• ஹான் காங் உடன் ஒரு நேர்காணல்
  • நேர்காணல் கண்டவர் : டேனிஸ் ஸௌ
  • தமிழில் : எச். பீர் முஹம்மது

 

 

“இடைநிலைக்குரல் ” (The Middle Voice) என்பது உங்கள் “Greek Lessons” என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்டது, இதில் ஒரு பெண் மர்மமான முறையில் பேச்சுத் திறனை இழக்கிறாள், மேலும் பண்டைய கிரேக்க பாடங்களை சாத்தியமான தீர்வாக பதிவு செய்கிறாள். அந்தக் கதாபாத்திரம், தான் மொழியைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்கிறது. மேலும் அவள், பர்மிய அல்லது சமஸ்கிருதம் போன்ற இன்னும் அறிமுகமில்லாத எழுத்துகளில் எழுதப்பட்ட ஒன்றைத் தேர்ந்தெடுத்திருப்பாள். குறிப்பாக, கிரேக்க படைப்பாக்கங்கள் உங்களைக் கவர்ந்தனவா?

நான் ஒரு நாவலை எழுதத் தொடங்குவதற்கு முன், பல வருட உள்ளுணர்ச்சிகள் படிப்படியாக ஒரு தெளிவான வடிவமாக வளரும் வரை ஒன்றன் மீது ஒன்றாகக் குவிந்து கிடக்கின்றன. “Greek Lessons” அது தான். 2002 வசந்த காலத்தின் துவக்கத்தில் நான் ஒரு வெளியீட்டாளருடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது தேநீர் அருந்தும் போது, இந்தப் புத்தகத்திற்கான முதல் உத்வேகம் கிடைத்தது. ‘தான் கல்லூரியில் பண்டைய கிரேக்க தத்துவத்தில் தேர்ச்சி பெற்றதாக’ வெளியீட்டாளர் என்னிடம் கூறினார், “தத்துவத்தைப் படிக்க ஒருவர் முதலில் பண்டைய கிரேக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமா?” என்று கேட்டேன். அவர், “ஆம், நிச்சயமாக” என்றார், மொழியைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைச் சொன்னார்: சில மிகவும் சிக்கலான மற்றும் நுட்பமான இலக்கணக் கூறுகளை ஒரே வார்த்தையில் சுருக்கலாம், எனவே சொல் வரிசையைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. கொரிய மொழியில் இல்லாத ஒரு இலக்கண அமைப்பான இடைநிலைக்குரலை மேற்கோள் காட்டி, ஒரே வார்த்தையில் பல அடுக்கு அர்த்தங்கள் எப்படி இருக்கும் என்பதை அவர் விளக்கினார், அது உடனடியாக என்னை ஈர்த்தது.

நான் ஒரு கவிஞியாக என் எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினேன், அன்றிலிருந்து மொழியைப் பற்றிய கலவையான உணர்ச்சிகளைக் கொண்டிருந்தேன், இது ஒரு சாத்தியமற்ற கருவி. மொழி என்பது ஒரு அம்பு போன்றது, அது எப்போதும் தனது இலக்கை ஒரு குறுகிய விளிம்பில் தவறவிடும், மேலும் வலியை உண்டாக்கும் திறன் கொண்ட உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் வழங்கும் ஒன்று. நான் இன்னும் அவ்வப்போது கவிதைகளை எழுதுகிறேன், மேலும், நாக்குகளும் உதடுகளும் மற்றும், மூச்சு, இருண்ட நுரையீரல் அல்லது அமைதி போன்ற படிமங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறேன். பழங்கால கிரேக்கத்தைப் பற்றி நான் அந்த உரையாடலை நடத்திய தருணத்தில், இன்னும் பேசக் கற்றுக்கொள்ளாத என் ஒன்றரை வயதுக் குழந்தை நாள் முழுவதும் வார்த்தைகளைப் போன்ற மர்மமான ஒலிகளை எழுப்பிக் கொண்டிருந்தது, அதனால் நான் சில சமயங்களில் எல்லாவற்றையும் படம் பிடிப்பேன். வாழ்க்கையின் அர்த்தங்கள், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள்.. என அனைத்தும், பெருவெடிப்புக்கு முந்தைய தருணத்தைப் போல, ஒரே வார்த்தையில் சுருக்கப்பட்டன. அதனால்தான் நான் உரையாடலை மிகவும் சுவாரஸ்யமாகக் கண்டேன்.

 

கதையின் வகைப்பாடுகள் “இறந்த மொழியில்”, அதாவது இனி பேசப்படாத மொழியில் இருப்பது கதாபாத்திரத்திற்கு முக்கியமாகத் தெரிகிறது. அவளுக்கான பேச்சுக்கும் மொழிக்கும் என்ன சம்பந்தம்?

பண்டைய கிரேக்கத்தைப் பற்றிய அந்த உரையாடலுக்கு சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தான் நான் இந்த நாவலை எழுதத் தொடங்கினேன், மொழி இழந்த ஒரு பெண் கதாநாயகியைக் கண்டுபிடித்தேன். ஐரோப்பிய மொழிகளைப் போலல்லாமல் – அவற்றில் பல பண்டைய கிரேக்கத்துடன் தொடர்புடையவை – கொரிய மொழிக்கு அதனுடன் எந்த தொடர்பும் இல்லை. பண்டைய கிரேக்கம் அவளுக்கு மிகவும் அந்நியமான மொழி. அதாவது, நீங்கள் குறிப்பிடுவது போல் நீண்ட காலமாக இறந்த மொழி. அதில் அவள் அமைதியாக முன்னோக்கி நகர்வதை உணர்ந்தேன், அவள் மொழியைப் பற்றிக் கொள்ள மீண்டும் ஒருமுறை போராடினாள், இருவரும் பழங்கால கிரேக்க மொழியைக் கற்கும் செயலுடன் மோதிக் கொண்டார்கள்.

 

கதாநாயகி ஒரு மனநல மருத்துவரை சந்திக்கச் செல்கிறார். அவரிடம், அவளின் மௌனத்திற்கு பல்வேறு காரணங்களை முன்வைக்கிறார் – தனது மகன் மீதான காவல்மோதல்கள், அவளது தாயின் மரணம், குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட மன உளைச்சல்கள் – ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்று அவள் மீண்டும் மீண்டும் முணுமுணுத்தபடி இருந்தாள். அவளது மௌனத்தில் ஏதோ ஒரு மறுப்பு, அல்லது எதிர்ப்புச் செயலா? உங்கள் The Vegetarian நாவல் என்று நினைக்கிறேன், அதில், ஒரு பெண் இறைச்சி சாப்பிட மறுப்பது பெரிய அர்த்தத்தையும் விளைவுகளையும் ஏற்படுத்துகிறது..

ஆம், அந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே ஒரு அம்சம் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உள்ளது. அந்த நாவலில், யோங்-ஹே, வன்முறையையும் இறைச்சி உண்பதையும் மறுக்கிறார் – இறுதியில், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, உணவை முழுவதுமாக மறுக்கிறார் – அதே சமயம், இந்தக் கதையின் கதாநாயகன் மொழியைத் தள்ளிவிட்டு அதே நேரத்தில் அதை மீட்டெடுக்க முயற்சி செய்கிறார். சில சமயங்களில் நம் உணர்வுகள் சிதைந்து, அவற்றை வெளிப்படுத்தும் மொழியும் சிதைந்து கிடக்கிறது. “Greek Lessons” முழு நாவலும் இந்தப் பாத்திரத்தின் செயல்முறையைத் தொடர்ந்து நகர்த்துவதைப் பற்றியதுதான். இந்தப் பாத்திரம் கடைசிப் பக்கம் வரை தொடர்ந்து நகர்கிறது, இறுதியாக முதல் நபராக “நான்” ஆகிறாள். அவளுடைய குழந்தையின் பாதுகாப்பை இழப்பது சந்தேகத்திற்கு இடமின்றி அவளுடைய மிகப்பெரிய வலி, ஆனால் அது வாழ்க்கையின் வலி, உலகின் வலி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு நீட்டிக்கப்படுகிறது. அவள் சமரசம் செய்ய முடியாத உலகில் சிதைந்து விட்டதாக உணர்கிறாள், ஆனாலும் அவள் தன் முழு பலத்துடன் அதைத் தழுவி தன் முதல் நபரின் குரலை மீட்டெடுக்கிறாள், இது அவளை யோங்-ஹேயிலிருந்து சற்று வித்தியாசப்படுத்துகிறது. திரும்பிப் பார்க்கும்போது, ​​“The Vegetarian” நாவலின் முடிவை எழுதிய பிறகு, நான் விரும்பிய திசையில் ஒரு வகையான மாற்றம் என்று நினைக்கிறேன்.

 

கதாநாயகனுக்கு, வேறொரு மொழியில் அதிக சுதந்திரம் அல்லது குறைந்த பட்சக் கட்டுப்பாடுகள் இருக்கலாம். அவரது வகுப்பறையில் உள்ள மாணவர்கள் கொரிய மற்றும் கிரேக்க மொழிகளுக்கு இடையே பயிற்சிகளை மேற்கொள்வதால், கதை பெரும்பாலும் மொழிபெயர்ப்பைக் கையாளுகிறது, மேலும் கதை, அவள் எழுதும் கவிதை என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தது. மொழிபெயர்ப்பு செயல்பாட்டிற்கும் அல்லது மொழிபெயர்க்கப்பட்ட உங்கள் படைப்புக்கும் உள்ள உங்கள் சொந்த உறவை, கதை பிரதிபலிக்கிறதா?

“Greek Lessons” முதன்முதலில் கொரியாவில் 2011 -ல் வெளியிடப்பட்டது, அதுவரை எனது புத்தகங்கள் எதுவும் வேறு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படவில்லை. எனவே இந்த நாவலின் மொழிபெயர்ப்பில் எனது தனிப்பட்ட, உண்மையான அனுபவங்களை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் ஒரு வித்தியாசமான தனிப்பட்ட அனுபவம், ஒரு கதாநாயகன் மொழியைக் கையாள்வதில் சிரமப்படுவதைப் பற்றி சிந்திக்க என்னைத் தூண்டியது. இந்த நாவலை எழுதுவதற்கு முன், நான் எழுதுவதில் இருந்து சுமார் ஒரு வருடம் ஓய்வெடுத்தேன். கதாநாயகன் அளவுக்கு இல்லாவிட்டாலும், எனக்கு அப்போது மொழியைப் பற்றி சில சிக்கலான உணர்வுகள் இருந்தன. நான் புனைகதைகளைப் படிக்க முடியாமல் போனதால், அறிவியல் சார்ந்த – குறிப்பாக வானியற்பியல் பற்றிய புத்தகங்களை மட்டுமே படித்தேன், மற்றும் புனைகதை திரைப்படங்களைப் பார்ப்பது சகிக்க முடியாததாக இருந்ததால், ஆவணப்படங்களை மட்டுமே பார்த்தேன். நான் சில உள் செயல்முறைகளின் மூலம் எழுதத் தொடங்கினேன் – அப்போது கிரேக்க மொழியைப் படிக்கவில்லை – அந்த முழு அனுபவமும் நாவலில் ஒரு அடையாளத்தை முன் வைத்தது.

 

முழு நாவலில், மாணவியின் பார்வை அவளது பேராசிரியரின் பார்வையுடன் பின்னிப் பிணைந்துள்ளது, அவர் கண்பார்வையை இழக்கிறார். இந்நிலையில், பார்வை மற்றும் பேச்சு ஆகிய இரண்டு விஷயங்களையும் எப்படி இணைக்க முடிவு செய்தீர்கள்?

எனது மூன்றாவது நாவலான “The Vegetarian” -ன் கடைசிக் காட்சியில், முக்கிய கதாபாத்திரத்தின் மூத்த சகோதரியான இன்-ஹே, ஆம்புலன்ஸ் ஜன்னலுக்கு வெளியே எரியும் மரங்களை  “பதிலுக்காகக் காத்திருப்பது போல, எதையோ எதிர்ப்பது போல்” பார்க்கிறார். அந்த முழு நாவலும் பதிலுக்காகக் காத்திருப்பதையும் எதிர்ப்பதாகவே உணர்கிறேன். பின்னர், எனது நான்காவது நாவலில் – இது இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை – நான் அந்தக் காட்சியிலிருந்து முன்னகர முயற்சித்தேன். ஒரு மர்ம வடிவத்தை எடுக்கும் இந்த நான்காவது நாவலில், கதாநாயகி தன் நண்பனின் மரணம் தற்கொலை அல்ல என்பதை நிரூபிப்பதற்காக, தன் உயிரையே பணயம் வைத்துப் போராடுகிறாள். இந்த நாவலை முடித்த பிறகு, நான் ஒருவித எல்லையைத் தாண்டிவிட்டதாக உணர்ந்தேன், அதன் பிறகு மனிதர்களில் மென்மையான மற்றும் கனிவான ஒன்றைப் பார்க்க விரும்பினேன். இரண்டு நபர்களின் மென்மையான பகுதிகள் சந்திக்கும் ஒரு தொட்டுணரக்கூடிய தருணத்தை நான் கற்பனை செய்தேன்.

Greek Lessons நாவலில், ஆண் கதாநாயகன் தனது பார்வையை – காணக்கூடிய உலகத்தை – ஆண்டுதோறும் இழக்கிறார், உண்மையில் இது நம்மைப் பற்றிய சுய உருவப்படமாகும். ஏனெனில், நாம் அனைவரும் ஒவ்வொரு கணமும் உலகை இழந்து, இருள் மற்றும் மறைவை நோக்கி நகர்கிறோம். தன்னை இழப்பு நெருங்கிவிட்டதாக உணர்ந்து, கதாநாயகன் கடந்த கால மனிதர்களை நினைவு கூர்கிறார், அவர்களுக்கு எழுதுகிறார், மேலும் உயிருடன் இருப்பதை உணர்கிறார். இந்த ஆண் கதாநாயகனும், மொழி இழந்த பெண் கதாநாயகியும் ஒருவரோடொருவர் இருக்கும்போது எப்படித் தொடர்பு கொள்ள முடியும் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். அப்போதுதான் எனக்கு ஒரு காட்சி வந்தது, அதில், ஒரு பெண் தன் விரலால் ஆணின் உள்ளங்கையில் எதையோ எழுதுகிறாள், அவளுடைய விரல் நகங்கள் யாருக்கும் தீங்கு செய்ய இயலாதபடி, ஒண்ட வெட்டப்பட்டிருந்தன. இந்த நாவல் எல்லையற்ற மென்மையான தொடுதலின் அந்த தருணத்தை நோக்கி, படிப்படியாக மெதுவான வேகத்தில் பாய்கிறது, ஏனெனில் நான் அதை ஒரு பூதக்கண்ணாடி வழியாகப் பார்ப்பது போல – தீவிர அமைதியில், ஆனால் பதட்டத்துடனும் தீவிரத்துடனும் தெளிவாகத் தெரியும்  மேற்பரப்பின் கீழ், இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ஒருவருக்கொருவர் தங்கள் மென்மையான புள்ளிகளைக் காட்டுவதால், அந்த அமைதியைச் சுற்றியுள்ள உலகம் எவ்வளவு வன்முறையானது என்பதை நாம் திடீரென்று உணர முடியும். நான் நாவலை எழுதும்போது, ​​நேரம் இழுத்துச் சென்றது எனக்கு நினைவிருக்கிறது; நான் முடிந்தவரை அதற்குள்ளேயே இருக்க விரும்பினேன், அதனால்தான் அதை முடிக்க எனக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பிடித்தன.

***

ஆங்கிலத்தில்: ஜாஸ்மின் ஜீமின் லீ

நன்றி : நியூயார்க்கர்