•  நவோமி வுல்ஃப்
  • தமிழில்: சுனந்தா சுரேஷ்

இறுதியாக, ஒரு நீண்ட அமைதிக்குப் பிறகு பெண்கள் தெருக்களில் இறங்கி போராடினார்கள். 1970 களின் தொடக்கத்தில் பெண்ணியம் மறுபிறப்பெடுத்ததை அடுத்து இருபதாண்டு கால தீவிர செயல்பாட்டினால் மேற்குலக பெண்கள் சட்டப்பூர்வ மற்றும் இனப்பெருக்க உரிமைகளைப் (Reproductive Rights) பெற்றார்கள்; உயர் கல்வி கற்று வணிகம் மற்றும் தொழில் புரியத் தொடங்கினார்கள்; தங்களது சமூக பங்கு பற்றி போற்றி துதிக்கப்பட்ட பண்டைய நம்பிக்கைகளை புரட்டிப் போட்டார்கள். ஒரு தலைமுறை கடந்து விட்டது, பெண்கள் சுதந்திரமாக உணர்கிறார்களா?

எந்தவொரு பெண்ணுக்கும் இதுவரை கிடைத்திடாத அளவிலான சுதந்திரங்களை அனுபவிக்கிற செல்வச்செழிப்பான, கல்வியறிவு பெற்ற, அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்ட முதல் உலக பெண்களால் கூட தாங்கள் விரும்புகிற சுதந்திரத்தை உணர முடிவதில்லை. தங்களது சுதந்திரத்தின் போதாமை என்பது முக்கியத்துவமற்ற விஷயங்கள் மற்றும் அற்பப் பிரச்சினைகள் போன்றவற்றோடு தொடர்புடையது எனக் கருதி இனியும் தங்களது உணர்வுகளைப் பெண்களால் அவர்களது ஆழ்மனதில் போட்டு அடைத்து வைத்திருக்க முடியாது.  உடல் தோற்றம், தேகம், கேசம், முகம் மற்றும் உடை போன்றவை முக்கியமானவை என ஒத்துக்கொள்ளப் பல பெண்கள் வெட்கப்படுகிறார்கள். வெட்கம், குற்றவுணர்ச்சி மற்றும் உரிமை மறுப்பு போன்ற விஷயங்கள் ஒருபக்கம் இருப்பினும், பெண்கள் மனநோய் கொண்டவர்களாக அல்லது தனிமையிலிருப்பவர்களாக அல்லாமல் முக்கியமான ஏதோ ஒன்று என்றால் அந்த ஒன்றுதான் விவாதத்திற்குரியதாக இருக்கிறது; அதுதான் பெண் விடுதலை மற்றும் பெண் அழகு ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பில் காரியமாற்றக்கூடியதாக இருக்கிறது என்பதைக் கண்டு பெருமளவிலான பெண்கள் வியப்படைகிறார்கள்.

சட்டப்பூர்வ மற்றும் பொருளாயதத் தடைகளை பெண்கள் எந்தளவுக்கு அதிகமாக உடைத்தெறிந்து வெளிவந்திருக்கிறார்களோ, அதே அளவிற்கு பெண் அழகு பற்றிய கறாரான, கடுமையான மற்றும் கொடூரமான சித்திரங்களும் நம்மை அதிகமாக ஆட்கொள்ளவும் செய்திருக்கின்றன. தொடக்க கால துடுக்கான வேகத்தோடு ஒப்பிடுகையில் பெண்களின் ஒட்டுமொத்த முன்னேற்றம் தடைபட்டு நிற்கிறது; குழப்பம், பிரிவினை, வெறுப்பு மனப்பான்மை எல்லாவற்றிற்கும் மேலாக சோர்வு போன்ற ஊக்கமிழக்கச்செய்கிற சூழலும் நிலவுகிறது. பெரும் போராட்டங்களையடுத்து கிடைத்த ஓரளவு அங்கீகாரத்திற்குப் பிறகு பல வயது முதிர்ந்த பெண்கள் தளர்ந்து போனதாக உணர்கிறார்கள். இந்த போராட்டத்தின் ஒளியை எவ்வித கேள்வியின்றி பெற்றுக்கொண்ட இளம்பெண்கள் அதனைக் கொண்டு ஒரு புதிய தீப்பந்தம் ஏற்றுவதில் ஓரளவே ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த பத்தாண்டில் அதிகாரக் கட்டமைப்பில் உடைவை ஏற்படுத்தினார்கள் பெண்கள்; இதற்கிடையில் உணவு எடுத்துக்கொள்வதில் ஏற்பட்ட ஒழுங்கு குலைவு பன்மடங்கில் அதிகரித்தது; அழகு சார்ந்த அறுவைச் சிகிச்சை வேகமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிற சிறப்பு மருத்துவப் பிரிவாக மாறியது. கடந்த ஐந்தாண்டுகளில் நுகர்வோர் செலவிடும் தொகை இருமடங்கானது; பார்க்க அனுமதிக்கப்பட்ட திரைப்படங்களையெல்லாம் பின்தள்ளிவிட்டு ஆபாசப் படம் பார்த்தல் ஊடகத்தின் முக்கிய வகையினமாக மாறியது; வேறெந்த லட்சியத்தை அடைவதை விட பத்திலிருந்து பதினைந்து பவுண்டு எடையைக் குறைப்போம் என 33000 அமெரிக்க பெண்கள் ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகளவிலான பெண்கள் பணம், அதிகாரம், வாய்ப்பு மற்றும் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளனர்; ஆனால் உடல்ரீதியில் நம்மைப் பற்றி எப்படி உணர்கிறோம் என்ற வகையில் நாம் நமது சுதந்திரமற்ற பாட்டிமார்களைக் காட்டிலும் மிக மோசமான நிலையில் இருக்கலாம்.  மேற்குலகின் அதிகாரமிக்க, வசீகரிக்கத்தக்க மற்றும் வெற்றிகரமான பணிக்குச் செல்லும் பெரும்பான்மை பெண்களின் உள்ளே ஒரு ரகசியமான, நமது சுதந்திரத்தினை நச்சாக்குகிற “நரக வாழ்வு” இருக்கிறது என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தொடர்ந்து தெரிவித்துக்கொண்டிருக்கிறது; அழகு குறித்த எண்ணங்களால் புகுத்தப்பட்ட இவ்வாழ்வு சுய வெறுப்பு, உடல் மீதான அதீத மோகம், முதுமை குறித்த பேரச்சம் மற்றும் நிதானமின்மை பற்றிய பயம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் இருண்ட மனநிலையாக இருக்கிறது.

பல ஆற்றல் வாய்ந்த பெண்கள் இவ்வகையில் உணர்வதென்பதொன்றும் தற்செயலானதல்ல. பெண்களின் முன்னேற்றத்திற்கு எதிரான ஓர் அரசியல் ஆயுதமாக பெண் அழகு குறித்த படிமங்களைப் பயன்படுத்துகிற, பெண்ணியத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகிற கடுமையான எதிர்த்தாக்குதலுக்கு மத்தியில் நாம் இருக்கிறோம். தொழிற்புரட்சியிலிருந்து நடைமுறையில் இருந்து வருகிற இத்தகைய வன்முறை என்பது சமூகரீதியிலான அனிச்சை செயலின் ஒரு நவீன வடிவம். குடும்ப வாழ்வு என்கிற பெண்ணிய மாயையிலிருந்து பெண்கள் தங்களை விடுவித்துக்கொண்டவுடன், சமூகத்தினைக் கட்டுப்படுத்தும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள இயலாத வகையில் பலமிழந்திருந்த அழகு குறித்த புனைவானது, இழந்த செல்வாக்கினை மீண்டும் பெற்று தன்னை விரிவாக்கிக்கொள்ள ஆரம்பித்தது.

சமகால எதிர்த்தாக்குதலானது மிகவும் வன்முறைத்தன்மை கொண்டதாக இருக்கிறது. ஏனென்றால் பெண்களை இன்னும் கட்டுப்படுத்துகிற ஆற்றல் கொண்ட பழைய பெண்ணியக் கருத்துக்களில் அழகு குறித்தான கருத்துதான் கடைசியாக எஞ்சியிருக்கக்கூடியதாக இருக்கிறது: தாய்மை, குடும்ப வாழ்க்கை, கற்பு மற்றும் அடங்கிப்போதல் போன்ற சமூக நிர்ப்பந்தங்களால் இனியும் தங்களை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதால் அப்பழங்கருத்துக்கள் ஆற்றிய பங்கினை தான் ஏற்றுக்கொள்ளுமளவிற்கு அழகு குறித்த புனைவானது, வலிமையான ஒன்றாக வளர்ந்திருக்கிறது. பொருளாதார ரீதியாகவும், வெளிப்படையாகவும் பெண்ணியம் பெண்களுக்கு செய்த நல்ல விஷயங்களை இது தலைகீழாக மாற்றிட உளவியல் ரீதியிலும், மறைமுகமாகவும் முயற்சித்துக்கொண்டிருக்கிறது.

மேற்குலக பெண்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்ணியம் பாரம்பரியமாக கையளித்திட்ட விஷயங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வர எதிர்சக்தியானது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பாலின அடிப்படையிலான வேலைப் பாகுபாட்டிற்கெதிரான சட்டங்களை பெண்ணியம் வழங்கியது; உடனே, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பெண்களின் தோற்றத்தின் அடிப்படையில் வேலைப் பாகுபாட்டை நிறுவனப்படுத்திய சட்ட அங்கீகாரம் இல்லாத ஆனால் வழிவழியாக கடைபிடிக்கப்பட்ட முறை உருவாக்கப்பட்டது(Case Law). குடும்பத்தலைவர் சார்ந்த(Patriarchal) மத உறவு படிப்படியாக சரிந்தது; பழமை வாய்ந்த வழிபாட்டு முறைகளைக் கொண்டு மனதை மாற்றியமைக்கிற நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய மதம் சார்ந்த கோட்பாடு ஒன்று வயது மற்றும் உடல் எடையைச் சுற்றி காரியமாற்றும் வகையில் உருவானது. ஃபிரைடனால்(Friedan) ஊக்கத்திற்குள்ளான பெண்ணியவாதிகள் வீட்டு உபயோகப் பொருட்களுக்காக பெண்ணிய மாயையை வைத்து அபிவிருத்தி முயற்சி மேற்கொண்டிருந்த புகழ்பெற்ற விளம்பர ஊடகங்களின் ஆதிக்கப்பிடியை உடைத்தெறிந்தார்கள்; உடனே, உணவுக்கட்டுப்பாடு மற்றும் சரும பாதுகாப்பு தொழில்நிறுவனங்கள் பெண்களின் அறிவுசார் வெளியின் புதிய கலாச்சார தணிக்கையாளர்களாக மாறின; மேலும் அந்நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக மெல்லிய மற்றும் இளமையான மாடல்(Model) பெண்கள் பெண்மையின் வெற்றிகரமான நிபுணர்களாக இல்லத்தரசிகளை இடப்பெயர்ச்சி செய்தனர். பாலியல் புரட்சி பெண்பால் பாலியல் பண்பு (Female Sexuality) என்கிற புதிய கண்டுபிடிப்பை ஊக்குவித்தது. ”அழகுசார்ந்த இழிவர்ணனை”(Beauty Pornography) பெண்களின் பாலியல் சுயகெளரவத்தின் புதிய மற்றும் பலவீனமான உணர்வினை சீர்கெடுத்திட மைய நீரோட்டத்தில் ஊடுருவியது. ”அழகுசார்ந்த இழிவர்ணனை” என்பது பாலியல் விருப்பத்தினை பெண் வரலாற்றில் முதன்முதலாக நேரடியாகவும் வெளிப்படையாகவும் ஒரு வணிகச் சரக்காக்கப்பட்ட “அழகுடன்” செயற்கையாக இணைக்கிறது. இனப்பெருக்க உரிமையானது மேற்குலகப் பெண்களுக்கு அவர்களது உடல்கள் மீதான கட்டுப்பாட்டை வழங்கியது; மாடல் பெண்களின் உடல் எடையானது சாதாரண பெண்களின் எடையை விட 23 விழுக்காடு அளவிற்கு குறைந்தது. முறையற்ற வகையில் உணவு எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நோய்கள் அதற்கேற்ப அதிகரித்தன; உணவையும் உடல் எடையையும் பயன்படுத்தி பெண்களின் கட்டுப்பாட்டு உணர்வை வலிந்து பறித்திட ஒரு பெரியளவிலான இயல்பு மீறிய உணர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது. உடல் ஆரோக்கியத்தை அரசியல் படுத்திட பெண்கள் வலியுறுத்தினார்கள்; பெண்களை மருத்துவரீதியில் கட்டுப்படுத்தும் பழைய வடிவங்களை மீண்டும் திணித்திட மிகவும் ஆபத்தான “அழகுசார்” அறுவை சிகிச்சைகளின் புது தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்தன.

ஏறக்குறைய 1830 லிருந்தான ஒவ்வொரு தலைமுறையும் அழகு குறித்தான புனைவின் அப்போதைய வடிவத்தை எதிர்த்துப் போராட வேண்டியிருந்திருக்கிறது. “என்னுடைய முழுமையான உரிமையின் அடிப்படையில் எனதுடல் மற்றும் அதன் பழக்கவழக்கங்களை நான் பேணவில்லையென்றால், என்னைப் பொருத்தவரை வாக்களிக்கும் உரிமை, சொத்து சேர்க்கும் உரிமையெல்லாம் சாதாரணம்” என பெண்கள் வாக்குரிமைக்காக போராடிய லூசி ஸ்டோன்(Lucy Stone) 1855 இல் கூறியுள்ளார். பெண்கள் வாக்களிக்கும் உரிமையை வென்றெடுத்து 8 வருடங்கள் கழித்து மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பெண் இயக்கத்தின் முதல் அலை தணிந்திருந்த பிறகு,  பெண்கள் தங்களது உடல் பற்றிய உண்மையை சொல்வதற்கு இன்னும் பல பத்தாண்டுகள் ஆகும் என விர்ஜினியா வுல்ஃப்(Virginia Wolf) எழுதினார். பெண்ணிய மாயையில் மாட்டிக்கொண்ட ஒரு இளம்பெண் கூறியதை 1962-இல் பெட்டி பிரைடன்(Betty Friedan) பின்வருமாறு மேற்கோள் காட்டினார்: “கொஞ்சம் தாமதமாகத்தான் கண்ணாடியைப் பார்த்தேன், என்னுடைய அம்மாவைப் போல தோன்றப்போகிறேனோ என நான் பயப்படுகிறேன்”. அதன் பிறகு எட்டு வருடங்கள் கழித்து பெண்ணியத்தின் கொந்தளிப்பான இரண்டாம் எழுச்சியை வரவேற்று “அந்த ஒரேமாதிரி நிகழ்ந்த நிகழ்வை” ஜெர்மைன் கிரீர்(Jermaine Greer) பின்வருமாறு விவரித்தார்:  “அழகு என்கிற வார்த்தை உட்பட அழகான அனைத்தும் அவளுக்கு சொந்தமானது… அவள் ஒரு பொம்மை போன்றவள்….. ஆனால் இந்த முகமூடியைப் பார்த்து நான் சலித்துப் போய்விட்டேன்”. அது இரண்டாம் அலையினால் ஏற்பட்ட சிறந்த புரட்சியாக இருப்பினும் நாம் ஒன்றும் சுதந்திரமாக இல்லை. நம்மை பாழ்படுத்திய தடைகளைப் பற்றி தற்போது பார்ப்போம்: நாம் எதிர்பாராமல் ஒரு புரட்சி நம்மை நோக்கி உருவாகி வந்திருக்கிறது; அது தன் வழியில் அனைத்தையும் மாற்றியிருக்கிறது. அதன் பிறகு குழந்தைகள் பெண்களாக வளருமளவிற்கு காலம் கடந்துவிட்டது. ஆனால் கோரப்படாத உரிமை இன்னும் அப்படியே இருக்கிறது.

அழகு பற்றிய புனைவு நமக்கு ஒரு கதையைச் சொல்கிறது: “அழகு” என அழைக்கப்பட்ட மதிப்பீடானது புறவயமாகவும் எவ்விடத்திலும் நிலவுகிறது. பெண்கள் அதற்கு உருக்கொடுக்கும் தேவையை உணர வேண்டும்; அந்த அழகிற்கு உருக்கொடுக்கிற பெண்களை ஆண்கள் உடைமையாய் பெற்றிருக்க விரும்பவேண்டும். இந்த உருக்கொடுத்தல் பெண்களுக்கு கட்டாயமானது; ஆண்களுக்கு அவ்வாறில்லை; இந்த அழகு என்பது உயிரியல், பாலியல் மற்றும் பரிணாமம் சார்ந்தது என்பதால் இத்தகைய சூழல் இன்றியமையாதது மற்றும் இயல்பானது: அதாவது வலிமையான ஆணகள் அழகான பெண்களுக்காக போட்டி போடுகிறார்கள்; அழகான பெண்கள் பிள்ளை பெறுவதில் வெற்றிகரமானவர்களாக இருக்கிறார்கள். பெண்களின் அழகு அவர்களின் கருவுறும் தன்மையோடு தொடர்புடையதாக இருத்தல் வேண்டும்; இந்த அமைப்பு முறையானது பாலியல் தேர்வின் அடிப்படையிலானதென்பதால் இது தவிர்க்க முடியாதது மற்றும் மாற்றமில்லாததும் கூட.

மேற்கூறப்பட்ட கதைகளில்  எதுவும் உண்மையில்லை. தங்கத்தின் தரம் போன்று “அழகு” என்பது ஒரு நாணய அமைப்பு முறை. எந்தப் பொருளாதாரத்திலும் உள்ளது போல அது அரசியலால் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் இந்த நவீன காலத்தில் மேற்குலகில் ஆணாதிக்கத்தினை மாறாமல் வைத்திருக்கிற இந்த அமைப்புமுறையானது நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையாகும். கலாச்சார ரீதியில் திணிக்கப்பட்ட உடல்சார்ந்த மதிப்பீட்டின் அடிப்படையில், செங்குத்தான அதிகார கட்டமைப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் என்பது அதிகாரம் தொடர்பான உறவுகளின் வெளிப்பாடாகும். இதில் ஆண்கள் தங்களுக்கானதாக்கிக்கொண்ட ஆதாரவளங்களுக்காக பெண்கள் போட்டியிடுகிறார்கள்.

பெண் அழகு குறித்தான அனைத்து எண்ணங்களும் பிளாட்டோனிய இலட்சியவாத பெண்களிடமிருந்து உருவெடுப்பதாக மேற்குலகம் நடித்தாலும், “அழகு” என்பது எல்லாவிடத்திற்கானதுமல்ல அல்லது மாற்றமடையாததுமல்ல; “அழகு” என்பது பரிணாமத்தின் செயலுமல்ல: இந்த கருத்துக்கள் உயிரினங்களின் பரிணாமத்தை விட மிக வேகமாக மாற்றமடைகின்றன; மேலும் இயற்கை தேர்வு என்கிற விதியிலிருந்து விலகிச்சென்ற “பாலியல் தேர்வு”-லிருந்துதான் “அழகு” உருவானது என்கிற தனது சொந்த விளக்கத்தினால் டார்வின் திருப்தியடையவில்லை..  பெண்கள் தங்களுடைய இணையால் தேர்ந்தெடுக்கப்பட “அழகாக” இருக்க வேண்டும் என்கிற கருத்தை மனித இனவியல் ஆய்வு தலைகீழாய்ப் புரட்டிப் போட்டுள்ளது. எவ்லைன் ரீடு(Evelyn Reed), எலைன் மார்கன்(Elaine Morgan) மற்றும் பலர் ஆண்களோடு உடன்பிறந்து வந்துள்ள பலதார மணம் மற்றும் பெண்களுக்கான ஒற்றை மணவாழ்க்கை என்கிற சமூகஉயிரியல் வாதங்களை புறந்தள்ளியிருக்கிறார்கள். உயர்வளர்ச்சி பெற்ற பெண் குரங்கினங்கள்தான் (Higher Primates) பாலியல் சேர்க்கையை துவக்கிவைப்பவை; இவை பாலியல் உறவை நாடி பலரோடு பாலியல் உறவை அனுபவிப்பது மட்டுமன்றி, தன்னுடைய குழுவில் மிகவும் விரும்பத்தக்க ஒன்றாக இருக்கின்ற தனது வாய்ப்பினை  ஒவ்வொரு கருவுற்றிராத பெண் குரங்கும் பெறுகிறது. இந்த சுழற்சியானது அந்த பெண் குரங்கு வாழும் வரைக்கும் தொடர்கிறது. உயர்நிலை வளர்ச்சி பெற்ற குரங்கினங்களில் உச்சநிலையில் காணப்படும் இளஞ்சிவப்பு நிற பாலியல் உறுப்புகள், எதார்த்தத்தில் எங்கும் காணப்படுகிற, வகைப்படுத்தப்படாத உயர்நிலை வளர்ச்சி பெற்ற பெண் குரங்கின் குணாம்சமாக இருக்கும் போது, பெண் “அழகு” உடனான தொடர்பில் அவை மனித ஏற்பாடுகளுக்கு(Human Arrangements) முரணானதாக இருப்பதாக ஆண் சமூக உயிரியலாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

அழகு பற்றிய புனைவானது இந்த வகை சிந்தனா திசையிலேயே இருந்திருக்கவுமில்லை. வயதான பணக்கார ஆணோடு இளமையான “அழகான” பெண்ணை ஜோடியாக்குதல் என்பது ஏதோ ஒரு வகையில் தவிர்க்கமுடியாத ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும், ஏறக்குறைய கி.மு.2500-லிருந்து கி.மு.700 வரையில் மத்திய தரைக்கடல் நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய தாய்வழி மதங்களில் நிலைமை என்பது தலைகீழாக்கப்பட்டது: “ஒவ்வொரு கலாச்சாரத்திலும், பெண்கடவுளுக்கு பல காதலர்கள் இருந்தனர்…. வயதான பெண் மற்றும் அழகான ஆனால் செலவழிக்க தகுதி படைத்த ஆண் என்பதுதான் தெளிவாக தெரியக்கூடிய கட்டமைப்பாக இருக்கிறது- இஸ்தார் மற்றும் டாம்மஸ், வீனஸ் மற்றும் அடோனிஸ், சைபல் மற்றும் அட்டீஸ், ஐசிஸ் மற்றும் ஓசிரிஸ்…..புனித “கருப்பையை” வணங்குவதே அவர்களது ஒரே பணி”. பெண்கள் மட்டும் இப்பணியைச் செய்து ஆண்கள் வெறுமனே கூர்ந்து கவனிக்கிற ஏதோ ஒன்றல்ல இது. நைஜீரிய வொடாப்(Wodaabe) இனக்குழு மத்தியில் பெண்கள் பொருளாதார அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள்; மேலும் அந்த பழங்குடி ஆண்சார்ந்த அழகால் ஆட்டிப்படைக்கப்படுகிறது; வொடாப் ஆண்கள் ஒன்றிணைந்து ஒப்பனைக்காகவே பல மணிநேரங்கள் செலவழிக்கிறார்கள்; மேலும் பெண்களை நடுவர்களாகக் கொண்ட அழகுப் போட்டிகளில் எரிச்சலைத் தூண்டக்கூடிய வகையில் அரிதாரம் பூசி ஆடையணிந்து சுழன்றாடும் இடுப்புகளோடும் கவர்ந்திழுக்கும் பாவனைகளோடும்  அவர்கள் போட்டியிடுகிறார்கள்.  அழகு குறித்தான புனைவு பற்றி நியாயப்பூர்வமான, வரலாற்று ரீதியான அல்லது உயிரியல் ரீதியான சான்று வலிமை என்பது இல்லை. பெண்களுக்கெதிரான தாக்குதலை அதிகப்படுத்திட இன்றைய அதிகார அமைப்பு, பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்திற்கு தேவைப்படுகிற ஒன்று என்பதைத் தாண்டி அழகு பெண்களுக்கு வேறெதையும் செய்துகொண்டிருக்கவில்லை.

அழகு பற்றிய புனைவு பரிணாமம், பாலியல், பாலினம், அழகியல் அல்லது கடவுள் ஆகியவற்றின் அடிப்படையிலானதல்ல என்றால் எதன் அடிப்படையிலானது? நெருக்கமான நட்பு மற்றும் பாலியல் உறவு, வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையிலானது என அது கூறுகிறது. உண்மையில் இப்புனைவு உணர்ச்சிப்பூர்வமான ஒதுக்கம்(Emotional Distance), அரசியல், நிதி மற்றும் பாலியல் அடக்குமுறை ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. அழகு பற்றிய புனைவென்பது மொத்தத்தில் பெண்கள் பற்றியதல்ல. இது ஆண்களின் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அதிகாரம் பற்றியது.

பெண் நடத்தையின் குறியீடுகளைத்தான் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் பெண்களில் காணப்படுகிற அழகான பண்புகளாக கருதுகிறது; அந்த காலகட்டம் அதனைத்தான் விரும்பத்தக்கதாக கருதுகிறது: அழகு பற்றிய புனைவானது எப்பொழுதும் நடத்தையைத்தான் பரிந்துரைக்கிறது; தோற்றத்தினை பரிந்துரைப்பதில்லை. இந்த புனைவின் ஒரு பகுதியாக பெண்களுக்கிடையே போட்டி உருவாக்கப்பட்டு அதன் விளைவாக ஒருவரிடமிருந்து மற்றொருவர் பிரிக்கப்படுவார்கள். இளமையும் (சமீப காலம் வரைக்கும்) கற்பும், பட்டறிவு மற்றும் பாலியல் அறியாமை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துவதால்  அவையிரண்டும் பெண்களில் “அழகானதாக” இருக்கிறது. காலத்தோடு பெண்கள் அதிகாரமிக்கவர்களாக வளர்வதாலும், தலைமுறைகளுக்கிடையேயான சங்கிலிகள் ஒவ்வொரு முறையும் புதிதாக உடைக்கப்பட வேண்டும் என்பதாலும் பெண்களில் முதுமை எய்தல் என்பது “அழகற்ற” ஒன்றாக இருக்கிறது: இளம்பெண்களைப் பார்த்து வயதான பெண்கள் பயப்படுகிறார்கள்; இளம்பெண்கள் வயதானவர்களைப் பார்த்து பயப்படுகிறார்கள்; மேலும் அழகு பற்றிய புனைவானது அனைத்து பெண்களின் ஆயுட்காலம் முழுவதும் அவர்களின் வளர்ச்சியை வெட்டிக் குறுக்குகிறது.; சுயமரியாதை என்கிற உணர்வுப்பூர்வமான அம்சத்தை காற்றில் வீசியெறிந்துவிட்டு புற அங்கீகாரத்தை எதிர்நோக்கி பலவீனமானவர்களாக பின்தங்கியிருக்கின்ற வகையில் பெண்ணின் அடையாளம் “அழகு” என்கிற ஒன்றின் மீது மிக அவசரமாக நிலைநிறுத்தப்பட வேண்டும்.

தந்தை வழிச் சமூகம் நீடித்திருந்த வரைக்கும் சில வடிவங்களில் அழகு பற்றிய புனைவு காணப்பட்டிருந்தாலும், அதன் நவீன வடிவத்தில் அழகு பற்றிய புனைவு ஒரு சமீபத்திய கண்டுபிடிப்பாகும். பெண்கள் மீதான பொருளாயத நெருக்கடிகள் ஆபத்தான வகையில் தளர்த்தப்படும் போது இந்த  புனைவு செழித்தோங்குகிறது. தொழிற்புரட்சிக்கு முன்னர், சராசரி பெண்கள் “அழகு” பற்றி கொண்டிருந்த அதே உணர்வுகளை நவீன கால பெண்கள் தற்போது கொண்டிருக்கவில்லை. பெருமளவிலான தொழில்நுட்பங்களின் (உம்:புகைப்படம் எடுப்பது) வளர்ச்சிக்கு முன்னர், ஒரு சாதாரண பெண்ணுக்கு தேவாலயத்திற்கு வெளியே ஒரு சில புகைப்படங்களை மட்டுமே பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.   குடும்பம் ஓர் உற்பத்தி அலகாகவும், பெண்கள் மற்றும் ஆண்களின் பணி ஒன்றையொன்று ஈடுசெய்வதாகவும் இருந்ததால், உயர்குலமாக இல்லாத, விலைமாதாக இல்லாத பெண்களின் மதிப்பானது அவர்களின் வேலைத்திறன், பொருளாதார சமயோசிதம், உடல் வலிமை மற்றும் கருவுறும் தன்மை ஆகியவற்றில் சூல்கொண்டிருந்தது. உடல்சார்ந்த ஈர்ப்பு என்பதும் அதன் பங்கினை ஆற்றியது; ஆனால் “அழகு” என்பது நாம் புரிந்துகொள்வது போல, சாதாரண பெண்களைப் பொறுத்தவரை திருமணச் சந்தையில் ஒரு தீவிரமான பிரச்சினையாக இருக்கவில்லை. குடும்ப உழைப்பு அலகானது அழிக்கப்பட்டதும், வேலையின் காரணமாக வீட்டை விட்டுச் சென்று உழைக்கிற “சம்பாதிப்பவர்கள்” என்ற  புதிய தொழிலாளர் வகையின் “தனித்த வெளியை” நகர்மயமாக்கமும், வளர்ந்துகொண்டிருந்த தொழிற்சாலை அமைப்பு முறையும் கோரின.  நடுத்தரக் குடும்பம் விரிவடைய ஆரம்பித்தது; வாழ்க்கைத்தரம் மற்றும் எழுத்தறிவு உயர்ந்தது. குடும்பங்களின் அளவு சுருங்கியது; கற்றறிந்த ஆனால் செயல்பாடற்ற பெண்களை உள்ளடக்கிய புதிய வர்க்கம் உருவானது. வலிந்து திணிக்கப்பட்ட குடும்ப வாழ்க்கை முன்பான கீழ்ப்படிதலில்தான் வளர்ந்துகொண்டிருந்த தொழில் முதலாளித்துவம் நிலைகொண்டிருந்தது. குடும்ப வாழ்க்கை பற்றிய சம்பிரதாயங்கள் முதன்முதலில் ஒருங்கிணைக்கப்பட்டு அழகு சார்ந்த அட்டவணை கண்டுபிடிக்கப்பட்ட அதே வேளை, ”அழகு” பற்றி பெண்கள் எந்த வழியில் சிந்தித்திருப்பார்கள் என்பது பற்றிய நமது அனுமானங்கள் யாவும் 1830 களுக்கு பின்னர் உருவானவையே ஆகும்;

முதன்முதலில் பெண்கள் பார்ப்பதற்கு எவ்வாறு இருக்க வேண்டும்  என்பதற்கான உருவங்களை மறுஉருவாக்கம் செய்யக்கூடியதாக புதிய தொழில்நுட்பங்கள் இருந்தன. 1840 களில் விலைமாதர்களின் முதல் நிர்வாண புகைப்படம் எடுக்கப்பட்டது; “அழகான” பெண்களின் படங்களைப் பயன்படுத்தும் விளம்பரங்கள் நூற்றாண்டின் மத்தியில் தோன்றின. செவ்வியல் கலைப்படைப்புகள், ராஜ நங்கைகளின் அஞ்சல் அட்டைகள், கர்ரியர் மற்றும் ஐவ்ஸ்(Currier and Ives) அச்சுகள் மற்றும் பீங்கான் சிற்றுருவ நகல்கள் நடுத்தர வர்க்கப் பெண்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த தனித்த வெளியை ஆக்கிரமித்தன.

தொழிற்புரட்சி உருவானதிலிருந்து, பொருளாயத அடிமைத்தனத்தினால் எந்தளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டார்களோ அதே அளவிற்கு நடுத்தர வர்க்க மேற்குலக பெண்கள் லட்சியவாதம் மற்றும் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிற பழம்பாணி கருத்துக்களாலும்  கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றனர். பெண்ணிய வெளியில் இயல்பான கூறுகளாக மாறுவேடமணிந்து தோன்றிக்கொண்டிருக்கிற பல்வேறு சமூக கட்டுக்கதைகளில் ஒன்றுதான் அழகு குறித்தான புனைவின் எழுச்சி. அது போன்ற பிற கட்டுக்கதைகள் உடனிகழ்வாக பின்வருமாறு மேலெழுந்து வந்தன: தாய் கவனிப்பு தேவைப்படுகிற குழந்தைப் பருவம்; இயல்புமீறிய உணர்ச்சி காட்டும் நடிப்பினை நடுத்தர வர்க்க பெண்கள் வெளிப்படுத்திட எதிர்பார்க்கும் பெண்சார்ந்த உயிரியல் கருத்தாக்கம்; மரியாதைக்குரிய பெண்கள் பாலியல் ரீதியில் உணர்ச்சியற்றவர்களாக இருப்பார்கள்; சரிகை வேலைப்பாடு, எம்ப்ராய்டரி போன்ற சிரமமான, நேரம் பிடிக்கிற திரும்ப திரும்ப செய்கிற வேலைகளோடு மல்லுக்கட்டுகின்ற வகையிலான பணி வரையறை; இவை போன்ற விக்டோரிய கால கண்டுபிடிப்புகள் அனைத்தும் இரண்டு பணிகளைச் செய்தன- பெண் ஆற்றல் மற்றும் நுண்ணறிவு இத்தகைய வேலைகளின் ஊடாக ஆபத்தற்ற வகையில் பயன்படுத்திட ஊக்கப்படுத்தப்பட்ட போதும், மெய்யான படைப்பாக்கம் மற்றும் பெருவிருப்பம் ஆகியவற்றை வெளிப்படுத்திட அந்த வேலைகளைப் பெண்கள் பயன்படுத்தினார்கள்.

நவநாகரீகம் மற்றும் எம்ப்ராய்டரி, குழந்தை வளர்ப்பு ஆகியவற்றுடனான நடுத்தர வர்க்க பெண்களின் படைப்பாக்கத்திறன் ஒரு பக்கம் இருப்பினும், ஒரு நூற்றாண்டு கழித்து, இந்த சமூக கட்டுக்கதைகளிலிருந்து கையளிக்கப்பட்ட நகர்ப்புற இல்லத்தரசி பாத்திரத்தோடு இந்த கட்டுக்கதைகளின் முக்கியமான நோக்கம் நிறைவேற்றப்பட்டது: முன்னெப்போதுமில்லதா வகையிலான ஒன்றரை நூற்றாண்டு கால பெண்ணிய கிளர்ச்சி காலத்தில், இக்கதைகள் நடுத்தர வர்க்க பெண்களின் ஓய்வு, எழுத்தறிவு மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்தான ஒப்பீட்டளவிலான சுதந்திரம் ஆகியவற்றை காத்திரமாக எதிர்த்தன.

பெண்களின் இயல்பான பாத்திரம் பற்றிய இந்த நெடுங்கட்டுக்கதைகள் போருக்கு பிந்தைய பெண்ணிய மாயை காலத்தில் மீண்டும் மேலெழுந்து வரும்வகையில் தங்களைத் தகவமைத்துக்கொண்ட போதிலும், எதனை குடும்ப நிர்வாகம் மற்றும் நகர்ப்புற குடும்ப வாழ்வு ஆகியவற்றின் “ரொமான்ஸ்”, “விஞ்ஞானம்” மற்றும் “வீரதீரச் செயல்” என பெண்ணிய இதழ்கள் சித்தரித்ததோ அதனை பெண்கள் இயக்கத்தின் இரண்டாம் அலை உடைத்தெறிந்த போது அவை தற்காலிகமாக தோல்வியடைந்தன. ”நெருக்கமான பிணைப்பு” என்கிற திகட்டச்செய்கிற கட்டுக்கதையானது அதன் அர்த்தத்தை இழந்தது; மேலும் நடுத்தர வர்க்க பெண்கள் பெருந்திரளாக தங்களது இல்லங்களின் முன்கதவைத் திறந்து கொண்டு வெளியே வர ஆரம்பித்தார்கள்.

எனவே இந்த கட்டுக்கதைகள் மீண்டும் ஒருமுறை எளிதாக உருமாறின: பெண்கள் இயக்கமானது பெண்ணியத்தின் பிற அத்தியாவசியமான கட்டுக்கதைகளை வெற்றிகரமாக உடைத்தெறிந்ததால், ஒருகாலத்தில் இந்த கட்டுக்கதைகளின் ஒட்டுமொத்த வலைப்பின்னல் மீது படர்ந்திருந்த அனைத்து சமூக கட்டுப்பாடு சார்ந்த வேலைகளும் மாறாது விடப்பட்ட இழையாக மட்டும் தன்னை மாற்றம் செய்துகொள்ள வேண்டியிருந்தது. இந்த செயலின் விளைவாக அதன் பலம் நூறு மடங்கு வலுப்படுத்தப்பட்டது. இது இதற்கு முன் போதுமான வலிமையுடன் எடுத்துச்செல்லப்படாத அனைத்து வகையான கட்டுப்பாடுகள், புனிதத்தடைகள், அடக்குமுறைச் சட்டங்கள் வாயிலான தண்டனைகள் மற்றும் இனப்பெருக்க அடிமை நிலை ஆகிய அனைத்தையும் சுதந்திரமான பெண்களின் உடல்கள் மீது மீண்டும் சுமத்தியது. தீர்ந்துபோகாத ஆனால் சிறிய காலமே நீடித்திருக்கிற அழகுசார்ந்த பணியானது தீர்ந்துபோகாத ஆனால் சிறிய காலமே நீடிக்கிற வீட்டுவேலையின் இடத்தை கையகப்படுத்திக்கொண்டது. பொருளாதாரம், சட்டம், மதம், பாலியல் விஷயங்கள், கல்வி மற்றும் கலாச்சாரம் பெண்களை அடிமைப்படுத்துவதற்கான வழியாக வலுக்கட்டாயமாக திறக்கப்பட்டதும், ஒரு அந்தரங்கமான எதார்த்தம் பெண்ணிய பிரக்ஞையை ஆக்கிரமித்தது. ”அழகு” பற்றிய கருத்துக்களைப் பயன்படுத்துவதன் மூலம், இது தனக்கான சட்டங்கள், பொருளாதாரம், மதம், பாலியல் பண்பு, கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு மாற்று பெண் உலகை மறுநிர்மாணம் செய்தது. இந்த ஒவ்வொரு கூறும் அதற்முன்னர் காணப்பட்ட எந்தவொரு கூறைப் போல அடக்குமுறைத்தன்மை கொண்டதாக இருந்தது.

நடுத்தர வர்க்க மேற்குலக பெண்கள் பொருளாதார ரீதியில் வலுவாக இருக்கையில் அவர்களை உளவியல்ரீதியாகத்தான் பலவீனப்படுத்த முடியும் என்பதால், கடந்த தலைமுறையில் மீண்டும் மேலெழுந்து வந்துள்ள அழகு குறித்த புனைவானது, இதற்கு முன்பிருந்ததை விட அதிகமான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பழம்பெருமை மீதான ஆழ்ந்த பற்று ஆகியவற்றின் மூலம் பெண்களை அணுக  வேண்டியிருக்கிறது. பெண்ணியம் குறித்தான தற்போதைய கருத்துக்கள் பற்றிய மில்லியன் கணக்கிலான படிமங்களின் பரவல்தான் இந்த புனைவின் நவீன சேமிப்பிடமாக திகழ்கிறது; பெண்களின் சுதந்திரத்தால் அச்சுறுத்தலுக்குள்ளான ஆணாதிக்க நிறுவனங்களின் அரசியல் பயத்தின்  காரணமாக இத்தகைய செயல்கள் ஒன்றுதிரட்டப்படுகின்றன. மேலும் இது நமது சுய விடுதலை பற்றிய பெண் குற்றவுணர்வு மற்றும் அச்சம் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்கிறது. இந்த கற்பிதங்களின் மூர்க்கத்தனமான கூடல் என்பது, பாலின உறவுகள் மாற்றத்திற்குள்ளாக்கப்பட்ட வேகத்தினால் திகைப்பிற்குள்ளாகிட, குழப்பத்திற்குள்ளாகிட சபிக்கப்பட்ட ஒரு கூட்டு பிற்போக்கு பிரமையாக இருக்கிறது: அதாவது பெருக்கெடுக்கிற மாற்றத்திற்கு எதிராக பழைமையை ஆதரிக்கிற ஒரு கோட்டை. நவீன பெண்ணை ஒரு “அழகாக” பெரியளவில் சித்தரிப்பதென்பது ஒரு முரண்: எங்கு பெண்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்களோ, இயங்கிக்கொண்டிருக்கிறார்களோ மற்றும் தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் “அழகு” என்பது வரையறையின் அடிப்படையில் செயலற்றதாகவும், காலத்தால் அழியாததாகவும், பொதுப்படையானதுமாக இருக்கிறது. இந்த பிரமை என்பது இன்றியமையாதது மற்றும் கருத்தூன்றி விவாதிக்கப்பட்ட ஒன்று என்று கூறப்படுவதன் உண்மைநிலை பெண்களின் எதார்த்த நிலையோடு “அழகு” எவ்வாறு முரண்படுகிறது என்பதிலிருந்து தெளிவாக புரிந்துவிடுகிறது.

தற்போதைக்கு எது பிரக்ஞாபூர்வமான சந்தை கையாளும் திறனாக இருக்கிறதோ, அதன் காரணமாக இந்த பிரக்ஞையற்ற பிரமையானது இதற்கு முன்பிருந்ததை விட இன்னும் அதிக செல்வாக்குமிக்கதாக ஊடுருவக்கூடியதாக வளர்கின்றது: பிரக்ஞையற்ற பதற்றத்தின் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட மூலதனத்திலிருந்து சர்வசக்திமிக்க தொழிற்துறைகள் உருவாகியிருக்கின்றன. அதன் விளைவாக  வெகுஜன கலாச்சாரத்தின் மீதான தங்களது செல்வாக்கின் ஊடாக அதிகரித்துக்கொண்டிருக்கிற பொருளாதார சுழற்சியில் இந்த பிரமையை பயன்படுத்த, ஊக்குவிக்க மற்றும் வலுவேற்றவும் செய்கின்றன இத்துறைகள் (வருடத்திற்கு திட்ட உணவு(Diet) தொழிற்துறை மூலம் வருமானம் 33 மில்லியன் டாலர்; அழகுசாதன பொருட்கள்-20 பில்லியன் டாலர், அழகுசார்ந்த அறுவை சிகிச்சை-300 மில்லியன் டாலர், ஆபாச படம்-7 பில்லியன் டாலர்).

இது ஒன்றும் சதித்திட்ட கோட்பாடல்ல. அது அவ்வாறு இருக்கவும் தேவையில்லை; தனிநபர்களும் குடும்பங்களும் சொல்வது போல சமூகங்களும் தேவையான கட்டுக்கதைகளை சொல்கின்றன. அவைகளை ஹென்ரிக் இப்சன்(Henrik Ibsen) “உயிர்நிலையான பொய்கள்” என அழைக்கிறார்; மேலும் அவை குடும்பத்தில் எவ்வகையில் வினைபுரிகின்றதோ அவ்வகையில்தான் சமூகத்திலும் வினை புரிவதாக உளவியலாளர் டேனியல் கோல்மன்(Daniel Goleman) விளக்குகிறார்: “அச்சமேற்படுத்தக்கூடிய எதார்த்தத்திலிருந்து கவனத்தை திசை திருப்புவதன் மூலம் அல்லது அதன் அர்த்தத்தை ஏற்றுக்கொள்ளத்தக்க வடிவத்தில் வேறொன்றாக மாற்றுவதன் மூலம் இந்த கூட்டு மோசடி பேணப்படுகிறது”. அழிவை ஏற்படுத்தக்கூடிய சமூகம் சார்ந்த மாயைதான் இந்த சமூக அறியாமையின் விலையாகும். ஆண்களால் ஆதிக்கம் செய்யப்படுகிற கலாச்சாரம் தாங்கி நிற்கிற நிறுவனங்களை நிலைகுலையச் செய்கின்ற அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு பெண்களுக்கான சாத்தியங்கள் தடைகளற்ற ஒன்றாக உருவாகியிருக்கின்றன; மேலும் இருபாலினத்தவராலும் காட்டப்படுகிற கூட்டு பேரச்ச எதிர்வினையானது எதிரெதிர்பிம்பங்களின் தேவையை கட்டாயமாக்கி இருக்கிறது.

பெண்களைப் பொறுத்தவரை இந்த பிரமையானது படு எதார்த்தமான ஏதோ ஒன்றாக வடிவம் கொள்கிறது. நீண்ட காலத்திற்கு ஒரு கருத்தாக மட்டும் நிலைத்திராமல், அது பெண்கள் எவ்வாறு வாழவேண்டும் மற்றும் எவ்வாறு வாழக்கூடாது என்பதை தன்னுள் உள்ளடக்கி முப்பரிமாணம் கொண்டதாக மாறுகிறது: அதாவது இது ஒரு சித்திரவதைக் கருவியாக (Iron Maiden) மாறுகிறது. அசல் சித்திரவதைக் கருவி (Iron Maiden) என்பது மத்திய கால ஜெர்மானிய சித்திரவதைக் கருவியாகும். இது அழகாக புன்னகைத்துக்கொண்டிருக்கிற பெண் போன்று வண்ணந்தீட்டப்பட்ட கூடு வடிவ அமைப்பு. தண்டிக்கப்பட வேண்டியவர் இந்த வெற்றுடம்பு கூட்டினுள் நேர்த்தியாக படுக்கவைக்கப்பட்டு இறுக்கமாக தாழிடப்படும்; இம்மியளவும் அசைய முடியாமல் அந்த நபர் பட்டினியாலோ அல்லது அந்த கூட்டினுள் பதித்து வைக்கப்பட்டுள்ள இரும்பு முட்கள் குத்தியோ இறந்து போவார். பெண்கள் சிக்க வைக்கப்பட்டுள்ள அல்லது தங்களையே சிக்கவைத்துக்கொள்கிற நவீன மாயை என்பது இந்த சித்திரவதைக் கருவியைப் (Iron Maiden) போன்று விறைப்பானதாகவும், கொடூரமானதாகவும் மற்றும் அதே போன்று வண்ணம் தீட்டப்பட்டதாகவும் இருக்கின்றது. சமகால கலாச்சாரம் எதார்த்தமான பெண் முகம் மற்றும் உடலை கத்தரித்து விட்டு சித்திரவதைக் கருவியின் (Iron Maiden) பிம்பத்தை நோக்கி தனது கவனத்தை திருப்புகிறது.

இயல்பான பெண்கள், நமது முகம், குரல் மற்றும் உடல் பற்றிய உண்மையிலிருந்து நழுவுவதன் மூலமும் பெண்களுக்கான அர்த்தத்தை இந்த சூத்திரம் சார்ந்த மற்றும் முடிவேயில்லாமல் மறு உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற “அழகான” படிமங்களை நோக்கி குறுக்குவதன் மூலமும் ஏன் இந்த சமூக படிநிலையானது தன்னை பாதுகாத்துக்கொள்ள முனைகிறது? பிரக்ஞையற்ற தனிமனித பதற்றங்கள் ஒரு முக்கியமான பொய்யை உருவாக்குவதில் வலுமிக்க சக்தியாக இருக்கின்ற போதிலும், பொருளாதார தேவை அதனை நடைமுறையில் பாதுகாக்கிறது. அடிமைத்தனத்தை சார்ந்திருக்கிற பொருளாதாரத்திற்கு அடிமை நிறுவனத்தை “நியாயப்படுத்துகிற” அடிமைகளின் பிம்பங்களை ஊக்கப்படுத்துவதற்கான தேவை உள்ளது. தொடர்ந்து பெண்களுக்கு குறைவான சம்பளத்தினை வழங்குவதைச் சார்ந்துதான் மேற்குல பொருளாதாரங்கள் இருக்கின்றன. நாம் நம்மை மதிப்பு மிக்கவர்களாக உணர ஆரம்பித்திருந்த போது, அதனை எதிர்த்திடும் வகையில் பெண்கள் தங்களை “மதிப்பற்றவர்களாக” உணரச்செய்கிற தத்துவம் மிக அவசரமாக தேவைப்பட்டது. இதற்கு தனியாக சதி ஒன்றும் தேவைப்படவில்லை; வெறும் சூழல் மட்டுமே தேவைப்பட்டது. சமகால பொருளாதாராம் அழகு என்கிற புனைவுக்கு உட்பட்டு பெண்களின் பிரதிநிதித்துவத்தை சார்ந்திருக்கிறது. ” வீட்டு நிர்வாகம் ’அதிகமாக விரும்பப்படுகிற’ ஒன்றாக  தொடர்ந்து நீடித்திருப்பது” பற்றி பொருளாதார அறிஞர் ஜான் கென்னத் கல்பிரைத்(John Kenneth Galbraith) ஒரு பொருளாதார விளக்கத்தை அளிக்கிறார்: “புகழ்பெற்ற சமூக ஆய்வியல் நூல்கள், இதழ்கள் மற்றும் கட்டுக்கதைகள் மூலமாக தொழில் சார்ந்த சமூக வளர்ச்சிக்கு பெண்கள் நுகர்வோர் என்ற பாத்திரத்தில் மிகவும் இன்றியமையாதவர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மையை மறைத்து பெண்கள் பற்றிய கருத்தாக்கமானது நம்மீது பலவந்தமாக திணிக்கப்பட்டுள்ளது…… பொருளாதார காரணங்களுக்கு தேவைப்படுகிற இன்றியமையாத நடத்தை என்பது இங்கு ஒரு சமூக நல்லொழுக்கமாக உருமாற்றப்பட்டிருக்கிறது”. நற்குணமுடைய குடும்ப வாழ்க்கைதான் பெண்களுக்கான சமூக மதிப்பு என இனியும் வரையறை செய்யமுடியவில்லை என்றவுடன், அழகு பற்றிய புனைவானது அதனை நற்குணமுள்ள அழகினை அடைவது என மறுவரையறை செய்கிறது. மூத்தவர்கள் சுதந்திரமான பெண்கள் மீதான தங்களது கட்டுப்பாட்டை இழந்திருந்த வேலை பார்க்குமிடத்தில், பொருளாதார மோசடிக்கான ஒரு புதிய நுகர்வோர் விதி மற்றும் நியாயப்பாடு ஆகியவற்றை பதிலீடு செய்யவே அது இவ்வாறு செய்தது.

சித்திரவதைக் கருவிக்கு( Iron Maiden) சொந்தமான பிரமையை இன்னொரு பிரமை அணைத்து அழைத்துச் செல்ல மேலெழுந்து வந்தது: அசிங்கமான பெண்ணியவாதி (Ugly Feminist) பற்றிய கேலிச்சித்திரம் பெண்கள் இயக்கத்தின் வளர்ச்சிகளை தொடர்ந்து கண்காணித்திட மீண்டும் உயிர்த்தெழச் செய்யப்பட்டது. அந்த கேலிச்சித்திரத்தில் புதுமையாக எதுவுமில்லை. அது 19-ஆம் நூற்றாண்டு பெண்ணியவாதிகளை கிண்டலடிப்பதற்காக உருவாக்கப்பட்டது. தன்னுடைய ஆதரவாளர்களால் “காலைப்பொழுதைப் போல அழகாகவும், புத்துணர்வோடும், பெண்ணுக்கே உரிய கருணை கொண்ட முன்மாதிரி உருவம்……” என பார்க்கப்பட்ட லூசி ஸ்டோன் அவரது எதிரிகளால் விக்டோரிய பெண்ணியவாதிகள் நகையாடப்பட்டது போல “வழக்கமான பொதுமொழியில்” பின்வருமாறு நகையாடப்பட்டார்: “பூட்ஸ் அணிந்து கொண்டும், சிகார் புகைத்துக்கொண்டும், படைவீரரைப் போல சூளுரைத்துக்கொண்டும் காணப்படுகிற ஆண்பால் பண்புகளைக் கொண்ட  ஒரு பெரும்பெண்”. காட்டுமிராண்டித்தனத்திற்கு புத்துணர்வளிக்கிற அந்த பழைய கேலிச்சித்திரத்திற்கு முன்னரே 1960 இல் பெட்டி பிரைடன் தொலைநோக்குடன் பின்வருமாறு சொன்னார்: ”பெண்ணியவாதிகள் வெறுப்பூட்டும் வகையில் சித்தரிக்கப்படுகிற இன்றைய படிமமானது தோற்றத்தில் அவர்களுக்கு ஒவ்வொரு நாடாக வாக்களிக்கும் உரிமையை மறுத்திட்ட சக்திகளினால் ஊக்குவிக்கப்பட்ட படிமத்தோடு ஓரளவே பொருந்திப்போகிறது”. முப்பது வருடங்கள் ஆகிவிட்டது, முன்னெப்போதும் இல்லாத வகையில் அவரது கூற்று மிகவும் சரியானதாக இருக்கிறது. பெண்களுடைய அந்தரங்கமான சுயஉணர்வினை பின்தொடர்ந்து செல்வதன் மூலம், பொது இடத்தில் அவர்களுடைய செயல்களுக்காக அவர்களை தண்டிக்க கோரும் அந்த புத்தெழுச்சி பெற்ற கேலிச்சித்திரமானது, எல்லா இடங்களிலும் காணப்படும் சாதிக்கும் ஆவல் கொண்ட பெண்களை நோக்கி நிலைநிறுத்தப்பட்ட புதிய வரையறைகளுக்கான மூலமாதிரியாக உருவானது. பெண்கள் இயக்கத்தின் இரண்டாம் அலையின் வெற்றிக்குப் பிறகு அழகு பற்றிய புனைவானது தனித்த பெண்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு மட்டத்திலும் அதிகாரத்தை கட்டுப்படுத்திடும் வகையில் முழுமைத்துவம் கொண்டதாக ஆக்கப்பட்டது. பெண்ணுடலில் வாழ்க்கை பற்றிய நவீன மனநோயானது கொள்ளை நோய் வேகத்தில் ஒவ்வொரு பெண்ணாக பரவியது. பெண்கள் நீண்ட, கடுமையான மற்றும் கெளரவமான போராட்டங்களினூடாக பெற்றிருந்த இடத்தினை இந்த புனைவானது மெதுவாக, யாரும் உணராத வகையில், நம்மை உண்மையில் அரித்துக்கொண்டிருக்கிற சக்திகள் பற்றிய அறியாமலேயே நம்மை அழித்துக்கொண்டிருக்கிறது.

இன்றைய அழகு பற்றிய புனைவானது எந்தவொரு பெண்ணிய மாயையைக் காட்டிலும் மிகவும் நயவஞ்சகமானது: ஒரு நூற்றாண்டிற்கு முன்னர், நோரா(Nora) ஒரு பொம்மையின் வீட்டுக் கதவை தட்டினார்; ஒரு தலைமுறைக்கு முன்னர் நுகர்வோர் சொர்க்கம் என்றழைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட  பல்உபகரண கடையை நோக்கி தங்களது புறமுதுகைக் காட்டினார்கள் பெண்கள்; ஆனால் இன்று பெண்கள் சிக்கவைக்கப்பட்டிருக்கிற இடத்தில் தட்டுவதற்கென்று எந்த கதவும் இல்லை. அழகு பற்றிய சமகால காட்டுமிராண்டித்தனங்கள் பெண்களை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் காலி செய்துகொண்டிருக்கின்றன. பெண்மை மூலமாக ஒரு காலத்தில் உருவாக்கப்பட்ட பெரும் சுமையிலிருந்து நம்மை நாம் விடுவித்துக்கொள்வதாக இருந்தால், நமக்கு தேவைப்படுவது வாக்குச்சீட்டுகளோ, நம்மை கரையேற்றுவதாக சொல்லி ஆதாயம் தேடுபவர்களோ அல்லது விளம்பர தட்டிகளோ அல்ல; காண்பதற்கு ஒரு புது வழிதான் இப்போதைய தேவை.

***

ஆசிரியரின் The Beauty Myth என்ற நூலிலிருந்து ஒரு அத்தியாயம்

***