• கௌதம சித்தார்த்தன் 

 

முதலில் மேன் புக்கர் பரிசு வாங்கிய The Vegetarian லிருந்து ஆரம்பிக்கலாம். கொரிய மொழி, கிம் கி டுக் போன்ற தங்கள் திரைப்பட ஆளுமைகளால்,  உலகத் திரைப்பட அரங்குகளில் தனக்கான தனித்தன்மையைப் பதித்து, பெரும் கவனம் பெற்று வரும் சூழலில்,  கொரிய கலை இலக்கியங்களும் சர்வதேச அந்தஸ்தைப் பெற்று வருகிறது என்பதை இந்த நாவலின் வெற்றியில் உணர்ந்தேன். கடந்த ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு புக்கர் பரிசு வந்ததும், தமிழ்வெளி என்னும் பதிப்பகம் முறைப்படி உரிமை பெற்று தமிழில் வெளியிட்டது என்பதை நாம் அறிவோம். இதன் மொழிபெயர்ப்பாளர் கவிஞர் சமயவேல் என்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது. ஏனெனில், நூலாசிரியரான ஹான் காங்கின் எழுத்து நடை என்பது, கவித்துவம் சார்ந்த உரை நடை. அதை மொழிபெயர்ப்பவர் ஒரு கவிஞராக அமைந்தது பெரும் கிளர்ச்சியை எனக்குள் ஏற்படுத்தியது.

அப்பொழுது நான் சென்னையில் இருந்த காலம், உடனே நூலை வாங்கி வாசித்தேன். எனக்கு மிகவும் பிடித்த mistical ஆன கதைக்களம் கொண்ட ஒரு fantasy. 

நாட்டுப்புறக்கதைகளின் செழுமையான உள்ளடக்கத்தில் கால் பதித்து, அதை உள்வாங்கி, ஒரு post modern நாவலாக உருவாக்கியிருக்கும் அபாரமான கவிதை நேர்த்தி கொண்ட உரைநடை. அதை கவிஞர் சமயவேல் அதே அழகுடன் மொழிபெயர்த்துத் தந்திருக்கும் நேர்த்திக்கு அவரைப் பாராட்டலாம்.

நாட்டுப்புறக் கதைகளின் classical ஆன, மனிதர்கள் மரமாக மாறும் இந்தத் தொன்மம், உலகப் புகழ்பெற்றது. இந்தத் தொன்மத்தை, உலகமொழிகளின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் நவீன இலக்கியத்தில், மீள் உருவாக்கம் செய்து, புதிய பார்வைகளை, தத்துவத் தேடல்களை உருவாக்கியிருக்கிறார்கள். 
   
நான் சமீபத்தில், மொழிபெயர்த்த எஸ்ரா பவுண்ட்டின் சில கவிதைகளில், “மரம்” என்னும் கவிதையின் மொழியாக்கம் ஞாபகம் வருகிறது. மனிதர்களை மரங்களாக மாற்றுவது பற்றிய இரண்டு பிரபலமான புராதன புராணக் கதைகளில், அப்பல்லோவும்  டாப்னேவும் போல, அதே Metamorphoses ல் வரும், திரேசிய ஏழை தம்பதிகளான பிலேமோனும் பாசிஸும் என்ற கதை. இத்தம்பதிகளின் வீட்டுக்கு வரும் கடவுளருக்கு நல்ல விருந்தோம்பல் செய்ததன் பலனாக, அவர்களின் புகழ் நிலைக்க, அவர்களை ஓக் மற்றும் எல்ம் என இரண்டாகப் பிணைந்த ஜோடி மரங்களாக மாற்றுகின்றனர் கடவுள்கள். இந்தத் தொன்மங்களை நவீன வாழ்வில் பொருத்திப் பார்க்கிறார் எஸ்ரா பவுண்ட், அந்தக் கவிதையில்.

The Vegetarian முதல் வாசிப்பில் மிக நேர்த்தியாக எனக்குள் இறங்கிய மொழியாக்கம், இரண்டாவது வாசிப்பில் சிற்சில நெருடல்களை அடையாளப்படுத்தியது. முதலாவதாக,  The Vegetarian என்னும் தலைப்பே பெரும் முரண்பாடுடன் முன் நின்றது. 

சற்று விரிவாகப் பார்க்கலாம்:

 The Vegetarian என்னும் தலைப்பை, “மரக்கறி” என்று மொழி பெயர்த்துள்ளது பெரும் blunder ஆக எனக்குள் உறுத்தியது. அதாவது, நூலின் தலைப்பு, The Vegetarian. உள்ளே வருகின்ற முதல் அத்தியாயத்தின் தலைப்பும் The Vegetarian தான். மொழிபெயர்ப்பாளர், நூலின் தலைப்பை, “மரக்கறி” என்றும், அத்தியாயத்தின் தலைப்பை “சைவப் பெண்” என்றும் மொழி பெயர்க்கிறார். இப்படி மாற்றி மாற்றி  மொழியாக்கம் செய்திருப்பது மிகத் தவறான மொழியாக்கம்.

 இது ஒரு சிறுகதை சார்ந்த Innovative technique. அதாவது, ஒரு சிறுகதையில், குறிப்பிட்ட ஒரு பொருள் அல்லது உயிரி பற்றி எழுதும்போது, உதாரணமாக, random ஆக சட்டென நினைவுக்கு வரும் ஒரு உவமை, வண்டு. பொன்வண்டு என்று  வைத்துக் கொள்ளலாம். கதை முழுக்க, இதே சொல்லில் எழுதுவார் ஆசிரியர். ஆனால், தலைப்புப் போடும்போது மட்டும் புதுமையான முறையில், “பொன்னாங்கண்ணி” என்று வைப்பார். அந்த பாணியை பின்பற்றி மொழியாக்கம் செய்தேன் என்று நம் மொழிபெயர்ப்பாளர் சொன்னாலும், அது,  மாபெரும் தவறுதான்.  

எப்படி என்பதைப் பார்க்கலாம். அதாவது, முதலில் நூலின் தலைப்பிலிருந்து ஆரம்பிக்கலாம். இந்த நூலின் தலைப்பு The Vegetarian. இதை முன்பின் யோசிக்காமல் கவிஞருக்கே உரித்தான ஒரு புதிய சொல்லைத் தேர்வு செய்யவேண்டும் என்ற அவாவில், “மரக்கறி” என்று  போட்டிருக்கிறார். இது  எவ்வளவு பெரிய தவறான மொழியாக்கம்!  

“மரக்கறி” என்பதற்கான ஆங்கில மொழியாக்கம் : The Vegan! அதாவது, மனித உணவில் சைவம் மற்றும் அசைவம் என இருவகை உண்டு. “மரக்கறி” என்று  இன்னொரு வகை உண்டு என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது. பல வருடங்களுக்கு முன்னால், திரைப்பட நடிகர் எம் என் நம்பியார் தனது தொலைக்காட்சிப் பேட்டியில், இதை விரிவாக விளக்குகிறார். அவர் ஒரு “மரக்கறி” உணவுக்காரர். “இந்த உணவைப் பின்பற்றுவது மிக மிக கஷ்டகரமானது” என்கிறார். 
   
புலால் உண்ணாமை மட்டுமே சைவம் என்னும் சைவ உணவைப் பற்றி நாம் அறிவோம். ஆகவே, நம்மில் பெரும்பாலோர் அறியாத “மரக்கறி” பற்றிப் பார்ப்போம். இந்த உணவு, சைவ சமயத்தை விலக்கிய, தீவிர சைவர்கள் (இவர்களை சமணர்கள் என்போரும் உண்டு)  என்போர் பின்பற்றுவது. இவர்கள், ஆடு, மாடு, எருமை போன்ற விலங்குகள் தரும் பால், மற்றும் தயிர், மோர், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி மற்றும் தேன் ஆகியவை உட்பட, விலங்குகள், பறவைகள் மற்றும் இதர உயிரினங்களோடு சம்பந்தமுள்ள உணவு வகைகளை நிராகரிக்கிறார்கள். அதற்குப் பதிலாக தாவர உணவுகளை மட்டுமே உண்கிறார்கள். மரம், செடி, கொடி, புல் ஆகிய தாவரங்கள் தரும் காய், பழம், இலை, கீரை, கிழங்கு, மலர், கொட்டை, விதை, தானியங்கள், சாறு ஆகியனவும் மற்றும் இவைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவுகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார்கள். 

இந்த மரக்கறி உணவு உண்பவர்கள் விலங்குகளை எந்த நோக்கத்திற்காகவும் சுரண்டுவதைத் தவிர்க்கிறார்கள், அணிகலன்கள் மற்றும் ஆடைகள் முதல் ஒப்பனை மற்றும் குளியலறை பொருட்கள், வாசனாதி திரவியங்கள் வரை, விலங்குகளிலிருந்து  தயாரிக்கப்படும் பொருட்களை நிராகரிக்கிறார்கள். விலங்குகளைச் சுரண்டுவதை எந்த வகையிலும் ஆதரிக்க மாட்டார்கள், எனவே உயிரியல் பூங்காக்களுக்கும் மீன் காட்சியகங்களுக்கும் செல்வதையோ அல்லது ஜல்லிக்கட்டு, எருதோட்டம், மற்றும் நாய், குதிரைப் பந்தயத்தில் பங்கேற்பதையோ முற்றாகத் தவிர்க்கிறார்கள்.

இந்த ‘மரக்கறி உண்பவர்கள்’, மேலை நாடுகளில் சிறுசிறு கம்யூனிட்டிகளை உருவாக்கிக் கொண்டு கணிசமான அளவில் உள்ளனர். “மனிதனால் சுரண்டப்படுவதிலிருந்து விலங்குகளை விடுவிக்கும் கொள்கையாளர்கள் ” என்று இந்தச் சங்கங்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. “மனிதனால் விலங்குகளின் வாழ்க்கையைச் சுரண்டுவதை உள்ளடக்கிய மற்ற எல்லாப் பயன்பாடுகளுக்கும் மனிதன் விலங்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்” என குரல் எழுப்புகிறார்கள்.

மரக்கறிக்கான விரிவான விளக்கத்தை வாசித்த பின், அந்த நூலின் மொழியாக்கத் தலைப்பு மிகப்பெரிய தவறு தானா? பார்க்கலாம்:

அதாவது, The Vegetarian என்ற வார்த்தைக்கான சரியான தமிழ் அர்த்தம், சைவம் தான், மரக்கறி அல்ல, இன்னும் சரியான பதத்தில் சொன்னால், இதனுடன் கூடவே ஒட்டிக்கொண்டு வரும் இன்னொரு சொல் இணைப்பு, அதாவது, “சைவ உணவு உண்பவர்”. அல்லது இன்னும் கொஞ்சம் Catchi யாக “சைவ உணவுப் பெண்” என்றுதான் வரவேண்டும். இது குறித்து நிறைய விவாதங்கள் செய்யலாம். ஒரு சிறு உதாரணம். Parliament என்பதை நாடாளுமன்றம் என்றும், Parliamentarian என்பதை  நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் தான் அழைக்கிறோம். இப்படி விவாதங்கள் செய்து கொண்டே போகலாம்.

மீண்டும் நாவலின் தலைப்புக்குத் திரும்புவோம்:

எந்த இடத்தில் நடந்திருக்கிறது தவறு?

அந்த நாவலின் எந்தப் பக்கத்திலும், “மரக்கறி”என்ற வார்த்தை இல்லை. தமிழ் மொழிபெயர்ப்பாளர் கவிஞர் என்பதால், ஒரு புது வார்த்தையைப் போடலாம் என்று போட்டிருக்கிறார்  என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. 

இன்னும் ஒருபடி மேலே போய் என்னிடமிருந்த ஆங்கிலப் பிரதியில் “Vegan” என்ற வார்த்தை போடப்பட்டு இருக்கிறதா என்று நாவல் முழுதும் தேடிப் பார்த்தால், இல்லவே இல்லை.

ஆனால், நாவலின் மையம் சுட்டுவது, மரக்கறி சார்ந்த விஷயங்களையே! 

நாவலில் வரும் இந்த உரையாடல்களை அவதானியுங்கள்:

வெளியே போய் வீடு திரும்பும் கணவனுக்கும், கதாநாயகியான மனைவிக்குமான உரையாடல் :

ஆங்கிலத்தில்: 

“Just make me some fried eggs. I’m really tired today. I didn’t even get to have a proper lunch.”
“I threw the eggs out as well.” 
“What?”
“And I’ve given up milk too.”

தமிழில் :

“எனக்கு கொஞ்சம் முட்டைகளைப் பொறித்துக்  கொடு, நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன் எனக்கு சரியான மதிய உணவு கூட கிடைக்கவில்லை” 
“நான் முட்டைகளை வெளியே எறிந்து விட்டேன்” 
“என்ன..?”
“நான் பாலையும் விட்டுவிட்டேன்.. “

இந்த மொழியாக்கம் சரியா தவறா என்று கேட்பதற்காக இந்த வரிகளை இங்கு முன் வைக்கவில்லை.  இவைகளை கவனமாகப் பாருங்கள், இதில் ஒரு அருமையான ஆதாரம் இருக்கிறது. 

அதாவது, மனைவி, கணவனிடம் சொல்கிற கடைசி வரியைக் கவனியுங்கள்:

“நான் பாலையும் விட்டுவிட்டேன்” என்று மனைவி சொல்வது,  “மரக்கறி உணவைக் கடைப்பிடிக்கும் போக்கிலிருந்து” வெளிப்படும் தெளிவான வார்த்தைகள்.

இந்த இடத்தில், நாம் கடந்த கால வரலாற்றுக் குறிப்புகளை, சுருக்கமாகவேணும் நினைவில் வைக்க வேண்டும்.

நாவலில் வரும், (சைவப் பெண் என்னும்)  வேர்ச் சொல்லைத் தேடும்போது, Etymology -க்குள் நுழைந்தால், நம் தமிழியல் சார்ந்த தத்துவ வாதப்பிரதிவாதங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்ளும். நம் தமிழ்நாடு, பன்முகத்தன்மை கொண்ட, கலைகளும், பண்பாடுகளும், வாழ்வியல் முறைகளும், வரலாற்றுப் பின்புலங்களும், நாகரிகங்களும் கொண்டது. சைவ சமயத்தினர், புலால் உண்ண மாட்டார்கள். சிவனை வழிபடுபவர்கள், மற்ற சமயங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.

பண்டைய இந்தியாவில் தோன்றிய பழமையான சமயம் எனக் கருதும் சமணமும் இதேதான், ஆனால், இவர்கள், உயிர் கொல்லாமைக் கோட்பாட்டை மிகவும் கட்டாயமாக அனுஷ்டிப்பவர்கள். ஒரு ஈ, எறும்பு முதல் எண்பத்தி எண்ணாயிரம் ஜீவராசிகள் வரை உயிர் கொல்லாமையைக் கடைப் பிடிப்பவர்கள். சமணத்தின் மூன்று முக்கியக் கொள்கைகளாக, அகிம்சை, பல தெய்வ வழிபாடு மற்றும் பற்றற்ற தன்மை ஆகும். இந்த சமணத்தைத்தான் ஜைனம் என்று குறிப்பிடுவதாக பல ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். ஆனால், ஆசீவகச் சிந்தனையாளரான முனைவர் நெடுஞ்செழியன், “இரண்டும் வேறு வேறு ” என்று சொல்கிறார்.

வடநாட்டு மார்வாடிகளால் பின்பற்றப்பட்டு, சிற்சில மாற்றங்களடைந்து (குறிப்பாக உணவு ரீதியாக பால்கோவா, அல்வா, நெய் போன்றவைகளை ஏற்றுக் கொண்ட) விளங்குவது ஜைனம் என்றும், ஆதித் தமிழர்களால், எவ்வித மாற்றத்துக்கும் ஆளாகாமல் நெறிமுறை மாறாது விளங்கியது சமணம் என்றும் கொள்ளலாம். இன்னும் சரியாகச் சொன்னால்,  “தமிழ்ச் சமணம்” என்று சொல்லலாம் என்பது நம்முடைய எண்ணம்.   

அடுத்து, விஷ்ணுவை வழிபடுபவர்களான  வைணவர்களின் வாழ்வியல் கோட்பாடுகள் இவர்களிலிருந்து சற்று வேறு படும். அதேபோல, பௌத்தம், புலால் உண்ணாமையை மட்டுமல்லாது, எந்த ஒரு உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது, தங்கள் சமயம் கட்டமைத்திருக்கும் அறத்திலிருந்து வழுவக்கூடாது என்றும் இன்ன பிற அம்சங்களையும் கடைப்பிடிக்கிறது. பௌத்தத்தைப் பொறுத்தவரை, இரண்டு பார்வைகளை முன்வைக்கிறது, அதாவது, 1. பௌத்தம் சார்ந்த துறவிகளுக்கான கட்டுப்பாடுகள் வேறு, 2. பௌத்தம் சார்ந்த குடிமக்களுக்கான  கட்டுப்பாடுகள் வேறு. உதாரணமாக,  துறவிகள் புலால் உண்ணக்கூடாது, அதே சமயத்தில், குடிமக்களால் பிரியமுடன் வழங்கப் பெறும் எந்த உணவாகிலும், (புலாலாகவே இருந்தாலும்) முகம் சுளிக்காது ஏற்றுக்கொள்ள வேண்டும்.  குடிமக்கள் அவரவருக்கான நிலை கருதி  எவ்வுணவும் சாப்பிடலாம்.
 
அதேபோல, ஆசீவகம். புலால் உண்பதை ஏற்றுக் கொள்கிறது. “இவர்கள் வழிபடும் அய்யனார் என்பது புத்தரின் இன்னொரு உருவமே” என்று ‘ஆசீவகமும் ஐயனார் வரலாறும்’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் முனைவர் நெடுஞ்செழியன்.

இந்த ஆசீவகம் தனது கொள்கைகளை 18 படி நிலைகளாக உருவாக்கியுள்ளது. இந்த 18 படி நிலைக்களுக்கான நெறிமுறைகளை  கடந்தவர்கள் ‘ஐய’ நிலையை அடைவதாகக் கூறுகிறது ஆசீவகம். இந்த ‘ஐய நிலை’ என்ற சொல்லுக்கு நிகரான சொல் தான் புத்த நிலை. ஆசீவகத்தின் முதல் படி நிலை, கருமை வண்ணம். இது அறியாமை மற்றும் பண்படுத்தப்படாத மிருக குணம் போன்றவற்றைக் குறிக்கும், இந்த நிலையில் இருந்து ஒரு மாணவனை வெண்மை நிறத்திற்கு இட்டுச் செல்வது தான் ஆசீவகப் பாட நெறிமுறைகள் என்பதை, ஆசீவகம் குறித்த ஆய்வுத் தேடல்களில் நாம் காணலாம்.

இன்னும் இதுபோல, கௌமாரம், காணபத்யம்…என்று நீட்டிக் கொண்டே போகலாம். 2000 ஆண்டுகால தொன்மை வாய்ந்த நம் தமிழ் மொழியினோடே ஊடாடித் திரிந்த சமயங்கள் எண்ணற்றவை.  இவ்வாறாக பன்முகத்தன்மை கொண்ட சமயங்களின் வாழ்வியல் ஒன்றுக்கொன்று, இயைந்து போகாத பல் வித மாறுபாடுகளைக் கொண்டவை. ஒவ்வொருவரின் கலாச்சாரம் வேறு, ஆன்மிக நம்பிக்கைகள் வேறு, வாழ்வியல் முறைகள் வேறு, உணவுப் பழக்க வழக்கங்கள் வேறு. இவ்வாறான பன்முகத்தன்மை கொண்ட மக்களின் வாழ்வியலில், சைவ சமயம் சார்ந்தவர்களின் கை ஓங்கிய நிலையில், முதன்மையாக புலால் உண்ணாமையை முன்வைத்து, அப்போதைய அதிகார அரசுகளுடன் இணைந்து, சைவம் என்றாலே, புலால் உண்ணாதவர்கள் என்ற கருத்துருவை வெகுஜன மக்கள் மத்தியில் நிலைப்படுத்தினார்கள். 

ஆக, சைவம் என்றால், இறைச்சி உண்ணாதவர்கள் என்ற கருத்தை கட்டமைத்தது குறித்தும், சைவத்தை எதிர்த்த சமணர்களைக் கழுவேற்றிய வரலாறு குறித்தெல்லாம்  இன்னும் நிறையச் சொல்லமுடியும்.

இந்தியாவை உள்ளடக்கிய ஆசிய நாடுகளின் பட்டியலில் இருக்கும் தென் கொரிய நாவலாசிரியருக்கு, அநேகமாக, இந்திய சமயங்களின் வாழ்வும் வரலாறும் சுருக்கமாகவாவது தெரிந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.
 
எனவே, இந்த நாவல் முன்வைப்பது, “மரக்கறி” அம்சம்தான்.

இன்னும் நுட்பமாகச் சொன்னால், நாவலின் மையம் என்பது, ‘அசைவ உணவைத் தவிர்த்து, மரக்கறி உணவுக்கு மாறும் ஒரு பெண், கொஞ்சம் கொஞ்சமாக தாவரமாகி விடுகிறாள்’ என்பதுதான்.

எனில், இதை கொரிய மூலத்திலிருந்து ஆங்கிலத்துக்குக் கொண்டு வந்த ஆங்கில மொழிபெயர்ப்பாளரிடமிருந்தே பிரச்னை ஆரம்பமாகிறது. The Vegetarian நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு குறித்து டெபோரா ஸ்மித் மீது பல கடுமையான விமர்சனங்கள் வந்திருக்கின்றன. இத்தனைக்கும் இவர், கொரிய மொழி இலக்கியத்தின் மீதான வேட்கையில், அந்த மொழியைக் கற்றுக் கொண்டு மொழிபெயர்ப்பில் இறங்கியவர். ஆனால், ஆங்கில இலக்கிய விமர்சகர்கள், “ஹான் காங்கின் சிறப்பே, கவித்துவ உரைநடைதான், அதை சரியாக ஸ்மித் bind செய்யவில்லை என்றும், நாவலின் மையப்புள்ளியை வைத்து, வாசகனே ஒரு சில இடங்களில் இப்படித்தான் ஆகியிருக்கும் என்று அனுமானித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது..” என்றும் கடுமையான விமர்சனங்களை வைத்தார்கள். இந்தப் பின்னணியில், சமயவேலின் மொழிபெயர்ப்பைப் பெரிதாகக் குறை சொல்ல முடியாது. 

இந்த  நாவலை முதலில் ஒரு சிறுகதையாக எழுதித்தான் பிறகு நாவலாக வளர்த்தெடுத்திருக்கிறார் ஹான் காங். அதில் வரும் கதாநாயகி தாவர பட்சிணி. அவள் இறுதியாக ஒரு தாவரமாகிப் போகிறாள். இதை மிக அழகாக, கலாபூர்வமான ஒரு கவித்துவ இயலில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பவரும் அதே மொழிபெயர்ப்பாளர்தான்.  நான் அந்தக் கதையை தமிழாக்கம் செய்திருக்கிறேன். அந்த அற்புதமான அனுபவத்தை கீழே சொல்லியிருக்கிறேன்.

இந்த இடத்தில் தமிழ் மொழி சார்ந்த ஒரு aspect ஐ அவதானிக்கலாம். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வார்த்தையை அல்லது ஒரு வாக்கியத்தை அல்லது ஒரு பத்தியை எந்த ரீதியில்  சொன்னால் விளங்கிக் கொள்ள முடியும் என்பதை அந்தந்த மொழிக்கூறுகளின் வெளிப்பாட்டையும், உள்ளர்த்தத்தையும் மிக நுட்பமாக மொழி இலக்கண ஆய்வு செய்யும்போது நாம் விளங்கிக் கொள்ளலாம். இப்படியான பின்புலத்தில், தமிழ் மொழி அமைப்புக்கென்று ஒரு தன்மை இருக்கிறது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முடியும் என்று, நாவலின் மையச் சரடை வாசகன் தனது  தீவிரத் தேடலில் உணர்ந்து கொள்ள முடியும். 

இப்படியான பிழைகள் நடக்கும் என்பதனால்தான், ஆங்கிலப் பதிப்பகங்கள், மொழிபெயர்ப்புப் பிரதியை, செம்மைப் படுத்துவதற்கு எடிட்டர்கள் வைத்திருக்கிறார்கள். தமிழ் பதிப்பகங்களுக்கு அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. 

இங்கு இன்னொரு வேடிக்கையான மொழியாக்கத்தையும்  சொல்லவேண்டும்: லத்தீன் அமெரிக்க ராபர்டோ பொலானோ வின்  57 வசன குறுங்கவிதைகள் கொண்ட ஒரு காவியக் கவிதையை, ஒரு ஆறேழு கவிதைகளை மட்டும் எடுத்து மொழி பெயர்த்திருந்தார் ஒருவர். இதில் என்ன கொடுமை என்றால், “கனவு காணுதல்” என்னும் பதத்தை “கனவுதல்” என்றும், “கனவு கண்டேன்” என்னும் வார்த்தையை “கனவினேன்” என்றும் மொழி பெயர்த்திருந்தார். மொழிபெயர்ப்பாளர் பெயர் மறந்துவிட்டது. இந்த சிறுபிள்ளைத்தனத்திற்கு தளம் அமைத்துக் கொடுத்தது ஆனந்த விகடன் என்னும் மசாலாப் பத்திரிக்கை.   

***

அடுத்து நான் தற்போது மொழிபெயர்த்த “The Fruit of my Woman” என்ற சிறுகதையைப் பற்றிப் பார்க்கலாம். நான் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளை, கட்டுரை,நேர்காணல்களை மொழிபெயர்த்துள்ளேன். ஆனால், சிறுகதையைப் பொறுத்தவரை இதுதான் முதல். அந்த பயத்துடனும் பதட்டத்துடனும் இந்த வாரம் முழுக்க அலைபேசியை அணைத்து வைத்து விட்டு அந்தக் கதைக்குள்ளேயே அளை(லை)ந்து திரிந்து கொண்டிருந்தேன்.

ஏறக்குறைய 10 வருடங்களுக்குப் பிறகு – லத்தீன் இலக்கிய BOOM காலகட்டத்திற்குப் பிறகு – மிகவும் ஆழ்ந்து, அனுபவித்து மகிழ்ச்சீகரமாக வாசித்த சிறுகதை இது, இந்தச் சிறுகதைதான் The Vegetarian நாவலின் மூலக்கதை. என்ன ஒரு அற்புதமான கவித்தன்மை கொண்ட உரைநடை. இந்தச் சிறுகதையையும் The Vegetarian நாவலை மொழியாக்கம் செய்த  டெபோரா ஸ்மித் தான் செய்திருந்தார். இந்தச் சிறுகதை, The Vegetarian நாவலுக்குப் பின்னால் செய்தது. இதில், அவர் மிகவும் தேர்ந்து விட்டார் என்று சொல்ல முடியும். மிக மிக அபாரமான உணர்வெழுச்சியை – உரைநடையின் கவித்துவத்தை பின்னியெடுத்திருக்கிறார்.

இந்த நாவலாசிரியரை “கொரியாவின் காஃப்கா” என்று அழைக்கிறார்கள் கொரிய இலக்கிய வாசகர்கள்.  இந்த அடைமொழிப் பெயர், ஹான் காங்-க்கு பொருத்தமானதுதானா?  இருவரிடமும் காணப்படும் உருமாற்றம் (Metamorphosis) என்னும் கதை உத்தி, கதையின் போக்கு, கதையின் சொல்முறை எவ்வாறெல்லாம் செயல்படுகின்றன என்று பார்ப்போம்:

ஜெர்மன்காரரான காஃப்காவின் கதையில் நாயகனான  கிரிகோர் சம்ஸா என்னும் ஒரு மனிதன் (தனியார் அலுவலக குமாஸ்தா) ஒருநாள் காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது, கரப்பான் பூச்சியாக மாறி இருக்கிறான். தென் கொரிய நாவலாசிரியரான ஹான் காங் கின் கதையில் நாயகியான பெயரற்ற பெண் பாத்திரம், உணவுகளை வெறுத்து, செடிகொடிகளின் காய்கறிகள், கீரைகள் அடங்கிய  salad ஐ உண்கிறாள். அவளுக்கு அதில்தான் ஆர்வம். அப்படியே மெல்ல மெல்ல அவளும் ஒரு செடியாக மாறிவிடுகிறாள். 

இந்த இருவரும் முன்வைக்கும்  “உருமாற்றம்” மிக மிக முக்கியமான தத்துவத் தேட்டங்களை உசுப்பி விடுகிறது. முதலாம் உலகப்போர் 1914ல் ஆரம்பித்து, 1918ல் முடிவடைகிறது. காஃப்காவின் “உருமாற்றம்” 1915 ல் வெளியாகிறது. ஒரு சாதாரண எளிய மனிதனின் வாழ்வில், போரும்,  அதன் கொடூரங்களும் ஏற்படுத்திய தாக்கங்களும், அதே சமயத்தில், தனது எளிய மனதின் உளச் சிக்கல்களை, மரணத்துக்கும் வாழ்வுக்குமான விளிம்பில் நின்று பரிசீலனை செய்யும் சம்ஸா, கரப்பான் பூச்சியாக மாறி விடுகிறான். 

இந்த இருவரது உருமாற்றத்தில், காஃப்காவின் பார்வை என்பது, தனிமனித உளவியல் சிக்கல்களில் மாட்டி அவஸ்தையுறும் நிலையை முன்வைத்து, போரின் அவலத்தை எதிர்கொள்ளும் மிக குரூரமாகிப்போன சமூகத்தில், ஒரு மனிதன் வாழ நேர்வது, மனிதனாக முடியாது, கரப்பான் பூச்சியாகத்தான் மாறியாகவேண்டும்.. என்கிற அகமனச் சிக்கல்களை முன்வைக்கிறார். இது குறித்து உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆய்வுகள் வந்திருக்கின்றன . காஃப்காவின் உருமாற்றம் என்பது, தனிமனித உளவியல் சிக்கல் கொண்டது. ஆனால், வெறும் தனி மனித உளவியல் சிக்கல்கள் மட்டும்தான்  காஃப்காவின் உருமாற்றமா? அப்படி ஒரேயடியாய்ச் சொல்லிவிட முடியாது. முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் நடந்த இந்த உருமாற்றம், ஜெர்மன் சமூகத்தின் மனச் சாட்சியிலிருந்து கட்டமைக்கப்படும் உருமாற்றம்.

கொரியாகாரரான  ஹான் காங் கின் உருமாற்றம் இந்த 21ஆம் நூற்றாண்டில் நிகழ்கிறது. பெருமளவிலான விஞ்ஞான வளர்ச்சி, நவீனத் தொழில்புரட்சி, எவ்விதக் கட்டுப்பாடுகளும், லட்சியங்களுமற்ற கணவன் மனைவியின் இல்வாழ்வு, சொந்த மண்ணில் காலூன்றி நடக்கமுடியாத வெப்பம், அதி நவீனப் பணியின் நெருக்கடி, இவ்வளவு நவீனங்களுக்கும் இடையில், நாடுகளுக்கிடையே நடக்கும் அதிநவீன அணு ஆயுதங்களால் விளையாடப்படும் மிகப்பெரும் யுத்தம், மக்கள் கொத்துக்கொத்தாக செத்து வீழும் எவ்வித மதிப்பீடுகளுமற்ற மனிதப் பண்புகள், நம்மைச் சுற்றியுள்ள குளோபலின் சூழலியல் நாசமடைந்து வரும் போக்கு, இயற்கை என்னும் எல்லையற்ற சக்தியினால் மட்டுமே, காப்பாற்ற முடியும் என்ற பார்வையை மேலும் நாசப்படுத்துவது.. என்று எண்ணற்ற கொடூரங்களை எதிர் கொள்ளும் ஒரு பெண், செடியாக உருமாற்றம் அடைகிறாள். அந்த உருமாற்றம் என்பது, காஃப்காவின் தனி ஒரு மனிதனுக்கான உருமாற்றம் அல்ல, ஒரு நாட்டிற்கான, அதை மீண்டும் மீட்டெடுப்பதற்கான உருமாற்றம். அணு ஆயுத யுத்த எதிர்ப்புக்கான உருமாற்றம்.

ஆக, இந்தக் கட்டுரையை நான் நேர்மையாக எழுதினால், ஹான் காங் கின் உருமாற்றத்தைத் தான் முதன்மையாகக் கொண்டாடுவேன். 

இப்படிச்  சொல்வதன் மூலம், நான் காஃப்காவை கைவிடுகிறேன் என்று அர்த்தம் அல்ல. இரண்டு உருமாற்றங்களும் வெளிவந்த கால இடைவெளிகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். 

மேலும், காஃப்கா உலகளாவிய ஒரு trend-setter. அவரை இணை வைத்துப் பேசுவது சிறுபிள்ளைத்தனம். நான், ஹான் காங் -ன் எழுத்தில் மயங்கி இருப்பதால், இவ்வாறாகப் பேசுகிறேன் என்றும்  கொள்ளலாம்.. 

ஆக,  ஹான் காங் -க்கு கொடுக்கப்பட்டிருக்கும்  இந்த வருட நோபல் பரிசுக்கு அவர் 100 விழுக்காடுகள் பொருத்தமானவர்.  

அது மட்டுமல்லாது, கவித்துவ அழகியல் நிரம்பிய அவரது உரைநடை எழுத்தை, அதே கவித்துவ வரிகளிலேயே கொண்டு வந்திருக்கிறார் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் டெபோரா ஸ்மித். இவரைத்தான் முக்கியமாகப் பாராட்டப்படவேண்டும். 

அதுமட்டுமல்லாது, ஹான் காங் – க்கு இருபொருள் படும்படியான வார்த்தைகளை வாக்கியங்களை அமைப்பதில் அலாதியான ஆர்வம் கொண்டுள்ள தன்மையை, சற்றும் அவ்வியல்பு மாறாமல், கொண்டு வந்திருக்கிறார். என் இயல்புக்கு இதுபோன்ற சவால்கள்தான் பிடிக்கும். 

“ஃப்ளோரசன்ட் விளக்கில் இருந்து ஒரு பூச்சியின் உயரமான சிணுங்கல் கேட்டது. அதனிடமிருந்து வெளியேறும் சிணுங்கலானது, அதன் அடர்ந்த வெளிச்சத்தின் கீழ், என் மனைவியின் முதுகில் படர்ந்திருந்த ஒரு காடல்பா இலை அளவு காயத்தில் எதிரொ(ளி)லித்தது. ” 

இந்த வாக்கியத்தை கருத்தூன்றி அவதானியுங்கள்.  “கணவனும் மனைவியும் நடந்து போகும்போது, மின்கம்பத்தில் எரிந்துகொண்டிருக்கும் ஃப்ளோரசன்ட் ஒளியும், அந்த விளக்கு வெளிச்சத்தில் ஆடும் ஒரு பூச்சியின் சிணுங்கலும் அவளது முதுகில் படர்ந்திருந்த காயத்தில் பட்டு எதிரொ(ளி)லிக்கிறது ”  என்ற காட்சியை அகக்கண்ணால் உருவாக்கிப் பாருங்கள். அற்புதம்!

இன்னும் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். என் நண்பர் ஒருவருக்கு இந்தப் பிரதியை வாசிக்கக் கொடுத்தேன்.

கதாநாயகி, தனது கணவருடன் வெளியே நடந்து போவதை, நாயகி தன்கூற்றில், இவ்வாறாக வர்ணிக்கிறாள்: “…தோன்றும் விடியலில், அவர் முன்பக்கக் கதவைத் திறந்து, சாம்பல் நிற அரை வெளிச்சத்தில் என்னருகில் நடக்கும்போது, அவரது காலடிச் சுவடுகளின் ஒலி அழுத்த அலைகளைக் கொண்டுள்ள நிமிட எதிரொலி, வளமான கனவுகளுடன் கூடிய மழை நிறைந்த காற்றை ஓங்க வைக்கிறது.”

இந்த வர்ணிப்பைப் படித்த அவர், “தமிழ் மொழிக்கு  இவ்வளவு பூடகம் தேவையா?  அவர்களிருவரும் வெளியே போவதை எளிமையாகச் சொல்லியிருக்கலாமே..” என்றார்.

“அது அப்படியல்ல. இந்த (கணவனின்) நடையில், காலடிகளின் ஒலி அழுத்தம், காலத்தின் ஒலியில் பட்டு, காற்றின் ஒலியைக் கூட்டுகிற (கதையின் உரை) நடை” என்றேன். மேலும், “இந்தக் கதை ஒரு அமானுஷ்யமான mystical text. அதனால், அந்த வாக்கியத்தை  இப்படி ஒரு Gloomy sense ல்  போடுவதுதான் வாசகனை ஒரு அதீதமான இனம்புரியாத உணர்வுக்குள் தள்ளிவிடும் ” என்றேன்.

இன்னொன்று: தனது மனைவிக்கு ஒரு வினோதமான நோய் வந்துள்ளது, அது சம்பந்தமாக அவள் மருத்துவமனைக்குப் போய் வந்திருக்கிறாள். கணவன் கேட்கிறான்: ‘Well? How did you get them?’ 

இந்த வாக்கியத்தின் முதல் வார்த்தையை (Well – நல்லது) அப்படியே மொழியாக்கம் செய்தால், இந்த  Text முன் வைக்கும் உணர்வுகளுக்கே எதிரானதாகப் போய்விடும். ஆங்கில மொழிக்கு ஓகே. தமிழ் மொழிக்கு? 

நான் ஏற்கனவே சொன்னது போல, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தன்மை இருக்கிறது, இலக்கண விகுதிகள் இருக்கின்றன, மொழிக் குடும்பத்தின் கூறுகள் இருக்கின்றன.

ஆகவே, நான் இப்படி செய்தேன்: “சரி, அவை எப்படி வந்தன?”

நிறையப் பேசிவிட்டோம். இனி தலைப்புக்கு வருவோம்: 

“The Fruit of my Woman” இதை “என் பெண்ணின் பழம்” என்று மொழி பெயர்ப்பதில் ஒரு விழுக்காடு கூட எனக்குச் சம்மதமில்லை. தலைப்பைக் கட்டுடைத்துப் பார்ப்போம்.  “என் பெண்ணின் பழம்”  என்பது, ஆங்கில மொழிக்குச் சரி. ஆங்கிலத்தில், My Woman என்பதை, மனைவியாகக் கொள்ளலாம். ஆனால் தமிழில்? 

சரி. “என் மனைவியின் பழம்?”

நோ, எனக்கு இந்தப் பழத்தில்தான் பிரச்சினையே..

*

மொழிபெயர்ப்பை அப்படியே போட்டுவிட்டு, எங்கள் தோட்டம் வரை ஒரு நடை போனேன். தோட்டத்தில், வாழைகள் காய்த்திருந்தன. வாழைக்காய்கள் திரண்டு பருத்து வெட்டுப் பருவத்தில் இருந்தன. அதிலும், இரண்டு மூன்று வாழைகள் தள்ளியிருந்த குலைகளில், இரண்டு மூன்று சீப்பில் வாழைக்காய்கள் பழுத்திருந்தன. வாழை வெட்டுபவன் ஏன் இன்னும் வரவில்லை? ஒருநாள் விட்டால் காகங்களும், பறவைகளும் கொத்தித் தள்ளி விடும். ஒருவேளை மாரி செல்வராஜ் படம் பார்க்கப் போய்விட்டானோ என்னவோ?

கடவுளே, எதை மறக்கலாம் என்று இங்கு வந்தேனோ, அங்கும் அதே காட்சியென்றால், அந்தத் துயர நாடகத்தை என்னென்பது?

நான் அந்த பழுத்த மஞ்சள் பழங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வாழைக்காய் குத்தகைதாரர் வந்து சேர்ந்தார். “என்ன சார்.. அப்படியே தோட்டத்துப் பக்கம்?” என்றபடி புன்னகைத்தார்.

“ஏய்யா யோவ், பழம் பழுத்துத் தொங்குது.. இன்னும் வெட்டாம இருக்கிறே.. ” என்று உரிமையாகக் கடிந்து கொண்டேன்.  

“அதில்லே சாரே..  இந்தக் காக்காய்களைக் கண்டெல்லாம் கவலையில்லே.. இந்த பழமுழுங்கி பாப்பராஸிகளைக் கண்டாத்தான் வெறுவெறுங்குது..”

“பாப்பராஸி..?” (இந்தச் சொல் பிராமணர்களைக் குறிக்கும் சொல் அல்ல, வௌவால்களைக் குறிக்கும் சொல்.)

“ஆமாங்க..” என்றவர்,  “நீங்க நேத்தைக்கு வந்திருக்கோணும்.. நம்ம சித்தாளுக, “வாழேக்காட்டிலே வவ்வாலு,  சோழக்காட்டிலே சுண்டெலி” ன்னு.. காட்டிலே ஒரே ஆட்டம் பாட்டம்தான் ..”

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி வந்து சேர்ந்தார். வாழைப்பூக்களை பதனமாக அறுத்துக் கட்டினார். 

“ஏம்மா நேத்தைக்கு ஏதோ பாட்டுப் பாடினீங்களே.. சார் வந்திருக்காரு.. ஒரு பாட்டு எடுத்து உடுங்க..” என்றார்  வாழைக்காய்காரர்.

அந்த அம்மா நாணத்துடன் தலையை ஆட்டிக் கொண்டு உள்ளே தள்ளிப்போய் விட்டார்.

“எங்க தோட்டத்திலே வாழக்காய்,
செவந்து, தொங்குதடி லோலாக்காய்
பறந்துவாரா பாப்பராஸி
மஞ்சக் குளிச்சி மறைஞ்சுக்கோய்..”

என்று வாழைக்காய்காரரே வசன நடையில் பாடினார்.

நான் அந்தப் பாடலை சட்டென உள்வாங்கிக் கொண்டேன். ஒருமுறை மனதில் ஹம் பண்ணிப் பார்த்தேன்.
 
“ஏய்யா.. இதுக்கென்ன அர்த்தம்?” என்றேன். 

“ஐயா சாமி அதெல்லாம் தெரியாது..” என்று சட்டென நழுவி விட்டார். நான் அந்தப் பெரியம்மாவைப் பார்த்தேன். அந்த  அம்மாள், சற்றே வெட்கமாக, சொல்ல ஆரம்பித்தார்.
 
“ஆதிகாலத்திலே, வாழப்பழம் செக்கச் செவந்துதான்தான் பழுக்கும். ஆனா, இந்த பழம் முழுங்கி வௌவால்கள் ராவுலே கூட்டமா வந்து முழுங்கீட்டுப் போயிரும். அப்பிடியிருக்கையிலே, வாழ மரங்கள்ளாம் சேந்து ஒரு கூட்டம் போட்டுச்சாம்.. நாம்தான் இப்பிடி ஆயிட்டோம்.. நம்ம கொழந்தைகளாச்சும் நல்லா இருக்கணும்னா.. அவுங்களே மஞ்சக் குளிச்ச மாதிரி பெத்துப் போட்டுடுவோம்.. ஏன்னா, பாப்பராஸிகளுக்கு, ராவுலே மஞ்சப் பழங்கள் கண்ணுக்குத் தெரியாது.. அப்பிடின்னு கூட்டத்திலே ஒத்துக்கிட்டாங்களாம்.. அன்னியிலேயிருந்து வாழப் பழங்கள் மஞ்சளாத்தான் பழுக்க ஆரம்பிச்சதுன்னு நாட்டுக்கதைகள் சொல்லுவாங்க..” என்றார் அந்த அம்மா.

அருகிலிருந்த வாழைக்காய்காரர்,  “ஆமாங்க, இந்தப் பழங்களுக்கு பல அர்த்தமிருக்குதுங்க..”  என்றார்.

சரேலென்று, எனக்குள் ஒரு மின்அலை வெட்டியடித்தது. ஹான் காங் -கின்  எழுத்துபாணி, இரு பொருள்படும் சொற்களை எழுதுவதில் ஆர்வம் கொண்ட பாணியல்லவா?

உடனே, வீட்டை நோக்கி, ரன் கௌதம் ரன்.

*

முதலில் அந்த  வாழைக்கார அம்மா சொன்ன கதையின் தரவுகளைத் தேடினேன். எதிர்பார்த்தது போலவே, பலவகைப்பட்ட வெளவால்களில், ஒரு குறிப்பிட்ட வகைக்கு நிறக்குருடு உள்ளது என்றும், eco location மூலம் அவை  குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்கின்றன என்றும், மேலும் அவை இரவு நேரத்தில், வேட்டையாடும்போது, மனிதச் செவிக்கு எட்டாத மிகக் குறைந்த டெசிபல் அளவு கொண்ட, உரத்த மீயொலி ஒலிகளை (ultrasonic sounds) வெளியிடுகின்றன, மேலும் கீழும் திரும்பும் எதிரொலிகளைக் கேட்கின்றன. இது தங்களைச் சுற்றியுள்ள உலகின் துல்லியமான தடங்களை அவைகளுக்கு வழங்குகிறது… என்றெல்லாம் விரிவாகப் படித்தேன்.

அதன் பிறகு, பழம் என்பதற்கு 25க்கும் மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கின்றன என்பதைத் தேடிப் பிடித்தேன்.

விதை, உற்பத்தி,விளைவு, முடிவு, வேர்கள்,  உருவாக்குதல் போன்ற சில வார்த்தைகளை coin செய்தேன். 1940 களில் வெளிவந்த  ” விசித்திரமான பழம் ” (Strange Fruit) என்ற தலைப்பில், கறுப்பினப் பாடகர்களின் ஜாஸ் இசை நிகழ்ச்சியாக வடிவம் எடுத்திருந்த செய்தியும் கண்ணில் பட்டது.  இந்தப் பாடல் கறுப்பின அமெரிக்கர்களைக் கொன்று குவிப்பதை எதிர்க்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்கு அமெரிக்காவில் இத்தகைய கறுப்பர்களின் மீது நிகழ்த்திய கொலைகள் உச்சத்தை அடைந்தன. 

அடுத்து நம் தமிழ் மொழியில் என்னென்ன அர்த்தங்கள் இருக்கின்றன என்று தேடலானேன்.
 
இங்கும்,  ‘விதை’, ‘உருவாக்குதல்’  உள்ளிட்ட சில பொருட்களின், செயல்பாடுகளின் அர்த்தம் இருந்தது. உதாரணமாக,  மூத்தோரை “பழம்” “பழுத்த பழம்”என்றெல்லாம் அழைக்கும் வழக்கம் உண்டு. அதுபோக, வீட்டு வளர்ப்புப் பிராணிகளான, ஆடு மாடுகள் கர்ப்பமடைந்திருந்தால், “எங்கள் மாடு பழம் பட்டிருக்கிறது ” என்று சொல்லப்படுவது உண்டு. அன்புக்கு, பகையற்ற நல்லிணக்கமான நட்புக்கு, இந்தப் பெயரை உபயோகிக்கிறார்கள். 

நான் சிறுவனாக இருந்த என்னுடைய ஆரம்பப் பள்ளி நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. நானும் தங்கராசும்  சண்டை போட்டுக் கொண்டோம், ஒரு சில மணி நேரங்களில் அவன் இல்லாமல், அவனது சேட்டைகள் இல்லாமல், நான் சோர்ந்து போனேன். ஒரு முடிவுக்கு வந்தவனாக, நான் அவனிடம் போனேன், எனது கையின், மூன்று விரல்களையும் மடக்கிக் கொண்டு, சுட்டு விரல், சுண்டு விரல் ஆகிய இரண்டையும் நீட்டிக்கொண்டு அவனை நோக்கி வந்தேன். “காயா, பழமா? ” என்றேன். அதாவது, சுட்டு விரல், காய்; சுண்டு விரல், பழம்;  இந்த இரண்டு விரல்களில் ஒன்றைத் தொடவேண்டும். காயைத் தொட்டால் பகை. பழத்தைத் தொட்டால் சிநேகம்! அவன் என்னைக் கண்டு கொள்ளாதவனாக, கொஞ்சம் பிகு செய்தான். நான் அவன் முன்னே இரண்டு விரல்களை நீட்டியபடி நின்றேன். ஏதும் பதில் இல்லாததால், திரும்பி நடந்தேன். உடனே அவன் ஓடி வந்து  என் சுட்டு விரலைப் பிடித்துக் கொண்டான்.
  
நான் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் மொழிபெயர்ப்பாளர்  சமயவேலிடம் இரண்டு விரல்களை நீட்டவேண்டும்.
  
சரி, இப்போது இறுதியாக, “மனைவியின் பழத்திற்கு” வருவோம். 

வன்முறையை எதிர்த்து, மனிதனை மனிதன் கொல்லும், படுகொலைகளுக்கு  எதிர்ப்புக் காட்டும் விதமாக, புலால் மீது வெறுப்புக் கொண்டு, சைவ உணவுக்குத் திரும்பிய கதாநாயகி, ஆட்சியாளர்களை வெறுக்கும், தன் மண்ணையே வெறுக்கும், “இந்த நாடு அழுகிவிட்டது!” என்று அறிவிக்கும் பெண், “இங்கே எதுவும் வளர வழி இல்லை, இது ஒரு செவிடான இடம்” என்று குமுறும் பெண், தன் நாட்டில் நடந்த மிகப்பெரிய  குவாங்ஜு படுகொலைகளின் victim ஆக இருக்கும் பெண்… கொரிய சர்வாதிகாரி சுன் டூ ஹ்வான் நிகழ்த்திய பற்பல யுத்தக்கொலைகளில் சிக்கிச் சீரழிந்து, அந்தக் கொடூரக் காட்சிகளே அவளது  மனத்தை ஆக்கிரமித்திருக்கும் துயரம் நிரம்பிய ஒரு பெண். தனக்கும், தன நாட்டுக்குமான தொப்புள் கொடிக் கயிறு அறுக்கப்பட்ட பொம்மலாட்டப் பொம்மை.. எப்படி தனது மனவோட்டங்களைக்  கையாள்வாள் ..  என்றெல்லாம் யோசித்தால், அந்தப் பழத்திற்கு மிகப்பெரிய உருவகம் கட்டமைத்திருப்பதை ஒரு தீவிர இலக்கிய வாசகனால் உணர்ந்து கொள்ள முடியும்.
 
ஆம். மரக்கறி உணவு உண்ணும் இந்தப் பெண், (இன்னும் சரியாகச் சொன்னால், மரக்கறி உணவுப்  பெண்)  மனிதர்களை வெறுத்து, தாவரங்களை நேசிக்கும் இந்தப் பெண்,  கொஞ்சம் கொஞ்சமாக ஒரு செடியாக மாறுகிறாள். அந்த நிலையிலும் அவளது கணவன் கைவிடாமல், அந்தச் செடியை  மேலும் நேசிக்கிறான். பாதுகாத்துப் பேணுகிறான். அவள் முழுமையான செடியாக மாறி ஒரு பழத்தை ஈன்றெடுக்கிறாள். அது ஒரு அபூர்வமான சிருஷ்டி. அந்தப் பழத்தின் விதைகளை  அவளது கணவன், தனது மண்ணில், தனது  நிலத்தில் நடவு செய்கிறான். 

அந்த விதைகளிலிருந்து தோன்றும், அடுத்த தலைமுறை, தென் கொரியாவை – தனது மண்ணை – அன்பு கெழுமிய தேசமாக மாற்றும் என்றும், ஏனெனில், அந்த விதைகள் தனது DNA விலிருந்து உருவாக்கம் பெற்றவை என்றும் எண்ணுகிறாள் அந்தப் பெண். ஆம். அவளது பழம் என்பது பழம் அல்ல; அது ஒரு இயற்கையை நேசிக்கிற, தனது மண்ணை நேசிக்கிற, போரை விரும்பாத, தனது அழுகிப்போன நாட்டை, அணுஆயுதங்களற்ற அற்புதமான நாடாக மாற்றவல்ல புத்தம் புதிய தலைமுறைகளை சிருஷ்டிக்கும் விதைகள் கொண்ட ஒரு பழம். 

ஓகே. தலைப்புக் கிடைத்து விட்டது,

“என் மனைவியின் சிருஷ்டி!”

***