பிக் பிரதர் வெற்றியாளர் ஜக் பெய்ன்ஸ் உடன் ஒரு நேர்காணல்
தமிழில் : நன்மாறன் திருநாவுக்கரசு

 

***

ஜக், வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்! இந்த சீசனில் என்னுடைய முதல் தேர்வு நீங்கள்தான் (சிரிக்கிறார்). எப்படி உணர்கிறீர்கள்?

அப்படியா, மிக்க நன்றி. அதனால்தான் நான் வெற்றிபெற்றேன்; நீங்கள் என் மீதுதான் பந்தயம் கட்டியிருப்பீர்கள் எனத் தெரியும். உங்களால்தான்(சிரிக்கிறார்). உலகத்தின் உச்சியில் இருப்பதுபோல உணர்கிறேன். கனவுபோல இருக்கிறது. கடந்த 100 நாட்களையும் கனவுபோல உணர்கிறேன். காரணம், கனவு நிஜமாகியுள்ளது, அதேசமயம் எல்லாம் வேகமாய் முடிந்துவிட்டது. நான் வேறு ஒரு உலகத்தில் இருப்பதுபோல உணர்கிறேன். நடந்த எல்லாமும்இன்னமும் ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாவற்றையும் நினைத்து மகிழ்ச்சியாகவும் நன்றியுணர்வுடனும் இருக்கிறேன்.

நான் சொல்லியே ஆக வேண்டும், நீங்கள் நடுவர் கேள்வி-பதில் போட்டியில் (Jury Answers) மேட்டை சிதைத்து விட்டீர்கள். நீங்கள் உங்கள் ஆட்டத்தை அவரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்ட இத்தனை கடுமையாக மோத விரும்பினீர்களா?

(பெருமூச்சு விடுகிறார்) கடைசியில் எனக்காக வாதிடுவதற்கான ஒரே வாய்ப்பு அது. உள்ளே போகும்போதே எனக்குத் தெரிந்தது, ஒருவேளை நான் இறுதியாக நடைபெறும் வீட்டின் தலைமை போட்டியில் (Head of Household) வென்று, மேட்டின் அருகில் அமர்ந்திருந்தால் அவன்தான் நடுவர் மன்றத்தின் வாக்குகள் அனைத்தையும் பெறுவான். அது ஒரு கடும் யுத்தமாகஇருக்கும் என நிஜமாகவே நினைத்தேன். அதனால்தான்உணர்ச்சிகரமாக பதிலளித்தேன். என்னுடையஅத்தனை நகர்வுகளையும் பொறுப்புடன் மேற்கொண்டேன். நான் எப்படி விளையாடுகிறேன் என்று எனக்குத் தெரிந்தது, ஆனால் அதனை நடுவர் புரிந்துகொள்வாரா என எனக்குத் தெரியாது. மேலும் நான் உணர்ச்சிவசப்பட்ட ஒருவன். எனக்காக அந்தக் கணத்தில் எழுந்து நிற்க வேண்டியது இருந்தது. உண்மை என்னவென்றால் நான் சொன்ன அந்த பதில்கள், எனது உரை, அனைத்திலும் உண்மை இருந்ததை உணர்கிறேன். நடந்த விஷயங்கள் பலவற்றை நான் திட்டமிட்டிருந்தேன். ஆம், இறுதி கட்டத்திற்கு என்னால் தனியாக சென்றிருக்க முடியாது. அப்படி சொல்லவும் மாட்டேன். அது ஒரு கூட்டணி முயற்சி. ஆனால் அப்போது மேற்கொள்ளப்பட்ட பல நகர்வுகளில், எனக்கு பெரும் பங்கிருக்கிறது. அதைக் கைப்பற்றுவதற்கு அதுதான் எனக்கான நேரம்.

நீங்கள் கடந்த வாரம், மேட் வெளியேற வேண்டும் என ஒரு கணம் விரும்பினீர்கள்.  அவரை வெளியேற்றுவதற்கு எதிராக முடிவெடுத்தீர்கள். ஆனால் இன்றைய இரவில்அவரை வெளியேற்றுவதா அல்லது போவி ஜேனை வெளியேற்றுவதா என்று தீர்மானிப்பது குறித்து என்ன முடிவெடுத்தீர்கள்?

நான் ஒரு முடிவை எடுக்கப்போவதில்லை என்றாலும்கூட அது குறித்த எல்லாவற்றையும் அலசி ஆராய்வேன். கடந்த வாரம் நான் மேட்டை வெளியேற்றலாமா அல்லது ஃபெலிசியாவை வெளியேற்றலாமா என வெளிப்படையாக யோசித்தேன்.அதற்கான ஒவ்வொரு சாத்தியத்தையும் ஆராய்ந்தேன். இந்த வாரமும் அப்படித்தான். அது ஒரு கடினமான முடிவு, காரணம் அது7.50லட்சம் டாலர்கள் மதிப்பு கொண்ட முடிவு இல்லையா?

ஆனால் நான் மேட்டை நிராகரிக்கவில்லை. எனக்கு ஆட்டத்தில் ஒருவருடைய உதவி அவசியமாகத் தேவைப்பட்ட கணத்தில் அவன் என்னை புறக்கணிக்காமல் இருந்திருக்கிறான். என்னைக் காப்பாற்றி இருக்கிறான்.அதனால் நானும் அவனை ஏமாற்றவில்லை. இந்த விளையாட்டை ஆட வரும்போதே நான் தேர்ந்தெடுக்கும் ஒருவரிடம் மட்டும் நேர்மையுடனும் நாணயத்துடனும் விளையாட வேண்டும் என விரும்பினேன்.நான் நேர்மையாக இருக்க தேர்ந்தெடுத்த ஆள் அவன்தான்.நான் போவி ஜேனை வெளியேற்றும்போது எனது உரையிலும்கூட இதனை குறிப்பிட்டேன். நான் பெருமைப்படும்படியான முடிவை எடுக்க விரும்பினேன்.என் குடும்பம் பெருமைப்படுபடியான, எனது சமூகம் பெருமைப்படுபடியான முடிவை எடுக்க விரும்பினேன். அப்படித்தான் இறுதியில் வந்திருக்கிறது. அது சரியான முடிவுதான் என எனக்குத் தோன்றியது. நான் திரும்பிப் பார்த்து தலை நிமிரும் விஷயமும் அதுதான்.பணத்தைவிட அதுதான் எனக்கு முக்கியமாகப் படுகிறது.

பிக் பிரதர் வரலாற்றில் முதல் சீக்கிய வெற்றியாளராக வந்தது உங்கள் சீக்கிய சமூகத்திற்குப் பெருமை சேர்த்திருப்பதாகக் குறிப்பிட்டீர்கள். இப்போது அந்தப் பட்டத்தைப் பெறுவது எப்படி இருக்கிறது, எதிர்கால போட்டியாளர்களை எவ்வாறு ஊக்கப்படுத்த விரும்புகிறீர்கள்?

அது உண்மையிலேயே பெரிய விஷயம். அதைத்தான் என்னுடைய உலகமாக கருதுகிறேன். நிகழ்ச்சிக்கு வந்தது- அதாவது நான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிந்ததே என்னைப் பொறுத்தவரை பெரிய சாதனை. என்னுடைய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது, பிக்பிரதரின் முதல் சீக்கிய பங்கேற்பாளராக இருந்தது, அதுவே பெரிய விஷயம். இத்தனை தூரம் வருவேன் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. நான் எதிர்ப்பார்க்கவும் இல்லை. நிச்சயமாக இதற்காக நான் கடுமையாக போராடினேன். முதல் சீக்கிய வெற்றியாளராக இருப்பது பெரிய விஷயம். என்னால் அதை வார்த்தையில்கூட விவரிக்க முடியவில்லை. ஒருவர் தனக்கு உண்மையாக இருந்தபடியே இந்த விளையாட்டை ஆட முடியும் என்பதையே என் வெற்றி மற்றவர்களுக்கு காட்டுகிறது என நம்புகிறேன். நீங்கள் பார்க்க வித்தியாசமானவராக இருந்தால் ஒரு விஷயமே இல்லை. உங்களைப் பற்றி அடுத்தவருக்கு அதிகம் தெரியாமல் இருந்தாலும், அடுத்தவர் உங்களைப் பற்றி எதிர்மறையான பார்வையை வைத்திருந்தாலும் எதுவும் விஷயமில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுக்கு நீங்களே உண்மையாக இருந்து, உங்கள் மனதை ஒரு விஷயத்தை நோக்கி செலுத்தினீர்கள் என்றால் அதை உங்களால் அடைய முடியும். நீங்கள் பெரிதாக கனவு காண வேண்டும், லட்சியத்தை அடைய நீங்கள் எப்போதும் கடுமையாக உழைக்க வேண்டும். நான் அந்த செய்தியைத்தான் எனது விளையாட்டின் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த விளையாட்டில் எனது கதையின் மூலம் உணர்த்த விரும்புகிறேன்.

நீங்கள் பெற்ற 10 வெற்றியின் (வீட்டின் தலைமைக்கான போட்டியில் 3 வெற்றி, வீட்டோ அதிகாரத்திற்கான போட்டியில் 7 வெற்றி) மூலம் இதுவரை இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்து இருக்கிறீர்கள். அது தெரிந்தவுடன் உங்கள் எண்ணம் என்னவாக இருந்தது?

உண்மையிலேயே அது விசித்திரமானது (சிரிக்கிறார்). உண்மையிலேயே எனக்கு அது என்ன சாதனை என்றுகூடத் தெரியாது. நான் உண்மையாகச் சொல்கிறேன். நான் சாதனைகளை முறியடிக்க எல்லாம் முயற்சிகள் செய்யவில்லை. நான் உண்மையில் போட்டியில் நீடிப்பதற்காகப் போராடிக்கொண்டிருந்தேன். நான் என்னையும், என் நெருங்கிய சகாக்களையும் பாதுகாப்பதற்காகவே இந்தப் போட்டியை வெல்ல முயற்சித்தேன். அதுதான் எல்லாவற்றின் லட்சியமாகவும் இருந்தது. அதனால்தான் நான் இந்தப் போட்டியில் நுழைந்தபோது எனக்குள் அப்படியொரு கனல் பற்றி எரிந்தது. எந்த விலை கொடுத்தாவது வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகத்தில் இருந்தேன். அதுதான் என்னை எல்லா வெற்றிகளை நோக்கியும் உந்தித் தள்ளியது. நான் எப்படி விளையாட்டை ஆடினேன் என்பதற்கும், என் மக்களைக் காக்க எவ்வளவு தீவிரமாக விரும்பினேன் என்பதற்கும் துணைப் பொருளாகத்தான் நான் படைத்த சாதனை இருக்கிறது. நான் அதற்கு உண்மையில் நன்றியுடன் இருக்கிறேன். எனக்கு இன்னமும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் நான் படைக்கப்போகும் சாதனையாக அது இருக்கும் என்று நினைத்தே பார்க்கவில்லை. அது எனக்கும் அப்பாற்பட்டது. எனக்குத் தெரியாது.

உங்கள் ஆட்டத்தின் ஒரு சுவாரஸ்யமான அம்சம், நீங்கள் உங்களுடைய சில கூட்டாளிகளுக்கு எதிராகவும் நகர்வை மேற்கொண்டீர்கள். நீங்கள் ஏற்கனவே ஒருமுறை வெளியேற்றப்பட்டதை வைத்து உங்களிடம் இருந்து எவ்வளவு குரூரம் வெளிப்பட்டது? நீங்கள் மேட்டை தவிர வேறு யாருக்காவது விசுவாசமாக இருக்க வேண்டும் எனக் கருதினீர்களா?

நான் உண்மையில் வெளியேறியதைப் பற்றி அவ்வளவு சிந்திக்கவேயில்லை. போட்டிச் சுற்றுகளைத் தாண்டி, ஒரு சமூக புரிதலின் அடிப்படையில் விளையாட்டில் முன்நகரவும், முன்னேறவும் எனக்கு இருந்த ஒரே வழி அதில் தேங்கிவிடாமல் இருப்பது மட்டுமே என்பதை உணர்ந்தேன். அதனால் அது எனக்குப் பெரிய விஷயமாகப்படவில்லை. நான் வெளியேறிவிட்டேன் என எனக்குத் தெரிந்தது. அதற்கு உண்மையிலேயே நான்தான் பொறுப்பு. நான் இந்த சீசனின் தொடக்கத்தில் உண்மையில் முட்டாள்தனமாக விளையாடினேன். ஒரு போட்டியாளராக மோசமாக இருந்தேன். சீசனின் போக்கில்தான் நான் மேம்படத் தொடங்கினேன். நான் என்னுடன் நெருக்கமாக இருந்தவர்களை வெளியேற்றியபோது, என் நண்பர்களை வெளியேற்றியபோது, என்னுடன் இணக்கமானவர்களைவெளியேற்றியபோது, அவர்கள் இறுதியான வாழ்வா-சாவா ஆட்டத்தில் இல்லாத பட்சத்தில்உண்மையில் கணமாக உணர்ந்தேன். ஒவ்வொரு வெளியேற்றமும் இன்னமும் கசக்கிறது. காரணம், நானும் அதேவீட்டில் அவர்களுடன்தான் எந்நேரமும் வாழ்ந்தேன். ஏதோ போட்டி நடந்து, வெளியேற்றம் நிகழ்ந்து, ‘நல்லது, அடுத்த வாரம் வந்துவிட்டது’ என நான் நினைக்கவில்லை. நான் அவர்களுடன் வாழ்ந்தேன். அவர்களைத் தெரிந்துகொண்டேன். அவர்களிடன் நெருக்கமாக இருந்தேன். அவர்களுடைய குழந்தைப் பருவம், வளர்ந்த விதம், குடும்பம் ஆகியவற்றைப் பற்றி ஒவ்வொன்றையும் தெரிந்து வைத்திருக்கிறேன். அதனால் ஒவ்வொருமுறையும் யாராவது வெளியேறும்போதும் அது கசக்கும். ஏனென்றால் அவர்கள் அங்கு இல்லாததன் வெறுமையை உணர்வீர்கள். ஆனாலும் ஆடுகளத்தில் எத்தகைய நகர்வை நான் மேற்கொண்டாக வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.

ஜேரட்டும் சிரியும் உறவினர்கள் என்பதைக் கண்டுபிடித்தவுடன் நீங்களும் மேட்டும் அட்டகாசமான பாவனையை வெளிப்படுத்தினீர்கள். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் என்ன பேசிக்கொண்டீர்கள் என்பதை நேரலையில் எங்களால் சரியாகப் பார்க்க முடியவில்லை. அப்படி என்ன பேசினீர்கள்?

கடவுளே, அதுதான் இந்த சீசனின் முக்கியமான திருப்பம். நான் அதை எதிர்ப்பார்க்கவே இல்லை. அது எல்லாமும் சேர்ந்து ஒரேடியாக என்னை தாக்கியதுபோல இருந்தது. அவர்கள் எங்களை ஏமாற்றி இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் அந்த வீட்டில் இரண்டு வெவ்வேறு கூட்டணியில், வெவ்வேறு பக்கத்தில் இருந்தார்கள். நான் ஜேரட்டிடம் சென்று, ‘சிரியும், இஸியும் இந்த வீட்டின் மறுபக்கத்தை ஆள்கிறார்கள்’ என்று சொன்னேன். அது அவனுடைய தாய் என்று தெரியாமலேயே. பிறகு சிரியிடம் சென்று, ‘ஜேரட் வலுவாக இருக்கிறான் என நினைக்கிறாயா? அவன்தான் இலக்காக இருக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறேன். அவளுடைய மகன் என்று தெரியாமல். அது முட்டாள்தனமாக இருந்தது. அது ஒரு பைத்தியக்காரத்தனம் என உணர்ந்தவுடன், எல்லாமும் நன்றாகவே புரிந்தது. அவர்கள் ஒரே ஆட்டத்தில் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் நேர்மையாக இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு சிறிய விஷயமும் அதைப் பற்றியதாகவே இருந்திருக்கிறது. ஜேரட் வெளியேறி விட்டு மீண்டும் வந்தவுடன், ஒரு செய்தி வந்தது, சிரி அதைப் படித்துவிட்டு ‘அப்பாடா’ எனச் சிரிக்கத் தொடங்கினாள். அந்த கணத்தில் நானோ, ‘இது என்ன பைத்தியக்காரத்தனம். கேம், ஜேரட் இருவரும் வருவதற்காக அவள் ஏன் சிரிக்கிறாள்? என்ன நடக்கிறது? இந்த வீட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று சிரிக்கிறாயா?’ என நினைத்தேன். ஆனால் இப்போது புரிகிறது. நாங்கள் அவளது மகனை வெளியேற்றி இருக்கிறோம். இப்போது அவளது மகன் ஆட்டத்தில் நீடிக்கும் வாய்ப்பைப் பெற்று கதவுகள் வழியாக திரும்பி வருகிறான்.சிரியாக இருந்திருந்தால் நானும் சிரித்திருப்பேன். அது உண்மையில் வெறித்தனமாக இருந்தது. வெறித்தனம்.

நீங்கள் ஏற்கெனவே வெளியேறியதன் காரணமாக உங்கள் வெற்றி தகுதியற்றது என்று பிக் பிரதரின் தூய்மைவாதிகள் சொல்லும் அவச்சொல்லுடன்தான் இங்கிருந்து வெளியேறுவீர்கள். இவர்களுக்குப் பதிலடி தரவும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?

நிஜமாக நான் எதுவும் சொல்லப்போவது இல்லை.காரணம் உண்மையிலேயே நான் தொடக்கத்தில் மோசமாக இருந்தேன். நான் வெளியேற்றப்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. அது எனக்கு நன்றாகப் புரிகிறது. எனக்கு தெரிந்த இன்னொரு விஷயம் ஓர் அதிகாரம் என்னைக் காப்பாற்றியது. மேட் அவனிடம் இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னைக் காப்பாற்றினான். நான் ஆடிய நல்லாட்டத்துக்கு அதுதான் சான்றாக இருக்கும். தனது முக்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னைக் காப்பாற்றும் அளவிற்கு நான் மேட்டுடன் நல்ல நட்பில் இருந்தேன். வாரம் செல்ல செல்ல என்ஆட்டம் மேம்படத் தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் நான் நல்ல நிலைக்குச் சென்று கொண்டிருந்தேன். என்னுடைய சமூக விளையாட்டு சிறப்படைந்தது. போட்டிச் சூழலில் பார்க்கும்போது நான் நன்றாக மேன்மை அடைந்தேன். (இதைக் கருத்தில் கொள்ளும்போது) இந்த விளையாட்டின் தொடக்கத்தில் சிறந்த வீரராக நான் ஆட்டத்தை ஆரம்பிக்கவில்லை, ஆனால் முடிவில், நான் சிறந்த விளையாட்டை ஆடியதாக முழுதாக நம்புகிறேன்.

நீங்கள் இதைக் கேள்விப்பட்டீர்களா என்று எனக்குத் தெரியாது, ஆனால் உங்கள் குடும்பமும் கோரியின் குடும்பமும் இந்தநிகழ்ச்சியின் வழியாக இணைந்துவிட்டார்கள். இப்போது நெருங்கிய நட்பில் இருக்கிறீர்கள். அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என்னுடைய குடும்பமும் கோரியின் குடும்பமுமா? ஐயோ, எனக்குத் தெரியவே தெரியாது. நன்றாக இருக்கிறது. இந்த அனுபவத்தின் சிறந்த அம்சமே அதுதான், என் குடும்பம் மற்றவர்களுடைய குடும்பத்துடன் நெருங்கி பழகுகிறது என்பது. பரவசமூட்டக்கூடியதாக இருக்கிறது.எனக்குக் கோரியைப் பிடிக்கும். நான் அவரை நேசிக்கிறேன்.

உங்கள் வீட்டின் திரைக் கொண்டாட்டத்தில் (Watch Party) அவருடைய சில குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக சமூக வலைதளங்களில் பார்த்தேன்.

என்னது? எங்கே? எப்படி?

எனக்கு உறுதியாகத் தெரியாது, ஆனால் பிக்பிரதர் சீசன் 23ஐ சேர்ந்த கிளேர் ரெஹ்ஃபஸும், தி அமேஷிங் ரேஸும் அதைபற்றி எதோ பகிர்ந்திருக்கிறார்கள்! (சிரிக்கிறார்) என்ன? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு வெளியில் என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியாது. இருந்தாலும் மகிழ்ச்சி. உண்மையில் மகிழ்ச்சி. நான் விளையாட்டையும் தனிப்பட்ட வாழ்வையும் பிரித்தே பார்க்கிறேன். மேலும் விளையாட்டு என்பது விளையாட்டுதான், நான் உண்மையில் குரூர ஆட்டத்தை ஆடினேன். நான் நிறையப் பேரை வெளியேற்றினேன். ஆனால் தனிப்பட்ட அளவில், நான் சாகும் வரை அவர்களை நேசிப்பேன். நான் அவர்கள் எல்லோரிடமும் தொடர்பில் இருக்க விரும்புகிறேன். அவர்கள் குடும்பத்தினரைச் சந்திக்க ஆர்வமாக உள்ளேன். என் குடும்பம் ஏற்கெனவே அவர்களுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் இல்லையா? அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். உற்சாகமாக இருக்கிறது. அந்த அனுபவத்தைத்தான் ஒரு பார்வையாளராக நாம் பார்ப்பதில்லை. மக்கள் எப்படி ஒன்றிணைகிறார்கள், அதன்பின் என்னவாக இருக்கிறது என்பதை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அதுதான் இதன் அழகிய பகுதி.

கடைசி கேள்வி! இறுதி நாள் நிகழ்ச்சியில் பிக் பிரதர் ரெயிண்டீர் போட்டி நடைபெறப்போவதாக ஜூலி அறிவித்தார். உங்களால் அந்த இரண்டு வார நிகழ்வுக்குச் செல்ல முடியுமா, அது உடனே வருவதுபோல் இல்லையா?

நிச்சயமாக செல்வேன். எனக்கு பிக்பிரதரைப் பிடிக்கும். பிக்பிரதர் ரெய்ண்டீர் விளையாட்டு எதையெல்லாம் வைத்திருக்கிறது என்று எனக்குத் தெரியாது. நான் நிச்சயமாக விளையாட விரும்புகிறேன். நான் ஒரு போட்டியாளர். நான் எல்லாவற்றையும் ஆட விரும்புகிறேன். நான் எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறேன். அதுதான் கேட்கவே குதூகலமாக இருக்கிறது. அப்படியென்றால் என்னவென்றுகூட எனக்குத் தெரியாது. நான் செய்ய விரும்புகிறேன். நான் மீண்டும் திரும்பி சென்று செய்ய விரும்புகிறேன்.

அது போட்டி அடிப்படையிலானது எனத் தெரிகிறது. அதனால் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும் (சிரிக்கிறார்).

அடக் கடவுளே, உண்மையாகவா? அப்படியென்றால் போட்டிகள் ரொம்ப குதூகலமாக இருக்கும். அப்படித்தான் நான் இந்த ஆட்டத்தில் பிழைத்தேன். இந்த சீசனின் இரண்டாம் பகுதி முழுவதும் போட்டிகள் நிறைந்திருந்தன. அதனால் அதைச் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.

***

நன்றி : Popcrave . Com