- கௌதம சித்தார்த்தன்
இன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்! செப்டம்பர் 30 இந்த நாளை உலக சமூகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் மொழிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகம் தழுவிய கலை, பண்பாடு, பொருளாதார வளர்ச்சி, அரசியல், மனித வாழ்வியல்..போன்ற எண்ணற்ற போக்குகளை பரஸ்பரம் அறிந்து கொள்வதற்கும், மொழிபெயர்ப்பு தொடர்புக் கண்ணிகளாகச் செயல்படுகிறது.
இந்த நாளில், நம் நவீன தமிழ்ச் சூழலில் அலட்சியப்படுத்தப்படும் ஒரு முக்கியமான பதத்தின் பிரயோகத்தை முன்வைத்து கொஞ்சம் பேசுவோம்.
முதலில் இடாலோ கால்வினோ வின் If on a Winter’s Night a Traveler Novel நாவலிலிருந்து ஆரம்பிப்போம்.
கடந்த 25 – 30 வருடங்களுக்கு முன்பு, (2001 என நினைக்கிறேன்) உன்னதம் வெளியீடாக நான் வெளியிட்ட இடாலோ கால்வினோவின் If on a Winter’s Night a Traveler Novel நாவலை, ‘குளிர்கால இரவில் ஒரு பயணி’ என்ற தலைப்பில் பெயர்த்த சா தேவதாஸ் மொழியாக்கத்தை இங்கு முன்வைத்து பேசலாம். அப்பொழுது, ஆங்கில மொழிப்பயிற்சியும், உலகளவிலான மொழியாக்கக் கூறுகள் மற்றும் மொழியியல் சார்ந்த பார்வை எதுவும் இல்லாத காலகட்டம். என் ஒரே சிந்தனை, தமிழ் இதழ்களில் வெளிவந்த கால்வினோவின் படைப்புகள் குறித்த அறிமுகத்தைக் கொண்ட அதி தீவிர உணர்ச்சி வேகம். நான் Invisible ஆக உணர்ந்து பெரிதும் ஆராதித்த கால்வினோவின் படைப்புகள். நான் நொட்டையிட்டுக் கொண்டு பார்த்த பின் நவீனத்துவ நாவல் அது!
நாவல் வெளி வந்ததும், பிரம்மராஜன் மற்றும் சிலரிடமிருந்து விமர்சனம் வரத்துவங்கியது. “அதன் தலைப்பே தவறாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது, If என்கிற பதத்தை விட்டுவிட்டு மொழிபெயர்த்திருக்கிறார்..” போன்ற விமர்சனங்கள். அவற்றை ஏற்றுக் கொள்ளவும் செய்யாமல், தள்ளியும் வைக்காமல் தமிழில் வெளிவந்த அனைத்து மொழி பெயர்ப்புகளையும் தேடிப் பிடித்துப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு விரிவான ஆய்வு முகத்தை நோக்கி என்னை நகர்த்திய அந்த விமர்சனங்களுக்கும் பிரம்மராஜனுக்கும் நன்றி!
“குளிர்கால இரவில் ஒரு பயணியாக இருந்தால்..” அல்லது “குளிர்கால இரவில் ஒரு பயணியானால்..” என்றுதான் அந்தத் தலைப்பு இருந்திருக்க வேண்டும். என்று ஒரு தார்மிகமான முடிவுக்கு வந்தேன். ஏனெனில், அந்தக் கதை உலகம் பின்நவீனத்துவ பாணியில் நகரும் அபாரமான கதை சொல்லல்! 12 அத்தியாயங்களும், 13 கதைகளாக விரிந்து பரவும் அந்த Text -ல், குளிர்கால இரவில் பயணம் செய்யும் ஒரு பயணி என confirm செய்யக்கூடாது. ஏனெனில் இந்த வாக்கியம் (தலைப்பு) முற்றுப் பெற்று விட்டது. முடிந்த முடிவாய் இருக்கக்கூடாது. “பயணியாக இருந்தால்” என்று தொக்கி நிற்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த Text க்குள் நுழைய முடியும், அந்த Narration ஐ உள்வாங்க முடியும்.
அதே சமயத்தில், ஒரிஜினல் தலைப்பை, கதைக்குள் இருக்கும் மையக்கருத்தை மனதில் வைத்து,வேறொரு தலைப்பாக மாற்றுவது சற்றே ஏற்றுக் கொள்ளக்கூடியது. அப்படி தலைப்பை உள்ளடக்கத்திற்கு ஏற்ப மொழிபெயர்ப்பாளர்கள் மாற்றும் சங்கதிகள் நிறைய்ய இருக்கின்றன. அப்படியான மூலத் தலைப்பை மொழிபெயர்ப்பாளர் மாற்றும் விஷயத்தை இங்கு சொல்ல வரவில்லை.
ழீன் பால் சார்த்தரின் புகழ் பெற்ற நாடகமான No Exit என்பதை, ‘மீளமுடியுமா?’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார் வெ.ஸ்ரீராம். சார்த்தரின் புகழ் பெற்ற தத்துவப் பார்வை கலந்த அந்த நாடகத்தின் உள்ளடக்கம், ‘(தப்புவதற்கான) வழியே இல்லை’ என்பதுதான். அதை, ‘மீளமுடியுமா?’ என்று சொல்வதன் மூலம், தப்பிப்பதற்காக வழி இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. (இது போன்ற விஷயங்களை பின்னர் பார்க்கலாம்)
இந்த நாவலை மொழிபெயர்த்தவருக்கு “If ” தேவையில்லை என்று நினைத்திருக்கலாம். அது தேவையில்லாத குழப்பங்களை வாசகனுக்கு ஏற்படுத்திவிடும் என்று யோசித்திருக்கலாம். அது மட்டுமல்லாது, நம் தமிழ் மொழியின் தன்மை அந்த “If ” இல்லாமலேயே அந்த நாவலின் மையச் சரடை வாசகன் உணர்ந்து கொள்ளமுடியும் என்று மொழிபெயர்ப்பாளர் தீர்க்கமான முடிவுக்கு வந்திருக்கலாம். ஏனெனில், ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு தன்மை (அதாவது, புரிந்து கொள்ளல் தன்மை) இருக்கிறதுதானே.
ஆனாலும், அந்த If ஐ சேர்த்து மொழிபெயர்க்கும்போது கதையின் தன்மை பெரிதும் மாறுவதற்கான சந்தர்ப்பமும் இருக்கிறது. “குளிர்கால இரவில் ஒரு பயணியாய் இருந்தால்..” என்று சொல்லும்போது, (மொழிபெயர்ப்பாளர் மொழியாக்கம் செய்யும்போது, வாசகன் படிக்கும்போது) கதையின் மையம் பல்வேறு பரிமாணங்களில் நிச்சயமாக மாறும்.
உதாரணமாக, “நிலவு ஒளியூட்டிய இலைகளின் தரை விரிப்பின் மீது ..” என்ற அத்தியாயத்தை வாசகன் படிக்கும்போது, குளிர்கால இரவில் ஒரு பயணியாக அதை வாசிப்பான். அதில் வரும் திரு ஒகேடா, ஜின்கோ மரத்தின் இலைகளின் மீது நடந்து செல்லும்போது, அவரோடு கூட நடக்கும் மனைவி மியாகி, அவரது பருவ மகள் மஹிகோ, அந்தக் கதையின் நாயகன் அனைவருக்குமான நடை என்பது, “குளிர்கால இரவில் ஒரு பயணி” வாசித்தால் மிகச் சாதாரணமாக இருக்கும். ஆனால், “குளிர்கால இரவில் ஒரு பயணியாய் இருந்தால்..” என்று “பயணியாய் இருந்து வாசித்தால், ஜின்கோ மரத்தின் இலைகளில் ஸ்பர்சிக்கும் காமம் உள்ளங்கால்களில் இருந்து உச்சந்தலை வரை எகிறியடிக்கும். அந்த இலைகளின் தரைவிரிப்பையும், ஆற்றின் ஓரத்தில் அலர்ந்திருக்கும் அல்லிப்பூக்களின் தண்டுகளை வளைத்து பூக்களை பறிக்கும்போது, மியாகி சீமாட்டியின் தொய்ந்த மார்புகள் அவனது முதுகில் உராயும் பசப்புத் தன்மைகளின் உரையாடலை உணர முடியும். மஹிகோவின் திண்ணிய மார்புகள் அழுந்தும் உரையாடலை வேறுவிதமாக உணரமுடியும்.
இப்படி ஒவ்வொரு கதைகளில் உள்ள If ஐயும் காட்சிப்படுத்திக் கொண்டே போக முடியும்.
ஆதலால், அடுத்த பதிப்பு வெளியிடும்போது, If ஐ முன்வைத்துதான் வெளியிடவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதே சமயத்தில், If ஐ நீங்கள் இணைத்தீர்களானால், அதன் பார்வையிலிருந்து கதை நகருமேயானால், இந்த மொழியாக்கத்தை மீதும் முதலிலிருந்து புத்தம் புதியதாகத்தான் Fresh ஆகாச செய்ய முடியும் என்பதையும் உணர்ந்தேன். அதற்கான தருணம் நேரும் என்று எதிர்பார்த்திருந்தேன்.
இப்பொழுது ஒரு சிறு பஞ்சாயத்து :
(2000 களில் நான் உன்னதம் இதழ் சார்பாக சில நூல்களை வெளியிடலாமென்று முடிவு செய்து, ‘குளிர்கால இரவில் ஒரு பயணி’ நூலை வெளியிட்டேன். (தேவதாஸ் கொடுத்த கைப்பிரதியில் நானும் சில மொழிபெயர்ப்பாளர்களும் சற்றேறக்குறைய ஆறு மாதங்கள் செம்மைப்படுத்தினோம்.) இப்பொழுது, அந்த நூலை இன்னொரு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன். ஏனெனில், கால்வினோவின் எழுத்துக்கள், நவீன தமிழ் வாசகர்களுக்கு கிடைத்ததற்கரிய புதையல். ஆகவே, அது நவீன தமிழ் இலக்கிய உலகில், இல்லையெனாமல், நீக்கமற நிறைந்திருக்க வேண்டும். ஆனால், அந்தப் பதிப்பை அப்படியே உன்னதம் வெளியிட்ட Text ஐ அப்படியே வெளியிடுவதற்கு நீங்கள் எதற்கு? தீவிர இலக்கிய வாசகனுக்கான பதிப்பகம் என்று அடையாளப்படுத்துகிறீர்கள். அதற்கேற்ப உழைக்கவேண்டும். வெறுமனே, வாய்ச்சொல் மட்டும் ஆகாது.
அதற்கடுத்து, முதல் பதிப்பு உன்னதம் வெளியிட்டது என்று உன்னதத்தின் பெயரை இந்த பதிப்பகம் பதிவு செய்யவில்லை. இந்தப்போக்கு, மிகவும் தவறான அணுகுமுறை. இன்னொருவருடைய உழைப்பு, அடையாளம், நேரம், பொருளாதாரம் எல்லாவற்றையும் இருட்டடிப்பு செய்திருக்கிறது இப்பதிப்பகம். பதிப்பகம் பெயரை தவிர்த்து விட்டேன்.இது தார்மிகமற்ற செயல். (நான் இது குறித்து கேட்டதற்கு, இரண்டாம் பதிப்பு என்று போட்டால், நூலக அரசு ஆணை கிடைக்காது. புத்தகங்களை நூலகத்தில் வாங்க மாட்டார்கள் என்று பதில் வந்தது. இது எவ்வளவு பெரிய அருவருப்பு என்று பாருங்கள். ஆக, அரசு நூலக ஆணைக்காகத்தான் இதை வெளியிட்டீர்களா? இந்த நாவல் உங்களுக்குள் ஏற்படுத்திய பரவச மனோநிலைக்காகவோ, அல்லது இதுபோன்ற நாவல் தற்கால தலை முறை படிக்கவேண்டும், அவர்களது எழுத்து முறை பின் நவீனத்துவ narration ஐ நோக்கி நகர வேண்டும், தமிழ் மொழியை உலகத்தரத்திற்கு உயர்த்தவேண்டும் என்றெல்லாம் மனதில் கொண்டு வெளியிடவில்லையா? நீங்கள் உண்மையாகவே, நல்ல மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு தற்கால தமிழ் தலைமுறையை சிறப்பானவர்களாக உருவாக்குவோம் என்று நினைத்திருந்தால், உலக அரங்கில் ஓராயிரம் அற்புதமான நூல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவைகளில் ஒன்றை மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கலாம். சரி ஓகே. விட்டுவிலகி விடுவோம். எதிர் காலத்தில், இது போன்ற தவறுகளை விடுத்து, அறத்துடன் செயல்படுங்கள், சிறப்பான நூல்களை வெளியிடுங்கள். அடுத்தமுறை 2 ஆம் பதிப்பாக வெளியிடும்போது, தலைப்பை மாற்றுவது மட்டுமல்லாது, அதே மொழிபெயர்ப்பாளரிடம் தந்து, மீண்டும் முதலிலிருந்து புத்தம் புதியதாக மொழியாக்கம் செய்து வெளியிடுங்கள். வாழ்த்துக்கள்.)
***
சரி, நல்லது அடுத்த “If ” க்குப் போகலாம். இது விமர்சனம் அல்ல, சுட்டிக் காட்டல்; எனவே, சம்பந்தப்பட்ட பதிப்பகம் கோபமுறவேண்டாம்.
ஏனெனில், தற்கால கலை இலக்கியத்துறைகளில் விமர்சனமே கிடையாது. விமர்சித்தால், உங்கள் வாழ்க்கையே போய்விடும், விருதுகள் கிடைக்காது, கனவு இல்லங்கள் கிடைக்காது, இலக்கியப் பத்திரிகைகள், பதிப்பகங்கள் உங்களது படைப்புகளை வெளியிட மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆகச் சிறந்த இலட்சியமாகக் கொண்டிருக்கும் சினிமாவுக்கு வசனம் எழுத பாட்டெழுத கூப்பிடமாட்டார்கள். ஆகவே, ஊரோடு ஒட்ட வாழ் என்னும் முதுமொழியைக் கடைப் பிடியுங்கள் என்பதுதான் இன்றைய இளம் தலைமுறை கடைப்பிடிக்கும் தலையாய இலட்சியம்.
ஓகே. நான் சமீபத்தில், புதிய நூல்கள் எதுவும் வந்திருக்கின்றனவா என்று தேடியதில், ஜப்பானிய எழுத்தாளர் கென்கி கவமுரா – வின் “பூனைகளில்லா உலகம்” பார்வைக்கு வந்தது. எனக்குப் பூனைகள் மிகவும் பிடிக்கும், பூனை பாஸ்கரனின் ஓவியங்களை மிகமிகப் பிடிக்கும், அதேபோல, நகுலனின் பூனைகளும். டி. எஸ். எலியட்டின் The Naming of Cats கவிதையை மிகவும் ஆழ்ந்து போய் மொழிபெயர்த்தேன். எந்த எழுத்தாளருக்குத்தான் பூனைகள் பிடிக்காது? அதுவும், முரகாமியின் “காஃப்கா கடற்கரையில்” நூலை வாசித்த பிறகு பன்மடங்கு பூனைகளை நேசிக்க ஆரம்பித்தேன்.
கவமுராவின் பூனைகள் சம்பந்தமாக இணையத்தில் தேட ஆரம்பித்தேன். அந்தத் தீவிரத் தேடலில் அவரது ஒரு நேர்காணல் கிடைத்தது. உடனே அதை மொழியாக்கம் செய்துவிட்டேன். அந்த நேர்காணல் மொழியாக்கம் செய்யச் செய்ய, உடனே அந்த நாவலைப் படிக்கவேண்டும் என்ற அவா எழுந்தது. அது தமிழில் ஏதும் வெளியாகியிருக்கிறதா, என்று தேடிப்பார்த்ததில், , ஒரு பதிப்பகம் வெளியிட்டிருந்தது கண்களில் பட்டது.
அப்பொழுதுதான் கவனித்தேன் : இந்த நாவலை தமிழில் மொழியாக்கம் செய்தவரும் “If ” ஐ புறம் தள்ளிவிட்டார் என்பதை!
இது என்னடா “If ” க்கு வந்த சோதனை?
உடனே தம்பி முத்துக்குமாரிடம் இந்த நூலை வாங்கி அனுப்பவும் என்று சொல்லி விட்டு மேலும் இணையத்தில் உலாவினேன்.
தற்காலத்தில் கவனம் பெற்றுக் கொண்டிருக்கும் ஜப்பானிய எழுத்தாளரான கவமுரா ஜென்கி (Kawamura Genki) ஒரு புத்தம் புதிய கலை ஆளுமை கொண்ட மனிதர். இவர், ஏற்கனவே பல புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்களான ஹோசோடா மாமோரு (The Boy and the Beast, 2016) ஷிங்காய் மாகோடோ (Your Name, 2016 ) ஆகியோரிடம் பணியாற்றியவர். மற்றும் If Cats Disappeared From The World உட்பட சில நாவல்களை எழுதியவர். இந்த நாவல் ஜப்பானில் பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் உலகின் முதன்மையான 14 மொழிகளில் மொழியாக்கம் பெற்றது.
உடனே, மொழியாக்கம் செய்யப்பட்ட அந்தந்த மொழிகளில் அவர்கள் எப்படி மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் என்று மனம் குவிந்தது.
இதனுடைய மூல நூலின் தலைப்பு : 世界から猫が消えたなら (பூனைகள் உலகில் இருந்து மறைந்துவிட்டால்)
ஆங்கிலத் தலைப்பு: If Cats Disappeared from the World (உலகில் இருந்து பூனைகள் மறைந்துவிட்டால்)
ஜெர்மானியத் தலைப்பு: Wenn alle Katzen von der Welt verschwänden (அனைத்து பூனைகளும் உலகில் இருந்து மறைந்துவிட்டால்)
பிரெஞ்சுத் தலைப்பு: Et si les chats disparaissaient du monde… (பூனைகள் உலகில் இருந்து மறைந்தால் என்ன செய்வது?)
இப்படியே எல்லா மொழிகளின் மொழியாக்கத் தலைப்புகளை எடுத்து Google Translate – ல் போட்டுப் பாருங்கள். அனைத்து மொழிபெயர்ப்பாளர்களும் “If ” ஐ ஒதுக்கவே இல்லை.
1990 – 2000 களில் கால்வினோவின் “If on a Winter’s Night a Traveler” “குளிர்கால இரவில் ஒரு பயணி” நாவலை நான் வெளியிட்டபோது, தமிழ் இலக்கிய உலகமே அல்லோலகல்லோலப் பட்டது. நான் மிகைப் படுத்திச் சொல்வதாக எண்ணவேண்டாம். அன்றைக்கு தீவிர தமிழ் இலக்கிய வாசகர்களாக இருந்தவர்கள் ஒரு 300 – 350 பேர்தான். இந்தப் பின்னணியில், பிரம்மராஜன் சொன்ன விமர்சனம் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
ஆனால், இன்றைக்கு, தீவிர தமிழ் இலக்கிய வாசிப்புக்கொண்ட வாசகர்கள் (எழுத்தாளர்கள் உட்பட) என்று பார்த்தால், ஒரு 1000 பேர் இருப்பார்கள். ஆனால், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் பெருகிய பிறகு, எல்லோருமே தீவிர எழுத்தாளர்கள்தான். தீவிர வாசகர்கள்தான். முகநூலைப் படித்துக்கொண்டிருந்தால் போதுமானது. முகநூலில் 4 கவிதை வந்து விட்டால் போதும். நமது முன்னோடிகளை படித்திருக்கிறீர்களா? என்றால், “லிங்க் இருக்கிறதா?” என்று வினவும் இலக்கியத்தலைமுறையை உருவாக்கி விட்டிருக்கிறது இணையம்.
கவாமுராவின் நாவல் பற்றி யாரும் எதுவும் பேசவில்லை. பேசுவதற்கெல்லாம் நேரமில்லை. அதுமட்டுமல்லாது, விமர்சனம் நாங்கள் செய்ய மாட்டோம்.
ஐயா, நான் செய்வதும் விமர்சனம் இல்லை. ஒரு சுட்டிக்காட்டல். அவ்வளவுதான். ஏற்கனவே, சிலமாதங்களுக்குப் பிறகு, எஸ் வி ராஜதுரையின் ஒரு கவிதை மொழிபெயர்ப்பு, ஒரே ஒரு வார்த்தையை அவர் மாற்றிப்போட்டதன் விளைவு அவர் ஏற்றுக்கொண்ட இலட்சிய வாதத்திற்கு எதிராகத் திரும்பியிருக்கிறது என்பதை ஆவணங்களோடு தரவுகளோடு முன்வைத்துச் சுட்டினேன். (இத்தனைக்கும் அந்த நூல் வெளிவந்து 15 வருடங்களாகியிருக்கும். இன்றுவரை பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. எல்லாப் பதிப்புகளிலும் அதே பிழையோடு.) அதன்பிறகு, மொழிபெயர்ப்பாளரும், அவரது சகாக்களும் பகையானதுதான் மிச்சம்.
பாப்புலர் கல்ச்சர் தியரியை முன்வைத்த ரிச்சர்ட் ஹோகார்த் எதிர்காலத்தில் எல்லாமே, வெகுஜனமயமாகப் போகிறது என்கிறான். அதனால், இன்னும் கொஞ்சம் வெகுஜன ரீதியில் சொன்னால், (இன்றைக்கு தற்கால இலக்கியச் சூழல் இரண்டாந்தர மூன்றாந்தர நிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே,) எம் ஜி ஆர் நடித்த ” நான் ஆணையிட்டால்..” என்ற படத்தின் தலைப்பைக் கவனியுங்கள்: “எனது ஆணை” “நான் வைக்கும் ஆணை” என்றெல்லாம் தலைப்பு வைக்கவில்லை. படத்தின் மையக்கரு “நான் ஆணையிட்டால்..” இது போன்ற நல்ல விஷயங்கள், உயர்ந்த லட்சியங்கள், சிறந்த வாழ்க்கை முறை.. எல்லாமே நடக்கும் என்பதை காட்சி ரீதியாக உணர்த்துகிறார்.”நான் ஆணையிட்டால் உன் வாழ்க்கை முறை அற்புதமாக இருக்கும், ஆகவே, என்னை ஆணையிடும் இடத்தில் தூக்கி வை..” என்று சராசரி மனிதனுக்கு சொல்லும் விதமாய் அமைகிறது தலைப்பு.
அதேபோல, “கன்னத்தில் முத்தமிட்டால்” என்னும் படத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒரு ஈழ அகதிக் குழந்தையை தமிழ்நாட்டில் உள்ள ஒரு முற்போக்கு எழுத்தாளர் தத்து எடுத்து வளர்க்கிறார். ஒரு கட்டத்தில், (அவளது 8 – 10 வயதில், அவளது பிறப்பு ரகசியத்தை சொல்லி விடவேண்டும் என்று முடிவு செய்து சொல்கிறார். அந்தக் குழந்தைக்கு தனது அன்னையைப் பார்க்கும் விருப்பம் மேலூறுகிறது. அவளது ஒரே ஆசை, தனது அன்னையைப் பார்த்து தனது கன்னத்தில் முத்தமிட வைக்க வேண்டும் என்று துடிக்கிறது. இறுதியில், அவளது அன்னை அந்த சிறுமியின் கன்னத்தில் முத்தமிடுகிறாள்.
அந்த முத்தம் ஒன்றே போதுமென உருகுகிறாள் சிறுமி, தன் அன்னை “கன்னத்தில் முத்தமிட்டால்”, அந்தக் கணம் ஒன்றே, அவளுக்குப் பல்லாயிரம் ஆண்டு கால வரலாற்றை, தமிழ் ஈழப்போராட்டங்களின் துயரத்தை, கொலைகளை, வன்புணர்வுகளை, காலுக்கு கீழே நிலமற்ற அதல பாதாளத்தை, மனித வெடிகுண்டுகளை, ஒப்பற்ற உயிர்த்தியாகங்களை.. இன்னும் எண்ணற்ற விஷயங்களை அந்தச் சிறுமிக்குச் சொல்லுகிறது அந்த முத்தம்.
அதே முத்தம், “கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி” என்கிற கவிதை வரி, வேறொரு பரிமாணத்திற்கு அழைத்துப் போகும் labyrinth ஆக சுழற்றியடிக்கும் காட்சியை கண்ணம்மாவின் உன்மத்தத்தில் காண்கிறான் பாரதி.
மீண்டும் கவாமுராவின் நாவலுக்குத் திரும்புவோம்:
நண்பர் வாங்கி அனுப்பிய நாவல் கைக்கு வந்து சேர்ந்தது. முழுக்கப் படிக்காமல், அவசர அவசரமாக எடுத்துப் புரட்டிய போது நிகழ்ந்த ஒரு அற்புதம் நிகழ்ந்தது.
ஆஹா, நாவலின் அத்தியாயங்கள் என் பார்வைக் குவடுகளில் பதிந்தன : ஆம் நண்பர்களே, உள்ளடக்கப் பக்கத்தில் ஒவ்வொரு அத்தியாயங்களின் தலைப்பையும் வாய்விட்டு வாசித்தேன்.
அலைபேசிகள் உலகில் இருந்து மறைந்து போனால்
திரைப்படங்கள் உலகில் இருந்து மறைந்து போனால்
கடிகாரங்கள் உலகில் இருந்து மறைந்து போனால்
பூனைகள் உலகில் இருந்து மறைந்து போனால்
நான் உலகில் இருந்து மறைந்து போனால்
எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது. ஆக, தலைப்பு மட்டும்தான் ஒரு Catching ஆக இருக்க வேண்டும் என்பதற்காக “பூனைகளில்லா உலகம்” என்று மாற்றியிருக்கிறார்கள். மற்றபடி, நாவலின் உள்ளடக்கத்தை மூலத்துடன் கச்சிதமாக மொழிபெயத்திருப்பார்கள் போலிருக்கிறது என்று ஆசுவாசம் கொண்டேன்.
பிறகு மெதுவாக, நூலை எடுத்து ஒரு பூனையின் நீவுதலுடன் படிக்கத் தொடங்கினேன்.
***
