ஒருவர் புனைகதை எழுதுபவர்; மற்றொருவர் இசைஅமைப்பாளர். ஆனால் முரகாமியும் ஒஷாவாவும் ஒரு பொதுப்பண்பைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இருவருக்கும் சங்கீதத்தின் மேல் தீராத வேட்கை; அதுதான் அவர்கள் இருவரையும் இணைக்கும் ஒரு பாலம். அவர்கள் இருவரும் மஹ்லரின் படைப்புத்திறன், மன எழுச்சி மற்றும் படைப்புவளம் ஆகியவற்றைப் பற்றிய விவாதம் செய்கிறார்கள்.
ஹாருகி முரகாமி:
நாங்கள் இந்த நேர்காணலை ஆரம்பிக்கும்வரை, ஸெய்ஜி ஒஷாவாவுடன் நான் ஒருபோதும் இசையைப்பற்றி தீவிரமான உரையாடலை மேற்கொண்டதில்லை. நான் பாஸ்டனில் 1993 முதல் 1995 வரை வசித்தது உண்மைதான். அந்தக் காலகட்டத்தில் அவர் பாஸ்டன் சிம்ஃபொனி ஆர்கெஸ்ட்ராவின் இசை இயக்குநராக இருந்தார். அவரது கச்சேரிகளுக்கு நான் அடிக்கடி போனதுண்டு. ஆனால் ரசிகர் கூட்டத்தில் நானும் ஒரு முகமற்ற ரசிகனாகத்தான் அப்போது இருந்தேன். அதற்குப் பின் வெகு சீக்கிரத்திலேயே நானும் என் மனைவியும் அவரது மகளான ஸெய்ராவின் நண்பர்கள் ஆனோம். நாங்கள் அடிக்கடி சந்தித்தோம்; அவ்வப்போது அவளது தகப்பனாரிடம் பேசினோம். ஆனால் எங்களது உறவு சாதாரணமாகத்தான் இருந்தது; அவருடைய படைப்புக்கோ என்னுடையதிற்கோ அதில் இடமே இல்லை.
சமீப காலம்வரை நாங்கள் இசையைப் பற்றி மும்முரமாக பேசிக் கொள்ளாமல் இருந்ததற்கு ஒரு வேளை, அந்த இசைஞானி அவருடைய வேலையில் முழுவதுமாய் மூழ்கியிருந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதன் விளைவாக, நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து மதுவருந்தும்போதெல்லாம், இசையைத் தவிர்த்து எல்லாவற்றையும் பற்றிப் பேசினோம். அதிக பட்சம் இசை சம்பந்தமாக சில துண்டு துண்டான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஒஷாவா தன் வேலையிலேயே முழுக்கவனத்தையும் குவிப்பவர். அதனால் ஓய்வுக்காக கொஞ்சம் அவர் விலகியிருக்கும் போதெல்லாம், அவரிடம் பேசும்போது இசையைத் தவிர்த்து விடுவேன் நான்.
ஆனால், 2009 டிசம்பரில் ஒஷாவாவுக்கு உணவுக்குழாய்ப் புற்றுநோய் வந்து அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. அதன்பின் வந்த காலகட்டத்தில், அவர் தன்னுடைய சங்கீதப்பணியைக் குறைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று, நோயிலிருந்து மீண்டு புனர்வாழ்வு அடைய வேண்டிய பணி இருந்ததால். அதனால் நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் மெள்ள மெள்ள இசையைப் பற்றி உரையாட ஆரம்பித்தோம். உடல் ரீதியாக தளர்ந்தவராக இருந்தாலும், பேச்சு இசையைப் பற்றி திரும்பும் போதெல்லாம், அவர் உற்சாகம் அடைந்தார். என்னைப் போன்ற இசைப்பாமரர்களிடம் உரையாடும் போது கூட, இசைப்பேச்சு என்பதே அவருக்குத் தேவையான புத்துணர்ச்சியைக் கொடுத்தது போல தோன்றியது. ஒருவேளை நான் அந்தத் துறையில் இல்லாதவன் என்ற நிஜம் கூட அவருக்கு ஓர் இலகுத்தன்மை கொடுத்திருக்கலாம்.
அரை நூற்றாண்டுகாலமாகவே நான் ஒரு தீவிரமான ஜாஸ் சங்கீதப் பிரியன். ஆனாலும் செவ்வியல் இசையையும் அதே வேகத்தோடு நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் இருந்தே செவ்வியல் இசைத்தட்டுகளை சேகரித்தும் வந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செவ்வியல் கச்சேரிகளுக்கும் போகிறேன். குறிப்பாக, 1986 முதல் 1990 வரை ஐரோப்பாவில் வசித்த காலத்தில், நான் செவ்வியல் இசையில் மூழ்கியிருந்தேன். ஜாஸ் இசையும் செவ்வியல் சங்கீதமும் எனக்குத் தூண்டுகோலாக இருந்தன; இதயத்திற்கு அமைதியையும் நிம்மதியையும் கொடுத்தன. இரண்டில் ஒன்றுதான் நான் கேட்கமுடியும் என்று யாராவது என்னிடம் சொல்லியிருந்தால், என் வாழ்க்கை அளவிட முடியாத அளவிற்கு மிகவும் சிறுத்துப் போயிருக்கும். டியூக் எல்லிங்டன் சொன்னது போல, “சங்கீதத்தில் இரண்டு வகைகள்தான் உண்டு. ஒன்று நல்ல சங்கீதம்; மற்றொன்று மோசமான சங்கீதம்.” அந்த அர்த்தத்தில் பார்த்தால். ஜாஸும், செவ்வியல் இசையும் அடிப்படையில் ஒரே ரகம்தான். நல்ல சங்கீதத்தில் கிடைக்கிற பரிசுத்தமான ஆனந்தம் வகையறுத்தல் கேள்விகளைக் கடந்த ஒன்று.
ஒரு முறை ஒஷாவா என் வீட்டுக்கு வந்தார். நாங்கள் இருவரும் இசை கேட்டுக்கொண்டும், பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டுமிருந்தோம். அப்போது க்ளென் கெளல்ட் பற்றியும், 1962-ல் நியூயார்க்கில் லியோனார்டு பெர்ன்ஸ்டெய்ன் நடத்திய பிராஹ்ம்ஸ் – ன் முதல் பியானோ கச்சேரியைப் பற்றியும் மிகச் சுவாரஸ்யமான ஒரு கதையையும் அவர் சொன்னார். “இந்த மாதிரியான ஓர் அதீதக்கவர்ச்சியான கதையை காற்றிலே கரைய விடுவது வெட்ககரமானது,” என்று நான் நினைத்தேன். “யாராவது ஒருவர் இதைப் பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும்.” அசட்டுத் தைரியமானதாகத் தோன்றினாலும், அந்த யாராவது ஒருவர் நானாக இருக்க வேண்டும் என்று எனக்கு அந்தக் கணத்தில் தோன்றியது.
நான் என் கருத்தை ஒஷாவாவிடம் சொன்னதும் அவருக்கு அது உடனடியாகவே பிடித்துவிட்டது. “ஏன் செய்யக்கூடாது?” என்றார் அவர்.“ இந்தக் காலகட்டத்தில் நான் நிறைய நேரம் ஒதுக்க முடியும். நாம் இதைச் செய்வோம்.”
ஒஷாவாவுக்குப் புற்றுநோய் வந்தது இசை உலகத்திற்கு ஒருசோகமான நிகழ்வு; அந்தரங்கத்தில் எனக்கு; அவருக்கும்தான். ஆனால் நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து உட்கார்ந்து நீண்ட இசை சம்பாஷணைகள் செய்வதற்கு அது நிறைய நேரத்தைக் கொடுத்தது. எந்தக் கருமேகத்திலும் காணக்கிடைக்காத அபூர்வமான ஒரு வெள்ளைக் கோடான வாய்ப்பு அது.
கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகத் தெரிந்தாலும், ஒஷாவாவுக்கும் எனக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக எங்கள் உரையாடல்கள் காட்டின என்று நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். திறமை அல்லது படைப்பாற்றல் அல்லது புகழ் என்பதை ஒதுக்கிவிட்டு நான் சொல்ல வருவது என்னவென்றால், நாங்கள் வாழ்ந்த விதம் எனக்குள் ஓர் ஒற்றுமைமிக்க அடையாள உணர்வைத் தந்தது என்பதுதான்.
முதலில், நாங்கள் இருவரும் படைப்பில் ஒரேவிதமான சந்தோச உணர்வை உணர்வது போலத் தோன்றுகிறது. இசை அமைத்தலுக்கும், புனைவுக்கதை எழுதுதலுக்கும் என்னதான் வித்தியாசங்கள் இருந்த போதிலும், வேலையில் மூழ்கும்போது கிடைக்கும் ஆனந்தம் எங்கள் இருவருக்கும் இருக்கிறது. அப்படி படைப்புவேலையில் மூழ்கும் திறமை இருக்கிறது என்ற நிஜம் எங்கள் இருவருக்கும் ஓர் ஆழமான திருப்தியைத் தருகிறது. அந்த வேலையின் விளைச்சலாக வரும் எங்களது படைப்பு என்னவாக இருந்தாலும் சரி, காலப் பிரக்ஞையின்றி கவனக்குவிப்போடு, அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றும் திறனே அதற்கான வெகுமதிதான்.
இரண்டாவது, எங்களது இளமைக்காலத்து ‘பசிகொண்ட இதயம்’ இன்னும் எங்களுக்குள் இருக்கிறது. ‘இது சரியல்ல, மேலும் தோண்டுவோம்’ என்ற ஓர் விடாப்பிடியான உணர்வு, மேலும் மேலும் தொடர்ந்து செல்லும் உணர்வு எங்களுக்கு இன்னும் உண்டு. இதுதான் எங்கள் வாழ்வின், எங்கள் படைப்பின் ஆதார சுருதி. ஒஷாவா பணிபுரிவதைப் பார்க்கும் போது, படைப்பில் அவர் கொண்டுவர பிரயத்தனப்படும் அவரது ஆசையின் ஆழத்தை என்னால் உணர முடியும். தான் செய்வது சரியென்று அவருக்குத் தீர்க்கமான நம்பிக்கை உணடு. அதனால் எழுகின்ற பெருமையுணர்வும் உண்டு. ஆனால் முழுத்திருப்தி உணர்வு என்பது அவருக்கு அறவே இல்லை. இசையை மேலும் செம்மையாக, இன்னும் ஆழமாகக் கொடுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். காலம் மற்றும் உடல்பலம் சார்ந்து கட்டுப்பாடுகளுக்குள் தான் அதை நிகழ்த்திவிட வேண்டும் என்ற அவரது தீர்க்கமான மனப்பான்மையை நான் அறிவேன்.
எங்களின் பொதுவான மூன்றாவது அம்சம் உறுதியான மனப்பான்மை. நாங்கள் பொறுமையானவர்கள்; கடினமானவர்கள்; இறுதியாக, உறுதிமனப்பான்மை மிக்கவர்கள். ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவு எடுத்தோம் என்றால், மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற கவலை எங்களுக்கில்லை. நாங்கள் நினைத்த வழியில்தான் அதைச் செய்வோம். எங்களது செயல் விளைவு துன்பத்தில் போய் முடிந்தாலும், ஒருவேளை அதற்காக நாங்கள் வெறுக்கப்பட்டாலும், எங்களின் செயல்களுக்கான பொறுப்பை நாங்களே எடுத்துக்கொள்வோம். சால்ஜாப்பு சொல்ல மாட்டோம். ஒஷாவா பசப்பு இல்லாத முழுமனிதர்; எப்போதும் நகைச்சுவையாகப் பேசுபவர். ஆனால் தன்னுடைய சூழலுக்கேற்றவாறு உணர்ச்சிவயப்படுபவர். அவரது செயல் முன்னுரிமைகள் எப்போதும் தெளிவானவை. ஒருகணம் முடிவெடுத்துவிட்டால், அவர் அதிலிருந்து அசையக்கூடியவர் அல்லர். அப்படித்தான் எனக்கு அவர் தோன்றுகிறார்.
படைப்புத்திறன் மிக்கவர்கள் அடிப்படையில் தானெனும் பிரக்ஞை மிகுந்தவர்கள். ஒருவேளை இப்படிச் சொல்வது பகட்டாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. தங்களைச் சுற்றி நிகழ்பவைகளைச் சும்மா கவனித்துக்கொண்டு, எந்த அலைகளையும் உருவாக்காமல், சுளுவான சமாதானமான விட்டுக்கொடுத்தல்களில் வாழ்க்கையை வாழ்பவர்கள் படைப்புப்பணிகள் எதுவும் செய்வதில்லை. அவர்களின் துறைகள் என்னவாக இருந்த போதிலும். எங்கே எதுவுமே இல்லையோ அங்கே ஒன்றைக் கட்டி எழுப்புவதற்கு ஆழமான கவனக்குவிப்பு தேவை. பெரும்பாலும், மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாத இடத்தில்தான் அந்தக் கவனக்குவிப்பு நிகழ்கிறது. அந்த இடத்தை நாம் ஜெர்மன் மொழியில் ‘டெமொனிஷ்’ (பேய்போன்ற அசுரத்தனம்) என்றுகூட அழைக்கலாம்.
தான் ஒரு கலைஞன் என்ற நினைப்பில் ஒருவன் தன்னுடைய அகங்காரத்தை முழுவதுமாய்க் காட்டிவிட்டால், அது எந்தவிதமான சமூக வாழ்க்கையையும் தடைசெய்துவிடும். அதன் விளைவாக படைப்புக்குத் தேவையான ‘தனிமனிதக் கவன ஆற்றல்’ சிதைந்துவிடும். 19-ஆம் நூற்றாண்டில் அகங்காரத்தை வெளிக்காட்டுதல் ஒரு விஷயம்; ஆனால் 21-ஆம் நூற்றாண்டில், அது மேலும் கடினமான விஷயமாக மாறிவிட்டது. படைப்புத்திறன் வல்லுநர்கள் தங்களுக்கும், தங்களின் சூழலுக்கும் இடையிலான யதார்த்தமான சமாதானமான புள்ளிகளை எப்போதும் கண்டடைய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
நான் சொல்ல வருவது என்னவென்றால், ஒஷாவாவும் நானும் அந்த யதார்த்தமான சமாதானமான புள்ளிகளைக் கண்டடைவதில் வெவ்வேறு வழிகளைக் கொண்டிருக்கிறோம் என்றாலும், நாங்கள் ஒருவேளை ஒரேதிசையில் பயணித்துக் கொண்டிருக்கலாம். எங்களுக்கான முன்னுரிமைப் பணிகளை நாங்கள் வேறுவேறு விதமாக அமைத்துக் கொண்டாலும், நாங்கள் அவற்றை அமைத்துக்கொள்ளும் விதம் ஒரே ரகமாக இருக்கலாம். அதனால்தான் நான் அவரது கதைகளை, வெறும் அனுதாபம் என்கிற உணர்வுக்கு மேற்பட்ட தன்மையோடு என்னால் கேட்க முடிந்தது.
பின்வரும் உரையாடல் 2011, பிப்ரவரி 22-ஆம் தேதி நிகழ்ந்தது. என்னுடைய டோக்கியோ அலுவலகத்தில். மஹ்லரைப் பற்றி நாங்கள் நிறையவே பேசினோம். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ஒஷாவாவின் அறிவுக்களஞ்சியத்தில் மஹ்லரின் இசை எவ்வளவு பெரிய இடத்தைப் படித்திருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். நீண்ட காலமாகவே மஹ்லருக்குள் இறங்குவதில் எனக்குப் பிரச்சினை இருந்தது. ஆனால் என் வாழ்வின் ஒரு கட்டத்தில் அவரது இசை என்னை அசைத்துப் பார்க்க ஆரம்பித்தது.
***
ஹாருகி முரகாமி: மஹ்லரின் இசையை வாசிக்கும் இசை அமைப்பாளர்களுக்குள், ஒருவேளை அவரது இசை கேட்பவர்களின் மத்தியில் கூட, அவரது வாழ்க்கையைப் பற்றி அல்லது அவரது தத்துவம் பற்றி அல்லது அவரது காலத்தைப் பற்றி அல்லது 19-ஆம் நூற்றாண்டு முடிவிலான சுயமன ஆராய்ச்சி பற்றி நிறைய யோசிப்பவர்கள் உண்டு. அந்த விஷயத்தில் உங்களது நிலைப்பாடு என்ன?
ஸெய்ஜி ஒஷாவா: நான் அவற்றைப் பற்றியெல்லாம் யோசிப்பதே இல்லை. எனினும் நான் அவற்றையெல்லாம் அவதானிப்பதுண்டு. முப்பது வருடங்களுக்கு முன்னால் நான் வியன்னாவில் வேலை செய்ய ஆரம்பித்தபோது, எனக்கு சில நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களோடு அங்கிருக்கும் கலை அருங்காட்சியகங்களுக்குப் போக ஆரம்பித்தேன். முதன்முதலாக, கிளிம்ட் மற்றும் எகோன் ஷியலே ஆகியோர்களின் படைப்புகளைப் பார்க்க நேரிட்டது. அவை எனக்கு நிஜமான ஓர் அதிர்ச்சியைத் தந்தன. அப்போதிருந்து நான் கலை அருங்காட்சியகத்திற்குச் செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டேன். அந்தக் காலகட்டத்துக் கலையைப் பார்க்கும்போதுதான், உங்களுக்கு சங்கீதம் பற்றி கொஞ்சம் புரியும். மஹ்லரின் இசையை எடுத்துக்கொள்ளுங்கள். அது ஜெர்மானிய மரபுச் சங்கீதத்தின் முறிவிலிருந்து வந்தது. அந்த முறிவின் உணர்வை கலையிலிருந்து நீங்கள் பெறலாம். அது அரைவேக்காட்டுத்தனமானது அல்ல என்பதை உங்களால் சொல்ல முடியும்.
முரகாமி: கிளிம்டின் படைப்பு அழகானது. மிக நுண்ணிய விஷயத்தில் கூட ஆழமாக கவனம் குவித்து தீட்டப்பட்டது அது. ஆனால் அதைப் பார்க்கும்போது, அதில் ஏதோவொரு பித்துப்பிடித்த தன்மையும் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கவில்லையா?
ஒஷாவா: நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். போன முறை நான் வியன்னாவுக்குச் சென்றபோது, ஒரு கலையருங்காட்சியகத்தில் கிளிம்ட்டின் பொருட்காட்சிக்குச் சென்றேன். கலைப்படைப்பை அது படைக்கப் பட்ட மாநகரத்திலே காணும்போது, உங்களுக்கு அந்த மாதிரி உணர்வு வரத்தான் செய்யும்.
முரகாமி: ஆமாம். அது நீங்கள் சொல்லும் வழமையான ஒன்றாக இல்லை.
ஒஷாவா: எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதில் ஏதோ ஒன்று இருக்கிறது. பைத்தியக்காரத்தனத்தின் முக்கியத்துவத்தை அது சொல்கிறது. அல்லது ஒழுக்கநீதி போன்ற விஷயங்களை அது கடந்து செல்கிறது. உண்மையில், அந்தக் காலகட்டத்தில், அறவியல் நொறுங்கிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் ஒரு நோய்த்தன்மை நிலவியது.
முரகாமி: பால்வினை நோய் சமாச்சாரங்கள். வியன்னாவில் கிட்டத்தட்ட இந்தமாதிரியான மனச்சிதைவுவும் உடல்சிதைவும் வியாபித்திருந்தது. அந்தக் காலகட்டத்தின் நிலை இதுதான். கடந்த முறை நான் வியன்னாவுக்குப் போனபோது, எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதனால் ஒரு காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நாலைந்து நாட்கள் செக்கோஸ்லோகியா குடியரசின் தெற்குப் பகுதியில் சுற்றித்திரிந்தேன். மஹ்லர் பிறந்த இடமான காலிஷ்ட் அல்லது காலிஷ்டே அந்தப் பழைய பொஹிமியன் பிராந்தியத்தில் இருக்கிறது. நான் ஒரு நோக்கத்துடன் அங்கே போகவில்லை. சாதாரணமாக செல்ல நேரிட்டது. இன்னும் கிராமிய மணம்தான் அங்கே இருக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் மட்டும் வயல்வெளிகள். வியன்னாவிலிருந்து அது ரொம்ப தூரம் இல்லை. ஆனாலும் இரண்டு பிரதேசங்களுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “மஹ்லர் இந்த இடத்திலிருந்துதான் புறப்பட்டு வந்தார்!” என்று நினைத்துக் கொண்டேன். அவர் என்னவொரு பெரிய விழுமிய மாற்றத்தை அனுபவித்திருப்பார்! வியன்னா ஆஸ்ட்ரோ ஹங்கேரி சாம்ராஜ்யத்தின் தலைநகர் மட்டுமல்ல; ஐரோப்பா கலாச்சாரத்தின் வண்ணமயமான இடமும் கூட. மிகவும் முதிர்ந்த, அதீதமான முதிர்ச்சி கொண்ட இடம். வியன்னா மக்கள் மஹ்லரை ஒரு உண்மையான நாட்டுப்புறத்தானாகத்தான் பார்த்திருப்பார்கள்.
ஒஷாவா: நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது..
முரகாமி: எல்லாவற்றுக்கும் மேலே, அவர் ஒரு யூதன். ஆனால் ஒரு விஷயத்தை நாம் யோசிக்க வேண்டும். வியன்னா தன்னைச் சுற்றியுள்ள பிராந்தியங்களின் கலாச்சாரத்தை உள்வாங்கி தன் உயிர்ப்பைத் தக்க வைத்துக் கொள்கிறது. ஆண்டன் ரூபின்ஸ்டெயின் மற்றும் ருடால்ஃப் செர்க்கின் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளில் அதைக் காணலாம். அந்தக் கோணத்தில் பார்த்தால், யூத க்ளெஷ்மர் கீதங்களும், பிரபல்யமான இசையும் ஏன் மஹ்லரின் சங்கீதத்தில் திடீரென்று கலந்து அவரது இசைத்துவத்தில் சங்கமமாகிக் கிடக்கின்றன என்பதைக் காண்பது எளிது. இந்தப் பன்முகத்தன்மைதான் அவரது இசையின் நிஜக்கவர்ச்சி. அவர் வியன்னாவில் பிறந்திருந்தால் இந்த மாதிரியான இசை வெளிப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்.
ஒஷாவா: உண்மை
முரகாமி: அந்தக்காலப் பெரும் படைப்பாளிகள் – காஃப்கா, மஹ்லர் மற்றும் ப்ரெளஷ்ட் – எல்லோரும் யூதர்கள்தான். எல்லையில் நின்றுகொண்டு நிறுவனமயமாக்கப் பட்ட கலாச்சாரத்தை அவர்கள் அசைத்துப் பார்த்தார்கள். அந்த அர்த்தத்தில் பார்த்தால், மஹ்லர் கிராமப்புறது யூதர் என்பது முக்கியமானது. பொஹிமியாவைச் சுற்றிய போது எனக்குள் அந்த உணர்வு மிகப்பலமாக ஏற்பட்டது.
முரகாமி: ’முதல் சிம்பொனி’யின் மூன்றாவது இயக்கத்தைக் கேட்கும்போது, இந்த விஷயம் தெளிவாகப் புரிகிறது: அதாவது, மஹ்லரின் இசையில் பல்வேறு கூறுகள் நிரம்பிஉள்ளன; எல்லாவற்றிற்கும் சமமான மதிப்பு இருக்கிறது; எந்த தர்க்கவியல் தொடர்புகளும் இல்லை. சில சமயங்களில் அவை ஒன்றோடு ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. மரபுரீதியான ஜெர்மானிய இசை, யூத இசை, பொஹிமியன் நாட்டார் பாட்டிசை, நூற்றாண்டு முடிவின் அம்சங்கள், சங்கீத கேலிச்சித்திரங்கள், நகைச்சுவையான உபக்கலாச்சாரக் கூறுகள், கடுமையான தத்துவ வியாகரணங்கள், கிறிஸ்துவ நிலைப்பாடுகள், ஆசியா உலகக் கண்ணோட்டங்கள் என்று எல்லாமும் நிறைந்திருக்கின்றன; ஆனால் அவற்றில் ஒன்றைக் கூட மையப்பொருள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. இப்படி மானாவாரியாக கோர்க்கப்பட்ட பல்வேறு கூறுகள் பின்னிப்பிணைந்திருக்கும் அவரது இசையில், உங்களைப் போன்ற இசை நடத்துநர்கள் தனிப்பாதை அமைத்துக்கொள்வதற்கு ஏதுவான பலதரப்பட்ட வழிகள் ஏராளமாக இல்லையா என்ன? வேறுமாதிரியாகச் சொல்வதென்றால், மஹ்லரின் இசையில் ஏதோவொரு பொதுவான தன்மை அல்லது பரந்த குணாம்சம் இல்லையா என்ன?
ஒஷாவா: நல்லது. இது மிகவும் சிக்கலான விஷயம். ஆனால் நீங்கள் சொல்வது போன்ற வழிகள் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.
முரகாமி: பெர்லியோஷ் பற்றி நாம் பேசும்போது, அவரது இசையில் ஒரு ஜப்பானிய இசைநடத்துநர் சுரண்டிக்கொள்கிற அளவுக்கு நிறைய சாத்தியங்கள் இருப்பதாக நீங்கள் சொன்னீர்கள். ஏனென்றால் அதில் ஒரு ’பைத்தியக்காரத்தனம்’ இருக்கிறது. அதே மாதிரிதானே மஹ்லரின் இசையைப் பற்றியும் சொல்ல முடியும்?
ஒஷாவா: பெர்லியோஷ்க்கும் மஹ்லருக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், பெர்லியோஷ் விளக்கமான கட்டளைகள் தருவதில்லை.
முரகாமி: அப்படியா?
ஒஷாவா: பெர்லியோஷ் என்று வரும்போது, இசை நடத்துநர்களாகிய எங்களுக்கு ரொம்பவே சுதந்திரம் இருக்கிறது. மஹ்லரிடம் அந்தச் சுதந்திரம் குறைவுதான். ஆனால் இறுதியான நுணுக்கமான விவரங்களுக்கு வரும்போது, நான் நினைக்கிறேன், ஒரு பொதுவான வழி இருக்கிறது என்று. ஜப்பானியர்களாகிய நாமும், மற்ற ஆசியர்களும் நமக்கான விசேஷமான ஒரு வருத்தத்தைக் கொண்டிருக்கிறோம். யூத வருத்தத்தை விட அல்லது ஐரோப்பா வருத்தத்தைவிட லேசாக வித்தியாசப்பட்ட இடத்திலிருந்து அது வருகிறது என்று நான் நினைக்கிறேன். இந்த மனப்பான்மைகளை நீங்கள் புரிந்துகொண்டு பின்பு ஆழமான முடிவுகளை எடுத்தால், அப்போது சங்கீதம் உங்களுக்கு மிக இயல்பாக வசப்பட்டுவிடும். அதாவது, ஒரு மேற்கத்தியன் எழுதிய இசையை ஒரு கீழைநாட்டவன் இசைக்கும்போது, அதற்கு ஒரு விசேஷமான அர்த்தம் கிடைக்கிறது. அது முயன்று பார்க்கும் அளவுக்குத் தகுதியானதுதான் என்று நான் நினைக்கிறேன்.
முரகாமி: மேலோட்டமான ஜப்பானிய உணர்வியலைத் தாண்டி இன்னும் ஆழமாகத் தோண்டி அதைப் புரிந்துகொண்டு உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள் இல்லையா?
ஒஷாவா: ஆமாம். அதுதான். மேற்கத்திய இசைநிகழ்வு ஜப்பானிய உணர்வுகளை முழுவதுமாகப் பயன்படுத்துவதுதான் அதனுடைய இருப்பின் நோக்கமாகிறது.
முரகாமி: மஹ்லரின் இசையைக் கேட்கும்போது, அதில் முக்கியமான அங்கம் வகிப்பது மனத்தின் அடியாழ அடுக்குகள் என்று நான் எப்போதும் நினைக்கிறேன். ஒருவேளை அது ஃபிராய்டிய அம்சமாக இருக்கலாம். பாக் அல்லது பீத்தோவன் அல்லது பிராஹ்ம்ஸ் இசை உலகத்தில் ஜெர்மானிய கருத்தியல் ரூபமான தத்துவம் இருக்கிறது. அதில் மனதின் பகுத்தறிவுமிக்க, புதைக்கப்படாத பாகங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. மஹ்லரின் இசையில், அவர் வேண்டுமென்றே மனதின் இருட்டான, அந்தரங்கமான பிராந்தியத்தில் ஆழமாய்க் குதிக்கிறார் என்று தோன்றுகிறது. கனவில் இருப்பது போல, அவரது இசையில் ஒன்றையொன்று மறுதலிக்கும், எதிர்க்கும், சங்கமிக்க மறுக்கும், ஆனால் அடையாளப்படுத்த முடியாத கருப்பொருள்கள் மானாவாரியாக பிணிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இதை அவர் பிரக்ஞையுடன் செய்கிறாரா இல்லை பிரக்ஞையற்று செய்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது நேரடியாகவும் நேர்மையாகவும் இருக்கிறது.
முரகாமி: ஆமாம். இருவரும் யூதர்கள். அவர்கள் பிறந்த இடங்கள் வெகுதூரத்தில் இல்லை என்று நினைக்கிறேன். ஃபிராய்டு கொஞ்சம் மூத்தவர். மஹ்லரின் மனைவி அல்மா ஒரு காதல் விவகாரத்தில் இருந்தபோது (கட்டிடக்கலைஞர் வால்டர் குரோபியஸுடன் – மஹ்லர் இறந்தவுடன், அவரை அவள் திருமணம் செய்துகொண்டாள்.) மனநல ஆலோசனைக்காக மஹ்லர் அவரிடம் வந்தார். பிராய்டுக்கு மஹ்லரின் இசைமீது ரொம்ப மரியாதை இருந்தது. நினைவிலி மனத்தின் அடியாழ நீரோட்டங்களை அப்பட்டமாக நேரிடையாக விவரிப்பது என்பது நம்மை மிரளச்செய்கிறது. ஆனால் ஒருவேளை அதுதான் மஹ்லரின் இசையைப் பொதுமைத்தன்மை கொள்ளச் செய்கிறது என்று நினைக்கிறேன். மஹ்லரும், ஃபிராய்டும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்தானே, இல்லையா?
ஒஷாவா: அந்த அர்த்தத்தில் பார்க்கப்போனால், மஹ்லர் ஒற்றை ஆளாக நின்று மைய நீரோடை ஜெர்மானியச் சங்கீதத்தை எதிர்த்துக் கலகம் புரிந்தார் என்ற் சொல்லலாம். பாக், ஹேடன், மொஸார்ட், பீத்தோவன், மற்றும் பிராஹ்ம்ஸ் என்று எல்லோரையும் எதிர்த்தார். 12-டோன் இசை உதயமாகும் வரை.
முரகாமி: அதைப் பற்றி யோசித்தால், 12-டோன் இசை மிகவும் தர்க்கரீதியானது, பாக்கின் ‘வெல் டெம்பர்ட் கிளாவியர்’ என்ற தர்க்க இசையைப் போல…. 12-டோன் இசையே ஜீவித்திருக்கவில்லை. ஆனால் அதன் அம்சங்கள் பின்னால் வந்த இசையில் கலந்துவிட்டன… ஆனால் இது நிஜமாகவே, மஹ்லரின் இசை பின்னாடி வந்த தலைமுறைகள் மீது செலுத்திய தாக்கத்தைவிட மிகவும் வித்தியாசமானது. நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.இல்லையா?
ஒஷாவா: ஆம். நினைக்கிறேன்.
முரகாமி: அந்த அர்த்தத்தில் பார்த்தால், மஹ்லர் அதே மாதிரியானவர்தான்.
முரகாமி: ரிச்சர்டு ஸ்ட்ராஸின் இசையை வாசிப்பதற்கும், மஹ்லரின் இசையை வாசிப்பதற்கும் என்ன வித்தியாசம் ?
ஒஷாவா: ரொம்ப எளிமைப்படுத்தும் அபாயம் இருக்கிறது. இருந்தாலும், சொல்கிறேன். ஜெர்மானிய இசையின் வளர்ச்சியை பாக்கில் தொடங்கி, பீத்தோவன், வாக்னர், பிரக்னர், பிராஹ்ம்ஸ் வழியாக ஆராய்ந்தால், ரிச்சர்டு ஸ்ட்ராஸை அந்தப் பாதையில் ஓர் அங்கமாகப் பார்க்கலாம். வாஸ்தவத்தில், அவர் எல்லாவிதமான அடுக்குகளையும் தன் இசையில் வைத்திருக்கிறார். ஆனால் அவரது இசையை அந்த நீரோட்டப் பாதையில் வாசிக்க முடியும். ஆனால் மஹ்லரிடம் அப்படி இல்லை. புத்தம் புதிய கண்ணோட்டம் வேண்டும். அதைத்தான் மிக முக்கியமாக மஹ்லர் செய்தது. ஸோவென்பெர்க் மற்றும் அல்பான் பெர்க் போன்ற இசைப் புனைவாளர்கள் அவர் காலத்தில் இருந்தார்கள். ஆனால் மஹ்லர் செய்ததை அவர்கள் செய்யவில்லை.
முரகாமி: ஒரு நிமிடத்திற்கு முன்னாடி நீங்கள் சொன்னது போல, மஹ்லர் 12-டோன் இசையை விட வித்தியாசமான பாதைகளைத் திறந்துவிட்டவர்.
ஒஷாவா: பீத்தோவன் அல்லது பிரக்னர் பயன்படுத்திய கச்சாப்பொருளைத்தான் அவரும் பயன்படுத்தினார். ஆனால் அவர் கட்டமைத்தது வித்தியாசமான இசை.
முரகாமி: ஒலியியல் நேர்த்தியைக் காப்பாற்ற அவர் மிகவும் போராடினார்.
ஒஷாவா: சரியாகச் சொன்னீர்கள். ஆனால் நடைமுறையில் அவர் அவொலியியலை (Atonality) நோக்கித்தான் போனார். தெளிவாகவே.
முரகாமி: ஒலியியல் சாத்தியங்களை அவர் பின்பற்றிய போது, ஒலியியல் என்ற ஒட்டுமொத்தச் சமாச்சாரத்தையே அவர் குழப்பிவிட்டார் என்று நீங்கள் சொல்வீர்களா?
ஒஷாவா: கண்டிப்பாக. அவர் ஒருவிதமான பல்லடுக்குத் தன்மையைக் கொண்டுவந்தார்.
முரகாமி: ஒரே அசைவில் பல்வேறுவிதமான பொத்தான்களைப் போல.
ஒஷாவா: சரியே. அவர் விஷயங்களை மாற்றிக் கொண்டே இருந்தார். ஒரே நேரத்தில் இரண்டுவிதமான பொத்தான்களைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களை அவர் செய்வார்.
முரகாமி: அவர் ஒலியியலை விட்டொழிக்கவில்லை. ஆனால் உள்ளே இருந்துகொண்டு குழப்பத்தை உருவாக்கினார். விஷயங்களைக் கலைத்துப் போட்டார். அவர் அப்படித்தான் அவொலியியல் நோக்கிப் பயணித்தார். ஆனால், 12-டோன் இசையின் அவொலியியலை வித்தியாசமான ஏதோ ஒன்றுக்காக பிரயத்தனம் செய்தார்.
ஒஷாவா: ஆமாம். அது வித்தியாசமாக இருந்தது என்று நினைக்கிறேன். அதை அவொலியியல் என்பதை விட பல்லொலியியல் (Polytonality) என்று சொல்வது சரியாக இருக்கலாம். பல்லொலியியல் என்பது அவொலியியலுக்கு ஒரு படி கீழே. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பொத்தான்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது. அல்லது இசை தவழ்ந்து வருகையில் பொத்தான்களை மாற்றிக்கொண்டே இருப்பது. எப்படி இருந்தாலும், மஹ்லரின் இலக்கான அவொலியியல் என்பது, ஷோவென்பெர்க்கும், பெர்க்கும் கொடுத்த 12-டோன் இசையை விடவும், அவொலியியலை விடவும் மிகவும் வித்தியாசமான ஏதோ ஒன்றிலிருந்து வந்தது. பின்னாடி, சார்லஸ் ஐவ்ஸ் போன்றவர்கள் பல்லொலியியலை ஆழமாகப் பின் தொடர்ந்தார்கள்.
முரகாமி: தான் செய்வது ஒரு முன்னணிப் பரீட்சார்த்தம் என்று மஹ்லர் நினைத்தார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஒஷாவா: இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை.
முரகாமி: ஆனால், ஷோவென்பெர்க்கும், பெர்க்கும் தாங்கள் முன்னணிப் பரீட்சார்த்தம் செய்கிறோம் என்ற பிரக்ஞையோடு இருந்தார்கள்.
ஒஷாவா: நிச்சயமாக. அவர்களுக்கு ஒரு முறை இருந்தது. மஹ்லருக்கு அது இல்லை.
முரகாமி: அவர் குழப்பம் என்பதோடு சரசமாடினார். ஒரு அமைப்பாக இல்லை. ஆனால் இயல்பாக, அனிச்சையாக. அதைத்தானே நீங்கள் சொல்கிறீர்கள்?
ஒஷாவா: ஆமாம். அவரது மேதைமை அதில்தானே இருக்கிறது. இல்லையா?
முரகாமி: ஜாஸில் கூட அதேமாதிரியான போக்கு இருந்தது. 1960-களில் ஜான் கால்ட்ரேன் ‘சுதந்திரமான ஜாஸ்’ என்பதை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வந்தார். ஆனால் அடிப்படையில் ‘மோட்’ என்றழைக்கப்படும் இளகிய ஒலியியலின் எல்லைகளுக்குள்ளே அவர் தங்கிவிட்டார். மக்கள் இன்னும் அவரது இசையைக் கேட்கிறார்கள். ஆனால் ‘ஃப்ரீ ஜாஸ்’ என்பது ஒரு சரித்திர அடிக்குறிப்பைவிட கொஞ்சம் பெரியது. நாம் பேசிக்கொண்டிருப்பது அதேமாதிரியான சமாச்சாரம்தான்.
ஒஷாவா: வாவ். ஜாஸில் கூட அதேமாதிரியான ஒன்று இருக்கிறது. அப்படித்தானே?
முரகாமி: இதைப் பற்றியும் யோசியுங்கள். மஹ்லருக்குப் பின்னோடிகள் இல்லை. அவருக்குப் பின்னாடி வந்த சிம்போனி புனைவாளர்கள் யாரும் ஜெர்மானியர்கள் அல்லர்; ரஷ்யர்கள்தான். ஷோஸ்டகோவிச் மற்றும் ப்ரோகோஃபீவ்.ஷோஸ்டகோவிச்சின் சிம்பொனிகள் லேசாக மஹ்லரை ஞாபகப்படுத்தும்.
ஒஷாவா: ஆமாம். நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஷோஸ்டகோவிச்சின் இசை கோர்வையானது. மஹ்லரிடம் நாம் உணரும் பித்துநிலையை அவரிடம் நாம் உணர்வதில்லை.
முரகாமி: ஒருவேளை அரசியல் காரணங்களுக்காக அந்தமாதிரி பித்துநிலையை வெளிப்படுத்துவது அவருக்கு எளிதாக இருந்திருக்காது.
ஒஷாவா: உண்மை. எகான் ஷியலின் கலையும் அப்படித்தான். அவரது சித்திரங்களைப் பார்த்தபோது, எப்படி அவரும் மஹ்லரும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள் என்பதை என்னால் பார்க்க முடிந்தது. வியன்னாவில் கொஞ்சகாலம் வாழ்ந்தபோது அந்தச் சூழலைப் பற்றிய உணர்வு எனக்குள் வந்தது. அது ஒரு மிகவும் சுவாரஸ்யமான அனுபவம் எனக்கு.
முரகாமி: வியன்னாவின் இசை நாட்டியத்தின் இயக்குநராக இருப்பது இசை உலகத்தில் ஆகப்பெரிய பதவி என்று மஹ்லர் தன் சுய சரிதத்தில் சொல்லி இருக்கிறார். அந்தப் பதவியை அடைவதற்காக, அவர் தனது யூத நம்பிக்கையைக் கைவிட்டு கிறித்துவத்திற்கு மதம் மாறும் அளவுக்குப் போயிருக்கிறார். அத்தகைய தியாகத்திற்குத் தகுதியானது அந்தப் பதவி என்று அவர் நினைத்தார். நீங்களும் சமீப காலம் வரை அப்பதவியில் இருந்ததாக எனக்குத் தோன்றுகிறது.
ஒஷாவா: நிஜமாக அவர் அப்படிச் சொன்னாரா? அந்த இசை நாட்டியத்தின் இயக்குநராக அவர் எத்தனை வருடம் இருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா?
முரகாமி: பத்து வருடங்கள் என்று நினைக்கிறேன்.
ஒஷாவா: இசை நாட்டியம் நடத்துவதில் அவ்வளவு நீண்ட காலம் செலவழித்த ஒரு மனிதன் சொந்தமாக ஒன்று எழுதாமல் விட்டுவிட்டார் என்பது அதிசயமாக இருக்கிறது. ஏனென்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் நிறைய லீடர்களை எழுதி இருக்கிறார். (லீடர்: பியானோ இசையுடன் ஒற்றைக்குரலில் பாடுவதற்காக புனையப்படும் ஜெர்மானிய இசைப்பாடல்களுக்கு ஆங்கிலத்தில் ‘Lieder’ என்று பெயர் – மொழிபெயர்ப்பாளர்.) வார்த்தைகளுக்கும், இசைக்குமான கலவையைப் பற்றிய பிரக்ஞை அவருக்கு நிறைய உண்டு.
முரகாமி: உண்மைதான். நீங்கள் சொல்வதினால். ரொம்ப வருத்தமான விஷயம். அவர் இசைநாட்டியப் பாடல் எழுதாமல் விட்டது. ஆனால் அவரின் குணாம்சத்திற்கு, இசைநாட்டியப் பாடல் எழுதுவது என்பது கஷ்டமானதாக இருந்திருக்கலாம்.
(ஜப்பானிய இசைமேதை ஸெய்ஜி ஒஷாவாவுடன், ஹாருகி முரகாமி நடத்திய உரையாடலின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் Absolutely on Music என்ற நூலிலிருந்து.)
தமிழ் மொழியாக்கம் : மஹாரதி
