- கௌதம சித்தார்த்தன்
ஹான் காங் – ன் கவிதையை முன்வைத்து..
***
என் LKG பேரன் அபராஜிதனுக்கு சனி, ஞாயிறு விடுமுறை. அவன் ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்தான். நான் இந்த நிமிடம் வரை ஹான் காங் சிறப்பிதழுக்கு, அவரது ஒரு கவிதையை மொழியாக்கம் செய்யவில்லையே என்ற பதட்டத்தில் அவன் அருகில் அமர்ந்திருந்தேன். இன்று அவனைக் கவனிக்கும் பொறுப்பு என் தலையில். பள்ளிகள் சனி, ஞாயிறுகளில் இயக்க மாட்டார்களா? லீவ் விடாமல் தினமும் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தால்தானே ஐயா, உலகளவில், இந்தியா கல்வியில் வல்லரசாகத் திகழும்?
“தாத்தா, இங்கிலீஷ்ல வவ்வல்ஸ் லெட்டர்ஸ் சொல்லு ..” என்று தலையை உயர்த்தியபடி என் சிந்தனையைக் கலைத்தான் அபராஜிதன்.
கடவுளே.. LKG பையனுக்கே வவ்வல்ஸ் எல்லாம் சொல்லித் தராங்களா? நிச்சயமாக, உலகளவில், இந்தியா கல்வியில் வல்லரசாகத் திகழும்.
எனக்கு வௌவால்ஸ் தான் தெரியும்.. வவ்வல்ஸ் தெரியாதே சாமி..” என்றபடி, கைகளை வௌவால் இறக்கைகள் போல அடித்து, கிண்டலடித்தேன்.
அவனுக்கு இந்தக் கிண்டல் பிடிக்கவில்லை என்பது, அவன் பார்வையில் தெரிந்தது. “ஏமாத்திறியா ..?”
“ஏ, ஈ, ஐ, ஓ, அண்ட் யூ..” என்று எனக்குக் கேட்கும் விதமாக வாய்விட்டுச் சொல்லியபடி எழுதலானான்.
***
மொழியாக்கம் செய்வதற்காக தேர்வு செய்து வைத்திருந்த ஹான் காங் -ன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட, அந்தக் கவிதையை நான்காவது முறையாகப் படித்துப் பார்த்தேன். ஒரே அயர்ச்சியாக இருந்தது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் போனேன். வெயில் கருக்கியது. கடந்த வருடங்களில் எங்கள் ரோட்டில் இருமருங்கிலும் நிழல் கப்பிக் கொண்டிருந்த மரங்களையெல்லாம் வெட்டி விட்டார்கள். பழமை வாய்ந்த வலிமையான மரங்கள். ஏழு உலக்கைக் காற்று வீசினாலும் வீழ்ந்து விடாமல் தாங்கி நிற்கும் பலமும் ஆழமான வேர்களும் கொண்டவை (நெல் கம்பு சோளம் போன்ற தானிய மணிகளை உலக்கையில் போட்டுக் குத்தி உமிகளைப் பிரித்தெடுக்கும் சேகேறிய பனைமரத்தின் அடித்தண்டில் செய்யப்படும் உருளை. நிலையாக நின்றிருக்கும் அதை, பலமான காற்று வீசி நிலையிலிருந்து உருட்டி கீழே தள்ளிவிடும் காற்று வீச்சுக்கு “ஒரு உலக்கைக் காற்று” என்று குறிப்பிடுவார்கள். இதில், ஏழுலக்கை என்பது, கருங்கல்லில் செய்யப்படும் ஆட்டாங்கல்! “ஆடிக்காத்திலே அம்மியே பறக்குதாம்” என்கிற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள்.) மரங்கள் வெட்டப்பட்டு, பாதைகள் அகலமாக்கப்பட்டு, தங்க நாற்கரச் சாலை வருகிறதாம். வெறுமையுடன் வீடு திரும்பினேன்.
என் அறையில், கவிதைப் பக்கங்கள் சுழன்று கொண்டிருந்தன. இன்றைக்கு இதை விடுவதாக இல்லை. ஒரு முடிவுடன் உட்கார்ந்தேன். “இந்தக் கவிதை அழிக்கப்பட்ட வார்த்தையை ஆராய்கிறது…” என்ற கவிதையின் மையத்தை உணர்ந்து கொண்டேன். இப்பொழுது, ஒரு தன்னம்பிக்கை எனக்குள் ஏழுலக்கைக் காற்று வீச்சாக எகிறியது. மறுவாசிப்பு, மறு வாசிப்பு என்று நான்கைந்து முறை அந்த மங்கலான பகுதிக்குள் உள்ளேயே சுற்றிச் சுழலத் தொடங்கினேன். ஒரு கணத்தில், அந்த ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதையில் மூன்றாவது வரியில் வரும், “L வடிவத்தில் உள்ள கோட்டிலும், V வடிவக் கோட்டிலும்” ஒரு சொருள் அடித்தேன் (சொருள்: கிணற்றில் அல்லது ஆழமான நீர்நிலையில் dive அடிப்பது) அந்த சொருள், என்னை தென் கொரிய வரலாற்றின் அடியாழங்களுக்குக் கொண்டு சென்றது.
நவீன கொரியக் கவிதையின் தந்தை என்று போற்றப்படும், யி சாங் (1910 – 1937) -ன் “பூத்துக் குலுங்கும் மரம்” (Flowering Tree) என்ற கவிதையை 2020 -ல் மொழியாக்கம் செய்தது ஞாபகம் வந்தது.
//பரந்த வயலின் நடுவே மலர்கள் பூத்த ஒரு மரம் உள்ளது. சுற்றிலும் இது போன்று வேறு எதுவும் இல்லாமல் நிற்கிறது. தகிக்கும் இதயத்துடன் பூக்கும் இன்னொரு பூ மரத்தை நினைத்து அதன் இதயம் கனல்கிறது. அந்தப் பூ மரம், தன் எண்ணங்களில் இன்னொரு நறுமணத்தை சுவாசிக்க முடியாது. நான் ஓடி வருகிறேன். ஒரு பூ மரமாக, போலியாக உருமாறும் நிஜமாக. // – ஆங்கிலத்தில் : ஜேக் ஜங்
இவரது பெயரில் வழங்கப்படும் ‘யி சாங் இலக்கிய விருது’, தென் கொரியாவின் மதிப்பு மிகுந்த விருதாகக் கொண்டாடப்படுகிறது. மேன் புக்கர், நோபல் போன்ற விருதுகளுக்கு முன், 2005 -ல் முதன் முதலாக, ஹான் காங் தனது The Vegetarian நாவலுக்காக (இந்த நாவலின் இரண்டாவது பகுதியான “Mongolian Mark” கொரியாவில் குறு நாவலாக வெளிவந்த போது, அந்த நூலுக்கு) இந்த விருதைப் பெற்றுள்ளார். இந்த விருதைப் பெற்றதன் மூலம்தான், ஹான் காங், தென் கொரிய இலக்கிய மக்களின் கவனிப்புக்கு ஆளானார். அதையொட்டி சர்வதேச கவனிப்புக்கும் ஆளானார். அதுமட்டுமல்லாது, தனது பேட்டியொன்றில், The Vegetarian நாவல் எழுதுவதற்கு “மனிதர்கள் தாவரங்களாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்” என்ற யி சாங் கின் வரிதான் மூலமாகவும், தன்னை ஊக்கப்படுத்தும் விதத்தில் அமைந்ததாகவும் கூறி பெருமைப்படுகிறார் ஹான். (ஹானின் தந்தையான ஹான் சியூங்-வோன் என்பவரும் நாவலாசிரியர் தான். அவரும் யி சாங் இலக்கிய விருதைப் பெற்றுள்ளார் என்பது கூடுதல் செய்தி)
அந்த வரலாற்றின் அடியாழங்களில், மேலும் தோண்டித் துருவியபோது, நான் மொழிபெயர்க்க எடுத்து வைத்திருந்த ஆங்கிலக் கவிதையின் ஒரிஜினல் கொரிய மூலம் கைக்குக் கிட்டியது. சதுரம் சதுரமான வடிவங்களில், கோட்டை கட்டியது போன்ற கோடுகளால் உருவாக்கமாயிருந்த அந்த கொரிய எழுத்துகளை கண்களை நிமிண்டிக் கொண்டு பார்த்தேன். ஆஹா! அதில், நான் எதிர்பார்த்தது போலவே, கவிதையின் மூன்றாவது வரியில், நம் தமிழ் எழுத்தைப் போன்ற “ட” ணா வடிவத்தில் தனித்திருந்த ஒரு எழுத்து நேராகவும், தலைகீழாகவும் “ㄱ” அந்த கொரிய எழுத்துக் கோடுகளில், ஒட்டாமல் தனித்திருந்ததை, (வேண்டுமென்றேதான் இருமுறை “தனித்திருந்த” வார்த்தையைப் போட்டுள்ளேன்.) ஷெர்லாக் ஹோம்ஸ் போலக் கண்டு பிடித்தேன். இந்தக் கோடுகளில்தான் கவிதையின் திறப்பு இருக்கிறது என்று உள்ளுணர்வு சொல்லியது. உடனே, அதன் நதிமூலம், ரிஷி மூலங்களைத் தேட ஆரம்பித்தேன்.
அவை கொரிய எழுத்துக்களின், அரிச்சுவடியான ஹங்குல் (Hangeul) எனப்படும் எழுத்துக்கள். ஹங்குல் என்பது கொரியாவின் பூர்வீக எழுத்தாகும். இது பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஜோசோன் வம்சத்தின் நான்காவது மன்னரான செஜோங் என்பவரால் உருவாக்கப்பட்டது, இதற்கு முன் கையாளப்பட்டு வந்த, சீன எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஐடு (Idu) என்னும் எழுத்தமைப்பு பொருத்தமானதாக இல்லாததால், புதிய அரிச்சுவடியை உருவாக்கியதாக செஜோங் விளக்கினார். ஹங்குல் என்பது கொரிய ஒலிப்பு எழுத்துக்களின் பெயர், மேலும் இதை ‘உலகில் எந்த மொழியமைப்பிலும் சாராத தனித்துவமான எழுத்துமுறை’ என்று மொழிபெயர்க்கலாம். ஹங்குலுக்குப் பின்னால் உள்ள அறிவியலும், தத்துவமும், மன்னர் செஜோங்கின் கண்டுபிடிப்பாக, மக்கள் மீதான அவரது அன்பின் அடிப்படையில் மட்டுமல்லாது, அவரது ஆழ்ந்த அறிவு மற்றும் தத்துவ நம்பிக்கைகளின் அடிப்படைகளிலும் அமைந்தது.
இந்த ஹங்குல் குறித்து இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்: இதன் ஒவ்வொரு அடிப்படை மெய்யெழுத்தின் வடிவமும் அந்த எழுத்தை உச்சரிக்கும்போது குரல் உறுப்புகளின் வடிவத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த எழுத்துக்களின் அடிப்படையில், மீதமுள்ள மெய் எழுத்துக்கள் கூடுதல் பக்கங்களைச் சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்பட்டன. இறுதியாக, மெய்யெழுத்துக்கள்ㄲ, ㄸ, ㅃ, ㅆ மற்றும் ㅉ ஆகியவை ㄱ, ㄷ, ㅂ, ㅅ மற்றும் ㅈ ஆகியவற்றின் அழுத்தமான பதிப்புகள். இந்த எழுத்துக்களை உருவாக்கத் தேவையான உடற்கூறியல் அறிவு, ஒலிக்கூறியலின் நிலைப்பாட்டில் இருந்து கூட நம்பமுடியாத அளவிற்கு மேம்பட்டதாகக் கருதப்படுகிறது.
ஹங்குல் உயிரெழுத்துக்களின் உருவாக்கம், பாரம்பரிய கிழக்கு ஆசியத் தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. இது வானம், பூமி மற்றும் மனித குலத்தை மூன்று அடிப்படைக் கூறுகளாகக் கருதுகிறது. (மூன்று கூறுகள்: 1. புள்ளி, 2. கிடைமட்டக்கோடு, 3. செங்குத்துக் கோடு) உயிரெழுத்து ㆍ பரந்த வானத்தையும், உயிரெழுத்து ㅡ பூமியையும், மற்றும் உயிரெழுத்து ㅣ மனிதரையும் குறிக்கிறது. இந்த மூன்று அடிப்படை எழுத்துக்கள் பின்னர் 10 அடிப்படை உயிரெழுத்துகளை உருவாக்க இணைக்கப்பட்டன.
1447 இல் வெளியிடப்பட்ட தென் கொரியக் காவிய நூலான, “சொர்க்கத்திற்குப் பறக்கும் டிராகன்களின் பாடல்கள்” (Yongbieocheonga), ஹங்குலில் எழுதப்பட்ட முதல் படைப்பு. 1447 இல் வெளியிடப்பட்ட இந்நூல், Jeong Inji, An Ji மற்றும் Kwon Jae ஆகியோரால் எழுதப்பட்டது. 125 காண்டங்கள் வடிவில் இயற்றப்பட்டுள்ள பாடல்கள் கொண்ட இந்நூலை, கன்ஃபூசியன் தத்துவவியலாளர்களும் அக்கால இலக்கியவாதிகளும் செம்மையாக்கம் செய்தனர்.
பாடல்களின் தலைப்பில் பேசப்படும் டிராகன்கள், ஜோசோன் வம்சத்தின் மொக்ஜோ, இக்ஜோ, டோஜோ, ஹ்வான்ஜோ, டேஜோ மற்றும் தேஜோங் என்னும் ஆறு மூதாதையர்களைக் குறிக்கின்றன. இதில் குறிப்பிடப்படும், டிராகன்களின் எழுச்சி என்பது, ஜோசோன் வம்சத்தின் எழுச்சியாகும். இது ஜோசோன் வம்சாவளியை தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நல்லொழுக்கமுள்ளவர்களாக அடையாளப்படுத்துகிறது. மேலும், எதிர்கால ஜோசோன் ஆட்சியாளர்கள் பின்பற்றுவதற்கான ஒரு கருத்தியல் அடித்தளத்தையும் அமைக்கிறது.
“ஆழமான வேர்களைக் கொண்ட மரத்தை எவ்வளவு பலம் வாய்ந்த காற்றினாலும் அசைக்க முடியாது” என்ற உருவகம் கொண்ட இந்த ஹங்குல் எழுத்துக்களால் புனையப்பட்ட அந்தக் காவியத்தை உடனே வாசித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.
ஜியோமுங்கோவின் இசைச் சுருதிபோல
போங்னே மலை உச்சியிலிருந்து புதிய காற்று வீசுகிறது
நதியின் அலைமேடுகளில் கலைந்து கிடக்கும் நிலவு
நதி நீரின் ஆழத்தில் பூரண அழகில் ஒளிர்கிறது.
* ஜியோமுங்கோ : பாரம்பரிய கொரிய (சிதார் வகை) இசைக்கருவி.
நான் அந்தக் கணத்தில் முடிவு செய்தேன். ஹான் காங் -ன் கவிதைக்குள் நுழைவதற்கான எளிய வழி என்பது, இவைகளில் ஒரு சிலவற்றை மொழியாக்கம் செய்வதுதான் என்பதை சடுதியில் உணர்ந்து கொண்டேன். ஜேம்ஸ் ஹோய்ட் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்த அந்தக் காவியத்தின் 125 காண்டங்களில் (Cantos) குறைந்த பட்சம் ஒரு காண்டத்தை தேர்ந்து மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தேன். (தமிழில் செவ்வியல் தன்மை கொண்ட காவியம் என்று குறிப்பிடப்படும், நீள் கவிதையின் பகுதிகளுக்கு காண்டம் என்று அடையாளப்படுத்துவது போல, உலகளவில் செவ்வியல் கூறுகள் கொண்ட, பல பகுதிகள் உள்ளடங்கிய நீள் கவிதையின் பகுதிகளை, ஆங்கிலத்தில் Cantos என்று அடையாளப் படுத்தப் படுகிறது.)
மொழிபெயர்ப்பாளரான ஜேம்ஸ் ஹோய்ட் (1923 – 2018) “கொரிய இலக்கியம்: அதன் எழுச்சி மற்றும் மகத்துவம் 1443-1591” என்ற தலைப்பில், பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
***
காண்டம் – II
ஆழமான வேர்களைக் கொண்ட மரம்,
காற்று அதை அசைக்காததால்,
உதிரா மலர்கள் அலர்ந்து கொழிக்கும்
கனிந்த பழங்கள் கனிவுடன் களிக்கும் என்றென்றும் வறட்சி உலர்த்தாத
ஆழமான நீரூற்றிலிருந்து எழும்பும் நீர்,
அலையடிக்கும் நீரோடையாக மாறும்
பொங்கிப் பிரவகித்துக் கடல் முகம் காணும்.
***
“மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று இருக்க விடுவதில்லை” என்ற, தென் கொரியாவின் எதிரி நாடான சீனாவின் தலைவரான மாவோவின் கவிதை வரிகள் ஞாபகம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. அவர் வாழ்ந்த அந்தக் காலகட்டத்தில் சீனாவின் மிகப்பெரிய கவிஞர் மாவோ. வழக்கமான பொதுவுடமைக் கவிஞர்களின் வெற்று கோஷங்களாக அல்லாமல், கவித்துவ அழகியல் கொண்டவை அவரது கவிதைகள்! கொரியச் செவ்வியல் காவியத்தை மனதில் கொண்டு எதிர்ப் பார்வையாக அவர் இந்தக் கவிதையை அமைத்திருக்கிறார் என்பது, ஈண்டு நோக்கத்தக்கது. இரண்டு கவிதைகளும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவை என்றாலும், வரலாற்றாய்வியல் விமர்சகர்களுக்கு இவை நீண்ட ஆய்வுச் சாளரங்களைத் திறந்து விடக்கூடும்.
இப்பொழுது, ஹான் காங் -ன் கவிதை அமைப்புக்குத் திரும்புவோம்:
அவரது மூலக் கவிதையில், ‘அழிந்துபோன வார்த்தையில் மிச்சமிருக்கும் அல்லது மங்கலாகத் தெரியும் கோடுகள்’ என்று குறிப்பிடும், ‘ㄱ’ மற்றும் ‘ㄴ’ என்ற ஹங்குல் எழுத்துகளை மெய்யெழுத்து என்று கருதலாம். ஒவ்வொரு அடிப்படை மெய்யெழுத்தின் வடிவமும் அந்த எழுத்தை உச்சரிக்கும்போது குரல் உறுப்புகளின் (vocal organs) வடிவத்தைப் பிரதிபலிக்கிறது. மனித வாழ்வில் முக்கியத்துவம் பெறும் அன்பு, கனிவு, நேசம், பிரியம் போன்ற அர்த்தம் தரும் சொற்களை உச்சரிப்பதற்கு, குரல் உறுப்புகளின் வடிவம் இதயத்திலிருந்து எழும்பும்படியாக ஒரே கோடாக, கிடை மட்டத்திலிருந்து மேலெழும்பி சட்டகத்தின் நேர்கோடாய் வளைகிறது.
ஒருவழியாய் உங்களுக்குப் புரிய வைத்து விட்டேனா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லைதான், ஆனாலும் தொடர்ந்து பயணித்துப் பார்ப்போம்.
இப்பொழுது, ஆங்கில மொழிபெயர்ப்புக்கு வருவோம்:
ஒரு வார்த்தை அழிக்கப்பட்டுள்ளது. அது சுத்தமாக அழிபடாமல், ஒரு சில எழுத்துக் கோடுகள் எஞ்சியிருக்கின்றன. (ஆங்கில எழுத்து வடிவத்தில், பெரும்பாலான எழுத்துக்கள் கோட்டெழுத்து வடிவம் என்பதை நாம் அறிவோம்) அந்த எஞ்சியுள்ள எழுத்துக் கோடுகளை, ஆங்கில மொழிபெயர்ப்பாளர், ‘L ‘ மற்றும் ‘V’ என்ற முடிவுக்கு வருகிறார். கொரிய மூலத்தில் உள்ள ஹங்குல் மெய்யெழுத்தில், அன்பு, கனிவு, நேசம்.. என்பதான அர்த்தங்களை வெளிப்படுத்தும் விதமாக அந்த வரி அமைந்திருக்கிறது. அப்படியானால், அந்த கொரிய மூலத்தின் வரியை அப்படியே, ஆங்கில மொழிபெயர்ப்பாளரின் அனுமானத்தில் பொருத்திப் பார்த்தால், அந்த வரி L o V e என்று மாறுகிறதை உணரலாம்.
இப்பொழுது எல்லாவற்றையும் அழித்துப் போட்டு விட்டு Plain ஆக (ப்ளைனுக்குத் தமிழில் என்ன?) கவிதையை எதிர் கொள்வோம்:
இந்தக் கவிதையில், அடையாளப்படுத்தும், “மங்கலாகிக் கொண்டிருக்கும் கோடுகளைச் சுற்றியுள்ள உருவகங்கள் ” என்னும் ஒரு பார்வையை முன்வைத்து மங்கலான ஒரு அம்சத்தை காட்சிப்படுத்துகிறார் ஹான் காங்.
இந்தக் காட்சி, தென் கொரிய சமூகத்தில் அழிந்து மங்கலாகிக் கொண்டிருக்கும் “அன்பு” பற்றிய பரிமாணங்களை பல்வேறு அடுக்குகளில் பயணம் செய்ய (தேடுதல்) வைக்கிறது. தங்களது நாட்டின் மீது நிகழ்த்திய பல்வேறு போர்கள், மனிதனை மனிதன் கொன்று குவித்த படுகொலைகள், தங்களது நாட்டின் அரசமைப்பே சர்வாதிகாரமாக உருமாற்றம் பெற்று நிகழ்த்திய வன்முறை வெறியாட்டங்கள் ஏற்படுத்திய வெறுப்பு, அன்பை போதித்த நிலம், கண்முன்னே எரிந்து கருகிய துயரம்.. இப்படியாக மனித அன்பு சூன்யத்தில் புதைந்ததை மீட்டெடுப்பதற்கு, வெறுமையில் மறைந்ததைக் கைப்பற்றி மீண்டும் சுடர்வதற்கு கவிஞரின் இதயம் போராடுகிறது. இதயத்தில் உள்ளதைக் கவிதையில் கொள்ளும் கவிஞரின் சக மனித நேசிப்பின் வெளிப்பாடு இவ்வாறாகக் கட்டமைந்திருக்கிறது என்று உணரலாம். இந்த தென் கொரியக் கவிஞரின் இதயம், தற்கால நவீன தென் கொரிய வரலாற்றின் சிக்கலான உணர்வுகளைக் கையாள்கையில், மங்கியிருக்கக் கூடும்.
இந்தச் சிக்கலான உணர்வு என்பது, உலகின் பெரும்பாலான அனைத்து நாடுகளும் தங்களது நவீன வாழ்வியலின் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு வேட்டைக் காடாகத் தங்களை உருமாற்றும் போக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சந்தை மனப்பான்மை கோரிய மனதின் ஆழ்நிலை நனவிலி மனத்தில் பல்வேறு சிக்கலான உணர்வுகளை உருவாக்குகிறது. உலகின் மிகவும் உற்பத்தித் திறன் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளாகவும், மனித நல்வாழ்வுக்கு முக்கியமானதாகவும் இருந்த போதிலும், ஈர நிலங்கள் மிக மோசமான வீழ்ச்சியையும் சீரழிவையும் தொடர்ந்து அனுபவித்து வருகின்றன என்பதை கொரியச் சூழியல் உணர்த்துகிறது. (நமது திருப்பூர் நகரச் சூழியலை இங்கு பொருத்திப் பார்க்கலாம்)
மனிதர்கள் இயந்திரங்களாக மாறிக்கொண்டிருக்கும் இந்த உற்பத்திச் சூழலில் எழும் காதல், அன்பு, சகமனித நேசிப்பு .. போன்ற உணர்வுகளையெல்லாம் மங்கவைக்கும் முகமாக, ஒரேயொரு ஒற்றை வார்த்தையை முன்வைக்கிறார் கவிஞர் ஹான். ஆனால், அந்த வார்த்தைதான் அழிக்கப்படுகிறது. அழிக்கப்படுகிறது என்பதை விடவும் அழிபடுகிறது. அந்த வார்த்தையை கவிதைக் கட்டமைப்பில் மீட்டெடுக்கும் கவிஞரின் தரிசனம் என்பதுதான் இங்கு கவிதையை காவியமாக மாற்றுகிறது.
L மற்றும் V என்னும் கோடுகள் மாத்திரமே இருக்கும் இக்கவிதை அமைப்பில், இதயத்தில், “L o V e” இருக்கும் அழிபடாத – அழிக்கப்பட முடியாத சாத்தியத்தை கவிதையின் நுணுக்கமான வெளிப்பாட்டில் அசாத்தியமாக உணர வைக்கிறார் கவிஞர்.
வலுவான உணர்ச்சிகரமான எதிர்வினைகளைத் தூண்டும் இந்த வார்த்தைப்பாடு, ஆங்கில எழுத்துகளுக்கும் ஹங்குல் எழுத்துகளுக்கும் இடையே அழிந்து போயுள்ள மங்கலான காட்சி, நம் இதயங்களிலிருந்து காதல், அன்பு அழிக்கப்பட்டதன் கொடூரத்தைப் பற்றிய துயர் மிகு கண்ணீராகப் பொங்கிப் பிரவகித்துக் கடல் முகம் காணுகிறது.
இப்பொழுது முழுக் கவிதையையும் தமிழாக்கிப் பார்க்கலாம்:
***
இதயத்திலிருந்து எழும்பும் ஒரு வார்த்தை
– ஹான் காங்
நான் அழிக்கப்பட்ட ஒரு வார்த்தையை அவதானிக்கிறேன்.
மங்கலாகத் தெரியும் கோட்டின் வடிவங்களை
ஒரு L அல்லது V கோணங்களாக அனுமானிக்கலாம்.
அது அழிக்கப்படுவதற்கு முன்
வெறுமையாக உள்ள இடங்களில் எந்த ரூபத்தில் வியாபித்திருந்திருக்கும்
நான் அப்படிப்பட்ட ஒரு இடத்திற்குள் நுழைய விரும்புகிறேன்
என் தோள்களை இடுக்கிக்கொண்டு,
இடுப்பை எத்திச் சுருக்கி,
கணுக்கால்களை ஊன்றி அழுத்தி முழங்காலில் தவ்வி.
மங்கிக் கொண்டிருக்கும் என் இதயத்திலிருந்து
திமிறியெழுகிறது அந்த வார்த்தை
மெலிதான மங்கலில் எழும் விளிம்பின் கூர்மை
என் உதடுகளைப் பிரிக்க
வெளியே நீளும் மொழியின் நாவு
அழிந்த இடைவெளிகளில் நீள்கிறது, அழிபடாத கோடுகளாய்..
ஆங்கிலத்தில் : சோஃபி போமன்
***
நம் தமிழ் நாட்டுப்புற வழக்குகளில் பெரிதாகப் பேசும் பழமொழி ஒன்று உண்டு: “காற்று ஓய்வதற்குள் தூற்றி விடு ; ஈரம் உலர்வதற்குள் விதைத்துவிடு” இல்லையெனில், பருவம் மாறிவிடும். ஹான், இங்கு தென் கொரிய சமூகத்திற்குச் சொல்லும் செய்தியும் அதுதான். சகமனிதனை – மனிதத்தை நேசிக்கும் ஈரம் உலர்வதற்குள், அன்பை விதைத்து விடு. இல்லையெனில், கோடுகள் அழிந்துபோகும். கோட்டின் வடிவங்கள் போர், ஆயுதம், கொலை, களவு, வஞ்சம், தீமை, சர்வாதிகாரம் இன்னபிறவாக மாறிப்போகும்.
***
கட்டுரையின் இறுதிக் குறிப்பு:
பொதுவாகவே, தென் கொரியப் பாரம்பரியத்தில், மனிதனுக்கும் தாவரத்துக்குமான ஒரு தொப்புள்கொடி உறவு இருப்பதை, 14 ஆம் நூற்றாண்டு பண்டைய கொரியக் காவியத்திலிருந்து, நவீன கொரியக் கவிதையின் தந்தையான யி சாங் ஈறாக, தற்கால நோபல் விருதாளர் ஹான் காங் வரை உணரலாம். மனிதர் அனைவருக்கும் எவ்வித எதிர்பார்ப்புமில்லாது, இலை, பூ, காய்,கனிகள் ஈந்து வழங்கும் தாவரத்தின் தன்மையை ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டும் என்று இதய பூர்வமாக விரும்பியிருக்கிறது கொரிய கலை இலக்கியமும், கலாச்சார வாழ்வியலும்.
***
26.10. 2024
