• ஜான் ஃப்ரீமேன்

    • தமிழாக்கம் : அண்ணல்

     

    முதல் புத்தகம் நான் அன்பளிப்பாக பெற்றது “குட்டி இளவரசன்”. என்னுடைய பாட்டி என் ஆறாவது பிறந்தநாளுக்கு எனக்கு அனுப்பியிருந்தாள். அதன் ஆசிரியரானஅந்த்வான்த் செந்த் – எக்சுபெரி வாட்டர்கலரில் வரைந்த படங்களுடன் கூடிய புத்தகம் அது. அதற்கு முன் நான் எதையும் வாசித்ததில்லை. நான் என் வாழைப்பழ நிற மஞ்சள் சைக்கிளை ஸோப்பர் என்னும் மோட்டார் சைக்கிளாகப்  பாவித்து ஓட்டிக்கொண்டிருந்தேன். Whiffle ball ம் Soccer ம் விளையாடுவேன், Phillies அணிக்கு தொடக்க பந்து வீச்சாளனாக வேண்டும் என்ற ஏக்கமும் இருந்திருக்கிறது. எனக்கு அப்போது தெரிந்த  உலகமெல்லாம் எம்மேயுஸில் தொடங்கி பென்சில்வேனியாவில் முடியும் எங்கள் குடும்பம் வாழ்ந்த அந்த நகரம் மட்டும் தான். வீட்டு வாசலில் குளிர்காலத்தில் பனிப்படலம் மேடுபள்ளங்களை உருவாக்கியிருக்கும் இடம் முழுக்க ஒரு பெருமரம் தன் கிளைகளை முன்வளைந்து பரப்பியிருக்கும். வார விடுமுறைகளில் சகோதரர்களுடன் பேஸ்பால் விளையாடிவிட்டு, Dino ஸில் cherry slushies உறிஞ்சிக் குடித்திருப்போம். அது WaWa விற்கு அடுத்த உள்ள ஒரு பீட்சா கடை, அங்கு தான் என் அப்பா எப்போதாவது 99 சென்டுக்கு ஒரு கேலன் பால் வாங்கி வருவார்.

    பிறகுதான் நான் குட்டி இளவரசன் வாசித்தேன். ஒரு முக்காடிட்ட ஏலியன் இளவரசனை வழிதவறி தரையிறங்கிய விமான ஓட்டி கண்டறியும் அந்தக் கதை என் உலகத்தை உடைத்து திறந்தது. எந்த மரமும் என் வீட்டின் முன்னால் இருக்கும் மரத்தைப் போலில்லை. அது பாவோபாப் மரங்களை ஒத்திருக்கின்றன. அங்கே பாலைவனங்கள் இருகின்றன. அங்கே இளவரசர்களும் விமானங்களும், குறுங்கோள்களும் இருக்கின்றன, அந்த ஏலியன்கள் நம்மைப் போலவே பேசுகின்றன. நரிகள் நண்பர்களாகவோ அல்லது தந்திரத்துடனோ இருக்கின்றன. இந்தக் கதையால் நான் வெகுவாக கவரப்பட்டேன். முன்னறையின் கம்பளி விரிப்பில் படுத்துக்கொண்டு காலம் போவதே தெரியாமல் அப்புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். இன்று நினைத்தாலும் அதன் ஒவ்வொரு பக்கத்தை திருப்பும் போதும் ஒரு விமானம் மேலெழுவதைப் போன்ற அனுபவத்தை உணர்த்தக்கூடியது அது. போதுமான அளவிற்கு பறந்து, உங்களுக்குத் தெரியும் எப்படியென்று, அதன் இறக்கைகள் காற்றை விலக்கி, உந்தித்தள்ளும் ஒரு விசையால் வேறுவழியின்றி பூமியை விட்டுக் கிளம்பும். ஒவ்வொரு முறையும் பூமி என்னிலிருந்து நழுவும் போது , வியப்பில் மூச்சடைத்திருப்பேன். அது ஒரு விந்தைதான்.

    அதற்கு முன்னால் குட்டி இளவரசன் ஐ எழுதியவர் பற்றி எந்த யோசனையுமில்லை. என் பாட்டி கண்டிப்பாக இதை எழுதியிருக்க எந்த வாய்ப்புமில்லை. நான் ஒரு பிரெஞ்சு நாவல் படிக்கிறேன் என்றோ , மொழிபெயர்ப்பில் ஒரு இலக்கியப்பயணம் செய்துகொண்டிருக்கிறேன் என என்னையே பாராட்டிக்கொள்ளவோ, எனக்கு தோன்றவேயில்லை. எல்லாமும், அந்த வயதில், மொழிபெயர்ப்பு ஆகியது. ஏதேனும் ஒரு பொருளோ, ஒரு ஆளோ அல்லது ஒரு அனுபவமோ, ஒரு வார்த்தையாகச் சுருங்கியது. இந்தச் சுருக்கத்தின் விளைவாக என் வீட்டு வாசல் ஒவ்வொரு நாளும் விரிவடைந்து கொண்டே போனது. சிவப்பு வெள்ளை நிற Caudron C.630 Simoun  விமானத்தில் செந்த் – எக்சுபெரி தனது நண்பர் ஆண்ட்ரே ப்ரீவோட் உடன் அதிவேக சாதனையை நிகழ்த்த பாரிசிலிருந்து சாய்கோன் செல்லும் வழியில் எகிப்தின் வாடியன்- நாட்ருன் என்ற இடத்தில் விபத்துக்குள்ளான பிறகே அவர் அந்தப் புத்தகத்தை எழுதினார் என்று என் பெற்றோர் கொடுத்த globe ஐ என் விரலில் வைத்து கூடைப்பந்தைப் போல சுற்றிக்கொண்டிருந்த போது எனக்குத் தெரியாது. அவர்களிடம் வரைபடம் ஏதுமில்லை, ஓரிரு நாள் உயிர்வாழ்வதற்கு ஒரு தெர்மோஸ் நிறைய காபியும், கொஞ்சம் ஒயினும் இருந்தன (பிரெஞ்சுக்காரர்கள்!!). பிறகுதான் அறிந்துகொண்டேன் அவர்கள் கானல்நீரால் அலைக்கழிக்கப்பட்டும், மாயத்தோற்றங்களால் கவரப்பட்டும், மரணத்தின் விளிம்பிற்கே சென்றிருக்கிறார்கள். பிறகு Bedouin பழங்குடிகள் மரபான நீரேற்றத்தின் மூலம் மீண்டும் உடலுறுப்புகளை இயக்கி உயிர்ப்பித்திருக்கிறார்கள்.

    சில வருடங்களுக்கு முன் ஸ்டேசி சிஃப் (அமெரிக்க எழுத்தாளர்), தனது சுயசரிதையில் எழுதியிருந்த செந்த் – எக்சுபெரி பற்றிய இந்தத் தகவல்களைப் படித்ததும், மீண்டும் ஒருமுறை என் உலகம் உடைத்து திறந்துகொண்டது. ஒரு புத்தகம் நிலைத்தலை பற்றியும், அந்நாவல் துயரத்திலிருந்தும் அழிவிலிருந்தும் பிறந்து வந்த போது, நாசிசம் செந்த் – எக்சுபெரியை பிரான்சில் தொடங்கி துரத்திக்கொண்டே இருந்தது, அவருடைய சகோதரர்  இறந்து போனார். இது என் வாழ்வின் பல தசாப்தங்களை கடந்தும் அமெரிக்காவின் ஒரு பகுதியில் செந்த் – எக்சுபெரி பார்த்தேயிராத சூடான கம்பிகளாலும், முறுக்கிய சலூன் கம்பங்களாலும், தகர்ந்த VFW ன் முகப்பு கூடங்களாலும் ஆன ஒரு நகரத்தில் உணர்ந்து கொள்ள முடிந்தது. இது விமானத்தை ஒத்ததொரு மாயம். மேலிருந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே உலகம் அதன் வடிவத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. அந்த உத்திதான் செந்த் – எக்சுபெரி சுருங்கச் சொன்ன கொடுங்கோண்மை மற்றும் இழப்பைப் புரிந்துகொள்ள என்னைப் போன்ற சிறுவனுக்கும் சாத்தியமாகியது. தூரத்திலிருந்து அதன் வடிவத்தை அடையாளம் கண்டிருந்தால் எனக்கு அது நட்பும் சாகசம் பற்றியதான புத்தகம் என்றே தோன்றியிருக்கும்.

    நம் முதிர்ச்சிக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை வாசிக்கிறோம். நம்மைச் சுற்றி இருக்கும் உலகம் அதன் மக்கள் காலங்காலமாக அதே பெயரில் அப்படியேதான் இருக்கின்றன. கடக்கும் ஒவ்வொரு வருடமும் நம் வாழ்வு கனம் கூடிக்கொண்டே தான் இருக்கின்றது. அவற்றில் சில தனித்த விந்தையான அனுபவங்கள் எல்லாம் இழப்பின் மூலமே பெறப்படுகிறது. அதனால் நம்மில் பெரும்பாலானோர் தத்தம் வித்யாசமான புத்தகங்களைத் தேடுகிறோம். புத்தகங்களை அனுபவித்துப் பறப்பதற்கும், கற்கவும் ஒரே நேரத்தில் நினைப்பது ஆபத்தானது. வாழ்க்கை தரையில் வாழப்படும் காரணங்களுக்காகத்தான் புத்தகங்கள் வித்யாசமாக பரிசளிக்கப்படுகின்றன. என்ன எதிர்பார்க்கலாம் என அதன் அட்டைப்படமே சொல்லிவிடும், ஆனால் அடுத்தடுத்த பக்கங்களின் புதிர்த்தன்மையை முன்னுணர்ந்து சொல்லிவிட முடியாது. பின்பக்க அட்டையில் பிரபலமான எழுத்தாளர்களின் விமர்சனங்களும் இருக்கும். நீங்கள் ஐக்கிய நாடுகளில் வாழ்பவராக இருந்தால் நீங்கள் படித்த பெரும்பாலான புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். இல்லையென்றால் அவை அதே மொழியில் இருக்கும் ஒரு பிரபலமான எழுத்தாளரின் அறிமுகத்தைப் பெற்றிருக்கும். எத்தனை பேர் வேறு ஒரு கொலம்பியன் நாவலாசிரியரின் அறிமுகத்தை வைத்து காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் ஐ படிக்கத் தொடங்கியவர்கள்?. இப்படித்தான் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு புத்தகங்கள் நம்மை ஒரு தேர்ந்த வாசிப்பாளராக களம் காண வைக்கிறது.

    ஒரு காஸ்மோபொலிடன் வாசிப்பாளராக இருப்பதற்கு சில தடைகள் இருக்கிறதென்பது தான் உண்மை நிலை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.  நான் பேசுவது, பால் கில்ராய் (அமெரிக்க எழுத்தாளர்) அடையாளப்படுத்திய மேட்டுக்குடி காஸ்மோபொலிடன் அல்ல, அவர் தன் புத்தகங்களில் நிறுவியுள்ள விரிவடையும் மற்றும் நீட்சியடையும் வகைமை தான், மேலும் அமினட்டா போர்னா (ஸ்காட்லாந்து எழுத்தாளர்) இந்த தலைப்பில் ஜார்ஜ்டவுனில் ஒரு விளக்கம் கொடுத்தார். அவர் சொன்னது, “காஸ்மோபொலிடன் என்பது ஒரு நபர் ஒரே கலாச்சாரத்தின் மதிப்புகளால் கட்டுண்டு கிடக்காத பல்நோக்கு பார்வையைப் பெற்றிருப்பவர் அல்லது ஏற்றுகொள்பவராக இருப்பது. நீங்கள் அந்தத் தன்மை இயல்பையே கொண்டிருந்து, அடைந்து, உங்கள் தலையின்மேல் அந்த உந்துசக்தியை கொண்டிருத்தல்”. யோசித்துப் பாருங்கள் : ஒரு நாடோடி என்பவன் காஸ்மோபொலிடன், ஒரு அகதியாயிருப்பவன் காஸ்மோபொலிடன், இரண்டு இடங்களில் வாழ்ந்து கொண்டு தன் அவலநிலையை நினைக்க முடிகிறவனும் ஒரு காஸ்மோபொலிடன். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மோசமான செயல்திட்டங்களும் , நிறுவனமயமாக்கப்பட்ட குற்றங்களும் மலிந்த உலகின் பல்வேறு அரசுகளில் குறிப்பாக ஐக்கிய நாடுகளில் ஒரு சிலர் மற்றெல்லாரையும் விட அதிக மதிப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தவர்களென்று  எதிர்மறையான சித்தரிப்பு நடந்தது எவ்வளவு வில்லத்தனம்?

    நாம் வாசிப்பது அரசியலோ அல்லது அறநெறி பிரச்சனைகளோ எப்போதும் போலவே, ஆனால் குறிப்பாக இப்போது, அரசு, குடிமக்கள் என்ற புனித வரையறைக்குள் வராதவர்கள் மீது தன் வன்முறைகளை ஏவி விடுவது, ஜனநாயகத்தின் தோற்றுவாயான ஐரோப்பாவிலும் , ஐக்கிய நாடுகளிலும் அதன் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. உறுதியாக சொன்னால், இக்கணம் பெரிய அளவில், கலப்புமிக்கதான, உலகமயமான கலாச்சார யுத்தம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இந்த முரண்பாடுகளுக்கு நடுவே நான் நமது கலாச்சாரத்திற்கு எதிரானவைகளை வாசித்தே ஆக வேண்டும் என்று வாதிடப்போவதில்லை, ஆனால் வாசிக்காமல் நமது கலாச்சார மதிப்பை எப்படி அறிவது? நமது எண்ணங்களின் நிலை அறிவது எப்படி?. இலக்கியத்தைப் பேசுவது போல் தேச எல்லைகளையும் மாற்றியமைக்கும் போது ஒரு கட்டற்ற உலகத்தில் சுதந்திரமான வாழ்வை எதிர்பார்க்க முடியுமா?. எதையும் யோசிக்கவே தொடங்காத போது அதன் நடப்பைக் கற்பனை செய்யக்கூட முடியாது

    நம் குறுகிய வாசிப்புகளால் இந்த விசைகளைப் புறந்தள்ள முடியுமானால் அது கடுமையான உழைப்பைக் கோராத இலக்கியங்களை உருவாக்கும் போது மட்டுமே சாத்தியம். நாம், ஏற்கனவே அறிந்ததாக மற்றும் முன்னுணரக்கூடியதாக இல்லாமல் பலராலும் வாசிக்கப்பட்டு பரவசமூட்டுவதும், வியப்பூட்டுவதும் சிக்கலானதுமான நம் பரந்த அனுபவ வாசிப்பு தளத்திற்கு திரும்பியே ஆக வேண்டும். Freeman ன் இந்த வெளியீடு அதை எளிதாக்கும் ஒரு முயற்சியே. எத்தனை முறை இலக்கிய பத்திரிகைகள் எதிர்காலம் என்ற பெயரில் ஒரே நாட்டவர்களின் அல்லது ஒரே எழுத்து வகைமை உடையவர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது?. நாளடைவில் இது எனக்கு முட்டாள்தனமாகத் தோன்றியது. ஏனென்றால் எழுத்தாளர்கள் தங்களுக்குள் அவ்வாறு எழுதுகிறவர்களில்லை. குந்தர் கிராஸ் இல்லாமல் சல்மான் ருஷ்டி Midnight’s Children ல் வரும் சலாம் சினாய் ன் கதாபாத்திரத்தை கற்பனை கூட செய்திருக்க முடியாது. ஜுனாட் டயஸ்,  Trujjillo வில் வாழ்ந்த வருடங்களும் அதன் பின் குடியேறிய அமெரிக்க வாழ்வும் இல்லாது போயிருந்தால் Oscar Wao என்ற தனது நாவலின் புகழ் பெற்ற நாயகனை உருவாக்கியிருக்க முடியாது. எழுத்தாளர்கள் இயல்பிலேயே கலாச்சார மற்றும் தேச கலப்பிற்கு சகாயம் செய்கிறார்கள், ஏனெனில் நாம் எந்தக் குழந்தை மனதின் பகுதியால் வாசிக்கிறோமோ அந்த மனதால் அவர்கள் எழுதுகிறார்கள்.

     இங்கே பேருருவை அதன் எல்லா வடிவங்களிலும் கொண்டாடவிருக்கிறோம். அழகுக்கு எப்போதும் பாஸ்போர்ட் இல்லை. அது அழைக்கப்படாமலே வந்தடைகிறது. அப்படியேதான் அழைக்கப்படாமலே இந்த எழுத்தாளர்கள் தேர்வும் நிகழ்ந்தது. இந்த “எதிர்கால புதுவகை எழுத்து” என்னும் கட்டுரைகளுக்காக தேர்ந்தெடுத்த எழுத்தாளர்களின் தகுதியாக வயது வரம்போ, பால் வேறுபாடோ, மொழிபெயர்ப்பு வரையறைகளென்றோ நான் எதையும் கருதவில்லை. எந்த எழுத்தாளர்கள் தங்கள் வாழ்வும் போக்கும் விமானம் போல் மேலெழும்ப ஆரம்பித்திருக்கிறதோ , எந்த எழுத்தாளர்கள் அவர்கள் உழைப்பின் முழுவீச்சுக்கு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லையோ, யாரின் புத்தக பக்கங்களில் இருளில் மின்னும் ஒரு பொறியை சாத்தியப்படுத்துமோ அவர்களையே நான் தேர்ந்தெடுக்க விரும்பினேன். அவர்கள் பலதரப்பட்ட பின்புலங்களில் இருந்து வருகிறவர்கள். ஆயினும், டெக்சாசிஸில் வாழும் எழுபது வயது கட்டுரையாளர் மற்றும் இருபத்தாறு வயது பிரெஞ்சு நாவலாசிரியர் இதன் வயது எல்லைகளாக அமைந்துவிட்டார்கள்.

    தேர்வு பற்றிய சில வரிகள். வழக்கமாக, இலக்கியப் பத்திரிகைகள் மற்றும் இதழ்கள் தொகுக்கும் பட்டியல் ஒரு நடுவர் குழு சில புத்தகங்களை படித்துவிட்டு தேர்ந்தெடுப்பார்கள். நானும் அது போன்ற பல தேர்வுக்குழுக்களில் அமர்ந்திருக்கிறேன். ஒவ்வொன்றும் மகிழ்ச்சியான அனுபவங்கள். ‘கிரன்டா’ பத்திரிக்கையில் கிடைத்த அந்த அனுபவங்களில்லாமல் Freeman ல் என்னை நானே இந்த கட்டுரைக்காக ஈடுபடுத்தியிருக்க முடியாது. இதன் மீது இருக்கும் ஆர்வமே இவ்வளவு எண்ணிக்கையில் ஆலோசகர்களைப் பெறுவதற்கு உதவியிருக்கிறது என இப்போதும் நம்புகிறேன். ஏறத்தாழ இரண்டு வருடங்களில் எண்ணற்ற விமர்சகர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், முகவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விழா ஒருங்கிணைப்பாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களிடம்  யார் புதுவகை எழுத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார் எனக் கேட்கப்பட்டது.

    நான்  ஃபிளெமிஷ் கவிதைகளையும் சகாரன் ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கின் வெளியிடப்படாத எழுத்தாளர்களின் எழுத்துகளையும் வாசித்தேன். ஜப்பான் போன்ற மொழிச்சிக்கல் கடுமையாக உள்ள நாடுகளின் எழுத்தாளர்களையும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை வாசித்தேன். இந்தத் தேடலுக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி சொல்வதாயிருந்தால் அது பல பக்கங்களைத் தாண்டிப் போகும். இருந்தும் Freeman ன் உதவி ஆசிரியரான அலிசன் மலிச்சா என் பக்கமிருந்து வாசித்து அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதிலும் என்னைவிட சாதுர்யமான முடிவெடுப்பதிலும் பக்கபலமாக இருந்தார். ஒயின் நிரப்பாமல் காப்பியை மட்டும் நிரப்பிய அவரை போன்ற சக விமான ஓட்டி கிடைத்தது பெருமையே.

    சரி யார் அந்த எழுத்தாளர்கள்? பொருத்தமாகச் சொன்னால், என்னவாக இருக்கிறார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு எழுத்தாளரின் தனித்த பாணியே அவர்களது உண்மையான தேச அடையாளம். அதுதான் இந்த உலகத்திற்கு எழுத்தாளர் முகம். கலாச்சார மற்றும் வகைமை எல்லைகள் களையும் போது உலகத்தின் சிறந்த புது எழுத்தாளர்களிடையே மிகப்பெருமளவில் குணாதிசய மாற்றங்களும், மிகையுணர்ச்சிகளிலும், சொல் வகைமையிலும் வேறுபாடுகள் ஏற்படுகிறது என்பதை நான் அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஒருபக்கம் பரபரப்பாகவும், வியப்பு அழகியலுமாக எழுதுகிற நார்வீஜிய எழுத்தாளர் ஜோகன் ஹர்ஸ்டாட் போன்றோர்கள், அவரது ஆயிரம் பக்க நாவல் Max Mischa மற்றும் Tet Offensive இங்கே கருத்தில் கொள்ளப்பட்டது. மறுபக்கம் அமெரிக்கக் கவிஞர் ஓஷியன் வூங், ஒரு பக்கக் கவிதையில் முடுக்கும் உத்வேகத்தினால் வெடித்து சிதறியிருக்கிறார். அமெரிக்க எழுத்தாளர் எலைன் காஸ்டிலோ வின் இன்னும் பதிப்பிடாத அறிமுக  நாவலான America INot The Heart – ல் அடக்குமுறை ஆட்சியின் கீழ் வாழும் ஒரு குடும்பத்தின் கதையை படிப்பவரின் மனதை உடையச் செய்யும் அளவிற்கு அவரின் எழுத்தின் தீவிரத்தைக் காணமுடிகிறது.

     ஒரு குரல் அந்த பக்கத்தில் செய்துவிட முடிகிற விஷயம் பேராச்சரியம் தான். எந்த ஒரு முன்னுரையிலும், ஒரு சிறந்த எழுத்தாளன் அதன் நற்சான்றுகளை வைத்து அதை கலையென்று பாதுகாக்க மாட்டான். பிரெஞ்சு எழுத்தாளர் எட்வர்ட் லூயிஸ்க்கு இதயத்தை அடைக்கும் ஒரு கொடூரமான கொலைச் செய்தியிலிருந்து அவர் மீள்வதற்கு வெகுகாலம் ஆனது. கனடிய எழுத்தாளரான ஹீத்தர் ஓ நீல், ஒரு பதின்மவயது பெண்ணைச் சுற்றி நிகழும் பிரச்சனைப்பாடுகளை அந்த வாழ்க்கையின் அடி ஆழத்தில் தள்ளி நம்மை உணர வைக்கிறார். அர்ஜெண்டின எழுத்தாளரான போலா ஓலோயிக்ஸார்க், அம்மாக்களால், அத்தைகளால் மேலும் மற்றவர்களாலும் தொடர்ந்த எச்சரிக்கைகளால் மூடித்திரையிடும், ஒரு அழுத்தச் சூழலில் ஒரு அழகான இளம்பெண் எவ்வாறு வளர்கிறாள் என்பதை விளக்குகிறார்.  அர்ஜெண்டின எழுத்தாளரான மரியானா என்ரிக்வெஸ் -ன் கதாபாத்திரம் அழகாகவும் வெளிப்படையாகவும் உடைந்த இதயத்தின் துயர்மிக்க காதலை சொல்லும் கதையில்  ழீன் ஜெனே இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் உயிரோடுதானிருக்கிறார் என உணர தூண்டும்.

     இந்த உலகை கண்ணுறும் ஒரு நல்ல எழுத்துக்கு ரியலிசம் ஒரு சக்தி நிறைந்த வடிவம் கிடையாது. ஜப்பானிய எழுத்தாளரான மெய்கோ கவாகாமியின் சிறுகதையில் சமீபமாக வீட்டை இழந்த ஒரு பெண், இனி எப்போதும் அந்த வீட்டின் பகுதியாக முடியாத ஒரு கடுமையான தீர்மானத்திற்கு எப்படி வருகிறாள் என சொல்லியிருப்பார். ஜப்பானிய எழுத்தாளரான  சயாகா முரடா, விடியற்காலையில் மளிகைக்கடையில் பகுதிநேர பணியாளராக இருந்துகொண்டே எழுதுவதற்கென்று நேரம் உருவாக்கிக் கொண்டு மனித முடியிலிருந்தும், எலும்பு மற்றும் மற்ற உடல் பாகங்களிலிருந்து பெண்களுக்கான கண்கவர் ஆடைகள் தயாரிக்கும் ஒரு உலகை விளக்குகிறார். சிலசமயம் உலகம் தனக்குத்தானே ரியலிச வடிவங்களை மறுத்துவிடுகிறது. அமெரிக்க எழுத்தாளர் டேவிட் சர்ச்சி, தன் கம்பீரமான எழுபதாவது வயதில் தான் கரகரவென்று ஓட்டித்திரிந்த ஒரு சின்ன வாகனம் தனது எந்திர அழுத்த அறையின் தனித்தன்மையினால் பிரசித்தி பெற்ற VW (வோல்ஸ் வேகன்) காராக மாறியது என நினைவு கொள்கிறார்.

    இந்தத் தேடலில் நான் கடந்து வந்த சிறந்த எழுத்தாளர்கள் இந்த உலகை மிக நெருக்கமாக வேற்றுக்கோணத்தில் பார்க்கும் வழியை கண்டறிந்தவர்களாக இருக்கிறார்கள். கொலம்பியா எழுத்தாளர்  ஆண்ட்ரஸ் ஃபெலிப் சோலானோ,  சில வருடங்களுக்கு முன் கொரியாவுக்கு போன பிறகு அவரது தினசரி நடவடிக்கைகள் பற்றிய பத்திரிகை வெளியீடு எதிர்பாராத ஞானம் போல் ஒளிர்கிறது. மெக்ஸிக எழுத்தாளர் டியாகோ என்ரிக் ஒஸோர்னோ, வட அமெரிக்கா, மெக்ஸிகோவில் நிகழ்த்தும் பன்னாட்டு போதை வர்த்தகத்தால் ஏற்படும் விபரீத விளைவுகளை அறிய எண்ணற்ற முறை தனது உயிரை பணயம் வைத்திருக்கிறார். இதற்காக அவர், வன்முறையை துடைத்தழிப்பதற்காக  உலகத்தின் மிகப்பெரிய “இறால் காக்டெயில்” அருந்தி விழா கொண்டாடும் நகரத்திற்கு சென்று வந்திருக்கிறார். உலகத்தின் சிறந்த சிறுகதை எழுத்தாளரான சமந்தா ஸ்வெப்ளின், எழுதிய சுருக்கமான கதை நகரத்தின் வேகத்தில் அலைவுறும் ஒரு குடும்பத்தின் விசித்திரமானதும் அதன் அவசரத்தேவையை உணர்த்துகிறதுமான நாவலாக வெளிவந்திருக்கிறது.

    வரவர அலங்காரத்தன்மை, குறிப்பாக எழுத்தில் அதன் அழகை குலைத்துவிடுவதாக உணர்கிறேன். உகாண்டாவில் ராணுவத்தாக்குதலுக்கு தப்பித்த ஆசிரியரின் கதையை எத்தியோப்பிய எழுத்தாளர் டினாமெங்கெஸ்டு சாதாரணமாக கதைமாந்தர்களே தங்களது கதைப்பகுதியை எடுத்துச் சொல்லும்படி அனுமதித்திருக்கிறார். ஈரான் எழுத்தாளரான சோல்மாஸ் ஷரீஃப், தனது அமைதியின்மை பற்றிய கவிதைகளின் ஒரு கணத்தில் கத்தி முனையில் விஷம் தோய்த்தும் மறுகணம் விரக்தியும், நினைவுறுதலுமாக அச்சுறுத்துவதாக இருக்கிறது. தன் இளம்பிராயத்து பயணங்களின் சிறு நினைவிலிருந்து  ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஃபியோனா மெக்பார்லேன், நமக்கு நினைவுபடுத்துவது “ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் ஒரு கண்டடைதல் அல்லது தன்னைத்தானே அழித்துக்கொள்ள வழங்கும் ஒரு வாய்ப்பு”. உண்மையில், சாதாரணமாகச் சொல்லும் போது, எழுத்து அதன் சுயத்தன்மையின் ஆழங்களைக் கொண்டிருக்கிறது.

    இந்த தேர்வில் சில கதைசொல்லிகளுக்கு, முடிவாக நீதியை பற்றி பேசும் பெருங்கதைகளில் உத்வேகத்தை கொடுப்பதென்பது சிரமம் தான். பிரிட்டிஷ் எழுத்தாளர் சஞ்சீவ் சகோடாவின் The Year ORunways கடந்த ஐந்து வருடங்களில் வெளியிட்ட நாவல்களில் மிகச்சிறந்தது எனலாம். அதில் தனிக்குடும்ப வாழ்க்கை முறையினால் எவ்வாறு ஒரு திருமணம் பாதிக்கப்படுகிறது என்பதை ஒரு சிறுகதையில் பங்களித்திருக்கிறார். முடிவற்று குரைக்கும் கொடுமைப்படுத்தப்பட்ட ஒரு நாயின் பாவம் ஒரு குடும்பத்தின் விதியாவதை சீன எழுத்தாளர் ஸூ  செஷன், தனது கதையில் எழுதிச் செல்கிறார். சோமாலிய எழுத்தாளர் நடிஃபா மொஹமத்,  போன நூற்றாண்டின் மத்தியில் ஒரு மாலுமியின் வாழ்வை மீட்டெடுக்கிறார், ஆனால் அவரை போன்ற மனிதர்கள், குற்றத்தை செய்தவர்கள் தன்னை போன்றவர்களாக இருக்க கூடாது என்று வேண்டிக்கொள்கிறார்கள். இந்திய எழுத்தாளர் தானியா ஜேம்ஸின் சிறுகதையில் காரால் இடித்துவிட்டு ஓடுகிற விபத்தொன்றில் ஒரு இளம் வயதுக்காரன் இறந்து போகிறான். சைக்கிள் சுக்குநூறகிவிடுகிறது. ஆனால் யாரையும் பழி சொல்ல முடியாத நிலையாக கதை போகிறது. மாகாண காவலராக பணி செய்த சீன எழுத்தாளர்  ஏ யி, ஒரு காணாமல் போன சக்கரத்தை கண்டுபிடிக்க இரண்டு துப்பறிவாளர்கள் ஒரு தொழிற்சாலைக்கு அனுப்பப்படும் பெரும் வேடிக்கையான கதையை சொல்கிறார்.

    சில சமயங்களில், எழுத்தாளர்கள் ஒரு ஓவியனை போல தங்கள் உருவப்படங்களை பெரிய சுவரோவியமாக தீட்டி நம்மை பார்க்க செய்கிறார்கள். அமெரிக்க எழுத்தாளர் கார்னேட் கடோகன் தன்னுடைய சுயசரிதைக் கட்டுரையில், எப்படி வளர்ப்பு பெற்றோர்களின் கொடுமைகளால் அவர் தன்னை தானே பழிக்கும், கொடுமைக்கும் விதிக்கப்பட்ட பிறப்பாக நினைக்க நிர்பந்திக்கப்பட்டார் என்பதை வெளிப்படுத்துகிறார். மெக்ஸிக எழுத்தாளர் வலேரியா லூயிஷெல்லி, பல்வேறு வழிகளில் தான் எவ்வாறு ஆண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் தனது பெண் எழுத்தாளர் என்ற தகுதிக்குறைவினால் தண்டிக்கப்பட்டார் என வெட்கமும் வேதனையுமாக தனது கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார். ரொமானிய எழுத்தாளர் மரியஸ் ஷிவு அடிப்படையில் ஒரு கவிஞராக, எந்த இழப்புகள் தன்னை ஒரு கவிஞனாக மாற்றியது என்று வெளிப்படுத்துகிறார், இன்று தன் அன்புக்குரிய தாய் தன்னோடு இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியுடன் தான் ஒரு பரிசுப்பொருளை திரும்பிக் கொடுப்பார் என்பதை சுட்டிக்காட்டுகிறார். அமெரிக்க எழுத்தாளர் கிளெய்ர் வயே வாட்கின்ஸ், முகச்சுளிப்புடன் தான் என்னவாக ஆனேன் என்பதை வாழ்நாளில் தன் அம்மா அதைத் தெரிந்துகொள்ளவே இல்லை என்பதை வெளிப்படுத்துகிறார்.

    மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் தனது அனுபவங்களை, கண்டறிவதற்கான திறப்பாக பயன்படுத்துகையில், விழிப்புணர்வின்மையும், தன்னம்பிக்கையின்மையும் டிஜிட்டல் காலத்தின் திடுக்கிடச் செய்யும் பார்வை கூர்மையை பிரதிபலிப்பது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதுதான், அந்த உணர்வுதான், மிக அழகான நடையில் வெளிப்பட்டு, ஆழ்சிந்தனையின் ஆழ்நிலையை சுட்டுகிறது ஸ்விடீஸ் எழுத்தாளர் அதெனா ஃபரூக்ஷாத் போல. அவரின் கவிதைகளில் எங்கே ஞாபகக்குறைவினால் குழப்பம் ஒரு செங்குத்துப் பாறையாக உருவாகிறதோ அங்கே அது ஆழ்சிந்தனையின் புதிரிலிருந்து நழுவுவதாக வெளிப்படுகிறது. ஜமைக்கா கவிஞரான  இசின் ஹட்சின்ஷனின் நேர்த்தியான பரோக் வரிகளில், கவிஞர் வழமையையும், தனது கடந்தகாலங்களின் அகன்ற நிலக்குகையையும் இணைத்து ஒரு நடைபாலம் கட்டுகிறார்.

    சிறிது நாட்களுக்கு முன் நான் எனது “குட்டி இளவரசன்” புத்தகத்தை தேடினேன், அது எனது நூலகத்துள் தொலைந்து போனது, சொல்லப்போனால் புதைந்து போனது, வேறு ஊர்களுக்கு மாற்றலாகும் போது நிரந்தரமாகத் தொலைந்திருக்கலாம். எங்கள் குடும்பம் ஒரு நாடோடிக் குடும்பம்.பிறகு நான் தேடுவதை விடுத்து யோசித்த போது அதன் ஒவ்வொரு பக்கத்தையுமே என்னால் நினைவுக்குக் கொண்டுவரமுடிந்தது, முகப்பில் என்ன எழுதியிருந்தது என்பதையும், என் பாட்டி அன்பளிப்பு செய்யும் போது எழுதிய குறிப்பும் நினைவுக்குக் கொண்டுவரமுடிந்தது. என்னுடைய பதினேழாவது பிறந்தநாளுக்கு அம்மா, டைலன் தாமஸின் கவிதையை எழுதிய பக்கத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. என் நண்பன் எனக்களித்த  City Lights Pocket கவிஞர்களின் அன்பின் வார்த்தைகளாலான திரட்டு ஒன்றையும் நினைவு கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை.

    உங்களிடமும் இதைப் போன்ற பாதுகாக்கப்பட்ட அல்லது சுக்குநூறானவை , இனிமேல் புத்தகங்களாக இருக்க முடியாதவை நீங்கள் ஒருகாலத்தில் நடந்து வந்த வாசலாக இருக்கும். இந்தத் தேர்வுகளையும் நீங்கள் அதே போல ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புவதை விட வரவேற்கிறேன். அவர்கள் பிரான்சிலிருந்தோ, வேல்ஸிலிருந்தோ, கொலம்பியாவிலிருந்தோ அல்லது கானாவிலிருந்தோ எங்கிருந்து வந்தாலும், நான் ஒரு வாசிப்பாளன் என எண்ணுவார்களா இல்லையா என்பதெல்லாம் மீறி  எனக்கு சொல்லப்பட்ட, நான் வாசிக்க வேண்டிய சில புத்தகங்கள் வாசிக்காமல் கடந்தவைகளில் சில விதிவிலக்குகளாக, நான் தேடும் போது கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான். இருந்தாலும் மிகப்பெரிய மகிழ்ச்சி என்னவெனில் இந்த வெளியீடு உலகத்திற்கு தெரியவரும் போது அது ஸ்வீடன், இத்தாலியன், ரோமானியன், மற்றும் ஆங்கிலத்தில் என பல மொழிகளிலும் பதிக்கப்படும் என்பதுதான். நீங்கள் யாரென்று கற்பனை செய்ய முடியாது, எங்கிருந்து இதை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் எனத் தெரியாது. என்னால் யோசிக்க முடிந்ததெல்லாம் நாம் ஒரே விமானத்தில் இருக்கிறோம், இதோ அது தரையிலிருந்து கிளம்புகிறது மேலெழும்பி.

    ******

     

    புதுவகை எழுத்தில் ஆர்வம் கொண்ட எழுத்தாளரான ஜான் ஃபிரீமேன்,  புதுவகை எழுத்து என்கிற கருத்தாக்கத்தில் தற்கால எழுத்தாளர்களில் புதுவகையான எழுத்து நடையில் எழுதும் 29  எழுத்தாளர்களின் கதை கட்டுரைகளைத்  தொகுத்து Freeman என்ற தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். அந்தத் தொகுப்பிற்கு அவர் எழுதியுள்ள முன்னுரை இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.