்ற அவனது கையைப் பிடித்துத் தள்ளிவிடுகிறேன்.

– நீ அதைத் தொடக்கூடாது என்கிறேன். நீ அதைத் தொடமுடியாது.

உள்ளே செல்லும் முன், மீண்டும் எப்போது பார்க்கலாமென்கிறான். நானும் அதை விரும்புகிறேனென்கிறேன். அன்றிரவு தூங்கும் முன், அவனை, அவனது நாக்கு எனது இதழ்களில் அழுத்தித் திறப்பதை நான் மீண்டும் நினைக்க, என்விரல்கள் அவைகளாகவே மெல்லத் தடவி உள்நுழைய, அவன் அங்கிருப்பதாக, அனைத்துத் தசைகளோடும் ஆசைகளோடும் என்னைத் திருப்திப்படுத்துவதாக, மீண்டும் மீண்டும் நினைக்கிறேன். நாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறோமென்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது.

***

நாங்கள் செய்கிறோம். அதாவது நாங்கள் அதில் ஈடுபடப்போகிறோம். முதலில் அவன் என்னை அவனது காரில் ஒரு ஏரியின் சேற்று விளிம்புக்கு இருட்டில் அழைத்துச்செல்கிறான். என்னை முத்தமிட்டு, எனது காம்புகள் அவனது இருவிரல்களிடையே அழுந்துமாறு, அவனது கைகளால் என் மார்பகங்களை முழுவதுமாக மூடிப் பிடிக்கிறான்.

அதைச் செய்யும் முன்பாக, உண்மையில் அவன் என்ன செய்யப்போகிறானென எனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கவில்லை. அவன் கடினமாக, மிகவும் வெப்பமாக, வறண்டு, ரொட்டியைப் போன்ற வாசத்தோடிருக்கிறான். அவன் என்னைப் பிளந்தபோது நான், அலறிக் கடலின் ஆழத்தில் மூழ்கிப் போவது போல அவனைக் கட்டிக் கொள்கிறேன். அவன் உடல் என் உடலோடு முழுவதுமாகப் பொருந்தி அழுத்த, முண்டுகிறான், முண்டுகிறான், முண்டித் தள்ளுகிறான்; முண்டி, இடித்துக் கொண்டேயிருக்கிறான்; முடியும் முன் எனது இரத்தமும் சேர்ந்து சொட்டும் அவனை வெளியே இழுத்து முடிக்கிறான். அந்த அசைவு, எனக்குள்ளாக அவன் தேவை என்பதை உணர்த்தும் திடமான எண்ணம் மற்றும் என்னிலிருந்து அவனை விடுவித்ததில் கிடைத்த இதமானதொரு தெளிவில் நான் கிறுகிறுத்துப் போகிறேன். அதன்பின், அவன் இருக்கையில் சோர்ந்து அமர, குளத்தின் ஒலிகள் என் காதில் விழுகின்றன: நீர்ப்பறவைகள், வெட்டுக்கிளிகள் மற்றும் யாழ் நரம்பினைச் சுண்டியது போன்று ஒலிக்கும் ஏதோ ஒன்று. நீரின் மேலாக வீசிவரத் தொடங்கிய காற்று என் உடலைக் குளிர்விக்கிறது.

இப்போது என்ன செய்யவேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. என் கால்களுக்கிடையில் என் இதயம் துடிப்பதை என்னால் உணரமுடிகிறது. அது வலிக்கிறது, ஆனால், அது சுகமாயிருப்பதாக நான் நினைக்கிறேன். என் கைகளை அங்கே ஓடவிட்டு, எங்கோ வெகு ஆழத்திலிருக்கும் இன்பத்தின் தடயங்களை உணரச்செய்கிறேன். அவனது மூச்சு இயல்புக்குத் திரும்புவதையும் அவன் என்னையே கவனிப்பதையும் நான் உணர்கிறேன். சாளரம் வழியாக வந்த நிலவொளியில் என் மேனி பளபளக்கிறது. அவன் என்னைப் பார்க்கும் பார்வையைப் பார்க்கிறபோது, அந்த இன்பத்தை, முழுவதுமாக நீண்டுவிட்ட பலூன் கயிற்றின் முனையை விரல்களால் சுண்டியிழுப்பதைப் போல என்னால் இழுத்துப் பற்றிக் கொள்ள முடியுமென்பது எனக்குத் தெரிகிறது. நான் நெளிந்து முனகி, உணர்வின் உச்சத்தை மெல்ல மெல்ல, ஒரே சீராக, என் நாக்கைக் கடித்துக்கொண்டே வெளியேற்றுகிறேன்.

– எனக்கு இன்னும் வேண்டுமென்கிறான், ஆனாலும் சிறிதாகக்கூட எழவில்லை, அவன்.

அவன் சாளரத்துக்கு வெளியே பார்க்கிறான்; நானும் அப்படியே செய்கிறேன். இருட்டுக்குள் எதுவொன்றுந்தான் அலைந்து கொண்டிருக்குமென நான் நினைக்கிறேன். கொக்கிக் கை மனிதன். கார்களில் ஓசிப் பயணம் கேட்டு அலையும் பிசாசுப் பெண், மறுபயணத்தைத் தொடங்கியிருக்கலாம். கண்ணாடிக்குள் ஓய்வெடுக்கும் மாயக்கிழவி குழந்தைகளின் மந்திர உச்சாடனத்தால் வெளிப்பட்டிருக்கலாம். இந்தக் கதைகள் எல்லோருக்கும் தெரியும் – அதாவது எல்லோரும் சொல்கின்றனர் – ஆனால், எவரும், நம்புவதேயில்லை.

– அவன் கண்கள் நீரின் மீது நோக்கிவிட்டு, அதன் பின் என் கழுத்துக்கு வந்தமர்கின்றன.

– உன் ரிப்பன் பற்றிச் சொல்லு, என்கிறான், அவன்.

– அதில் சொல்வதற்கு எதுவுமில்லை. அது என் ரிப்பன்.

– நான் அதைத் தொடலாமா?

– கூடாது.

– அதைத் தொடவேண்டும், என்கிறான், அவன்.

– கூடாது.

ஏரிக்குள் ஏதோ ஒன்று தண்ணீருக்குள்ளிருந்து புரண்டு நெளிந்து வெளியேறிச் ‘சளப்’பென்றடித்து அமர்கிறது. அந்த ஒலியை நோக்கித் திரும்புகிறான், அவன்.

– அது, மீன் என்கிறான்.

– இந்த ஏரி, அது உயிர்ப்பிக்கும் உயிர்கள் பற்றிய கதைகளை எப்போதாவது ஒருமுறை உனக்குச் சொல்கிறேனென்கிறேன் நான்.

அவன் சிரித்துத் தாடையைத் தேய்த்துக் கொள்கிறான். அவன் மேல் எனது இரத்தத்தின் சிறிய கறை ஒன்று தெரிகிறது; ஆனால் அவன் அதைக் கவனிக்கவில்லை; நானும் எதுவும் சொல்லவில்லை.

– அது எனக்கு மிகவும் பிடித்துப் போனதென்கிறான், அவன்.

– என்னை வீட்டில் கொண்டுபோய் விடுமாறு நான் அவனுக்குச் சொல்கிறேன்.

பெருந்தகை மனிதன் போல, அவன் அதைச் செய்கிறான்.

அன்று இரவில் நான் கழுவிக்கொண்டேன். என் கால்களுக்கிடையில் இருந்த வழுவழுப்பான தடங்களின் நிறமும் வாடையும் துருப்பிடித்த இரும்பினதாக இருந்தாலும், நான் முன்னெப் போதையும் விட, புதியதாகவே இருக்கிறேன்.

* * *

என் அம்மா, அப்பா அவன் மீது அதிகப் பிரியம் கொள்கிறார்கள்; அவன் ஒரு நல்ல பையன், நல்ல மனிதனாக வளர்வானென்கிறார்கள். அவனிடம் தொழில், குடும்பம், பிடித்த ஓய்வுநேர விருப்பம், பற்றிக் கேட்கிறார்கள். அவன் வாரத்தில் இரண்டுநாட்கள், சிலசமயம் மூன்றுநாட்கள் கூட வருகிறான். அம்மா ஒருநாள் அவனை இரவு உணவுக்கு அழைக்கிறாள். சாப்பிடும்போது, அவன் கால் தசையில் கிள்ளுகிறேன். கிண்ணத்தில் வந்த ஐஸ்கிரீம் உருண்டையை விழுங்கியபிறகு, நான் அம்மா, அப்பாவிடம் அவனை அழைத்துக்கொண்டு தெரு வழியாக நடக்கப்போகிறேனெனச் சொல்கிறேன். நாங்கள் இருளுக்குள் நுழைந்து ஒருவர் கையை மற்றவர் இனிமையாகப் பற்றிக்கொண்டு, வீடு மறையும் வரை நடக்கிறோம். நான் அவனை மரங்களுக்கிடையே இழுத்துச் சென்று, சுத்தமான இடமொன்றைக் கண்டதும், எனது சட்டையை மேலாகத் தூக்கி, உள்ளாடையைக் கீழிறக்கி, நான்கு கால்களிலுமாகக் குனிந்து, என்னை அவனுக்குக் கொடுக்கிறேன்.

என்னைப் போன்ற பெண்களின் கதைகள் எல்லாவற்றையும் கேட்டிருப்பதோடு, அதைப் போன்ற இன்னும் அதிகக் கதைகளை உருவாக்கவும் நான் அஞ்சுபவள் இல்லை. விதிகள் இரண்டே இரண்டு தாம்: எனக்குள்ளாகவே அவன் முடிக்க முடியாது; அத்துடன் என் பச்சை ரிப்பனையும் அவன் தொடமுடியாது. அவன் சருகுகளின் மேல் சொட்டுகிறான், தூறலின் தொடக்கம் போல பட், பட் பட்டென. நான் என்னைத் தொட்டுப் பார்க்க நினைக்கிறேன், ஆனால் என் கீழ் கிடக்கும் சருகுகளில் அளைந்த என் விரல்கள் அழுக்காகியிருந்தன. என் உள்ளாடை மற்றும் காலுறைகளை முன்போல் மேலிழுத்துக்கொள்கிறேன். அவன் உஷ் ஒலி எழுப்பிச் சுட்டிக்காட்டுகிறான். நைலான் காலுறைகளுக்கும் உள்ளாக எனது மூட்டுகளில் அழுக்கு தெரிகிறது. நான் அவற்றைக் கீழிறக்கி, மூட்டுகளைத் துடைத்துவிட்டு, மேலேற்றிக்கொள்கிறேன். எனது சட்டைக் கசங்கல்களை இழுத்துச் சரிசெய்து, தலைமுடி ஊக்கைக் கழற்றி மீண்டும் சரிசெய்து மாட்டிக்கொள்கிறேன். பின்னுக்கு வாரப்பட்ட அவனது முடிச் சுருள்களில் ஒன்று தப்பி முன்தொங்க, நான் அதை ஒதுக்கிப் பிறவற்றோடு ஒன்றாகச் சேர்க்கிறேன். நாங்கள் நீரோடைக்கு நடந்தோம்; நான் ஓடும் நீருக்குள் கைகளை அமிழ்த்தி அவை சுத்தமாகும்வரையில் அழுத்தித் தேய்க்கிறேன்.

கைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த நிலையிலேயே நாங்கள் மென்னடையில் வீட்டுக்கு வந்தோம். உள்ளே, அம்மா காபி தயாரித்திருந்தாள். எல்லோரும் வட்டமாகச் சுற்றியமர, அப்பா, அவனிடம் வியாபாரம் பற்றிக் கேட்கிறார்.

(நீங்கள் இந்தக் கதையை உரக்க வாசிப்பதெனில், இடையிடையே ஆழமாக மூச்செடுத்து நீண்ட ஒரு கணத்துக்கு அப்படியே பிடித்துக்கொள்ளவும். பின்னர், நெகிழி அடுக்குக் கோபுரம் ஒன்று திடீரென தரைமட்டமாவதைப் போல உங்கள் மார்பு குறைந்துபோகுமாறு காற்று முழுவதையும் திடீரென ஒரேயடியாக வெளியேற்றுங்கள். அதையே மீண்டும் மீண்டும், மூச்செடுப்பதற்கும் விடுவதற்குமான நேரத்தைக் குறைத்துக் குறைத்துச் செய்யுங்கள். இதன் மூலம் தடைபடும் குரலைச் சரிசெய்து, மீண்டும் நல்லமுறையில் உருவாக்கிக்கொள்ளமுடியும்.)

* * *

காலத்துக்கும், நான் ஒரு கதைசொல்லிதான். நான் ஒரு இளம் சிறுமியாக இருக்கையில், ஒருமுறை, அம்மா என்னை மளிகைக்கடைக்கு அழைத்துச் சென்றிருந்தபோது, பொருட்களின் வரிசைவெளியில் கால்விரல்கள் (Toes) தெரிவதாக அலறினேன். அங்கிருந்த பெண் திரும்பி நான் கைகாட்டுவதையும் அம்மாவின் இளம் முதுகில் தட்டுவதையும் கவனித்தாள்.

நாங்கள் வீட்டுக்குத் திரும்பியதும் அம்மா எனக்குத் திருத்திச்சொன்னாள். அது வெறும் Toes இல்லை!  – Potatoes!
!

அப்பா வரும்வரையில் எனது நாற்காலியில் – குழந்தைகளுக்கான ஒன்று, எனக்காகவே செய்யப்பட்டது – உட்காருமாறு அம்மா சொன்னாள். முடியாது, நான் கால்விரல்களைத் தான் பார்த்தேன், அந்தக் கிழங்குகளுக்கிடையில் கலந்து இரத்தக்கறைகளுடன் வெளிறிய முண்டுவிரல்கள். அவற்றில், நான் ஆட்காட்டிவிரல் நுனியால் தொட்டுப்பார்த்த ஒன்று பனிக்கட்டி போல் குளிர்ந்திருந்ததுடன் வீங்கிப் பழுத்த பருவைத் தொட்டால், அது அமுங்குவது போல அமுங்கியது. நான் இந்த விவரத்தை அம்மாவுக்குத் திரும்பவும் விளக்கிய போது, அவள் கண்கள் நீர்நிறைந்து, அதிர்ந்துபோன ஒரு பூனையின் கண்களாக மாறின.

நீ அங்கேயே உட்காரென்றாள், அவள்.

அப்பா மாலையில் வேலையிலிருந்து திரும்பி வந்ததும் என் கதையை ஒன்றுவிடாமல் கவனமாகக் கேட்டார்.

நீ திருவாளர் பார்ன்ஸைப் பார்த்திருக்கிறாயா இல்லையா? அந்த அங்காடியை நடத்தும் வயதான மனிதரைக் குறிப்பிட்டு, அப்பா என்னைக் கேட்டார்.

நான் அவரை ஒருமுறை பார்த்திருக்கிறேன். அதனால் அதை அப்பாவிடம் சொன்னேன். அவருக்குப் பனி பொழியத் தொடங்கும் முன்பான வானத்தைப் போல் வெள்ளைத் தலைமுடி. அங்காடி சாளரங்களுக்கான விளம்பரப் பலகைகளை அவரது மனைவியே வரைந்தாள்.

திருவாளர் பார்ன்ஸ் எதற்காகக் கால்விரல்களை விற்பனை செய்யவேண்டும்? அவற்றை, அவர் எங்கிருந்து வாங்குவார்? அப்பா என்னைக் கேட்டார்.

அப்போது நான், கல்லறைகள் மற்றும் பிணவறைகள் பற்றி எதுவும் தெரியாத சின்னப் பெண்ணாக இருந்ததால், அப்பாவின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

அப்படியே அவர் எங்கிருந்தோ வாங்கினாலும், அவற்றை உருளைக் கிழங்குகளோடு கலந்து விற்பதால் அவருக்கு என்ன லாபம் கிடைத்துவிடும்? அப்பா கேள்வியைத் தொடர்ந்தார்.

அதெல்லாம் அங்கேயே இருந்தன. நான் அவற்றை என் கண்ணாலேயே பார்த்தேன். ஆனால், அப்பாவின் தர்க்க விளக்க ஒளிக்கற்றைகளின் கீழ் என் ஐயப்பாடு கரைந்து போவதை நான் உணர்ந்தேன்.

எல்லாவற்றையும்விட முக்கியமாக, அப்பா அவருடைய கடைசிச் சான்றாவணமாக, வெற்றிகரமாக வந்து சேர்ந்த கேள்வி: ஏன், என்னைத் தவிர வேறு யார் கண்களுக்கும் அது தெரியவில்லை?

வளர்ந்த பெண்ணாக இருந்தால், அப்பாவுக்கு, இந்த உலகில் ஓரிணைக் கண்களால் மட்டுமே காணக்கூடிய உண்மையான விஷயங்களும் இருக்கின்றன எனச் சொல்லியிருப்பேன். சிறுமியான என்னை அவர், நாற்காலியிலிருந்து தூக்கி, முத்தமிட்டு, என்னைப் போகவிட்டபோது அப்பாவின் கதை விளக்கத்தை ஒப்புக்கொண்டு சிரித்தேன்.

* * *

ஒரு பெண் அவளது ஆணுக்குக் கற்றுக்கொடுப்பது வழக்கமான ஒன்றில்லாவிட்டாலும், நான் கண்மூடி நன்றாகத் தூங்கும் போதும் என் இமைகளுக்கடியில் என்ன நடக்கிறது, எனக்கு என்ன தேவையென்பதை, அவனுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறேன். ஒரு ஆவல் எனக்குள் ஊடுருவிச் செல்வது போன்ற எனது அதிர்வு மின்னலை, அவன் புரிந்து கொள்கிறபோது, அவன் தெரியக்கூடாததென்று, நான் எந்த ஒன்றையும் இழுத்துப் பிடித்து மறைத்துவிடவில்லை. அவன் எனது வாய், எனது தொண்டையின் ஆழம் வேண்டுமென்று கேட்டபோது அவனை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவும், வாந்தியெடுக்காமலிருக்கவும், உப்புக்கரிப்பில் முனகிக் கொண்டு நானாகவே கற்றுக் கொண்டேன். என்னுடைய மிகமோசமான ரகசியம் எதுவென அவன் கேட்டபோது, எல்லோரும் போகும் வரையில் என்னைத் தனியறையில் அடைத்து வைத்துப் பிறகு அதனைக் கையில் பிடித்துக்கொள்ளுமாறு செய்த ஆசிரியரைப் பற்றியும், அதன்பின் வீட்டுக்குச் சென்று பாத்திரம் தேய்க்கும் கம்பி வலைப்பின்னல் கொண்டு ரத்தம் வரத்தேய்த்ததையும் சொல்கிறேன். அதனை அவனிடம் சொன்னபிறகும் ஒரு மாதம் வரையிலும் கூட திகில் கனவுகள் வந்து கொண்டிருந்தன. அப்புறம், நான் வெட்கத்திலிருந்த எனது பதினெட்டாவது பிறந்த நாளில் அவன் என்னைத் திருமணம் செய்யக் கேட்டபோது, நான் ஆம், ஆம், தயவுசெய்து செய்யெனச் சொல்கிறேன். பின்னர் அந்தப் பூங்கா நீளிருக்கையிலேயே நான் அவனது மடியில் உட்கார்ந்து, வழியில் செல்லும் யாரும் உள்ளே என்ன நடக்கிறதெனத் தெரிந்து கொள்ளாமலிருப்பதற்காக, எனது பாவாடையைக் குடையாக விரித்துப் பரப்புகிறேன்.

– உன்னுடைய பல பகுதிகளும் தான் எனக்குத் தெரியுமேயென, மூச்சிரைப்பைக் கட்டுப்படுத்த முயற்சித்துக் கொண்டே அவன், என்னிடம் சொல்கிறான். அதுவும் இப்போது அவையெல்லாமே அவனுக்கு முழுமையாகத் தெரிகிறதென்கிறான்.

* * *

இருட்டிய பிறகு உள்ளூர் இடுகாட்டுக்குப் போய்வருவதாக, சமவயது நண்பர்களிடம் வாய்வீரம் பேசிய ஒரு பெண்ணைப்பற்றி ஒரு கதை சொல்கிறார்கள். இரவில் கல்லறை முன்பு போய் நின்றால், அதனுள்ளிருக்கும் நபர் எழுந்து அவளைப்பிடித்து உள்ளிழுத்துக் கொள்வாரென்றதற்கு அவள் நக்கலடித்திருக்கிறாள். அது அவளுடைய முட்டாள்தனம். நக்கலடிப்பதென்பது ஒரு பெண் செய்கிற முதல் தவறு.

அதை உங்களுக்குச் செய்து காட்டுகிறேன் என்றாள், அவள்.

பெருமையடிப்பது இரண்டாவது தவறு.

அவளிடம் ஒரு கத்தியைக் கொடுத்து, அவள் அங்கு சென்றதற்கு அடையாளமாகவும் அவளது பேச்சை நிரூபிப்பதற்காகவும், அந்தக்கத்தியைக் கல்லறை மீதான உறைபனிப் பூமியில் குத்தி நிறுத்திவிட்டு வரச்சொல்லியிருக்கிறார்கள்.

அவள் இடுகாட்டுக்குப் போனாள். திட்டமென்று எதுவுமில்லாமல், சகட்டுமேனிக்கு ஏதோ ஒரு கல்லறையை அவள் தேர்ந்தெடுத்ததாகச் சிலர் சொல்கிறார்கள். உள்ளுக்குள்ளிருக்கும் அடிப்படைச் சந்தேகத்தாலும், ஒருவேளை அவள் நினைப்பது தவறென்றால், நூற்றாண்டுக்கு முன் புதைக்கப்பட்டதைவிட, அப்போதுதான் புதிதாக இறந்து, புதைக்கப்பட்ட பிணத்தின், திடமான தசையும் மாமிசமும் அபாயகரமானதென்பதால், அவள் மிகப் பழைய ஒன்றைத்தான் தேர்ந்தெடுத்திருப்பாள் என்கிறேன், நான்.

அவள் கல்லறையின் முன்பு மண்டியிட்டு, கத்தியை ஆழமாக இறக்கினாள். அவள் ஓடுவதற்காக எழுந்தபோது, அவள் தன்னால், தப்பிக்க முடியாதென்பதை உணர்ந்தாள். ஏதோ ஒன்று அவள் ஆடையைப் பிடித்து இழுத்தது. அவள் அலறிக்கொண்டே கீழே விழுந்தாள்.
காலை விடிந்தபோது, அவளுடைய நண்பர்கள் கல்லறைக்கு வந்தனர். அவள் கல்லறையின் மீது இறந்து கிடந்ததை, அவர்கள் கண்டனர். கத்தி அவளது கம்பளிப் பாவாடையை பூமியோடு சேர்த்துப் பிடித்திருந்தது. அவளின் பெற்றோர் அங்கு வந்து சேர்ந்தபோது மரணம் பயத்தாலா அல்லது வேறேதோ வெளிப்பாட்டாலா என்பது ஒரு பொருட்டாகவா இருந்திருக்கும்? அவள் புரிதலில் தவறு இல்லை. ஆனால், அது ஒரு விஷயமாகவே கருதப்படப் போவதில்லை. வாழமுடியுமென்பதை நிரூபிப்பதற்காகவே அவள் இறந்திருந்தாலும், பிற்காலத்தில் எல்லோருமே, அவள் இறக்க விரும்பியதாகத்தான் நம்பினார்கள்.

சரியானவராக இருப்பதென்பது மூன்றாவது தவறாக, மிகமிக மோசமான ஒன்றாக மாறிப்போனது.

* * *
திருமணம் குறித்து எனது அம்மா, அப்பாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இப்போதெல்லாம் பெண்கள் மிகத் தாமதமாகத் திருமணம் செய்து கொள்கிறார்களென்றாலும், என் அம்மா பத்தொன்பது வயதிலேயே என் அப்பாவைத் திருமணம் செய்து கொண்டதை மகிழ்ச்சியாக உணர்வதாகவே, சொல்கிறார்.

எனது திருமண உடையைத் தேர்வு செய்யும்போது, காதலனுடன் நடனத்துக்குச் செல்லவிரும்பி, ஆனால் அதற்கான உடை வாங்கப் போதிய பணமில்லாமலிருந்த இளையவளான ஒரு பெண்ணின் கதை என் நினைவுக்கு வந்தது. அவள் பழைய உடைகள் விற்கும் கடை ஒன்றில் அழகான ஒரு வெள்ளைநிற கவுன் வாங்கினாள். பின்னர் சில நாட்களிலேயே நோயில் விழுந்து இந்த உலகத்தை விட்டே போய்ச் சேர்ந்தாள். அவள் பிணங்களைப் பாதுகாத்து வைப்பதற்காகத் தெளிக்கும் தைலம் பட்டதால்தான் இறந்ததாகப் பிண ஆய்வு நிபுணர் கண்டறிந்தார். பிறகுதான், அந்த உடை, ஈமச்சடங்கு செய்பவரின் உதவியாளர் ஒருவரால் இறந்த மணப்பெண் பிணத்திலிருந்து திருடப்பட்டதெனத் தெரியவந்தது.

ஏழ்மை உங்களைக் கொன்று விடுமென்பதே இந்தக் கதையின் நீதியென நான் நினைக்கிறேன். அல்லது கதைகளில் மணப்பெண்கள் சரியாகச் செயல்படுவதில்லை என்பது அல்லது ஒருவர் மணப்பெண்ணாக இருப்பதை அல்லது ஒரு கதைக்குள் வருவதைத் தவிர்த்து விட வேண்டுமென்பது இக்கதையின் நீதியாக இருக்குமோ! கதைகளெல்லாமென்ன? அவற்றை அனுபவித்து மகிழக்கூடும், அவ்வளவுதானே, மெழுகுதிரி ஒன்றை அணைப்பது போல ஊதித்தள்ளுங்கள் அவற்றை.

நாங்கள் ஏப்ரலில், பருவகாலம் தப்பிய ஒரு குளிரான பிற்பகலில் திருமணம் செய்து கொள்கிறோம். திருமண உடையில், திருமணத்திற்கு முன்பாக என்னைப் பார்க்கும் அவன், என்னை வலுவாக முத்தமிடுவதோடு என் மார்புக் கச்சைக்குள்ளும் புகுந்து வற்புறுத்துகிறான். அவன் உறுதியாக உருண்டு திரள்கிறான்; அவனுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி என் உடலை அவன் பயன்படுத்திக்கொள்ள நான் விழைவதாக அவனுக்குச் சொல்கிறேன். சந்தர்ப்பம் சரியாக இருக்கவே, நான் எனது முதல் விதியை ரத்து செய்கிறேன். அவன் என்னைச் சுவரோடு சேர்த்தணைத்து, அவனை ஒரு நிலையில் நிறுத்திக் கொள்வதற்காக அவனது கையைப் பளபளப்புச் சுவரோட்டின் மீது என் தொண்டை அருகில் ஊன்றிக் கொள்கிறான். அவனது பெருவிரல் எனது ரிப்பனைத் தடவுகிறது. அவனது கையை நகர்த்தாமலேயே அவன் எனக்குள் இயங்கும்போது, நான் அவனிடம் உன்னைக் காதலிக்கிறேன், நான் உன்னைக் காதலிக்கிறேன், நான் உன்னைக் காதலிக்கிறேன் என்கிறேன். புனித ஜார்ஜ் தேவாலய இருக்கைகளின் இடைவழியில், கால்களில் விந்து வழிய நடந்து செல்லும் முதல் பெண் நான்தானாவென்று எனக்குத் தெரியாது, ஆனால் அது நான்தானெனக் கற்பனை செய்து கொள்வதை நான் விரும்புகிறேன்.

* * *

தேன்நிலவுக்காக, நான் நீண்ட காலமாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பயணத்தை மேற்கொண்டோம்: ஐரோப்பியச் சுற்றுலா. நாங்கள் பணக்காரர்களாக இல்லையென்றாலும் அந்த எண்ணத்தைக் கைகூடச் செய்தோம். பண்டைக்காலப் பெருமைகள் நிறைந்த, பரபரப்பான மாநகரங்களிலிருந்து நாங்கள் ஆல்ப்ஸ் மலைகளின் புனிதங்களுக்காகத் தூங்கி வழியும் கிராமங்களுக்குச் சென்று திரும்பினோம்; மதுவகைகளை ருசித்தும், வறுத்த அல்லது வாட்டிய இறைச்சியைப் பற்களால் எலும்புகளிலிருந்து கடித்து இழுத்தும் ஸ்பேட்ஜில் என்னும் ஜெர்மன் வகைக் கொழுக்கட்டைகள், சமைத்த ஆலிவ் பழவகைகள், ரவியோலி என்னும் அப்பவகை மற்றும் எனக்குத் தெரியாத, ஆனால் ஒவ்வொரு நாள் காலையிலும் விழுங்க ஆசைப்படும் ஒருவகைப் பாலேட்டு நிறப் பயறுகளைத் தின்றோம். ரயிலில் படுக்கை வசதிகொண்ட கூபே அறைக்கான பணம் எங்களிடம் இல்லையென்றாலும், என் கணவன், ரயில் பணியாளன் ஒருவனுக்குப் பணம் கொடுத்து, காலி அறை ஒன்றை ஒரு மணி நேரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றுவிட, அப்படியாக நாங்கள் ரைன் நதியின் மேலாகப் புணர்ந்தோம்.

(நீங்கள் இந்தக் கதையை வாய்விட்டுச் சத்தமாக வாசித்துக் கொண்டிருந்தால், பயண அலைவில் அதிரும் ரயில் படுக்கையின் அசைவொலியையும் மடக்கும் இரும்பு நாற்காலி ஒன்றின்மீது, அதன் இணைப்புகளை இடர்ப்படுத்தும் ஒரு காதற் செயல்பாட்டின் ஒலியையும் உருவாக்கிக் கொள்ளுங்கள். அதைச் செய்து ஓய்கிற பொழுதில், தாலாட்டுப் பாடல்களின் நினைவில், உங்களுக்கு மிகமிக நெருக்கமானவருக்காக, அரைநினைவுப் பாடல்களை இசையோடு பாடுங்கள்.)

* * *
நாங்கள் பயணத்திலிருந்து திரும்பிய வெகு சீக்கிரமே எனது மாதவிடாய் நிற்கிறது. படுக்கையில் உருண்டு புரண்டு, நாங்கள் முழுவதுமாக ஓய்ந்த ஒரு இரவில் நான் எனது கணவனிடம் அதைச் சொல்கிறேன். அவன் மகிழ்ச்சியில் ஒளிர்கிறான்.

– குழந்தை! என்கிறான் அவன். இருகைகளாலும் பிடரியைக் கட்டிக் கொண்டு மல்லார்ந்து படுக்கிறான். ஒரு குழந்தை! அவன் வெகு நேரம் அமைதியாக இருக்கவே, தூங்கிவிட்டானோ என நினைத்து, நான் அவனைப் பார்க்கிற பொழுது அவன் கண்கள் திறந்தவாறே மேற்கூரையின் மீது நிலைத்திருப்பதைக் காண்கிறேன். பின்னர், அவன் என் பக்கமாகத் திரும்பி என்னையே பார்க்கிறான்.

– குழந்தைக்கும் ரிப்பன் இருக்குமா?

என் தாடைகள் இறுகுவதை நான் உணர்கிறேன். என் மனம் பலப்பல பதில்களாகத் தாவித்தாவிக் கடைசியாக, மிகமிகக் குறைந்த அளவில் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு பதிலுக்கு வந்து சேர்கிறேன்.

– அப்படியெல்லாம் ஒன்றும் எழுதி வைக்கவில்லையென்கிறேன் நான், கடைசி, கடைசியாக.

அவன் விரல்களை என் தொண்டை மீது ஓடவிட்டு, என்னைத் திடுக்கிடச் செய்கிறான். அவனை நிறுத்துவதற்காக என் கைகளால் மூடுகிறேன், ஆனால், அவன் வலிமையைப் பயன்படுத்துகிறான்; எனது இரண்டு கைகளையும், அவனது ஒரு கையால் இறுகப் பிடித்துக் கொண்டு, மறுகையால் ரிப்பனைத் தொடுகிறான். வழவழப்பான அதன் நீளப்பரப்பைப் பெருவிரலால் அழுத்துகிறான். கழுத்து முடிச்சை, என் யோனியைப் பிசைந்தழுத்துவது போல மெதுவாகத் தொட்டுப் பிசைகிறான்.

– வேண்டாம், நான் கெஞ்சுகிறேன், தயவுசெய்து அப்படிச் செய்யாதே!

அவன் கேட்பதாகத் தெரியவில்லை. அப்படிச் செய்யாதே, நான் மீண்டும் கெஞ்சுகிறேன், என் குரல் வலுக்கிறது, ஆனாலும் நடுவில் உடைந்து போகிறது.

அப்போது, அவனால் அதைச் செய்திருக்கமுடியும் தான். அவன் நினைத்திருந்தால் அந்த முடிச்சை அவிழ்த்திருக்க முடியும். ஆனாலும் அவன் என்னை விடுவித்து, மீண்டும் உருண்டு மல்லார்ந்து படுக்கிறான். என் மணிக்கட்டுகள் வலிக்கின்றன; நான் அவற்றைத் தேய்த்து விட்டுக் கொள்கிறேன்.

– ஒரு தம்ளர் தண்ணீர் வேண்டுமென்கிறேன், பின்னர் எழுந்து குளியலறைக்குச் செல்கிறேன். குழாயைத் திறந்து விட்டு, அவசர அவசரமாக, ரிப்பனைச் சரி பார்க்கிறேன். என் இமைகளில் நீர் கோர்க்கிறது. முடிச்சு இப்போதும் இறுக்கமாகவே இருக்கிறது.

* * *

ஓநாய்களால் கொல்லப்பட்ட ஒரு முன்னோடிக் கணவன் மனைவி பற்றி எனக்குப் பிடித்த ஒரு கதை இருக்கிறது. அவர்களின் சிறு தனியறையைச் சுற்றிலும் அவர்களின் குதறிக் கிழிக்கப்பட்ட உடல்தசைகள் சிதறிக் கிடந்ததை அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்தனர், ஆனால் அவர்களது மகளான கைக்குழந்தையைத்தான் உயிரோடோ, பிணமாகவோ கூடக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஓநாய்க் கூட்டத்தோடு ஒரு சிறுமியும் காட்டு ஓநாய் போலவே மலையோரத்து நிலவெளிகளில் தாவி ஓடுவதைப் பார்த்தாகச் சிலர் சொல்கிறார்கள்.

உள்ளூர்க் குடியிருப்புகளில் அவள் குறித்த செய்தி தீயாகப் பரவியது. அவள் ஒரு குளிர்காலக் காட்டில் வேட்டைக்காரன் ஒருவனைப் பயமுறுத்தியிருக்கிறாள் – ஒருவேளை அவன் அச்சமடைந்ததைவிட நிர்வாணமான ஒரு சிறுபெண் பல்லைக் காட்டி ஊளையிட்டதைக் கண்டு அதிர்ந்ததே அதிகமாயிருக்கலாம். இளமையான ஒரு பெண் ஒரு குதிரையை இழுத்துச்செல்ல முயன்றாள். இறகுகள் பறந்து சிதற, கோழி ஒன்றினை அவள் கடித்துக் கிழித்துப் பிளந்ததைக் கூட மக்கள் கண்டிருக்கிறார்கள்.

பல வருடங்களுக்குப்பின், நீண்ட ஒரு ஆற்றங்கரையின் புதர்களுக்குள், அவள் ஓய்வாக இரண்டு ஓநாய்க் குட்டிகளுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்ததாகச் சொன்னார்கள். அக்குட்டிகள் இரண்டும் அவள் உடலுக்குள்ளிருந்து வந்தவையாக, ஓநாய்களின் பரம்பரை வரிசை, ஒரே ஒருமுறை மட்டும் மனிதனால் களங்கப்பட்டதாகக் கற்பனை செய்வதை விரும்புகிறேன். அந்த ஓநாய்க்குட்டிகள் அவளது மார்பகங்களை இரத்தக் காடாக்கியிருந்த போதிலும் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் அவை, அவளுடையவை; அவளுக்கு மட்டுமே சொந்தமானவை.

என் வயிறு வீங்கிப் பெருக்கிறது. எனது உட்புறத்தில் எங்கள் குழந்தை மூர்க்கமாக நீந்துகிறது, உதைக்கிறது, முட்டி மோதுகிறது, பிறாண்டுகிறது. பூங்காவுக்குள்ளான ஒரு நடையின் போது, என் கணவன் ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்யலாமாவெனக் கேட்ட அதே பூங்காவில்தான், என் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு, மூச்சிரைக்க ஒரு பக்கமாகத் தடுமாறிப் பல்லைக் கடித்துக்கொண்டு, டேய், சின்னப்பயலே நிறுத்துடா என்கிறேன். நான் அவனைச் சின்னப் பயலே என்றுதான் அழைக்கிறேன். நான் நான்கு கால்களில் மண்டியிட்டு நின்று, அழுதுவிடும் நிலையில் பெருமூச்சிரைக்கிறேன். அந்த வழியில் செல்கிற ஒரு பெண் எனக்கு உதவிசெய்து, உட்கார வைத்து, முதல் பிரசவம் என்பது எப்போதுமே பெருமளவுக்குக் கடினம்தானெனச் சொல்லிக் கொண்டே, குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தருகிறாள்.

என் உடம்பு நான் எதிர்பார்க்காத பலவிதங்களில் மாற்றமடைகிறது. என் மார்பகங்கள் வீங்கிப் பெரிதாகி வெப்பமடைகின்றன, என் வயிற்றில் வெளிறிய புள்ளிகளாலான கோடுகள் புலிகளைப்போல் உள்வளைந்ததாக ஏற்படுகின்றன. இயல்பு மீறும் ஓர் அதீத உணர்வை நான் உணர்கிறேன், ஆனால், எனது புதிய வடிவம் எங்கள் வக்கிரங்களின் பட்டியலைப் புதுப்பித்துவிட்டது போல, என் கணவனோ ஆசையால் புத்துணர்வு பெற்றதுபோலத் தோன்றுகிறான். எனது உடலும் ஈடு கொடுக்கிறது: பல்பொருள் பேரங்காடி வரிசையில் நிற்கும்போது, தேவாலயத்தில் இறுதி விருந்தின் பங்கைப் பெறும்போது, புதிய தவிர்க்கமுடியாத ஒரு தீவிரத் தேவைக்கு நான் இலக்காகி, மிகச்சிறிய ஒரு தூண்டலிலும் வீங்கிப் பருத்து வழுவழுப்பாகி விடுகிறேன். ஒவ்வொரு நாளும் என் கணவன் வீட்டுக்கு, மனத்துக்குள் அவன் என்னிடம் பெற விரும்புபவற்றின் ஒரு புதிய பட்டியலோடு வருகிறான்; நானும் அவற்றை அவன் கேட்பதற்கும் அதிகமாகவே கொடுக்கும் விருப்பத்தோடேயே இருக்கிறேன்.

– என் வயிற்றின் குறுக்காக விரல்களை ஓட விட்டுக்கொண்டே, உயிரோடிருப்பவர்களில் நான் தான் மிகமிக நல்வாய்ப்பு பெற்றவன் என்கிறான், அவன்.

காலை நேரங்களில் அவன் என்னை முத்தமிட்டுக் கொஞ்சுவதோடு, சிலவேளைகளில் அவனுடைய வாட்டிய ரொட்டி மற்றும் காபியை அருந்தும் முன்பாகவே என்னை எடுத்துக் கொள்ளுகிறான். நடையில் ஒரு துள்ளலோடு அவன் வேலைக்குச் செல்கிறான். அவன் முதலில் ஒரு பதவி உயர்வோடும், பின்னர் இரண்டாவது பதவி உயர்வோடும் வீட்டுக்கு வந்து சேர்கிறான். என் குடும்பத்திற்காகவே அதிகப் பணம் என்கிறான் அவன். நமது மகிழ்ச்சிக்காகவே அதிகப் பணமென்கிறான்.

* * *

பிரசவ அறையில் இருபது மணி நேரங்களாக இருக்கிறேன். என் கணவனின் கையைப் பிடித்து முறுக்கி, காது கொடுக்கமுடியாத வசைகளால் திட்டி ஊளையிடுகிறேன். அந்த ஆபாச வசைகள், செவிலியைச் சிறிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கவில்லை. என் பற்களை நானே கடித்துத் தூள்தூளாக்கி விடுவேன் போல உணர்கிறேன். மருத்துவர் என் கால்கள் நடுவே உற்றுப் பார்க்கிறார். அவரது புருவங்கள் அவரது நெற்றியில் வாசிக்க முடியாத மோர்ஸ் தந்திக் கோட்டு வரிகளை எழுதுகின்றன.

– என்னதான் நடக்கிறது? கேட்கிறேன், நான்.

– இயற்கையாகப் பிரசவமாகுமென்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்கிறார், மருத்துவர். அறுவை சிகிச்சைதான் தேவைப்படும்.

– வேண்டாமெனக் கெஞ்சுகிறேன். தயவு செய்து அது வேண்டாமென்கிறேன்.

– சீக்கிரமே அசைவு ஏற்படவில்லையென்றால், நாங்கள் அதைத்தான் செய்தாக வேண்டும், என்கிறார் மருத்துவர். அதுதான் எல்லோருக்கும் நல்லது. அவர் ஏறிட்டுப் பார்க்கிறார். அவர் என் கணவனை நோக்கிக் கண் சிமிட்டுகிறாரென்பது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது. ஆனால், வலியானது மனத்தை வேறு மாதிரி பார்க்கச் செய்கிறது.

நான் சின்னப் பயலுடன் மனத்துக்குள்ளாகவே பேசுகிறேன், டேய், சின்னப் பயலே, நீயும் நானும் ஒன்றாக இருக்கப்போவது இதுதான் கடைசி முறையாக இருக்குமென நினைக்கிறேன். டேய், வேண்டாம்டா, என்னை அறுத்து உன்னை வெளியே எடுக்க வேண்டாண்டா, ப்ளீஸ்.. என்கிறேன்.

சின்னப்பயல் இருபது நிமிடம் கழித்துப் பிறந்தான். நான் பயந்த மாதிரி என் வயிற்றைக் கிழிக்கவில்லை, ஆனாலும் சிறியதாக ஒரு அறுப்பு அறுத்து ஒரு திறப்புச் செய்திருந்தார்கள். மருத்துவர் கீழாக அறுக்கும்போது சும்மா இலேசாகப் பிடித்து வலிந்து இழுப்பதுபோலத்தான் இருந்தது. ஒருவேளை அவர்கள் எனக்குக் கொடுத்த மருந்தினால் அப்படியிருந்திருக்கும். குழந்தையை என் கையில் தந்தபோது, சுருக்குச் சுருக்காக இருந்த அவன் உடல் முழுவதையும் தலை முதல் பாதம் வரையில் அந்திவானத்தின் நிறமான சிவப்புக் கோடுகளாகப் படர்ந்திருந்த அவனை முழுவதுமாகத் தடவிப் பார்த்தேன்.

ரிப்பன் பட்டை இல்லை. ஆண்குழந்தை. நான் தேம்பத் தொடங்கி அடையாளப்புள்ளி ஏதுமில்லாத குழந்தையை நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொள்கிறேன்.

(நீங்கள் இந்தக் கதையைச் சத்தமாக வாசித்துக் கொண்டிருப்பதானால், கதை கேட்பவரிடம் ஒரு பேனாக்கத்தியைக் கொடுத்து ஆட்காட்டி விரலுக்கும் பெருவிரலுக்கும் இடையிலான மென்தோல் பகுதியை அறுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். பின்னர் அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.)

* * *

மருத்துவர் களைத்துச் சோர்ந்திருந்தபோது பிரசவம் ஏற்பட்ட பெண்ணைப் பற்றிய ஒரு கதை இருக்கிறது. நிரம்பவும் முந்திப்பிறந்தவளாயிருந்த ஒரு பெண் பற்றியும் ஒரு கதை இருக்கிறது. பெண்ணின் உடல், அவளது குழந்தையை விடாப்பிடியாக அவ்வளவு கடினமாகக் கவ்விப் பிடித்திருந்ததால் குழந்தையை மீட்பதற்காக அவளை அறுக்க வேண்டியதாகவிருந்த ஒரு பெண்ணைப் பற்றியும் ஒரு கதை இருக்கிறது. யாருக்கும் தெரியாமல் இரண்டு ஓநாய்க்குட்டிகளைப் பெற்றெடுத்த பெண் பற்றிய கதையைக் கேட்ட ஒரு பெண்ணைப் பற்றியும் ஒரு கதை இருக்கிறது. கதைகள் இப்படியாகக் குளத்துக்குள் விழும் மழைத்துளிகளைப் போல் ஒன்றன்பின் ஒன்றாக, இணை சேர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் மேகத்திலிருந்து தனித்தனித் துளியாகப் பிறந்தவைதானென்றாலும், அவை ஒன்றாகச் சேர்ந்து வந்து விட்ட பிறகு அவற்றைத் தனியாகப் போங்களெனச் சொல்வதற்கு எந்த வழியுமில்லை.

(நீங்கள் இந்தக் கதையைச் சத்தமாக வாசித்துக் கொண்டிருப்பதானால், கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விளக்குவதற்காக திரையை ஒருபுறமாக விலக்கிக் காட்டுங்கள். நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன், அங்கே மழை பெய்துகொண்டிருக்கும்.)

* * *
அறுத்துத் திறந்திருந்த இடத்தில் தையல் போடுவதற்காக, அவர்கள் குழந்தையை வாங்கிக் கொள்கின்றனர். என்னைத் தூங்கச் செய்வதற்காக, என் வாயையும் மூக்கையும் மூடும் ஒரு முகமூடி வழியாக, எதையோ எனக்குள் செலுத்துகிறார்கள். எனது கணவன் என் கையைப் பிடித்துக் கொண்டே, மருத்துவரோடு விகடம் பேசுகிறான்.

– அந்தக் கூடுதல் முடிச்சுப் போட எவ்வளவு ஆகும்? அவன் கேட்கிறான்.

– நீங்கள் அதைச் செய்யுங்களென்கிறீர்கள், அப்படித்தானே? என்கிறார், மருத்துவர்.

– ப்ளீஸ் என்கிறேன், அவனிடம். ஆனால் அது திரிந்து, முறுகி, ஒரு சிறு முனகலாகத்தான் வெளிவந்திருக்கும். எவனும் இனிமேல் என்பக்கம் தலை திருப்பமாட்டான்.

– மருத்துவர் ‘களுக்’ கெனச் சிரிக்கிறார். நீங்கள்தான் இப்படிச் சொல்கிற முதல் ஆள் என்றில்லை.

ஆழமான நீர்ச்சுரங்கம் ஒன்றுக்குள் விழுந்து மூழ்கி, நான் மீண்டும் மேலெழும்புகிறேன்; ஆனால் என் உடம்பு முழுதும் எண்ணெய் மாதிரி ஏதோ அடர்த்தியும் இருண்டதுமான ஒரு வழவழப்பு. எனக்கு வாந்தி வருவது போல இருக்கிறது.

– அறை ஏதோ மாதிரி விர்ரென்று சுற்றுகிறது.

– பின்னர் நான் கண்விழிக்கிறேன், முழுவதுமான ஒரு விழிப்பு, என் கணவன் போய்விட்டிருக்கிறான். மருத்துவரும்தான் சென்றுவிட்டிருந்தார். ஆமாம், குழந்தை, எங்கே?

செவிலி, தலையை வாயிற்கதவோடு சேர்த்து ஒட்டி நிற்கிறாள்.

– உன் கணவர் காபி வாங்க இப்போதுதான் போனார், குழந்தை, பிரம்புத் தொட்டிலில் தூங்குகிறது, என்கிறாள் அவள்.

மருத்துவர் அவள் பின்னாலிருந்து, ஒரு துணியில் கையைத் துடைத்துக் கொண்டே வருகிறார்.

– எல்லாம் நன்றாகத் தையல் போட்டாகி விட்டது. கவலைப்படாதீர்கள் என்கிறார். நன்றாக, இறுக்கமாக. எல்லோருக்கும் மகிழ்ச்சி. குணமாவது பற்றி செவிலி உங்களிடம் பேசுவாள். உங்களுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்படும்.

குழந்தை விழிக்கிறது. தொட்டிலிலிருந்து அவனை எடுத்து மீண்டும் என் கைகளில் தருகிறாள், செவிலி. அவன் அவ்வளவு அழகு, வாய் பிளந்த என்னை மூச்சு விட்டுக் கொள்ளுமாறு, நானே நினைவு படுத்திக் கொள்ளவேண்டியிருந்தது.

* * *

என் மகன் ஒரு நல்ல பையன். அவன் வளர்கிறான், நன்கு வளர்கிறான். நாங்கள் முயற்சி செய்யாமல் இல்லையென்றாலும், எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்கவேயில்லை.

– நீ ஒரு அய்யோ பாவம், வாடகைக் குடித்தனக்காரன், சின்னப்பயலே. அவனுடைய அழகான பழுப்புத் தலைமுடியில் ஷாம்பு தேய்த்துக் கொண்டே நான் சொல்கிறேன். உன்னுடைய முன்பணத்தை அப்படியே திருப்பித் தந்துவிடுகிறேன்.

அவன் குளியலறைத் தொட்டியில் சளப், சளப்பென அடித்து மகிழ்ச்சியில் வெடித்துச் சிரிக்கிறான்.

என் மகன் என் ரிப்பனைத் தொடுகிறான், ஆனால் அவன் எந்தவிதத்திலும் என்னைப் பயமுறுத்தியதேயில்லை. அதுவும் என்னுடைய ஒரு உறுப்பு என அவன் நினைக்கிறான். காது அல்லது விரலைப் பிடிக்கும்போது என்ன செய்வானோ, அது போலவே அதையும் பிடித்து விளையாடுகிறான்.

வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்புகிற என் கணவர் எங்கள் மகனுடன் முற்றத்தில் விளையாட்டோடு விளையாட்டாக, ஓடிப்பிடித்தும் விளையாடுகிறார். பந்தைப் பிடிப்பதற்கு அவன் மிகவும் சின்னப்பையன். என் கணவர் பொறுமையாக புல்லில் பந்தை அவன் பக்கமாக உருட்டிவிடுகிறார். அவனும் அதை எடுத்து மீண்டும் கீழே போடுகிறான். என் கணவர் என்னிடம் அழுவதாகப் பாவனை காட்டுகிறார், பார், பார்! கவனித்தாயா? அவன் சீக்கிரமாகவே அதை வீசி எறியப் போகிறானென்கிறார்.

* * *

எனக்குத் தெரிந்த அம்மா கதைகள் எல்லாவற்றிலும் மிகவும் உண்மையானது இது ஒன்றுதான். ஒரு இளையவளான அமெரிக்கப் பெண், அவளது அம்மாவுடன் பாரீசுக்குப் போயிருந்தபோது, அம்மா நோய்வாய்ப்படத் தொடங்குகிறாள். அம்மா ஓய்வெடுக்க வசதியாக, ஒரு விடுதியில் சில நாட்கள் தங்க முடிவெடுத்து அறை ஒன்றினை எடுக்கிறார்கள். அம்மாவைப் பரிசோதனை செய்ய மருத்துவர் ஒருவரை மகள் அழைக்கிறாள்.

பரிசோதனைக்குப் பின், மருத்துவர், மகளிடம் அவள் அம்மாவுக்குச் சில மருந்துகள் தேவைப்படுவதாகச் சொல்கிறார். அவர், அவளை வாடகைக்கார் ஓட்டுநர் ஒருவரிடம் அழைத்துச் சென்று, ஓட்டுநருக்கு பிரெஞ்சு மொழியில் விவரங்களைக் கூறிவிட்டு, அந்தப் பெண்ணிடம், அவரது வீட்டில், அவரது மனைவி தேவையான மருந்துகளைத் தருவாளென விளக்கிச் சொல்கிறார். அவர்கள் போகிறார்கள், போகிறார்கள், வெகுநேரமாகப் போய்க் கடைசியாக அந்த வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது, மருத்துவரின் மனைவி மருந்துப் பொடிகளைக் கலந்து, பொறுமையின் எல்லையைத் தாண்டும் அளவுக்கு மிகமிக மெதுவாக, மாத்திரைகளாக்கிக் கொடுத்ததில் அந்தப் பெண் விரக்தியாகிப் பின்னர் ஒருவழியாக காருக்கு வந்தால், ஓட்டுநன், தெருக்கள் முழுவதுமாகச் சுற்றிச்சுற்றி இழுத்தடிக்கிறான், சிலநேரங்களில் ஒரே தெருவில் இருமுறை சுற்றுகிறான். அந்தப் பெண் காரிலிருந்தும் இறங்கி, விடுதிக்கு நடந்தே செல்கிறாள். ஒருவழியாக அவள் விடுதிக்குச் சென்று சேர்ந்தபோது, விடுதி எழுத்தர், அவளை அதற்குமுன் பார்த்ததேயில்லையென்கிறார். அவளது அம்மா ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அறைக்கு ஓடிச் சென்று பார்த்தால் சுவர்களெல்லாம் வேறு நிறத்திலும் அறைகலன்கள் அவள் நினைவுக்கு மாறுபட்டும் இருக்க, அவளது அம்மாவை எங்குமே காணமுடியவில்லை.

இந்தக் கதைக்கு பல முடிவுகள் இருக்கின்றன. அவற்றிலொன்றில், கண்டுபிடித்தே தீருவதென்று கடும் முயற்சியெடுத்து, அருகிலேயே வேறொரு விடுதியில் அறையெடுத்துத் தங்கி, சலவைத் தொழிலில் இருந்த ஒரு இளம் வாலிபனை மயக்கி, உண்மையைக் கண்டு பிடிக்கிறாள், மகள்: மருத்துவர் அவளை அனுப்பி வைத்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவளுடைய அம்மா, மிக அபாயகரமான தொற்றுநோயால் இறந்து விடுகிறாள். நகர் முழுக்க பீதி ஏற்படுவதைத் தவிர்க்க, விடுதிப் பணியாளர்கள் அம்மாவின் சடலத்தை அப்புறப்படுத்திப் புதைத்ததோடு, அறையின் சுவர்களுக்கு வேறு வண்ணப்பூச்சு தீற்றி, அறைகலன்களையும் மாற்றி, தொடர்புடைய அனைவரும், அந்த அம்மாவையும் மகளையும் பார்த்ததேயில்லையென மறுத்துச் சொல்ல, கையூட்டும் கொடுத்து விட்டனர்.

மற்றொரு விவரிப்பில், அந்தப்பெண், தானேயொரு பைத்தியமென்று நம்பி, அவளது அம்மாவையும் அம்மாவுடனான வாழ்க்கையையும் அவளது நோய்ப்பட்ட மனதுக்குள்ளாகவே கண்டு கொண்டு, பல ஆண்டுகளாக பாரீஸ் நகரத் தெருக்களில் அலைகிறாள். அவள் விடுதி, விடுதியாகத் தேடி, குழம்பி, யாரிடமும் சொல்வதற்கு இயலாமல் துயருறுகிறாள்.

இந்தக் கதையின் நீதியை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. இந்நேரம் நீங்களே கண்டுபிடித்திருப்பீர்களென நினைக்கிறேன்.

* * *

எங்கள் மகனுக்கு ஐந்து வயதாகும்போது பள்ளிக்குள் நுழைகிறான். அவனது ஆசிரியை, அன்று ஒரு நாள் பூங்காவில் எனக்காக இரங்கி உதவி செய்ததை அவருக்கு நினைவுபடுத்துகிறேன். அவள் என்னை நன்றாகவே நினைவு வைத்திருக்கிறாள். எங்கள் மகனுக்குப் பின் எங்களுக்கு வேறு குழந்தை பிறக்கவில்லையென்பதையும், அவன் இப்போது பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டதால், இனிமேல் என் பொழுதுகளெல்லாம் அலுப்பும் சலிப்பும்தானென அவளுக்குச் சொல்கிறேன். அவள் அன்பு மிக்கவள். பொழுதைச் செலவழிக்கும் வழி தேடிக் கொண்டிருந்ததால், உள்ளூர் கல்லூரி ஒன்றில் அற்புதமான மகளிர் கலை வகுப்பு ஒன்று நடைபெறுவதாக அவள் சொல்கிறாள்.

அன்று இரவு, என் மகன் தூங்கியபிறகு என் கணவர் சாய்மெத்தைக் கை தாங்கியைத் தாண்டி, என் பக்கமாகக் கைநீட்டி, என் கால்கைளத் தடவுகிறார்.

– பக்கத்தில் வா, என அவர் சொல்லவும் எனக்குள் மகிழ்வின்ப ஊற்றெடுத்துக் குறுகுறுக்கிறது. சாய்மெத்தையிலிருந்தும் நழுவி இறங்கி, என் பாவாடையை அழகாகத் திரைத்துச் சுருட்டிக் கொண்டு, கால்மூட்டுகளால் அவரிடம் நடந்து செல்கிறேன். அவரின் காலை முத்தமிட்டு, என் கையை அவரது இடுப்புக்குக் கொண்டு சென்று, கச்சையை அவிழ்த்து, அவனை முழுவதுமாக உள் விழுங்குவதற்கு முன் அவனது கட்டுக்குள்ளிருந்தும் கொத்தாகப் பிடித்து வெளியே இழுக்கிறேன். அவர் முனகல்களுடன் உள்நுழைத்து அழுத்துவதோடு என் தலையைத் தடவி, தலைமுடிக்குள் விரல்களை அலையவிட்டுக் கோதுகிறார். அவருடைய கை பின்பக்கமாக என் கழுத்துப்புறம் இறங்குவதை, அவரது விரலொன்று எனது ரிப்பனுக்குள்ளாக நுழைய முயலும் வரையில் கவனிக்கவில்லை. நான் பெருமூச்சிட்டு, பட்டென்று இழுத்துக் கீழே மல்லாந்து விழுந்து பெரும் பீதியோடு என் ரிப்பன் முடிச்சைச் சரிபார்க்கிறேன். என் எச்சில் ஈரம் சொட்ட, அவர் அங்கேயே உட்கார்ந்திருக்கிறார்.

– இங்கே வா என்கிறார், அவர்.

– மாட்டேன் என்கிறேன், நான்.

அவர் எழுந்து நின்று காற்சட்டையை மேலே தூக்கி, ஜிப்பை மேலிழுத்து, கச்சையை மாட்டியபின் அமர்கிறார்.

– ஒரு மனைவியிடம், அவள் கணவனுக்குத் தெரியாத எந்த இரகசியமும் இருக்கக் கூடாது என்கிறார், அவர்.

– என்னிடம் எந்த இரகசியமும் இல்லை. என்கிறேன், நான்.

– ரிப்பன்.

– ரிப்பன் ஒன்றும் இரகசியமில்லை. அது என்னுடையது, அவ்வளவுதான்.

– அதோடுதான் பிறந்தாயா, என்ன? ஏன், உன் தொண்டைக்கு என்ன? அது ஏன் பச்சையாக இருக்கிறது.

நான் பதில் சொல்லவில்லை.

அவர் நெடுநேரம் அமைதியாக இருந்தார். பின்னர்,

– ஒரு மனைவிக்கு இரகசியங்களே இருக்கக் கூடாது, என்கிறார்.

என் மூக்கு சிவந்தது. நான் அழ விரும்பவில்லை.

– நீங்கள் கேட்ட எல்லாவற்றையுமே நான் உங்களுக்குத் தந்திருக்கிறேன். இந்த ஒன்றை மட்டும் நான் வைத்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாதா?

– எனக்குத் தெரிந்தாக வேண்டும்.

– தெரிந்து கொள்ள வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் அது கூடாது.

– அதை ஏன் என்னிடமிருந்து மறைக்கிறாய்?

– நானொன்றும் அதை மறைக்கவில்லை. அது உங்களுடையதல்ல.

அவர் எனக்கு மிக அருகாக நெருங்கி வருகிறார். போர்பான் விஸ்கி வாசனையால் பின்வாங்குகிறேன். ஒரு க்ரீக் சத்தம் கேட்கிறது. எங்கள் மகனின் பாதம் படிக்கட்டிலிருந்தும் மறைவதை இருவரும் ஏறிட்டுப் பார்க்கிறோம்.

அன்று இரவு என் கணவர் கொதிக்கும் கோபத்தோடேயே தூங்கச் செல்ல, அக்கோபம் அவர் கனவு காணத் தொடங்கியபோதுதான் விட்டகன்றது. அது போய்த் தொலைந்ததை நான் உணர்ந்தபிறகுதான் எனக்கும் தூங்க முடிந்தது.

மறுநாள், என்மகன் என் தொண்டையைத் தொட்டு என் ரிப்பன் பற்றிக் கேட்கிறான். அவன் அதைப் பிடித்து இழுக்கவும் முயற்சிக்கிறான். அது எனக்கு வேதனை தானென்றாலும், அதை அவனுக்கு மறுக்கப்பட்ட ஒன்றாக நான் செய்தாக வேண்டியிருக்கிறது. அவன் மீண்டும் அதைத் தொட முயற்சித்தபோது, காசுகள் நிறைந்த ஒரு டப்பாவைக் குலுக்குகிறேன். அது கர்ணகடூரமாகச் சத்தம் எழுப்பவே, அவன் பின்வாங்கி அழுகிறான். எங்களுக்குள் ஏதோ ஒன்று தொலைந்து போனது உண்மைதான். அதை மீண்டும் கண்டுபிடிக்கவேயில்லை.

(நீங்கள் இக்கதையைச் சத்தமாக வாசித்துக் கொண்டிருப்பீர்களேயானால், ஒரு சோடா டப்பாவை எடுத்து அதில் காசுகளை நிரப்புங்கள். கதையில் அந்த இடத்துக்கு வரும்போது உங்களுக்கு மிகமிக அருகிலிருக்கும் நபரின் காதருகில் சத்தமாகக் குலுக்கிக் காட்டுங்கள். அதிர்ச்சியும் பயமுமாக அவர்களின் முகம் போகும் போக்கைப் பாருங்கள்; பின்னர் நம்பிக்கைத் துரோகத்தைக் காண்பீர்கள். அதன்பிறகு, அதுவரை உங்களைப் பார்த்த பார்வையில், உங்கள் வாழ்நாள் முழுவதற்கும் கூட ஒருநாளும் பார்க்கமாட்டார்கள் என்பதையும் கவனியுங்கள்.)

* * *

நான் மகளிர் கலைவகுப்பில் சேர்ந்து கொள்கிறேன். என் கணவர் வேலைக்குச் சென்றிருக்கும்போதும், என் மகன் பள்ளியிலிருக்கும்போதும், நான் அந்தப் பரந்த பசுமை வளாகத்துக்கும், அதனுள் திடமாக அமர்ந்திருக்கிற, கலைவகுப்புகள் நடத்தப்படுகிற சாம்பல்நிற கட்டிடத்துக்கும் காரோட்டி வருகிறேன்.

கண்ணியத்துக்குச் சிறிது இடம் கொடுத்து, நிர்வாண ஆண்கள் எங்கள் கண்களில் படாமல் வேறிடத்தில் அமர்த்தப்பட்டிருக்கலாம். ஆனால் வகுப்பு அதற்கேயான துடிப்போடிருக்கிறது – அந்நியப் பெண்ணின் நிர்வாண வடிவத்தில் பார்க்க வேண்டியதும், வண்ணத்தைலங்களோடு கரியைக் கலந்து உருட்டும்போது தெரிந்து கொள்ள வேண்டியதும் ஏராளம் இருக்கின்றன. ஒருவர் என்றில்லை, பலரும் அவர்களது இருக்கைகளில், இரத்தப் படிவைச் சமப்படுத்திக்கொள்வதற்காக, முன்புறமாகவும் பின்புறமாகவும் மாற்றி மாற்றி அசைந்து, அமர்கின்றனர்.

குறிப்பிட்ட ஒரு பெண் மட்டும் திரும்பத் திரும்ப வருகிறாள். அவளது ரிப்பன் சிவப்பு. என்பதோடு, அது அவளது மெலிந்த கணுக்காலில் சுற்றி முடிச்சிடப்பட்டிருந்தது. அவள் மேனியின் நிறம் ஆலிவ் பழங்களின் வழவழப்பு நிறத்திலிருக்க, அவளது கொப்புள் துளையில் தொடங்குகிற ஒரு மென்மயிர்ப்பாதை, அவளது பீடபூமிக்குக் கீழிறங்குகிறது. அவள் ஒரு அந்நியள் என்பதால் மட்டுமல்ல, அவளது வேலை ஆடை அவிழ்ப்பதாக அமைந்திருப்பதோடு, அப்படியான ஒரு நிலையை நான் பயன்படுத்திக்கொள்வது அவமானத்துக்குரியதென்பதால் நான் அவள் மீது ஆசைப்படக்கூடாதென எனக்குத் தெரிகிறது. ஆனால், எனது வரைகோல் அவளது ஆழமான இடைவெளிகளைத் தீட்டுவதுபோல் என் கைகள், என் மனத்தின் ரகசிய ஆழங்களுக்குள் தீட்டுகின்றன. அப்படியொன்று நிகழுமாவென்பது எனக்கு நிச்சயமில்லை யென்றாலும் நிகழ்வாய்ப்புகள் எனக்குள் ஒருவித பித்துநிலையைப் புகைமூட்டமாகத் தோற்றுவிக்கின்றன.

ஒரு பிற்பகல் வகுப்புக்குப் பின்னர், நான் ஒரு அறைவழிக் கூடத்தின் மூலையில் திரும்பும்போது, அவள், அந்தப் பெண் அங்கிருக்கிறாள். ஆடையணிந்து, மழைக்கோட்டு ஒன்றில் முழுவதுமாகப் புதைந்திருக்கிறாள். அவளின் பார்வை என்னை அங்கேயே நிலைநிறுத்துகிறது. அவ்வளவு அருகில், அவள் கண்கள் இரண்டும் இரட்டைச் சூரியகிரகண மோதிரங்கள் போல, அவளது கண்ணின் மணிகளில் தெரிந்த வட்டவடிவிலான பொன்வண்ண வளையங்களை என்னால் பார்க்க முடிகிறது. அவள் என்னை வரவேற்று வாழ்த்துக் கூறுகிறாள், நானும் கூறுகிறேன்.

அருகிலிருந்த சிற்றுண்டிக்கடை ஒன்றினுள் இருவரும் ஃபார்மிகா மேசையின் கீழ் எங்கள் இருவரின் கால் மூட்டுகளும் ஒன்றையொன்று உரசுமாறு அமர்கிறோம். அவள் கடுங்காப்பி அருந்துகிறாள். அவளுக்குக் குழந்தைகள் உள்ளனராவெனக் கேட்கிறேன். ஆமாம், பதினொரு வயதில் அழகான ஒரு குட்டி மகள், என்கிறாள்.

– பதினொன்று ஒரு அதிபயங்கரமான வயது, என்கிறாள், அவள். பதினொரு வயதுக்கு முந்தியது எதுவும் எனக்கு நினைவில் இல்லை. ஆனால், மகிழ்ச்சியும் திகிலும், எல்லாமே இருந்தன. என்ன ஒரு எண், அது எப்படியான காட்சி அது, என்கிறாள், அவள். பின்னர் அவளது முகம், ஏரிக்கடியில் மூழ்கிப்போனது போல, ஒரு கணத்திற்கு எங்கேயோ தவறிக் காணாமலாகிறது.

பதினொரு வயதுப் பெண் குழந்தையை வளர்ப்பது குறித்த அச்சங்களை நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. உண்மையாகவே, அதைக் கேட்பதற்கு எனக்குப் பயமாக இருக்கிறது. அவளுக்குத் திருமணமாகிவிட்டதா என்றும் நான் அவளைக் கேட்கவில்லை. அவள் திருமண மோதிரம் அணிந்திருக்கவில்லையென்றாலும் அதுபற்றி எந்தத் தகவலையும் அவளாகச் சொல்லவில்லை. நாங்கள் என் மகனைப் பற்றி, கலைவகுப்பைப் பற்றிப் பேசினோம். எங்கள் முன்பாக, ஆடையவிழ்த்து நிற்குமளவுக்கு என்ன அவசியம் அவளுக்கு நேர்ந்ததெனத் தெரிந்து கொள்ளத் தணிக்கமுடியாத ஆவல் எனக்குள் எழுந்தாலும், அவளுடைய பதில், குமரப்பருவம் போல் மறப்பதற்கே முடியாத திகிலேற்படுத்தி விடுமோ என்ற அச்சத்திலோ என்னவோ, கேட்கத் துணியவேயில்லை.

நான் அவள்பால் முழுவதுமாக ஈர்க்கப் பட்டிருந்தேன் என்பதைத்தவிர அதைச் சொல்வதற்கு வேறு வழிவகை இல்லை. அவளிடம் எளிதில் விழுந்துவிடும் ஒரு தன்மை இருந்தது. ஆனால், என் வழியில் அது எளிதானதல்ல – எனது நிலை, இருப்பு, நான். பிசையும் கைகளுக்குள், அதன் கடினத் தன்மையை, நிலைபாட்டு வலிமையை விட்டுக்கொடுத்து நெகிழ்கிற ஒரு மாவு உருண்டையைப் போன்றவள், அவள். பார்வையைச் சிறிது அப்பால் நகர்த்திவிட்டு, மீண்டும் அவளைப் பார்க்கிறபோது, இருமடங்கு பெரிதாகத் தோன்றுகிறாள்.

ஒருவேளை, நாம் இன்னொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் பேசலாமென்கிறேன், நான். இது ஒரு மிக மகிழ்ச்சியான பிற்பகல்.

அவள் ஆமெனத் தலையாட்டுகிறாள். அவளது காபிக்கு நான் பணம் கொடுக்கிறேன்.

நான் அவளைப் பற்றி எனது கணவரிடம் பேசவிரும்பவில்லையென்றாலும், எனக்குள்ளிருந்த ஆவலை அவர் மோப்பம் பிடித்துவிட்டார். ஒரு இரவில், எனக்குள் என்ன உருண்டு கொண்டிருக்கிறதென அவர் கேட்டபோது, நான் மொத்தத்தையும் கொட்டி, ஒப்புதல் வாக்குமூலமளித்து விடுகிறேன். அவளுடைய சிவப்பு ரிப்பன் குறித்த விவரங்களைக்கூட வெட்கத்தை விட்டுக் கூறுகிறேன்.

இந்தத் தகவலால் மகிழ்ந்த அவருக்குள், அளவிடமுடியாத ஒரு பெரும் ஆவல் கிளர்ந்தெழ, அவர் காற்சட்டையை அவிழ்த்தெறிந்துவிட்டு எனக்குள் நுழைகிறார். நான் அவளுக்கு ஏதோ ஒருவகையில் துரோகம் இழைத்துவிட்டதாக உணர்கிறேன். பின்னர், நான் கலைவகுப்புக்குச் செல்லவேயில்லை.

(நீங்கள் இந்தக் கதையைச் சத்தமாக வாசித்துக்கொண்டிருப்பீர்களானால், கேட்பவர்களில் ஒருவரை, அவரது ரகசியத்தைச் சொல்லுமாறு கட்டாயப்படுத்துங்கள்; பின் அருகிலுள்ள சாளரத்தைத் திறந்து, தெருவை நோக்கி, அதை உங்களால் முடிந்த அளவுக்கு உரக்கக் கத்திச் சொல்லுங்கள்.)

* * *

எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று, வயதான ஒரு பெண்ணையும் அவளது கணவரையும் – திங்கட்கிழமைகளைப் போல ஒரு மட்டமான மனிதர் – பற்றியது. அவர் அவருடைய மூர்க்கம் நிறைந்த வன்முறையாலும் அவருடைய சபலங்களை அடிக்கடி மாற்றிக்கொள்வதன் மூலமும் அவளை அதிகமாகவே பயமுறுத்தியிருந்தார். அவளுடைய இணையற்ற சமையல் மூலமாக மட்டுமே, அவளால் அவரைத் திருப்திப்படுத்த முடிந்திருந்தது. உண்மையில் அவர் அவளுடைய சமையலுக்கு முழு அடிமை. ஒருநாள் அவர், அவருக்குச் சமைப்பதற்காக ஒரு பெரிய ஈரலை வாங்கிவந்து கொடுக்க, அவளும் அதை, பாகு மற்றும் மூலிகைகள் பயன்படுத்திச் சமைத்தாள். அவளுடைய சொந்தக் கைப்பக்குவத்தின் வாசம் அவளையே வெற்றிகொள்ள, சிறு விள்ளல்கள் ஒருசில மெல்லுதல்களாகி விரைவிலேயே ஈரல் காணாமற் போயிற்று. இரண்டாவதாக ஒரு ஈரலை வாங்கிச் சமைத்துவிடலாமெனில், அவளிடம் பணம் இல்லை. கணவருடைய உணவு காணாமற் போய்விட்டதெனில், அவருடைய சீற்றம் எப்படியிருக்குமென்று தெரிந்த அவள் மிகவும் பயந்து போனாள். எனவே அவள், அடுத்த கட்டிடத்திலேயே இருந்த தேவாலயத்துக்குள் மெல்ல நுழைந்து, அதற்கு முதல்நாள்தான் புதைக்கப்பட்ட பெண்ணின் பிணத்தை சமையலறைக் கத்தியால் அறுத்து, அதிலிருந்த ஈரலைத் திருடினாள்.

அன்று இரவு அந்தப் பெண்ணின் கணவர், துண்டால் உதடுகளைத் துடைத்துக் கொண்டே, இதுவரையிலும் அவர் சாப்பிட்ட உணவுகளிலேயே அதுதான் அருமையானதென்று அறிவித்தார். அவர்கள் தூங்கச்சென்றபோது, அந்த வயதான பெண்மணி முன்புற வாயிற்கதவு திறக்கும் ஒலியுடன், மெல்லிய ஓலமொன்றும் அறைகளைக் கடந்து வருவதைக் கேட்டார். என் ஈரலை வைத்திருப்பவர் யார்? என் ஈரலை வைத்திருப்பவர் யாஆஆஆஆஆர்?

அந்தக் குரல் படுக்கையறையை நோக்கி நெருங்கி, நெருங்கி வருவதை அந்த வயதான பெண்ணால் கேட்கமுடிந்தது. கதவு திறந்த சப்தமும் எழுந்தது. இறந்த பெண் மீண்டும் அவளது கேள்வியை எழுப்பினாள்.

அந்த வயதான பெண்மணி அவளது கணவரின் போர்வையை விலக்கினாள்.

– இவரிடம்தான் இருக்கிறது! அவள் வெற்றிகரமாக அறிவித்தாள்.

பின்னர், அவள் இறந்த பெண்ணின் முகத்தைப் பார்த்துத் தன்னுடைய வாயும் கண்களுமே அங்கிருப்பதை உணர்ந்தாள். அவள் குனிந்து தன் அடிவயிற்றைப் பார்த்து, அவளுடைய சொந்த வயிற்றையே எப்படி வெட்டியெடுத்தாளென்பதை நினைவுகொண்டாள். அவளையடுத்து, மெத்தையின் அடிப்பாகத்துக்கே இரத்தம் ஊறிக் கீழிறங்க, அவளது கணவர் நல்ல உறக்கத்திலிருந்தார்.

இந்தக் கதை விவரம் நீங்கள் ஏற்கனவேயே கேட்டு, நன்கு அறிந்தவொன்றாக இருக்காது. ஆனால், நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன், இதுதான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய கதை.

* * *

என் கணவர் ஹாலோவீன்(பேய் முகமூடி) விளையாட்டில் அநியாயத்துக்கு ஆர்வம் காட்டுகிறார். எங்கள் மகன் நடக்கவும், பரிசுக் கூடையைச் சுமக்கவும் வலுவுள்ளவனாக இருக்கிறான். என் மகன் ஒரு சிறிய பேராசிரியரைப் போல அல்லது விவரம் தெரிந்த கல்வியாளர் போலத் தெரியட்டுமென என் கணவரின் பழைய, முழுநீள உடற்கோட்டு ஒன்றினை எடுக்கிறேன். என் கணவர், அவன் வாயில் கடித்துக் கொள்ள ஒரு புகைக்கும் குழாயைக்கூடக் கொடுக்கிறார். எங்கள் மகன் அதை, அவன் பற்களுக்கிடையில் வைத்து, வளர்ந்தவர்களின் வாயில் தொங்குவதை நான் பார்த்திருப்பது போலச் சுண்டிக் காட்டுகிறான்.

– மா, என என்னை அழைக்கிற என் மகன், நீ என்னவாக இருக்கிறாய்? என்கிறான்.

நான் எந்த வேடமும் போடவில்லை. அதனால், உன் அம்மா என்கிறேன்.

புகைக்கும் குழாய் அவன் வாயிலிருந்து கீழே விழுகிறது. அவன் அலறுகிறான். என் கணவர் பாய்ந்து அவனைத் தூக்கி, அவனைச் சமாதானப்படுத்துவதற்காக, அவன் தேம்பல்களுக்கிடையே மீண்டும் மீண்டும் அவன் பெயரைச் சொல்லியழைத்து, பேச்சு கொடுக்கிறார்.
அவனுடைய சுவாசம் இயல்புக்குத் திரும்பியபோதுதான் என்னுடைய தவறு என்னவென என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. விளையாட்டுக்கான டமாரக் கொட்டு கேட்கிற குறும்புக்காரச் சிறுமிகள், அவர்களின் அம்மா வெளியில் போய் வேறு புதிய அம்மா – கண்ணாடிக் கண்களும் மர வாலுமாக – திரும்பி வருமளவுக்குக் கெட்டவர்களாக இருந்த கதையைத் தெரிந்து கொள்ளப் போதிய வயது அவனுக்கு இன்னும் வரவில்லை. நான் அவனுக்கு வேறு ஒரு சிறுவனின் கதையைச் சொல்லியிருக்கிறேன் – ஹாலோவீனின் போதுதான், எல்லோரும் முகமூடி அணிந்திருக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவனுடைய அம்மா, அவனுடைய அம்மாவாக இல்லை எனக் கண்டுபிடிக்கிற கதை. குற்ற உணர்வு என் தொண்டைக்குள்ளும் இறங்கிப் பாய்கிறது. நான் அவனைப் பிடித்து, முத்தமிட முயற்சிக்கிறேன்.ஆனால், அவனோ, தொடுவானத்துக்கும் கீழாக வெயில் மூழ்கி, மறைந்து, நிழலையும் துளைக்கும் பனிக்குளிரில், வெளியே தெருவுக்குப் போகவே அடம் பிடிக்கிறான்.

ப்ளம் இலந்தை நிறத்திற்கு அவனது வாயைச் சிவப்பாக்கிய ஒரு மிட்டாயைச் சுவைத்துக்கொண்டு, அவன் மீண்டும் வீட்டுக்குள் வருகிறான். நான் என் கணவரிடம் கோபிக்கிறேன். ஒளித்து வைத்திருந்த மிட்டாயை அவனுக்குக் கொடுக்கும் முன்பாகவே, அவர் வீட்டிற்கு வந்திருக்கவேண்டுமென்கிறேன். அவர் அந்தக் கதைகளையெல்லாம் கேட்டதேயில்லையா? சாக்லேட்களுக்குள் குண்டூசி அழுத்துவது, ஆப்பிளுக்குள் பிளேடுகளைச் செருகுவது? என் மகனின் வாயைத் திறந்து உற்றுப் பார்க்கிறேன். அவன் அண்ணத்தில் எந்தக் கூர்மையான பொருளும் குத்தியிருக்கவில்லை. அவன் சிரிக்கிறான்; அவனுக்குக் கிடைத்த முக்கியத்துவத்தில் மகிழ்ந்து, பரவசமாகி, வீட்டுக்குள்ளேயே தட்டாமாலை சுற்றுகிறான். முன் சம்பவத்தை மறந்து, அவனது சிறு கரங்களால் என் கால்களைக் கட்டிப் பிடிக்கிறான். மன்னிப்பு, எந்த வீட்டு வாசலிலும் கொடுக்கும் மிட்டாயைவிடவும் இனிக்கிறது. அவன் என் மடியில் ஏறும்போது, அவனுக்காக, அவன் தூங்கும் வரையில் நான் பாடிக்காட்டுகிறேன்.

* * *

எங்கள் மகனுக்கு எட்டு, பின் பத்து வயது ஆகிறது. நான் அவனுக்கு தேவதைக் கதைகளை – மிகமிகப் பழைய கதைகளை, வலி, வேதனை, மரணம் எல்லாவற்றோடும் கட்டாயத் திருமணங்கள் காய்ந்த சருகுகள் போல் உதிர்ந்து போனதையும் சொல்கிறேன். கடல்கன்னிகளுக்குக் கால் முளைக்கிறது; அது சிரிப்பாகத் தெரிகிறது. குறும்புக்காரப் பன்றிகள் பெரிய விருந்துகளிலிருந்தும் விலகிச் செல்கின்றன, திருந்துகின்றன, உணவாகாமல் தப்பிக்கின்றன. கெட்ட சூனியக்காரிகள் அரண்மனையிலிருந்தும் சிறு குடிசைகளுக்குச் சென்று, அங்கேயே காட்டுப்பகுதி உயிரிகளின் ஓவியங்களை வரைந்து கொண்டு வாழ்க்கையைக் கழிக்கின்றனர்.

அவன் வளர்கிறான், ஆனால் கேள்விகள் கேட்கிறான். பன்றிகள் அவனைப் போலவே பசியோடும் கெட்டனவாகவும் இருந்தாலும் எதனால் பன்றிகளை, உணவாகக் கொள்ளக்கூடாது? அவ்வளவு பயங்கரமான செயல்களைச் செய்திருந்தும், அந்தச் சூனியக்காரி, எதனால் கடைசியில் எந்தத் தண்டனையுமில்லாமல், போக அனுமதிக்கப்படுகிறாள்? செவுள்கள் கால்களாகப் பிளவுறும் உணர்வு, சித்திரவதைக்கும் குறைவானதாகவா இருக்குமெனச் சொல்லிப் பின் அவனாகவே அதை முழுவதுமாக, கத்திரியால் அவன் கையை வெட்டிக் கொண்ட பிறகு, புறந்தள்ளுகிறான்.

– ரைட் என்பதில் ‘ர’ உச்சரிப்பதில் அவனுடைய சிரமங்களோடு ‘அய்ட்’ என்கிறான்.

நான், அவன் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். அது அப்படியேதானிருக்கும். அதனால் உண்மைக்கு மிக நெருக்கமான கதைகளை அவனுக்குச் சொல்லத் தொடங்குகிறேன்:

ரயில் பாதை ஒன்றில், அதன் குறிப்பிட்ட ஒரு நீள் எல்லைக்குள் மட்டும் கண்ணுக்குத் தெரியாத ஒரு இரயிலின் ஓசையால் கவரப்பட்டு, அறியாத பகுதிகளுக்குக் காணாமற் போகும் குழந்தைகள்; அவர்கள் சென்றதற்கு மூன்று நாட்கள் முன்பாக ஒரு நபரின் வீட்டு வாசலில் தோன்றிய கறுப்பு நாய், சதுப்பு நிலத்தவளைகள் மூன்று தவளைகள், உங்களை மிரட்டி குறிப்பிட்ட ஒரு விலை தந்தால் உங்கள் அதிர்ஷ்டத்தைத் தெரிவிப்பதாகக் கூறுதல்.

பள்ளி ‘லிட்டில் பக்கிள் பாய்’ என்றொரு கலைநிகழ்வு அறிவிக்கிறது. என் மகன் தான் தலைமைப் பாத்திரம், பக்கிள் பாய். குழந்தைகளுக்கான ஆடை மற்றும் ஒப்பனை அலங்காரத்திற்கான அம்மாக்களின் குழுவில் நான் சேர்கிறேன். நான் தலைமை ஒப்பனையாளர்; முழுவதுமாகப் பெண்கள் நிறைந்த அறையில், நாங்களெல்லோரும் அமர்ந்து, மலர்க் குழந்தைகளுக்காக சிறுசிறு பட்டுப் பூவிதழ்களைப் பின்னுவதும் கடற் கொள்ளையர்களுக்கான மூட்டுக்குக் கீழ் இறுக்கமாகவும் மேற்பகுதி தளர்வாகவுமான சிறு வெள்ளைநிறக் காற்சட்டைகளைத் தைப்பதுமாக இருக்கிறோம். அம்மாக்களில் ஒருவர் விரலொன்றில் வெளிறிய மஞ்சள் நிறத்தில் ரிப்பன் ஒன்று கட்டியிருக்கிறார்; அது அவர் தைக்கும் நூலோடு சிக்குகிறது. அவள் ‘அடச்சே’ என அலுத்துக் கத்துகிறாள். ஒருநாள் சிக்கும் நூல்களைப் பிரிக்க நான் துணிவெட்டும் கத்திரியைப் பயன்படுத்த வேண்டியதாகிறது. நான் இன்முகத்தோடிருக்க முயற்சிக்கிறேன். அவளுடைய பிரச்சினையிலிருந்தும் அவளை நான் விடுவித்ததும், அவள் தலையைக் குலுக்கிக் கொள்கிறாள்.

– அப்படியான ஒரு தலைவலி, இல்லையா? என்கிறாள், அவள்.

நான் தலையாட்டுகிறேன். சாளரத்துக்கு வெளியே குழந்தைகள் மைதான விளையாட்டுக் கருவியிலிருந்து அகன்று ஒருவரையொருவர் தள்ளியும், டான்டிலியான் மஞ்சள் மலர்களின் பஞ்சுத் தலைகளைப் பிய்த்து வீசியும் விளையாடுகின்றனர். விளையாட்டு அழகாக நடக்கிறது. இரவைப் பிளந்து, எங்கள் மகன், அவனுடைய நாடகத் தனிமொழியால் ஒளிர வைக்கிறான். மிகமிகச்சரியான தொனியில் ஏற்ற இறக்கத்துடன் தெளிவான பேச்சு. வேறு எவரும் இதைவிட நன்றாக, எப்போதுமே செய்ததில்லை.

எங்கள் மகனுக்குப் பன்னிரண்டு வயது. அவன் என்னிடம், தெள்ளத்தெளிவாக, ரிப்பன் பற்றிக் குறிப்பிட்டுக் கேட்கிறான். நாம் எல்லோருமே தனித்தனியாக வேறுபட்டவர்கள். அதோடு சிலநேரங்களில் நீ கேள்விகள் கேட்கக்கூடாதென நான் அவனுக்குச் சொல்கிறேன். அவன் வளர்ந்தபின் நிச்சயமாக அது அவனுக்குப் புரியுமென்பதை உறுதியாகக் கூறுகிறேன். ரிப்பன்கள் இல்லாத கதையைக் கூறி அவன் கவனத்தை வேறுபக்கமாகத் திருப்புகிறேன்: மனிதர்களாக இருக்க விரும்பிய தேவதைகள், தாம், இறந்துவிட்டவர்கள் என்பதை உணராத பேய், பிசாசுகள் மற்றும் அசோக மரமாக மாறுகின்ற குழந்தைகள். குழந்தை மணம் – இனிமையான பால் மணம் அவனிடம் விடைபெற்றுச் சென்றுவிட, மூக்கினை உறுத்துகிற, ஏதோ ஒன்று பற்றியெரிகிற, நெருப்பில் பொசுங்கும் முடி போன்ற ஒரு வாசனை இடம்பிடிக்கிறது.

எங்கள் மகனுக்குப் பதின்மூன்று, பதினான்கு வயது ஆகிறது. பள்ளிக்கூடம் செல்லும் வழியில், மற்ற பையன்களைவிட மெல்ல நடக்கும், பக்கத்து வீட்டுப் பையனுக்காகக் காத்து நிற்கிறான். மிகமிக நுட்பமான பரிவுணர்ச்சியை வெளிப்படுத்துகிறான், என் மகனல்லவா! சில பிள்ளைகளின் குரூரம் அவனிடமிருப்பதான அறிகுறியே அவனிடம் இல்லை.

– அவனிடம் எப்போதுமே மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன். இந்த உலகத்தில் போதும் போதுமென்கிற அளவுக்கு அடாவடிக்காரர்கள் உள்ளனர்.

இந்த வருடம்தான், அவன் என்னிடம் கதை சொல்லு எனக் கேட்பதை நிறுத்துகிறான்.

எங்கள் மகனுக்கு பதினைந்து, பதினாறு, பதினேழாகிறது. அவனுடைய உயர்நிலைப் பள்ளியில், இணக்கமான நட்புணர்வும் புன்னகைப் பொலிவும் மிக்க, அழகான ஒரு இளையவளோடு நெருக்கம் கொள்ளத் தொடங்குகிறான். அவளைச் சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால், எனது சொந்த இளமைக்காலத்தை நினைவில் கொண்டே, அவர்கள் திரும்பி வரும் வரை நாங்கள் காத்திருப்பதாக அவர்களிடம் ஒருபோதும் சொல்வதேயில்லை.

பொறியியல் கற்பதற்காக, ஒரு கல்லூரியில் அவனுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக அவன் சொன்னதும் நான் பெருமகிழ்ச்சியில் திளைத்தேன். நாங்கள் வீட்டுக்குள்ளேயே சிரித்தும், பாடியும் உலவினோம். என் கணவர் வீட்டுக்கு வந்ததும், அவரும் அந்த மகிழ்ச்சியில் கலந்தார்; நாங்கள் அருகிலுள்ள ஒரு கடலுணவகத்துக்குக் காரில் சென்றோம். ஹாலிபட் மீனைச் சாப்பிட்டு முடித்ததும், என் கணவர் அவனிடம் சொல்கிறார்: நாங்கள் உன்னை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறோம். எங்கள் மகன் சிரித்து, அவனுடைய அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொல்கிறான். நாங்கள் அவன் கைகளைப் பற்றிக் கொள்கிறோம்; மேலும் மகிழ்ச்சி கொள்கிறோம். அப்படி ஒரு நல்ல பையன். அப்படி ஒரு அற்புத வாழ்க்கை அவனுக்காகக் காத்திருக்கிறது.

இப்போது வாழ்கிற, எவ்வளவு பெரிய மிகமிக அதிருஷ்டசாலிப் பெண்ணும்கூட இந்த நிமிடம், என்னைப் போல் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கமாட்டாள்.

* * *

இதுவரையிலும் நான் உங்களுக்குச் சொல்லாத ஒரு செவ்வியல், உண்மையிலேயே செவ்வியல் கதை ஒன்று இருக்கிறது.

ஒரு ஆண்சிநேகிதனும் ஒரு பெண்சிநேகிதியும் கார் நிறுத்தச் சென்றார்கள். அப்படியென்றால், அவர்கள் காருக்குள் முத்தமிடச் சென்றதாகச் சிலர் சொல்வார்கள். ஆனால், அந்தக் கதை எனக்குத் தான் தெரியும். நான் அங்கே இருந்தேன். அவர்கள் ஏரி ஒன்றின் விளிம்பில் கொண்டுபோய்க் காரை நிறுத்தியிருந்தார்கள். உலகமே முடியப் போகும் தருணத்திலிருப்பதாக நினைத்துக் கொண்டு, அவர்கள் பின்னிருக்கைக்குள் சென்றார்கள். அது அப்படித்தானிருந்திருக்கவும் செய்யலாம். அவள் தன்னைக் கொடுக்க, அவன் எடுத்துக் கொள்ள, அது முடிந்த பிறகு, அவர்கள் வானொலியைத் திருப்பினார்கள்.

உள்ளூர் மனநோயாளர் இல்லத்திலிருந்து, பைத்தியம் பிடித்த கொக்கிக் கைக் கொலைகாரன் ஒருவன் தப்பித்துள்ளதாக, வானொலிக்குரல் அறிவித்தது. ஆண்சிநேகிதன் ஹெக்கென்று ஒரு இகழ்ச்சியை உதிர்த்து விட்டு, வானொலியை இசை நிலையம் ஒன்றுக்கு மாற்றுகிறான். பாடல் முடியவும், அந்தப் பெண்சிநேகிதி, காகித கிளிப் ஒன்று கண்ணாடி மீது உரசுவது போன்றதொரு மெல்லிய சுரண்டும் சப்தத்தைக் கேட்கிறாள். அவள் அவளுடைய ஆண்சிநேகிதனைப் பார்க்கிறாள். பின்னர், அவளுடைய வெற்றுத் தோள்களை, அவளது பின்னல் கம்பளி மேற்சட்டையைக் கொண்டு போர்த்துகிறாள். அதனுடன் அவள் மார்பகத்தைப் பற்றியிருக்கும் ஒரு கையும் சேர்ந்திருக்கிறது.

– நாம் இப்போதே போகவேண்டுமென்கிறாள், அவள்.

– இல்லை, பேபி, என்கிறான் ஆண்சிநேகிதன். நாம் அதை மீண்டும் செய்வோம்.

– கொலைகாரன் வந்துவிட்டால் என்ன செய்வது? அந்தப் பெண் கேட்கிறாள். மனநோய் இல்லம் அருகிலேயே இருக்கிறது.

– நாம் அருமையாக இருப்போம், பேபி, என்கிறான், ஆண்சிநேகிதன். நீ என்னை நம்பவில்லையா?

அந்தப் பெண்சிநேகிதி அரைகுறையாகத் தலையாட்டுகிறாள்.

– பிறகென்ன, என்ற அவன் குரல் அவளுக்கு நன்கு தெரிகிற மாதிரியில் மெல்லக் கீழிறங்குகிறது. அவள், அவனுடைய கையை அவளுடைய மார்பிலிருந்தும் அகற்றி, அது இருக்கவேண்டிய இடத்தில் கொண்டுபோய் வைக்கிறாள். கடைசியில், அவள் ஏரிப்பக்கமிருந்து வேறுபக்கத்திற்குப் பார்வையைத் திருப்புகிறாள்.

வெளியே, நிலவின் ஒளி, பளபளக்கும் இரும்புக்கொக்கியின் மீது பட்டுத் தெறிக்கிறது. கொலைகாரன் ஒரு முனகலுடன் அவளை நோக்கிக் கையசைத்துச் செல்கிறான்.

மன்னித்துக்கொள்ளுங்கள், மீதிக்கதையை நான் மறந்துவிட்டேன்.

* * *

எங்கள் மகன் இல்லாமல் வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. நான் அதன் மேனியெங்கும் தொட்டுணர்ந்து கொண்டே நடக்கிறேன். நான் மகிழ்ச்சியாகத் தானிருக்கிறேன். ஆனாலும் எனக்குள்ளிருக்கும் ஏதோ ஒன்று புதுமையான ஒரு வேறிடத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறது.

அன்று இரவில் என் கணவர், புதிதாகக் காலியாகியுள்ள அறைகளுக்குத் திருமுழுக்கு நடத்த விரும்புகிறாயாவெனக் கேட்கிறார். எங்கள் மகன் பிறந்து இதுவரையிலும் அவ்வளவு மூர்க்கத்தோடு நாங்கள் புணர்ந்திருக்கவில்லை. சமையலறை மேஜை மீது சாய்ந்திருந்தபோது, எனக்குள் பழைய ஏதோ ஒன்று தீப்பற்றிக்கொள்ள, நாங்கள் முன்னர் எப்படி ஆவல் கொண்டிருந்தோமென, நாங்கள் எப்படி எல்லா இடங்களிலும் காதலை நுழைத்துப் பரப்பியிருந்தோமென நினைத்துப் பார்க்கிறேன். நான் பதினேழு வயதாக இருந்தபோது, அந்த விருந்தில் எந்தவொரு பையனையும், வெட்கப்படுவதாகக் காட்டுகிற அல்லது வல்லுணர்வு காட்டுகிறவனைக் கூட, என்னை வேற்று நாட்டுக்கு அழைத்துச் சென்று அதன் குடியுரிமை பெற்றுத் தரக்கூடிய மதம் சார்ந்தவர்களைக் கூடத் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஒருவேளை சொல்லமுடியாத அளவுக்குப் பலப்பல துயரங்களிலும் அதிருப்தியிலுங்கூட விழுந்திருப்பேனோ, என்னவோ, ஆனால், அவரைத் தரையில், கைகால்களை அகட்டிப் படுக்கவைத்துக் குதிரை ஓட்டிக் கத்தல் சப்தத்தை வெளியிடுகிற ஒவ்வொரு பொழுதிலும் நான் சரியான தேர்வைத் தான் செய்திருக்கிறேனெனத் தெரிந்துகொள்கிறேன்.

நாங்கள், படுக்கையில் நிர்வாணமாகக் கைகால்களைப் பரப்பிச் சோர்ந்து உறங்குகின்றோம். நான் விழிக்கின்றபோது, என் கணவர் என் கழுத்தின் பின்பக்கமாக முத்தமிட்டு, நாக்கால் என் ரிப்பனைத் துழாவுகிறார். அப்போதும் நான், இன்ப நினைவுகளைத் துழாவிச் சிலிர்த்திருக்க, துரோகத்திற்கெதிராக என் உடல் உதறுகிறது. நான் அவருடைய பெயரைச் சொல்லி அழைக்கிறேன், ஆனால் அவரிடம் எந்த பதிலும் இல்லை. நான் அதை மீண்டும் உரக்கக் கூறுகிறேன், ஆனால் அவர் என்னைத் தடுத்துப் பிடித்துக்கொண்டு, அதையே தொடர்கிறார். நான் அவரை முழங்கை மூட்டுகளால் இடிக்க, ஆச்சரியத்தில் அவர், பிடியைத் தளர்த்துகிறார். நான் எழுந்து உட்கார்ந்து அவர் முகம் பார்க்க அமர்கிறேன். அவர் குழம்பிக் காயம்பட்டதாக, காசு டப்பாவைக் குலுக்கிய போது என் மகன் கலவரப்பட்டுத் தோன்றினானே, அதுபோலத் தெரிகிறார்.

என் உறுதிப்பாடு குலைந்து என்னிடமிருந்தும் வெளியேறுகிறது. நான் ரிப்பனைத் தொடுகிறேன். என் கணவரின் முகத்தைப் பார்க்கிறேன், அதில் அவரது ஆவல்களின் தொடக்கம் முதல் முடிவு வரையில் எல்லாமே பொறிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு கெட்டவரல்ல என்பதுதான் எனது துன்பமாக இருக்கிறதென்பதைத் திடீரென நான் உணர்கிறேன். அவர் கெட்டவரே அல்ல. இருப்பினும் –

– ரிப்பனை அவிழ்க்க விரும்புகிறீர்களா? நான் அவரைக் கேட்கிறேன். இந்த அளவுக்குப் பல ஆண்டுகள் கழிந்தும் என்னிடம் உங்கள் எதிர்பார்ப்பு இதுதானா?

அவரது முகம் முதலில் மகிழ்ச்சியில் ஒளிரப் பின் அவரது கை பேராவலுடன் எனது ஆடையற்றிருந்த மார்பகத்தில் படிந்து, பின் என் முடிச்சுக்கு நீள்கிறது.

– ஆமாம், அவர் சொல்கிறார், ஆமாம்.

– அப்படியென்றால், நீங்கள் விரும்புவதைச் செய்துகொள்ளுங்கள், என்கிறேன்.

விரல்கள் நடுங்க, அவர் ரிப்பனின் ஒரு முனையைத் தொடுகிறார். முடிச்சு மெல்ல அவிழ்கிறது. நீண்டகாலமாகக் கட்டுண்டு கிடந்த விளிம்புகள், முனைகள், ஏற்கெனவேயே மடிந்திருந்த பழக்கத்தில், அவிழ்த்த பிறகும் மடிந்தேயிருக்கின்றன. என் கணவர் முனகுகிறார்; ஆனால் அவர் தன்னுணர்வில்லாமலேதான் முனகுவதாக நான் நினைக்கிறேன். அவர் கடைசி மடிப்புக்குள் விரலை நுழைத்து இழுக்கிறார். ரிப்பன் கீழே விழுகிறது. அது மிதந்து வந்து என் காலடியில் சுருள்கிறது; அப்படி நான் நினைத்துக் கொள்கிறேன், ஏனெனில் குனிந்தவாறே, அதன் வீழ்ச்சியைத் தொடர்ந்து காண என்னால் முடியாது.

என் கணவர் முகத்தைச் சுழிக்கிறார்; பின் அவரது முகம் வேறு உணர்வை – துக்கம் அல்லது இழப்பை முன்னுணர்வதைப் பிரதிபலிக்கத் தொடங்குகிறது. என் கை ஒன்று என் கண்முன்பாகவே பறக்கிறது – சமநிலைப்படுத்த அல்லது வேறேதோ ஓர் பயனற்றுப் போன தன்மையை வெளிப்படுத்துவதான அனிச்சைச் செயல் – அதனைத் தாண்டி அங்கிருந்த அவரது பிம்பம் போய்விட்டிருந்தது.

– உங்களைக் காதலிக்கிறேன், அவருக்கு உறுதியாகச் சொல்கிறேன், உங்களுக்கு எவ்வளவுக்குத் தெரிந்திருக்க முடியுமோ அதற்கும் மேலாக, மிகையாகக் காதலிக்கிறேன்.

– இல்லையென்கிறார் அவர், ஆனால், அவர் என்ன பதில் சொல்லுகிறாரென எனக்குத் தெரியவில்லை.

நீங்கள் இந்தக் கதையைச் சத்தமாக வாசித்துக் கொண்டிருப்பதானால், அந்த ரிப்பன் மறைத்துப் பாதுகாத்திருந்த இடம் பிளவுபட்டு இரத்தத்தால் நனைந்திருக்குமென்றோ, அல்லது, விரையில்லாத பொம்மையின் கால்களுக்கிடையிலான இணைப்பு போல வழவழப்பாக, இருக்குமென்றோ நினைத்து வியந்திருக்கலாம். நான் உங்களுக்கு அதைச் சொல்லமுடியாதென்றே அஞ்சுகிறேன், ஏனென்றால், எனக்கே அது தெரியாது. இந்தக் கேள்விகளோடு, இதர கேள்விகளுக்கும், அவற்றின் தீர்மானமின்மைக்கும் சேர்த்து, மன்னித்துக் கொள்ளுங்கள் என்பதுதான் என் பதில்.

என்னுடைய எடை குறையக் குறைய, புவியீர்ப்பு என்னைப் பற்றிக் கொள்கிறது. என் கணவரின் முகம் மெல்ல மெல்ல மறைகிறது, பின் மேற்கூரையையும் என் பின்னாலுள்ள சுவர்களையும் காண்கிறேன். துண்டாகிய என் தலை என் கழுத்திலிருந்தும் பின்பக்கமாகச் சரிந்து படுக்கையில் விழுந்து உருள, நான் முன்னர் எப்போதுமிருந்தது போல் தனிமையாக உணர்கிறேன்.

***

நன்றி : கிரெண்டா